எனது படம்
எந்தவொரு கட்சி சார்பாகவும் தேர்தலில் போட்டியிடுகிறவனின் தனிப்பட்ட குறை நிறைகளைப் பொருட்படுத்தாமல், இந்நாளில் அவன் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளுக்காவே வாக்குரிமை பெற்ற நம் மக்கள் அவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல், ஆதாயம் கருதிப் பிறிதொரு கட்சிக்கு[குறிப்பாக ஆளுங்கட்சி] ஆதரவாகச் செயல்பட்டால், தன் கட்சிக்கு மட்டுமல்லாமல், வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்தவன் ஆகிறான் அவன். அந்த அயோக்கியன் தாலி கட்டிய தன் பெண்டாட்டிக்குக்கூடத் துரோகம் செய்யத் தயங்கமாட்டான்!

வியாழன், 30 ஏப்ரல், 2026

இதயத் துடிப்பு 'திடீர்’ நிறுத்தம்[Sudden Cardiac Arrest]?

க்கள் பெரும்பாலும் மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, இதயத் துடிப்பு ‘திடீர்’ நிறுத்தம் ஆகிய சொற்களை ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்துகின்றனர். இந்த இதயச் சிக்கல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாக இருந்தாலும், இவை மூன்றும் வேறு வேறானவை.

மாரடைப்பு[Heart Attack]: இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இரத்தக் கட்டிகள், தமனித் தடிப்பு, கொழுப்புப் படிவுகள் ஆகியவை தமனிகளை அடைத்து மாரடைப்புக்கு வழிவகுக்கின்றன.

மாரடைப்பின்போது, இதயம் தொடர்ந்து துடிக்கும். ஆனால், ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் அந்த உறுப்பை அடைய முடியாது. ஒருவர் சிகிச்சை பெறாமல் எவ்வளவு காலம் இருக்கிறாரோ, அந்த அளவிற்கு இதயத்திற்குச் சேதம் அதிகமாகும்.

இதன் அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபடலாம். அறிகுறிகளில் மார்பு வலி, மூச்சுத் திணறல், குளிர் வியர்வை, குமட்டல், வாந்தி ஆகியவை அடங்கும்.

இதயச் செயலிழப்பு[Heart Failure]: இதயத்தால் உடல் முழுவதும் போதுமான இரத்தத்தைச் செலுத்த இயலாத நிலை 'இதயச் செயலிழப்பு' எனப்படுகிறது.

கரோனரி தமனி நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவை இதயச் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும்.

இதயத்தின் ‘இரத்தத்தை உந்தித் தள்ளும் திறன்’ குறையும்போது, இரத்தமும் திரவமும் நுரையீரலுக்குள் பின்னோக்கிச் செல்லக்கூடும். இதன் விளைவு பாதங்கள், கணுக்கால்கள், கால்கள் ஆகியவற்றில் வீக்கம் ஏற்படலாம்.
இதயத் துடிப்பு ‘திடீர்’ நிறுத்தம்[Sudden Cardiac Arrest]: இது இதயத்தின் மின் சமிக்ஞைகளில் ஏற்படும் குழப்பத்தால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாக ஆகி, இதயம் ரத்தத்தைப் பம்ப் செய்யாமல் நடுங்கும் நிலையாகும்.

அரித்மியாஸ் எனப்படும் அசாதாரண இதயத் துடிப்புகள், இதயம் மிக வேகமாகவோ, மிக மெதுவாகவோ துடிக்க அல்லது முற்றிலும் துடிப்பதை நிறுத்தக் காரணமாகலாம்.

அரித்மியாவால் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக, இதயம் முற்றிலும் துடிப்பதை நிறுத்தும்போது, அது இதயத் துடிப்பு ‘திடீர்’ நிறுத்தம் என்று அழைக்கப்படுகிறது.

இதனுடன் தொடர்புடையவை: கரோனரி இதய நோய், உடல் ரீதியான மன அழுத்தம், பரம்பரைக் கோளாறுகள் ஆகியவை. அறியப்படாத காரணமின்றியும் இதயத் துடிப்பு ‘திடீர்’ நிறுத்தம் ஏற்படலாம். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இதயத் துடிப்பு நிறுத்தம் ஏற்பட்ட ஒருவர் சில நிமிடங்களில் இறந்துவிடுவார்.
இதயத் துடிப்பு நின்றதற்கான அறிகுறிகள்: சுயநினைவு இழப்பு, சுவாசிக்க இயலாமை. விரைவாகச் சிகிச்சை அளித்தால், நின்றுவிட்ட இதயத் துடிப்பைச் சரிசெய்ய இயலும்.

=====================

புதன், 29 ஏப்ரல், 2026

என் படைப்புகளைப் பிரபலப்படுத்தும் 'Quora' பதிவருக்கு நன்றி!

கந்தன் ஸ்ரீ [பல்சுவை கதம்பம்[https://kantan.quora.com/]

Innovave Goods-இல் Operation Manager20 ஏப்.

*கடவுள்*

ஆசிரியர்: 'பசி'பரமசிவம்

பகிர்வு: அ.கந்தன்

🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷

கேடுகெட்ட மானிடரே![&*கோயிலுக்கா போகிறீர்கள்.....? கொஞ்சம் நில்லுங்கள்!* &*கடவுளைக் காக்கும் தாய்க்குலம்!* ... போன்றவை] 

*பிறவி ஏன்? இன்ப துன்பங்கள் ஏன்? மரணம் ஏன்?*

மனிதனுக்குச் சிந்திக்கும் திறன் வாய்க்கப் பெற்ற அந்த நாள் முதல் இந்த நாள் வரை இக்கேள்விகளுக்கு விடையில்லை.

பஞ்ச பூதங்கள் ஏன்? பிரபஞ்சம் ஏன்? உலகங்கள் ஏன்? உயிர்கள் ஏன்?...... என்றிப்படி மனித அறிவால் விடை காண முடியாத ஏன்கள் எத்தனையோ உள்ளன.

