சனி, 30 மே, 2020

'இது’ விசயத்தில் இத்தனை பலவீனமானவரா மகாத்மா காந்தி?!

'மரணமிலாப் பெருவாழ்வு’ குறித்துப் பதிவு எழுதுவது இன்றைய என் நோக்கமாக இருந்தது. கூடுதல் தகவல்களுக்காக இணையத்தில் மேய்ந்தபோது, http://vallalarr.blogspot.com/2016/04/blog-post_8.html என்னும் தளத்தின் மூலம், காந்தியடிகள் பற்றி, அதிர்ச்சி தரும் பல புதிய  செய்திகளை அறிய நேர்ந்தது[கூடுதல் வாசிப்புக்கு: ‘காந்தியும் காமமும்’[https://kadavulinkadavul.blogspot.com/2015/03/blogpost_26.html].

பதிவின் சுருக்கம் கருதி, வாசித்தறிந்த செய்திகளின் அளவை வெகுவாகக் குறைத்திருக்கிறேன்.

தளத்தின் உரிமையாளருக்கு நன்றி.

#காந்திஜி தமது தென்னாப்பிரிக்கா வாழ்க்கையின்போது சத்தியாகிரகம் என்ற அகிம்சை போர்முறையினை அவர் அங்குதான் உருவாக்கினார். சுயநலம் மற்றும் குடும்ப உறவிற்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்வு முறைக்கு அவர் தயாரானார். அதனால் அவர் ஒரு முக்கியமான இரண்டு முடிவினை அங்கிருந்தபோது எடுத்தார். முதலாவதாக ,குடும்பத்தை விட்டு விலகி முழுமையாகப் பொதுச் சேவைக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொள்ளுதல், இரண்டாவதாக உடலுறவை மட்டுமின்றி காம உணர்வுகளையும் இச்சைகளையும் முற்றிலும் துறத்தல்.

அவர் கடைசியாக வைத்துக்கொண்ட உடலுறவு மகன் தேவதாசின் பிறப்போடு (1899) முடிவடைகிறது. 1906-ஆம் ஆண்டு முதல் அவர் மிகவும் இறுக்கமான பிரம்மச்சர்யத்தைப் பயிற்சி செய்தார். அது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. அவர் தமது வாழ்க்கையில் ஐம்பதாண்டு காலத்தை அவரது இச்சைகளுக்கும் அவர் விரும்பிய லட்சியத் தூய நிலைக்குமான போராட்டத்திற்கே செலவிட்டார்.

தாகூரின் மருமகளான சரளா, அக்காலக்கட்டத்தில் ஒரு மிகப்பெரிய ஆளுமை, பேரழகி, எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியை, இசை வல்லுநர், வங்கத்தின் 'ஜோன் ஆஃப் ஆர்க்' எனவும், பூமிக்கு வந்த துர்க்கை எனவும் வியக்கப்பட்டவர். கணவருடன் விடுதலை ப்போராட்டத்தில் முன்னணியிலிருந்தவர்.

1901-ஆம் ஆண்டே காந்திஜி சரளாவைச் சந்தித்திருக்கின்றார். தென்னாப்பிரிக்க வாழ்க்கைக்குப் பிறகு 1919-20 ஆம் ஆண்டு காந்திஜி தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கியபோதுதான் இருவருக்குமிடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது.....  மார்ச் 1920-ஆம் ஆண்டு சபர்மதி ஆசிரமத்திற்கு சரளா வந்திருந்தபோது, இருவருக்குமிடையே காணப்பட்ட நெருக்கமும் ஆசிரமத்தில் சரளாவின் மகன் தீபக்கிற்கு அளிக்கப்பட்ட சிறப்புரிமைகளும் அப்போதே சர்ச்சைக்குள்ளாயின. காந்தியின் வாழ்வில் வந்து சென்ற ஏராளமான பெண்கள் குறித்து எந்தச் சஞ்சலமும் அடையாத கஸ்தூரிபாவே கவலைப்படத்தக்கதாக அவ்வுறவு அமைந்தது.

மகன் தேவதாஸ், மிகவும் நெருக்கமானவர்களும் அலோசகர்களுமான மகாதேவ தேசாய், மதுரதாஸ், ராஜாஜி ஆகியோரின் கடுமையான தலையீட்டின் பேரில் வெகுவிரைவில் காந்திஜி அந்த உறவைத் தீய்த்து அணைக்க வேண்டியதாயிற்று..... 1920-ஆம் ஆண்டு இறுதியில் 'சத்திய சோதனை'யை அவர் எழுதியபோது சரளாவும் அவர் மகனும் உயிருடனிருந்தனர். 

உடலிச்சையைத் துறத்தல், பிரம்மச்சர்யம் அகியவற்றைத் தனது அகிம்சைப்போர் முறை, சத்தியாக்கிரகம் ஆகியவற்றிற்கு மிக உறுதுணையாக இருக்கும் என உளமாற நம்பினார் காந்திஜி. புற உலகைப் பாதிக்கும் திறன் என்பது ஒருவருக்குத் தன் உலகைக் கட்டுப்படுத்துவதிலிருந்தே துவங்குகிறது என்றார்..... 

கடமைக்கும் தாதி நிலைக்கும் காமம் விரோதமானது என்கிற கருத்து அவருக்கு இளமையிலேயே இறுகப் பதிந்தது. ஆனாலும் காமம் அவரை விடவில்லை. தமது தந்தை உடல்நிலை குறைவால் நோயுற்று இருக்க, ஒரு நாள் காந்திஜி தமது மனைவியுடன் கூடிவிட்டு சற்று அகன்றபோது, அவரது தந்தையின் மரணம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவம் அவரை வெகுவாகப் பாதித்தது.

இச்சைகளைத் துறக்கும் அவரது பிரம்மச்சரியச் சோதனைகள் ஃபோனிக்ஸ் பண்ணைக் காலத்திலிருந்தே தொடங்குகிறது. பருவப் பெண்களுடன் அருகில் உறங்குவதாக அப்பயிற்சி தொடங்கியது. "ஜெகி என்னருகில் படுத்திருந்தார்" என அவர் அதைப் பதிவு செய்தார். தொடர்ந்து அவர் இந்தப் பயிற்சியின் 'வரம்பை' விரிவாக்கிக்கொண்டே சென்றார். அவரது பிரம்மச்சர்யச் சோதனைகளில் பிரபாவதி நாராயணன் (பாலியல் உறவைத் தவிர்த்துக் கொண்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் மனைவி), சுசிலா நய்யார், லீலாவதி அசர், அப்துல் சலாம், பத்மஜா நாயுடு, மீரா பென், ஆபா, மனு காந்தி எனப் பலரும் பல்வேறு வகைகளில் அந்தச் சோதனையில் பங்கு பெற்றனர்.

பிரம்மச்சரியச் சோதனைகளை மனைவியுடன் மட்டும் நிறுத்திக் கொள்வது போதும் என காந்தி நினைக்கவில்லை. அது பெரிய விஷயமில்லை. பிற பெண்கள், குறிப்பாகப் பருவ வயதிலுள்ளோருடன் மேற்கொள்ளப்படுதலே சரியான சோதனை எனக் கருதினார். பழக்கப்பட்ட உடல்களைத் தவிர்த்து புதிய கவர்ச்சிகளுடன் சோதனைகள் தொடர்ந்தன.

"ஊன்றுகோல்களாக", பாதத்தை வருடி விடுபவர்களாக, ஒரு மெல்லிய துண்டுடன் கிட்டத்தட்ட முழு நிர்வாணமான நிலையில் படுத்துள்ள காந்திக்கு 'மசாஜ்' செய்பவர்களாக, இரவில் குறைந்த ஆடைகள் அல்லது ஆடையின்றிப் படுக்கையைப் பகிர்ந்து கொள்பவர்களாக இந்தப் பெண்கள் அவருடைய சோதனைகளில் பங்கு பெற்றனர். சுசிலா அவருக்கு 'மசாஜ்' செய்து வந்தார். லீலாவதி, மனு, ஆபா, மீரா இவர்கள் அவருடன் படுக்கைச் சோதனைகளில் பங்கு பெற்றனர்.

1930-ஆம் ஆண்டுப் பிற்பகுதியும், 1940-ஆம் ஆண்டுப் பிற்பகுதியும் அவருக்கு அரசியல் ரீதியில் சோதனைக்காலங்கள். நாட்டுப் பிரிவினையை அவரால் தடுக்க இயலவில்லை. ஜின்னாவுடன் பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில்தான் கிட்டதட்ட 36 ஆண்டுகளுக்குப் பின் 18-01-1936 மற்றும் 14-04-1938-ஆம் நாட்களில் விழிப்பு நிலையில் அவருக்கு விந்து வெளிப்படுகிறது. கலங்கிப் போய்விடுகிறார் காந்திஜி. 'விந்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தி ஆற்றல் பெறுவதில் தோற்றுப்போன நான் அரசியல் களத்தில் எப்படி வெல்ல முடியும்?' என வேதனையுற்றார். "என் நிலை என்ன? இத்தகைய ஆசைகளுக்கு ஆட்பட்ட ஒருவன் அகிம்சையையும் சத்தியத்தையும் எப்படிப் பிரதிநிதித்துவப்படுத்த இயலும்" என அம்ரித்லால் நானாவதிக்கு எழுதுகிறார்.


