எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

இவனா? இவன் நல்லவனா? இவனா நல்லவன்?!

கடவுள் ஏன் நம்மைப் படைத்து இந்த உலகில் உலவ விட்டார் என்ற வினா, சதா காலமும் நம் மண்டையைக் குடைந்து குடைந்து நிம்மதியைக் குலைத்துக்கொண்டே இருக்கிறது.

நமதே நமதான இந்த உடம்பு நம் கட்டுப்பாட்டில் இல்லை. மனமும் இல்லை. இவற்றைக் கட்டுப்படுத்தி, ஆசை, நேசம், பாசம், காமம், வெகுளி, பொறாமை, சூது, வாது, வஞ்சகம் போன்றவற்றிலிருந்து தற்காத்து நிம்மதியுடன் வாழ்வதற்கு எத்தனைப் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது? இப்படியொரு அவல வாழ்க்கை வாழ நம்மைப் பணித்த கடவுள் நல்லவனா?

நோய், வறுமை, முதுமை, இயற்கைப் பேரிடர் என்று எத்தனை எத்தனை அழிவுச் சக்திகள் நம்மை ஓட ஓட விரட்டிக்கொண்டிருக்கின்றன. இப்படியொரு விடுபட முடியாத இடர்ப்பாட்டுக்கு நம்மை உட்படுத்திய இவன் நல்லவனா என்ன?

அவலத்தின் மறுபிரதி மரணம். மரணத்தைக் காட்டிலும் நம்மைத் தினம் தினம் அச்சுறுத்திச் சிறுகச் சிறுகச் சாகடிக்கிறது மரண பயம். மரணமே இல்லாத கடவுள் நம்மை மட்டும் மரணதுக்கும் மரண பயத்துக்கும் உள்ளாக்கலாமா? 

செத்த பிறகு என்ன ஆவோம் என்பதும் நமக்குத் தெரியாது. இந்த மர்ம முடிச்சைப் போட்டவனும் இவன்தான்; இவனேதான்.


இவன் நல்லவன் அல்ல; அல்லவே அல்ல.

நல்லவன் அல்ல என்றால், தீயவன்... தீயவனே என்பது உறுதி.

தீமையே வடிவானவனைக் கருணை வடிவானவன் என்று நம்பி வழிபடுவது அறிவுடைமையா, அறியாமையின் உச்சநிலையா?

சிந்திப்பீர்!
==============================================================================

சத்குருவும் ‘சத்சத்’குருக்களும்!!!

கடவுளின் குருவும் பிறவி ஞானியுமான ‘ஜக்கி’ திருவாய் மலர்ந்தருளிய தத்துவ முத்துகளில் கணிசமானவற்றை இங்கு பகிர்ந்துள்ளேன்.

இவற்றில், குறைந்தபட்சம் ஏதேனும் ஒன்றை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்றால் உங்களை நீங்களே, ‘சத்’சத்குரு என்று அழைத்துக்கொள்ளலாம். 

உங்களுக்குச் சரளமாக ஆங்கில பேச முடியுமென்றால், ஏதேனும் ஒரு மலையடிவாரத்தில் புறம்போக்கு நிலங்களை வளைத்துப்போட்டு ஆசிரமம் உருவாக்குங்கள்.

ஆசிரமத்தில் ‘அபூர்வயோகி’ சிலை நிறுவி, அதைப் பிரபலமானவரை[பிரியமானவராகவும் இருத்தல் நல்லது]க்கொண்டு திறக்கச் செய்திடுவீர்.

மூஞ்சி முழுக்கத் தாடி மீசை வளர்த்து[அதுக்குக் கொடுப்பினை வேண்டும்] விதம் விதமாய் விலையுயர்ந்த ஆடையுடுத்து, “சத்சத்குரு என்னும் பெயரில் ஆன்மிகம் போதித்து ‘மகாசமாதி’ மூலம் சொர்க்கபுரி செல்லப் பயிற்சி தரப்படும்” என்று அடித்துவிடுங்கள். 

செலவைப் பொருட்படுத்தாமல் ஊடகங்களில் விளம்பரம் செய்தல் மிக அவசியம்.

உங்களைத் தேடி அணி அணியாய் மக்கள் திரண்டு வருவார்கள். 

ஆங்கிலத்தில் புரியாத தத்துவங்களை அள்ளித் தெளியுங்கள். கை தட்டி ரசித்து, நன்கொடைகளை அள்ளி வழங்கும் மூடர் கூட்டம் உலகெங்கிலும் உள்ளது. அப்புறம்.....

அப்புறம் என்ன, சொகுசுக் கார்கள், ஹெலிகாப்டர்கள் என்று உலகம் சுற்றலாம்; உல்லாச புரிகளில் பவனி வரலாம்.

வாசிப்பைத் தொடருங்கள்.