புதன், 28 பிப்ரவரி, 2018

தமிழகத் தொழில் அதிபரின் போற்றுதலுக்குரிய தமிழ்ப்பணி!

பல கல்வி நிறுவனங்களின் தலைவரும், 'சக்தி சுகர்ஸ்' செயல் தலைவரும், 'அருட்செல்வர்' என்று போற்றப்பட்ட, மறைந்த தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் மகனுமான டாக்டர் ம.மாணிக்கம் அவர்களின் நேர்காணல், 24.01.2018 அன்று சன் டி.வி.யின் 'சன் நியூஸ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும்பயன் அளிக்கும் அரிய பல கருத்துகளை டாக்டர் ம.மாணிக்கம் அவர்கள் வழங்கினார்கள்.

அவர் அளித்த பேட்டியிலிருந்து ஒரு சிறு பகுதி உங்கள் பார்வைக்கு.....
'சன் நியூஸ்' கேள்வி:
நீங்கள் ஆன்மிகத்திலும், இலக்கியப் பணியிலும், மொழிபெயர்ப்பிலும் கவனம் செலுத்தி வருகிறீர்கள். மொழிபெயர்ப்பில் உங்களுக்கு ஏன் ஈர்ப்பு?

டாக்டர் ம. மாணிக்கம் பதில்:
அமெரிக்காவில் எங்களுடைய பேராசிரியர் திரு. கே.பிரகலாத் சொல்லுவார், ஜப்பானியர்கள் முன்னேறியதற்குக் காரணம், உலகில் எந்தப் புத்தகம் புதிதாக வந்தாலும், அது நல்ல புத்தகம் என்றால், மூன்றே மாதத்தில் ஜப்பானிய மொழியில் வந்துவிடுமாம். ஜப்பானியர்கள் ஜப்பானிய மொழியில்தான் படிக்கிறார்கள்.

தமிழகத்தில் பார்த்தால், ஆங்கில மோகம் அதிகமாக இருக்கிறது. நான் தமிழ்வழிக் கல்வியில் படித்தவன்.

ஆங்கில மோகம் ஏன் வருகிறது என்றால், ஏதாவதொன்றை அறிய வேண்டுமென்றால் அதைப் பற்றிப் படிக்க நம்முடைய தாய்மொழியில் அந்தப் புத்தகம் இருப்பதில்லை. அது அந்நிய மொழியில் இருக்கிறது. அந்த அந்நிய மொழி தெரியவில்லை என்றால் நாம் தற்குறிகள் ஆகிவிடுகிறோம். ஆங்கிலத்தில் படித்தால்தான் தேவையான துறைகள் பற்றிய அறிவைப் பெற முடியும் என்ற நிலை வந்துவிட்டது.

எனவேதான், தேவையான நல்ல நூல்களை மொழிபெயர்ப்புச் செய்யும் மையத்தைத் தொடங்கினோம். மொழிபெயர்ப்புப் பணி தொடர்கிறது.

ஆங்கிலத்தில் படிப்பதைவிடவும் தமிழில் படித்தால் நன்கு புரியுமாதலால் படிப்பவர்களுக்குப் பெரிதும் பயன்படும்.

கேள்வி:
அரிதான புத்தகங்களைக்கூட நீங்கள் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிடுகிறீர்கள். ஆனால், அவற்றிற்கு வரவேற்பு இருக்கிறதா?

பதில்:
வரவேற்பு ஓரளவிற்கு இருக்கிறது. ஓர் ஆயிரம் பிரதிகள் வெளியிடும்போது ஓரளவிற்குப் போகிறது.

தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற்றால் நாம் இனிப்பு வாங்கிக் கொடுக்க வேண்டாம்; புத்தகம் வாங்கி கொடுப்போம் என்ற ஒரு பழக்கம் வந்துவிட்டால், நிச்சயமாக மொழிபெயர்ப்புத் துறை நன்றாக வளரும். அந்த ஒரு விழிப்புணர்வு இப்போது தேவை.

டாக்டர் ம.மாணிக்கம் அவர்களின் உயரிய தமிழ்ப்பணியைப் போற்றுகிறோம். இவரனைய பிற தொழிலதிபர்களும் இம்மாதிரியான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது நம் விழைவு.
=================================================================================
நன்றி: 'ஓம் சக்தி' மாத இதழ்.






























செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

நீசத் தமிழனும் தேவ தேவ பாஷையும்!

சென்னையில் உள்ள 'இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில்[IIT] இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில்[நம் பொன்.இராதாகிருஷ்ணனாரும் கலந்துகொண்டிருக்கிறார்] மரபுப்படி, நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதற்கு மாறாக, சமஸ்கிருத மொழி வாழ்த்து பாடப்பட்டிருக்கிறது. இது நேற்றைய[26.02.2018] தொலைக்காட்சிச் செய்தி http://indianexpress.com/article/india/sanskrit-song-at-iit-madras-hits-wrong-note-sparks-row-5079475/

இந்த அயோக்கியத்தனத்தை, ஸ்டாலின், வைக்கோ, இராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டித்திருக்கிறார்கள். 

சில நூறு பேர் மட்டுமே பேசுகிற, 'செத்த மொழி' என்று வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்ட சமற்கிருதத்தை வாழ்த்திப் பாடும் துணிவு ஐஐடியில் ஆதிக்கம் செலுத்தும் 'அவர்களுக்கு' [பதிவுகளில் ஜாதிப்பெயரைக் குறிப்பிடுவதில்லை] வாய்த்திடக் காரணமானவர்கள், இந்த நாட்டை ஆளுகிற காவிகள்தானா?

அல்ல...அல்ல...அல்லவே அல்ல.

தமிழ்ச் சான்றோர்கள் படித்துப்படித்துச் சொல்லியும், கோயில்களில் சமற்கிருதத்தை இன்னமும் வழிபாட்டு மொழியாக அனுமதித்துக்கொண்டிருக்கிற 'நீசத் தமிழ்' பேசுகிற 'நீச'த் தமிழர்களே  காரணம் ஆவர்.

பட்டிதொட்டியெல்லாம் இடிந்து பாழடைந்து கிடக்கும் கோயிலைப் புதுப்பித்துக் கோபுரம் எழுப்பினால், அவர்களைக் கொண்டு, சமற்கிருதத்தில் வேதம் ஓதச் சொல்லிக் குடமுழுக்குச் செய்யும் முட்டாள் தமிழன் காரணம்.

புதிய தொழில் தொடங்கும்போதாகட்டும், புதுமனை புகுவிழா நடத்தும்போதாகட்டும் அவர்களை அழைத்துச் சடங்கு செய்யும் இவனுடைய பேதைமை காரணம்; மனிதர்களால் உருவாக்கப்பட்ட சமற்கிருத மொழியும் வேத ஆகமங்களும் கடவுளால் அருளப்பட்டவை என்று அவர்களால் கட்டிவிடப்பட்ட கதையை நம்பும் மூடத்தனம் காரணம்.

தமிழனிடம் இம்மாதிரி மூடக்குணங்கள் நீடிக்கும்வரை, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சமற்கிருதத்தைப் போற்றித் துதிபாடும்  செயலை அவர்கள் தொடர்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.

இனியேனும் தமிழர்கள் சிந்திப்பார்களா? திருந்துவார்களா?!


ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

புத்தன் ஒரு மானுடன்! மகான் அல்ல!!

‘சர்வ சக்திகளும் கொண்ட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று ஏற்கும்போது, மனிதன் தனக்கென்று சுதந்திரம் இல்லாதவன் ஆகிறான். ‘ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே’ என்பதற்கேற்ப, இறைவன் ஆட்டுகிறான்; மனிதன் ஆடுகிறான் என்றாகிவிடுகிறது. மனித முயற்சிக்கு இடமே இல்லாமல் போகிறது’ என்கிறார் புத்தர்.

“எந்த நூலையும் கடவுள் படைத்ததாக ஏற்றுக்கொள்ளாதே” என்பதும் அவருடைய போதனைதான்.

இந்து மதம்[?], ‘வேதங்கள் யாராலும் உருவாக்கப்பட்டவையல்ல; அவை கடவுளிடமிருந்து வெளிப்பட்டு நேரடியாகக் காற்றில் கலந்து, மனிதக் காதுகளை வந்தடைந்தவை’ என்கிறது. அதன் காரணமாகவே, வேதங்களுக்குச் ‘சுருதி’ என்னும் பெயரை அது கொடுக்கிறது!

இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் வாயிலாக இறைவனாலேயே இறக்கி வைக்கப்பட்டதுதான் ‘குர் ஆன்’ என்று இஸ்லாம் நம்புகிறது. இதை நம்ப மறுப்பவனை மார்க்க விரோதியாகவே அது பாவிக்கிறது.

‘பரமண்டலத்திலிருக்கிற பரமபிதாவால் உருவாக்கப்பட்டதுதான் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடுமாகிய விவிலியம்’ என்று கிறிஸ்தவம் கூறுகிறது. அதில் வரும் சுவிசேஷங்கள் எல்லாம் மனிதர்களின் ஊடாகத் தேவன் அருளியது என்று அது நம்புகிறது.

இவ்வாறு, மதங்களெல்லாம் தத்தம் நூலை இறைவன்தான் அருளினான் என்னும் நம்பிக்கையை வலுப்படுத்துவதில் முனைப்புக் காட்ட, பௌத்தமோ அந்த நம்பிக்கையைச் சுக்கல் சுக்கலாகத் தகர்த்தெறிய முயல்கிறது. ‘எந்த நூலையும் கடவுள் படைத்ததாக ஒப்புக் கொள்ளாதே’ என்று சம்மட்டித் தாக்குதல் நடத்துகிறது.


‘கடவுள் சொன்னார் என்பதை நீ ஒத்துக்கொண்டால், உன் அனுபவத்துக்கும் அதனால் நீ பெற்ற அறிவுக்கும் வேலையில்லாமல் போகிறது’ என்கிறார் புத்தர்.

இந்த மூடநம்பிக்கையால் எத்தனையோ கொடூர சம்பவங்கள் இந்தச் சமூகத்தில் நிகழ்ந்துவிட்டன.

பைபிலில், உலகம் தட்டையானது என்னும் செய்தி உள்ளது. உலகம் உருண்டை என்னும் உண்மையை உலகுக்கு உணர்த்த முயன்ற விஞ்ஞானி கலிலியோ, போப்பாண்டவர் போட்ட உத்தரவால் பொங்கும் நெருப்பில் உயிரோடு பொசுக்கப்பட்டார்!

பரிணாமக் கொள்கையை உருவாக்கிய டார்வின், தேவாலயத்தில் மதவாதிகளின் முன்பு மன்னிப்புக் கோரினார். அவர் கண்டறிந்த பரிணாமக் கொள்கை பொய்யானது என்று அறிவிக்கும்படி மதம் அவரை அச்சுறுத்த அதன்படியே அவர் செய்தார்!

                         
புத்தர் மகானோ ரிஷியோ அல்ல; இந்தத் தன்மையை அவர் எதிர்த்தார். ‘ரிஷி சொன்னார்; மகான் சொன்னார் என்று எதையும் நம்பாதே. யார் எதைச் சொன்னாலும், உன் அறிவைக்கொண்டு தர்க்கம் செய்து ஏற்புடையதை எடுத்துக் கொள்’ என்று சொன்ன சீரிய சிந்தனையாளன்; ஆகச் சிறந்த அறிஞன்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்பவர்கள் பௌத்தர்களையும் சமணர்களையும், ‘திருடர்கள்’, ‘கொலைகாரர்கள்’, ‘வேத வேள்வியை மறுப்பவர்கள்’ என்றெல்லாம் பழித்தார்கள்;  “பௌத்தர்களின் பெண்டாட்டி பிள்ளைகளைக் கற்பழிக்கின்ற சக்தியை எங்களுக்குக் கொடு” என்று கடவுளிடம் வேண்டினார்கள்! இது எத்தனை பெரிய அநியாயம்!

புத்தன் என்ற சொல் ஓர் ஆளைக் குறிப்பதாகவே பலரும் நினைக்கிறார்கள். அது தவறு.

புத்தியை, அதாவது அறிவைப் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிய முயல்பவன் புத்தன். சித்தார்த்தன், தன் புத்தியைப் பயன்படுத்தி பல உண்மைகளைக் கண்டறிந்ததால் அவர் புத்தர் என்று அழைக்கப்பட்டார். இவருக்கு முன்பு பல புத்தர்கள் வாழ்ந்திருக்கலாம் என்கிறார்கள்.

சித்தம் என்பதும் அது போன்றதே. சித்தத்தைக் கட்டுப்படுத்தி அதை நல்வழியில் செலுத்துபவன் சித்தன்.

என்சைக்ளோபீடியா, அபிதான சிந்தாமணி ஆகிய நூல்கள், புத்தன் என்பதற்கு, ‘எதையும் புத்தியின் மூலம் ஆராய்பவன்; குருட்டுத்தனமாக நம்பாதவன்’ என்று பொருள் தருகின்றன.

சைவ வைணவ மதத்தவரால் எண்ணற்ற புத்தமதத்தினர் கழுவேற்றப்பட்டார்கள்; செக்கிலிட்டு அரைக்கப்பட்டார்கள்; கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் தூக்கி வீசப்பட்டார்கள்.

தமிழகத்தில் இருந்த பல புத்த கோயில்கள் சைவ வைணவக் கோயில்களாக மாற்றப்பட்டன. தங்கம், வைரம் இவற்றால் ஆன புத்த விக்கிரகங்கள் களவாடப்பட்டன.

திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இவ்வாறான பல தீச்செயல்களால், பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழும்படி வலியுறுத்திய சிறந்த ஒரு மதம் [புத்தம் மதமல்ல; ஓர் இயக்கம் என்பாரும் உளர்] அது உருவான மண்ணைவிட்டே விரட்டியடிக்கப்பட்டது மிகப் பெரிய சோகம்!
*********************************************************************************
கீழ்க்காணும் நூல்களிலிருந்து திரட்டப்பட்ட கருத்துகளின் தொகுப்பே இப்பதிவு. நூலாசிரியர்களுக்கு நன்றி.

1. தமிழருவி மணியன் எழுதிய ‘ஞானபீடம்’, கற்பகம் புத்தகாலயம், தியாகராய நகர், சென்னை. மறுபதிப்பு: அக். 2009.