நடுநிலை பிறழாமல், ஆழ்ந்து சிந்திக்கத் தெரிந்த அறிவியல் அறிஞர்கள் பலரும், சிந்தனையாளர்களும் தருகிற ஒரே பதில்.....

“தெரியவில்லை” என்பதுதான்.

மனித உருவில் பிறந்து வாழும் அத்தனைப் பேரும் மனிதர்கள்தான்; விதி விலக்கானவர் எவருமில்லை.

நாம் எல்லோருமே உண்பதும் உறங்குவதுமாய் வாழ்ந்து ஒரு நாள் மண்ணில் கலப்பவர்கள்தான்.

அதன் பிறகு என்ன ஆவோம் என்பது யாருக்கும் தெரியாது.

எனவே,

சிறு நீர் பெய்து மலம் கழித்து வாழ்ந்த மனித ஜென்மங்களை மகான்கள் என்றும், கடவுளின் அவதாரங்கள் என்றும் போற்றித் துதி பாடியவர்கள்... பாடுபவர்கள் மனித சமுதாயத்தின் விரோதிகள்.

அவர்கள் திருத்தப்படுதற்கு உரியவர்கள்.

*தொடரும்*

'Quora' பதிவர்:

கந்தன் ஸ்ரீ

கல்லிடைக்குறிச்சி

Innovave Goods-இல் Operation Manager

Govt her sec school-இல் படித்தார்; 1989 ஆண்டு பட்டம் பெற்றார்

வசிக்கும் இடம்: கோயம்புத்தூர் நகரம், தமிழ்நாடு, இந்தியா2024–தற்போது வரை

7.9மி உள்ளடக்கப் பார்வைகள். இந்த மாதம் 83.6ஆ

இவர் 41 களங்களில் செயல்படுகிறார்.

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

நடிகர் ‘விஜய்’யின் அரியணை ஆசையும் சர்வமதப் பக்தியும்!!!

//‘த.வெ.க.’ தலைவர் பட்டு வேட்டி, சட்டை அணிந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்றார். இன்று அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடைபெற்ற சிறப்புத் தரிசனமான விஸ்வரூப தரிசனத்தை விஜய் கண்டு களித்தார்//[இது இன்று ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ள செய்தி].

நடிகரான ‘விஜய்’யும் இந்த நாட்டின் குடிமகன்தான் என்பதால், ஒரு கட்சியைத் தொடங்கித் தலைவன் ஆவதற்கோ, தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றுவதற்கோ முழு உரிமை உண்டு.
கட்சித் தலைவன் ஆவதற்கு முன்பு ஏதாவதொரு கட்சியின் தொண்டனாக இருந்திருப்பது கட்டாயம் இல்லை. ஆட்சிப் பீடம் ஏறுவதற்கும் அதற்கான முன் அனுபவம், சிறப்புத் தகுதிகள் என்று எதுவும் தேவையில்லை.

மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தால், அறிவு ஜீவியோ அடிமுட்டாளோ எவர் வேண்டுமானாலும் ஒரு மாநிலத்தின் முதல்வராக[அல்லது பிரதமர்> இதற்கு முன்னுதாரணம் உண்டு] ஆகலாம்.

நடிகர் விஜய்க்கும் அதற்கான தகுதி உண்டு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால்,

ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவராக இருந்து, எதிர்பாராத விதமாக வேறொரு மதத்தைத் தழுவுவது, பல மதக் கடவுள்களையும் வழிபடும் ஆகச் சிறந்ததொரு சர்வ மதப் பக்தனாக ஆகிவிடுவது எல்லாம் அத்தனை எளிதல்ல.

இதற்குக் கடவுள், மதங்கள் குறித்த ஆழ்ந்த சிந்தனையும் அதன் மூலம் பெற்ற நன்கு பக்குவப்பட்ட மனமும் தேவை.

இவ்வாறானதொரு மனப்பக்குவத்தைக் கடந்த காலத்தில் நடிகர் விஜய் பெற்றிருந்தார் என்பது இவரின் செயல்பாடுகளால் அறியப்படவில்லை.

இவர் கிறித்தவர் மட்டுமல்லாமல் இந்துவாகவும் இஸ்லாமியராகவும் தன்னை அடையாளப்படுத்தியிருப்பது அண்மைக்கால நிகழ்வுதான்.

இவரின் இந்த அதிசய மாற்றத்திற்கான காரணம் பதவி ஆசை.

இந்த அற்ப ஆசையெல்லாம் இவருக்கு இல்லை; மக்களுக்குப் பணி செய்ய வேண்டும் என்னும் பரந்த மனத்தவர் இவர் என்றால்.....

கர்த்தரும், அல்லாவும், கணக்கிலடங்காத இந்துமதக் கடவுள்களும் இந்தப் பிரபல நடிகரை ஆசீர்வதிப்பார்களாக!

திங்கள், 27 ஏப்ரல், 2026

அறிவியல் துறையில் ஆத்திகரா நாத்திகரா யார் அதிகம்?

Google> Ask Gemini[AI Mode] பதில்:

அறிவியல் துறையில் ஆத்திகரா அல்லது நாத்திகரா யார் அதிகம் என்பது ஆய்வு செய்யப்பட்ட நாடு மற்றும் அறிவியல் பிரிவைப் பொறு[ரு]த்து மாறுபடுகிறது.

பொதுவாக, பொதுமக்களுடன் ஒப்பிடும்போது விஞ்ஞானிகளிடையே நாத்திகம் அல்லது மதச்சார்பின்மை அதிகம் காணப்படுகிறது. இருப்பினும், உலகளவில் பார்த்தால் அனைத்து விஞ்ஞானிகளும் நாத்திகர்கள் அல்ல. 

