எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 6 ஜனவரி, 2022

உலக அழிவும் கலங்கும் மனித குலமும்!!!

மனித குலம் என்பது தனி மனிதர்களின் தொகுப்பு.

மனித இனம் எப்போது தோன்றியது என்பது குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. வாலில்லா மனிதக் குரங்குகள் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின என்றும் பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரிய மூளையையும், கூர்மையான கண்களையும், வலிமையான கைகளையும் கொண்ட ஆதி மனிதன் தோன்றினான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆக, பத்து லட்சம் ஆண்டுகள் போல மனித இனம் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், அவதாரமாகட்டும், மகானாகட்டும், ஜகத்குருவாகட்டும், சத்குருவாகட்டும் எந்தவொரு தனி மனிதனும் இருந்துகொண்டிருந்ததில்லை; இருக்கப்போவதுமில்லை. அவனுக்கு வாய்த்திருப்பது அற்ப ஆயுள் மட்டுமே.
பல லட்சம் ஆண்டுகளாக இருந்துகொண்டிருக்கும் மனித இனம் இன்னும் மிகப் பல பல பல லட்சம் ஆண்டுகளுக்கு இருந்துகொண்டே இருக்கக்கூடும். இதை எண்ணி உயிரோடு இருப்பவர்கள் பெருமைப்பட்டுக்கொள்வது ஒருவித மயக்கம் என்றே சொல்லலாம்.
பெருமைப்பட்டுக்கொள்கிற எவரும் தன் இனம் இருக்கும்வரை இருக்கப்போவதில்லை என்பதை மறந்துவிடுகிறார்கள்.
ஆகையினால், 
அடுத்த நூற்றாண்டிலோ, மில்லியன், ட்ரில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகோ உலகம் அழியப்போகிறது என்று ஆதாரபூர்வமாக அறிவியலாளர்கள் அறிவித்தாலும் கவலைப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.
ஆதி மனிதன் தோன்றுவதற்கு முற்பட்ட காலங்களில்[கணக்கிடப்படவில்லை; கணக்கிடவும் இயலாது] மனித இனமே இல்லாமலிருந்ததை எண்ணிக் கவலைப்படுகிறோமா?
என்றோ ஒரு காலக்கட்டத்தில் இந்த உலகமே அழியும்போது மனித இனமும் அழிந்துபோகுமே என்பதை நினைத்தோ, அப்புறம் எப்போது தோன்றும் என்பது புரியாததால், புரியாமையை நினைத்தோ கவலைப்படுவோமா? அது அறிவுடைமை ஆகுமா?
ஓருவேளை விஞ்ஞானிகளாலும் அனுமானிக்க முடியாத வகையில், பலகோடி இடிமுழக்கங்கள் ஒருங்கிணைந்தாற்போல அதிரடியாய் ஒரு பெரும் பேரோசை எழ, உலகம் சுக்கு நூறாய்ச் சிதறுமேயானால், அப்போதும்கூட, வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகப் போவதில்லை. ஏனென்றால், துன்பத்தை உணருவதற்கான அவகாசமே அவர்களுக்கு இருக்கப்போவதில்லை. அதிர்ச்சிக்கிடையே அதை உணரவும் இயலாது.
அடுத்த சில ஆண்டுகளில் 100% உலகின் அழிவு நிச்சயம் என்பதைப் புதிய அறிவியல் சாதனங்களின் மூலம் அறிவது சாத்தியம் என்றால் மட்டுமே, குடுகுடு கிழங்களையும் , இப்போதோ இன்னும் சற்று நேரத்திலோ மரணிப்பது உறுதி என்னும் நிலையில் உள்ள நோயாளிகளையும் தவிர, இளவட்டங்களும், நடுத்தர வர்க்கமும் சாவை எண்ணிக் கலங்கிப் புலம்பி நடைப்பிணங்களாய் இருந்துகொண்டிருப்பார்கள் என்று சொல்லலாம். மற்றபடி.....
அடுத்த அமாவாசைக்கு அழியும்; அடுத்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெடித்துச் சிதறும் என்றெல்லாம் ஜோதிடர்கள் சொல்வதாகப் பீதி கிளப்பும் ஊடகச் செய்திகளை எவரும் பொருட்படுத்தத் தேவையில்லை.
கவலப்படவும் தேவையில்லை..... தான் 'சாகப்போவது ஒரே ஒரு முறைதான். அப்புறம் வாழ்வும் இல்லை, சாவும் இல்லை' என்பதை ஒவ்வொரு தனி மனிதனும் மறவாமல் இருக்கும்வரை!
==========================================================================
***பொறுமையுடன் வாசித்தமைக்கும், வாசித்த பின்னரும் என்னை ஏசாமல் அமைதி காத்தமைக்கும் என் நன்றிகள்! ஹி... ஹி... ஹி!!!

ஓர் அந்தரங்கக் கேள்வியும் 'சத்குரு'வின் கிறங்கடிக்கும் பதிலும்!!!

"பல பேருடன் உடலுறவு கொண்டால் ஏற்படும் விளைவு என்ன?" என்றொரு கேள்வி நம்மிடம் கேட்கப்பட்டால், கேட்பவர் அழகான இளம் பெண்ணாகவும் இருந்தால் பதில் சொல்வதைத் தவிர்க்க முடியுமா என்ன? இதோ நம் பதில்.....

1.கண்ட கண்ட நோய்த்தொற்று, உடல் பலவீனமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட நிறையவே வாய்ப்புள்ளது.

2.நம்மோடு உறவில் இருப்பவரின் சொந்தபந்தங்களால் தாக்கப்படலாம்.

