எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

அவர் எவராயினும் அரசுப் பணிக்கிடையே ஆலயம் செல்வதைத் தடை செய்க!

இந்தியாவில் நாத்திகம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை[ATHEISM IN INDIA — A DISMISSED IDENTITY].

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது,  எவரொருவரிடமும் அவர் ஆத்திகரா, நாத்திகரா, இவை குறித்த சிந்தனையே இல்லாதவரா என்றெல்லாம்  கேள்விகள் எழுப்பப்படுவதே இல்லை. அவர் எம்மதத்தவர் என்பதை மட்டுமே பதிவு செய்கிறார்கள்.

இதனால், கடவுள் வழிபாடு போன்ற மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு வாழும் பகுத்தறிவாளர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது இயலாமல்போகிறது.

இதன் விளைவு, இங்கு வாழ்வோரில் மிக மிகப் பெரும்பாலோர் ஆத்திகர்களே[மூடநம்பிக்கையாளர்கள்] என்று மக்கள் நம்பும் நிலை உருவாகிவிட்டது.

இந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் ஆளும் வர்க்கத்தைச் சார்ந்த பிரபலங்கள்[பிரதமர், குடியரசுத் தலைவர்+] கோயில்களுக்குச் சென்று வழிபடும்போதெல்லாம், ஊடகங்கள் அந்நிகழ்வுகளைப் படம்பிடித்து வெளியிடத் தவறுவதே இல்லை.

தமக்குரிய பணிகளின்போது, மத உணர்வைத் தூண்டுவதான செயல்களில் அரசுப் பணியாளர்கள் ஈடுபடுதல் கூடாது என்பது அரசியல் சட்ட விதிகளில் ஒன்று.

பிரதமர், குடியரசுத் தலைவர் போன்றவர்களும் அரசிடம் ஊதியம் பெறுபவர்களே[+அதீத அதிகாரம் படைத்தவர்கள்].

அரசுப் பணியாற்றச் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்கள் கோயில்களுக்கும் சென்று[பரிவாரங்கள் புடைசூழ] வழிபடுவதும், அவர்களுக்குத் தனி மரியாத செலுத்தப்படுவதும், காணொலிகளில் காண்போர் மனங்களில் மத உணர்வைத் தூண்டும்[பிற மதத்தவர் எனின் வெறுப்பை உண்டுபண்ணும்].

இவர்களின் கடவுள் வழிபாடு காட்சிப்படுத்தப்படுவது தவிர்க்கப்பட்டால், மக்களிடையே சிந்திக்கும் அறிவு வளரும்[ஒருவர் நல்லவராகவும், மனிதாபிமானம் மிக்கவராகவும் வாழ்வதற்குப் பக்தி உதவாது. இது மனிதரை மூடராக மட்டுமல்ல, சுயநலம் மிக்கவர்களாகவும் ஆக்குகிறது> விரிவானதொரு ஆய்வு பின்னர் வெளிவரும்].

ஆகவே, அவர்கள் கோயில்களுக்குச் செல்லும்போதெல்லாம் அதை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதும் தடை செய்யப்படுதல் வேண்டும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாட்டு அதிகார வர்க்கத்தவர்[ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்கள்] இந்தத் தவற்றைச் செய்வதில்லை என்பது நம் நம்பிக்கை.

கொழுக்கட்டைக் கடவுளும் கொல்லப்படும் மனித உயிர்களும்!!!


சாலைகள் என்பவை முழுக்க முழுக்கப் போக்குவரத்துக்கானவை[மனிதர்கள், வாகனங்கள்+].

அரசியல்வாதிகளும் பக்தி முற்றிப்போன அரைவேக்காடுகளும் இதை ஆக்கிரமிப்பதால், மக்கள் தங்களின் அன்றாடப் பணிகளைச் சரியாகச் செய்ய இயலாமல் அல்லாடுவது அடிக்கடியான நிகழ்வாகிவிட்டது.

அரசியல்வாதிகளை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்தும் ஆட்சியாளர்கள் ஆன்மிகவாதிகள் செய்யும் அடாவடித்தனங்களைக் கண்டுகொள்வதில்லை.

காரணம், கட்டுப்படுத்தினால், தேர்தல்களில் அவர்கள் தங்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்னும் அச்சம்.

இதன் விளைவு, சாமி ஊர்வலம் என்னும் பெயரால் இவர்கள் போடும் ஆட்டமும் குத்தாட்டமும் சகிக்க இயலாதவை.

இவர்கள் அடிக்கும் கொட்டங்களால், வாகன விபத்துகள் நேர்வதும் சிலரோ பலரோ உயுரிழப்பதும் வழக்கமாகிவிட்டது.

அண்மையில் கர்னாடகா மாநிலத்தில் நடத்தப்பட்டப் பிள்ளையார் ஊர்வலத்திற்குள் ஒரு பெரிய வாகனம்[கண்டெய்னர் லாரி] புகுந்ததால் 9 பேர் உயிரிழக்கப் பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்[செய்தி பல மணி நேரங்களுக்கு முன்னரானது என்பதால், உயிரிழப்புகள் பின்னர்  அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது].

யானைத் தலையும் தாழி வயிறுமாக ஒன்றரைத் தந்தத்துடன் ஒரு கடவுளைக் கற்பித்தவன் படு அயோக்கியன் என்றால், இந்தக் கோமாளிக் கடவுளை உலக அளவில் பிரபலமாக்கிக் கொண்டாடி வழிபடும் பக்திப் பித்தர்களைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

இவன்கள் உருப்படாமல்போவதுடன், பக்தியில்லாதவர்களுக்கும் அதில் தீவிர ஈடுபாடு இல்லாதவர்களுக்கும் இவர்கள் செய்யும் இடையூறுகளுக்கு அளவே இல்லை[சாமி ஊர்வலங்களிக்கென்று சாலைகளை ஒட்டிப் பக்கவாட்டுகளில், நடைபாதைகளை விரிவுபடுத்திச் ‘சிறு குறு’ பாதைகள் அமைக்கலாம். இதன் மூலம் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்வதைத் தவிர்க்கலாம்].

இவர்கள் திருந்தும் நாளும் வருமா?

பக்தி வேடம் புனைந்து, தங்களைப் பரம யோக்கியர்களாக வாக்காளர்களை நம்பச் செய்து ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளும், பக்தியை வளர்த்துத் தங்களின் பத்திரிகை விற்பனையை அதிகரித்துப் பணம் சம்பாதிக்கும் பத்திரிகையாளர்களும் உள்ளவரை.....

ஊஹூம்!