திங்கள், 29 ஜனவரி, 2018

பெருமாள் முருகனும் சாருநிவேதிதாவும்...பண்பியல் ஒப்பீடு!!!

பெருமாள் முருகன் கொல்லைப்புற வழியாக நுழைந்து புக்கர் பரிசைப் பெற்றுவிடுவாரோ என்று கவலைப்படுகிறார் குமுதத்தின் ஆஸ்தான புருடா எழுத்தாளன் சாரு நிவேதிதா[ஆதாரம்: 17.01.2018 குமுதம் வார இதழ்]. 'கொல்லைப்புற வழி' என்பதற்கு, 'ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தி எழுதி உலகப் புகழ் அடைவது' என்று விளக்கமும் தருகிறார்.
இவருடைய மூன்று நூல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவுள்ளனவாம். அவை நோபல் பரிசும் புக்கர் பரிசும் பெறுவதற்கான தகுதி உடையன என்று பெருமை பீத்திக்கொள்ளும் இந்த நபருக்குப் பெருமாள் முருகனை விமர்சிக்கும் தகுதி கொஞ்சமும் இல்லை என்பதைக் கீழ்க்காணும் ஒப்பீட்டின் மூலம் அறியலாம்.

*பெருமாள் முருகன் சீரிய சிந்தனையாளர். சாருநிவேதிதா போல, 'பரமஹம்ச நித்தியானந்தா'வின் கால்களில் விழுவதும், பின்னர் அவரின் கால்களை வாரிவிடுவதுமான பச்சோந்திப் புத்தி அவருக்குக் கிஞ்சித்தும் இல்லை.

*பெருமாள் முருகன் பண்பாளர்; ஒழுக்க சீலர். சாருவைப் போல, இணையத்தில் நட்புப் பாராட்டிய ஓர் அப்பாவிப் பெண்ணின் மார்பளவை விசாரித்தது போன்ற இழி செயலை அவர் ஒருபோதும் செய்தவரல்லர்.  தான் சரக்கடிப்பதைப் பகிரங்கப்படுத்தி, எதையும் மறைத்துப் பேசத் தெரியாத ''அப்பாவி நான்'' என்று வாசகரை நம்பவைக்கும் சாருவின் சிறுபிள்ளைத்தனம் அவரிடம் இல்லை.

*மாதொருபாகனை அவர் எழுதியது ஒரு விபத்து[இது என் தனிப்பட்ட கருத்து] என்பதைத் தவிர, அவரால் உருவாக்கப்பட்ட படைப்புகள் அத்தனையும் தரத்தில் மிக உயர்ந்தவை. சாருவின் படைப்புகள், தரத்தில் அவற்றிற்கு நிகரானவை அல்ல.

*பெருமாள் முருகன், கதா விருது, திருப்பூர் தெய்வசிகாமணி விருது என்று பல விருதுகள் பெற்றவர். சாகித்திய அகடமி விருதை வென்றிருக்க வேண்டியவர். இத்தகைய ஒரு விருதுக்கே தகுதி இல்லாதவரான சாரு 'புக்கர்' பரிசுக்கு ஆசைப்படுவது நகைப்பிற்குரியது.

*பெருமாள் முருகன் பெருந்தன்மை மிக்கவர். சக எழுத்தாளனை இழித்துப் பேசும் சாருவின் சாக்கடைப் புத்தி அவருக்கு இப்போது மட்டுமல்ல, வேறு எப்போதும் இருந்ததில்லை.

*இதழாசிரியர்கள் விரும்பிக் கேட்டால் மட்டுமே படைப்புகளை வழங்குவதோடு, அம்மாதிரியான வாய்ப்புகள் அமையாதபோது, சாருவைப்போல பத்திரிகையாளர்களைத் தேடிப்போய்ச் சரணாகதியடைந்து ஜால்றா அடிக்கும் பழக்கம் பெருமாள் முருகனுக்கு இல்லை; இருக்கும் இடம் தெரியாமல் தனக்குரிய கடமைகளைச் செய்துகொண்டிருப்பவர் அவர்.

இவை போன்ற, இன்னும் பல பாராட்டுக்குரிய நற்பண்புகளைக் கொண்ட பெருமாள் முருகனை.....

'கொல்லைப்புற வழியாக நுழைந்து புக்கர் பரிசைத் தட்டிச் செல்ல நினைப்பவர்' என்று சாருநிவேதிதா குறிப்பிட்டது கடும் கண்டனத்திற்குரியது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++















புதன், 24 ஜனவரி, 2018

காஞ்சி சங்கர மடம் விஜயேந்திரர் கடவுளின் அவதாரம்!!!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, நிகழ்வில் கலந்துகொண்ட சங்கர மடம் விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்றும், அதற்குத் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அவர்களும் கண்டனம் தெரிவித்திருப்பதாகவும் 'NEWS 18 தமிழ்நாடு' தொலைக்காட்சி இன்று[பிற்பகல் 02.00 மணி] பரபரப்பாகச் செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.
பதிப்பாளர் சேஷாத்திரி என்பவரும், 'விஜயேந்திரரின் செயல்பாடு சரியானதல்ல; அது பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்' என்று தெரிவித்திருக்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள், விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழ்நாடு அரசும் கண்டனம் தெரிவித்திருக்கிறது[சற்று முன்னர் வெளியான செய்தி].

விஜயேந்திரர் என்பவர் கடவுளின் அவதாரம் ஆவார். கடவுள் வேறு அவதாரம் வேறு அல்ல.

விஜயேந்திரரே கடவுள். கடவுளே விஜயேந்திரர். 

தமிழ் மொழியானது, தேவ பாஷையான சமஸ்கிருதம் போல் கடவுளால் படைக்கப்பட்டதல்ல; அற்ப மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு 'நீச' பாஷை.

ஒரு நீச பாஷை கடவுள் வாழ்த்தாகப்[தமிழ்த்தாய் வாழ்த்து] பாடப்படும்போது, விழாவில் கலந்துகொண்ட சாதாரண மனிதர்கள் எழுந்து நிற்கலாம். கடவுளின் அவதாரமான விஜயேந்திரர் எழுந்து நிற்பது கடவுளையே அவமானப்படுத்தும் செயலாகும்.

ஸ்டாலின், வீரமணி, முத்தரசன் போன்றவர்கள், விஜயேந்திரரின் செயலைக் கண்டித்தது முழுமுதல் கடவுளையே கண்டித்ததாக ஆகிறது.

தாங்கள் தவறு செய்துவிட்டதை உணர்ந்து உடனடியாக இவர்கள் அனைவரும் விஜயேந்திரரிடம் மன்னிப்புக் கேட்பார்களாக!
=====================================================================================
இப்பதிவு இன்று[24.01.2018] பிற்பகல் 02.30க்கு, தொலைக்காட்சிச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு பதிவேற்றப்பட்டது. நிகழ்ச்சி பற்றிய முழு விவரத்தையும் அறிய இயலவில்லை.




செவ்வாய், 23 ஜனவரி, 2018

அவர்கள் முதலில்! அப்புறம்தான் வைரமுத்து!!

'ஆண்டாள்' குறித்த சர்ச்சையில், வைரமுத்து தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்த பின்னரும் தொடர்ந்து கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள் இந்துமதக் காப்பாளர்களாகத் தம்மை அறிவித்துக்கொண்டவர்கள்; மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்கள்; அதற்குக் கெடுவும் விதித்துக்கொண்டிருக்கிறார்கள்.....தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராக உள்ள இந்துமதம் சார்ந்த மக்கள் தம் பின்னால் அணிவகுப்பார்கள் என்னும் தவறான நம்பிக்கையில்.

''சமஸ்கிருதமே தேவ பாஷை. தமிழ் நீச பாஷை'' என்று சொன்னவர்கள் அவர்கள்;  இன்றும் சொல்பவர்கள் இருக்கிறார்கள். இப்போதும் கோயில்களில் அர்ச்சனைமொழி சமஸ்கிருதம்தான். போனால்போகிறதென்று எப்போதாவது தமிழையும் பயன்படுத்துவார்கள்.
'நீச பாஷை'  என்று அவர்களால் இழிவுபடுத்தப்பட்ட தமிழ் மொழியில் பாடிய ஆண்டாள் தாயாருக்குக் களங்கம் ஏற்பட்டதாகச் சொல்லிக் கண்ணீர் வடிக்கிறார்கள் இன்று; போராட்டங்களைத் தூண்டிவிடுகிறார்கள்; வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முழக்கமிடுகிறார்கள்.

ஒன்றல்ல இரண்டல்ல; சில நூறல்ல பல நூறல்ல, கடவுளின் பெயரால் ஆயிரக்கணக்கில் மூடநம்பிக்கைகளைக்  திணித்து மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்தவர்கள்..... மழுங்கடித்துக்கொண்டிருப்பவர்கள் அவர்கள்.

முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள் அவர்கள்தான்.






திங்கள், 22 ஜனவரி, 2018

தமிழ்நாட்டின் உடனடித் தேவை இன்னொரு ஜெயலலிதா!!!