அமெரிக்கா: Pew Research Center நடத்திய ஒரு ஆய்வின்படி, சுமார் 51% விஞ்ஞானிகள் கடவுள் அல்லது ஒரு உயர் சக்தியை நம்புகின்றனர்(ஆத்திகம்/ஆன்மீகம்). மீதமுள்ள 41% பேர் எதையும் நம்பாதவர்கள்(நாத்திகம்).

இயற்பியல் மற்றும் வானியல் துறையில் இருப்பவர்கள் குறைவான கடவுள் நம்பிக்கை(29%) கொண்டவர்களாகவும், வேதியியல் துறையில் இருப்பவர்கள் அதிக நம்பிக்கை(41%) கொண்டவர்களாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எலைட் விஞ்ஞானிகள்: அமெரிக்காவின் புகழ்பெற்ற 'தேசிய அறிவியல் அகாடமி'(National Academy of Sciences) உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 93% பேர் நாத்திகர்களாகவோ அல்லது அறியொணாவாதிகளாகவோ(Agnostics) உள்ளனர். உயர்மட்ட விஞ்ஞானிகளிடையே நாத்திகம் மிக அதிகமாக உள்ளது.

இந்தியா மற்றும் பிற நாடுகள்: உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது, பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் மிகக் குறைந்த மத நம்பிக்கையுடனும், இந்தியா & துருக்கி நாட்டு விஞ்ஞானிகள் அதிக மத நம்பிக்கையுடனும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

சுருக்கமாகச் சொன்னால், சாதாரண விஞ்ஞானிகளிடையே ஆத்திகம் மற்றும் நாத்திகம் ஏறக்குறைய சமமாகவோ அல்லது ஆத்திகம் சற்று அதிகமாகவோ உள்ளது. ஆனால், உலகத்தரம் வாய்ந்த மிகச்சிறந்த விஞ்ஞானிகளிடையே நாத்திகமே பெருமளவில் காணப்படுகிறது.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

சிற்றின்பமும் சிறு சிறு பேரின்பங்களும்!!!

சிற்றின்பம்?

ஆண்-பெண் இணைந்து பெறும் இன்பத்தைத்தான் சிற்றின்பம் என்றார்கள் நம் முன்னோர்கள்.

சிறிது நேரம் மட்டுமே[அதிக நேரம் ஆக்குவதற்கு ஆண்கள் படாத பாடெல்லாம் படுகிறார்கள்] அனுபவிப்பதோ, இதன் பொருட்டு எதிர்கொள்ளும் இடையூறுகளோ ஏராளமான துன்பங்களோ இதற்கான காரணங்கள் ஆகும்.

இதற்கு மாற்றாக, கடவுளைக் கற்பித்து அவரை வழிபடுவதன் மூலம் பெறும் இன்பம்தான் ‘பேரின்பம்’ என்றுசொல்லித் திருப்தி காண்டார்கள்; காண்கிறார்கள் நம் மக்கள்.

உண்மையில் பேரின்பம் என்று எதுவும் இல்லையாயினும், கீழ்க்காணும் வகைகளில், இடர்ப்பாடுகளோ பெருந்துயரங்களோ இல்லாமல் நாம் பெரும் இன்பங்களைச் ‘சிறு சிறு பேரின்பங்கள்’ என்று சொல்லி மனநிறைவு பெறலாம்.

எளிமையான கொஞ்சம் எடுத்துக்காட்டுகள்:

*சாலை ஓர மர நிழலில் நின்றுகொண்டு வாகனங்களில் பயணிக்கும் விதம் விதமான மனிதர்களையும், வினோதமான நிகழ்வுகளையும் வேடிக்கை பார்க்கலாம். சூழலைப் பொருத்து நாம் பெறுவது இன்பமாகவோ பேரின்பமாகவோ அமையும்.

*காலையில் காபியோ தேநீரோ குடிக்கிற பழக்கம் இருப்பவர்கள், ‘மடக் மடக்’ என்று ஒரே மூச்சில் குவளையைக் காலி செய்யாமல், மெல்ல, மிக மெல்லச் சுவைத்தால் பெறுவது இன்பம்; அதிக நேரம் சுவைக்கும்போது அது பேரின்பமாக மாறுகிறது.

*பூங்காவுக்குச் சென்று[+கடற்கரை> இருந்தால்] தனிமையில் அமர்ந்து மனதுக்குப் பிடித்த பாடல்களை[திரைப்படப் பாடல்களோ பக்திப் பாடல்களோ] வாய்விட்டுப் பாடுவது இன்பம். மனம் ஒன்றிப் பாடினால் அது பேரின்பம் எனப்படும்.


*ஓவியங்கள் வரைவதும், கதைகளும் கவிதைகளும் எழுதுவதும் இன்பம். அவை பிறரால் பாராட்டப்படும்போது பெறுவது பேரின்பம்.


*மலைப் பிரதேசங்களுக்குச் சென்று[கொஞ்சம் பணச் செலவை பொருட்படுத்த வேண்டாம்> கோடிக்கணக்கில் செலவு செய்து இல்லறவாசி ஆகி, கணவனும் மனைவியும் மனம் ஒத்து வாழ்ந்தால்[மட்டுமே] பெறும் சிற்றின்பத்தை ஒப்பிடுக], ஆசை தீர இயற்கை அழகை ரசிப்பது பேரின்பம்.


*எதிர் வீட்டுக் குழந்தைகளின் அழகையும், அவை செய்யும் குறும்புத்தனங்களையும் பார்த்துப்  பார்த்துச் சுகிப்பது பெரும்பேரின்பம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.


*பணி நிமித்தம் எங்கெல்லாமோ அலைந்து திரிந்ததில் தாகம் அதிகரித்து,  நம் பிரியத்திற்குரிய குளிர்பானத்தை வாங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக் குடித்தால், நீண்ட நேரம் சொர்க்கத்தில் உலவிவிட்டு வந்த அனுபவம் கிடைக்கும்.