பிரிவினை குறித்த பேச்சு வார்த்தைகளில் தோல்வியுற்ற காந்திஜி, 1946-ஆம் ஆண்டு இறுதியில் தனது உச்சகட்டச் சோதனைகளில் இறங்கினார். இப்போது அவரது சோதனைகளில் பங்கு பெற்றவர்கள் இருபது வயதுக்கும் குறைந்த மனுவும் ஆபாவும். இந்தச் சோதனையில் 'வெப்பம் உச்சமாக இருக்கும்' என்றார். மனு தன்னருகில் முற்றிலும் நிர்வாணமாக உறங்குவதாக பியாரே லாலுவுக்கு கடிதம் எழுதினார். ஒருவேளை இப்போதுதான் முதல்முறையாக முழு நிர்வாணத்துடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது போலும். 'சோதனையில் வரம்புகள் கடக்கப்படுவது' பற்றிய குறிப்பின் பொருள் இதுவாக இருக்கலாம்.

பேத்தி மனுவின் மீது அவருக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. தனது சோதனையில் பங்கு பெறுவதற்கான முழுத் தகுதி தான் மட்டுமின்றி, பங்கு பெறுபவரும் இச்சைக்கு ஆட்படாதிருப்பது என்று கருதிய காந்திஜி அத்தகைய திறனுடையவராக 19 வயதுள்ள தன் பேத்தி மனுவை அவர் மதித்தார்.....

அவருடைய உடலில் அருகாமைக்குப் பலரும் போட்டியிடவே செய்தனர், பியாரே லால் உட்பட மனுவைத் திருமணம் செய்ய விரும்பியவராக அவர் இருந்தபோதும் காந்திஜியின் அருகாமைக்கான அவரது ஆவலை ஒரு பால் வேட்கையுடன் ஒப்பிடத் தயங்க மாட்டார் கத்ரீன் டிட்ரிக்.

எனினும் இந்தச் சோதனைகளில் ஆபாவின் கணவர் கனுகாந்திக்கும் மனுவின் தந்தை ஜெய்சுக்லாலுக்கும் ஒப்புதலில்லாததைக் காந்திஜி பொருட்படுத்தவில்லை. ஜெயசுக்லால் இதை வெளிப்படையாக முன்வைத்த போது, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தவும் காந்திஜி தயங்கவில்லை.

இறுதிச் சோதனைகளின்போது காந்தியின் வயது 75-ஐத் தாண்டியிருந்தது. இந்தக் கிழவரிடம் இருபது வயதிற்கும் குறைவான பெண்கள் என்ன கவர்ச்சியைக் கண்டுவிட முடியும்? எந்த வகையில் இவர்கள் சோதனைக்குப் பொருத்தமானவர்களாக இருக்க முடியும்? இந்து மரபிலிருந்துதான் காந்திஜிக்கு இதற்கும் பதில் கிடைத்தது. தனது பிரம்மச்சர்யத்தின் மூலம், தான் இன்னும் பருவப் பெண்களைக் கிளர்ச்சியுறுத்த முடியும் என அவர் நம்பினார். ஆரோக்கியமான வாழ்முறையின் மூலமான உறுதியான உடற்கட்டு, தொடர்ந்த 'மசாஜ்' மூலமான வழுவழுப்பான சருமம், அகன்ற மார்பு, சராசரி அளவிலேனும் உள்ள ஆண்குறி ஆகியவற்றின் மூலம் எழுபது வயதிலும் கிளர்ச்சியூட்டும் சாத்தியம் மிக்கவராக காந்திஜி இருந்திருப்பார் என்பது கத்ரீன் டிட்ரிக்கின் கணிப்பு.....

ஆனாலும் இறுதியில் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டிலிருந்து நழுவியது. நாடு பிரிந்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை கொன்று கொண்டனர். காந்திஜியின் எதிர்பார்ப்புகள் பலவும் தோல்வியுற்றன. 'அரசியல் தோல்விகளுக்கு அகநிலைப் பிறழ்வுகளே காரணம்' என்கிற அவரது 'லாஜிக்'படிப் பார்த்தால் இதன் பொருளென்ன? காந்திஜி தோற்றார், காமம் வென்றது என்பதா? (நன்றி-அ.மார்க்ஸ்)

இப்படி பல வழிகளில் காமத்தை நீக்க இவ்வுலகில் உள்ளோர் முயல்கின்றனர். சிலர் அதில் வெற்றிபெறுகின்றனர். பலர் அதில் தோல்வி அடைகின்றனர்..... காமத்தை ஒழிக்கக் காந்திஜி பயன்படுத்தியப் பாதை தவறனா பாதையாகும்.

காமத்தை ஒழிக்க நமது சிந்தனையை எந்நேரமும் இடைவிடாமல் இறைவனின் பால் செலுத்துவதே சிறந்த முறையான எளிதான மார்க்கம் ஆகும்.

- தி.ம.இராமலிங்கம்#

வியாழன், 28 மே, 2020

கடவுளும் மூன்று மனிதர்களும்!...‘சுட்ட’ கதை!! நெஞ்சைத் ‘தொட்ட’ கதை!!!

து பெரிய இடத்து மனிதர்களுக்கான ஒயின் கடை.

நேரம்,  நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.

கப்பல் மாதிரியான ஒரு காரில் வந்திறங்கினார் ஒரு தொழிலதிபர்; தனக்குத் தோதான இடத்தில் அமர்ந்தார். தனக்குத் தேவையானதைச் சொல்லிவிட்டுத் தற்செயலாகத் திரும்பியவர் திடுக்கிட்டார். காரணம்.....

நான்கு இருக்கைகள் தள்ளி ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் கடவுள்! வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவராக இருந்தார் அவர்.

கடவுள்கூட இங்கெல்லாம் வருவாரா என்று ஆச்சரியப்பட்டார் தொழிலதிபர்; அவருக்குக் காணிக்கையாக ஏதாவது செலுத்திப் புண்ணியம் தேடிக்கொள்ள விரும்பினார்; பணியாளரைக் கூப்பிட்டு, “அதோ அங்கே அமர்ந்திருக்கும் கடவுளுக்கு ஒரு கோப்பை மது கொடு. பில்லை என் கணக்கில் சேர்த்துவிடு” என்றார். பணியாளரும் அப்படியே செய்தார்.

சிறிது நேரத்தில், இன்னொரு பெரிய மனிதர் வந்தார். அவரும் கடவுளை அடையாளம் கண்டுகொண்டு, பணியாளரிடம், “கடவுளுக்கு அரை பாட்டில் மதுவைக் கொடுத்துவிட்டுப் பில்லை என் கணக்கில் சேர்த்துக்கொள்” என்றார்.

அடுத்து, ஒரு பெரிய அரசு அதிகாரி அங்கு வந்தார்; மற்ற இருவரைப் போல அவரும் கடவுளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, “கடவுளுக்கு என் கணக்கில் ஒரு முழு பாட்டில் மதுவைக் கொடு” என்று பணியாளரிடம் சொன்னார்.

நடந்தவற்றைக் கவனித்துக்கொண்டிருந்த கடவுள் இவர்களை அணுக, மூன்று பேரும் எழுந்து நின்று பவ்வியமாகக் கடவுளை வணங்கினார்கள்.

ஒரு கோப்பை மதுவைத் தன் கணக்கில் கொடுத்த தொழிலதிபரின் தலையில் கை வைத்துக் கடவுள் ஆசீர்வாதம் செய்தார்.

“ஆண்டவா, என்னே உன் கருணை! வருடக் கணக்கில் எனக்கிருந்த ஒற்றைத் தலைவலி பறந்துவிட்டது” என்று மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினார் அவர்.

அடுத்ததாக, அரை பாட்டில் மதுவை அளித்த பெரிய மனிதரின் தோள்களில் ஆண்டவன் தம் கைகளை வைக்க, “தேவனே, பிறந்ததிலிருந்து விளங்காமலிருந்த என் ஒரு கை தங்களின் திருக்கரங்கள் பட்டதும் செயல்பட ஆரம்பித்துவிட்டது. என்னே உங்கள் கிருபை!” என்று மேனி சிலிர்த்தார்.

கடவுள் மூன்றாமவருக்கு அருள்பாலிக்கத் தம் கையை உயர்த்தியபோது, “பகவானே, வேண்டாம். தயவு செய்து எனக்கு அருள்பாலிக்க வேண்டாம். நான் ஓர் அரசு அதிகாரி. உயர் பதவியில் இருப்பவன். உடல் ஊனமுற்றவர் கோட்டாவில் எனக்கு வேலை கிடைத்தது. தங்கள் கருணையால் என் கால் ஊனம் சரியாகிவிட்டால் என் வேலை போய்விடும்” என்று சொல்லி எகிறிக் குதித்து ஓடிவிட்டார் அவர்.

“ஒரு அற்ப மனிதனால் எத்தனை பெரிய அவமானம் எனக்கு?” என்று முணுமுணுத்துக்கொண்டே இடத்தைக் காலி செய்தார் கடவுள்!

zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
24.08.2003 ஆனந்த விகடன் இதழில், ‘சுவாமி சுகபோதானந்தா’ எழுதிய தொடர் கட்டுரையிலிருந்து களவாடியது.