அன்று காஞ்சி சங்கராச்சாரியைக் கைது செய்தார் ஜெயலலிதா. கொலைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு வழக்கு நடந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் வேறு எந்த மாநிலமாயினும் இம்மாதிரி அதிரடி நடவடிக்கையைக் கற்பனை செய்வதுகூட இயலாத காரியம்.

பிரதமர்களும் அமைச்சர்களும் தொழிலதிபர்களும் காலில் விழுந்து ஆசி பெறுமளவுக்கு அஸ்தத்தில் மிக உயர்ந்த மடாதிபதியானவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது சாதாரண விசயமல்ல. இப்படியொரு அசாதாரணமான செயலைச் செய்து காட்டியவர் செல்வி ஜெயலலிதா மட்டுமே.

முன்பெல்லாம், ஆளும் கட்சிக்காரன் ஆட்டம் போடுவான். எதிர்க்கட்சிக்காரன் அடக்கி வாசிப்பான். ஜெயலலிதா ஆட்சியிலோ ஆளுங்கட்சிக்காரன், எதிர்க்கட்சிக்காரன் என்று எல்லோருமே அடங்கிக் கிடந்தார்கள்.

மத்தியில் தன்னுடைய இனத்தைச் சார்ந்த ஜாதிக்காரர்கள் ஆண்டபோதும்கூட, தான் சொன்னதைக் கேட்கவில்லை என்பதால் அந்த அரசையே கலைத்தவர் ஜெயலலிதா.

மத்திய ஆட்சியில் பங்கு பெறுவதற்காக அலைந்ததில்லை; தன் சொல் கேளாதவர் எவராயினும் அவரை வீழ்த்தத் தயங்கியதில்லை அவர்.

சரியோ தவறோ, இத்தகைய பிடிவாத குணமும் துணிவும் தன்னம்பிக்கையும் ஜெயலலிதாவுக்கு வாய்த்திருந்தன.

நீட், ஜி.எஸ்.டி போன்றவற்றை நடைமுறைப்படுத்தியதன் மூலம் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்திருக்கிறது நடுவணரசு. இந்துத்துவா திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு போன்ற அடாவடியான காரியங்களிலும் அது ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க. அரசுக்கோ இவற்றையெல்லாம் தட்டிக் கேட்பதற்கும் தடுத்து நிறுத்துவதற்குமான தைரியம் இல்லை.

இந்தவொரு அவலநிலையில்தான், தமிழ்நாட்டை ஆள இன்னொரு ஜெயலலிதா  தேவை என்கிறோம்.

100% சாத்தியமே இல்லை என்றாலும், இப்படி ஆசைப்பட்டு ஆசைப்பட்டு மனதில் நிரம்பி வழியும் ஆற்றாமையைத் தணித்துக்கொள்வதில் தவறேதும் இல்லையே?!




சனி, 20 ஜனவரி, 2018

'பெருமாள் முருகனும் சாரு நிவேதிதாவும்'...ஒரு 'பண்பியல்' ஒப்பீடு!!

பெருமாள் முருகன் கொல்லைப்புற வழியாக நுழைந்து புக்கர் பரிசைப் பெற்றுவிடுவாரோ என்று கவலைப்படுகிறார் குமுதத்தின் ஆஸ்தான புருடா எழுத்தாளன் சாரு நிவேதிதா[ஆதாரம்: 17.01.2018 குமுதம் வார இதழ்]. 'கொல்லைப்புற வழி' என்பதற்கு, 'ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தி எழுதி உலகப் புகழ் அடைவது' என்று விளக்கமும் தருகிறார்.
இவருடைய மூன்று நூல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவுள்ளனவாம். அவை நோபல் பரிசும் புக்கர் பரிசும் பெறுவதற்கான தகுதி உடையன என்று பெருமை பீத்திக்கொள்ளும் இந்த நபருக்குப் பெருமாள் முருகனை விமர்சிக்கும் தகுதி கொஞ்சமும் இல்லை என்பதைக் கீழ்க்காணும் ஒப்பீட்டின் மூலம் அறியலாம்.

*பெருமாள் முருகன் சீரிய சிந்தனையாளர். சாருநிவேதிதா போல, 'பரமஹம்ச நித்தியானந்தா'வின் கால்களில் விழுவதும், பின்னர் அவரின் கால்களை வாரிவிடுவதுமான பச்சோந்திப் புத்தி அவருக்குக் கிஞ்சித்தும் இல்லை.

*பெருமாள் முருகன் பண்பாளர்; ஒழுக்க சீலர். சாருவைப் போல, இணையத்தில் நட்புப் பாராட்டிய ஓர் அப்பாவிப் பெண்ணின் மார்பளவை விசாரித்தது போன்ற இழி செயலை அவர் ஒருபோதும் செய்தவரல்லர்.  தான் சரக்கடிப்பதைப் பகிரங்கப்படுத்தி, எதையும் மறைத்துப் பேசத் தெரியாத ''அப்பாவி நான்'' என்று வாசகரை நம்பவைக்கும் சாருவின் சிறுபிள்ளைத்தனம் அவரிடம் இல்லை.

*மாதொருபாகனை அவர் எழுதியது ஒரு விபத்து[இது என் தனிப்பட்ட கருத்து] என்பதைத் தவிர, அவரால் உருவாக்கப்பட்ட படைப்புகள் அத்தனையும் தரத்தில் மிக உயர்ந்தவை. சாருவின் படைப்புகள், தரத்தில் அவற்றிற்கு நிகரானவை அல்ல.

*பெருமாள் முருகன், கதா விருது, திருப்பூர் தெய்வசிகாமணி விருது என்று பல விருதுகள் பெற்றவர். சாகித்திய அகடமி விருதை வென்றிருக்க வேண்டியவர். இத்தகைய ஒரு விருதுக்கே தகுதி இல்லாதவரான சாரு 'புக்கர்' பரிசுக்கு ஆசைப்படுவது நகைப்பிற்குரியது.

*பெருமாள் முருகன் பெருந்தன்மை மிக்கவர். சக எழுத்தாளனை இழித்துப் பேசும் சாருவின் சாக்கடைப் புத்தி அவருக்கு இப்போது மட்டுமல்ல, வேறு எப்போதும் இருந்ததில்லை..

*இதழாசிரியர்கள் விரும்பிக் கேட்டால் மட்டுமே படைப்புகளை வழங்குவதோடு, அம்மாதிரியான வாய்ப்புகள் அமையாதபோது, சாருவைப்போல பத்திரிகையாளர்களைத் தேடிப்போய்ச் சரணாகதியடைந்து ஜால்றா அடிக்கும் பழக்கம் பெருமாள் முருகனுக்கு இல்லை; இருக்கும் இடம் தெரியாமல் தனக்குரிய கடமைகளைச் செய்துகொண்டிருப்பவர் அவர்.

இவை போன்ற, இன்னும் பல பாராட்டுக்குரிய நற்பண்புகளைக் கொண்ட பெருமாள் முருகனை.....

'கொல்லைப்புற வழியாக நுழைந்து புக்கர் பரிசைத் தட்டிச் செல்ல நினைப்பவர்' என்று சாருநிவேதிதா குறிப்பிட்டது கடும் கண்டனத்திற்குரியது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++














வியாழன், 18 ஜனவரி, 2018

வைரமுத்துவின் 'நாக்கு'க்குப் பத்து லட்சம்! விரல்களுக்கு?!

இந்துவோ இஸ்லாமோ கிறித்தவமோ, மதம் எதுவாயினும்  அந்த மதத்தால் திணிக்கப்படுகிற மூடநம்பிக்கைகளால் நம் வாரிசுகளோ, உற்றார் உறவினர்களோ, நண்பர்களோ பாதிக்கப்படுவார்கள் என்றால் அந்த மதத்தைக் கண்டித்துக் கருத்துகள் சொல்ல நமக்கு உரிமை உண்டு; அது நம் கடமையும்கூட.

இது புரியாமல் வெறியாட்டம் போடும் மதப்பித்தர்களின் எண்ணிக்கை நாளும் உயர்ந்துகொண்டே போகிறது.

''இனியொருவன் இந்து தர்மத்தைப் பற்றி இழிவாகப் பேசினால்[தர்மத்தை யாரும் இழிவுபடுத்துவதில்லை; மூடநம்பிக்கைகளைத்தான் கண்டிக்கிறார்கள்] கொலை செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். வைரமுத்துவைக் கொலை செய்யலாமா, வேண்டாமா?.....

.....வைரமுத்துவின் நாக்கை அறுத்து வாருங்கள். நான் ரூபாய் 10 லட்சம் பரிசு தருகிறேன்'' என்று நெல்லையில் நயினார் நாகேந்திரன் என்பவர் அறிவித்திருக்கிறார்[18.01.2018 தினகரன் நாளிதழ்].
அழகு தமிழில் அயராது பேசிப் பேசித் தமிழ் வளர்க்கும் வைரமுத்துவின் நாக்கின் விலை வெறும் பத்து லட்சம்தானா?

நாக்கை அறுத்துவிட்டாலும் பத்து விரல்களால்[தட்டச்சு] எழுதுவாரே?

