வியாழன், 30 மே, 2024

மோடி நாடறிந்த ஓர் ஆண்டி???

பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் 30ஆம் தேதி மாலை திருவனந்தபுரம் வருகிறார்; அங்கிருந்து கன்னியாகுமரிக்கு  வருகை புரிகிறார்.

அங்குள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தில் 31ஆம் தேதி தியானம் செய்கிறார்# -இது ‘நக்கீரன்’ செய்தி.

மோடி இந்த நாட்டின் பிரதமர் மட்டுமல்ல, ஓர் ஆன்மிகவாதியும்கூட.

பிரதமர் பதவி என்பது நாட்டை ஆளுவதற்கானது. ஆன்மிகம் தன்னலம் சார்ந்தது.

பிரதமராக வெளியே செல்லும்போது, பயணத்திற்கு உரிய வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேவை. ஆன்மிக&ஆசாபாசப் பயணங்களின்போது இயன்றவரை அவற்றைக் குறைப்பது ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் கடமை.

கோயில் தவறாமல் தரிசனம், சாமி சிலை கண்டால் விழுந்து கும்பிடுவது, மலைக் குகைகளைத் தேடிப்போய்க் கண்மூடித் தியானம் என்றிவற்றிற்காக, இவர் எங்கெல்லாம் பயணம் போகிறாரோ அங்கெல்லாம் பாதுகாப்புப் படை போகிறது; படமெடுத்து ஊடகங்களில் வெளியிட அதிநவீனப் புகைப்படக் கருவிகளும் போகின்றன.

சுருங்கச் சொன்னால், இவர் அரசு அலுவல்களுக்காகச் செலவிடும் நேரத்தைக் காட்டிலும், ஆன்மிகச் சுற்றுலாவுக்கு[உலகம் சுற்றுவதற்கும்தான்] அதிக நேரம் செலவிடுகிறார்; இதற்கான செலவும் அதிகம்.

இவர் மனசாட்சியுள்ள மனிதர் என்றால், நான்கு சுவர்களுக்குள்ளேயோ தனித் தீவுகளுக்குச் சென்றோ இவற்றைச் செய்யலாம். இந்த அற்ப விசயம்கூட ஒரு நாட்டின் பிரதமருக்குத் தெரியாதது பேரதிசயம் ஆகும்.

ஆக, இவரின் செயல்பாடுகள் மூலம் நாம் அறிந்துகொள்ளத்தக்க அதிர்ச்சி தரும் எதிர்கால நிகழ்வு ஒன்று உண்டு. அது.....

மோடி மீண்டும் இந்த நாட்டின் பிரதமராக ஆட்சிபீடம் ஏறினால், இந்த இந்திய நாடு அறிவாளர்கள் பெருமளவில் வாழும் நாடாக இல்லாமல், ஆண்டிகள் கொட்டமடிக்கும் தேசமாக மாறும் என்பது திண்ணம்!

* * * * *

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dmk-emphasis-pm-modi-meditation-program-should-be-cancel

செவ்வாய், 28 மே, 2024

அழகிகளும் அவலட்சணிகளும்!!!

ன்று சுனிதாவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வர இருந்தார்கள்.

சுனிதாவின் அம்மா அழைப்புவிடுத்ததில் அவள் தோழி கவிதா வந்திருந்தாள். 

“ஒப்பனை செய்யுற பெண்ணை அதிகாலையிலேயே வரவழைச்சுட்டேன். இவள் மேக்கப் வேண்டாம்கிறாள். நீ சொன்னா கேட்பா. சொல்லு கவிதா” என்றாள் சுனிதாவின் அம்மா.

கவிதா வாய் திறப்பதற்கு முன்பே பேசத் தொடங்கினாள் சுனிதா. 

“நான் அட்டக் கறுப்பு; எனக்கு அண்ணாந்த சப்பை மூக்கு. ஒட்டின கன்னம்; தூக்கலான நாலு பல்லு. என்னதான் மேக்கப் போட்டாலும் அவலட்சணமான என்னை அழகி ஆக்க முடியாது. கிலோ கணக்கில் நகையும், கட்டுக்கட்டாப் பணமும் கொடுத்தாத்தான் என் கழுத்தில் ஒருத்தன் தாலி கட்டுவான்…..”

நீண்டதொரு பெருமூச்சுக்குப் பிறகு, “எவ்வளவு வரதட்சணை கொடுத்தாலும் என்னை மாதிரி அவலட்சணத்தைக் கட்டிக்கிறவன் பெண்டாட்டியோடு ஒழுங்காக் குடும்பம்நடத்தினதில்ல: நடத்தமாட்டான். அதனால, எனக்கு ஒப்பனையும் வேண்டாம்; கல்யாணமும் வேண்டாம். அப்பா அம்மா இருக்கும்வரை அவங்க பாதுகாப்பில் இருப்பேன். அவங்க காலத்துக்கு அப்புறம் என் எதிர்காலம் பத்தி நிதானமா யோசனை பண்ணி முடிவு பண்ணுவேன்” என்றாள் சுனிதா.

கேட்டுக்கொண்டிருந்த சுனிதாவின் தந்தை, அலைபேசியில் நிகழ்ச்சியை ரத்துசெய்துள்ளதாகச் சொல்லி மாப்பிள்ளை வீட்டாரிடம் வருத்தம் தெரிவித்தார்.