2.ஞான.அலாய்சியசு எழுதிய ‘பெரியார் பார்வையில் இஸ்லாமும் புத்தமும்’, புதுமலர் பதிப்பகம், ஈரோடு. முதல் பதிப்பு: டிசம்பர் 2005.
*********************************************************************************





வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

அவதாரங்களிடம் கேளுங்கள்!!!

சிந்திக்கக் கற்றுக்கொண்ட நிலையில், ''உலகங்களைக் கடவுள் படைத்தார்” என்று ஆத்திகர்கள் சொன்ன போது, ''கடவுளைப் படைத்தது யார்?” என்று நாத்திகர்கள் கேட்டார்கள். அன்று முதல் இன்றுவரை விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இன்றெல்லாம், ''மனிதனுக்கு ஆறறிவு உள்ளது. சிந்திக்கப் பயன்படும் இந்த அறிவு[ஆறாம் அறிவு] தானாக வாய்த்ததல்ல; அதைத் தருவதற்கு அதற்கும் மேலான அறிவுள்ள ஒருவர் தேவை. அவரே கடவுள்'' என்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

அவர்களிடம் நாம் முன்வைக்கும் கேள்வி.....

''மேலான அறிவுள்ளவர் கடவுள் என்றால், அந்த அறிவு அவருக்கு எப்படி வாய்த்தது? தானாகக் வாய்த்திருக்க முடியாது. அவருக்கும் மேலான பேரறிவு வாய்க்கப்பெற்ற ஒருவர், அதாவது, கடவுளின் கடவுள் அதைத் தந்திருக்க வேண்டும். கடவுளின் கடவுளுக்குப் பேரறிவைத் தந்தவர் கடவுளின் கடவுளின் கடவுளா?

இவ்வகையில் எழுப்பப்படும் கேள்விகளும் தொடரும் விவாதங்களும் முற்றுப்பெறுவது ஒருபோதும் சாத்தியமில்லை எனலாம்.

எனினும், ஆத்திகர் நாத்திகர் எனும் இருதரப்பாரும் மனம் ஒத்து ஏற்கத்தக்க ஓர் உண்மை உண்டு. அது.....

'மனிதனுக்கு ஆறாவது அறிவு வாய்த்தது எப்படி என்பது யாருக்கும் தெரியாது’ [‘இப்போதைக்கு’ என்று வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளுங்கள்.]

இதை ஏற்றுக்கொள்ள மனமின்றி, ‘எல்லாம் அவனே. அவனின்றி அணுவும் அசையாது. மனிதன் உட்பட அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கின்ற வல்லமை படைத்தவன் அவனே” என்று கடவுளைக் காப்பாற்ற அவர்கள் இடைவிடாது மேற்கொண்ட முயற்சியின் விளைவு........

“கடவுள் இல்லை” என்ற பகுத்தறிவாளர்களின்[நாத்திகர்களின்] எதிர் முழக்கம்!
                                                                                                                                             
நம்மில் சிந்திக்கத் தெரியாதவர்கள் அதிகம். கடவுளைக் கற்பித்து, நம்ப வைத்ததோடு, தங்களையும் கடவுளின் 'மறுபிரதி’ என்று நம்பவைத்தார்கள் சில புத்திசாலிகள்!

அவர்களைக் கடவுளின் ‘அவதாரங்கள்’ என்று போற்றி வழிபட்டார்கள் மக்கள்.

அவதாரங்களை.....

சுவர்க்கத்திலிருந்து கடவுளே தோளில் சுமந்து வந்து இந்த மண்ணில் இறக்கிவிட்டுப் போனாரா என்பது நம் கேள்வி.

அவர்கள் நம்மைப் போன்றவர்கள் அல்லவா? கடவுளையே தங்களின் சுவாசக் காற்றாக்கி மூச்சு விடுகிறார்களா? அவர்கள் நம்மைப் போல் மூக்கால் சுவாசிப்பதில்லையா? காதுகளால் கேட்பதில்லையா? வாயால் உண்பதில்லையா?

அவர்கள் தின்பதெல்லாம் மலமாக வெளியேறும்தானே? அந்த மலமும்கூட கமகமவென்று சந்தணமாய் மணக்குமா? அவர்களின் சிறுநீரில் அசுத்தங்கள் கலக்காமல், அருந்தினால் சுவை நீராகப் பரவசம் ஊட்டுமா? கடவுளே அவர்களின் மலமாகவும் சிறுநீராகவும் வெளிப்படுகிறாரா?!

அவர்கள் தொட்டால் தீராத நோய்கூடத் தீரும் என்கிறார்கள்! அவர்களுக்கு நோயே வருவதில்லையா? வந்தால் கடவுளே நேரில் வந்து மருத்துவம் பார்க்கிறாரா?

அவர்கள் பார்வை பட்டால் செய்த பாவமெல்லாம் விலகுமாம். அவர்கள் செய்த பாவங்களெல்லாம் கடவுள் அருளால் புண்ணியங்களாக மாறிவிடுமா?

மனிதனாகப் பிறந்து குற்றங்கள் செய்யாதவர் யார்? அவர்கள் சின்னஞ்சிறு தவறு கூடச் செய்ததில்லையா?

அவர்கள், கல்லைக் காட்டிக் கடவுள் என்றார்கள். காலங்காலமாய் முட்டாள் மனிதர்கள் கல்லைக் கடவுளாக வழிபட்டு வருகிறார்கள்.  ''கடவுள் கல்லில் இல்லை; கழுதையில்தான் இருக்கிறார்'' என்று அவர்கள் சொன்னால்,  கழுதையை மட்டுமே இவர்கள் வழிபடவும் தயார்.

சுய சிந்தனை வேண்டாமா?

கல்லைக் கடவுள் என்று அவர்கள் சொன்னால், “யார் அந்தக் கடவுள்? அவரை ஏன் கல்லுக்குள் திணிக்கிறாய்? கல் கல்லாகவே இருக்கட்டும்” என்று சொல்ல வேண்டாமா?

“இல்லை இல்லை. அது அப்படித்தான்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி மூளைச் சலவை செய்ய அவர்கள் முயன்றால்............

“கல் ஒரு பொருள். அது பற்றி விஞ்ஞானிகள் நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறார்கள்; செய்கிறார்கள். செய்ய வேண்டியவை ஏராளம் உள்ளன. நீ எதற்குக் கடவுளை உள்ளே நுழைத்து அறிவாராய்ச்சிக்கு ஊறு விளைவிக்கிறாய்? கடவுளின் பெயரால் மூடநம்பிக்கைகளைப் பெருக்குகிறாய்?'' என்றெல்லாம் கேட்கவேண்டும்.

இனியேனும் நம்  மக்கள் கேட்பார்களா?

வியாழன், 22 பிப்ரவரி, 2018

குமுதம் 'நல்ல' குமுதம்!!!

செப்டம்பர் 2002  ‘குமுதம் ஹெல்த்’ இதழில் வெளியான ‘சோம்பல் விழிகள்’ பேட்டிக் கட்டுரையை அண்மையில்[மீண்டும்] படிக்க நேர்ந்தது. மிகவும் பயனுள்ள பேட்டி. படியுங்கள்; நண்பர்களுடனும் பகிருங்கள்.