விகடனுக்கு நன்றி.

படம்: கூகிள் உதவி.

‘கதைத் தலைப்பு’, நான் தந்தது. வரிகளில் மிகச் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

‘கடைசிப் பத்தி’, என் கற்பனை. சுவாமி சுகபோதானந்தா என்னை மன்னிப்பாராக!

புதன், 27 மே, 2020

ஒரு நடிகையின் நடனத்தைக் காண இந்தியா வந்த அயல்நாட்டுப் பிரதமர்கள்!!

நடனமாடிய நடிகை: மதுபாலா[இந்தி]


காண வந்த பிரமுகர்கள்: முன்னாள் சீனப் பிரதமர் சூ என் லாய், மாஜி பாகிஸ்தான் பிரதமர் புட்டோ.


அக்பரின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் ‘முகலே ஆஸம்’[150 திரையரங்குகளில் வெளியாகி, 7 நாட்களில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது] என்னும் இந்தித் திரைப்படம் 1959ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாண்டுக் கால அவகாசத்தில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில்.....


இந்திப் படவுலகின் ‘காதல் தேவதை’ என்று பெயர் பெற்ற ‘மதுபாலா’வின் நடனத்தைக் கண்டு இன்புறத்தான் மேற்கண்ட பிரமுகர்கள் இந்தியா வந்தார்களாம்[ஆதாரம்: ‘புதிய பார்வை’, மக்கிய சில தாள்கள் மட்டும்].


பாலிவுட் திரைப்படங்களின் அழகுப் பதுமை என்று வர்ணிக்கப்பட்ட 
மதுபாலாவின் இயற்பெயர் மும்தாஜ் பேகம் ஜெகான் தேஹலவி 
ஆகும். இவர் பிப்ரவரி 14, 1933 ஆம் ஆண்டில் டெல்லியில் பிறந்தார்.  9 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தனது 14வது வயதில் நடித்த ‘நீல் கமல்’ திரைப்படம் வெளியான பிறகு மதுபாலா என்ற பெயரைப் பெற்றார்.


இவர் நடித்து வெளியான ‘மஹால்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, 
இவரின் புகழை உயர்த்தியது. தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்த மதுபாலா பிறப்பிலே இதயம் தொடர்பான நோயுடன் பிறந்தவர்.


இவருடைய ‘முகல்-ஏ-ஆஸம்’ மற்றும் ‘பர்ஸாத் கி ராத்’ மிகப்பெரிய வெற்றிப்படங்களாக விளங்கின. 1969 ஆம் ஆண்டு 
பிப்ரவரி 23ந் தேதி தனது 36வது வயதில் உடல்நிலைக் குறைபாட்டால் மரணத்தைத் தழுவினார்.

செவ்வாய், 26 மே, 2020

சமஸ்தான மன்னர்களின் ‘சல்லாப’ வாழ்க்கை![சில துளிகள்]

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, 565 சமஸ்தானங்களை[விக்கிப்பீடியா] மட்டும் பொம்மை அரசர்களை[ஆங்கிலேயருக்குக் கப்பம் செலுத்தி ஆண்டவர்கள்] வைத்து நிர்வகித்தார்கள். அந்த அடிமை அரசர்கள், தாம் நடத்திய ஆடம்பர வாழ்க்கையில் செய்த அட்டூழியங்கள் மனம் பதற வைப்பவை; அனுபவித்த சுகபோகங்கள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை. எடுத்துக்காட்டாக.....

*காலஞ்சென்ற ஜோத்பூர் மகாராஜா உடலுறவு சுகத்துக்கென்று 3000 பெண்களை வைப்பாட்டிகளாக[அந்தப்புரத்து ராணிகள்] வைத்திருந்தார்.

*தன் அந்தப்புரத்தில் வெறும் 200 அழகிகள் மட்டுமே இருப்பதாக நிஜாம் வருத்தப்படுவதுண்டாம்.

*‘நீர் உமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த இரண்டு ‘உருப்படி’களும் பேரழகிகள் என்று கேள்விப்பட்டேன். நீர் என்னுடைய விசுவாசம் மிக்க சேவகர் என்பதால் உடனடியாக அவர்களை என்னிடம் கொண்டுவந்து சேர்க்கவும்’ -இது தன் அதிகாரத்துக்கு உட்பட்ட ஒரு திவானுக்கு ஒரு மன்னர் எழுதிய கடிதம்.

*ஒரு சமஸ்தான அந்தப்புரத்தில், வெகு அழகான அடிமைப் பெண் ஒருத்தி இருந்தாள். பிரமிக்க வைக்கிற அழகு. மயங்கினார் மன்னர். தடை ஏதுமின்றி இன்பசாகரத்தில் மூழ்கித் திளைத்தார்.

மன்னரின் மனைவிகளுக்கும் வைப்பாட்டிகளுக்கும் அது பிடிக்கவில்லை. அந்த அடிமைப் பெண் மீது அடுத்தடுத்துத் திருட்டுப் பழி சுமத்தினார்கள். ஒரு கட்டத்தில் மன்னரும் நம்பிவிட்டார். குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி அவளை மிரட்டினார். அவள் ஒத்துக்கொள்ளவே இல்லை.

வெகுண்ட மன்னர், குடித்துவிட்டுப் பலவகையிலும் பாலுறவு வக்கிரங்களைக் கையாண்டு  அவளைப் புணர்ந்தார். இப்படிப் புணர்வது தொடர்ந்த நிலையில் ஒரு நாள் அந்த அழகிய அடிமைப் பெண் மடிந்துபோனாள்.

அந்தப்புரங்களில் நடக்கும் அட்டூழியங்களுக்குச் சாட்சியங்கள் கிடைப்பதில்லை என்பதால் ஆங்கில அரசு இவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

*சமஸ்தான மன்னர்கள், கவர்ச்சிக் கன்னிகளுடன் நடத்திய ‘ஜலக்கிரீடை’ சரித்திரப்புகழ் பெற்றது.

*அன்று, பெரும்பாலான மன்னர்கள், வாழை இலையில்தான் சாப்பிடுவார்கள்.  அந்த இலையின் கீழ் தங்கம் அல்லது வெள்ளியால் ஆன தட்டு இருக்கும்.

*சில மன்னர்கள் கடவுள் விக்கிரகங்களுக்கு போடப்படுவதை விடவும் அதிக அளவிலான ஆபரணங்கள் போட்டுக்கொள்வார்கள். ஒருவர், 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் அணிவதையும் ஆடைகள் உடுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தாராம். அதற்கான சிறு பட்டியல்.....

1] 334 வைரக் கற்கள் பதித்த கோட்டு.

2] 172 மரகதக் கற்களும் 1742 வைரக் கற்களும் பதிக்கப்பட்ட பாட்ஜுகள் [தோளில் அணிவது].

3] 8619 முத்துக்களும் 54 மரகதக் கற்களும் 27 மாணிக்கங்களும் பதிக்கப்பட்ட கச்சை[ பெல்ட்].

4] 450 வைரக் கற்கள் பதிப்பிக்கப்பட்ட கடிகாரம்.

5] 596 முத்துக்களும், 612 வைரக் கற்களும், 26 மாணிக்கங்களும், 48 மரகதக் கற்களும் பதிப்பிக்கப்பட்ட ஆடைகள்.

*அயலாருக்கு விருந்தளிக்க நேரின் அவர்களுடன் உடனமர்ந்து உண்ண மாட்டார்கள் மன்னர்கள்.

*உறவினர் அல்லாதவருடன்[அயலார்] உரையாட நேர்ந்தால், பின்னர் ‘தீட்டு’ நீங்குவதற்காகக் குளித்துவிடுவது அவர்களின் வழக்கமாக இருந்தது. -தினமணி கதிர்[30.06.1996] கட்டுரை
                                             
                                           *                           *                       *

*ராஜபுத்திர சமஸ்தானம் அல்வார் பகுதியை ஆண்ட, ஜெய்சிங் தன் அரசவையில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் தன்னைப் போலவே உல்லாசம் விரும்பிகளாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார். அதற்காக, அடிக்கடி விருந்து, கேளிக்கைகளை ஏற்பாடு செய்வார். தன் பட்டத்து மகாராணியைத் தவிர, மற்ற அந்தப்புரத்து ராணிகளை, மற்றவர்களுக்கு விருந்தாக்கவும் முன் வருவார்.

எனவே, விருந்து என்றவுடன், அமைச்சர்கள் உட்பட, தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் தவறாமல் ஆஜராகி விடுவர்.  -தினமலர்
https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49955&cat=2&Print=1
========================================================================

திங்கள், 25 மே, 2020

“கடவுள் ஒரு ‘பேப்பர் வெயிட்’ மாதிரி”... கவிப்பேரரசு வைரமுத்து!

#இந்தியக் கலாச்சாரத்தில் கோயில் என்பது ‘கடவுளின் பங்களா’ மட்டுமல்ல; பொருளாதார வாழ்வின் மையம்.