திங்கள், 27 மே, 2024

நம்மைப் பைத்தியம் ஆக்கும் 10 அறிகுறிகள்!

*எளிதில் கோபப்படுதல்.

*அதிகமான அல்லது குறைவான உறக்கம்.

*அற்ப விசயங்களால் விரக்திக்குள்ளாதல்.

*ஏதோ ஒருவிதக் குற்ற உணர்வுடன் இருத்தல்.

*மனச் சோர்வு.

*செயல்பாடுகளில் கவனக்குறைவு.

*அன்றாடத் தேவை குறித்த கவலை.

*பசியின்மை அதிகரிப்பு அல்லது குறைதல்[அடிக்கடி பசியெடுப்பது?].

*மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடாமலிருத்தல்.

*அன்புக்குரியவர்களிடமிருந்து விலகியிருத்தல்.

* * * * *

***நம் மொழி மரபுக்கிணங்க, தமிழாக்கத்தில் எளிய மாற்றங்கள் செய்யப்

பட்டுள்ளன.

மூலம்:

10 signs your mental health is suffering

Getting annoyed easily at others

Under or over sleeping

Getting frustrated at small things

Experiencing feelings of extreme worthlessness or guilt

Low energy for majority of the day

Having a hard time concentrating

Increased substance use

Increase or decrease in appetite

Activities that used to bring you joy no longer do

Isolating yourself from loved ones

The seven signs your mental health is getting worse (msn.com)


ஞாயிறு, 26 மே, 2024

“கருத்தரிப்பு இயந்திரங்கள் விற்பனைக்கு”... சொல்பவர் அண்டப்புளுகன்!!!

 

*** காணொலிக் காட்சியின் இடையில் மிகச் சிறிய தடங்கல் உள்ளது!

கள்ள உடலுறவும் கடவுள் சிலை உடைப்பும்!!!

திவின் தலைப்பை வாசித்ததும், மனிதர்கள் திருட்டுச் சுகம் காணுவதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றுகிறதுதானே?

உங்கள் கேள்வி நியாயமானதுதான்.

சம்பந்தம் உண்டா என்பது பற்றிச் சிந்திக்கத் தூண்டியது  கீழ்க்ணும் நிகழ்வு.

இந்த நிகழ்வு குறித்த செய்தி வெளியானது தினத்தந்தியில்.

ஐயப்பன்[35] என்பவர் நெல்லை மாவட்டத்துக்காரர். எவரும் எதிர்பாராத[அவரே எதிர்பாராதது] வகையில், தான் பிறந்த ஊரிலுள்ள சுடலை[மாடன்?] கோயிலுக்குச் சென்று அந்தச் சாமியின் சிலையை உடைத்துவிடுகிறார்[பின்னர் தற்கொலை செய்துகொள்கிறார்]. காரணம் அறியாத ஊர் மக்கள் காவல்நிலையத்தில் புகார் தருகிறார்கள்.

உரிய விசாரணையில், அய்யப்பனின் மனைவி தன் கள்ளக் காமுகனுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்திருக்கிறார் ஐயப்பன் என்பது தெரியவந்தது. 

அவரின் மனைவி அவருக்கு இழைத்த துரோகத்துக்குத் தண்டனையாக அவரை அல்லவா தண்டித்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. கள்ளக் காமுகனையும்கூடத் தண்டித்திருக்கலாம்.

மாறாக, கோயிலே கதி என்றிருக்கிற சுடலையார் சிலையை அவர் உடைத்தது ஏன்? எவரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.


நாம் புரிந்துகொண்டது..... 

ஐயப்பன் சுடலையின் தீவிரப் பக்தர். 

அவ்வப்போது தம் விருப்பங்கள் நிறைவேற, சுடலையிடம் கோரிக்கை வைப்பதை வழக்கமாக்கியவர். திருமணத்திற்குப் பெண் பார்த்தபோது தனக்கு உத்தமக் குணமுள்ள மனைவி வாய்க்க வேண்டும் எனறு கோரிக்கை வைத்திருப்பார். கடவுள் சுடலை அதை நிறைவேற்றவில்லை. 

அனைத்தையும் படைத்தவனும்/படைப்பபவனும், அவற்றிற்கு நல்ல குணங்களை மட்டுமல்லாமல் கெட்ட குணங்களைத் தந்தவனும்/தருபவனும்  கடவுளே[இங்கு சுடலை] என்பது தன் தற்கொலைக்கு முன்பு ஐயப்பன் அறிந்துகொண்ட தத்துவம்.

தன் மனைவிக்குக் கெட்ட புத்தியைக் கொடுத்தவனும் அவனே[சுடலை] என்பதால், குற்றவாளியான அவனின் சிலையை உடைத்திருக்கிறார். 

ஐயப்பனைப் போலவே மக்களனைவரும் சிந்திப்பார்களேயானால் உலகில் ஒரு சாமி சிலைகூட இருக்காது!