சோ ம்பல் விழிகள்’ [ஆங்கிலத்தில் Amblyopia] என்னும் இந்தக் கொடிய நோய் பற்றிச் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை டாக்டர் மீனாட்சி சொல்வதைப் பதற்றப்படாமல் படியுங்கள்.

பொதுவாக இந்த நோய் ஒன்று முதல் பத்து வயதுவரை உள்ள குழந்தைகளையே பாதிக்கும். இந்தப் பாதிப்பில் மூளைக்கும் பங்குண்டு என்பதுதான் வேடிக்கை.

மூளைதான் கண் பார்வையின் வீரியத்தைத் தீர்மானிக்கிறது. சில சமயம் ஒரு கண்ணில் மட்டும் பார்வையின் வீரியம் அதிகமாக இருக்கும். மற்றொன்றில் குறைவாக இருக்கும். இந்தக் குறைந்த அளவிலான வீரியம் மேலும் மேலும் குறையும். ஒரு கட்டத்தில் கண் பார்வையே இல்லாமல் போய்விடும். மூளையும் இதைக் கண்டுகொள்ளாது. காரணம், குறிப்பிட்ட அந்தக் கண்ணிலிருந்து சமிக்ஞைகள் ஏதும் மூளைக்குப் போகாமலிருப்பதுதான்.

தனக்கு இந்தக் குறை இருப்பது பெரும்பாலும் குழந்தைக்குத் தெரியாமலே இருக்கும். பெற்றோர் அறிவதற்கும் வாய்ப்புகள் குறைவு.

அப்புறம் எப்படிக் கண்டுபிடிப்பது?

குழந்தைக்குத் தடுப்பூசி போடும் காலக்கட்டத்திலேயே இது பற்றிய விழிப்புணர்வு தேவை.

குழந்தையின் ஒரு கண்ணை மறைத்து மற்றொரு கண்ணில் பார்வை தெரிகிறதா என்று சோதிக்க வேண்டும். குறை இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

இரு கண்களிலும் இப்பாதிப்பு வரலாம்; மாறுகண் உள்ளவர்களுக்கும் வரக்கூடும்.

அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் இந்தப் பாதிப்பு மிகக் குறைவு. காரணம், ஐந்து வயதான எல்லாக் குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் இச்சோதனை செய்ய வேண்டும் என்று அங்கு சட்டமே உள்ளது.

இந்த நோய் பெரியவர்களைப் பாதிப்பதில்லை.

இந்தியாவில் 2 - 4% குழந்தைகளிடத்தில் [11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை] ‘சோம்பல் விழிகள்’ பாதிப்பு உள்ளது.

சிகிச்சை என்ன?

நன்றாகப் பார்வை தெரியும் கண்ணை மூடிவிட்டு [மூடுவதற்குப் பேட்ச்கள் உள்ளன] சோம்பல் விழியை மட்டுமே பயன்படுத்துவது ஒன்றுதான் இதற்கு வழி.

இந்தப் பயிற்சியை ஒரு நாளில் 12 மணி நேரம் செய்ய வேண்டும். இப்பயிற்சி பல மாதங்கள் செய்யப்பட வேண்டும்.

கண்ணாடி அணியும் குழந்தையாக இருந்தால் அதை அணிந்து கொள்ளலாம்.

சோம்பல் விழியை மட்டும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் இழந்த பார்வையை திரும்பப் பெறலாம்.

இதைக் குணப்படுத்த மருந்துகள் உண்டா?

இதுவரை இல்லை [2002 வரை]. {இப்போது உள்ளதா என்பது தெரியவில்லை-'பசி'பரமசிவம்} 
********************************************************************************************************************

















புதன், 21 பிப்ரவரி, 2018

பகுத்தறிவாளர் பாராட்டும் என் பழைய 'ஜல்லிக்கட்டு' பதிவு!

நண்பரும் பகுத்தறிவாளருமான 'வேகநரி' அவர்கள், என் பழைய பதிவொன்றை 'மின்னஞ்சல்' மூலமாகப் பாராட்டியிருக்கிறார்[என்னுடைய சில பலவீனங்கள் காரணமாகக் 'கருத்துப் பெட்டி'யைப் பூட்டி வைத்துள்ளேன்!]. மிக்க பெருமிதத்துடன் அதை உங்களுடன் பகிர்கிறேன்.
#கடவுளின் கடவுள்!!!] New comment on கட்டு..கட்டு..ஜல்லிக்கட்டு!...மரணத்துடன் மல்லுக்கட....
இன்பாக்ஸ்
x

வேகநரி noreply-comment@blogger.com

பிற்பகல் 6:08 (13 மணிநேரத்திற்கு முன்பு)
பெறுநர்: எனக்கு
மல்லுக்கட...":

இன்று பல நாட்களின் பின் தமிழ்மணம் வேலை செய்தது.உங்கள் மூடர் உலகம் 
என்ற நல்ல பதிவை கண்டேன். அதில் இடது பக்கத்தில் இந்த ஜல்லிகட்டு மரண 
கட்டு என்ற பதிவு இருந்தது. 2015 வந்த இந்த பதிவை இப்போது தான் கண்டேன். 
தமிழர் என்றால் மாட்டை துரத்தி வீரம் காட்டும் லுசுத்தனமான ஜல்லிகட்டுவை, 
தமிழர்களின் வீர விளையாட்டு என்று ஆதரிக்க வேண்டும் என்ற எழுதபடாத 
சட்டம் இருக்கும் நிலையில், தமிழ் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லி 
கொள்பவர்களும் மாட்டை துரத்தி விளையாட வேண்டும் என்று புர்ச்சி செய்யும் 
மிகவும் அவலமான நிலைமையில், நீங்க பகுத்தறிவோடு இப்படி நல்ல பதிவு 
எழுதியதற்கு பாராட்டுக்கள்.
நமது பண்பாடுகள்,கலாச்சாரங்களை கட்டி காக்கிறோம் என்று அகற்றபட 
வேண்டிய குப்பைகளை எல்லாம் கட்டிகாப்பாற்ற கூடாது :)

Posted by வேகநரி to கடவுளின் கடவுள்!!! at February 20, 2018 at 6:08 PM#

பரமசிவம் kaliyugan9@gmail.com

முற்பகல் 7:29 (17 நிமிடத்திற்கு முன்)


பெறுநர்: வேகநரி
தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு என் மனம் நிறைந்த நன்றி நண்பர் 
வேகநரி.

நன்றி...நன்றி...நன்றி.

20 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:08 அன்று, வேகநரி 
<noreply-comment@blogger.com> எழுதியது:


நண்பர் வேகநரியின் பாராட்டுப்பெற்ற பதிவு.....

//ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம். 
எனவே, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் இந்த வீரவிளையாட்டு[?] 
இடம்பெறவில்லை// என்பது செய்தி.

‘ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு; தமிழர்களின் 
குருதியில் கலந்துவிட்ட கலாச்சாரம்’ என்று காரணங்கள் பல 
சொல்லித் தடை விதித்தது தவறு என்று பலரும் சொல்கிறார்கள்.

