நடைமேடையின் இருக்கை ஒன்றில் அமர்ந்து ‘கைப்பேசி’யை நோண்டியவாறு எனக்கான ரயிலுக்குக் காத்திருந்தபோது, என் பெயர் சொல்லி அழைத்த ஒரு பெண்ணின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன்.
மெலிதான புன்னகை தவழ என்னை உற்று நோக்கிக்கொண்டிருந்த அவர் அவள் என் கல்லூரித் தோழி; காதலியும்தான்.
“செண்பகம்தானே?” என்று நான் கேட்பதற்குள், “நான் செண்பகம். மறந்துட்டீங்களா உங்...” என்று சொல்லி முடிக்காமல், அருகிலிருந்த அவளின் கணவர், மகள், பேத்தி ஆகியோரையும் அறிமுகப்படுத்தியதோடு, “இவர் என் எம்.ஏ. வகுப்புத் தோழர்” என்று என் பெயர் சொல்லி அடையாளப்படுத்தினாள்.
படிப்பை முடித்து வெவ்வேறு ஊர்களில் வேலை கிடைத்துப் பிரிந்திருந்த நாட்களில் ‘பேசி’யில் பேசிப் பேசியே எங்கள் காதலை வளர்த்தோம்.
என்னை அழைக்கும்போதெல்லாம், “உங்க செண்பகா” என்று தொடங்குவாள். “என் செண்பகமா?” என்று கேட்டுத்தான் நான் பேச்சைத் தொடர்வேன்.
நாங்கள் மனம் ஒன்றிப் பழகியபோதும், ஒரு முறைகூட ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டதில்லை; ஒட்டி உரசிக்கொண்டதும் இல்லை.
உணவகம் சென்று தேநீர் அருந்தும்போதெல்லாம், இருக்கைகளில் இடைவெளி விட்டு அமர்ந்து பார்வையால் அன்பைப் பரிமாறிக்கொண்டவர்கள் நாங்கள்.
ஒன்றாக நூலகம் சென்று அவரவர் வாசித்தறிந்த அரிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதால் வளர்ந்த அறிவார்ந்த காதல் எங்களுடையது.
பூங்காக்களுக்குச் சென்று புதர் மறைவுகளைத் தேடாமல் புல்வெளியில் இடம்பிடித்து, நாட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளை விவாதித்து, காதலிப்பதற்கான தகுதியை மேம்படுத்திக்கொண்டவர்கள் செண்பகமும் நானும்.
திரையரங்குகளுக்குச் சென்று அரை இருட்டில் கட்டியணைத்துக் காமம் வளர்த்தவர்கள் அல்ல நாங்கள்; அதைப் புனிதமானது என்று போற்றி மகிழ்ந்தவர்கள்.
எங்கள் காதல் திருமணத்தில் முடியவில்லை என்பதுதான் பரிதாபம்.
அதற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது சாதி. சொந்தச் சாதிக்காரனை மணக்க மறுத்தால் தற்கொலை செய்வோம் என்னும் பெற்றோரில் மிரட்டலுக்குப் பணிந்தாள் செண்பகம்.
அதற்கப்புறம் எங்களின் தொடர்பு முற்றிலுமாய் அறுந்தது.
எங்கள் காதலும் பலிக்காத கனவாகிப்போனது.
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் காதலர்களாக ஒரு ரயில் நிலையத்தில் சந்தித்து, பழைய நினைவுகளில் மூழ்கி மீண்டெழுந்து சில கணங்கள் மௌனித்திருந்த நிலையில், நான் அமர்ந்திருந்த இருக்கையைக் காட்டி, உட்காருங்களேன்” என்றேன் அவர்களிடம்.
“நாங்க வந்த ரயில் அரை மணி நேரம் போலத் தாமதம். பஸ் பிடிச்சி ஒரு திருமணத்துக்குப் போகணும். உட்காரவெல்லாம் நேரமில்லீங்க” என்று சொன்ன செண்பகம் தன் கணவரைப் பார்த்து, “போகலாமா?” என்றாள்.
தலையசைத்த அவர் விடை பெறுவதன் அடையாளமாக என்னிடம் கை குலுக்கினார்.
செண்பகமும் என் கையை இறுகப் பற்றிக் குலுக்கினாள்.
இளமையில் தொட்டுக்கொள்ளாமலே வளர்த்த காதல் முதுமையில் எங்களைத் தொட்டுக்கொள்ளச் செய்த அந்த அதிசயம் என்னுள் இனம்புரியாத சிலிர்ப்பை உண்டுபண்ணியது.
அவர்கள் நால்வரும் விடைபெற்று நகரத் தொடங்கினார்கள்.
சட்டெனத் திரும்பிவந்த செண்பகம், “உங்க குடும்பத்தைப் பத்தி எதுவும் கேட்க மறந்துட்டேன்” என்றாள்.
‘இல்லை’ என்பதாகத் தலையசைத்து, “கல்யாணம் பண்ணிக்கல” என்றேன்.
அவளின் முகமெங்கும் சோக இருள் சூழ்ந்தது. “வர்றேங்க” என்றவள் விசுக்கென்று முகம் திருப்பி நகர்ந்தாள்.
அவள் கண் கலங்கியிருக்கியிருக்கிறாள் என்று தோன்றியது.
நானும் கலங்கிய கண்களுடன் எனக்கான ரயிலை எதிர்பார்த்துக் காத்திருக்கலானேன்.
எது எதற்கெல்லாமோ காத்திருந்து காத்திருந்து ஏமாந்து நொந்து மனம் புழுங்கி மரணத்தைத் தழுவுவதுதானே மனித வாழ்க்கை!
* * * * *
***நண்பர் ஒருவரின் வாழ்க்கை நிகழ்வே கதை ஆக்கப்பட்டுள்ளது. கதை சொல்பவரும்[‘நான்’] அவரே.