                                         *   *   *   *  *


சனி, 25 மே, 2024

அவள் ‘ரேட்’ ரூ500. அவன் கொடுத்தது?[நன்றி: அண்டப்புளுகன்@user-yx3og4jm5y]

***காணொலியின் பின்னணி வண்ணம்(பொருத்தமாக அமையவில்லை) வாசிப்பைச் சிரமப்படுத்தும். வருந்துகிறேன். 
                                  
                                             *   *   *   *   *

காணொலியில் இடம்பெற்றுள்ள வாசகம்:


அவள் ‘ரேட்’ ரூ500. அவன் கொடுத்தது?


“பரசு, ஐம்பதாயிரம் கடன் கொடுடா”  என்றான் நண்பன் அழகப்பன்.


“கைவசம் ஐநூறுதான் இருக்கு.”


“நேத்துச் சம்பளம் வாங்கியிருப்பியே?”


“சம்பளம் வாங்கின கையோடு மேட்டுத்தெரு சரசுவைத் தேடிப் போனேன். படுக்கச் சொன்னேன். ‘இந்தத் தெருவில் நான் மட்டும்தான் தொழில் பண்ணினேன். இப்போ நாலஞ்சி குமரிங்க கடை விரிச்சிட்டாளுக. நடுத்தர வயசைத் தொட்டுட்டேன். வருமானமே இல்ல. அரை வயித்துக்கும் கால் வயித்துக்கும் போராடுறேன். இன்னிக்கி இன்னும் சாப்பிடலே. ரூபா  கொடுங்க’ன்னு கண் கலங்கச் சொன்னாள்.


குறுக்கிட்ட அழகப்பன், “ரூபாய் ஐநூறு கொடுத்திருப்பே. அதுதானே அவள் ரேட்” என்றான்.


“பணத்துக்குப் படுக்கிறவளா இருந்தாலும் சரசு ரொம்பவே நல்லவள். அவள் பரிதாப நிலை என்னை ரொம்பவே பாதிச்சுது. ஒரு பெட்டிக்கடை வைச்சுப் பிழைச்சுக்கோ”ன்னு சொல்லி என் சம்பளம் ரூபாய் ஐம்பதாயிரத்தையும் அவளுக்குக் கொடுத்துட்டு வந்துட்டேன்” -முகம் முழுக்கப் பரவசம் பரவச் சொன்னான் பரசுராமன்.


“இனி சரசு இந்த அசிங்கத் தொழிலை விட்டுடுவாள். நீயும் கல்யாணம் பண்ணிட்டு ஒழுங்கா குடும்பம் நடத்து” என்றான் அழகப்பன்.       

வெள்ளி, 24 மே, 2024

பூரி ஜெகன்னாதர் கோயில் செருப்புகளைத் திருடிய தமிழர்கள்!!!

#எக்ஸ் சமூகவலைதளத்தில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிசாவில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, புரி ஜெகன்நாதர் கோயிலின் கருவூலத் திறவுகோல் தமிழகத்தில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி, தமிழத்தைக் கொச்சைப்படுத்திப் பேசியிருக்கும் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழ் மொழியையும், தமிழர்களையும் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, ஒடிசாவில் தமிழர்களை இழிவாகக் காட்ட நினைக்கிறாரென்றால், எவ்வாறு இதனைச் சகித்துக் கொள்ள முடியும்?#[தினமலர்].

சுற்றிவளைத்துத் தமிழர்களைப் பூரி ஜெகன்னாதர் கோயில் செல்வங்களைக் கொள்ளையடித்தவர்கள் என்கிறார் மோடி.


நாம் சொல்கிறோம்.....


தமிழர்கள் ஜெகன்னாதர் கோயில் சாவியைத்[கொள்ளையடிக்க] திருடினார்களோ அல்லவோ, அந்தக் கோயில் வாசலில் தினம் தினம் குவிந்த செருப்புகளைக் கொள்ளயடித்துத் தமிழ்நாட்டில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் என்பது உண்மை.


எங்கிருந்தெல்லாமோ எவனெவனல்லாமோ தமிழ்நாடு வந்து தமிழர்களைப் பழித்துப் பேசினால், அவன்களையெல்லாம் அடிக்க இந்தச் செருப்புகள் பயன்படுத்தப்படும், அவன் எவ்வளவு பெரிய ஆளாக் இருந்தாலும்!


த.நா.ஆளுநர் செயலருடன் ஒரு சந்திப்பு!!![‘யூடியூப்’இல் சுட்டது]

* * * * *

https://www.dinakaran.com/saffron_dress_thiruvalluvar_governor_house/

புதன், 22 மே, 2024

கடவுளே மோடி! மோடியே கடவுள்!!

பத்தாண்டுக் காலம் இந்தியாவின் பிரதமராக இருந்து, பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் இது 3ஆவது இடத்தைப் பெற்றிட அரும்பாடுபட்டவரும், தியாகங்கள் பல செய்தவருமான மோடியின் கீழ்க்காணும் பேச்சு[ஒடிசாவில் தொ.க. ஒன்றுக்கு அளித்த பேட்டி]நம்மைப் பெரிதும் சிந்திக்க வைத்திருக்கிறது.

"நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்.....

பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்தப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார்.....

நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது அல்ல; கடவுளால் மட்டுமே இதைக் கொடுக்க இயலும்" என்று தான் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதன் மூலம், கடவுளால் அனுப்பப்பட்டவர் தான் என்பதால், வாக்காளர்களில் கடவுள் நம்பிக்கையுள்ள அனைவரும்[நாத்திகர்கள் விதிவிலக்கு] தன் கட்சிக்கு வாக்களித்து மீண்டும் தன்னைப் பிரதமர் ஆக்குவார்கள் என்று அவர் நம்புவது புரிகிறது

இந்நிலையில், எஞ்சியுள்ள தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு, முடிவுகளும் அறிவிக்கப்படக் கணிசமான நாட்கள் உள்ளன.

இந்த இடைப்பட்ட நாட்களில் தன்னம்பிக்கை இழந்து, தான் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்று மோடி நம்புவாரேயானால்.....

“என்னை இங்கு அனுப்பிய அதே பரமாத்மா, நான் படுதோல்வியைத் தழுவினால், உடனடியாக என்னைத் தன்னிடம் அழைத்துக்கொள்வதாகக் கூறியிருக்கிறார் என்றுகூடச் சொல்வாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆகவே, மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிட்டால் பிரச்சினை ஏதும் இல்லை, மாறாக, முன்னாள் பிரதமர் என்று அழைக்கப்படும் நிலைக்கு அவர் ஆளானால், பரமாத்மா சொன்னது போல் ஏதும் நடந்துவிடுமோ என்று மனம் வெகுவாகக் கவலைப்படுகிறது.

எனவே, “மோடி வெல்க!” என்று வாழ்த்துவோம்.

அவரின் வெற்றி பரமாத்மாவின் வெற்றி!!

* * * * *


செவ்வாய், 21 மே, 2024

விபச்சாரத்தின் வேர்களும் விழுதுகளும்!!!

சென்னையில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதை ரகசியத் தகவல் மூலம் அறிந்த காவல்துறை அங்கு சென்று சோதனையிட்டு, சிறுமிகளையும் அப்பாவிப் பெண்களையும் வைத்து விபச்சாரத் தொழில் நடத்திய புரோக்கரைக் கைது செய்தார்கள் என்பது ஓர் ஊடகச் செய்தியின் உள்ளடக்கம் ஆகும்.

இதில் கவனிக்கத்தக்கது ரகசியத் தகவல் கிடைத்துக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தார்கள் என்பது.

பெரும்பாலும், மாமூல் பெற்றுக்கொண்டு இந்தத் தொழில் அமோகமாக நடக்க உடந்தையாக இருப்பதே காவல்துறைதான் என்பது பலரும் அறிந்ததே.

இவர்கள் கைது செய்த பிரோக்கர் மாமூல் தராமல் இருந்திருப்பார்; அல்லது, மாமூல் தொகையைப் போலீசார் உயர்த்தியிருப்பார்கள்: அல்லது, விடுதி பற்றி அண்டை அயலில் வசிக்கும் மக்களிடமிருந்து சென்ற ஏராளப் புகார்கள் காரணமாக, மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கலாம்; அல்லது, மாதந்தோறும் சில வழக்குகளையேனும் பதிவு செய்தல் என்னும் கட்டாயச் சடங்கை நிறைவேற்றுவதற்காக இருக்கலாம்.

இப்படிப் பல காரணங்கள் இருக்கையில், ரகசியத் தகவலின் பேரில் சோதனை நடத்தினார்கள் என்பது நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது.

இந்தச் செய்தியில், ‘அங்கு 17 வயதுச் சிறுமியிடம் உல்லாசம் அனுபவிக்க 70 வயது முதியவர் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ந்தனர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே இந்தக் கிழவனுக்குப் பதிலாக ஒரு குமரன் இருந்திருந்தால், https://tamil.oneindia.comகாரன் இந்த நிகழ்வைச் செய்தியாக வெளியிட்டிருக்கமாட்டான். காரணம், அதில் கவர்ச்சி இருந்திருக்காது; வாசகர் வருகையும் அதிகரித்திருக்காது.

கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன என்கிறான் ஊடகக்காரன். இது ஊடக தர்மமாம். என்ன வெங்காய தர்மம்? மாற்றுவதால், கைது செய்யப்பட்டவன் களங்கமற்றவனாக ஆகிவிடுவானா? இந்தப் போலியான தர்ம நெறியைப் பின்பற்றாத ஊடக்காரர்களே இல்லை என்று சொல்லலாம்.

‘17 வயதுச் சிறுமியிடன் 70 வயசுக் கிழவன் உல்லாசம்’ என்பதுதான் இந்தச் செய்தியின் உயிர்நாடி ஆகும்.


70 என்ன, 80. 90களைக் கடந்து 100ஐத் தொட்டவன்கள், நோயாளிகள், குடிகாரன்கள், கல்யாணம் கட்டாதவன்கள், மனைவி இருந்தும் ‘இவள் போதும்’ என்று ஒருபோதும் மனநிறைவு பெறாதவன்கள் என்று விபச்சாரிகளை நாடிச் செல்வோர் நாளும் அதிகரிக்கிறது [விதிவிலக்கானவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது].


இந்த அவல நிலையைமாற்றிட, இத்தொழிலை முற்றிலுமாய் முடக்குவது சாத்தியமா?


சாத்தியமே என்றாலும், முடக்குவதால் வேறு பல தீமைகள் விளையக்கூடும்.