3.உடலுறவு இன்பத்திற்காக மட்டுமே நம்மை விரும்புபவர்களாக அந்தப் பலரும் இருந்திட வாய்ப்பில்லை. சிலர் அல்லது, கணிசமானவர்கள் நம்மிடமிருந்து பணம் பறிப்பவர்களாகவோ, நம்மை வைத்து வேறு வேறு அனுகூலங்களை அடைய நினைப்பவர்களாகவோ இருந்திட வாய்ப்புள்ளது.

4.அந்தப் பலரும் நம்மோடு மட்டுமே உறவு கொள்பவராக இல்லாமல், நம்மைப் போலவே பலருடன் அந்தரங்க சுகம் அனுபவிக்கும் அடங்காத வேட்கை உள்ளவர்களாக இருப்பர் என்பதால், இளமையும் அழகும் கவர்ச்சியும் கொண்டவரை அடைவதில் கடும் போட்டி ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் மோதல்கள் உருவாகி, குத்துவெட்டு, கொலை என்று விபரீத நிகழ்வுகள் நடந்திட வாய்ப்புள்ளது.

5.மனம் அலைபாயும். கட்டுப்படுத்தி அன்றாடக் கடமைகளைச் செய்து முடிப்பதும், ஒரு குறிக்கோளுடன் உழைத்து முன்னேறுவதும் சாத்தியப்படாமலே போகலாம்.

6.செத்தொழியும்வரை, "இது போதும்" என்னும் மனநிறைவு பெறுதல் சாத்தியப்படாமல் போவதால், நிம்மதியிழந்து காலம் தள்ள வேண்டியிருக்கும்.

7.உறவு கொள்பவர்களின் குடும்பங்களில் பிரச்சினைகள் உருவாகி, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படுவதோடு, பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகும்.

8.ஒவ்வொரு குடும்பத்திலும் பல பேருடன் உடலுறவு கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், குடும்பக் கட்டுப்பாடுகள் சிதறுண்டு, ஒட்டுமொத்தச் சமுதாயமே சீர்குலையும் என்பது உறுதி.

9.பலருடன் உடலுறவு கொள்ள வாய்ப்பு அமையாத துரதிருஷ்டசாலிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், ஊர்தோறும் தெருக்கள்தோறும் கூட்டம் கூட்டமாகப் பைத்தியங்கள் அலைவது தவிர்க்க இயலாதது.

10.குடும்பஸ்தர்களைக் காட்டிலும், தாடி மீசை வளர்த்துச் சாமியார் ஆனவர்களுக்குப் பல பேர் உறவு மிக எளிதாக வாய்ப்பதால், இந்த மண்ணில் சாமியார்களி நடமாட்டம் அதிகரிக்கும்.

11.எந்தவித முயற்சியும் செய்யாமலே, இதற்கான வாய்ப்பு சிலருக்கு அமைதல்கூடும். அது கண்டு, பொறாமையால் வெந்து புழுங்கி, நடைப்பிணங்களாய் வாழ்ந்து மடிவது வழக்கமான நிகழ்வுகளாக அமையக்கூடும்.

ஆக.....

மேற்கண்டவறு, நம்மால் மிக எளிதாகப் பதில் தரக்கூடிய இந்தக் கேள்விக்கு, வழக்கம்போல, புரியாத பல தத்துவங்கள் சொல்லி கூடியிருப்போரைக் கிறங்கடித்திருக்கிறார் உலகிலுள்ள அத்தனைக் கடவுள்களுக்கும் குருவான[சத்+குரு] ஜக்கி வாசுதேவ்.

'உறங்க அடித்திருக்கிறார்' என்று சொல்ல நினைத்தது தவறுதலாக, 'கிறங்கடித்திருக்கிறார்' என்று பதிவாகிவிட்டது. ஹி... ஹி... ஹி!!!

"சத்குருவின் அந்தரங்கத் தத்துவங்கள் அற்புதமானவை. அவை எனக்கு மிக எளிதாகப் புரிகின்றன" என்று சொல்பவர் உளரெனின், இன்னொரு 'சத்குரு' ஆவதற்கான முழுத் தகுதியும் அவருக்கு உள்ளது என்று உறுதிபடச் சொல்லலாம்.

அவர் இன்றே, முகம் முழுக்க அழகான 'தாடிமீசை' வளர்த்து, தலைப்பாகை உள்ளிட்ட ஆடம்பரமான உடை உடுத்து, ஆங்கிலத்தில் பேசவும், பேச்சின் நடுநடுவே லேசாக உடம்பு குலுக்கி ''ஜோக்'குகள்[செக்ஸ் ஜோக் உட்பட] சொல்லி, "ஹெ... ஹெ... ஹெ" என்று சிரிக்கவும் பயிற்சி எடுக்கலாம்.

அன்னார்க்கு நம் வாழ்த்துகள்!


***ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல், மனம்போன போக்கில் தெரிந்ததையெல்லாம் பேசி, ஒரு பெரிய ஞானி போல் வேடம் புனைகிற இந்த ஜக்கியிடம் எதை எதிர்பார்த்து இந்தப் படித்த முட்டாள்கள் கூட்டம் கூடுகிறார்கள்?

பிரபல ஆன்மிகவாதி என்று பெயரெடுத்துவிட்ட இவரின் ஆங்கில உரையைக் கேட்கப்போவதைப் பெருமையாகக் கருதுகிறார்களா? 

'இவருடன் தொடர்புடைய எல்லாமே இவராலேயே உருவாக்கப்படும் போலி நிகழ்வுகளா?' என்றெழும் சந்தேகத்தையும் தவிர்க்க இயலவில்லை.

எது எப்படியோ, அதிர்ஷ்டக் காற்று இவரிருக்கும் திசையில் பலமாக வீசிக்கொண்டே இருக்கிறது என்பதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை!
==========================================================================