''அந்தப் பத்து விரல்களையும் அறுத்துவந்தால், ஒரு விரலுக்குப் பத்து லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் நான் வழங்குவேன்'' என்று அறிவிப்பாரா நயினார் நாகேந்திரன்?!

''போலீஸார் என் மீது வழக்குப் போடுவார்களா?'' என்று கேட்கும் 'மாஜி' அமைச்சர், ''தமிழக அரசு இன்னும் என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று நெஞ்சை நிமிர்த்தித் தன் அஞ்சாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாகேந்திரனுக்கு இப்படியெல்லாம் பேசும் தைரியத்தைக் கொடுத்தது எது? யார்? யாரெல்லாம்?

பகுத்தறிவு பேசுவோர் அவசரகதியில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

காவிகளின் கொலைவெறித் தாண்டவம் தொடர்ந்தால்.....

'பகுத்தறிவாளர் பாதுகாப்புப் படை'யை உருவாக்குவது இன்றியமையாத் தேவையும்கூட.


செவ்வாய், 16 ஜனவரி, 2018

காயம்பட்ட காமமும் குணப்படுத்தும் 'ஓஷோ'வும்!!

லக அளவில், விற்பனையில் சாதனை படைத்த நூல்களில், [மறைந்த]‘ஓஷோ’வின் ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்பதும் ஒன்று என்கிறார்கள். அதை வாசிக்கும் வாய்ப்பு நேர்ந்தது.  என்னைப் பொருத்தவரை, அது என்னுள் காமத்தைத் தூண்டவில்லை; கடவுளையும் காட்டவில்லை.

தற்செயலாக, 'நந்தன்'[மே 2012] வலைப்பதிவில் வெளியான அந்நூல் குறித்த ஓஷோவின் கருத்துரை[தமிழில்] பார்வையில் பட்டது. படித்தபோது, ஓஷோ எந்த அளவுக்கு மனித மனங்களைப் படித்திருந்தார் என்பது புரிந்தது. 
#நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். உண்மையில் எழுதியதல்ல. என் பேச்சைத் தொகுத்து எழுதியிருக்கிறார்கள். அதன் தலைப்பு, 'காமத்திலிருந்து கடவுளுக்கு'. அதற்குப் பிறகு என்னுடைய நூற்றுக்கணக்கான புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டன. ஆனால், மற்றவற்றைப் படித்தார்களா என்பது சந்தேகம்தான். குறிப்பாக, இந்தியாவில் எல்லாரும் படித்தது காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற புத்தகத்தை மட்டும்தான். அவர்கள் எல்லாரும் அதை விமர்சனம் செய்தார்கள்; எதிர்த்தார்கள். இன்னும் அதைப் பற்றிக் கட்டுரைகளும் மறுப்பு நூல்களும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மகாத்மாக்கள் அதை மறுத்துககொண்டே வருகிறார்கள். மற்ற புத்தகங்களைப் பார்க்கவும் இல்லை. குறிப்பிடவும் இல்லை. புரிகிறதா? நான் ஏதோ ஒரே புத்தகத்தைத்தான் எழுதியது போல.

மக்கள் காயப்பட்டு கிடக்கிறார்கள். காமமே காயமாகி விட்டது. அதைக் குணப்படுத்தியாக வேண்டும்.

உடலுறவில் ஏற்படும் பரவசம், தியானத்தின் ஒரு சிறு பகுதியின் ஆரம்பத்தை உங்களுக்கு அடையாளம் காட்டிவிடும். காரணம், அப்போது மனம் நின்று விடுகிறது. காலம் நின்று விடுகிறது. அந்தச் சில வினாடிகளில் காலமும் இருப்பதில்லை. மனமும் இருப்பதில்லை. நீங்கள் பரிபூரண மவுனத்திலும் பரவசத்திலும் ஆழ்ந்து விடுகிறீர்கள்.

மனமற்ற நிலைக்கும், பரவச நிலைக்கும் காலமற்ற நிலைக்குமான வேறு வழி எதுவுமே இல்லை. மனம் கடந்தும் காலம் கடந்தும் செல்வதற்கு வழி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு உடலுறவு தவிர வேறு வழியில்லை. தியானத்தின் முதல் அடையாளத்தை நிச்சயமாக அதுதான் காட்டுகிறது.

நான் மக்களுக்கு இந்த உண்மையைச் சொல்வதால்தான் உலகமே என்னைக் கண்டனம் செய்கிறது.

காமத்திலிருந்து அதி பிரக்ஞைக்குச் செல்வது பற்றி நான் பேசப்போய், உலகம் முழுவதிலும் இருந்து விமர்சிக்கப்பட்டேன்; கண்டிக்கப்பட்டேன். ஏன் கண்டிக்கிறார்கள் என்பதற்கான எந்த விளக்கத்தையும் யாரும் கொடுக்கவில்லை. என் புத்தகம், முப்பத்து நான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பன்னிரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளன. எல்லாச் சன்னியாசிகளும் அதைப் படித்துவிட்டார்கள்.

இந்து, சமண, கிறித்துவ, புத்த சன்னியாசிகள் என்று யாராக இருந்தாலும் சரி, சன்னியாசிகளே அந்தப் புத்தகத்திற்குச் சிறந்த வாடிக்கையாளர்கள். சில மாதங்களுக்கு முன்பு, இங்கே புனாவில் சமண மாநாடு ஒன்று நடந்தது. என் செயலாளர் ஆச்சரியமான விஷயம் ஒன்று சொன்னார். சமண சன்னியாசிகள் இங்கே வந்து அந்தப் புத்தகத்தை மட்டுமே கேட்டார்கள். அது...'காமத்திலிருந்து கடவுளுக்கு'. அதை வாங்கி, தமது ஆடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு சத்தமில்லாமல் வெளியே போனார்கள். அவர்கள் வந்ததும் போனதுமே தெரியவில்லை என்றார் என் செயலாளர்# 
**************************************************************************************************
மொழிப் பிழைகள் மட்டுமே திருத்தப்பட்டன.

நன்றி:  [இடுகை...நந்தன்,மே,2012]

திங்கள், 15 ஜனவரி, 2018

கனிமொழியின் கேள்விக்கு அறிவுஜீவிகளின் பதில் என்ன?

கருணாநிதி மகள் கனிமொழி அண்மையில், ''திருமலை ஏழுமலையான் சாமிக்குச் சக்தி இருந்தால், அது தனக்குரிய விலைமதிப்பற்ற சிலைகளையும், பொன் ஆபரணங்களையும் தானே பாதுகாத்துக்கொள்ளலாமே, கட்டுக்காவல் எதற்கு?'' என்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில் கேள்வி எழுப்பியுள்ளார். இது ஆத்திக அன்பர்களுக்குப் பெரும் மன உளைச்சலை உண்டுபண்ணியுள்ளது.

பல்வேறு ஆத்திக அமைப்புகளும் 'நாத்திகை' கனிமொழிக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், திருப்பூரில் நிகழவிருக்கும் தி. மு.க. வின் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார்.

அக்கூட்டத்தில் கனிமொழி பங்கு பெறுவதற்குத் தடை விதிக்க வேண்டுமாய் 'இந்து மக்கள் கட்சி' நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளதாக இன்றைய 'காலைக்கதிர்'[15.01.2018] நாளிதழ், செய்தி வெளியிட்டுள்ளது. [காவல் துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை].

இச்செய்தி நம் மக்கள் மனங்களில் பெரும் வியப்பையும் திகைப்பையும் தோற்றுவித்துள்ளது.

வழக்கு தேவையா?

கனிமொழி ஒரு சராசரிப் பெண்.  அபார அறிவாற்றல் படைத்தவர் என்று சொல்ல இயலாது. அவர் கேள்வி எழுப்பியதைக் கண்டித்து வழக்குத் தொடுப்பது தேவையற்றது. காரணம்.....

திருமலையான் மீது பெரும் பற்றுக்கொண்ட ஆத்திக அன்பர்களில் ஏராள அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரால் கனிமொழிக்குச் சரியான பதிலடி கொடுக்க முடியும்.

அப்படிக் கொடுத்தால்.....

கனிமொழி என்னும் நாத்திகை மட்டுமல்ல, வேறெந்தவொரு நாத்திகையோ நாத்திகனோ இம்மாதிரியான கேள்விகளை எழுப்பிப் பக்தர்களின் மனங்களைப் புண்படுத்த மாட்டார் என்பது திண்ணம்.

ஆத்திக அன்பர்கள் நன்கு சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும்.

நன்றி.

சனி, 13 ஜனவரி, 2018

'தமிழை ஆண்டாள்'...வைரமுத்து செய்த தவறுகள்!

'கடவுளாகப் போற்றப்படும் ஆண்டாள் குறித்த கருத்தரங்கில் பக்தியுணர்வு கொண்டோரே பெருமளவில் கலந்துகொள்வார்கள். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தால், தன் மீது கொண்ட பொறாமையால் புழுங்கிக்கொண்டிருப்போருக்கு அது சாதகமாக அமைந்துவிடும்'  என்பதை அனுமானம் செய்யாமல், உரையாற்றுவதற்குக் கவிப்பேரரசு வைரமுத்து இசைவு தந்தது மிகப் பெரும் தவறு.

