சில நாட்கள் முன்பு ‘தினப்புளுகு’ தினமலரில், சுவாமிகளுக்கெல்லாம் தலைவனான இந்த நாதன் எழுதிய ஒரு கதையின் சாராம்சத்தை முதலில் வாசியுங்கள். இறுதியில் இவர் குறித்த மேல்விவரங்கள் இடம்பெறும்.
ஐதராபாத் நகரில் வாழ்பவர் ராவ் அவர்கள்[இது பெயரின் பிற்பகுதி]. மகா மகாப் பெரிய மகான்மீது அளவற்ற பக்தி கொண்டவர்.
தீராத மூட்டு வலிக்கு வைத்தியம் பார்ப்பதற்காக, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்குச் செல்கிறார். ஸ்கேன் செய்தல் போன்ற பரிசோதனைகளைச் செய்த மருத்துவர் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மீண்டும் மருத்துவமனைக்கு வருமாறு அறிவுறுத்தி அனுப்புகிறார்.
கொஞ்சம் நாட்கள் கழித்து வேலூர் மருத்துவரைச் சந்திக்கிறார் ராவ். கால் மூட்டுகளை மீண்டும் ஸ்கேன் செய்து ஆராய்ந்த மருத்துவர் பிரமிக்கிறார். காரணம்.....
மூட்டுவலிக்குக் காரணமான தேய்மானம் முதலான குறைபாடுகள் அறவே நீங்கியிருந்தனவாம்.
எப்படி நிகழ்ந்தது இந்த விந்தை?
இரண்டாம் முறை மருத்துவரைச் சந்திப்பதற்கு முன்னதாக உலகம் போற்றும் ‘அந்த’ மகா மகாப் பெரிய மனிதரை[மனிதரல்ல; அவதாரம்]த் தரிசனம் பண்ணினாராம் இவர். அவர் பார்வை பட்டதும் மூட்டு வலி முற்றிலுமாய்க் குணமாகிவிட்டதாம்.
இந்த அதிசயத்தை ராவ் அவர்கள் தம் குடும்பத்தாருடன் பகிர்ந்து பெருமிதப்படுவதாகக் கதையை முடித்திருக்கிறார் கதாசிரியர் நாதன்.
இது உண்மை நிகழ்ச்சியாம்.
கருணைக் கடலான மகான், தம் அருட்பார்வையைப் பரவலாக்கியிருந்தால் உலகெங்கிலும் உள்ள மூட்டுவலிக்காரர்கள் குணமடைந்திருப்பார்களே, பகவான் செய்தாரா என்றெல்லம் நீங்கள் கேள்வி எழுப்புதல் கூடாது. ஏனென்றால்.....
இந்த நாதன் ஒரு உண்மை விளம்பி. இவர் சொன்ன...சொல்லிக்கொண்டிருக்கிற...சொல்லவிருக்கும் அத்தனை கதைகளும் உண்மையானவையே.
தமிழகத்தின் முன்னணி ‘முட்டாள்தனம்’ வளர்க்கிற இதழ்களில் இவர் கதைகள் எழுதி, உலகின் நெ.1 கதை சொல்லி என்று புகழ் பெற்றவர்.
மறைந்த அந்த மகானின் புகழ் வளர்ப்பதிலும் இவர் முன்னணி வகிக்கிறார் என்பது அறியத்தக்கது!
=================================================================================