நிர்மாணிக்கும்போது அது[கோயில்] தொழிற்சாலை; நிர்மாணித்த பிறகு அது ஒரு வங்கி.

பாடசாலையும் அதுவே; ஆபத்தான காலங்களில் ஆயுதச் சாலையும் அதுவே; நீதிமன்றமும் அதுவே; வருவாய் திரட்டும் நிறுவனவும் அதுவே; கடவுள் பீடமும் அதுவே; சமுதாயத்தின் கலைக்கூடமும் அதுவே.

இந்த நிறுவனங்களின் மீது எந்தவொரு விமர்சனமும் விழக்கூடாது என்றுதான் கடவுள் என்னும் கருத்தாக்கத்தை அதன் மீது தூக்கி நிறுத்தினார்கள்.  இது, காகிதங்கள் பறக்காமலிருக்க, ‘பேப்பர் வெயிட்’ வைப்பது மாதிரி.

கோயிலில் இயங்கிவந்த நிறுவனங்கள் காலப்போக்கில் ஒவ்வொன்றாய்க் கழன்றுபோன பின்னும் பணமும் பக்தியும் மட்டும் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றன கடவுள் என்னும் கருத்தாக்கத்தை.

கோயில் கடவுளோடு சம்பந்தப்பட்டது என்பதைவிடப் பொருளாதாரத்தோடுதான் அதிகம் சம்பந்தப்பட்டது. பொருள் வசதியற்ற பல கோயில்கள் புதர்மண்டிக் கிடப்பதே இதற்குச் சாட்சி
=============================================================
‘இந்தியக் கலாச்சாரத்தில் கோயிலுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?’ என்னும் வாசகர் கேள்விக்கு வைரமுத்து அளித்த பதில் இது[கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள், 26.11.2007 குமுதம் வார இதழ்].

கவிப்பேரரசுவின் இந்தக் கருத்தாக்கம் வெளியாகி ஏறத்தாழ  13 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆண்டாள் குறித்த அவரின் கருத்தைப் பிரச்சினை ஆக்கிச் சுகம் கண்ட பக்தகோடிகள், கடவுளைப் ‘பேப்பர் வெயிட்’ என்று சொல்லலாமா என்று கேட்டுப் புதியதொரு போராட்டத்தைத் தொடங்கவும்கூடும். அவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது.....

‘பேப்பர் வெயிட் மாதிரி’ என்றுதான் கவிப்பேரரசு சொல்லியிருக்கிறார்; ‘கடவுளே ஒரு பேப்பர் வெயிட்தான்’ என்று சொல்லவில்லை. 

இங்கே பேப்பர் வெயிட் என்பது வெறும் உவமை மட்டுமே. கடவுள் உவமேயம். உவமை ஒருபோதும் உவமேயம் ஆகிவிடாது.....

“போதும் நிறுத்தியா” என்று வாசிப்போர் பலரும் முணுமுணுக்கக்கூடும் என்பதை மானசீகமாக உணர்வதால் பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

நன்றி.

சனி, 23 மே, 2020

ஜக்கி வாசுதேவின் மனைவி விஜி, ‘மகா சமாதி’ ஆன கதை!

ஜக்கி வாசுதேவ் குறித்துக் கணிசமான பதிவுகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் இதுவும் ஒன்று என்பதைத் தவிர அவரை வம்புக்கு இழுக்கும் நோக்கம் கிஞ்சித்தும் இல்லை.

என்னுடைய தளத்தின் முதன்மை நோக்கங்களுள் ‘மூடநம்பிக்கைகளைச் சாடுவது’ம் ஒன்று என்பதை நினைவுகூர்க.

கீழ்க்காணும் விசித்திர நிகழ்வுகளின் தொகுப்பு, சாட்சாத் ஜக்கி வாசுதேவ் அவர்களின் தளத்திலிருந்து நகல் செய்தது[https://isha.sadhguru.org/in/ta/sadhguru/man/viji ]. தேவையற்றவை என்று நான் நினக்கும் வரிகளை ஆங்காங்கே நீக்கியிருக்கிறேன். 

சத்குரு அவர்களுக்கு என் நன்றி.

#எல்லோராலும் விஜி என்று வாஞ்சையாக அழைக்கப்பட்டவர் சத்குருவின் மனைவி விஜயகுமாரி. சாமுண்டி மலையில் ஞானோதயம் அடைந்த சத்குரு, அதற்கு இரண்டு வருடம் கழித்து, மைசூரில் முதன்முதலாக விஜி அவர்களைச் சந்தித்தார். மைசூரில் ஒரு மதிய உணவு அழைப்பிற்கு விருந்தினராகச் சென்றிருந்த இடத்தில், இவர்களின் முதல் சந்திப்பு நடந்தது. அதன்பின் இவர்கள் கடிதம் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டார்கள். மனம்விட்டு நிகழ்ந்த இந்த பரிமாறல்களுக்குப் பின், ஒரு மங்களகரமான மஹாசிவராத்திரி நாளன்று, 1984ல் இவர்களின் திருமணம் நடந்தது. சத்குருவின் யோகா வகுப்புகள் எப்போதும் போல் முழுவீச்சில் நடந்துகொண்டிருந்தது. தென்னிந்தியாவில் பல இடங்களில் அவர் இடைவிடாது வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். விஜியோ ஒரு வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவ்வப்போது சத்குருவுடன் பயணம் செய்து, சத்குருவின் வகுப்புகளில் அவர் தன்னார்வத் தொண்டும் செய்தார்.

1990ல் சத்குருவுக்கும் விஜிக்கும் ராதே என்றொரு மகள் பிறந்தாள்.  

.....நாட்கள் செல்லச் செல்ல, சத்குருவின் கவனம் முழுவதும் தியானலிங்கத்தை பூர்த்தி செய்வதிலேயே இருந்தது. இந்தச் செயலில் விஜியும் முழுமையாக ஈடுபட்டிருந்தார்.

இனி, சத்குருவின் வார்த்தைகளில்..... "1996 ம் வருடம் ஜூலை மாதம் அது. தியானலிங்கப் பிரதிஷ்டையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போதுதான் தியானலிங்கப் பணிகள் முடிவடைந்ததும், தன் உடலைத் துறக்கப்போவதாக விஜி முடிவெடுத்தாள். 

ஒரு பௌர்ணமியைக் குறிப்பிட்டு, அன்றைய தினத்தில் தன் உடலைத் துறக்கப்போவதாக அவள் அறிவித்தாள். அதற்குத் தேவையான வகையில் தன்னைத் தயார் செய்துகொள்ளவும் ஆரம்பித்தாள். இம்முடிவை மாற்றிக்கொள்ளுமாறு நான் அவளை வலியுறுத்தினேன். “இப்போது இதற்கான அவசியம் என்ன இருக்கிறது..? இன்னும் சிறிது நாள் பொறுத்திரு” என்று கூறினேன். ஆனால் அவளோ, ‘இதுதான் எனக்குச் சரியான நேரம். என் வாழ்வில் இப்போது நான் ஒரு நிறைவை உணர்கிறேன் – வெளிச் சூழலிலும் சரி, என் உள்நிலையிலும் சரி நான் மிக நிறைவாய் உணர்கிறேன். நாளையே ஏதோ நடந்து இந்தச் சமநிலை பாதிக்கப்பட்டால், அதைத் தாங்கும் வகையில் நான் இல்லை. நான் நிறைவாய் உணரும்போதே விடைபெற்றுச் செல்ல நினைக்கிறேன். அதனால் இதுதான் எனக்கு ஏற்ற நேரம். இந்நேரத்தைத் தவறவிட என்னால் இயலாது” என்றாள்.

தன் உடலை நீங்கிச் சென்றாள். அப்போது அவள் முழுமையான ஆரோக்கியத்தோடு இருந்தாள். முப்பத்தி-மூன்றே வயது. உடலில் சிறு சிதைவுகூட ஏற்படுத்தாமல், அத்தனை இலகுவாக அதைப் பிரிந்துசெல்வது ஒன்றும் சுலபமான காரியமில்லை. 

மிக எளிதாக அணிந்திருக்கும் உடையைக் களைந்திடலாம்... ஆனால் நாம் கொண்டிருக்கும் இவ்வுடலை, ஆடையைக் களைவது போல் எளிதாக உதறிவிட்டுச் செல்வது..? அது ஒன்றும் அத்தனை சாதாரண விஷயமல்ல!
தன் தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆகிவிட்டது, இனி இவ்வுலகில் தான் பார்ப்பதற்கோ, உணர்வதற்கோ ஒன்றுமில்லை என்ற நிலைக்கு ஒருவர் எப்போது வருகிறாரோ, அப்போது அவர் முழு விருப்பத்தோடு இவ்வுடலை உதறிவிட்டுச் செல்கிறார். ஒருவேளை ஏதோ போராட்டமோ, அல்லது உடலிற்கு காயமோ, தீங்கோ விளைவித்தால், அது தற்கொலை. ஆனால் போராட்டங்கள் எதுவுமின்றி, ஏதோ அறையிலிருந்து வெளியே செல்வது போல, மிக சாதாரணமாக உடலைவிட்டு ஒருவர் வெளியேறினால், அது "மஹா சமாதி[இது, ஜக்கி தன்னிச்சையாய்த் தரும் விளக்கம்].