கலைஞர் கருணாநிதியென்ன, விசயகாந்த் என்ன, இராமதாசு 
என்ன, வைகோ என்ன அனைத்துக் கட்சித் தலைவர்களும் 
தடையை நீக்க வேண்டும் என்று வரிந்துகட்டிக்கொண்டு அறிக்கை 
விடுகிறார்கள்;போராட்டங்களையும் அறிவித்திருக்கிறார்கள். 
‘அம்மா’வும் கடிதம் எழுதியிருக்கிறார்.

நடுவணமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், “ஜல்லிக்கட்டு 
நடக்கும்" என்று நம்பிக்கை விதையை ஊன்றியிருக்கிறார்.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பதற்குக் காரணமாக 
இருப்பது, ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக 
விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கு. 

வாரியம் சொல்வதில் உண்மை இல்லையா?  நிகழ்ச்சியில் 
காளைகள் துன்புறுத்தப்படுவதில்லையா? என்பன போன்ற 
கேள்விகள் எழுவது இயல்பு. அவற்றிற்கு.....

''இல்லை...இல்லை'' என்பதே நம்மவர் பதிலாக இருக்கிறது.

காளைகளின் திமிலை வளைத்துப் பிடித்து முழு பலத்துடன் 
இறுக்குவதும், கொம்புகளை அழுந்தப் பற்றி அதன் கழுத்தை 
முறிப்பதுபோல் பக்கவாட்டில் திருகுவதும், வாலை இழுப்பதும் 
துன்புறுத்தல்கள் அல்ல; அல்லவே அல்ல. இது வெறும் விளையாட்டு
...வீர விளையாட்டு.

பதிலுக்குக் காளைகளும் விளையாடுகின்றன. ஆனந்தப் 
பரவசத்துடன், துள்ளிக் குதித்து, எகிறிப் பாய்ந்து வீரர்களை 
மூர்க்கமாய் முட்டித் தள்ளுவதுபோல் பாசாங்கு செய்கின்றன. சில 
நேரங்களில், எசகுபிசகாக அவற்றின் கொம்புகள் குத்திச் சில வீரரகள் 
காயம்பட்டு உயிரிழக்கிறார்கள். அவற்றையெல்லாம் நாம் 
பொருட்படுத்தத் தேவையில்லை. ஏனென்றால் இது நம் 
பண்பாட்டைப் பறைசாற்றும் பாரம்பரிய விளையாட்டு.

ஒவ்வொரு ஜல்லிக்கட்டின்போது உயிரிழப்புகள் நேரத்தான் 
செய்கின்றன. குறைந்தது மூன்றுநான்கு பேர்.

இதற்காகவெல்லாம் நாம் வருத்தப்படத் தேவையில்லை.
ஏனென்றால், இந்த உயிரிழப்புகள்தான் நம் கலாச்சாரத்தைக் 
கட்டிக்காக்கின்றன. இது தெரிந்துதான், நம் தலைவர்கள் எல்லாம் 
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கவேண்டும் என்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்குப் பேர்போன அலங்காநல்லூர்க்காரர்கள், 
‘காலங்காலமா ஜல்லிக்கட்டு நடத்திட்டு வர்றோம். கடந்த ஆண்டு 
அது தடைபட்டது. எல்லா ஊருக்கும் பெய்த மழை எங்கள் ஊரில் 
பொய்த்துவிட்டது. காரணம் சாமி குத்தம்’ என்கிறார்களாம். இது 
பத்திரிகை[தின மலர், 27.12.15]ச் செய்தி.

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் எல்லாம் தவறாமல் 
மழை பெய்ததா என்று நாம் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பதும்கூட,
சாமி குத்தம்தான்...சாமி குத்தம்!!!

எந்தவொரு குத்தத்துக்கு ஆளானாலும் சாமி குத்தத்துக்கு நாம் 
ஆளாகக் கூடாது. மழைமாரி பொய்த்துப் போக, தமிழினமே 
பூண்டோடு அழிந்துவிடக்கூடும். ஆகவே......

போராடுவோம். தடைகளைத் தகர்ப்போம்.  நம் வீர விளையாட்டான
ஜல்லிக்கட்டு விழாவைக் கொண்டாடுவோம். உயிரிழப்புகள் ஒரு
பொருட்டல்ல.

ஆம், உயிரிழப்புகள் நமக்கு ஒரு பொருட்டல்ல...அல்லவே அல்ல!

+============================================================================================










திங்கள், 19 பிப்ரவரி, 2018

மூடர் உலகம்!!!

‘மாணவர் உலகம், மழலையர் உலகம், குடிமகன்கள் உலகம் போல, இதுவும் ஒரு தனி உலகம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

உலக நாடுகள் அனைத்திலும் இவர்களே பெரும்பான்மையினர். எனவே, நாம் வாழும் இந்த உலகையே, ‘மூடர் உலகம்’ என்றழைத்தால் அதில் தவறேதும் இல்லை.

ஒட்டுமொத்த  மூடர்களின் எண்ணிக்கை பற்றிய ‘கணக்கெடுப்பு’[Survey] எதுவும் உலக அளவில் நடைபெற்றதாகத் தெரியவில்லை. அது சாத்தியப்பட்டிருந்தாலும் அதன் நம்பகத்தன்மைக்கு எவரும் உத்தரவாதம் தர இயலாது. காரணம், “நான் மூடன்” என்று மனம் திறந்து சொல்லும் பெருந்தன்மை மனித குலத்தவரில் பலருக்கு இல்லை என்பதுதான்.

இங்கு பெரும்பான்மையினர் அவர்களே என்பது நிரூபிக்கப்படவில்லை எனினும், அது சாத்தியமே என்று நம்புகிறார்கள் ஆய்வுலக அறிஞர்கள்.

"I can't give you a percentage, but I'd say it's pretty high because most of us, whether we admit to it or not, have our own superstitions." [-"percentage of people who believe superstitions" - Yahoo Answer] என்பது ஒரு கருத்து.

"Nobody can give you a percentage, because there are so many different superstitions. Some people don't even realize that they're superstitious." [-Yahoo Answer]

இணையத் தேடலின் மூலம், நாடு வாரியான, குத்துமதிப்பான புள்ளிவிவரங்களை ஆங்காங்கே  காண முடிகிறது. அவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.
1. “.....over 85% of us have at least one superstitious belief.....” [tombola, Britain's biggest bingo site]

2.“I'd say at least 90% of Americans do. Most are Christian (80-87%), and I'm sure there are superstitious folks within the remainder, so round it up to 90." [-Google Search]
3.According to one survey, 80 percent of Chinese visit fortunetellers. [-Google...]

4.[Ipsos MORI and Ben Schott of 'Schott's Almanac' ஆகியோர் நிகழ்த்திய ஆய்வின்படி, இங்கிலாந்தில், ‘விதி’, ’ஆன்மா’ போறவற்றை நம்புவோர் எண்ணிக்கை ஐம்பது விழுக்காட்டைத் தாண்டுகிறது. இவற்றையும், கடவுள். சொர்க்கம், மறுபிறப்பு போன்றவற்றையும் நம்பும் பெண்கள் இங்கே அதிகம்.
5. ஜப்பானில்எண் கேடு தருவதாகப் பலரும் நம்புகிறார்கள். நம்மைப் போலவே அவர்களுக்கும் பூனை குறுக்கிடுதல் கெட்ட சகுனம்!

