எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 2 ஜூலை, 2023

‘ஆகம விதி’ என்னும் பெயரால்..... ?!?!?!

ழுமலையான் கோவில் மீது விமானங்களும், ஹெலிகாப்டர்களும், பறக்கத் தடை விதித்து தேவஸ்தானம் அறிவித்திருந்த நிலையில், சமீபக் காலமாக அதன் மீது விமானங்களும், ராணுவப் பயிற்சி ஹெலிகாப்டர்களும் பறந்து செல்வது மட்டுமல்லாமல், உளவு பார்ப்பதற்காக[?] ஆளில்லா விமானங்களும் பறப்பதாகத் அது அறிவித்திருக்கிறது.

இதன் மூலம் ‘ஆகம விதி’ மீறப்படுவதாகச் சொல்லும் அது, இனியும் விமானங்களோ ஹெலிகாப்டர்களோ கோயிலின் மீது பறப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று நடுவணரசிடம் கோரிக்கை வைத்ததாகவும், நடுவணரசு மறுத்துவிட்டதாகவும் ‘தினத்தந்தி’ செய்தி வெளியிட்டுள்ளது.

இது தேவஸ்தானத்துக்கும் நடுவணரசுக்கும் இடையிலான விவகாரம் என்பதால், அது நமக்கு ஒரு பொருட்டல்ல.

ஆனால்.....

விமானங்கள் பறப்பதால் ‘ஆகம விதி’ மீறப்படுகிறது என்று அவர்கள் சொல்லும் பொய்தான் நம்மைக் கதிகலங்கச் செய்கிறது.

ஆகம விதிகள் வகுக்கப்பட்டது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு[நீங்கள் யுக யுகாந்தரங்களுக்கு முன்பு என்றும் சொல்லிக்கொள்ளலாம்] என்கிறார்கள்.

விமானம் கண்டுபிடிக்கப்பட்டது 20ஆம் நூற்றாண்டில்(1890-1903).

இந்த நிலையில், திருப்பதி கோயிலுக்கு மேலே விமானங்கள் பறப்பதை ஆகம விதி அனுமதிக்கவில்லை என்கிறார்களே, அது எப்படி?

அந்தக் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களின் மீது காக்கை, கழுகு, குருவி, கோட்டான் என்று எந்தவொரு பறவையும் பறப்பதை ஆகம விதி தடை செய்திருக்கிறது என்று சொல்வதில்கூட நியாயம் இருக்கிறது.

அந்த விதியை அறிந்துகொள்ளும் அறிவு பறவை இனங்களுக்கு இல்லை என்பதால், அந்த விதிக்குக் கடவுள் அனுமதி வழங்கியிருக்கமாட்டார் என்று சொல்லி அவர்கள் சொல்வதை நியாயப்படுத்தலாம்.

விமானங்கள் பறப்பதற்கான அனுமதி மறுக்கப்படுதல் வேண்டும் என்பதற்கு, தேவஸ்தானிகள் ‘ஆகம விதி’யைத் தூக்கிப் பிடிப்பது நகைப்புக்குரியதாகும்.

ஆகம விதியைக் காரணம் காட்டிக் காலங்காலமாகக் கோயில்களில் ஆதிக்கம் செலுத்தினார்கள்; செலுத்துகிறார்கள் ‘அவர்கள்’.

இந்தக் கூத்து இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்?

ஏழுமலையானுக்கே வெளிச்சம்!


*   *   *   *  *

https://www.thanthitv.com/latest-news/the-central-government-refused-to-accept-the-requesttirupathi-devasthanam-in-shock-what-is-the-reason-196610?infinitescroll=1

பக்தி வளர்க! பக்தர்கள் வாழ்க! மதங்கள் வாழ்க! கடவுளும் வாழ்க வாழ்கவே!!

“கர்த்தரின் நாமத்தை ஜெபியுங்கள், அவர் கருணை காட்டுவார்” என்கிறது கிறித்தவம்.

“அபயக் குரல் எழுப்புவீர் ஆபத்பாந்தவன் கிருஷ்ணன்[மற்றக் கடவுள்களும்தான்] ஓடோடி வருவான்” என்கிறது இந்துமதம்.