தூய்மையான இறைப்பணியை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்த தேவதாசிகள் வேறு; பின்னர் வந்த, பெரிய மனிதர்களின் சதைப்பசி தணித்த பொட்டுக்கட்டிய மாதர்கள் வேறு என்பதைப் போதிய வரலாற்றறிவு இல்லாதவர்களுக்குப் புரிய வைத்தல் எளிதல்ல என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார் கவிஞர்.

''என் உரை முழுதும் ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதாகவே அமைந்தது. மேற்கோள் காட்டிய அயல்நாட்டவரின் கருத்து என் கருத்தன்று'' என்று உறுதியளித்ததோடு வருத்தம் தெரிவித்ததிலும் தவறில்லை. ஆனால், அவரின் செயல்பாடு கோழைத்தனமானது என்று தவறாக முடிவெடுக்கப்பட்டது. விளைவு.....

ஒரு ராஜாவையோ கூஜாவையோ கவிஞரின் தாயையும் சகோதரியையும் குறித்துத் தரக்குறைவாகப் பேச வைக்கும் சூழல் அமைந்தது. ஒரு முன்னணி வார இதழில், 10% உண்மையில் 90% பொய் கலந்து புளுகி வாசகனை முட்டாளாக்கிக்கொண்டிருக்கும் ஒரு நாலாந்தர எழுத்தாளனுக்கு, ''வைரமுத்துவைக் கைது செய்ய வேண்டும்'' என்று சொல்வதற்கான தைரியம் உண்டானது.

புரியவே புரியாத கதைகளை எழுதியே பிரபலமாகிவிட்ட விஷ்ணுபுரம் எழுத்தாளனுக்குக் கவிஞரைச் சாடுவதற்கான வாய்ப்பு உருவானது.

கூஜா தூக்கிக்கு அந்த ஆளின் ஆபாச பாஷையிலேயே வைரமுத்து பதிலடி தந்திருக்க வேண்டும்; தரவில்லை; தமக்கே உரிய தனித்துவமான தமிழ்நடையில் மற்ற போலி ஆன்மிகவாதிகளையும் விளாசியிருத்தல் வேண்டும். செய்யவில்லை.

''நான் ஆண்டாள் குறித்துத் தரக்குறைவாக ஏதும் பேசவில்லை. என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டோர்தான் என்னை மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்கள்;  என்னைக் கைது செய்ய வேண்டும் என்கிறார்கள்.

நான் கைது செய்யப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டால், சிறைவாசம் முடிந்து இன்னொரு 'தண்ணீர் தேசம்' புதினத்துடனோ, கள்ளிக்காட்டு இதிகாசத்துடனோ, கருவாச்சி காவியத்துடனோ, ஆகச் சிறந்த சிறுகதைத் தொகுப்புடனோ வெளியே வருவேன்.

அவை எனக்கு ஞானபீடம் என்ன, அதனினும் உயர்ந்த நோபல் பரிசையே பெற்றுத்தரும் '' என்று இறுமாப்புடன் அறிவித்திருக்க வேண்டும்.

அறிவித்திருந்தால்.....

கவிப்பேரரசு வைரமுத்து வசீகரமான வைர வார்த்தைகளுக்கு மட்டும் சொந்தக்காரரல்ல; வைரம் போன்ற நெஞ்சுறுதியும் கொண்டவர் என்பதை இந்தத் தமிழ் மண் புரிந்துகொண்டிருக்கும்.

கவிப்பேரரசு இது குறித்துச் சிந்திப்பாரா?












வியாழன், 11 ஜனவரி, 2018

தமிழருவி மணியனின் 'புத்த ஞானம்'!

'ராணி' பொங்கல் சிறப்பிதழில்[14.01.2018] தமிழருவி மணியன் அவர்கள், 'கனியட்டும் புத்த ஞானம்' என்னும் தலைப்பின் கீழ் எழுதிய கட்டுரையில், புத்தரின் வாழ்வில் இடம்பெற்றதாகச் சொல்லி ஒரு நிகழ்வை விவரித்துள்ளார்.
நிகழ்வு[உண்மையோ கதையோ] வெகு சுவையானது. அதன் முடிவில் மணியன் அவர்கள் தம் விருப்பத்தையும் பதிவு செய்துள்ளார். அது நம் மனதை நெருடுகிறது. படியுங்கள்.

#ஒரு நாள் புத்தர் பெருமான் தன்னுடைய சீடர்களில் ஒருவரை மதுரமான குரலில் அருகில் வருமாறு அழைத்தார்.

அவர் அழைத்த சீடர், 'தீட்சை' முடிந்து, ஞானம் கனிந்து, தர்மத்தை மக்களிடம் உபதேசிப்பதற்காகப் பயணம் புறப்படும் நிலையில் இருந்தார்.

''பூர்ணா! நீ எந்தப் பிரதேசத்தில் தர்ம யாத்திரை செல்லப் போகிறாய்?'' என்று  கேட்டார் புத்தர்.

''சூனா பராந்தகம் என்ற இடத்தில் சுவாமி'' என்றார் சீடர்.

இருவருக்கும் இடையில் உரையாடல் தொடர்ந்தது.

''மகனே! அந்தப் பகுதி மக்கள், நீ தர்மத்தைப் போதிக்கும்போது உன்னை நிந்தனை செய்து வசைமாரி பொழிந்தால் என்ன செய்வாய்?'' 

''இவர்கள் நல்லவர்கள். கை நீட்டிக் காயப்படுத்தாமல் வாயளவில் நிற்கிறார்களே என்று நான் மகிழ்ச்சி கொள்வேன் சுவாமி.''

''வாய் திறந்து வசை பாடியவர்கள் கை நீட்டி அடிக்கவும் செய்யலாம். அப்போது உன் நிலை என்னவாக இருக்கும்?''

''இவர்கள்தான் எவ்வளவு நல்லவர்கள்! ஆயுதங்கள் கொண்டு தாக்காமல் வெறுங்கைகளால் அடிப்பதோடு நிறுத்திக்கொண்டார்களே என்று அகமகிழ்வேன் சுவாமி.''

''சரி, ஆயுதங்களால் அவர்கள் உன்னைத் தாக்கிவிட்டால் அவர்களை நீ எப்படி எதிர்கொள்வாய்?''

''இவர்கள் மிக மிக நல்லவர்கள். 'பிறவித்தளை' யிலிருந்து விடுபட ஒவ்வொருவரும் எந்தெந்த வகையிலோ பாடுபடும்போது, எனக்கு இவர்கள் எளிதாக முக்திக்கு வழி செய்துவிட்டார்களே என்று கைகூப்பி வாழ்த்துவேன் கருணை வேந்தே.''

''பூரணா, உனக்குப் 'புத்த ஞானம்' கனிந்துவிட்டது. போய் வா.''

சீடர், புத்தர்பிரானிடம் விடை பெற்றுக்கொண்டார்.# 

கதை முடிந்தது. மணியன் அவர்களின் 'விருப்பை' வெளிப்படுத்தும் வரிகள் கீழே.....

//.....நம் ஒவ்வொருவருக்கும் இந்தப் 'புத்த ஞானம்' கனிந்தால்.....

அதைவிட அமைதியான வாழ்க்கை வேறேது!//

நெருடல்:
புத்தரின் சீடருக்குப் 'புத்த ஞானம்' வாய்த்ததில் தவறேதும் இல்லை. அவர் ஒண்டிக்கட்டை; முற்றும் துறந்தவர். இருப்பதும் இறப்பதும் அவருக்கு ஒன்றுதான். ஆனால், குடும்பிகளான நமக்குப் 'புத்த ஞானம்' வாய்த்த[உலகில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் 'புத்த ஞானம்' வாய்ப்பதென்பது சாத்தியமே இல்லை] பின்னர்.....

நமக்குப் பொல்லாங்கு விளைவிக்கும் எத்தர்களிடம் பணிந்து பணிந்து போனால், நம் குடும்பம் அதோகதிதான். அவர்கள் நம் வீட்டுப் பொருள்களை மட்டுமல்ல, பெண்டு பிள்ளைகளையும் அல்லவா அபகரித்துவிடுவார்கள்!!!

'புத்த ஞானம்' நமக்கெல்லாம் ஒத்துவராதுதானே?
=====================================================================================

'ராணி' வார இதழுக்கும் தமிழருவி மணியன் அவர்களுக்கும் நம் நன்றிகள்.






புதன், 10 ஜனவரி, 2018

மருட்டும் பிரபஞ்சமும் மிரட்டும் விஞ்ஞானிகளும்!