6.இந்தியர் நிலை குறித்துச் சொல்லவும் வேண்டுமோ? மூடநம்பிக்கைகளைக் கட்டிக் காப்பதில் இவர்கள் உலகின் நம்பர் 1 என்று சொல்லலாம். ஆனாலும் நம் ஆய்வாளர்கள், 61%, 51% என்றெல்லாம் குறைத்துச் சொல்லி முழுப் பூசணிக்காயைக் கொத்து புரோட்டாவில் மறைக்கிறார்கள்.

எது எப்படியோ, முன்பு எப்போதும் இருந்ததைக் காட்டிலும்,  ஆறாம் அறிவு வளர்ச்சி கண்டிருக்கும் இந்நாளிலும், மூடநம்பிக்கைகளுக்கு இரையாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.[The modern world is seeing an increasing number of people falling prey to irrational beliefs.....http://www.dailymail.co.uk/femail/article-1280741/Are-YOU-ruled-superstition-It-modern-world-driving-mad-irrational-fears-OCD-rise.html#ixzz37LLRLiD]

அரசியல், அறிவியல், சமயம், ஊடகம், இலக்கியம் என்று அனைத்து உயிர்நாடியான துறைகளிலும் மூடநம்பிக்கையார்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. அவர்களைத் திருத்துவதோ திருந்தச் செய்வதோ அத்தனை எளிதான செயலல்ல. தாம் ஈடுபடுவது மூடத்தனமான செய்கைகளில் என்பது தெரிந்திருந்தும், தங்களது கௌரவத்தையும் சமூக அந்தஸ்தையும் தக்க வைத்துக்கொள்வது அவர்களின் நோக்கமாக இருப்பதே அதற்குக் காரணம்.

இவ்வுண்மையை, அறியாமையால் மூடத்தனங்களின் பிடியில் சிக்குண்டு அல்லல்படும் எளிய மக்களுக்கு உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்வதே இப்பதிவின் நோக்கம் ஆகும்.
=================================================================================================================

















சனி, 17 பிப்ரவரி, 2018

பிரதமர் 'மோடி' அவர்களுக்கு ''நன்றி'' சொல்லலாமா? எப்போது?

''சமஸ்கிருதத்தை விடவும் தமிழ் மொழி மிகவும் தொன்மையானது'' என்று டெல்லியில் இடம்பெற்ற, மாணவர்களுடனான சந்திப்பின்போது, நம் பிரதமர் மோடி அவர்கள் நம் தமிழ் மொழியைப் பெரிதும் புகழ்ந்துரைத்திருக்கிறார்[தி இந்து, 17.02.2018.].
இத்தகு புகழுரைக்காகவோ, ''வணக்கம்'' என்று தமிழில் சொல்லித் தம் சொற்பொழிவைத் தொடங்குவதற்காகவோ நாம் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோமா எனின், ''இல்லை'' என்பதே என் பதில்.

பேச்சளவில் நம் மொழியைப் புகழ்வது மட்டும் போதாது; இதன் வளர்ச்சிக்கு அவர் தமக்குரிய பங்கைச் செலுத்துதல் அவசியம். 

'சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்குதல் வேண்டும். நடுவணரசின் ஆட்சிமொழியாகத் தமிழையும்[பிற மாநில மொழிகளையும்தான்] தேர்வு செய்தல் வேண்டும்'[ஒரு மொழியில் பேசினால் அதை இன்னொரு மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்ப்புச் செய்வதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும், அவை பிற நாடுகளில் பயன்பாட்டில் இருப்பதும் அறியத்தக்கது].

இவை இரண்டும் தமிழர்களின் தலையாய கோரிக்கைகள்; நீண்ட நாள் கோரிக்கைகளும்கூட.

இக்கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே மோடி அவர்களுக்கு நாம் மனம் திறந்து நன்றி சொல்வது சாத்தியம் ஆகும்.

இது விசயத்தில் அவர் தாமதமின்றிச் செயல்படுவாரா?!












வியாழன், 15 பிப்ரவரி, 2018

'சியெம்' சொன்ன 'பூசணிக்காய்' கதை!

''மக்களைக் காப்பவன் மன்னன். நாட்டில் நல்லன நிகழ்வதற்கு அவனே காரணம்'' என்று நாடாளும் மன்னனைப் போற்றுதல் செய்து மக்களிடையே பரப்புரை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான் ஒரு பகுத்தறிவாளன்.

கடவுள் பக்தன் ஒருவன், ''மன்னனல்ல; கடவுளே அனைத்து நல் நிகழ்வுகளுக்கும் காரணமாவார்'' என்று எதிர்மறையாக 'மறுப்புரை' செய்கிறான்.

இருவரும் அவ்வப்போது பொதுவிடங்களில் வாக்குவாதங்களை நிகழ்த்துகிறார்கள்.

மாறு வேடத்தில் சென்றபோது இவர்களின் வாதப்பிரதிவாதங்களைக் கேட்ட மன்னன், ஒரு பூசணிக்காயில் சிறு துளையிட்டு, தங்க நாணயங்களையும் வைரங்களையும் அதில் நிரப்பி, துளை தெரியாமல் அடைத்து, அதைத் தன்னைப் போற்றுகிற பகுத்தறிவாளனுக்குக் கொடுக்கிறான்[பிறர் அறியக் கொடுத்திருக்கலாமே?!].

பூசணிக்காயின் மகத்துவம் அறியாத அவனோ, அதை ஒரு ரூபாய்க்கு ஒரு வணிகனிடம் விற்றுவிடுகிறான்.

அதே பூசணியைப் பக்தன் இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிவந்து, சமைப்பதற்காக அறுத்தபோது, உள்ளே தங்க நாணயங்களும் வைரங்களும் இருப்பதை அறிந்து மன்னனைச் சந்தித்து அவற்றை ஏற்குமாறு வேண்டுகிறான்.

இந்த அரிய நிகழ்வின் மூலம், அனைத்து விளைவுகளுக்கும் மூல காரணம் ஆண்டவனின் அருளேயன்றித் தானல்ல என்ற [தவறானதொரு] முடிவை மேற்கொண்டு, நாணயங்களையும் வைரங்களையும் பக்தனுக்கே வழங்குகிறான் மன்னன்.

இது ஒரு கதை. 100% கதைதான். கடவுள் மீது நம்பிக்கை கொண்ட ஒரு மனிதனால் கற்பிக்கப்பட்ட கதை.

இதையே ஒரு கடவுள் மறுப்பாளன் எழுதியிருந்தால் 'முடிவு' எதிர்மறையாக இருந்திருக்கும் என்பதைக் கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்திருந்தால்.....

தமிழ்நாடு சட்டமன்றத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தைத் திறந்துவைத்த இன்றைய முதலமைச்சர் எடப்பாடிப் பழனிசாமி அவர்களுக்குப் புரிந்திருக்கும். சிந்திக்கத் தவறிவிட்டார்.
ஜெயலலிதாவை அவர் கடவுளுக்கு இணையாணவர் ஆக்கிப் பெருமிதப்பட்டிருக்கிறார். இது அவர்தம் விருப்பம். தடுப்பாரில்லை. மாறாக.....