“அல்லல்களையும் துன்பங்களையும் துயரங்களையும் கிள்ளி எறிபவன் அல்லா” என்கிறது இஸ்லாம் மதம்.

நீங்கள்[பக்தர்] இந்த மூன்றில் ஒன்றையோ மூன்றையுமோ, இன்னும் பல மதங்களையோ சார்ந்து வாழ்பவராக இருந்தால்.....

நீங்கள் வாழ்க! உங்களின் மதங்களும் வாழ்க! மதங்கள் போற்றும் கடவுள்களும் வாழ்க! வாழ்கவே!!

உங்களின் வருகைக்கு நன்றி! கீழ்க்காணும் கதையையும் நீங்கள் வாசித்திட வேண்டும் என்பது என் கோரிக்கை.

                                     *   *   *   *   *

கதை: ‘சுமக்கப் பிறந்தவர்கள்’

யிற்றுப்பாட்டுக்காகத் தானிய மண்டியில் மூட்டை சுமப்பவன் 'X'[பெயர் வேண்டாம்].

அவன் அன்று, சாலையில் நடந்துகொண்டிருந்தபோது, சொகுசுக் கார் ஒன்று, ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டதைக் கண்டான்.

ரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுவனை, ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை ஒன்றில் சேர்த்தான்; அடையாள அட்டையிலிருந்த தொ.பே.எண்ணுக்குத் தொடர்புகொண்டு அவனின் பெற்றோரை வரவழைத்தான்.

மருத்துவரைச் சந்தித்துத் திரும்பிய சிறுவனின் தந்தை, நம் Xஐச் சந்தித்து, “பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தா உங்க புள்ளையைக் காப்பாத்தியிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னார். கடவுளா பார்த்து உங்களை அனுப்பியிருக்கார். ரொம்ப நன்றிங்க” என்று குரல் தழுதழுக்கச் சொல்லி Xஇன் கரங்களைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

“என் பத்து வயசுப் பொண்ணு காணாம போயி ரெண்டு வருசம் ஆச்சு. சின்னஞ்சிறு குட்டிகளைக் கடத்துறதும், கற்பழிச்சிச் சிதைச்சிக் கொலை பண்ணுறதும் அடிக்கடி நடக்குது. “என் செல்லம் என்ன ஆனாளோ”ன்னு அழுது துடிச்சா என் பெண்டாட்டி. அல்லா, கர்த்தர், ஆதியோகி, சிவ யோகி, கிருஷ்ண பரமார்த்தா, விநாயகனார், முருகனார்னு தனக்குத் தெரிஞ்ச சாமிகளையும், அறிமுகம் இல்லாத அத்தனை சாமிகளையும் வேண்டிகிட்டா. எந்தச் சாமியும் உதவ முன்வரல. தினம் தினம் வேதனைப்பட்டுப் பட்டுப் பட்டுப் பட்டினி கிடந்து செத்துப் போனா. நான் நடைப் பிணமா வாழ்ந்துட்டிருக்கேன். நீங்க புண்ணியம் செஞ்சவங்க. கேட்காமலே கடவுள் என்னை அனுப்பி உங்களுக்கு உதவியிருக்கார். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன், கடவுளைக் கருணை காட்டச் சொல்லுங்க. என் மகளைக் கண்டுபிடிச்சித் தரச்சொல்லி வேண்டிக்கிங்க ஐயா.” -கண்களில் கண்ணீர் பெருக, நா தழுதழுக்கச் சொன்னான் X.

சற்று நேரம் செய்வதறியாது திகைத்த சிறுவனின் தந்தை, Xஇன் தோள் தொட்டு, “வேண்டிக்கிறேன். நீங்களும் உயிருள்ளவரை வேண்டிகிட்டே இருங்க. கடவுள் கருணை காட்டுவார்” என்று சொல்லி இடம்பெயர்ந்தார்!

* * * * *

இந்தக் கதை[2014], அதிபிரமாண்டமான மகா மகா மகாப் பெரிய ‘பானை’ச் சோற்றில் ஒரு சோறு மட்டுமே!

* * * * *