*நான்கு பேர் சுற்றியிருக்கும்போது மறைவிடங்களில் அரிப்பு எடுத்தால், கட்டுப்படுத்த இயலாமல் கொஞ்சம் மறைவான இடத்திற்குச் சென்று, பொறுமையாகச் சொறிந்துகொள்வதும்கூட ஒரு வகைப் பேரின்பமே.


கொஞ்சம் யோசித்தால், ஆணோ பெண்ணோ, பிறிதொருவரைச் சார்ந்திராமல், இவ்வாறான பேரின்பங்களைப் பெறுவதற்கான வழிகள் நிறையவே தென்படும்.


இம்மாதிரியான இன்பங்களைத் துய்க்கப் பழகினால், இல்லற வாழ்க்கையில் பெறும் துயரங்கள் குறைந்து, ஓரளவுக்கேனும் மன நிறைவுடன் வாழ்வது சாத்தியமாகும்.


‘எல்லோரும் இவ்வாறான சிறு சிறு பேரின்பங்களை அனுபவிப்பது அதிகரித்தால், சிற்றின்ப[ஆண்-பெண் உடலுறவு] ஈடுபாடு குறையும்; காலப்போக்கில் மனித இனமே அழிந்துவிடும்’ என்று எவரும் கவலைப்பட வேண்டாம்.


கவலைப்பட வேண்டியவர் அனைத்தையும் படைத்தவர் என்று சொல்லப்படும் கடவுள் மட்டுமே! ஹி... ஹி... ஹி!!!

சனி, 25 ஏப்ரல், 2026

தமிழ்நாடு 2026 தேர்தல்... யார் அந்த ‘24 லட்சம்’ பேர்?!

தமிழ்நாட்டில் ‘2021 தேர்தலைவிடவும் 2026 தேர்தலில், 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதிகமாக வாக்களித்திருக்கிறார்கள்’ என்பது செய்தி. 

இந்த அதிகரிப்புக்கு, முதல் முறையாக வாக்குரிமை பெற்ற இளசுகள் ஆர்வத்துடன் வாக்களித்தது ஒரு காராணமாக இருக்கக்கூடும்.

முன்பெல்லாம் தேர்தலை அலட்சியம் செய்தவர்கள் விழிப்புணர்வு பெற்று இப்போது வாக்களித்திருக்கலாம்.

நடிகர் ‘விஜய்’யின் ரசிகர்கள் வாக்களித்ததாலும் பதிவின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வாய்ப்புண்டு.

மேற்கண்ட காரணங்களில் முதலிரண்டை ஒதுக்கி, அந்த 24 லட்சத்தில் பெரும்பாலோர் நடிகரின் ரசிகர்களே என்று சிலர் சொல்வது அபத்தமானது. அவர்களின் அதிகப்பட்ச எண்ணிக்கை சுமார் 2 லட்சங்களாக வேண்டுமானால் இருக்கலாம்.

எது எப்படியோ, புதிதாக வாக்களித்த 24[-2 லட்சம்] லட்சம் பேரும் யாருக்கெல்லாம் ஆதரவாக வாக்களித்திருப்பார்கள் என்னும் கேள்வி தவிர்க்க இயலாதது.

நம் கணிப்பு:

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ‘அதிமுக’ கூட்டணியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி(பாஜக> மொத்தம் 4 இடங்களைக் கைப்பற்றியது]. பெற்ற மொத்த வாக்குகள் சுமார் 12,13,510.

மாநிலங்களின் உரிமைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பறித்துவரும், ஒன்றியத்தை ஆளும் இந்த ஆதிக்க வெறிப் பாஜக சங்கிகள் செய்யும் அடாவடித்தனங்களால், அவர்களை 2021இல் ஆதரித்த 12 லட்சம்[+13 510] பேர் மட்டுமல்லாமல், புதிதாக ஏறத்தாழ 24 லட்சம்[-2 லட்சம்] பேர், மாநில உரிமைகளைத் தக்கவைக்கப் போராடும் கட்சிகளுக்கு வாக்களித்தது பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மேற்கண்டவாறு அதிகரிக்கக் காரணம் ஆகும். 

இந்த என் கணிப்பு மெய்ப்பிக்கப்படுதல் வேண்டும்மென்பது என் ஆசை. உங்களின் ஆசையும் இதுவாகத்தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை!

ஹி... ஹி... ஹி!!!

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

‘ஜால்முரி’ என்னும் கார உணவும் நம் பிரதமரின் அபார அறிவும்!!!

டந்த வாரம் ஜார்கிராமில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு கடையில், வங்காளத்தில் பிரபலமான தெருவோர உணவான ஜால்முரி[jhalmuri] சாப்பிட்டாராம் நம் பிரதமர் மோடி.

அப்போது அவர், “நான் ஜால்முரி சாப்பிட்டதால், அதன் காரம்[ஜால்] திரிணாமுல் கட்சியைத் தாக்கியது; அதற்கு வலித்தது" என்று கூறி, மம்தா பானர்ஜியின் கட்சியைப் மறைமுகமாகச் சாடினாராம். இது ஒரு செய்தியாக ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பூட்டியது என்பது செய்தி*

ஒரு கார உணவைச் சாப்பிடும்போது அதில் காரம் அதிகம் இருந்தால், சாப்பிடுபவருக்குப் பல கெடுதல்கள்[கார உணவு அளவோடு இருந்தால் நன்மைகள் விளைவதுண்டு] உண்டாகும்; காரம் காற்றில் பரவுவதால், சில நேரங்களில் அருகில் இருப்போருக்குத் தும்மல், இருமல், கண்களில் எரிச்சல் போன்ற மிக மிகக் குறைந்த அளவுப் பாதிப்புகளை மட்டுமே அது ஏற்படுத்தும்.

இது பிரதருக்குத் தெரியாததால்தான், தான் சாப்பிட்ட ‘ஜால்முரி’யின் காரம் திரிணாமுல் காங்கிரஸை[மம்தா கட்சி]ப் பாதித்துவிட்டதாகக் கிண்டலடித்திருக்கிறார்.