முதல் உலக அழிவு இனிவரும் ´150ஆவது கோடி ஆண்டில்´ நிகழும் என்கிறார் இங்கிலாந்திலுள்ள ´ஈஸ்ட் ஆங்க்லியா´ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சுற்றுச் சூழல் இயல் விஞ்ஞானியான ´ஆண்ட்ரூ ரஷ்பி´ என்பவர். சூரியனின் அதி பயங்கர வெப்பத்தால் பூமி பொரிந்து, வெடித்துச் சிதறிச் சின்னாபின்னம் ஆகிவிடுமாம். வேறு சில வானியல் விஞ்ஞானிகளும் இதையே சொல்கிறார்கள்.

´750ஆவது கோடி ஆண்டில், சூரியன் தன் ஒட்டுமொத்த ஹைட்ரஜன் எரிவாயுவை எரித்து முடித்து, ஹீலியத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கும். அதன்விளைவாக, சூரியன் ஒரு பலூன் போல் பெரிதாகிச் சிவப்புப் பூதமாக மாறிவிடும். அதன் விளைவு.....

செவ்வாயும் வேறு சில கோள்களும் அப்பளம் போல் பொரியும். சுருங்கச் சொன்னால், அடுத்த 800 கோடி ஆண்டில் சூரிய மண்டலமே உயிர் வாழ்வுக்கு அருகதை அற்றதாக ஆகக்கூடும்.´

இப்படிச் சொல்பவர் ´கார்நெல்´ பல்கலைக் கழகத்தின் வானியல் விஞ்ஞானி ´கால்டே நெக்கர்´ என்பவர்.

10ஆயிரம் கோடி ஆண்டுகளில், புதிய நட்சத்திரங்கள் தோன்றுவதற்கான ஒட்டுமொத்த மூலப் பொருளும் தீர்ந்துபோகும். ஒரு கட்டத்தில், அத்தனை பழைய நட்சத்திரங்களும் அழிந்துபோக, விண்வெளியில் நட்சத்திரங்களே இல்லாத நிலை உருவாகுமாம்.

பிரபஞ்சத்தின் கடைசி நட்சத்திரமான ´சிவப்புக் குள்ளர்´[Red dwarf] வகை நட்சத்திரங்கள் அழிந்த பிறகு பிரபஞ்சம் இருண்டுவிடும் என்கிறார்கள்..

இயற்பியல் கருதுகோள்களின்படி, இன்றிலிருந்து ஒரு டெசில்லியன்[One Decillion = 10இன் 33 மடங்கு ஆண்டுகள்] முதல் ஒரு விஜிண்டில்லியன் ஆண்டுகளில்[One Vigintillion = 10இன் 66 மடங்கு ஆண்டுகள்] அணுக்களில் உள்ள புரோட்டான்கள் அழிந்துவிடும். அப்போது பிரபஞ்ச வெளியில் கருந்துளை மட்டுமே எஞ்சியிருக்கும்.

அடுத்து, பத்து டியோட்ரைஜின்டில்லியன் ஆண்டுகளில்[One Duotrigintillion = 10இன் 100 மடங்கு ஆண்டுகள்] கருந்துளை/கருந்துளைகளும் ஆவியாகிவிடும். ஆற்றல் என்ற ஒன்று இராது. இது அனைத்து உயிர்களின் முடிவு காலமாக இருக்கலாம்.

இவ்வகையிலான, அச்சுறுத்தல்களுக்கிடையே மனித குலத்துக்கு ஆறுதல் தரும் வகையிலான அறிவிப்புகளையும் செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்..

/பூமியும் சூரிய மண்டலத்திலுள்ள பிறவும் அழிந்தொழிந்தாலும்கூட, ´இண்டர்ஸ்டெல்லார் ஆர்க்´[interstellar ark] எனப்படும் ராட்சத விண்வெளிக் கப்பல்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில் பல்லாயிரவர்  பயணித்து[ஏராளமானோர் மடிந்துபோக] எஞ்சியவர்கள் வெகு வெகு தொலைவில் உள்ள நட்சத்திரங்களில் குடியேறிப் பல்கிப் பெருகுவர்.

பிரபஞ்சம் இருண்டுபோகும் நிலையிலும்கூட, மனித குலம் முற்றிலுமாய் அழிந்துவிடாது/.

பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் ´பால் ஸ்டெய்ன் ஹார்ட்´ மற்றும் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் ´அன்னா இஞ்ஜாஸ்´ ஆகியோர் இணைந்து ஓர் ஆய்வு மாதிரியை உருவாக்கியுள்ளனர். அதன்படி [கருதுகோளின்படி], /ஒரு முடிவில்லா தோற்றச் சுழற்சியில் பிரபஞ்சம் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கும். மனித இனமும் தோனறி வாழ்ந்துகொண்டே இருக்கும்/.

ஒரு காலக்கட்டத்தில், மனிதர்களுக்குப் ´பூத உடல்´ என்ற ஒன்றே இராது என்னும் பகீர்த் தகவலையும் வெளியிட்டிருக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.
´பூத உடலுடன் வாழ்வது என்பது புரிகிறது. அது இல்லாமல் மானுடர்கள் ஒருவரை ஒருவர் கண்டு உரையாடி மகிழ்வது எப்படி? தொட்டு உரசி உடலுறவு இன்பம் துய்ப்பது எப்படி? இனப்பெருக்கம் செய்வது எப்படி?´ என்பன போன்ற கேள்விகள்தான் நம்மை மயங்க வைக்கின்றன; மருளச் செய்கின்றன!
=====================================================================================
நன்றி: 08.01.2018 தினத்தந்தி நாளிதழ்['கம்ப்யூட்டர் ஜாலம்' பகுதி].














திங்கள், 8 ஜனவரி, 2018

கடவுளின் மரணம்!...ஓர் அனுமானம்.

கடவுளின் மரணம் குறித்துக் கவலைப்படுவதற்கு முன்பு  'அனுமானம்' என்றால் என்னவென்று புரிந்துகொள்வோம். இதை 'யூகம்', அல்லது, 'உய்த்துணர்தல்' என்றும் சொல்வார்கள்.

'Inference is the act or process of deriving logical conclusions from premises known or assumed to be true'  என்கிறது Wikipedia, the free encyclopedia.         தமிழில்..........

'அனுமானம்' என்பது, 'உண்மை' என அறிந்தவற்றிலிருந்து அறியாதன  பற்றி 'விவாதித்து' ஒரு முடிவுக்கு வருதல்'.

நெருப்பிலிருந்து புகை வெளியாவதைப் பார்க்கிறோம். இது ஒரு காட்சி அனுபவம். புகையை மட்டுமே காண நேர்கிற போதுகூட  அதற்கு ஆதாரமாக நெருப்பு   இருப்பதை அறிகிறோம்  அல்லவா? இதற்கு 'அனுமானம்'  என்று பெயர். பொருளின் 'தன்மை' பற்றியது இந்த அனுமானம்.

பூவின் வாசம் நம் மூக்கைத் துளைக்கிற போதெல்லாம் அதை வெளிப்படுத்தும் மலர்கள் அருகில் இருத்தல் வேண்டும் என நினைக்கிறோமே, இதுவும் அனுமானம்தான். இது, பொருளின் 'குணம்' குறித்தது.

பொருள்களின் 'தோற்றம்' குறித்தும் அனுமானங்கள் செய்யப்படுவதுண்டு.

ஒரு குயவர் மண், நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தித்  தண்டச்சக்கரம், தட்டுப் பலகை ஆகிய துணைக் கருவிகளைக் கொண்டு பானை வனைவதைப் பார்க்கிறோம். இது, நம் கண்களால் காணுகிற  ஓர் உண்மை நிகழ்வு ஆகும்.

இங்கே  பானை என்பது செயற்கையான ஒரு பொருள். அதாவது, செய்யப்பட்டது.

மண்ணால் செய்யப்பட சிலை; உலோகத்தால் உருவாக்கப்பட்ட பாத்திரம்; பேருந்து; கடிகாரம்; செல்போன்......இப்படி எத்தனையோ  செயற்கைப் பொருள்கள் இம்மண்ணில் உள்ளன. இம்மாதிரி செயற்கைப் பொருள்கள் அனைத்தும் மனிதரால் செய்யப்பட்டவை என்பது நாம் அறிந்த உண்மை. அல்லது, பிறர் மூலம் அறிந்த நம்பத்தக்க உண்மை.

இந்த உண்மை அனுபவம், நம்மால் அறியப்படாத ஒரு பொருளின் தோற்றம் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுவது உண்டு.

வானில் 'பறக்கும் தட்டு' அல்லது, அது போன்ற ஒன்று உலவுவதைப் பார்க்க நேரிட்டால், அது வழக்கமாக நாம் காணும் இயற்கைப் பொருள்களில் ஒன்றல்ல; முற்றிலும் செயற்கைப் பொருள்தான் என்று நம்புகிற போது அதைச் செய்தது யாராக இருக்கும் என்று சிந்திக்கிறோம்.

அது மனிதர்களின்  செயலல்ல என்பதை அறிகிறோம். மனித அறிவினும் மேம்பட்ட அல்லது அதற்கு இணையான அறிவு படைத்த வேற்றுக்கிரக வாசிகளின் உருவாக்கமாக இருக்கலாம் என எண்ணுகிறோம். இதுவும்  'அனுமானம்' எனப்படுகிறது. பொருளின் தோற்றம் குறித்த அனுமானம் இது.

