எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 18 மார்ச், 2014

.................................இவ்வாறாகக் கடவுள் காப்பாற்றப்படுகிறார்!!!

தீராத நோய் அவனுக்குத் தீர்ந்தது. அதற்குக் காரணம் ‘தன்னம்பிக்கை’ என்றான் அந்த இளைஞன். “இல்லை. கடவுள் கண் திறந்தார்” என்றாள் அவன் தாய். நீங்கள் யார் கட்சி? கதையைப் படியுங்கள்.
                       

                                  சாமி குத்தம்? [சிறுகதை] 

ராசுவின் தந்தை ஒரு தனியார் வங்கி அலுவலர்.

அவர் கொச்சிக்கு மாறுதல் ஆன போது, தன் குடும்பத்தையும் அங்கே அழைத்துப் போனார்.

ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் தன் சொந்த ஊரான கோவைக்கு மாறுதல் பெற்றார்.

பிறந்த மண்ணுக்குத் திரும்பியதில் ராசுவுக்கு அளப்பரிய ஆனந்தம். நண்பர்களைத் தேடிப் போய் அளவளாவினான்.

பள்ளித் தோழன் அறிவழகனை ஒரு விளையாட்டு மைதானத்தில் சந்தித்த போது, அவன் விழிகளில் மகிழ்ச்சி கலந்த வியப்பு.

“நல்லா இருக்கியா?” என்று கேட்ட அறிவழகனிடம், “நான் நல்லா இருக்கேன். நீயும் நல்லா இருக்கேன்னு நினைக்கிறேன். அப்போ நீ குணப்படுத்த முடியாத விசித்திர நோய்க்கு ஆளாகியிருந்தே. டாக்டர்களுக்கே நோய்க்கான காரணம் புரியல. உடம்பில் எதிர்ப்புச் சக்தி குறையறதால நீ இறந்துடுவேன்னு சொல்லியிருந்தாங்க. அது நடந்து அஞ்சாறு வருசம் ஆச்சு. நீ இப்போ திடகாத்திரமாவும் உற்சாகமாவும் இருக்கே. சாவை எப்படி ஜெயிச்சே?” என்று கேட்டான் ராசு. அவன் குரலில் ஏராள ஆர்வம்.

“ஒரு ‘சைக்கியாட்ரிஸ்டு’கிட்டே அப்பா அழைச்சுட்டுப் போனார். அந்த டாக்டரின் ஆலோசனைப்படி, சாவை விரட்டியடிக்கணுங்கிற வெறியோட, தினமும் ஒரு மணி நேரம் வலியைப் பொறுத்துட்டு ஓடினேன்; உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி எல்லாம் பண்ணினேன். ‘நான் வாழ்வேன்...வாழ்ந்துகாட்டுவேன்’னு அப்பப்போ மனசுக்குள்ள சபதம் எடுத்தேன். தனிமையில், உரத்த குரலில் ஆவேசமா கூச்சலிடுறதும் உண்டு. இதன் மூலமா என் உடம்பில் எதிர்ப்புச் சக்தி கூடிச்சி. நோய் இருந்த இடம் தெரியாம ஓடி ஒளிஞ்சிடுச்சி. டாக்டர்கள் ஆச்சரியப்பட்டாங்க” என்றான் அறிவழகன்.

அறிவழகனைக் கட்டியணைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் ராசு.

இருவரும் கைகுலுக்கிப் பிரிந்தார்கள்.



அறிவழகன் வீடு திரும்பிய போது, அவன் அம்மா, வந்திருந்த சொந்தக்காரருடன் பேசிக்கொண்டிருந்தார்.

“டாக்டருங்க உன் மகன் செத்துடுவான்னு சொன்னாங்களே, அவன் எப்படித் தப்பிப் பிழைச்சான்?” என்றார் சொந்தக்காரர்.

“நான் போகாத கோயில் இல்ல; வேண்டாத சாமி இல்ல. ‘கடவுளே, என் மகனைக் காப்பாத்து’ன்னு நாளெல்லாம் கண்ணீர் விட்டு அழுதேன். கடவுள் கண் திறந்துட்டாரு”- மனம் நெகிழ்ந்து சொன்னார் அறிவழகனின் அம்மா.