ஒரு மிகச் சாதாரணமானதும் ‘அல்ப’மானதுமான விசயம், ஒரு பெரிய நாட்டை ஆளுகிற நம் பிரதமர் மோடிக்குத் தெரியவில்லையே என்று யாரும் எள்ளி நகையாட வேண்டாம். ஏனென்றால்.....

அவர் ‘நம்’ பிரதமர்!

*https://www.msn.com/en-in/news/india/i-ate-jhalmuri-but-trinamool-felt-the-sting-pm-modi-in-bengal/ar-AA21xlgR?ocid=msedgdhp&pc=NMTS&cvid=69ea109c37e74f3daf8b9615c2bea882&ei=18மோடி

வியாழன், 23 ஏப்ரல், 2026

ஆண்பால்&பெண்பால் குளங்கள்! சத்துக்குரு ஜக்கியின் சித்து வேலை!!

கேள்வி: ஈஷா யோக மையத்தில் பெண்கள் குளிக்கும் சந்திரகுண்டம், ஆண்கள் குளிக்கும் சூரிய குண்டத்தைவிடக் குளுமையாக இருப்பது எதனால்?

‘சத்துக்குரு’வின் பதில்[கேள்வியும் அவரே?]: இதற்குப் பல பரிமாணங்கள் உள்ளன[விளக்கம் இல்லை]. சில விஷயங்கள்[அதென்ன சில விஷயங்கள்?] முழுக்க முழுக்க இயற்பியல் சார்ந்தவை. அதனை நீங்களே அறிந்து கொள்ளலாம்[நமக்கெல்லாம் தெரியாதய்யா, தெரியாது].

தொட்டியின் ஆழம், அதன் சுவர்கள் செம்பில் அமைக்கப்பட்டிருத்தல் போன்ற சில காரணங்களால் இயற்கையாய்த் தண்ணீர் குளிர்ச்சி அடையும். அதையும் தாண்டி, நாம் பிரதிஷ்டை செய்துள்ள விதத்தினால், பெண்களுக்கான குளம்[சந்திரகுண்டம்] 2 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் குறைவாக இருக்கும்.

ஆண்களுக்கான குளத்தில்[சூரியகுண்டம்]பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விதத்தின்படி, இயல்பாய் உள்ள வெப்பத்தைவிட 1.5 டிகிரி கூடுதல் வெப்பம் இருக்கும்.

சூரியகுண்டத்தில் 1.5 டிகிரி அதிகம் என்பதால், சூரியகுண்டத்திற்கும் சந்திரகுண்டத்திற்கும் வெப்பநிலையில் 4 டிகிரி[மூன்றரை?] சென்டிகிரேட் வித்தியாசம் எந்தக் காலகட்டத்திலும் இருக்கும்.

நீரின் வெப்ப நிலை மாற்றத்திற்குத் தொட்டியின் ஆழம், அது செம்பினால் அமைக்கப்படுதல் போன்றவற்றை இவர் காரணங்கள் ஆக்கியிருப்பது ஓரளவுக்குச் சரியாக இருப்பினும்,  பிரதிஷ்டை பண்ணுவதே பித்தலாட்டம் என்னும்போது, இந்த ஆள் அதை, மேற்கண்டவாறு செய்து அதிசயம் நிகழ்த்தியதாகச் சொல்வது நம்பத் தகுந்ததா?

தகுதியே இல்லாமல் தனக்குத்தானே ‘சத்குரு’ என்று பட்டம் சூட்டிக்கொண்டு, மக்களில் பெரும்பாலோரை நம்ப வைத்த இந்தக் போலி ஆன்மிகக் குருவுக்கு இதுவும் சாத்தியப்படலாம்.

மக்களை முழு முட்டாள்கள் ஆக்குவதையே தொழிலாக்கி, கோடி கோடியாச் சம்பாதித்து வெகு சொகுசாக வாழும் இந்தப் பிரபஞ்சப் புளுகன் மிகக் கடுமையாகக் கண்டிக்கப்படுதல் வேண்டும்; தண்டிக்கப்படுதலும் அவசியம்.

அத்தனை அதிகாரங்களுடன் அரியணையில் அமர்ந்திருப்பவர்கள் இவனின் அடிமைகளாக இருக்கும்வரை இது சாத்தியப்படாது!

https://isha.sadhguru.org/ta/wisdom/article/thirumanam-seyyamal-sernthu-vazhalama

செவ்வாய், 21 ஏப்ரல், 2026

அம்மன்+அல்லா+அந்தோணியார் சாமிகளால் விஜய் அரியணை ஏறுவது உறுதி!!!

//இன்று திருச்சி கிழக்கில் ரோடு ஷோ நடத்திய விஜய், திருச்சி அந்தோனியார் ஆலயத்தில் முழங்காலிட்டவாரே சென்று, மெழுகுவர்த்தி ஏற்றிப் பிரார்த்தனை செய்தார். 

தொடர்ந்து, கொட்டப்பட்டுப் பச்சநாச்சி அம்மன் கோயிலுக்குப் போய், தன் வெற்றிக்காக மனம் உருகி அம்மனை வேண்டிக்கொண்டார். அருகில் இருந்த மசூதிக்கும் சென்று வழிபாடு செய்தார். 

‘விஜய்’யின் இந்த மும்மத வழிபாடு தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத் தளங்களில் வைரலாகி வருகின்றன// என்பது செய்தி[https://minnambalam.com/vijay-offer-prayer-in-trichy-church-temple-mousque/]

தலைவர் விஜய் அவர்களே நேரில் வந்து வழிபட்டு, காணொலிகளும் புகைப்படங்களும் எடுத்து, இணையத் தளங்களில் வெளியிட்டதால் மூன்று சாமிகளும் ரொம்பவே சந்தோசப்பட்டிருக்கும்[‘விஜய்’யுடன் படம் எடுத்துக்கொள்வது சாதாரண விசயமல்ல].


