எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 8 ஏப்ரல், 2024

வேண்டாம் தலைவர்களின்[தலைவலிகள்] ‘ரோடு ஷோ’! வேண்டும் அழகிகளின் அணிவகுப்பு!!

“தலைவர் வாழ்க” முழக்கங்களுடன் கட்சித் தொண்டர்கள்[காசு கொடுத்து வரவழக்கப்பட்டவர்கள் உட்பட] பின்தொடர, மாலையும் கழுத்துமாக வாயும் சிரிப்புமாக, வீதியின் இருபுறமும் அணிவகுத்து நிற்கும் குடிமக்களை இரு கரம் குவித்துக் கும்பிட்டுக்கொண்டே கட்சித்தலைவர்கள் வாகனப் பவனி வருவதைத்தான் இப்போதெல்லாம் ‘ரோடு ஷோ’ என்கின்றன ஊடகங்கள்.

இந்த ‘ரோடு ஷோ’ தலைவர்களுக்கு[வேட்பாளர்கள்] வாக்குகளை அள்ளித் தருமா என்றால், கிள்ளித் தருவதுகூட இல்லை என்பதே உண்மை.

காரணம்.....

“அதென்ன ரோடு ஷோ? போய்த்தான் பார்ப்போமே” என்று வேடிக்கை பார்க்க வந்தவர்களில் பலரும், போலிப் புன்னகையுடன் ‘ஷோ’ காட்டும் தலைவரை ஏற்கனவே பலமுறை ஊடகங்களில் பார்த்துச் சலித்தவர்கள் என்பதால், சற்று நேரம் நின்றுவிட்டு வெறுப்புடன் வீடு திரும்புகிறார்கள்[பணம் கொடுத்து வரவழைக்கப்பட்டவர்கள் நீங்கலாக].

தலைவருக்கு ஓட்டுப் போடுவது பற்றியெல்லாம் இவர்கள் சிந்திப்பதே இல்லை என்பதால், லட்சக்கணக்கில் ரூபாய் செலவழித்து ரோடு ஷோ நடத்துபவர் பெறும் பயன் ஏதுமில்லை; வாக்குகள் அதிகரிக்கவும் வாய்ப்பில்லை.

ஆகவே, இனியேனும் ‘ரோடு ஷோ’ வரும் தலைவர்கள்[வேட்பாளர்கள்] வாகனத்தில் உடன் பயணித்து ‘ஷோ’ காட்டும் குட்டித் தலைவர்களுக்குப் பதிலாகத் தங்களைச் சுற்றி வயசுக் குட்டிகளை நிறுத்திக் கை அசைக்க வைக்கலாம்.

இளம் குட்டிகளின் அசைவுகளை[கை அசைவு... ஹி... ஹி... ஹி!!!]ப் பார்த்து ஜொள்ளுவிடும் ‘ஷோக்கு’ப் பேர்வழிகளில் சிலரின் வாக்குகளேனும் தலைவருக்குக் கிடைக்கும் என்று நம்பலாம்.

ஆகவே, தலைவர்களே, வேட்பாளர்களே,

உங்களின் ‘ரோடு ஷோ’க்களை இனி கவர்ச்சிக் கன்னிகளின்  அணிவகுப்புகளாக மாற்றிடுவீர்!

                                             *   *   *   *   *

அறிவிப்பு:

கோவையில் மோடி ‘ரோடு ஷோ’, திருச்சியில் நட்டா ‘ரோடு ஷோ’, நாமக்கல்லில் ராஜ்நாத் சிங் ‘ரோடு ஷோ’, மோடியின் சென்னை ‘ரோடு ஷோ’[நடக்கவிருப்பது] என்றிப்படி, பாஜக தலைவர்களின் அடுத்தடுத்த ‘ரோடு ஷோ’க்களே இந்தப் பதிவை எழுதிடத் தூண்டின என்பது அறியத்தக்கது.

ஏழுமலையானை ஓரடி இடைவெளியில் தரிசிக்க ரூ120 கட்டணம்! கட்டிப்பிடிக்க?!

//லகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையானை வாழ்வில் ஒருமுறையேனும் அருகிலிருந்து தரிசிக்கும் ஆசை எல்லோருக்கும்[3 முதல் 30 மணி நேரம் காத்துக் கிடந்தும்கூட சில நொடிகள் மட்டுமே அவரைத் தரிசிக்க முடிகிறது. இதற்குப் பணக்காரர்களும் நாட்டை ஆளுவோரும் விதிவிலக்கு] உண்டு.