“அம்மா, என் நோயைக் குணப்படுத்தக் கடவுளுக்கு இத்தனை வருசம் அவகாசம் எதுக்கு? நீ முதல் தடவை வேண்டிகிட்ட போதே அவர் ஏன் கண் திறக்கல? இனியும் சாமி காப்பாத்திச்சி. பூதம் காப்பாத்திச்சின்னு வர்றவங்க போறவங்ககிட்டேயெல்லாம் உளறாதே” என்று கடிந்துகொண்டான் அறிவழகன்.

“அப்படிச் சொல்லாதடா ராசா. அது சாமி குத்தம்.” அவசரமாக அவன் வாயைப் பொத்தினார் அம்மா.
***********************************************************************************

யுகங்கள் ‘நான்கு’ அல்ல; அவை ‘பதினைந்து’ என்றால் நம்புவீர்களா?!

பகவத்கீதையில், யுகங்கள் நான்கு என்கிறாராம் பகவான் கிருஷ்ணன். விஞ்ஞானம் தெரிந்த உயிரியல் ஆராய்ச்சியாளர்கள், யுகங்கள் பதினைந்து’ என்கிறார்கள். இவற்றில் எதை நீங்கள் நம்புகிறீர்கள்?

சுருக்கமான பதிவையே பெரும்பாலான வாசகர்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிவேன். இதற்குமேலும் இப்பதிவைச் சுருக்க இயலவில்லை. வரிவரியாகப் படிக்காவிடினும் மேலோட்டமாகவேனும் படியுங்கள்


1. கேப்பிரியன் யுகம்:

இதுவே முதல் யுகம்; 80 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதற்கு முற்பட்ட காலத்து உயிர்களின் ஃபாசில்கள் கிடைக்கவில்லையாம்

அதென்ன ஃபாசில்?

முற்காலத்தில், வாழ்ந்து புதைந்த உயிர்களின் எச்சங்கள் [அதாவது, அழுகிய சதை அழிய, எஞ்சியிருக்கும் எலும்புக்கூடு போன்றவை.]

இந்த யுகத்தின் ஆரம்பத்திலேயே, உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டன; உணவு தேடவும் எதிரியிடமிருந்து தப்பிக்கவும் தெரிந்து வைத்திருந்தன.


2. ஆர்டோவிசியன் யுகம்:

இந்த யுகத்தில்தான் கடல் பரப்புகள் தோன்றின. உயிர்கள் வாழ்வதற்கான தட்பவெப்பம் பக்குவமடைந்தது இக்காலக் கட்டத்தில்.

உயிர்களுக்குக் கவச அமைப்புகள் [ஓடு] தோன்றியது.


3. சைலூரான் யுகம்:

36 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது. இப்போதுதான் மீன்களுக்கு எலும்பு உருவானது.


4. டிவோனியன் யுகம்:

பெரிய பெரிய மலைகள் தோன்றின. நிலக்கரிப் படிவங்கள் உருவாயின.

இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிற ‘லான்ஸ்லெட்டு’ என்னும் புழு இந்த யுகத்தில்தான் அவதாரம் எடுத்ததாம்!!!


5. பெர்மியன் யுகம்:

ஏராளமான உயிரினங்கள் அழிந்துபோக, சில உயிரினம் மட்டுமே தப்பினவாம்.

மரவட்டை, பூரான், தேள், சிலந்தி போன்ற விஷ  ஜந்துக்களைத் தோற்றுவித்துப் புண்ணியம் தேடிக்கொண்டது இந்த யுகமே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.


6.டிரையாசிக் யுகம்:

வறட்சி உச்சநிலையை அடைய, பூமியைக் கவ்வியிருந்த பனிப்படிவங்கள் காணாமல் போயின.

பிராணிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொறித்த அதிசயமெல்லாம் இபோதுதான் நிகழ்ந்தது. பாலூட்டி இனங்களின் ஜனனமும் இதே காலக்கட்டத்தில்தான்.


7. ஜுராசிக் யுகம்:

‘ஜுராசிக் பார்க்’ மனத்திரையில் ஓடியிருக்குமே!

பெரிய பெரிய மலைகள் தேய்ந்து குன்றுகளாயின. சதுப்பு நிலக் காடுகள் தோன்றின.