சாமிகளில் ஒன்றோ இரண்டோ மறந்தாலும் மூன்றாவது சாமி ‘விஜய்’ஐ முதல்வராக்கும் என்பது உறுதியோ உறுதி.


வாழ்க மும்மதச் சாமிகள்! வெல்க தலைவர் விஜய்!!

திங்கள், 20 ஏப்ரல், 2026

மதிப்பிற்குரிய ஒரு ‘தொழில்காரி’யின் கதை![100% கற்பனை]

வாடிக்கையாளர்களை எதிர்கொண்டு வரவேற்கும் வழக்கமுள்ள மாலா, அன்று படுக்கையில் கிடந்தவாறே, “வாங்க மணி” என்று  இதமான குரலில் மணிமொழியனை வரவேற்றாள்.

“உடம்புக்கு என்னம்மா?” என்றான்  மணிமொழியன்.

“வாரம் தவறாம உடல் பரிசோதனை பண்ணிடுறேன்; நாள் தவறாம உடற்பயிற்சி செய்யுறேன். உடம்புக்கு ஒன்னும் இல்ல. மாடிப்படியில் இறங்கும்போது தடுக்கி விழுந்ததில் இடுப்பில் அடி பட்டுடிச்சி. பத்து நாள் போல ஓய்வில் இருக்கணும்னு டாக்டர் சொல்லிட்டார்” என்றாள் மாலா. 

“ஃபோன் பண்ணிட்டு வந்திருக்கணும். பரவாயில்லை. ரெண்டு வாரம் கழிச்சி வர்றேன். உடம்பைப் பார்த்துக்கோ.” -நகர முற்பட்டான் மணிமொழியன்.

“கொஞ்சம் இருங்க. என் ஃபிரண்டு அபிராமியை வரச்சொல்றேன். என்னைவிட ஆள் நல்லா இருப்பா” என்றாள் மாலா.

“வேண்டாம்.”

“ஏங்க?”

“மாலா, எனக்கு எப்பவும் ‘அது’ உன்னோடு மட்டும்தான்.”

அழகிய புருவங்கள் வளைந்து நெளிய, “அப்படியா?” என்றாள் மாலா அவநம்பிக்கை நிறைந்த தொனியில்.

“அது விஷயத்தில் கட்டுப்பாடில்லாமல் விளையாடினதில், என் அப்பா எயிட்ஸ் நோயாளி ஆனார்; அம்மாவுக்கும் தானம் பண்ணினார். அந்த நோய்க்கு ரெண்டு பேருமே பலியானாங்க.....”

“அடடா, அப்புறம்?”

எப்பவும் மனைவியோடு  மட்டும்தான் உடலுறவு கொள்வேன்னு சபதம் எடுத்தேன். என் அப்பா, அம்மா ரெண்டு பேருமே ‘அந்த’ நோய்க்கு ஆளானதால, மருத்துவமனையில் பரிசோதனை செய்தேன். எனக்கு அந்த நோய்[ஹெச்.ஐ.வி> எயிட்ஸ்] இல்லேங்கிறது தெரிஞ்சிது. ஆனா, அதை யாரும் நம்பல;  பெண் தரவும் முன்வரல.  பிரமச்சாரியாவே காலம் கடத்திட நினைச்சேன். அது அவ்வளவு சுலபமில்லைன்னு  புரிஞ்சபோது, ஒரு தரகர் மூலமா உன்னைச் சந்திச்சேன்; நிரந்தர வாடிக்கையாளனாகவும் ஆனேன்.....”

இடைவெளி கொடுத்துச் சொன்னான் மணிமொழியன்: “இப்பவும் நான் ஏக பத்தினி விரதன்தான் மாலா. உன்னைத் தவிர வேறொருத்தியை நான் மனசாலும் நினைக்கிறதில்ல.” 

கண்கள் குளமாக அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் மாலா. “விருப்பமே இல்லாம இந்தத் தொழிலில் தள்ளப்பட்ட நானும் இனி உங்களுக்கு மட்டுமே சொந்தமானவளாக இருக்க விரும்புறேன். இதுவரை விலைமகளா இருந்தாலும், இனி உங்களுக்குத் துரோகம் செய்யாம நல்ல குடும்பப் பெண்ணா என்னால் வாழ்ந்துகாட்ட முடியும். என்னை ஏற்பீங்களா” என்றாள் தழுதழுத்த  குரலில்.

முகத்தில் பரவசம் பொங்கி வழிய, அவள் நெற்றியில் மிருதுவாய்ச் சில முத்தங்கள் பதித்து, “நான் இனி உன் வாடிக்கையாளன் அல்ல; வாழ்க்கைத் துணைவன்” என்றான் மணிமொழியன்.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

அடங்காத ‘அந்த’ ஆசையும் அச்சுறுத்தல் இல்லாத பிறவும்!

‘ஆசைகள் பலவிதம்’ என்பது சொல்லித் தெரிவதில்லை.

கடற்கரையில்[இருந்தால்] காற்றுவாங்கிக்கொண்டு ஐஸ்கிரீம் சுவைப்பது, பூங்காவில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தவாறு கடலை மிட்டாய் தின்பது; ஓசியில் தேனீரோ குழம்பியோ குடிப்பது போன்றவை குட்டிக் குட்டி ஆசைகள்.

எப்போதும் சாத்தியமே இல்லை என்பது தெரிந்திருந்தும் ‘அது’ விசயத்தில் நிறைவேறாத ஆசைகளை நெஞ்சில் சுமந்து திரிவது பேராசை; ஆபத்து விளைவிக்கும் ஆசையும்கூட.

இடைப்பட்ட ஆசைகள் பல உள்ளன.

