ஞாயிறு, 8 மே, 2022

இந்தியக் 'குடிமகள்'கள்!!!


2016 ஆம் ஆண்டில், 'ஜெண்டர் ஆல்கஹால் அண்ட் கல்ச்சர் (Gender Alcohol and Culture) என்ற அமைப்பு, உலகச் சுகாதார நிறுவனத்தின் உதவியுடன்  இந்தியப் பெண்களின் குடிப்பழக்கம் குறித்து ஆய்வு நிகழ்த்தியது.

இதுவே, நம் 'குடிமகள்'கள் குறித்துச் செய்யப்பட்ட முதல் ஆய்வு ஆகும்.

இது கண்டறிந்த முடிவின்படி இந்தியாவில் 5%[7.5% என்கிறது மற்றொரு ஆய்வு]  பெண்கள் மது அருந்துகிறார்களாம்[வட மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 10-11%].

சமூகத்தின் நடுத்தர அல்லது உயர்தட்டுப் பெண்களிடம்தான் குடிப்பழக்கம் அதிகம் காணப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்துப் பெண்களும் உடல் வலியைக் குறைப்பதற்காகக் குடிக்கிறார்கள்..

மேற்கத்திய நாடுகளை நோக்க 5%, 7.5% என்பவையெல்லாம் குறைவுதான் என்றாலும், குடியால் இவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அயல் நாட்டுப் பெண்களைவிடவும் அதிகம். காரணம்.....

அவர்கள் தண்ணீர் குடிப்பது மிகவும் குறைவாக இருப்பதால், உணவுடன் சேர்த்து மதுவும் உட்கொள்கிறார்கள் அவர்கள். இவர்கள் உட்கொள்வதோ போதைக்காக.

அவர்கள், hard liquor[?] எனப்படும் மதுவைக் குறைவாகவே குடிக்கிறார்கள். ஒயின், பீர், வோட்கா, ஜின் போன்ற உடம்புக்கு நன்மையளிக்கிற[ஓரளவுக்கு?] மது வகைகளை அளவாக அருந்துகிறார்கள். இங்கே தண்ணீர் கலக்காமல் 'ரா'வாக அடிக்கிற அம்மணிகளும் உள்ளனர்.

ஆண்களைப் போலவே, முட்ட முட்டக் குடிக்கும் மொடாக் குடிக் கோதையரும் இங்கே இருக்கிறார்கள்.

ஆண்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காக மது அருந்துகின்றனர். பெண்கள் திருப்தியின்மை, விரக்தி,  சோர்வு போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்குக் குடிக்கிறார்கள்.

ஒரு பெண்ணின் உடலில் உள்ள நீரின் அளவு ஓர் ஆணின் உடலில் இருப்பதை விட மிகவும் குறைவு. அதனால், அவர்கள் அருந்தும் மதுவை  உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பெண்களின் ஹார்மோன்கள் மாற்றுகின்றனவாம்; வேறு பல உடல்ரீதியான சிக்கல்களையும் அவை உண்டுபண்ணுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மதுவுக்கு அடிமையாகும் பெண்கள் ஆண்களைவிடவும் மனத்தளவிலும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆண்களிடமிருந்து போதிய ஆதரவும் கிடைப்பதில்லை.

கணிசமான அளவிலான குடிமகள்கள் வீட்டைவிட்டே துரத்தப்படவும் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சமூக விரோதிகளிடம் அகப்பட்டு, கடத்தல், விபச்சாரம் போன்ற தொழில்களில் தள்ளப்படுகிற அவலங்களுக்கு நேர்ந்துகொண்டிருக்கின்றன.

மது குடிக்கும் இந்தியப் பெண்கள் குறித்த இந்த ஆய்வு 2016இல் நிகழ்த்தப்பட்டது['பிபிசி']. இதன் பின்னரான ஆண்டுகளில் நம் 'குடிமகள்'களின் எண்ணிக்கை குறைந்திருக்குமா?

"ஊ..........ஹூ..........ம்"

==========================================================================