எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 31 ஜூலை, 2019

ஐயகோ பாவம் அத்தி வரதர்!!!

‘அத்தி வரதர் இருக்க வேண்டிய இடம் குளமா,கோயிலா?’ என்னும் தலைப்பில் நேற்று[30.07.2019] இரவு 10.00 மணிக்கு நெற்றியில் விபூதி பூசிய ஒருத்தரும் நாமம் போட்ட இன்னொருத்தரும் சன் தொலைக்காட்சியில்[பகுத்தறிவுப் பரம்பரையில் வந்தவங்களுக்குச் சொந்தமானது] விவாதம் பண்ணினாங்க.
அத்தி வரதர் க்கான பட முடிவு
விவாதம் ரொம்பக் காரசாரமாவே ஆரம்பிச்சுது. அதைப் பின்தொடரவும் விவாதத்தில் வென்றவர் யாருன்னு அறிந்துகொள்ளவும் ரொம்பவே ஆசைப்பட்டேன். அந்த ஆசை நிறைவேறல. 

‘அத்தி வரதர் இருக்க வேண்டிய இடம் குளமா, கோயிலா?’ங்கிற தலைப்பைப் பார்த்ததுமே வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பிச்சதுதான் காரணம்.

சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியலைங்க.. சிரிச்சிச் சிரிச்சி ரெண்டு கண்ணிலேயும் கண்ணீர் நிறைஞ்சு வழிஞ்சதுல விவாத நிகழ்ச்சியைப் பார்க்க முடியாம போச்சு. கட்டுக்கடங்காத சிரிப்புக்குக் காரணம் என்னன்னு கேட்குறீங்களா?

பல ஆண்டுகளா குளத்துக்குள் கிடந்த அத்தி வரதரைத் தூக்கிவந்து கோயிலில் படுக்க வைச்சாங்க. அது சயனம் கோலமாம். தரிசனம் பண்ணினா செத்தப்புறம் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்னு ஊடகங்களுக்குத் தகவல் சொல்ல, அவங்களும் இதை ஊதிப் பெருசாக்கினாங்க. மக்கள் கூட்டம் அலைமோதிச்சி. சொர்க்கத்தில் இடம் பிடிக்கறதுன்னா சும்மாவா?

நாளையிலிருந்து நின்ற கோலத்தில் வரதர் தரிசனம் தருவாராம்.

கோயிலுக்குள் இருந்த வரதரைக் குளத்துக்குள் தூக்கிப் போடுறது; அப்புறம், தூக்கிவந்து கோயிலுக்குள் படுக்க வைக்கிறது; நிற்க வைக்கிறதுன்னு வரதரைப் படாத பாடுபடுத்துறாங்க இந்த மனுசங்க.

இதுல எதுக்காவது வரதர்கிட்டே இவங்க ‘permission' வாங்கினாங்களான்னா, இல்ல. தரமாட்டார்னு பயப்படுறாங்களா? கனவுல வந்து சொன்னாருன்னு அடிச்சிவிட்டாப் போதுமே. பக்தி விசயம்கிறதால பக்தகோடிகள் யாரும் சந்தேகம் கிளப்ப மாட்டாங்க.

வரதரின் நின்ற கோலத் தரிசனம் முடிஞ்சதும் மறுபடியும் குளத்துக்குள் சயன கோலத்தில் கிடத்துறது வழக்கமாம்.

இதுக்குத்தான் இப்போ எதிர்ப்புக் கிளம்பியிருக்கு. கோயிலுக்குள்ளேயே அவர் இருக்கணும்னு சிலர் சொல்ல, அது விவாதத்துக்குரியதா ஆயிடிச்சி. இதன் விளைவுதான் ‘சன்’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற இரு நபர்களுக்கிடையேயான விவாதம்.

காரசாரமான இந்த விவாதம்தான் எனக்குள் அடங்காத சிரிப்பை வரவழைச்சுது. அபூர்வ சக்தி படைத்த அத்தி வரதர் இருக்கவேண்டிய இடத்தையும், இருத்தற்குரிய கோலத்தையும் முடிவு செய்கிறவர்கள் அற்ப மனிதர்களா என்பதை நினச்சிச் சிரிச்சேன்...இரவு உறங்கப்போகும்வரை சிரிச்சேன்; நடுநடுவே உறக்கம் கலைஞ்சி சிரிச்சேன்.

காலையில் எழுந்தப்புறமும் இது குறித்த நினைப்பு வந்தபோதெல்லாம் சிரிச்சேன்.

இன்னமும் சிரிப்பு அடங்கலீங்க. சிரிப்பைக் கட்டுப்படுத்திட்டுத்தான் இந்தப் பதிவை எழுத ஆரம்பிச்சேன்னா பாருங்களேன்!
=================================================================================