தற்சார்புள்ள ஒரு பொய்க் கதையைச் சொல்லி, நாட்டின் மீதும் மன்னனின் மீதும் ஆழ்ந்த பற்றுக்கொண்ட பகுத்தறிவாளனான ஒரு சிறந்த குடிமகனை இழிவுபடுத்தியிருக்க வேண்டாம்.

இனியேனும், கதைகள் சொல்லும்போது மிகவும் விழிப்புடன் செயல்படுமாறு முதல்வர் அவர்களை மிக்க அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி.

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

கேள்விகள் இங்கே! பதில்கள் எங்கே...எங்கே...எங்கே?

“எங்கடா போறே?”

“கோயிலுக்கு.”

“எதுக்கு?”

“எல்லாரும் எதுக்குப் போவாங்களாம்?”

“பொழுது போக்க, சிற்பக் கலையை ரசிக்க, ஃபிகர்களை சைட் அடிக்க, கொள்ளையடிக்க, மனப்பூர்வமா சாமி கும்பிட...இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கு. நீ எதுக்குப் போறே? எதிர்க் கேள்வி கேட்காம பதில் சொல்லு.”

“சாமி கும்பிடத்தான் போறேன்.”

“எதுக்கு சாமி கும்பிடணும்?”

“எல்லாரும்...அல்ல, என் கஷ்டங்கள் நீங்க.”

“கடவுளைக் கும்பிட்டா கஷ்டங்கள் நீங்கும்னு யார் சொன்னது?”

“பெரியவங்க சொல்லியிருக்காங்க.”

“பெரியவங்கன்னா...?”

“ஞானிகள். ஆன்மிக வாதிகள்.”

“கஷ்டங்களைக் கொடுத்தது யார்னு அவங்ககிட்டே கேட்டிருக்கியா?”

“இல்ல.”

“நீயா யோசிச்சிருக்கியா?”

“இல்ல.”

“கடவுள்தான் கஷ்டங்களைக் கொடுத்தார்னு நான் சொல்றேன். ஒத்துக்கிறியா?”

“மாட்டேன்.”

“ஏன்?”

“கடவுள் கருணை வடிவானவர்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.”

“கருணை வடிவானவர் கடவுள், சரி. நீ பிறக்குறதுக்கு முன்பே, ‘உன்னை மனுஷனா பிறப்பிக்கப் போறேன். இன்பங்களைவிடத் துன்பங்கள் நிறைய அனுபவிக்க வேண்டியிருக்கும்’னு உன்கிட்டே அவர் சொல்லியிருக்காரா?”

“ஹி...ஹி...பிறக்குறதுக்கு முன்பே எப்படிச் சொல்ல முடியும்?”

“முந்தைய பிறவிகள்ல  நீ மண்ணாவோ, மரமாவோ, எருமையாவோ, பன்றியாவோ இருந்திருப்பே. ஒவ்வொரு பிறவிக்கு இடையிலேயும் பேயாவோ, பிசாசாவோ ஆவியாவோ, ஆன்மாவாவோ அலைஞ்சிருப்பே. அப்பவே சொல்லலாமே?”

“அப்படியெதுவும் அவர் சொல்லி நான் கேட்டதா ஞாபகம் இல்ல.”

“சரி. நீ மனுஷனா பிறந்தப்புறமாவது, உன் கனவிலோ நனவிலோ ‘நான்தான் உன்னைப் படைச்சேன்’னு சொன்னாரா?”

“ஊஹூம்......இல்ல.”

“நிச்சயமா?”

“நிச்சயமா.”

“சத்தியமா?”

”சத்தியமா.”

“ஆக, மனுஷனா பிறக்குறதுதான் உன் விருப்பம் என்பதைச் தெரிஞ்சிட்டுக் கடவுள் உன்னைப் படைக்கல; உன் அனுமதியோடவும் அதைச் செய்யல; அவர் விருப்பத்துக்கு உன்னை இப்படிப் பிறப்பிச்சிருக்கார். இன்பங்களோட துன்பங்களையும் கொடுத்திருக்கார். இன்னிக்கிவரை, அவர் நினைச்சபடி நீ இன்ப துன்பங்களை அனுபவிச்சிருக்கே. இனியும் அவர் விரும்புகிறபடிதான் அனுபவிக்கணும். அவரைக் கும்பிடுவதாலோ, நெஞ்சுருகி, ஆடிப்பாடி அவர் புகழ் பாடுவதாலோ  நீ நினக்கிறபடியெல்லாம் எதுவும் நடந்துடாது. புரியுதா?”

“புரியுது.”
=====================================================================================





வியாழன், 8 பிப்ரவரி, 2018

ராமகோபாலன் சொல்லிட்டாரு! எல்லாரும் விளக்கேத்துங்க!!

'திருச்செந்தூர் முருகன் கோயிலின் சுற்று மண்டபம் இடிந்து விழுந்து ஒரு பெண் காலமானார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இறைவன் வாழும் இல்லங்களில் ஏற்பட்டுள்ள இவை போன்ற அசம்பாவிதங்களால் தமிழக மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் வரக்கூடாது என்பதே ஆன்மிகப் பெரியோரின் கருத்தாக இருக்கிறது. 

பாதிப்பு ஏற்படாமலிருக்க, தை வெள்ளிக்கிழமை மாலை வீடுதோறும் விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்' என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் அறிக்கை['தி இந்து, 08.02.2018] விடுத்துள்ளார்.
கோயில் வளாகங்களில் தீ விபத்து ஏற்பட்டால், தமிழக மக்களுக்கு மட்டும்தான் கெடுதல் விளையுமா? உலகிலுள்ள ஒட்டுமொத்த மனித குலத்துக்கே அல்லவா தீங்கு நேரும்! 

உலக மக்கள் அனைவரும் வீடுகளில் தீபம் ஏற்றிப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றல்லவா இவர் அறிக்கை விட்டிருக்க வேண்டும்? ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனில் ராமகோபாலனுக்கு அக்கறை இல்லையோ? போகட்டும்.

கோயில்களைக் கட்டியவர்கள் மனிதர்கள். அங்கே சிலைகளை வைத்து அவற்றைக் கடவுள் உறையும் இடம் என்று மக்களை நம்பவைத்து, அபிஷேக ஆராதனைகள் நடத்தி, விழாக்கள் எடுத்துக் அவரை மகிழ்விப்பதாக நம்புபவர்களும் மனிதர்கள். அங்கே கடைகள் கட்டி வருமானம் பண்ணுபவர்களும் மனிதர்கள்தான். கோயில் வளாகங்களில் விபத்து நேர்வதற்கும் மனிதர்களே[கவனக்குறைவு] காரணம்.

உண்மை இதுவாக இருக்க.....

உலகம் முழுதும் கணக்கு வழக்கில்லாமல் விபத்துகள் நடப்பதும், அவற்றால் சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்படுவதும் ராமகோபாலன்களுக்குத் தெரியும்.

தொடர்ந்து மக்களுக்கு ஏற்படும் இம்மாதிரியான பாதிப்புகளைத் தடுக்க வீடுதோறும் விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று அறிக்கை விடாத இவர்கள்.....

கோயில்களில் மனிதத் தவறுகளால் ஏற்படும் மிக அரிதான விபத்துகள் குறித்து ஆளாளுக்கு அலறித் துடிப்பது ஏன்? 