பல ஆண்டுகளுக்கு முன்பு, “காவல்துறை நினத்தால், மும்பையில் விபச்சாரத்தை முற்றுலுமாய்த் தடை செய்ய முடியாதா” என்று ஊடகக்காரர் கேட்ட கேள்விக்கு, “தடை செய்யலாம்தான். அப்புறம், குடும்பப் பெண்கள் வீதிகளில் நடமாட முடியாது” என்று  காவல்துறை உயர் அதிகாரியொருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.


இந்நிலையில், உரிய முறையில் கட்டுப்பாடுகள் விதித்து, குறிப்பிட்ட எண்ணிக்கைகளில் இந்தத் தொழிலை நடத்த அரசு அனுமதி வழங்குவது ஏற்புடையதாகும்.


எவ்வகையிலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதோ, கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படாத விடுதி உரிமையாளர்களை அரசு அதிகாரிகளோ, காவல்துறையோ கண்டுகொள்ளாமல் இருப்பதோ, அல்லது அவர்களுக்கு உடந்தையாக இருப்பதோ எதிர்பார்க்கும் பலன்களைத் தராது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.



                                   *   *   *   *   *

https://tamil.oneindia.com/news/chennai/woman-arrested-for-using-minor-girls-and-innocent-girls-for-prostitution-in-chennai-607425.html

ஞாயிறு, 19 மே, 2024

புனைகதைகளாலும் போலிச் சாமியார்களாலும் பிரபலமான திருவண்ணாமலை!!!

திருவண்ணாமலை.

இந்த மலை சிவலிங்க வடிவத்திலிருக்கிறது என்று எவனோ சொல்லிப்போனான். அங்கிருப்பவர்கள் மட்டுமல்ல, போய்த் திரும்புகிறவர்களும் அதையே சொல்லித் திரிகிறார்கள். அண்மையில் அங்குச் சென்றிருந்த நான் கண்டது மரங்களே இல்லாத, சிறு சிறு புதர்களும் முள் மரங்களும் உள்ள சிவலிங்கத்தைக் கொஞ்சமும் ஒத்திராத ஒரு மலையைத்தான்.

‘முக்கோணம் நெருப்பு தத்துவத்தை குறிக்கும். திருவண்ணாமலை மேல் நோக்கிய ஒரு முக்கோணம்’ என்று இன்னொரு பொய்யன் கதைத்திருக்கிறான். ஊன்றிக் கவனித்தபோது முக்கோணம், செங்கோணம், குறுங்கோணம் என்று எந்தவொரு கோணத்திலும் திருவண்ணாமலை காட்சியளிக்கவில்லை.


அது நந்தி[சிவபெருமான் வாகனம்] படுத்திருப்பது போல் இருக்கிறது என்கிறார்கள். கால்களைக் காணோம்; காதுகளும் இல்லை; தலையும் இல்லை; வாலும் இல்லை. ஒரு பக்கம் சற்றே நீண்டு மறுபக்கம் உயர்ந்து காணப்படுகிறது. அது நந்தி போலவுமில்லை, குந்தியிருக்கும் குந்திதேவி போலவும் இல்லை.


அடிவாரத்திலிருந்து மேல் நோக்கி நடந்தால் ‘குரு நமச்சிவாயர்’ குகையைக் காணலாம். முழு முதல் கடவுள் சிவபெருமானே நமச்சிவாயர் வடிவெடுத்து வந்து அங்கு வாழ்ந்தாராம். பார்த்தவர்கள்[?!] எழுதி வைத்திருக்கிறார்கள். இதைப் பலரும் நம்புகிறார்கள்[அதே சிவபெருமான்தான் இப்போது ஞானி ‘பசி’பரமசிவம் ஆக இந்த மண்ணில் அலைந்து திரிகிறார் என்றால் நம்புவார் உண்டா? ஹி... ஹி... ஹி!!!]


இன்னும் இப்படிப் புனைந்துரைக்கப்பட்ட ஏராளக் கதைகள் வெறும் கரடுமுரடாகக் காட்சியளிக்கும் திருவண்ணாமலையைத் தெய்வம் தங்கியிருக்கும் புனிதத் தலம் ஆக்கிவிட்டன.


இந்த இடம் இன்று உழைத்துப் பிழைக்க விரும்பாத சோம்பேறிகளின் புகலிடம் ஆகிவிட்டது[வயதானவர்கள்&நிராதரவானவர்கள் எண்ணிக்கை குறைவு].

மண்டபங்களிலும், சாலை ஓரங்களிலும் காவி உடுத்துத் தாடி வளர்த்து நூற்றுக்கணக்கானவர்கள் தங்கியிருக்கிறார்கள்; எங்கோ போகிறார்கள்; வருகிறார்கள்.

திருவண்ணாமலையின் சுற்றுப்[கிரிவலம்]பாதையில் அடிக்கு ஒரு லிங்கம் உள்ளது என்கிறது புராணம். அது உண்மையோ பொய்யோ, அடிக்கு ஒரு சாமியார் இருக்கிறார் என்பது மட்டும் உண்மை. இதில் வசதியுள்ளவர்கள் ஆசிரமம் அமைத்து[பொது இடத்தில்தான்] தங்கியுள்ளார்கள். அது இல்லாதவர்கள் நடைபாதையில் படுத்துக்கிடக்கிறார்கள்.


கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கடைகள். வியாபாரிகள் காட்டில் 365 நாட்களிலும் அடைமழைதான்.


திருவண்ணாமலையில் உள்ள பல்வேறு ஆன்மிக அமைப்புகளும் ஆசிரமங்களும் தன்னார்வலர்களும் இந்த வேடதாரிகளுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மூலம் இவர்களின் தேவைகள் பூர்த்தியாகின்றன.


காலையில் பாபு சாமி ஆஸ்ரமம், மதியம் ரமணாஸ்ரமம், விசிறிச் சாமியார் ஆஸ்ரமம், மாலையில் திருநேர் அண்ணாமலை சந்நிதானம், வெள்ளிக்கிழமையில் மசூதியில் பிரியாணி. பௌர்ணமி தோறும் அன்னதானம். தினமும் வருகையாளர்கள் வழங்கும் பாக்கெட் சாதம். ஆக.....


வேளாவேளைக்கு வயிறு புடைக்கச் சாப்பிடுகிறார்கள் சாமியார்கள். பட்டினி என்னும் பேச்சுக்கே இடமில்லை. கஞ்சா, மது என்று போதை ஏற்றிச் சொர்க்கச் சுகம் அனுபவிப்பவர்களும் உள்ளனர்.


இந்தப் புனிதத் தலம் சோம்பேறிகளின் புகலிடம் மட்டுமல்ல, மனநிலை பாதித்த பைத்தியங்களை நடமாடும் சாமிகளாக்கி வழிபடும் கிறுக்கர்களை உருவாக்கும் இடமாகவும் உள்ளது.


‘திருவண்ணாமலை தொப்பி அம்மா’ என்று தேடுபொறியில் தட்டச்சு செய்தீர்களேயானால், தலையில் தொப்பியுடன், அழுக்கேறிய அலங்கோல உடையில் ஒரு பைத்தியக்காரி[இவளைப் பற்றியக் காணொலிகளைக் கணக்கிடுவது அத்தனை எளிதல்ல] மனம்போன போக்கில் அலைவதையும், முட்டாள் மனிதர்கள் அவளைக் குனிந்தும் விழுந்தும் கும்பிடுவதையும், அவள் தின்று வீசி எறிந்த எச்சில் பண்டத்தைப் பக்திப் பரவசத்தோடு பங்கிட்டு உண்பதையும்[*காணொலி முகவரி கீழே] காணலாம்{இவளைப் படம் பிடித்து[வீடியோ] யூடியூபில் வெளியிட்டுக் காசு பண்ணுகிறார்கள் சில கயவர்கள் என்பதும் அறியத்தக்கது}.

பதிவு பெரிதும் நீளும் என்பதால், திரட்டப்பட்ட தகவல்களில் பல இடம்பெறவில்லை.


*https://x.com/i/status/1786457300091203898 https://x.com/_kabilans/status/1786457300091203898  > தொப்பி அம்மா.


ஆதார முகவரிகள்:


https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/the-video-of-a-saint-who-is-boozing-near-thiruvannamalai-temple-gone-viral/tamil-nadu20220915212527036036966 > ‘தண்ணி’ அடிக்கும் சாமியார்.


https://www.dinakaran.com/intensitywork-criminalbackground-thiruvannamalai-kriwalabathi-200people-oneday/ > காவல்துறை விசாரணை.


https://www.nakkheeran.in/special-articles/special-article/thiruvannamalai-girivalam-devotees


https://brseetha.blogspot.com/2017/07/blog-post_4.htm


https://temple.dinamalar.com/news_detail.php?id=4156


https://ta.quora.com/

சனி, 18 மே, 2024

இத்தனை அப்பாவியா அமித்ஷா?!

யாரேனும் தென் மாநிலங்களைத் தனி நாடு என்ற தொனியில் பேசினால் அது கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த நாட்டை இனியும் யாராலும் பிரிக்க முடியாது. மூத்த தலைவர் ஒருவர் வட இந்தியா, தென் இந்தியா என்று பிரிக்கலாம் எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி இந்தக் கருத்தை நிராகரிக்கவில்லை[இந்து தமிழ்].

பிரிவினை பற்றி ஒருவர் பேசியிருப்பது நம்மைப் போன்ற பரந்துபட்ட பொது அறிவுள்ள அறிவுஜீவிகளுக்கே[ஹி... ஹி... ஹி!!!] தெரியாது. இந்தியக் குடிமக்கள் உட்பட ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் தெரியாது.

ஊடகப் பேட்டி ஒன்றில் அமித்ஷு இப்படிப் போட்டு உடைக்காமல் இருந்திருந்தால், இந்தப் பிரிவினைப் பேச்சு காற்றோடு கலந்திருக்கும்.

இதற்கு முன்பு[ஆங்கிலேயரால் ‘ஏக இந்தியா உருவாக்கப்பட்ட நிலையில்] இந்தியாவை யாரோ பிரித்தார்கள் என்று எண்ணும் வகையில், “இனியும் இந்தியாவை யாராலும் பிரிக்க முடியாது” என்றும் ஆவேசப்பட்டிருக்கிறார்.

“இத்தனை அப்பாவியாக இருக்கிறாரே உள்துறை அமைச்சரான இந்த அமித்ஷா என்பதை நினைத்தால், நம் மனம் வெகுவாகக் கவலைப்படுகிறது!