இதுபோல் ஒருவர் முழுவிழிப்புணர்வுடன், உடலுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல், தானாக உடலை உதறிச் சென்றார் என்றால், அதன்பிறகு 'ஒரு உயிராக' அவர் இங்கு இருக்கமாட்டார். சாதாரணமாக ஒருவர் இறந்தால், “அவர் போய்விட்டார். இனி அவர் இல்லை” என்று சொல்வார்கள். ஆனால் அது நிஜமில்லை. நீங்கள் அறிந்திருந்த 'நபராக' அவர் இனி இருக்கமாட்டாரே தவிர்த்து, ஒரு உயிராக அவர் இன்னும் இருப்பார். ஆனால் மஹாசமாதி அடைந்தவர்கள் 'ஒரு உயிராக'க்கூட இங்கு இருக்கமாட்டார்கள். அவர்கள் அப்படியே கரைந்து போய்விடுவார்கள்[?!?!?!]. அவ்வளவுதான்... அவர்களைப் பொறுத்தவரை இந்த நாடகம் முடிவடைந்தது!

எல்லா ஆன்மீக சாதகர்களுக்கும் மஹா சமாதிதான் இறுதிக் குறிக்கோள். அந்தத் தெய்வீகத்தில் கரைந்து போகும்போதுதான், அவர்களின் ஆன்மீக சாதனை முடிவுறும்......

கீழ்வருவது விஜி மஹா சமாதியடைந்தஇருதினங்களுக்கு பிறகு 1997 தைபூசத்தன்று சத்குரு பேசியது.

.....ராதேவை[மகள்] ஊட்டியில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு வரும் வழியில் எப்போதும் போல "ஷம்போ" மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தாள். அப்போது கண்ணீர் மளமளவென வழிந்தது. என் கைகளைப் பிடித்து வாகனத்தை நிருறுத்தும்படி கேட்டுக்கொண்டாள். எனக்கு வேறு எந்த ஷம்போவையும் தெரியாது. சில நேரங்களில் நான் உங்களை அந்த வடிவில் கண்டுள்ளேன். நீங்கள் மட்டும்தான் என் மோக்‌ஷத்திற்கு உதவ வேண்டுமென்று கூறி அழுதாள்.  மறுபடியும் மதியம் 3:45 மணிக்கு குளித்துவிட்டு தனது பயிற்சிகளைத் தொடங்குவாள். அவள் சமாதியடைந்த அன்று, அந்த மூன்று வேளைகளிலும் நான் அவளுக்குப் பயிற்சிகளை தொடக்கி வைத்துவிட்டு வகுப்பெடுக்கச் சென்றேன். மாலை 6:15 மணிக்கு "ஷம்போ" என்ற உச்சாடனையில் கலந்துவிட்டாள்; அவனுடையவள் ஆகிவிட்டாள்.....

ஜெய ஷம்போ(?!) மகாதேவா#
=====================================================================
ஜக்கியே சொல்லுவதாக அமைந்த இந்தச் செய்தித் தொகுப்பைப் படித்து முடித்து நீண்ட நேரம் பிரமிப்பில் கட்டுண்டு கிடந்தேன். சொற்களை வெகு சாதுரியமாகப் பயன்படுத்துவதில் இவர் மகா மகா கில்லாடி என்பது புரிந்தது.

விஜயகுமாரி பற்றிய இவரின் விவரிப்புகளிலிருந்து[மகா சமாதி அடைவதற்கு முன்பு] அவர் ஒரு சராசரிப் பெண் என்பதாகவே நமக்கு அறிமுகம் ஆகிறார். அந்தச் சராசரிப் பெண், “நான் நிறைவாய் இருக்கும்போதே ‘விடைபெற்றுச் செல்ல நினக்கிறேன்’ என்கிறார்.

நிறைவாக வாழும்போது செல்ல நினைப்பது ஏன்? எங்கு செல்ல விரும்புகிறார்? செல்லும் இடத்தில் எவ்வளவு காலத்துக்குத் தங்கியிருக்கப் போகிறார்? அங்கே அவரின் செயல்பாடு என்ன? என்பன பற்றியெல்லாம் எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை. ஜக்கியும் வாய் திறக்கவில்லை.

நாமெல்லாம் செத்துப்போனால், குழி தோண்டி, அதில் கிடத்தி மண்ணைத் தள்ளி மூடிவிடுவார்கள். இதற்குச் சமாதி கட்டுதல் என்று பெயர்.

ஞானிகள் என்றும் அவதாரங்கள் என்று சொல்லப்படுபவர்கள் செத்துப்போனால் அவர்களையும் குழி தோண்டிப் புதைத்து மூடுவதுதான் வழக்கத்தில் உள்ளது.

வெள்ளி, 22 மே, 2020

அச்சச்சோ...பாவம் அம்மாக்கள்!

வயசுப் பொண்ணுகளைப் பொருத்தவரை, அப்போதிருந்து இப்போதுவரை  அப்பாக்களுக்கு அவர்கள் ‘செல்லம்’தான். அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்துத் தப்பான வழியில் சென்றுவிடாமல் தடுக்கும் மெய்க்காப்பாளர்கள் அம்மாக்கள். இதைப் புரிந்துகொள்ளாத அப்பாக்களிடம் அவர்கள்[அம்மாக்கள்] அவ்வப்போது  ‘வாங்கிக் கட்டிக்கொள்வது’ம் உண்டு!

கீழ்க்காணும் கதை நம் அனுதாபத்திற்குரிய அம்மாக்களுக்குச் சமர்ப்பணம்!

இது, ‘குங்குமம்’[17.08.2015] வார இதழில் வெளியானது. ‘நானே நான்’ எழுதியது.

2015ஆம் ஆண்டில் மட்டும் குங்குமத்தில் 05 கதைகள் எழுதினேன். 2016இல் ஒன்று.

எச்சரிக்கை! கைவசம் ‘தரமான சரக்கு’ இல்லாதபோதெல்லாம் இலவசமாய் இவை உங்களுக்குப் வழங்கப்படும்!
=======================================================================

வியாழன், 21 மே, 2020

“சீச்சீ...ஏனிந்த அசிங்க போகம்?!”

என் வாலிப வயதில் ஒரு நாள், மொட்டைமாடியில் மல்லாந்து கிடந்து, கண் சிமிட்டும் விண்மீன்களை எண்ணிச் சலித்து, பழக்கதோசம் காரணமாகப் படைப்பையும் படைத்தவனையும் பற்றி நெடுநேரம் சிந்தித்ததன் விளைவு இந்த உரைநடைக் கவிதை!


நான் வாழப் பிறந்தவன்.

எனக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச நாட்கள் 36500.
ஆனால்.....
ஒரு முழு ‘ஒருநாள்’கூட
மூச்சு விடாமல் வாழ எனக்கு அனுமதியில்லை.


மண்ணில் ஓடி ஆடியும்
விண்ணில் சிறகடித்துப் பறந்தும்
ஆழ்கடலில் செதில் அசைத்து நீந்தியும் மகிழ்வது
என் பிறவி ஆசை
இருப்பினும்
இரண்டிரண்டு கைகால்களுடன் மட்டுமே 
படைக்கப்பட்டிருக்கிறேன்.

‘பண்டங்கள் கிடைக்கும்போது உண்பது;
கிடக்காதபோது 
உள்ளுறுப்பில் ‘இருப்பு’ வைத்ததை
அசைபோட்டு ஜீரணிப்பது’ என்பது
என் விருப்பம்.
படைப்பதற்கு முன்னால்
என் விருப்பங்களை விசாரிக்கத் தவறியது
படைப்பாளன் செய்த குற்றம்.

என் உடம்பைப் பற்றி எனக்குத் தெரியும்.
எலும்பும் சதையும் நரம்பும் ரணமும் கலந்து செய்த
தோல் போர்த்த  பிண்டம் இது.
என்னவள் சுமந்துகொண்டிருப்பதும்
இப்படியான  ஒரு பிண்டம்தான்
[கலவையில் வித்தியாசம் இல்லை;
கலக்கப்பட்ட மூலங்களின் சதவீதங்களில் மட்டுமே
சில மாற்றங்கள்].
அந்தப் பிண்டத்தைப் பார்க்கும்போதெல்லாம்
என்னுள் உணர்ச்சிப் பிரவாகம்; கடும் காமக் கிளர்ச்சி.

சதையோடு சதை உரசியும் புணர்ச்சி செய்தும்
உணர்ச்சி தணிக்கிறேன்.
அது தணிந்தபின்.....
“சீச்சீ...ஏனிந்த அசிங்க போகம்?” என்று மனம் விசனிக்கிறது.
ஆனாலும்,
அப்படி வாழத்தான் நான் பணிக்கப்பட்டிருக்கிறேன்.

‘இனவிருத்திதான் படைப்பின் அடிப்படைக் கருதுகோள்’
என்பர் இயற்கை ஆய்வாளர்.
அது என்ன கருதுகோளோ, கருமாந்தரமோ?
இந்த வேண்டாத  இனவிருத்திக்காக
நான் ஏன் காலமெல்லாம் ‘விந்துப்பை’ சுமக்க வேண்டும்?


இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ சிந்தித்து
அல்லல் படுபவன் நான்;
நாளும்  ஆறுதல் பெறும் வகையறியாமல்
அரற்றுபவன்.

என்னைப் படைத்து மண்ணில்  அலையவிட்டு,
மறைந்திருந்து வேடிக்கை பார்க்கும்
அந்த 'அயோக்கியன்’ யார்?


யாரந்த அயோக்கியன்?!
========================================================================

புதன், 20 மே, 2020

‘அது’, வேறெதுவைவிடவும் மேலானது!!

“பரமு” -அப்பா அழைத்தார்.

அவர் படுத்திருந்த அறையை நான் அடைந்தபோது மிகவும் சிரமப்பட்டு எழுந்து உட்கார முயன்றுகொண்டிருந்தார். அவரின் தோள்கள் பற்றித் தூக்கி அமர வைத்தேன். ரொம்பவே வயதாகிவிட்டது. பெரும்பாலான நேரம் படுக்கையில்தான் கழிந்தது. பொழுதுபோக்குக்குத் தொலைக்காட்சி மட்டுமே.

“சொல்லுங்கப்பா, எதுவும் வேணுமா?”

“எதுவும் வேண்டாம். நீ எனக்கு ஒரு காரியம் செய்யணும்.”

“சொல்லுங்க.”

“என் பெட்டியில் கொஞ்சம் ரூபாய் இருக்கு. அதில் ஒரு ஆயிரம் ரூபாய் எடுத்து வா.”

எடுத்துவந்து நீட்டினேன். 

“உன்கிட்டயே இருக்கட்டும். இப்போ ஊரடங்கு நீடிக்கிறதால எதுத்த வீட்டுச் செந்தில் வீட்டுலதான் இருப்பான். அவன்கிட்டே இதைக் குடுத்து நம்ம ஊர் அம்மன் கோயில் உண்டியலில் போட்டுடச் சொல்லு.”
“அவன் எதுக்கு? நானே போறேன்.”

“வேண்டாம்ப்பா. உன் அக்கா புருசனுக்குக் கொரோனா வந்துது இல்லியா? அரசாங்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை குடுத்தாங்க. நானும் மனசு கேட்காம, நோய் குணமாயிட்டா ஆயிரம் ரூபா உண்டியலில் போடுறதா அம்மனை நேர்ந்துகிட்டேன். அவர் குணமடைஞ்சிட்டார். நேர்ந்துகிட்டதுக்குத்தான் இந்த ஆயிரம் ரூபா.”

“போட்டுடுறேன்பா.” - பணத்துடன் நகர முற்பட்டேன்.

“கொஞ்சம் இருப்பா.” -அப்பாவின் குரல் என்னைத் தேக்கியது. சொன்னார்: “சாமி, சடங்கு, நேர்த்திக்கடன்னு இது மாதிரி விசயங்களில் நம்பிக்கை இல்லாதவன் நீ. செந்தில்கிட்டே குடுத்துப் போடச் சொல்லுப்பா.” 

“இதை நான் எனக்காகச் செய்யல. உங்க மகன்கிற முறையில் செய்யுறேன். இது ஒன்னும் தப்பில்ல. ஒரு மகன் தந்தைக்குச் செய்யுற உதவி. இது உதவி மட்டும்தான்பா” என்று சொல்லிக் கோயிலை நோக்கி நகர்ந்தேன்.

பணத்தை உண்டியலில் சேர்த்துவிட்டுத் திரும்பியபோது, “ஊருக்குத்தான் உபதேசமா?” என்று கேட்டு, எள்ளல் கலந்த புன்னகையுடன் என் எதிரில் நின்றுகொண்டிருந்தான் என் ஒத்த வயதினனும், உடன் பயின்றவனும், அதி தீவிரக் கடவுள் பக்தனுமான அருணகிரி.

நான் உண்டியலில் பணம் செலுத்த வந்ததற்கான காரணத்தைச் சொன்னேன். என் தந்தையின் உடல்நிலை பற்றி அவனுக்குத் தெரியுமாதலால், “சரிதான்” என்பதாகத் தலையசைத்துவிட்டு, “என்ன இருந்தாலும், நீ செய்தது உன் கொள்கைக்கு எதிரானதுதான். இதெல்லாம் மூடநம்பிக்கைதான்னு உன் அப்பாவுக்குப் புரிய வைக்க நீ முயற்சி பண்ணியிருக்கணும்” என்றான்.

“நான் கல்லூரியில் சேர்ந்து படிச்சபோதிருந்தே அவர்கிட்டே இதைப் பத்திப் பல தடவை விவாதிச்சிருக்கேன். ஒரு தடவைகூட அவர் ஜெயிச்சதில்ல. ஒரு கட்டத்தில், ‘உன் பேச்சில் நியாயம் இருக்குங்கிறதை என்னால் புரிஞ்சிக்க முடியுது. ஆனாலும், பரம்பரையாக் கடைபிடிக்கிற மூடப்பழக்கங்களிலிருந்து என்னால முழுசா விடுபட முடியாதுப்பா. எஞ்சியிருக்கிற கொஞ்ச ஆயுசையும் இப்படியே கழிச்சுடுறேன். தயவு பண்ணி இனியும் இது விசயத்தில் நீ தலையிடாதே’ன்னு சொல்லிட்டார். நானும் சரின்னு சொல்லிட்டேன். அதுக்கப்புறம், அவரும் என் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்துகிட்டதில்லை. இப்போதுகூட, எதிர் வீட்டுச் செந்தில்கிட்டதான் இந்தப் பணத்தைக் கொடுத்துப் போடச் சொன்னார். பெத்த அப்பனுக்குச் செய்யுற உதவி மட்டுமே இதுன்னு சொல்லிட்டு வந்தேன். பகுத்தறிவே போற்றத்தக்கது, பக்தி புறக்கணிப்புக்குரியது என்பது என் கொள்கையாக இருந்தாலும்,  சில நேரங்களில் பகுத்தறிவை விடவும் மனிதாபிமானமே மதிக்கத்தக்கதுன்னு தோணுது” என்றேன் நான்.

“மனிதாபிமானமே சிறந்தது, சரி. பக்தி வேண்டாம்னு நீ சொல்லுறது உறுத்துது. இன்னொரு நாள் பேசுவோம்” என்று கை குலுக்கி விடை பெற்றான் அருணகிரி.
========================================================================
என்னில் ஒரு பத்து வயதை குறைத்து, இறந்துவிட்ட என் அப்பாவைப் பிழைக்க வைத்துக் கற்பனையாகப் படைக்கப்பட்டது இந்தக் கதை.

செவ்வாய், 19 மே, 2020

ரூ5000/= முதல் பரிசுக்கதை![இரண்டாம் பகுதி]

கதையின் முதல் பகுதியை வாசித்திட..... 


[.....ஒப்புக்குக்கூட ஒரு சமாதானக் குரல் கொடுக்காமல், நடிப்புக்குக்கூட ஒரு குறுக்கீடு செய்யாமல் ஊர் மொத்தமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்த வேளையில்.....]

எவரும் எதிர்பாராத வகையில், மாவட்ட ஆட்சித் தலைவர் தன் பரிவாரங்கள் சூழ அங்கே வருகை புரிந்தார்.

வெட்டரிவாள் கை நழுவித் தரையில் விழுந்ததுகூடத் தெரியாமல் சின்னப்பன் திகைத்து நின்றான். கிராமத்து மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சூழ்ந்துகொண்டார்கள்.

ஆட்சித் தலைவர் பேசினார்:

“உங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விசயத்தை இப்போ சொல்லப்போறேன். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிறு விவசாயி சின்னப்பன் என்பவருடைய மகள் துளசி, மலேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்களைத் தட்டிவந்து நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு நம் தமிழ்நாடு அரசு பாராட்டு விழா நடத்தி, பரிசு வழங்க இருக்கிறது. இந்த நல்ல செய்தியைத் துளசியின் குடும்பத்தினருக்கு நேரில் சொல்லி வாழ்த்திவிட்டுப் போகத்தான் நான் வந்திருக்கிறேன்.....”

அவர் தொடர்ந்து பேச முற்பட்டபோது, அவரை அணுகி நின்ற சின்னப்பன், “நாந்தானுங்க சின்னப்பன். போட்டியில் பரிசெல்லாம் வாங்கினதாச் சொன்னீங்களே அந்தப் பொண்ணு துளசி என் பொண்ணா இருக்காதுன்னு நினைக்கிறேங்க. அவ மூனு வருசம் முன்னாடி, புத்தி கெட்டுப் போயி எவனோ ஒரு பொறம்போக்குப் பயலோட ஊரைவிட்டே ஓடிப் போய்ட்டாங்க. நான் உழைச்சிச் சம்பாதிச்ச பணத்தில் செஞ்சி போட்ட நகைகளையும் கொண்டுபோய்ட்டா. என்ன ஆச்சோ ஏது ஆச்சோ, இப்ப ஒண்டிப் பொம்பளையா திரும்பி வந்திருக்கா” என்றான்.

