செவ்வாய், 11 ஜூன், 2019

'ராணி'[வார இதழ்] நம் இதய ராணி!!!

தமிழ்நாட்டில் இந்தித் 'திணிப்பு'க்கான எதிர்ப்பு தீவிரமடைகிறது. தமிழ் இதழ்கள் பலவும் தத்தம் பங்குக்குக் கண்டனக் குரல்கள் எழுப்பியுள்ளன.

முன்னணி வார இதழ்களில் ஒன்றான 'ராணி' வார இதழ்[16.06.2019], இந்தித் திணிப்பைச் சாடி மிகச் சிறப்பானதொரு தலையங்கம் தீட்டியுள்ளமை நம்மைப் பெரிதும் மகிழ்விக்கிறது.
#தாய்மொழி'...நம் கண் போன்றது. பிறமொழிகள் கண்ணுக்குக் கண்ணாடி போன்றவை. கண் இல்லாவிட்டால் சிரமம். அதே நேரம் யாருக்கு எந்த மாதிரியான கண்ணாடி தேவையோ அதை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். 'என்னிடம் அதிகாரம் இருக்கிறது. அந்தக் கண்ணாடியை நான்தான் அணிவிப்பேன்' என்பது சரியாகுமா?

'தமிழ்நாட்டில் ஆங்கிலத்தைப் புறக்கணித்தால் இங்கே இந்தி வந்து குதிக்கும்' என்பது பெருந்தலைவர் காமராஜரின் தொலைநோக்குச் சிந்தனை. ''உள்ளூர் தொடங்கி தமிழக எல்லைவரை நமக்குத் தமிழ்தான் உயிர்நாடி. அதன் எல்லைக்கு அப்பால் தகவல் தொடர்புக்கு ஆங்கிலம் தேவை[ஆனால், நம்மவர்களோ ஆங்கில் மோகத்தில் திளைக்கிறார்கள்]. மதுரையில் இருக்கும் எனக்கு எதற்கு வேற்று மொழி?'' என்பார் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்றச் சபாநாயகர் தமிழ்க்குடிமகன்.....

.....இந்தி, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதற்கு ஏற்ற மொழியல்ல.....வீணாகக் காரசார விவாத நெருப்புக்கு 'மொழி வெறி' என்னும் நெய்யை வார்க்காதீர்கள்! தமிழர் தலையில் மிளகாய் அரைக்கிற கதையாக இந்தியைத் திணிக்க நினைக்காதீர்!!#

ராணியில் வெளியாகியுள்ள, 'தராசு' சியாம் அவர்களின் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்.....

#இந்தியைப் புரிந்துகொள்ளத் தெரிந்த பிற மாநிலத்தவர்களும் இந்தித் திணிப்பால் தங்கள் மொழி மெல்ல மெல்ல அழிவதை உணர்ந்து இப்போது எதிர்க்கிறார்கள்......

.....இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் இந்தி ஆதிக்கத்தால் நூற்றுக்கணக்கான மொழிகள் அழிந்திருக்கின்றன.....

.....வரும் கல்வி ஆண்டிலேயே புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. எனவே, கருத்துக் கேட்பு என்பது வெறும் சம்பிரதாய ஜாலமாகத்தான் தெரிகிறது.

நான் அரியானா மாநிலக் கிராமங்களில் பணியாற்றியபோது கிராமவாசிகளுக்கு இந்தி தெரியவில்லை என்பதை அறிய முடிந்தது. அவர்களுக்குப் பஞ்சாபி மொழி மட்டுமே தெரிந்திருந்தது.....

.....மும்மொழித்திட்டம் என்பது ஏற்கத்தக்கதல்ல. பெங்காலி, ஒரியா, கன்னடா, தெலுங்கு, மராட்டி போன்ற மொழிக்காரர்கள் தமிழ் படிக்கப் போவதில்லை. திட்டத்தை ஏற்றால் நம் மீது இந்தி திணிக்கப்படுவது உறுதி#
==================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக