எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

தமிழ்மணம் தானியங்கி எந்திரம் பழுது பார்க்கப்படுமா?

மற்ற பதிவர்கள் எப்படியோ, என்னைப் பொருத்தவரை தமிழ்மணத்தின் மீதான என் நம்பிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. காரணங்கள்.....
* முகப்புப் பக்கத்தில் தோன்றும் பதிவுகளுக்கான பட்டியல் மிகப் பல மணி நேரங்கள் நகர்வதே இல்லை.

இணைக்கும் பதிவுகளை[இடுகைகள்]த் தமிழ்மணம் இணைத்துக்கொண்டதாக அறிவித்த பின்னரும் அவற்றில் கணிசமானவை முகப்புப் பக்கப் பட்டியலில் இடம்பெறுவதில்லை.

* தலைப்பைத் திருத்தி மீண்டும் இணைத்தாலும் பெரும்பாலும் பயன் கிட்டுவதில்லை.

* எதிர்பாராத வகையில் திடுதிப்பென்று பட்டியல் வெகு வேகமாக நகர்ந்துவிடுகிறது. அதன் விளைவாக, என் இடுகைக்கு முகப்புப் பக்கத்தில் தோன்றும் வாய்ப்பு பறிபோகிறது. அது எந்தப் பக்கத்தில் போய் நிற்கிறது என்பதைப் பக்கம் பக்கமாகத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

* ஒன்றன்பின் ஒன்றாகப் பதிவுகளை இணைத்துக்கொண்டே இருக்கும் பதிவர்களுக்குப் பிரச்சினை இல்லை. அவர்களின் சில இடுகைகளேனும் முகப்பில் இடம்பெற்றுவிடுகின்றன. நானோ தொடர்ந்து எழுதுவதில்லை. பெரும்பாலும் ஐந்தாறு நாட்களுக்கு ஒரு முறைதான் எழுதுகிறேன்.

* என் பதிவுகள்  கணிசமானவை  முதல் பத்து சூடான இடுகைப் பட்டியலை எட்டினாலும் அவை முகப்புப் பக்கத்தில் தோன்றுவதில்லை.

* இணைக்கப்பட்ட இடுகை முகப்பில் இடம்பெறாவிட்டால் பார்வையாளர் எண்ணிக்கை மிகவும் குறைகிறது. இது யாவரும் அறிந்ததே.

* தமிழ்மணம் ஓட்டுப் பட்டையிலும் பழுது உள்ளது. கிளிக் செய்துவிட்டு, ‘உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது. நன்றி’ என்ற அறிவிப்பைப் பெறுவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. சில நேரங்களில் நிமிடக் கணக்கில்.

* ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்தை அடைவதற்கும் பெரும்பாலும் நீண்ட நேரம் ஆகிறது. சில நேரம் அது சாத்தியப்படுவதே இல்லை.

* இக்குறைகள் களையப்படாதவரை தமிழ்மணம் இணைப்பைப் பெறுவதால் பயன் ஏதுமில்லை என்பது என் எண்ணம். 

* இந்த இடுகையும்கூடப் பின்னுக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. வழக்கமாக வருகை புரியும் நண்பர்கள் என் வலைப்பக்கத்தில் இதை வாசித்தறியலாம்.

* நன்றி.
==============================================================================

ரூபாய் 16 லட்சத்தில் வேட்டி, அங்கவஸ்திரம்!!!

கடவுள் உருவமற்றவர்; விருப்புவெறுப்பு இல்லாதவர் என்று பறை சாற்றும் மதவாதிகளும் ஆன்மிக மேதாவிகளும் பெருகிவரும் மூடத்தனங்களைக் கண்டிப்பதே இல்லை! 

‘16 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம், வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட தர்மாவரம் பட்டு வேட்டி மற்றும் பட்டு அங்க வஸ்திரத்தைக் கடப்பா[ஆந்திர மாநிலம்] பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையானுக்குக் காணிக்கையாக அளித்தார். இது உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது’ என்பது இன்றைய செய்தி[தி இந்து, 20.02.2016].

இவை வேனில் ஏற்றப்பட்டு ஆந்திர மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாம். வேனில் இருந்த தறி மூலம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு[மூடநம்பிக்கை வளர்ப்பில் நம்பர் 1] உட்பட 60 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று ‘ஓம் நமோ நாராயணா’ என்பதை அங்கவஸ்திரத்தில் நெய்தார்களாம்!

ஒரு சந்தேகம், இவர்கள் ஏன் இத்தனை பத்தாம்பசலிகளாக இருக்கிறார்கள்? இது அதி நவீன நவநாகரிக யுகம் ஆயிற்றே. தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட பேண்ட் - சட்டையை ஏழுமலையானுக்குக் காணிக்கை ஆக்கியிருக்கலாமே.

பதினாறு லட்சம் ரூபாய் இங்கே பக்தியின் பெயரால் வீணடிக்கப்பட்டிருக்கிறது. விசேட நாட்களில், ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறையோ இந்த வேட்டி, அங்கவஸ்திரத்தை ஏழுமலையான் சிலைக்குச் சுற்றி, கோயிலை வலம் வந்து, வெறுமனே வாய் பிளந்து வேடிக்கை பார்ப்பதற்கா இத்தனை செலவு?

இம்மாதிரி ஆடம்பரக்களைத் தவிர்த்துக் கடவுளை வழிபட்டால் அவரின் அருள் கிட்டாதா? மனம் அமைதி பெறாதா?

நாள் முழுக்க உழைத்தும் முழு வயிற்று உணவுக்கு வழியின்றி அல்லல்படும் ஏழைகளுக்கு இத்தொகையைக் கொடுத்து உதவியிருந்தால் ஏழுமலையான் கோபித்துக்கொள்வாரா?

கடப்பா பக்தரைப் போன்றவர்கள் இம்மாதிரி மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவது எப்போது? இவர்களை விடுபடாதவாறு தடுத்துக்கொண்டிருக்கும் ஆன்மிக ஞானிகளைக் கண்டிப்பார் யாருமில்லையா? அவர்களைத் தண்டிக்கவும் வழி இல்லையா? 

இவை இப்போதைக்கு விடை கண்டறிய இயலாத கேள்விகள்!
===============================================================================