கவனிக்கவும்.....இமயமலை தோன்றியது இந்த யுகத்தில்தானாம்!

மீன் இனங்களுக்குப் பல் முளைத்ததும், டினோசார் என்ற ராட்சத விலங்கு தோன்றியதும் இப்போதுதான்.

‘புரோட்டோஸிராடாப்பு’ என்ற கொம்பு முளைத்த டினோசாரின் முட்டை கிடைத்திருக்கிறதாம். [எங்கே வெச்சிருக்காங்கன்னு தெரிஞ்சா ஒரு நடை போய்ப் பார்த்துட்டு வரலாம்].

100 அடி நீளமுள்ள ஒரு பல்லி இனம், மற்ற உயிரினங்களையெல்லாம் பயமுறுத்தியதாம்!


8. மெஸோஸோய்க் யுகம்:

இந்த யுகத்தின் இறுதியில், டினோசார் இனம் முற்றிலுமாய் அழிந்தது. இதன் அழிவுக்கு, தட்பவெப்பத்தின் திடீர் மாற்றமும், சூறாவளிப் புயல்களும் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

நல்லா கவனிங்க............. பால் தரும் உறுப்புகள் தோன்றி வளர்ச்சி பெற்றதும், தாயன்பு அதிகரித்ததும் இந்த யுகத்தில்தான்.


9. கிரிடேசியன் யுகம்:

மாபெரும் கடல்கோள்கள் நிகழ்ந்து பேரழிவுகள் ஏற்பட்டன.


10. இயோசின் யுகம்:

இன்றைக்கு ஆறு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.

இன்று நாம் காணுகிற தாவரங்கள் இந்த யுகத்திலேயே தோன்றிவிட்டன.

பாலூட்டிகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது.

பூனை, ஒட்டகம், குதிரை போன்றவை பூனையின் வடிவத்தில்தான் இருந்தனவாம். மூன்றடி இருந்த யானைக்குத் துதிக்கை கிடையாது!

இதையெல்லாம் நம்பாதவர்கள், பல்வேறு நாடுகளில் உள்ள மியூஸியங்களுக்குச் சென்று, ஃபாசில்களைப் பார்த்து வரலாம் என்கிறார் நூலாசிரியர்.


11.ஒலிகோசின் யுகம்:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி உருவான காலம் இதுவே.

பசும் புல்வெளிகள் இந்தப் பூமியை அழகுபடுத்தின.

யானைக்குத் துதிக்கை நீட்சி அடைந்தது.

ஆப்பிரிக்கக் காடுகளில் சிம்பன்ஸி குரங்கினம் வாழ்ந்தது இக்காலத்தில்.


12. மையோசின் யுகம்:

இமயமலை இன்றிருக்கும் நிலையை எய்தியது.


13.பிளியோசின் யுகம்:

தாவர, விலங்கினங்கள் முழு வளர்ச்சி பெற்றன.

பாலூட்டிகள் வெப்ப, குளிர் ரத்த ஓட்டங்களைப் பெற, மூளை வளரும் சூழல் உருவானது.


14. பிளைஸ்டோசின் யுகம்:

இது தோன்றி பத்து லட்சம் ஆண்டுகள் ஆகிறது.

மனிதன்  தோன்றியது இந்த யுகத்தில்தானாம்.

17,50,000 ஆண்டுகளுக்கு முந்தைய நம் மூதாதையரின் ஃபாசில்கள் கிடைத்திருக்கின்றனவாம்! படிப்படியாகப் பல்வேறு இனங்கள் தோன்றலாயின. தங்களுக்குள் வாழ்க்கைப் போராட்டங்களை நடத்தின.


15.ஹோலோசின் யுகம்:

இப்போது நடந்துகொண்டிருப்பது இந்த யுகம்தானாம்.

இது, கி.மு.8000 - 9000 இல் ஆரம்பித்தது.              -நன்றி: தினசரி 03.07.86

******************************************************************************************************************

நன்றி:

ராஜா பாலச்சந்தர். [நூல்: பாதை அமைக்கும் பரிணாமம்; மீனா புத்தகப் பண்ணை, விழுப்புரம் 605602.]

*****************************************************************************************************************