எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

பூக்குழி மிதிக்கும் பக்தகோடிகளுக்கான பரிந்துரைகள்!!


#சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ளது பாலி அம்மன் கோவில்.  மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆடிமாதத் திருவிழா நடந்து வருகிறது. இதனையொட்டி நேற்று முக்கிய நிகழ்ச்சியான 'தீ மிதி' விழா நடந்தது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக, சுமார் 1000–க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு திரண்டனர். பின்பு, பக்தர்கள் 15 பேர் கொண்ட குழுவாக அக்கினிக் குண்டத்தில் இறங்கித் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினார்கள்.

அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த கதிர்வேல் (வயது 33) மற்றும் வில்லிவாக்கம் யுனைடெட் காலனி அன்னை தெரசா தெருவைச் சேர்ந்த மனோகரன் (52) ஆகியோர் 15–க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் சேர்ந்து அக்கினிக் குண்டத்தில் இறங்கித் தீ மிதித்தனர்.

அப்போது, மனோகரனும் கதிர்வேலும் எதிர்பாராதவிதமாக அக்கினிக் குண்டத்தில் தவறி விழுந்தனர். அங்கு திரண்டு நின்றுகொண்டிருந்த பக்தர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு ஏற்கனவே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு நெருப்புக் கனலில் சிக்கிய இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்[அம்மன் வேடிக்கை பார்த்தார்!!!!!]. அக்கினியின் பிடியில் சிக்கியதால் கதிர்வேலும், மனோகரனும் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுப் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக, தீயணைப்புத் துறையினர் 2 பேரையும் சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பக்தர்கள் இருவருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ மிதி விழாவின்போது பக்தர்கள் இருவர் அக்கினிக் குண்டத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்து இருப்பது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்# -இது 'தினத்தந்தி' யின் இன்றைய[21.08.2018] செய்தி.

அப்பாவி பக்தர்களே,

நீங்கள் உண்மையான பக்தர்; நீங்கள் கும்பிடுகிற சாமியும் சக்தி வாய்ந்தது என்றால்.....

குளுகுளு தண்ணீரில் குளிச்சிட்டு, ஈரமான ஆடைகளுடன் நெருப்புக்குழியை ஓட்டமாய் ஓடிக் கடவாதீர். பதிலாக.....

வழக்கம்போல, உலர்ந்த ஆடைகளை உடுத்து, அடிமேல் அடிவைத்து மெல்ல மிக மெல்ல நடந்துகாட்டுவீர்.

அல்லது,

பூக்குழியில் வெற்றுடம்புடன் பத்து நிமிடமாவது படுத்துப் புரளுங்கள்.

அல்லது,

அக்கினிப் பிரவேசம் செய்யுங்கள்[சீதாப்பிராட்டி செய்தது போல].

அல்லது,

கும்பங்களில் நெருப்புத் துண்டங்களை நிரப்பி, தலையில் சுமந்து, பிற பக்தகோடிகள் கண்டுகளிக்கும் வகையில் 'கரகாட்டம்' நிகழ்த்துங்கள்.

அல்லது,

உலகின் எங்காவது ஒரு மூலையில் எரிமலை வெடித்தால், கூட்டமாகச் சென்று அக்கினிக் குழம்பில் நீச்சலடித்துவிட்டு வாருங்கள். 

இவற்றில் ஏதாவது ஒன்றையோ அனைத்தையுமோ சாதித்துக் காட்டினால் மட்டுமே.....

நீங்கள் உண்மையான பக்தர். நீங்கள் கும்பிடுவது உண்மையான சாமி.

பைத்தியக்காரர்களா,

இன்னும் எத்தனை காலத்துக்கு  மனம் பதைபதைக்க, உடம்பு நடுநடுங்க நெருப்புக் குண்டத்தை  ஓடிக் கடந்து உங்களை நீங்களே முட்டாளாக்கிப் பிறரையும் முட்டாள்களாக்கிப் பெருமிதப்படுவீர்கள்?!
======================================================================
குறிப்பு:
''ஆஹா, ஒரு நாத்திகன் ஆத்திகரின் மனங்களைப் புண்படுத்திவிட்டான். அவனுக்குப் புத்தி புகட்டுவோம்'' என்று சீறி எழாதீர்! ''சாமியை வழிபடுவதற்கும் நெருப்புக்குண்டத்தில் நடப்பதற்கும் என்ன சம்பந்தம்?'' என்பது குறித்துக் கொஞ்சமே கொஞ்சமேனும்  சிந்திப்பீர்!!
======================================================================
நன்றி: தினத்தந்தி