புதன், 31 ஆகஸ்ட், 2016

ஒரு ‘நாலாந்தர’ எழுத்தாளனின் ‘நறுக்...சுருக்’ காதல் கதை!

கடந்த ஆண்டில், குமுதம் வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் கலக்கிய கதை இது. இதைப் பிரசுரிக்க[க்கூட] ‘இயலாமைக்கு’ அதன் ஆசிரியர் பெரிதும் வருந்தியிருக்கக்கூடும். நீங்கள் வருந்துவீர்களா, மகிழ்வீர்களா? படியுங்கள்.
மையல்காரியையும் மற்ற பணியாட்களையும் முன்கூட்டியே அனுப்பிவைத்த தனசேகர், தனக்கான அறையில் கண்மூடிப் படுத்திருந்த மகள் வான்மதியை நெருங்கினார்; வாஞ்சையுடன் அவளின் தலை வருடி, “சின்ன வயசிலேயே தாயை இழந்த உன்னைக் கண்கலங்காம வளர்த்தேன். இருந்தும் நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கே. அதுக்கான  காரணம் பிடிபடல. நீ எழுதிவைத்த குறிப்பைப் படிச்சதில், எவனோ உன்னைக் காதலிச்சிக் கைவிட்டிருப்பானோன்னு சந்தேகம் வருது. அதுதான் நடந்ததுன்னா, அப்படியொரு துரோகத்தைச் செஞ்சவன் யாருன்னு  சொல்லு. அவன் எங்கிருந்தாலும் இழுத்துட்டு வந்து உன் கழுத்தில் தாலி கட்ட வைக்கிறேன்.  சொல்லுடா, யார் அவன்?” என்றார்.

வான்மதி ஏதோ சொல்ல நினைத்தாள். பொங்கி வழிந்த அழுகையினூடே வார்த்தைகள் உருப்பெறுவது சாத்தியம் இல்லாமல் போனது.

“உன்னைக் காதலிச்சி இந்த நிலைமைக்கு ஆளாக்கின அயோக்கியன் யாரு? தயங்காம சொல்லு.”

வான்மதி கண்களைத் துடைத்துக்கொண்டாள். அழுகை சற்றே வடிந்து விம்மலாக மாறியிருந்தது.

கலைந்த ஓவியமாகக் கிடந்த மகளின் முகத்தை மெலிதாக வருடித்  தன் பக்கம் திருப்பி, “நீ அஞ்சு வயசுக் குழந்தையா இருந்தபோது உன் அம்மா செத்துப்போனா. போறதுக்கு முன்னாடி உன்னைக் கண்கலங்காம பார்த்துக்கணும்னு என்கிட்டே சத்தியம் வாங்கினா. நான் சத்தியம் தவறலாமா? நீ அழலாமா? உன்னை அழவிடுவேனா?” என்ற தனசேகர், குரல் உடைந்து, தழுதழுத்துத் தானும் அழுகைக்கு ஆயத்தமாவதை உணர்ந்து பேசுவதை நிறுத்தினார்; சற்று நேரம் மௌனத்தில் புதையுண்டார்.

வான்மதியின் அன்னை சத்தியவதிக்குச் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றத் தனசேகர் செய்த தியாகம் கொஞ்சநஞ்சமல்ல. மறுமணம் செய்துகொள்ளவில்லை; தகுதி இருந்தும் ஊருக்கொரு சின்னவீடு வைத்துக்கொள்ளவில்லை

வான்மதி கேட்டதையெல்லாம் வாங்கித் தந்தார்; கேட்க நினைத்ததையெல்லாம் கொண்டுவந்து குவித்தார்; கேட்க நினையாத பரிசுகளால் அவளைக் குளிப்பாட்டினார். சுருங்கச் சொன்னால், வான்மதி உறங்கும்போதுகூட அவள் வதனத்தில் புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டார். அவர் செய்த ஒரே தவறு, ஒரு கன்னிப் பெண்ணுக்குத் தேவையான குறைந்தபட்சக் கட்டுப்பாடுகளைக்கூட விதிக்காமல்போனதுதான்.

