எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 18 நவம்பர், 2022

“சபரிமலை செல்லமாட்டோம்”... சபதம் ஏற்பார்களா பெண்கள்?!?!

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மேல்சாந்தி என்ன கீழ் சாந்தி என்ன, குருக்கள் என்ன, ஜீயர்கள் என்ன, பூசாரிகள் என்ன, மகான்கள் என்ன, அவதாரங்கள் என்ன, ஞானிகள் என்ன இவர்களில் எவருமே பிரபஞ்ச வெளியில் எங்கோ ஒரு முடுக்கில் குடிகொண்டிருப்பதாக நம்பப்படும் கடவுளிடமிருந்து நேரடியாக இந்தப் பூமியில் வந்து குதித்தவர்கள் அல்ல.

எல்லோருமே இந்த மண்ணில் பிறந்து வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களுக்குப் பிறந்தவர்கள்தான்.

உண்மையில், கண்ணுக்குத் தெரிகிற ஒரே ஒரு கடவுள் பெண் மட்டுமே. ஆணைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதில் சொல்லொணாத துயரங்களை அனுவிப்பவள் அவள்தான் என்பதால்.

இந்த[பெண்]க் கடவுளைவிடவும் மேலானவர் அல்ல கற்பனை செய்யப்பட்ட அனுமானக் கடவுளான சபரிமலை ஐயப்பன்.

ஏதேதோ காரணங்களைச் சொல்லி இளம் வயதுடைய பெண்களை அங்கே அனுமதிக்க மறுப்பது, காலங்காலமாய் ஆணினம் செய்துகொண்டிருக்கும் அயோக்கியத்தனம்.

அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளைக்கொண்ட அரசியல் சாசன அமர்வு வயது வித்தியாசமின்றி அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று தரிசனை செய்யலாம் என்று முன்பு தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்ற இளம் வயதுப் பெண்கள் தடுக்கப்பட்டனர். அவர்களும், அவர்களுக்கு எதிராக ஐயப்ப பக்தர்களும் போராட்டங்கள் நடத்த, கேரளாவில் பெரும் பதற்றமே நிலவியது.

பெண்களுக்கு அனுமதி உத்தரவு வாபஸ்

இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அவற்றை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்ப ஒப்புகொண்டதாம். இந்த விசாரணை இன்றும் நிலுவையில் உள்ளதாம். அதனால், சபரிமலையில் இளம் பெண்களுக்கான அனுமதி உத்தரவைக் கேரள அரசு வாபஸ் பெற்றதாம். இப்படிச் சொல்லியிருப்பவர் சம்பந்தப்பட்ட அமைச்சர்.

பெண்களை இழிவுபடுத்தித் தொடர்ந்து அடக்கி ஆளுவதற்கு ஆண்களால் திட்டமிட்டு நடத்தப்படும் நாடகமே இதுவும் இது போன்றவையும். 

பெண்களுக்கு ஆதரவாக ‘அமர்வு’ தீர்ப்பு வழங்கினாலும், “பெண்களை[இளம் வயது] என் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது” என்று ஐயப்பனே சொல்லியிருப்பதாக, வேத புராணங்களை ஆதாரம் காட்டி இவர்கள் கதை பரப்பவும் செய்வார்கள்.

ஆகவே,

இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி.....

“நீதிமன்றம்[அமர்வு] அனுமதித்தாலும், இனி இப்போது மட்டுமல்ல, எப்போதும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல மாட்டோம்” என்று பெண்கள் சபதம் ஏற்பதுதான். இதனால் பெண்ணினத்திற்கு எந்தவொரு இழப்பும் இல்லை.

செய்வார்களா நம் பெண்கள்?!

===================================================================

https://tamil.news18.com/news/national/kerala-sabarimalai-girls-allowed-announcement-was-with-drawn-by-kerala-govt-839308.html

மரணத்தைத் தவிர்க்க உதவும் மரணங்கள்!!!

நீண்ட முடிகளைக் கொண்ட பெண்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் அதனை வாரிய பின்னர் நன்கு பின்னி, இரட்டைச் சடை போட்டுக் கொள்வார்கள்.

நம் உடம்புச் செல்லில் உள்ள DNA[மரபணு]வும் இரட்டைச் சடை போல்தான் தோன்றும். நீண்ட DNA[மரபணு] இழைகள் நன்கு சுற்றப்பட்ட நூற்கண்டு போலவும் காட்சியளிக்கும்.


இந்த DNA உடைந்துவிடுவதுண்டு. 


உடைந்த DNAவைச் சரி செய்ய. நூற்கண்டில் சுற்றப்பட்ட நூல் பிரிக்கப்படுவது போல் DNA இழைகள் பிரிக்கப்படும். 

 

அடுத்து DNAவில் எந்தமாதிரியான சேதம் ஏற்பட்டுள்ளது என அறியப்படும்.


DNAவில் ஏற்பட்டுள்ள சேதத்தைச் சரி செய்யத் தேவையான கருவிகளும் இயந்திரங்களும் கொண்டுவரப்படும். அந்தக் கருவிகளும் இயந்திரங்களும் இரும்பால் ஆனவை என நினைத்துவிடாதீர்கள். இவை அனைத்தும் DNA சேதத்தைச் சரி செய்யவல்ல புரதங்கள்தான்!  


இவைகளின் தயவால் முறையாக DNA பழுதுபார்க்கப்படும். பின்னர் இந்த DNAவின் தரம் சரிப்பார்க்கப்படும். அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்தால் DNA இழைகள் மறுபடியும் நூற்கண்டுகளில் சுற்றப்பட்டது போல் சுற்றப்படும். பின்னர் இந்தச் செல்கள் வழக்கம்போல் தம் பயணத்தைத் தொடர்கின்றன.

 

இதுமாதிரி நம் உடலில் ஒரு நாளைக்கு ஒரு செல்லில் மட்டும் 10 லட்சம் பழுதுபார்ப்புப் பணிகள் நடக்கின்றன! அப்படியெனில் கோடானுக்கோடி செல்கள் உள்ள நம் உடலில் எத்தனைப் பழுதுப் பார்ப்புப் பணிகள் நடக்குமென்பதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

 

ஒருவேளை உடைந்த DNAவைச் சரி செய்ய முடியவில்லை என்றால் அல்லது, சரி செய்ய முடியாத அளவிற்கு உடைந்தால், DNA உடைப்பைக் கண்காணிக்கும் புரதக்கூட்டம் அந்தச் செல்லைக் கொல்லவல்ல புரதக்கூட்டத்திற்கு ஆணையிடும். 

 

அந்தக் கொலைகாரப் புரதக்கூட்டம் அந்தச் செல்லை ஈவு இரக்கமின்றிக் கொன்றுவிடும். இதனை ஆங்கிலத்தில் Apoptosis என அழைப்பார்கள்.


சாவு என்ற சொல்லை நாம் விரும்பமாட்டோம். ஆனால், மேற்கண்ட வழிமுறைகளில் நம் உடலில் தினம்தினம் எண்ணற்ற செல்கள் சாவைச் சந்திக்கின்றன. இதனால்தான் நாம் புற்றுநோயிலிருந்து தப்பித்து உயிருடனிருப்பது சாத்தியமாகிறது. அதாவது நம் உடலில் DNA உடைப்பு சரி செய்யப்படாமல் செல்பிரிதல் என்ற பயணம் தொடர்ந்தால் புற்றுநோய் உறுதி; ஏறத்தாழ நம் சாவும் உறுதிசெய்யப்படுகிறது!

========================================================================

நன்றி:

https://www.bbc.com/tamil/science-62540482