இது நேற்றுவரை சாத்தியப்பாடாமலிருந்தது.

இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது திருப்பதி தேவஸ்தானம், ‘திருமலை ஆர்ஜித் சேவா’ என்னும் திட்டத்தின் மூலம்.

வெறும் ரூ.120 செலுத்தி[புக் செய்து] சிரமம் எதுவும் இல்லாமல் திருப்பதிப் பெருமாளை ஓர் அடி தூரத்தில் நின்று தரிசனம் செய்யலாம்; நின்று நிதானமாகச் சுவாமி கும்பிட்டுவிட்டு வெளியே வரலாம். யாரும் 'ஜருகண்டி ஜருகண்டி' என்று சொல்லமாட்டார்கள்//. இது, https://tamil.nativeplanet.com/ செய்தி.

ஓரடியோ ஒன்பது அடியோ இடைவெளி ஒருபுறம் இருக்கட்டும், ஒட்டுமொத்த ஏழுமலையானின் உடம்பையும் அபிரித ஆடை அணி அலங்காரங்கள் மூலம் மூடியிருக்கிறார்கள்.

காதுகள் கண்களில் படவில்லை. மூக்கையும் அரை நெற்றியையும், பாதி பாதிக் கண்களையும் நாமம் தீட்டி மறைத்திருக்கிறார்கள்[கேள்வி கேட்டால, புரியாத தத்துவார்த்தமான பதிலைத் தருவார்கள்; அல்லது, தகாத வார்த்தைகளால் திட்டுவார்கள்].

ஏழுமலைக் கடவுளின் இயல்பான தோற்றத்தை எவரேனும் கண்டு மனம் பூரித்ததுண்டா?

“இல்லை” என்பதே மனசாட்சியுள்ள எவரொருவரின் பதிலாக இருக்கமுடியும்.

அப்புறம் எதற்கு மணிக்கணக்கில் கால்கடுக்க வரிசையில் நின்றும், கட்டுக்கட்டாய்ப் பணத்தைக் கட்டணமாகச் செலுத்தியும் பக்தர்கள் திருப்பதியானைத் தரிசிக்கிறார்கள்?!

ஆடை அணிகலன்களையும் வரையப்பட்ட பட்டை நாமத்தையும்[திருநாமம்] பார்த்துவிட்டு, ஏழுமலையானையே தரிசித்ததாகத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் இந்தப் பக்தர்களின் பித்தம் தெளிவது எப்போது?

சாமிகள்[ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர், பாபா ராம்தேவ் போன்ற ஆசாமிகளும்தான்] சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்றால் ஆட்சிபீடத்தில் அமர்ந்து கோலோச்சுபவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதாலும், நீதிமன்றங்களும் தலையிடா என்பதாலும் ஆண்டுகள் பலவாயினும் இவர்கள் திருந்தமாட்டார்கள்; திருத்துவாரும் இல்லை.

திருப்பதி ஏழுமலையான் பெயரால் மேற்கண்டது போன்ற மூடநம்பிக்கை வளர்ப்பு தொடருமெனின், ஒரு காலக்கட்டத்தில்.....

ரூ 120 என்ன, ரூ1200என்ன, ரூ1,20,000 போல் கட்டணங்கள் பெற்றுக்கொண்டு ஏழுமலையானைக் கட்டியணைத்துப் பேரானந்தத்தில் திளைத்திட திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களை அனுமதிக்குமா?

இது நாம் மனப்பூர்வமாய் எழுப்பும் கேள்வி[எடக்குமடக்காகக் கேள்விகள் கேட்டு, பதிவுக்கான ‘பார்வை’ எண்ணிக்கையை அதிகரிப்பது நம் விருப்பம் அல்ல]. 

புகார், வழக்கு போன்றவற்றைத் தவிர்த்து அவர்கள் மனப்பூர்வமாய் தரும் பதிலை எதிர்பார்க்கலாமா?

https://tamil.nativeplanet.com/travel-guide/what-are-the-ways-to-get-closer-view-of-tirupati-balaji-idol-ttd-arjitha-seva-syste-005569.html?_gl=1*l7yff2*_ga*NzkxODMzNDIuMTY5MjAwNTI0NQ..*_ga_09Y63T23W1*MTcxMjU2NzQ4NC4yNTAuMC4xNzEyNTY3NDg0LjAuMC4w&utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include