அதன் விளைவு, அவர் கொஞ்சமும் எதிர்பாராத அந்த விபரீதம் நடந்துவிட்டது. ஒரு மாலைப் பொழுதில், தனியறையில், கதவைத் தாழிட்டுக்கொண்டு, துப்பட்டாவில் சுருக்கு வைத்துத் தொங்கிவிட்டாள் வான்மதி..

சிற்றுண்டி கொண்டுபோன சமையல்காரி ஜன்னல் வழியாக இந்தக் காட்சியைக் கண்டு பதறிக் கூச்சலிடப் பணியாட்கள் திரண்டு வந்து கதவை உடைத்து அவளை விடுவித்தார்கள். டாக்டரை வரவழைத்து, தனசேகருக்குத் தகவல் கொடுத்து...எந்தவொரு சேதாரமும் இன்றிக் காப்பாற்றப்பட்டாள் வான்மதி.

மகளின் உயிருக்கு இனி ஆபத்தில்லை என்ற நிலையில்தான்,  ஒரு வெள்ளைத் தாளில் அவள் எழுதிவைத்த ,’காதல் கொன்றுவிடு’ என்னும் குறிப்பு பற்றி யோசித்தார் தனசேகர்; தன் செல்ல மகளை எவனோ காதலித்துக் கைவிட்டிருக்கிறான் என்று அனுமானித்தார்.

”அவன் யாருன்னு சொல்லுடா. இருபத்துநாலு மணி நேரத்தில் கட்டி இழுத்துட்டு வந்து உன் கழுத்தில் தாலி கட்ட வைக்கிறேன்” என்றார் மகளின் முன்நெற்றியை  வருடியவாறு.

இருபத்திநான்கு மணி நேரத்தில் என்றது சாத்தியம் இல்லாமல் போனாலும், தனசேகர் வெறும் வாய்ச்சொல் வீரரல்ல. ஒரு வாரமோ ஒரு மாதமோ சொன்னதைச் சாதித்துவிடும் பிடிவாதக்காரர்; பிரபலமானவரும்கூட.

“யாரம்மா அவன்? உன் கிளாஸ்மேட்டா? ஒரு நாள் உன்னைக் கல்லூரியில் விட வந்தபோது அறிமுகம் பண்ணிவெச்சியே சசிகுமார், அவனா வான்மதி?”

வான்மதியிடம் தேம்பல் மிச்சமிருந்தது; பதிலில்லை.

தொடர்ந்தார் தனசேகர்:

“கண்ணப்பனா...கார்த்திகேயனா...சிவநேசனா...சொல்...சொல்...”

சொன்னாள் வான்மதி. “அப்பா, நீங்க நினைக்கிற மாதிரி இவங்கள்ல யாரும் என்னைக் காதலிக்கல; கைவிடவும் இல்ல. நான்தான்  இவங்க மாதிரியான வயசுப் பையங்களைக் காதலிச்சேன்...இல்ல இல்ல...காதலிக்கிற மாதிரி நடிச்சேன்....”

“என்னம்மா சொல்றே?” -நா குழறியது தனசேகருக்கு.

''அப்பா, ஏழைப் பொண்ணுகளைப் பொருத்தவரை காதல் ரொம்பப் புனிதமானது. என்னை மாதிரி பணக்காரப் பொண்ணுகளுக்கு இது ஒரு பொழுதுபோக்கு. நான் நெறையப் பையன்கள்கூடப் பழகினேன். சிலரோட நெருங்கிப் பழகினேன். பழக்கம், காதலாகி, ‘இனி கல்யாணம்தான்’கிற கட்டத்தை நெருங்கும்போது, ‘காதல் கொன்றுவிடு’ன்னு ஒரு மெஸேஜ் அனுப்பிக் காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சுடுவேன். என்னைக் காதலிச்சவன் நொறுங்கிப் போவான். அப்படி நொறுங்கிப் போனவங்கள்ல சரவணனும் ஒருத்தன். நல்ல பையன். படிப்பைப் பாதியில் விட்டுட்டு, முகத்தில் தாடியும் உடம்பெல்லாம் அழுக்குமா கவிதை எழுதிட்டு அலையறான்னு கேள்விப்பட்டேன்..”