ஆட்சித் தலைவரின் புருவங்கள் உயர்ந்து நெளிந்தன. அவர் முகத்தில் குழப்பம் குடியேறியது. உதவியாளரைப் பார்த்தார். அவர் கிராம நிர்வாக அதிகாரியை அழைத்தார். கலந்து பேசினார்கள்.

ஆட்சித் தலைவர் சின்னப்பனை மிக அருகில் நிறுத்தி, ஒரு நாளிதழில் வெளியாகியிருந்த பெண்ணின் புகைப்படத்தைக் காட்டினார்.

“இது என் பொண்ணுதாங்க” என்று சொல்லிக்கொண்டு மலங்க மலங்க விழித்தான் சின்னப்பன்.

துளசியின் படத்தை முதல் பக்கத்திலேயே வெளியிட்டு, ‘தங்கப் பெண்’ என்று அவளுக்குப் பட்டம் சூட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்களை ஈட்டி வந்ததற்காக ‘ஓகோ’ என்று பாராட்டி எழுதியிருந்தது அந்த நாளிதழ்.

ஆட்சித் தலைவர், துளசியைத் தன்னருகில் வருமாறு அழைத்தார். “உன் படிப்பு பற்றியும் உன் சாதனை பற்றியும் எனக்குத் தெரியும். விவரமா அரசாங்கம் எழுதியிருக்கு. நான் கேட்குற கேள்விகளுக்கு ஒளிக்காம பதில் சொல்லணும். நீ தகாத முறையில் ஊரைவிட்டு ஓடிப் போனதா உன் அப்பா சொல்லுறார். ஊரும் அதை நம்புது. இதுக்கு நீ எழுதி வைச்சிட்டுப் போன கடிதத்தைத் தவிர வேறே ஆதாரம் இல்ல. இப்படியொரு கடிதத்தை நீ ஏன் எழுதணும்? நீ ஒருத்தரை காதலிச்சதும், அவரோட ஓடிப்போனதும் உண்மைதானா? உன் படிப்புச் செலவுக்கு உதவினது அவர்தானா? ஒரு வேளை அப்படி ஏதும் நடக்கலேன்னா, நீ கல்லூரியில் சேர்ந்து படிச்சது எப்படிச் சாத்தியம் ஆச்சு? இதையெல்லாம் மறைக்க வேண்டிய அவசியம் என்ன? நடந்ததை எல்லாம் விளக்கமா சொல்லும்மா” என்று ஆதரவான வார்த்தைகளைச் சொல்லி, பரிவுடன் துளசியைப் பார்த்தார்.

துளசி சொன்னாள்: “என் அப்பாவுக்கு என் மேல கொள்ளைப் பிரியம். அவர் வாழ்ந்ததே எனக்காகத்தான்னு சொல்லலாம். அப்பேர்ப்பட்டவர் நான் மேல் படிப்புக்கு ஆசைப்பட்டபோது சம்மதிக்கல. காரணம், ஒரு பணக்காரக் குடும்பத்தோட ‘சம்பந்தம்’ வைச்சிக்க வாய்ப்புக் கிடைச்சதுதான். அந்த வாய்ப்பை நழுவவிட அவர் தயாராயில்ல.....

.....படிப்பிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் சாதனைகள் புரியணும்கிறது என் கனவு. அது மலரத் தொடங்கியபோதே கருக ஆரம்பிச்சதால பல நாள் அழுதேன். ரொம்பவே யோசிச்சி ஒரு முடிவுக்கு வந்தேன்.....

.....என் முன்னேற்றத்தில் அக்கறையும் என் திறமையில் அழுத்தமான நம்பிக்கையும் வைத்திருந்த பள்ளித் தலைமை ஆசிரியரைச் சந்திச்சி என் திட்டத்தைச் சொன்னேன். முதலில் தயங்கினாலும் அப்புறம் சம்மதிச்சார்.....

.....என் பாதுகாப்பாளராப் பொறுப்பேத்துகிட்டு, சென்னைக் கல்லூரி ஒன்றில் சேர உதவினார். மாணவியர் தங்கும் விடுதியிலும் இடம் கிடைச்சுது. அரசு தந்த உதவித்தொகை போதுமானதா இருந்துது. பற்றாக்குறைக்கு அப்பா செய்து போட்ட நகைகளைப் பயன்படுத்திகிட்டேன். சென்னை இங்கிருந்து வெகு தொலைவில் இருப்பதால் என்னைப் பத்தி எந்தவொரு தகவலும் இந்தக் கிராமத்தை எட்டல. என் அப்பாவின் சுகத்தைப் பத்தித் தலைமை ஆசிரியர் அப்பப்போ தகவல் தந்தார்.....

.....படிப்பு, தீவிர விளையாட்டுப் பயிற்சின்னு, இந்த ரெண்டையும் தவிர வேற சிந்தனையே எனக்கு இருந்ததில்ல. நான் கண்ட கனவுகளில்கூட பட்டங்களும் தங்கப் பதக்கங்களும்தான் வந்து போச்சு. எப்படியோ, நான் நினைச்சதை ஓரளவுக்குச் சாதிச்சிருக்கேன். ரெண்டொரு மாதங்களில் மூனு வருசப் படிப்பு முடிஞ்சுடும். மேல் படிப்புப் படிக்கணும்கிற ஆசையும் இருக்கு” என்றிவ்வாறு துளசி சொல்லி நிறுத்தியபோது ஆட்சித் தலைவர் சிரித்துக்கொண்டே சொன்னார்: “நீ எழுதி வைத்துப்போன கடிதம் பத்தியும் கொஞ்சம் சொல்லிடு.”

துளசியின் முகத்தில் மெல்லிய நாணம் படர்ந்தது. “கடிதத்தில் எழுதியிருந்தது அப்பட்டமான பொய். காதல் கல்யாணம் பத்தியெல்லாம் நான் யோசிச்சதே இல்ல. அப்பா என்னைத் தேடிக் கண்டுபிடிச்சிக் கல்யாணம் செய்து வைக்கும் முயற்சியைத் தடுக்கத்தான் இப்படியொரு தந்திரத்தைக் கையாண்டேன். எனக்கு நானே அவப்பெயர் சுமத்திகிட்டேன்.....

.....ஆசியப் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் கிடைச்ச அப்புறம்தான் கல்லூரிக்கும் அரசாங்கத்துக்கும் பத்திரிகைகளுக்கும் என் சொந்த முகவரியைக் கொடுத்தேன்” என்று சொல்லி முடித்துச் சற்றே நிதானித்த துளசி, சின்னப்பனை அணுகி, “உங்களைத் தனியாக் கிடந்து தவிக்க விட்டுட்டேன். ரொம்பப் பெரிய தலைக்குனிவை உண்டுபண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்கப்பா” என்றவாறு அவன் கால்களில் விழுந்து வணங்கினாள்.

“இந்தத் தலைக்குனிவு தற்காலிகம்தான். உன்னைப் பெத்ததுக்காக இனி எப்போதும் அவர் தலை நிமிர்ந்துதான் இருக்கும்” என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சொன்னபோது ஊர் மக்கள் எழுப்பிய கரவொலி வானவெளியெங்கும் பரவியது.

கட்டுக்கடங்காத பெருமிதம் சின்னப்பனின் நெஞ்சமெல்லாம் நிரம்பியது.
========================================================================

திங்கள், 18 மே, 2020

சிறுகதைப் போட்டியில் அடியேனுக்கு முதல் பரிசு[ரூ5000/=] பெற்றுத்தந்த கதை!

முன்னொரு காலத்தில்[1992ஆம் ஆண்டு] ‘ராணி’ வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு[ரூ5000/=] வென்ற படைப்பு இது]
[நன்றி: ‘ராணி’ வார இதழ்]
விடிந்தும் விடியாததுமாக ஏர்மாடுகளுடன் உழவு வேலைக்குப் புறப்பட்டுப்போன சின்னப்பன், போன சுருக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அவன் கையில் நீண்ட பெரிய வெட்டரிவாள் இருந்தது.

அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்னால் ஓடிவந்துகொண்டிருந்த கோவணம் கட்டிய சிறுவனிடம், “ஏண்டா அப்பு, அந்தச் சிறுக்கியோட வேற யாரும் வந்திருக்காங்களா?” என்றான்.

“வேற யாரும் இல்ல.”

“டேய், வந்த வேகத்தில் ஓடுடா. ஓடிப்போய் நான் அங்கே வர்றதுக்குள்ளே அவள் ஊரைவிட்டே ஓடிப்போயிடணும்னு சொல்லு. என் கண்ணுல பட்டா, கண்டதுண்டமா அந்த ஓடுகாலியை வெட்டிப் போட்டுடுவேன் அப்படீன்னும் அவகிட்ட சொல்லு.”

நீண்டு தொங்கும் பின்புறக் கோவணத் துணி, பட்டத்து வாலாய்க் காற்றில் படபடக்கத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு ஓடினான் பொடியன்.