* * * * *

https://www.hindutamil.in/news/india/1249171-considering-south-as-separate-country-highly-objectionable-shah-counters-ktr.html

‘முஸ்லிம்’... தேர்தல் வெற்றிக்கு, ‘பாஜக’ கையாளும் மந்திரச் சொல்?!?!

“மோடியின் தலைமையில் இந்தியாவின் பொருளாதாரம் 11ஆவது இடத்தில் இருந்து இன்று 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமரானால் இன்னும் மூன்றே ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது[முதலாவது என்றே சொல்லியிருக்கலாமே?] பெரிய பொருளாதார நாடாக மாறும்” -நட்டா[இந்து தமிழ்]

நட்டாவின் கணக்குப்படி, 11ஆவது இடத்துக்கும் 5ஆவது இடத்துக்கும் இடையிலுள்ள 6 இடங்களைக் கடந்து முன்னேற இந்தியாவுக்கு[மோடி ஆட்சியில்]10 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.

5ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்துக்கு முன்னேற[பொருளாதார வளர்ச்சியில்] இடைப்பட்ட ஓர் இடத்தைக் கடக்க வேண்டியுள்ளது. அதாவது ஓர் இடத்தைக் கடக்க 3 ஆண்டுகள் தேவை என்கிறார் ஜெ.பி. நட்டா.

6க்கு 10 என்றால், 1க்கு 3 தேவையா?

என்ன கணக்கு இதெல்லாம்?

இந்தப் புள்ளிவிவரக் கணக்குக்கு ஆதாரம் வைத்திருக்கிறாரா அவர்?

ஆதாரம் உள்ளதோ இல்லையோ, மோடியைப் புகழ்வதற்கு இப்படியெல்லாம் கணக்குக் காட்டியிருக்கிறார்.

அவரின் இந்தக் கணக்கை விமர்சிப்பது நம் நோக்கமல்ல.

உரையின் இறுதியில், கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கக் கர்னாடக அரசு முயற்சிக்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளதுதான் நம் நெஞ்சை உறுத்துகிறது.

முஸ்லிம்களைக் குறி வைத்துத் தாக்காவிட்டால், தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று திட்டவட்டமாக நம்புகிறார்களா ‘பாஜக’ தலைவர்கள்?

“ஐயோ பாவம் மோடி கூட்டம்” என்று பரிதாப்படுவதைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை!

                                   *   *   *   *   * 

https://www.hindutamil.in/news/india/1249639-if-modi-becomes-pm-india-will-become-world-s-3rd-largest-economy-in-3-years-jp-nadda.html


ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையாமலிருக்க.....[அனுபவப் பகிர்வு]

வெள்ளி, 17 மே, 2024

வயித்துப் பசியும் காதல் பசியும்![உண்மைக் கதை]

ண்பகல் இடைவேளையில், விடுதியில் உணவுண்டுவிட்டுக் கல்லூரி வளாகத்திலிருந்த ஒரு மரத்தடியில் புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள் தாமரை.

“தாமரை” -குரல் கேட்டு நிமிர்ந்தாள். 

அவளின் வகுப்புத் தோழன் செல்வம்  நின்றுகொண்டிருந்தான்.

அவளருகில் அமர்ந்து, “எனக்கு வசதியான குடும்பம். வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கணும்கிற அவசியம் இல்ல. உன்னை மனப்பூர்வமா காதலிக்கிறேன்னு பல தடவை சொல்லியிருக்கேன். நீ சம்மதிச்சா, என் பெற்றோர் அனுமதியோடு உன்னைக் கல்யாணம் பண்ணிக்குவேன்.  சந்தோசமா வாழலாம். சம்மதம் சொல்லு தாமரை” என்றான்.

“சொல்லுறேன். என் அம்மா கல்லூரியில் படிக்கும்போது, உன்னை மாதிரி வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சக மாணவன் அம்மாவை வற்புறுத்திக் கல்யாணம் கட்டிகிட்டான். நான் ஒருத்தி பிறக்கும்வரை அம்மாவுக்கு எந்தக் குறையும் வைக்கல. அப்புறம், குடி, கூத்தி, கள்ள உறவுன்னு அவன் நடத்தையே மாறிடிச்சு. கடுமையா கண்டிச்ச அம்மாவை வீட்டைவிட்டே விரட்டியடிச்சிட்டான்…..”

 சற்று நேரம் யோசித்த பின்னர் தொடர்ந்து பேசினாள்.

“பெத்தவங்களோட கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாம அவனோடு ஓடிப்போன அம்மா நிராதரவா நின்னா. ஆனாலும், வாழ்ந்து காட்டணும்கிற லட்சியத்தோடு, வீடுகளில்  வேலைக்காரியா உழைச்சா…..

ஒரு வாடகை வீட்டில் இருந்துட்டு, வேளா வேளைக்குச் சாப்பிடாம சேமிச்ச பணத்தில் என்னைப் படிக்க வைத்தாள்; நான் நல்லா படிச்சி ஒரு வேலை தேடிகிட்டா வறுமையிலிருந்து விடுபடலாம்னு நம்பினாள்.