வியாபாரம் செய்து சம்பாதிப்பது; படித்துப் பல பட்டங்கள் பெற்று உயர் பதவிக்குப் போவது; அரசியலில் கால்பதித்து ஒரு கட்சிக்குத் தலைவாகிப் அலப்பறை பண்ணுவது; போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி மேல் வெற்றி பெற்றுப் பெரும் புகழ் ஈட்டுவது; களிப்பூட்டும் கலைகளோ, அறிவியலோ, தொழில்நுட்பமோ ஏதேனுமொரு அத்தியாவசியத் துறையில் சாதனைகள் நிகழ்த்திப் பாராட்டுப் பெறுவது  போன்றவை அவற்றில் சில.

செய்யும் வணிகத்தில் இழப்பு ஏற்பட்டால் ஏற்றம் பெறும் நாளும் வரும் என்னும் எதிர்பார்ப்புடன் இழப்புகளால் ஏற்படும் துயரத்தைத் தாங்கிக்கொள்ளலாம்.

படித்து உயர் பதவிகள் பெற இயலாதபோது, பெற்றது போதும் என்று ஆறுதல் பெறுவது சாத்தியம்.

அரசியலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கவில்லை என்றால், “இது அயோக்கியர்களின் புகலிடம். நமக்கு ஒத்துவராது” என்று ஒதுங்கிவிடலாம்.

சாதனைகள் நிகழ்த்துவதில் தொய்வு ஏற்பட்டால், இறுதி மூச்சுவரை முயல்வேன்; சாதிப்பேன்” என்று சபதம் மேற்கொள்ளலாம்.

இன்ன பிறவற்றிலும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டால், ஏதேனும் ஒரு வகையில் சோர்ந்துவிட்ட மனதுக்குத் தெம்பூட்டலாம்.

ஆனால்,

‘அது’ விசயத்தில் அடுத்தடுத்தடுத்துப் படு தோல்விகளை எதிர்கொண்ட நிலையிலும், “அடைந்தே தீருவேன்” என்று பிடிவாதம் பிடிப்பது அறிவீனம்; பெரும் கேடுகளுக்கு வழிவகுப்பதும் ஆகும்.

’சனியன்’ஐ மிச்சம் மீதியில்லாமல் கைகழுவிவிட்டு, பிற ஆசைகளை நிறைவேற்றுவதில் தீவிரக் கவனம் செலுத்துவதே புத்திசாலித்தனம்; அமைதியான வாழ்வுக்கு இதுவே அடித்தளம் ஆகும்.

சனி, 18 ஏப்ரல், 2026

வாசல்தோறும் ‘விசில்’ கோலம்! இல்லம்தோறும் ஒலிக்கும் அதிரடி விசில் ஓசை!!

நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற தவெக தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், "தேர்தல் நெருங்கிவிட்டது. என் அன்புக்குரிய அம்மாக்கள், அக்காக்கள், தங்கைகள் அனைவரும் உங்கள் வீட்டு வாசலில் நமது ‘விசில்' சின்னத்தைக் கோலமாக இடுங்கள். அது நீங்கள் எனக்குக் கொடுக்கும் மிகப்பெரிய ஆதரவாக இருக்கும்" என வேண்டுகோள் விடுத்தார்.*

தலைவனின் அன்பு வேண்டுகோளின்படி, வீடு தவறாமல்[தமிழ்நாடு முழுவதும்] பெண்கள் தத்தம் வாசல்களில் ‘விசில்’ சின்னம் வரைவார்கள் என்பது உறுதி.

ஆண்கள்?

பெண்கள் கோலம் வரையும் கண்கவர் காட்சியை வெறுமனே வேடிக்கை பார்க்காமல், ஆண்கள் அத்தனைப்பேரும் தமிழினத் தானைத் தலைவன் தந்த விசிலைத் ‘தம்’ பிடித்து ஊத வேண்டும், கோலம் வரைந்து முடிக்கும்வரை.

விசில் வரைவதற்கும், அதை ஊதுவதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை[மிகச் சரியாகக் காலை 6 அல்லது 7 மணி] நிர்ணயித்தால், அந்த நேரத்தில் ஆண்கள் ஊதும் விசில் சத்தத்தால் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் அதிரும். “விசிலுக்கே நம் ஓட்டு” என்று அத்தனை வாக்காளர்களும் சபதம் ஏற்பார்கள்.

விசில் கோலங்களை எதிரிகள் அழித்துவிடாமல் தடுக்கவும், விசில் பெறாதவர்களுக்கு அதை வழங்கவும் ஆங்காங்கே தொண்டர் படை அமைத்திடத் தலைவன் ஆவன செய்தல் வேண்டும்.

அதிரடிப் புரட்சித் தலைவன் விஜய் வாழ்க! வெல்க!!

* * * * *

*https://www.hindutamil.in/news/tamilnadu/tvk-whistle-art-trending

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

பெண்ணின் கன்னித்தன்மையின் விலை ரூ90 லட்சம்[‘உ.பி.’யில்]!!!

த்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ளது ஜகதீஷ்புரா என்னும் ஊர்.

இங்கு, சுபயோஹ சுபதினத்தில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடைபெற்றது.

முதலிரவுக்கான ஏற்பாடுகள் முடிந்து, அலங்கரிக்கப்பட்டதொரு அறையில், பலானது பற்றியக் ‘கிளு கிளு’ கற்பனைகளுடன் காத்திருந்தான் மணமகன்.சர்வ அலங்காரத்துடன் முதலிரவு அறையில் நுழைந்து, அன்ன நடை பயின்று, வெட்கத்தால் தாழ்ந்த தலையுடன் பால் குவளையை அவனிடம் நீட்ட வேண்டிய மணமகள், “பேசிய ரூ.90 லட்சத்தைக் கொடு” என்று கை நீட்டினாள்.

அதிர்ச்சிக்குள்ளான அவன் கடுஞ்சினத்துடன் மறுக்க, இவள் கண்டிப்புடன், “முதலில் ரூ90 லட்சம். அப்புறம்தான் அது” என்றாள்.