தனசேகர் மௌனம் போர்த்திருந்தார்.

“என் காதல் நாடகத்தால், கட்டிய பெண்டாட்டி கைக் குழந்தையோட பிறந்தகத்துக்குக் கோவிச்சிட்டுப் போக, அரைப் பைத்தியமாய் அலைஞ்சிட்டிருக்கார் பேராசிரியர் சற்குணம். எனக்கு ரத்தத்தில் காதல் கடிதம் எழுதின வினோத் எங்க போனான்னே தெரியல. அவனுடைய விதவைத் தாய், மகன் மீதான நம்பிக்கைகளைக் கண்ணீரில் கரைச்சுட்டுப் பத்துப் பாத்திரம் தேய்ச்சி வயித்தைக் கழுவிட்டிருக்காங்களாம். இப்படி என்னைக் காதலிச்சவங்க எல்லாம் பாதிக்கப்படுவதைக் கேள்விப்பட்ட அப்புறம்தான் சிந்திக்க ஆரம்பிச்சேன். நான் செய்திட்டுவந்த குற்றம் புரிய ஆரம்பிச்சுது. அப்பாவி இளைஞர்களோட வாழ்க்கை சீரழிஞ்சி போவதைப் பார்த்து விபரீதமான இந்த விளையாட்டையும் நிறுத்தினேன். ஆனா, விதி, என் வாழ்க்கையில் வேறு மாதிரி விளையாடிச்சி.” -கண்மூடி மௌனத்தில் ஆழ்ந்தாள் வான்மதி. மூடிய இமைகளுக்குள்ளிருந்து கண்ணீர்த் துளிகள் வெளிப்பட்டன.

தொடர்ந்தாள்: “பையன்க வாழ்க்கையைப் பாழடிச்ச என் காதல் விளையாட்டுக்கு நானே பலியாயிட்டேன். என்னோட படிச்ச விவேக்கைத் தீவிரமா காதலிச்சேன். ஆனா, அவன் என்னைக் காதலிக்கல. என்னைக் காதலிச்சவங்களுக்கு நான் எப்படிக் ‘காதல் கொன்றுவிடு’ன்னு குறுஞ்செய்தி அனுப்பினேனோ அதே மாதிரி அவனும் எனக்கு அனுப்பினான். அது தந்த அதிர்ச்சியில் ரொம்பவே உடைஞ்சி போனேன்; செத்துடறதுன்னு முடிவு பண்ணினேன்....நீங்க கொடுத்த  சுதந்திரத்தைத் தப்பான வழியில் பயன்படுத்தி அதுக்கான தண்டனையையும் அனுபவிச்சிட்டேன்; உங்க கௌரவத்துக்கும் பங்கம் உண்டுபண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்கப்பா.” 

-சொல்லி முடித்து, மீண்டும் குமைந்து குமைந்து அழ ஆரம்பித்தாள் வான்மதி.

அவள் அழுது தீர்க்கட்டும் என்று காத்திருந்தார் தனசேகர்.
===============================================================================



ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

மரணத்திற்குப் பின்.....மதங்கள் சொல்வதென்ன?

செத்துத் தொலைத்த பிறகு,  ஆவி என்றோ ஆன்மா, பூதம், பேய், பிசாசு என்றோ ஏதோ ஒரு  வடிவில், கடவுளைப் போலவே மரணமில்லாப் பெருவாழ்வு வாழ நம் எல்லோருக்கும் ஆசைதான். 
அந்த ஆசைதான் சொர்க்கம், மறுபிறவி, இறைவனின் திருவடி நீழல் என்று எதை எதையோ நம்மவர்களைக் கற்பனை செய்ய வைத்திருக்கிறது.