செல்வா, நீ நம்ப மாட்டே, இந்தக் கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கின அப்புறம்தான் வயிறாரவும் வாய்க்கு ருசியாவும் சாப்பிடுறேன். படிச்சி ஒரு வேலை தேடிகிட்டா, என் அம்மாவுக்கும் வயிறாரவும் வாய்க்கு ருசியாவும் சாப்பாடு போட முடியும்.

முதல் தேவை வயித்துக்குச் சோறு. அப்புறம்தான் காதல் கல்யாணம் எல்லாம். என்னை மன்னிச்சுடு நண்பா.”

தடைபட்ட புத்தக வாசிப்பைத் தொடரலானாள் தாமரை.

புதன், 15 மே, 2024

மோடியின் மலைப்பூட்டும் மன வலிமை!!![நக்கல் பதிவல்ல]

பிற உயிரினத்தைப் போலவே, தன்னைத் தற்காத்துக்கொள்ளவும், உயிர் வாழ்வதற்கான ஆதாரங்களைத் தேடிப் பெறுவதற்கும், இனவிருத்தி செய்வதற்கும் பிறந்தவன் மனிதன்; ஆசாபாசங்களுக்கிடையே பல்வேறு உணர்ச்சிகளின் தாக்குதலுக்கும் உள்ளாகிறவன்.

அவற்றில், ‘பாலுணர்ச்சி’ முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

மற்ற உணர்ச்சிகளைக் காட்டிலும், இதைக் கட்டுப்படுத்தவே பெரிதும் போராடுகிறான் அவன்.

இளமைப் பருவத்தில், இதைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தையும் அதற்கான வழிவகைகளையும் போதிய அளவு அறியாததால் அதனுடனான போராட்டம் கடுமையாக உள்ளது.

திருமண வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு, புதிய புதிய கடமைகளைச் சுமப்பதாலும், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்வதாலும், அந்த உணர்ச்சியின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது[விதிவிலக்குகள் உள்ளன] என்று சொல்லலாம்.

மனிதன் மணவாழ்க்கை[குடும்பஸ்தன்] என்னும் பந்தத்திலிருந்து விடுபட்டு, அதாவது, மனைவியிடமிருந்து விலகிச் சென்று[மணவிலக்குப் பெற்றோ பெறாமலோ] தனியனாக வாழும்போது அதன் தாக்குதல் மிகப் பல மடங்கு[இளமைப் பருவத்தைக் காட்டிலும்] அதிகமாகிறது, அவன் ருசி கண்ட பூனை என்பதால்.

ஆக.....

மேற்கண்ட மூன்று நிலைகளில்[இளம் வயது>குடும்ப உறவு>தனிமை], அந்தத் தாப உணர்ச்சியுடன் அதிகம் போராடுவது குடும்பத் தொடர்பை அறுத்துக்கொண்டு தனியனாக வாழும்போதுதான்.

அதன் தாக்குதலால் மிகவும் பலவீனப்பட்டு, அது தொடர்பான பல குற்றங்களைச் செய்வதும் தவிர்க்க இயலாததாகிறது.

இந்நிலையை இயன்ற அளவுக்குத் தவிர்க்க.....

‘மடைமாற்றம்’ தேவப்படுகிறது. அதாவது, அவன் தன் ஆற்றலைக் கடின உழைப்பு, பொதுத் தொண்டு, பக்திமார்க்கம்[மனப்பூர்வமானது] போன்றவற்றில் முனைப்புடன் செலுத்துவது மிகு பயன் நல்குவதாக அமையக்கூடும்.

இவ்வாறு, அதி தீவிரமாகச் செயல்பட்டு, சாதனைகள் நிகழ்த்திப் பிரபலம் ஆனவர்கள் இம்மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.

நம் பிரதமர் மோடி அத்தகையவர்களில் ஒருவராவார்.

குடும்பஸ்தராகி மிகக் குறுகிய காலத்திலேயே மனைவியைப் பிரிந்து[பிரிவு ஏன், எப்படி நிகழ்ந்தது என்றெல்லாம அறிய முயற்சிப்பது அநாகரிகம்; குற்றச் செயல்] ‘தனியராக’ வாழ்ந்துகொண்டிருப்பவர்.

மனதைப் பக்தி மார்க்கத்தில் செலுத்தியது, முழு நேர அரசியல்வாதி ஆனது, ‘யோகா’ போன்ற உடல் நலனும் மன நலனும் பேணும் பயிற்சிகளில் ஈடுபட்டது போன்றவை ‘அந்த’ உணர்ச்சியின் கடும் தாக்குதலிலிருந்து விடுபட அவருக்குப் பெரிதும் உதவின என்று உறுதிபடச் சொல்லலாம்[மக்களிடையே மூடநம்பிக்கைகளைப் பரப்பவும், தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றவும் அவரின் பக்தி பயன்பட்டது என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது].

* * * * *

முக்கியக் குறிப்பு:

‘பிரமாணப் பத்திரத்தில் பிரதமர் மோடி தனது மனைவி பெயர் யசோதாபாய் என்றும், மனைவியின் வேலை & அவரது வருமானம் குறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்’[இந்து தமிழ்].

https://www.hindutamil.in/news/india/1247463-owns-no-house-or-car-pm-modi-declares-assets-worth-rs-3-02-crore-1.html