விதம் விதமான எண்ணங்கள் சின்னப்பனின் நெஞ்சத்தில் முகாம் அமைத்துப் போரிடலாயின. வேதனையை விழுங்கி விழுங்கி விரக்தி அடைந்துவிட்ட நிலையில் அவனின் உதடுகள் முணுமுணுத்தன. “என்னிக்கிக் காதல் கத்தரிக்காயின்னு காயிதம் எழுதி வைச்சிட்டு எவனோ ஒரு காலிப்பயலோட ஊரை விட்டு ஓடிப்போனாளோ, அன்னிக்கே அவளைத் தலை முழுகிட்டேன். கருமாதி, கல்லெடுப்பு எல்லாமே செஞ்சி முடிச்சிட்டேன். இவ திரும்பி வரலேன்னு யாரு அழுதா? ஓடிப்போனவ அப்பிடியே ஒழிஞ்சி போக வேண்டியதுதானே. இப்போ எதுக்கு இங்கே வந்திருக்காளாம்? அப்பன் உயிரோடு இருக்கானா, செத்து ஒழிஞ்சிட்டானான்னு தெரிஞ்சிகிட்டுப் போகவா?.....”

“ஏண்டா சின்னு, என்னடா ஆச்சி உனக்கு? ஒத்தை ஆளாப் பேசிகிட்டுப் போறே” என்ற கேள்வி அவனின் செவிப்பறையைத் தட்டித் திடுக்கிட வைத்தது.

வழியை அடைத்துக்கொண்டு நின்றாள் பால்காரக் கிழவி பவளாயி. “ஓடிப்போன உன்னோட மவ ஒண்டிக்கட்டையாத் திரும்பி வந்திருக்காளாமே, ஏண்டா? திருட்டு மாம்பழம் பறிச்சவன், சூப்பி முடிச்சித் தூன்னு துப்பிட்டுப் போய்ட்டானா?” என்றாள் எகத்தாளமாக.

கிழவியின் உள்ளர்த்தம் பொதிந்த கேள்விக்குச் சின்னப்பனால் பதில் தர இயலவில்லை. அந்த இயலாமை, அவனுள் கனன்றுகொண்டிருந்த கோபத் தீயில் குடம் குடமாய் நெய் சொரிந்துவிட்டது.

“சோறூட்டிச் சீராட்டி வளர்த்த இந்தக் கையாலயே அவளை வெட்டிப் போட்டுடப் போறேன். நீ வேணும்னா வந்து பாரு.” -அரிவாளின் கூர்முனையை நோட்டம் இட்டவாறே நடந்தான் சின்னப்பன்.

சின்னப்பன், பாசம் என்ன விலை என்று கேட்கும் நீசன் அல்ல. ஐந்து வயதில் தாயை இழந்த தன் மகள் துளசிக்குத் தாயாகவும் மாறிப் பாசத்தை ஊட்டி வளர்த்தவன்; அவள் விழிகளில் கண்ணீர் முத்துக்கள் சிந்தக் கூடாது என்பதற்காகக் காலமெல்லாம் வேர்வை முத்துக்களைச் சிந்தியவன்; அவள் ஆசைப்பட்டதையெல்லாம் நிறைவேற்றுவதற்காக ஆசைப்படுவதையே விட்டொழித்தவன்.

துளசியும் நல்ல பெண்தான்; சுட்டிப் பெண்ணும்கூட. ஆறு வயதில் சமையல் கட்டில் அப்பனுக்கு உதவி செய்தாள்; ஏழு முடிந்து எட்டு எடுத்தபோது அவனை உதவிக்கு வைத்துக்கொண்டாள்; அடுத்துவந்த ஆண்டுகளில் எச்சில் தட்டு அலம்பும் வேலையைக்கூட அவனுக்கு விட்டுவைக்கவில்லை.

துளசி ஒரு வித்தியாசமான பெண்ணும்கூட. வெற்று அரட்டை, வீண் வம்பு போன்றவை அவளின் பண்புக்கு ஒத்துவராதவை. உயர்வான எண்ணம், உபயோகமான பேச்சு, ஓயாத உழைப்பு ஆகியவற்றின் இலக்கணமாகத் திகழ்ந்தாள் அவள்.

வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டே பள்ளிப் படிப்பை முடித்தாள். கல்லூரியில் சேர அவள் ஆசைப்பட்டபோது அப்பன்காரன் அதை நிராகரித்தான். நொறுங்கிப்போனாள்.

அவளின் படிப்புக்கு சின்னப்பன் முற்றுப்புள்ளி வைத்ததற்குக் காரணம் இல்லாமலில்லை. அவளின் அழகிலும் குணத்திலும் முழு நிறைவைக் கண்ட உள்ளூர்ப் பணக்காரர் ஒருவர், வரதட்சணை இல்லாமல் அவளைத் தன் மருமகள் ஆக்கிக்கொள்ள முன்வந்தார். தன் செல்ல மகளுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டதென்று திடமாக நம்பியதால், துளசியின் கெஞ்சு மொழிக்கும் சிந்திய கண்ணீருக்கும் அவன் மசியவே இல்லை.

“நிறையப் படித்து, நிறையச் சாதித்து ஒரு வேலையும் கிடைத்த பிறகு திருமணம் செய்துக்கிறேன். என்னைப் படிக்க விடுங்கள்” என்று துளசி எவ்வளவோ மன்றாடியும் அவன் அசைந்து கொடுக்கவில்லை.

நாள் குறிக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், ‘கரையில்லாத கல்வியின் மீது நான் கொண்ட வரம்பில்லாத காதலுக்குத் தாங்கள் தந்த பரிசோ தரம் இல்லாத வசைமொழிகள். நான் காளை ஒருவன் மீது காதல் கொண்டுவிட்டேன் என்று நான் சொன்னால் நீங்கள் வாழ்த்தவா போகிறீர்கள்? என் மனம் கவர்ந்த ஒரு நல்லவருடன் ஊரைவிட்டே போகிறேன்’ என்று எழுதி வைத்துவிட்டு, ஒரு நாள் ஓடிப்போனாள் துளசி.

அன்று போனவள் கொஞ்சம் ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் திரும்பி வந்திருக்கிறாள்.

சின்னப்பன் எல்லையம்மன் கோயிலைக் கடந்து ஊருக்குள் நுழைந்தபோது, ஊர் நாட்டாண்மை எதிர்ப்பட்டார். “ஓடிப்போன உன் பொண்ணு திரும்பி வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆத்திரத்தில் ஒன்னு கிடக்க ஒன்னு செஞ்சிடாதே. அவ எங்கே போயிருந்தா, எவனோட போயிருந்தாங்கிற விசயத்தை விசாரிச்சி வை. அடுத்து ஆகவேண்டியதைப் பஞ்சாயத்தில் பேசி முடிவு பண்ணுவோம்” என்று கட்டளையிடும் தோரணையில் சொல்லிவிட்டுப் போனார்.

ன்னை நேரில் பார்க்கும்போது பெற்றவனின் சீற்றம் தணிந்துவிடும் என்ற துளசியின் கணிப்பு முற்றிலுமாய்ப் பொய்த்துப் போனது.

“என்ன தைரியத்தோட நீ இந்த வீட்டு வாசல்படி மிதிச்சே? என்கிட்டே கொஞ்சமாவது பயம் இருந்தா ஓடிப்போயிடுன்னு சொல்லி அனுப்பியும் இங்கே நெடுமரமா நின்னுட்டிருப்பே? இப்பவும் சொல்லுறேன், இனி ஒரு வினாடிகூட என் கண் முன்னால நிற்காதே” என்று மகளைக் கண்டதும் ஆவேசமாகக் கூச்சலிட்டான் சின்னப்பன்.

அப்பன்காரனின் கோபம் எத்தனை பொல்லாதது என்பது துளசிக்குத் தெரியும். இருந்தும் அசையாமல் நின்றாள். “அப்பா, தயவு செஞ்சி நான் சொல்ல வர்றதை.....”

“என்ன சொல்ல வர்றே? நான் காதல் பண்ணிக் கட்டிக்கிட்டவன் பெரிய லட்சாதிபதியாக்கும். காரும் பங்களாவும் கழுத்து நிறையத் தங்க நகையுமா சந்தோசத்தில் மிதக்குறேன்னு சொல்ல வர்றியா?

“அதில்லப்பா, நான் சொல்லப்போறது.....”

“வேறென்ன சொல்லப்போறே, நடந்தது நடந்துபோச்சு. மன்னிச்சுடுங்கப்பான்னு சொல்லுவே. இல்லேன்னா, நான் மோசம் போய்ட்டேன். வாழ வைக்கிறேன்னு கூட்டிட்டுப் போனவன் வாழாவெட்டியா விரட்டியடிச்சிட்டான்னு சொல்லுவே. வேற என்ன சொல்லப்போறே? நீ சொல்லுற எதையும் காது குடுத்துக் கேட்க நான் தயாரா இல்ல” என்ற சின்னப்பன் வெறி ஏறிய நிலையில் அரிவாளுடன் மகளை நோக்கிப் பாய்ந்தான்.

ஒப்புக்குக்கூட ஒரு சமாதானக் குரல் கொடுக்காமல், நடிப்புக்குக்கூட ஒரு குறுக்கீடு செய்யாமல் ஒட்டுமொத்த ஊர் மக்களும் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்த வேளையில்.....

.....தொடரும்[அடுத்த பதிவில் முற்றுப்பெறும்]
========================================================================