இந்த அனுமானத்தை, ஆன்மிகவாதிகள் 'கடவுள் இருக்கிறார்' என்று சாதிப்பதற்குப் பயன்படுத்தினார்கள்; பயன்படுத்துகிறார்கள்.

செயற்கை பொருளான பானையைப் 'படைப்பு' என்றார்கள். ஒரு பொருள் படைக்கப்பட்டதென்றால் அதைப் படைத்தவன் இருந்தே தீரவேண்டும் என்றார்கள்.

இக்கருத்தைத்  துணையாகக் கொண்டு, 'இந்தப் பிரபஞ்சம் ஒரு படைப்பு. அதைப் படைத்தவர் கடவுள்' என்றார்கள்; என்கிறார்கள்.

மேம்போக்காகப் பார்த்தால் அவர்கள் வாதம் சரி என்பது போல் தோன்றும். கொஞ்சம் யோசித்தால்..........

ஒரு பொருள் படைக்கப்பட்டதென்றால் அதைப் படைத்தவர் யார் என்று அனுமானிக்க முயற்சி செய்யலாம். அதற்கு முன்னதாக, அது 'படைக்கப்பட்ட' பொருள்தானா என்று கண்டறிவது முக்கியம்.

பிரபஞ்சம் படைக்கப்பட்ட ஒன்றா?

இக்கேள்விக்கு விடை கண்ட பிறகல்லவா படைத்தவர் கடவுளா வேறு எவருமா என்று யோசிக்க வேண்டும்?

இது பற்றிச்  சிந்திக்க  ஆன்மிகவாதிகள் ஒருபோதும் முன்வந்ததில்லை. முதலில் கடவுள் என்று ஒருவரைக் கற்பனை செய்துகொண்டு, 'பிரபஞ்சம் ஒரு படைப்பு. அதைப் படைத்தவர் கடவுள்' என்று சொல்லிச் சொல்லிச்  சொல்லிப்  பெரும்பான்மை மக்களை நம்ப வைத்துவிட்டார்கள்.  

நம்ப மறுப்பவர்களைத் தொடர்ந்து சாடிக்கொண்டிருக்கிறார்கள்.

'கடவுள்' படைக்கவில்லையென்றால் வேறு யார் படைத்தது? கல்லும் மண்ணும் மரமும் மனிதர்களும் பிறவும் தாமாகவே தோன்றினவா?' என்று கேள்வி கேட்டு, கேள்வி கேட்பவரின் வாயை அடைக்க முயலுகிறார்கள்.

'அணுக்களின் சேர்க்கையால் பொருள்கள் தோன்றுகின்றன. அவற்றின் இணைப்பிலேதான் உணர்ச்சிகள் பிறக்கின்றன; உயிர்கள் தமக்குரிய சக்தியை /அறிவைப் பெறுகின்றன. மனிதன் ஆறறிவு பெற்றதும் இவற்றின் சேர்க்கையால்தான். இவை விஞ்ஞானம் கண்டறிந்த உண்மைகள். இவற்றிற்கும் மேலான உண்மைகளை அது எதிர்காலத்தில் கண்டறியும் என்பது உறுதி.

அணுக்களைத தோற்றுவித்ததே   கடவுள்தான்  என்று அவர்கள் சமாளித்தால், 'கடவுளைத் தோற்றுவித்தது யார்?' என்று வழக்கமாக முன்னிறுத்தப்படும் கேள்விக்குப் பதில் சொல்ல இயலாமல் அவர்கள் விழி பிதுங்கி  நிற்கிறார்கள். காலங்காலமாய் அந்தவொரு கேள்வியைக் கண்டுகொள்ளாமலே கடவுளின் இருப்பை வலியுறுத்த, 'பானையைக் குயவன் படைத்தான். பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்தார்' என்று மக்களை மூளைச் சலவை செய்துகொண்டிருப்பது மிகப் பெரிய ஆச்சரியம்.

அவர்கள் பயன்படுத்திய அதே  அனுமான உத்தியைப் பயன்படுத்திக்  கீழ்க்காணுமாறு ஒரு முடிவை நம்மால் அறிவிக்க முடியும்.

பானை என்பது ஒரு படைப்பு. அது அழியக்கூடியது. படைப்பாளியான  குயவனும் அழிந்து  போவான். அது போல, பிரபஞ்சம்  அழியக்கூடியது. அதைப் படைத்த 'படைப்பாளி'யான கடவுளும் ஒருநாள் அழிவது உறுதி.

******************************************************************************************************************** கீழ்க்காணும் மேற்கோள்கள் இப்பதிவுக்கு வலிமை சேர்ப்பவை ஆகும்:

'.....பானை இருந்தால் குயவன் என்பது போல், இந்த உலகம் இருப்பதால் அதனைப் படைத்த இறைவன் உண்டு என்று வாதிடும் ஆன்மீகத் தத்துவத்தை ஏற்க இயலாது. குயவனைக்  கண்டறிய இயலும். ஆனால், இறைவனை எங்கே கண்டறிவது?' - சார்வாகர்கள் 

'......அனுமானத்தையே முடிவு என அழுத்தமாக கூறுவதனால் அது வெறும் அனுமான ஆய்வாகவோ யூக ஆய்வாகவோ முடிந்துவிடுகிறது. இதில் ஆய்வின் நேர்மைத் தன்மை இல்லாமல் போய்விடுகிறது. எனவே, உலகம் படைக்கப்பட்டது என்பது வெறும் 'யூகக் கோட்பாடுதான்.' -கௌதமபுத்தர்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
2014 இல் எழுதப்பட்டது.








சனி, 6 ஜனவரி, 2018

'ஆன்மிக அரசியல்'...என்னய்யா இது புதுப் புருடா?!?!

'ஆன்மிகம்' என்றால் என்ன?

'ஆன்மா' என்னும் சொல்லிலிருந்து 'ஆன்மிகம்' பிறந்திருக்கலாம். 

ஆன்மா குறித்துச் சிந்திப்பதும் கருத்துப் பகிர்வு செய்வதும் ஆன்மிகம் எனலாம். கூடவே, ஆன்மாவைப் படைத்தவர் என்று சொல்லப்படும் கடவுள்[ஆன்மா அழிவில்லாதது என்பதால் அதைக் கடவுள் படைக்கவில்லை என்ற கருத்தும் உண்டு] குறித்துச் சிந்திப்பதும் கருத்துரை வழங்குவதும்கூட ஆன்மிகம்தான்.

ஆன்மிகமும் மதக் கோட்பாடுகளும் மிக நெருங்கிய தொடர்புடையவை.

'ஆன்மிகம் அல்லது ஆன்மவியல் (spirituality) என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களைக் குறிக்கும்......இது, மத நம்பிக்கை, ஆழ்நிலை உண்மை என்பவற்றுக்கு நெருக்கமான ஒரு கருத்துரு ஆகும்'  https://ta.wikipedia.org/s/eht என்று விக்கிப்பீடியா தரும் விளக்கத்தை நினைவு கூர்க.

இனி, "நான் மதவாதியல்ல; ஆன்மிகவாதி" என்றும், "உண்மையான, நேர்மையான, நாணயமான, சாதிமதச் சார்பற்ற அரசியலே ஆன்மிக அரசியல்" ன்றும்  நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது பற்றி ஆராயலாம்.

ஆன்மிகவாதி என்பவர் மதப்பற்று உள்ளவராக இருத்தல் கட்டாயம் அல்ல. "எனக்கு மதங்களின்மீது பற்று இல்லை. ஆனால், கடவுளை நம்புகிறேன்" என்று சொல்பவர்கள் உளர். ரஜினிகாந்த்தும் அத்தகையவராக இருக்கலாம். 'கடவுள் பற்று மட்டுமே கொண்ட ஆன்மிகவாதி நான்' என்னும்   பொருளில் தன்னைப் பற்றி அவர் சொல்லியிருந்தால் அதில் தவறேதும் இல்லை.

அடுத்ததாக, "உண்மையான, நேர்மையான, நாணயமான, சாதிமதச் சார்பற்ற அரசியலே ஆன்மிக அரசியல்ன்ற அவரின் கூற்றிலுள்ள  'ஆன்மிக அரசியல்' என்பதுதான் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

"நீங்கள் நடத்தவிருக்கும் அரசியல் எத்தகையது?" என்னும் ஊடக நிருபர்களின் கேள்விக்கு அவர், "என் அரசியல் உண்மையானதும் நேர்மையானதும் நாணயனமானதுமாக இருக்கும்" என்று சொல்லியிருந்தால் போதுமானது. அதாவது, அவர் நடத்தவிருக்கும் அரசியல் 'மனிதாபிமானம்' மிக்கதாக இருக்கும் என்று எண்ணும்படியாக அமைந்திருக்கும்.

"நான் தனிப்பட்ட முறையில் ஓர் ஆன்மிகவாதி. ஆன்மிகவாதியாகவே ஆட்சியைக் கைப்பற்றுவேன்; நல்லாட்சி தருவேன்" என்றுகூடச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவரோ.....