கடும் வாக்குவாதத்துடன் இருவரும் அறையிலிருந்து வெளியேற, அதன் தொடர்ச்சியாக மணமகன் மணமகள் ஆகிய இரு தரப்பு வீட்டாரும் மோதிக்கொள்ள, தகவலறிந்து காவல்நிலையத்தார் விசாரணை மேற்கொண்டார்கள்.

விசாரணை முடிவில் அந்தப் பெண்[மணமகள்] தந்த வாக்குமூலம்.....

“மனம் விரும்பி இந்த ஆளை[மணமகன்] நான் மணக்கவில்லை; ரூ90 லட்சம் வரதட்சணைக்காகத்தான் சம்மதித்தேன்” என்பதாகும்.

ஒரு பெண் தன் கன்னித்தன்மையை ரூ90 லட்சத்துக்கு விற்பனை செய்த இந்த நிகழ்வு நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும், ஆணுக்கு நிகராகப் பெண்களும் வரதட்சணை வாங்கும் காலமும் வந்ததை[ஏற்கனவே மிக மிகக் குறைந்த அளவில் நடைமுறையில் உள்ளது] நினைத்து ஆறுதல் பெறலாம்.

https://www.dailythanthi.com/news/india/newlywed-woman-screams-at-newlywed-in-the-room-on-the-first-night-sensational-incident

புதன், 15 ஏப்ரல், 2026

அப்புறம்... அப்புறம்... அப்புறம்... !?!?!

 பிறந்ததன் விளைவாகப் பிற உயிர்களை வதைத்துச் சிதைத்து உணவாக்கி வாழ்கிறோம்.

ஆசைப்பட்டபடியெல்லாம் வாழ்ந்து முடிப்பதற்குள், வகை வகையான உணர்ச்சிப் போராட்டங்களுக்கிடையே கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத உயிரினங்களின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சிதைகிறோம்.

பிறப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட காலத்தில், ஆணும் பெண்ணுமாகச் சதையோடு சதை தேய்த்துச் சந்ததிகளை உருவாக்குகிறோம். எதனுடனோ எவருடனோ எல்லாமோ போராடி வதைபடுகிறோம். வாழ்நாள் முடிந்ததும் செத்துத் தொலைக்கிறோம்.
அப்புறம்.....

“ஒன்னுமே புரியல.”

                                             *   *   *   *   *
இப்பதிவை எழுதத் தூண்டிய ‘ஔவை’யின் பாடல்: 

‘வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமென்றால் போகா -இருந்தேங்கி 
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
   துஞ்சுவதே மாந்தர் தொழில்’  
      [துஞ்சுதல் - இறத்தல்]              
=============================================================
***புதுப்பிக்கப்பட்ட பதிவு இது.

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

எச்சரிக்கை எதற்கு? மோடியின் அதிகாரப் ‘போதை’யைக் குறைக்க ‘மிரட்டல்’ தேவை ஸ்டாலின்!

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்[பிரதமர்] ஆகத் தன்னை பாவித்துக்கொண்டு, அதிகாரப் போதையில் அனைத்து மாநிலங்களையும் அடக்கியாள நினைக்கும்  மோடியை, “மிரட்டவில்லை; எச்சரிக்கிறோம்” என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டாம்.

அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ ஆபத்தானது. அதிலிருந்து அவரை ஓரளவுக்கேனும் விடுவிக்க ‘மிரட்டல்’ தேவைதான்.

உங்களின் துணிவைப் பாராட்டுகிறோம். ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் போராட்டக் களத்தில் உங்களின் பின்னால் அணிவகுக்கும்.

திங்கள், 13 ஏப்ரல், 2026

21ஆம் நூற்றாண்டுக்குள் இந்தியாவை ‘இந்தி’யாவாக ஆக்குவார் மோடி!!!

ப்ரல் 13, 2026 அன்று புது தில்லியில் நடைபெற்ற நாரி சக்தி வந்தன் சம்மேளனத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 2029-க்குள் பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை(நாரி சக்தி வந்தன் அதினியம்) நடைமுறைப்படுத்துவது, பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பது, 'விக்சித் பாரத் 2047' இலக்கை அடைவதில் பெண்கள் பங்களிப்பது குறித்தெல்லாம் அவர் வலியுறுத்தினார்.

21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றை இந்தியா தற்போது எடுக்கவிருக்கிறது என்றும் கூறினார்['India is set to take one of the biggest decisions of 21st century': PM Modi on women's reservation bill]

1.நாரி சக்தி வந்தன்

2.நாரி சக்தி வந்தன் அதினியம்

3.விக்சித் பாரத் ‘2047’

21ஆம் நூற்றாண்டு முடிவதற்கு[75 ஆண்டுகள்[+2026] மோடி நிறைவேற்றவிருக்கும் லட்சியங்களில் மேற்கண்ட மூன்றும் அடங்கும்.

மூன்றுக்கும் இந்திப் பெயர்[சமஸ்கிருதம்?] சூட்டியிருக்கிறார்.

மோடி குறிப்பிடும் ஆண்டுகளுக்குள் இவை போன்ற திட்டங்களை நிறைவேற்றுவாரோ அல்லவோ, மாநில மொழிகளைப் படிப்படியா அழித்து, இந்தியாவை ‘இந்தி’யா ஆக்கும் தன் லட்சியத்தை(150 ஆண்டுகள் வாழ்ந்து)  நிறைவேற்றுவார் என்பது உறுதி. 

அப்புறமென்ன, ஒட்டுமொத்த இந்தியாவையும் ‘இந்தி’யன்கள் ஆளுவார்கள் என்பது உய்த்துணரத்தக்கது.

முக்கியக் குறிப்பு:

‘இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையின்படி(Eighth Schedule), இந்தியாவில் 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன’ என்பதையும், ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மேற்கண்ட மொழிகளிலும் பெயர் சூட்டலாம் என்பதையும், ஏறத்தாழ ஒரு சர்வாதிகாரியான மோடியாரிடம் எடுத்துரைக்க வல்லார் யார்?