கடவுள் முருகனின் வேல் ஆயுதத்தைக் கையில் ஏந்தி, திருத்தணியிலிருந்து திருச்செந்தூர்வரை பாதயாத்திரை செல்வதில் தமிழ்நாடு பா.ஜ.கட்சியினர் தீவிரம் காட்டிவருகிறார்கள்.
இதன் நோக்கம் குறித்துக் கட்சித் தலைவர் முருகனோ, இதர பொறுப்பாளர்களோ உரிய விளக்கம் தந்ததாகத் தெரியவில்லை.
அண்மைக் காலம்வரை முருகனை ஒரு பொருட்டாக மதிக்காத பா.ஜ.க.வினரின், வீட்டு வாசல்களில் வேல் நடுவது, வேலேந்தி யாத்திரை போக முயல்வது என்றிவ்வாறான நடவடிக்கைகள் எல்லாம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை அள்ளுவதற்கான தந்திரம் என்றே தோன்றுகிறது.
இவர்களுக்குத் தமிழ்ப் பற்று கிடையாது; தமிழ் இனத்தின் மீதும் பற்றுடையவர்களாக இருந்ததில்லை என்பது நாடறிந்த உண்மையாகும்.
தமிழ்க் கடவுள் எனப்படும் முருகனுக்குரிய வேலைக் கையால் தீண்டுவதற்கும் இவர்களுக்குத் தகுதி இல்லை என்பதே உண்மையான முருகன் பக்தர்களின் எண்ணமாக இருத்தல்கூடும்.
இவர்களின் வேல் யாத்திரையால் தமிழ்நாட்டில் கலவரம் மூளும் அபாயம் உள்ளது என்று சொல்லி, இதற்குத் தடை விதித்திடல் வேண்டும் என்று வி.சி.க.தலைவர் திருமாவளவன் தொடர்ந்து எச்சரித்துக்கொண்டிருக்கிறார். வேறு சில அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டித்திருக்கிறார்கள்.
யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் இருவர் தொடர்ந்த வழக்கில், முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தமிழக அரசுக்கு அளித்திருக்கிறது உயர் நீதிமன்றம்.
யாத்திரைக்குத் தடை விதிப்பதாக உயர் நீதிமன்றத்தில் அறிவித்த அரசு, பின்னரும் அந்த முடிவை உறுதிப்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையே, பாஜக தமிழகத் துணைத் தலைவர், “தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்துவதில் உறுதியாக உள்ளோம். இதுகுறித்து மத்தியப் பாஜக மேல்மட்டத் தலைவர்களுடன் ஆலோசித்து, அவர்களின் அறிவுரைப்படிச் செயல்படுவோம். அனைத்துத் தடைகளையும் மீறி, துள்ளி வரும் வேல்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பாஜக வேல் யாத்திரை குறித்துப் பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், “கொரோனா பரவலைத் தடுக்கவே அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கவில்லை. அனைவரும் அரசின் உத்தரவைப் பின்பற்றி நடக்க வேண்டும். தடையை மீறி யாத்திரை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என எச்சரித்துள்ளார்.இத்தகையதொரு சூழலில், நாளை தொடங்கவிருப்பதாக, பா.ஜ.கட்சி எடுத்திருக்கும் முடிவைக் கைவிடுவது கட்சிக்கு மட்டுமல்ல, நம் மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.
தமிழ் மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்வதற்குப் பா.ஜ.க. விரும்பினால், கொரோனா கொடுந்தொற்றின் கொட்டம் முற்றிலுமாய் அடங்கிவிடாத நிலையில்.....
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு முறைகளை மக்களின் மனங்களில் ஆழப் பதித்திடும் வகையில், 'கொரோனா யாத்திரை' ஒன்றை, திருத்தணியிலிருந்து திருச்செந்தூர்வரை நடத்துவதோடு, பிற பகுதிகளிலும் நடத்துவது ஓரளவேனும் பலனளிக்கக்கூடும்.
பா.ஜ.க. நன்கு சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும் என்பது நம் போன்றோரின் மிகு விருப்பம் ஆகும்!
===============================================================