தான் நடத்தவிருப்பதாக நம்பும் அரசியலுக்கு, 'ஆன்மிக அரசியல்' என்று பெயர் சூட்டுகிறார்.

"உண்மையானதும், நேர்மையானதும், நாணயமானதும், சமயச் சார்பற்றதும் ஆன ஆன்மிக அரசியல்' என்று விளக்கமும் தருகிறார்.

சமய[மதம்]ச் சார்புள்ள ஆட்சியில் மதச் சார்புள்ளவர்கள் நடத்தும் வெறிக்கூத்துகளை மனதில் கொண்டு 'சமயச் சார்பற்ற அரசியல்' என்று சொன்ன ரஜினி, 'ஆன்மிகச் சார்பற்ற' என்றும் சொல்லியிருக்கலாம். மாறாக, தன்னுடையது 'ஆன்மிக அரசியல்' என்கிறார்.

ஆன்மிகவாதிகள் செய்யும் அரசியலில் ஆன்மிக வெறிக்கூத்துகள் நடவா என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆன்மிகத்தில் பற்றில்லாதவர்கள்  நடத்தும் அரசியலில் உண்மையும் நேர்மையும் நாணயமும் இடம்பெறாவா?

ரஜினியின் அரசியல் நுழைவுக்கான உள்நோக்கம் எதுவாகவோ இருக்கலாம். அதை மறைத்து, "மக்களை மகிழ்ச்சியாக வாழவைக்கவே அரசியலில் நுழைகிறேன்" என்று அவர் சொல்லியிருப்பின் அதுவும் ஏற்புடையதே. பதிலாக.....

நிருபர்கள் தொடுக்கும் வினாக்களுக்கு மனம்போன போக்கில் பதில் சொல்லிக் கேட்போரைக் குழப்பத்தில் ஆழ்த்தாமல், அவர் ஆழ்ந்து சிந்தித்து விடை பகர்தல் வேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும். 

உலக அளவில் பெரும் புகழுக்குரியவராக வாழும் ரஜினிகாந்த், தம் இறுதிக் காலம்வரை குன்றாப் புகழுடன் வாழ்ந்திட வேண்டும் என்பதுகூட என் விருப்பம்தான்.

நன்றி.











புதன், 3 ஜனவரி, 2018

'அது'க்குத் 'தோதான' வேறு இடம் இல்லையா?!

ப்போது எனக்கு முப்பது வயது.

இயல்பாகவே, இறை வழிபாட்டில் ஈடுபாடு இல்லாத நான், அன்பு மனைவியின் தட்ட முடியாத வேண்டுதலின் பேரில், தன்னந்தனியனாகத் திருச்செங்கோடு மலைக் கோயிலுக்குச் செல்ல நேர்ந்தது.

வாகனங்கள் செல்லுவதற்கான சாலை வசதியெல்லாம் அப்போது இல்லை. படிகளில் பயணம் செய்துதான் மலை உச்சியிலுள்ள மாதொருபாகனைத் தரிசிக்க வேண்டும்.

கால் வலியைச் சற்றே குறைக்க, படிகளை எண்ணிக்கொண்டே ஏறுவது ஒருவகை நம்பிக்கை.

“ஒன்னு...ரெண்டு...மூனு...”

நினைவு சிதறாமல் எண்ணியபடி மேலே சென்று கொண்டிருந்தேன்.

எண்ணிக்கை சில நூறுகளைக் கடந்தபோது.....

“ம்...ம்...ம்...விடுங்க.” -மனதைக் கிறங்கடிக்கும் இளம் பெண்ணின் சிணுங்கல் ஓசை கேட்டது.
அதிர்ச்சியுடன், பார்வையைச் சற்றே உயர்த்திய போது, களைப்பாறுவதற்கான ‘ஓய்வு மண்டபம்’ கண்களில் பட்டது. மலையின் உச்சி வரை இவ்வகை மண்டபங்கள் உள்ளன.

எதிர்ப்பட்ட மண்டபத்தின் உள்ளே, ஒரு வாலிபனின் அரவணைப்பில் ஓர் இளம் பெண் நெளிந்துகொண்டிருந்தாள். அவளின் கன்னங்களை வருடி, இதழ்களில் முத்தமிடும் கட்டத்தை அவன் அணுகிவிட்டிருப்பது தெரிந்தது..

படி எண்ணுவதை அறவே மறந்தேன். அடுத்த அடி வைக்கவும் மனமில்லாமல், நின்ற இடத்தில் நின்ற போது.....

"இங்கே வேண்டாம். 'அந்த' மண்டபத்துக்குப் போயிடலாம்” என்று அவள் சொல்ல, அவர்கள் இடம்பெயர்ந்தார்கள்.

“இவர்களின் காமக் களியாட்டத்துக்குப் புனிதமான இந்தக் கோயில்தானா கிடைத்தது” என்று முணுமுணுத்துக்கொண்டே, சற்று இடைவெளி கொடுத்து அவர்களைப் பின்தொடர்ந்தேன்.

வழியில், சரிவான பாறையில் வடித்தெடுத்த அந்தப் பிரமாண்ட ஐந்து தலை நாகத்துக்குக் குங்குமப் பொடி தூவினேன்[மனைவியின் ஆணைப்படி!].

பக்கவாட்டில், அறுபது அறுபது விளக்குகள் கொண்ட அறுபதாம் படியைக் கடந்த போதும், கை நீட்டும் பிச்சைக்காரர்களுக்குச் சில்லரை போட்ட போதும் என் பார்வை அந்த இணையை விட்டு விலகாமலே இருந்தது.

“ஒரு சாமி கோயிலில், தட்டுறதும் தொட்டுத் தடவுறதும் இடிக்கிறதுமா ஜல்சா பண்ணிட்டுப் போறான். கலி முத்திப் போச்சி.” -இறங்கி வந்துகொண்டிருந்த கும்பலில் ஒரு பெரியவர் மனம் நொந்து சொன்னது கேட்டது.

தொடர்ந்த மலையேறும் பயணத்தில், 'தேவரடியார் மண்டபம்’ குறுக்கிட்டது. அதனுள் நுழைவதைத் தவிர்த்துப் பக்கவாட்டுப் பாதையில் செல்வதே பக்தர்களின் வழக்கம்[இதற்கு ஒரு கதை உண்டு].

அந்த இளஞ்ஜோடியோ, தயங்காமல் அதனுள் நுழைந்தது.

உள்ளேயிருந்து வந்த தொடர்ச்சியான ‘இச்...இச்...இச்...” ஓசை என் செவிகளில் பாய்ந்து என்னைச் சுட்டெரித்தது.

“ஈனப் பிறவிகள்” என்று மனத்தளவில் சாடிக்கொண்டே நகர முற்பட்டபோது, எனக்குப் பின்னாலிருந்து பேச்சுக் குரல்.

“தள்ளிகிட்டு வந்திருக்கான்.”

“இளசு...புதுசு.”

”நல்ல சான்ஸ். வாங்கடா.”

பக்கவாட்டுக் குன்றுகளின் மறைவிலிருந்து நான்கு முரடர்கள் வெளிப்பட்டார்கள்.

தண்ணியடித்துவிட்டுக் களவாடிய பணத்தை வைத்துச் சூதாடும் கும்பல் அது. குன்றுகளுக்கும் புதர்களுக்கும் இடையே உள்ள மறைவிடங்கள்தான் அவர்களின் பாசறை.

என்னையும் தாக்கக்கூடும் என்பதால், அவர்களின் பார்வையில் தட்டுப்படாமலிருக்க, மண்டபத்தைக் கடந்து, படிகளை ஒட்டிய ஒரு பெரிய குன்றின் மறைவில் பதுங்கி, நடக்கவிருப்பதைக் கண்காணித்தேன்.

நான் பயந்தது போல ஏதும் நடந்துவிடவில்லை.

ரவுடிகளின் காலடிச் சத்தம் கேட்டோ என்னவோ, அந்த ஜோடி மண்டபத்திலிருந்து வெளியேறி, விரைந்து படியேறியது.

ரவுடிகளும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.

“புத்தி கெட்ட புள்ளைகளா இருக்கே. இவர்களின் இன்ப விளையாட்டுக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?” என்று அலுத்துக் கொண்டேன்.

அன்று பக்தர்களின் வருகையும் மிகக் குறைவாக இருந்தது. அவர்களிலும் இளைஞர்களைக்  காண முடியவில்லை. அச்சத்தில் என் ஒட்டுமொத்த உடம்பும் லேசாக நடுங்கத் தொடங்கியது. நீண்ட இடைவெளி கொடுத்து, மிக மெதுவாகப் படிகளில் பயணித்தேன்.

அந்த இளஞ்ஜோடிக்கு நேரப்போகும் ஆபத்தைத் தாறுமாறாகக் கற்பனை செய்துகொண்டே படியேறிய போது மேலேயிருந்து கூச்சல் கேட்டது.