ராமகோபாலன்கள் அலறுவதும் அறிக்கை விடுவதும் எதன் பொருட்டு?

மக்களின் நலம் காப்பதற்கா, தங்களின் செல்வாக்கை வளர்த்துக்கொள்வதற்கா?

பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்.


சனி, 3 பிப்ரவரி, 2018

'உடன்கட்டை ஏறுதல்'...சில 'பகீர்', 'திகீர்' தகவல்கள்!!

இந்திய நாட்டில், பலதரப்பட்ட மக்களிடமும் உடன்கட்டை ஏறும் வழக்கம்[சதி] பரவலாக இருந்துள்ளது. ஆணாதிக்கம், சொத்துரிமை, கணவனை இழந்த பெண்களின் ஆதரவற்ற நிலை, கற்பைப் பாதுகாத்தல், அறியாமை என இதற்கான காரணங்கள்  பலவாக இருந்துள்ளன. இங்கு இவை பற்றி விரித்துரைப்பது என் நோக்கமன்று.

இவ்வழக்கம், உண்மையில் பெண்களின் உரிமைகளப் பறிக்க ஆண்கள் செய்த சதியால் உருவானது. ஆண் இனத்தால் பெண்குலத்துக்கு இழைக்கப்பட்ட மாபெரும் பாதகம் இதுவாகும்.

அண்மையில், வரலாற்று ஆய்வாளர் செ.ஜெயவீரதேவன் அவர்கள் எழுதிய, 'உடன்கட்டை'[பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை] என்னும் நூலை வாசிக்க நேர்ந்தது. 

இதில் இடம்பெற்ற, என்றும் மறக்கவே இயலாத சில கொடூர நிகழ்வுகளை இங்கு பதிவு செய்கிறேன்.
*திருமலை நாயக்க மன்னன்[கி.பி.1623 - 1659] மரணம் அடைந்தபோது, அவனுடன் அவனின் 200 மனைவியரும் உடன்கட்டை ஏறினார்கள். அப்போது கருவுற்றிருந்த திருமலையின் மனைவியரில் ஒருத்தி, விஜயரங்க சொக்கநாதனை ஈன்றெடுத்துக் கொடுத்துவிட்டு உடன்கட்டை ஏறினாளாம். 

*கி.பி.1710இல், இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி[கி.பி.1671 - 1710] இறந்தபோது அவனுடய 47 மனைவிமார்களும் உடன்கட்டை ஏற வற்புறுத்தப்பட்டார்கள்.

அவர்களில் சிலர் மட்டுமே மனதைக் கல்லாக்கிக்கொண்டு நெருப்பில் பாய்ந்தார்கள். மற்றவர்களில் சிலர் மரண பீதியுடன் கதறியவாறு தீப்பாய்ந்தார்கள். சுய நினைவிழந்த சிலர் சிதையில் தூக்கி வீசப்பட்டார்கள்.

ஒரு பெண், உரத்த குரலில் அபயக்குரல் எழுப்பியவாறு ஓடிப்போய் அருகிலிருந்த கிறித்தவ ராணுவ வீரனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சினாள். திகிலடைந்த அவ்வீரனோ அவளைப் பலவந்தமாக உதறித் தள்ளவே, சமநிலை இழந்து தடுமாறித்  தலைகுப்புற எரியும் நெருப்பில் விழுந்து கருகிப்போனாள் அவள்.

*நெருப்பில் விழுந்து அனைத்துப் பெண்களும் சாம்பலான நிலையில், புகைந்துகொண்டிருக்கும் கொள்ளிகளை நெருங்கி, மந்திரம் ஓதி, சடங்குகள் செய்தார்கள் பார்ப்பனர்கள்.

*15ஆம் நூற்றாண்டில், விஜயநகர மன்னன் மாண்டபோது அவனின் 3000 மனைவியர் உடன்கட்டை ஏறித் தம் உயிர்களை மாய்த்துக்கொண்டார்கள்.

*பால்ய விவாகம் செய்யப்பட்ட ஒரு சிறுமியின் கிழட்டுக் கணவன் இறந்துவிட,  அந்தச் சிறுமியின் கைகால்களைக் கட்டிய மூன்று பார்ப்பனர்கள் ஒரு மூதாட்டியின் உதவியுடன் அவளை  எரியும் சிதையில் வீசினார்கள். [பார்ப்பனர்களுக்கு உடன்கட்டை ஏறுவது தடை செய்யப்பட்டிருந்தது. உடன்கட்டை ஏற விரும்பும் பார்ப்பனப் பெண்ணுக்கு எவரேனும் உதவி செய்தால்  உதவுபவர், பார்ப்பனனைக் கொன்ற பாவத்துக்கு உள்ளாவார்கள் என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளதாம்].

*போடியில்.....உயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணான வீருநாகம்மாளை மானபங்கம் செய்ய முயன்றபோது, அப்பெண், ஒரு வைக்கோல் போரில் தீ வைத்து அதன் உள்ளே புகுந்து உயிர் நீத்தாள்.

*உடன்கட்டை ஏறும் பெண் அருந்ததிக்குச் சமம் ஆவாள். உடம்பில் உள்ள மூன்றரைக் கோடி ரோமங்களின் எண்ணிக்கையிலான ஆண்டுகள் சொர்க்கத்தில் இருப்பாள். தன் கணவன் பெரும் பாவங்கள் செய்தவனாக இருந்தாலும் அவனையும் தன்னுடன் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வாள்.[இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ பொய்களைச் சொல்லிச் சொல்லிப் பெண்களைத் தெய்வங்கள் என்று புகழ்ந்து ஆண் வர்க்கம் அவர்களைப் பேதைகளாக்கி அடிமைப் படுத்தி ஆதிக்கம் செலுத்தியது இங்கு நினைவுகூரத்தக்கது].

*கணவன் இறந்த பிறகு, அவனின் மனைவியர் உடன்கட்டை ஏற மறுத்தால், மறுப்பவரைத் துண்டுதுண்டாக வெட்டி, கணவனின் கல்லறை அருகே புதைக்கும் வழக்கம் அரேபியாவில் இருந்திருக்கிறது.

*சில நாடுகளில்.....

மன்னன் மரணம் அடைந்தால் மனைவியர், அடிமைகள், பணியாட்கள் ஆகியோரும் அவனுடன் புதைக்கப்பட்டார்கள். காரணம், மறு உலகிலும் அவனுக்கு இவர்கள் சேவை செய்ய வேண்டும் என்பதுதானாம்.

*மகாபாரதத்தில்[கி.மு.300], வாசுதேவரின் மனைவியரான தேவகி, பத்திரிரை, ரோகிணி, மதிரை ஆகிய நால்வரும் உடன்கட்டை ஏறியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

கிருஷ்ணன் இறந்த செய்தி கேட்டு, அவனின் மனைவியரான ருக்மணி, காந்தாரி, சஹ்யை, ஹைமவதி, ஜம்பவதி ஆகிய ஐந்து பேரும் உடன்கட்டை ஏறினார்களாம்.

இன்னும், இவை போன்ற ஏராள சோகத் தகவல்கள் 'உடன்கட்டை' நூலில் செறிந்து கிடக்கின்றன. பதிவின் நீட்சிக்கு அஞ்சி நிறைவு செய்கிறேன்.

நன்றி.