கோயிலுக்குள் இருந்த ஒரு கும்பல், மலடிக் குன்றை நோக்கி விரைந்துகொண்டிருப்பது கண்டு, அவர்களுடன் என்னையும் இணைத்துக் கொண்டேன்.

குன்றின் அருகே....

காதலர்களைக் காணோம்; ரவுடிகளையும் காணோம்.

நாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர், தன்னைச் சூழ்ந்திருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“நாங்க பத்து பேர் குன்றைச் சுத்திட்டுத் திரும்பும் போது, அந்த ஜோடி எங்களைக் கடந்து போச்சு. குழந்தைப் பேறு இல்லாததால, மலடிக் குன்றைச் சுத்தப் போறாங்கன்னு நினைச்சோம்; அங்கிருந்து குதிச்சித் தற்கொலை பண்ணிக்குவாங்கன்னு எதிர்பார்க்கல."

சொல்லிவிட்டு, அவர்கள் விட்டுச் சென்ற கடிதத்தைப் படித்தார்: “வெவ்வேறு சாதியில் பிறந்துவிட்ட எங்கள் காதலுக்கு, அர்த்தமில்லாத கட்டுப்பாடுகள் கொண்ட இந்தச் சமுதாயத்தில் இடமில்லை. கொஞ்ச நேரமேனும் , இந்தச் சமுதாயத்தைத் துச்சமாக மதித்து நடந்து கொண்டதில் ஒருவித அற்ப சந்தோசம். அந்தச் சந்தோசத்துடன் இந்தக் கேடுகெட்ட உலகத்தைவிட்டே போகிறோம்.”

“இவர்களுக்குக் காமக் களியாட்டம் புரிய வேறு இடம் இல்லையா?” என்று எரிச்சலுடன் முன்பு முணுமுணுத்த வார்த்தைகளை நெஞ்சுருக நினைத்துப் பார்க்கிறேன்.

ஆண்டுகள் பல உருண்டோடிவிட்ட நிலையிலும், இந்தச் சம்பவம் என் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றுவிட்டது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்பு; மலையின் உச்சியில், செங்குத்தான பகுதியில் அமைந்துள்ளது ‘மலடிக் குன்று’.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் அதை வலம் வந்தால் பலன் கிடைக்கும் என்பது திருச்செங்கோடு வட்டார மக்களின் நம்பிக்கை.

அது சாத்தியமோ இல்லையோ, காதலில் தோல்வியுற்றவர்களும், பிற தோல்விகளைக் கண்டவர்கள் பலரும் அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டது மிகப் பெரிய சோகம்.

நான் மலைக் கோயிலுக்குச் சென்று மிகப்பல ஆண்டுகள் ஆயிற்று. இப்போதைய நிலவரத்தை  அறியேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++











துக்ளக் குருமூர்த்தியின் குரூர புத்தி!

கீழே, 10.01.2018 'துக்ளக்' இதழில் வெளியான அட்டைப்படக் 'கருத்துப் படத்தைக்[கார்ட்டூன்]' கவனியுங்கள்.
'.....ஆன்மீகம், நேர்மை, ஒழுக்கத்திற்கு இங்கு இடமில்லை. இது பெரியார் மண்' என்று திராவிடர் கழக வீரமணி அவர்கள் சொல்வதாகச் சொல்கிறது கருத்துப்படம்.

உண்மையில் சொல்பவர்.....?

குறுக்குப் புத்தியும் குரூர புத்தியும் கொண்ட துக்ளக் குருமூர்த்தி.

இறுதி மூச்சு உள்ளவரை, தமிழ் இனத்துக்காகவும், மூடநம்பிக்கை ஒழிப்புக்காகவும் தன்னை அர்ப்பணித்து, நேர்மையுள்ளவராகவும் ஒழுக்கசீலராகவும் வாழ்ந்து காட்டிய பகுத்தறிவுப் பகலவன் பெரியாரை இகழ்ந்து பேசிக் குதூகலிக்கும் துணிவை இந்த ஆள் பெற்றது எப்படி?

"பெரியாரைச் செருப்பால் அடிப்பேன்" என்று ஒரு 'பொறுக்கி' சொன்னானே, அப்போதே அவனுக்கும் அவன் போன்றவர்களுக்கும் உரிய பதிலடி தராமல் தமிழர்கள் வேடிக்கை பார்த்ததே காரணம் ஆகும்.

தமிழர்கள் நன்றியுணர்ச்சி உள்ளவர்கள். பெரியார் தம் இனத்துக்கு ஆற்றிய தொண்டினை என்றென்றும் மறவாதவர்கள்.

பெரியாரை அவமதிக்கும் துக்ளக் குருமூர்த்தியின் இந்த இழி செயல் கடும் கண்டனத்திற்குரியது.

பெரியாரைப் போற்றும் தன்மானத் தமிழர்களும், அவர் பெயரில் கட்சிகள் நடத்தும் தோழர்களும் ஆற்றவிருக்கும் எதிர்வினை என்ன?
_____________________________________________________________________________________



திங்கள், 1 ஜனவரி, 2018

இது தமிழ்மணத்துக்கு அழகல்லவே!

இன்று[01.01.2018] காலை தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட 'ஆங்கில அடிமைகளுக்கு என் ஆங்கிலப் புத்தாண்டு அனுதாபங்கள்' http://kadavulinkadavul.blogspot.com/2018/01/blog-post.html என்னும் என் பதிவு, தமிழ்மணம் 'சூடான இடுகைகள்' பட்டியலில்  6ஆம் இடத்தைப் பெற்றுள்ளது[இப்பதிவை எழுதும்போது].

ஆயினும், தமிழ்மணத்தின் முகப்புப் பக்கத்திலுள்ள 'சூடான இடுகைகள்' பட்டியலில் என் பதிவுக்குப் பின்னர் இணைக்கப்பட்ட பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில். என் பதிவு மட்டும் இடம்பெறவில்லை. பதிவில் தமிழ்மணம் கண்ட குறை என்ன?

தமிழ்மணம் அறிவிக்குமா?

அறிவிக்குமோ இல்லையோ, போற்றுதற்குரிய தமிழ்ப்பணி ஆற்றும் தமிழ்மணத்திற்கு என் நன்றி.
=====================================================================================
பிற்பகல் 03.09க்கு முதலிடம்[சூடான இடுகைகள் பட்டியலில்] பெற்றது. ஆயினும், முகப்புப் பக்கம் 'சூடான இடுகைகள்' பட்டியலில் இடம்பெறவில்லை.

ஆங்கில 'அடிமை'களுக்கு என் ஆங்கிலப் புத்தாண்டு அனுதாபங்கள்!!!

நாமக்கல் நகரில், இன்றைய[01.01.2018] காலைப் பொழுதில் ஒரு மணி நேரம்போல் தெருத்தெருவாகச் சுற்றி வந்தபோது, வண்ண வண்ணக் கோலங்களுடன் 'Happy New Year' என்னும் ஆங்கில வாசகங்களை மட்டுமே காண முடிந்தது[பொங்கல் திருநாளில் 'Happy Pongal' என்று எழுதுகிறார்கள். அரிதாகச் சிலர், 'பொங்கல் வாழ்த்து' என்று எழுதுகிறார்கள்].

'புத்தாண்டு வாழ்த்துகள்' தென்பட்டால் படம் எடுத்துப் பதிவில் இணைத்திட நினைத்திருந்தேன். ஏமாற்றமே மிஞ்சியது.

ஆங்கிலத்தில் நான்கு வரிகள் பிழையில்லாமல் எழுதவோ, ஓரிரு மணித்துளிகள் பேசவோ[பெரும்பாலோர்] இயலாது எனினும் ஆங்கிலத்தில் வாழ்த்து எழுதிப் பெருமிதப்படுகிறார்கள் நம் தமிழ்க்குடிப் பெண்கள்.

ஆடவர்கள் எப்படி?

எனக்குப் 'பேசி'யில் புத்தாண்டு வாழ்த்துரைத்த பத்துப்பேரில் ஒருவர் மட்டுமே "புத்தாண்டு வாழ்த்துகள்" என்றார். நானும் பதிலுக்கு அவரைத் தமிழில் வாழ்த்தினேன். எஞ்சிய ஒன்பது நண்பர்களுக்கு[இனி அவர்கள் பகைவர்கள்தான்] அனுதாபம் தெரிவித்தேன்.

ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்க நாளில் 'Happy New Year' என்று எழுதிக் கோலமிட்ட, தமிழ்நாட்டின்  அனைத்து[தமிழகம் முழுதும் இதே நிலைதான் என்பது என் நம்பிக்கை] தமிழ்க் கண்மணிகளுக்கு என் நெஞ்சு நிறைந்த ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழில் யாரேனும் எழுதியிருந்தால்[?] அவர்களுக்கு என் நன்றியும் வாழ்த்துகளும்.

நல்ல நாளும் அதுவுமாக இப்படி அல்பத்தனமாய் ஒரு பதிவை வெளியிடுகிறாயே என்று கேட்கிறீர்களா?

என் ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறேன். இதற்குப் பெயர் அல்பத்தனம் என்றால் நான் மறுக்கப்போவதில்லை.

நன்றி.