ஆவி முதலானவை இருப்பது உண்மை என்றாலும், அவற்றிற்கு ஐம்புல நுகர்ச்சி உண்டா, பரு உடலுடன் வாழ்ந்தபோது பெற்ற அனுபவங்களை அசை போடும் திறன் உண்டா, உணர்ச்சியுண்டா என்பன பற்றியெல்லாம் நம்மவர்கள் சிந்திப்பதில்லை. ஆயினும், நம்மில் பெரும்பாலோர் அவற்றை நம்புகிறார்கள். காரணங்கள்.....

இறந்த பிறகு என்ன ஆவோம் என்று யோசிப்பதால் தோன்றும் அச்சம்!... அனுபவித்த சுகங்களை மீண்டும் பெறப்போவதில்லை என்பதால் உண்டாகும் ஏக்கம்!!

செத்த பிறகு, சடலத்திலிருந்து ஏதோ ஒன்று வெளியேறுகிறது; அது யுக யுகாந்தரங்களுக்கும் அழிவதே இல்லை. ஆவியாய்ப் புகையாய் விண்ணில் அலைந்தாலும், கணக்கிலடங்காத பிறவிகள் எடுத்தாலும் அது அழிவதே இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டால் கடவுள்கூட மனிதனின் கண்களுக்கு வெறும் துரும்பாகத்தான் காட்சியளிப்பார்!

நிரூபிக்கப்படாததால்தான்.....

தத்தம் கற்பனைத் திறனுக்கேற்பப் பலரும் பல்வேறு கதைகளைக் கட்டிவிட்டிருக்கிறார்கள்.

கூகிள் தேடலில் முங்கி எழுந்தால்  அம்மாதிரி கதைகள் கொட்டிக் கிடப்பதைக் காண முடிகிறது.

அவற்றில் கீழ்க்காண்பதும் ஒன்று.

1975ல் ரோமன்மூடி என்பவர் "வாழ்க்கைகக்குப் பின் வாழ்க்கை" எனும் தனது கட்டுரையில்தான்இறப்பின் விளிம்புவரை சென்று திரும்பியவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களைக் குறிப்பிடுகிறார். "ஒருவர்இறக்கும் நிலையில்,  அவர் இறந்துவிட்டதாக டாக்டர் கூறுவதைக் கேட்கிறார்.பிறகு ஒரு சத்தம்அல்லது இசைக் குரல் கேட்கிறது.- பின்னர் ஒரு இருட்டு சுரங்கப்பாதை போன்ற ஒன்று புலப்படுகிறது. இறப்பவரால்தனது உடல் அந்த சுரங்கப்பாதையில் செல்வதைக் காணமுடிகிறது. பின்னர்முன்னால் இறந்த பலரைச் சந்திக்கிறாந்ர். ஒரு ஒளிசக்திஅவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.- இதன்மூலம் அவரால் தான் வாழும்போது எப்படி இருந்தோம் என்பதை எடைபோட முடிகிறது. வழியில் எதோ ஒரு தடை - அவர் வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லவேண்டும் எனக் காட்டுகிறது. சென்ற இடத்தில்அவருக்கு அமைதிசந்தோஷம்அன்பு எல்லாம் கிடைத்தாலும் அவர் தனது உடலுக்கே திரும்பிவந்து மீண்டும் உயிர் பெறுகிறார். பிறகு தனது அனுபவத்தை பிறரிடம் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அவர் பெற்ற அனுபவம் அதற்குப் பிறகு அவர் வாழும் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது." என அவர் கூறுகிறார்.

பல விஞ்ஞானிகள் ரொமான்ட் மூடி கூறிய கருத்துக்களை ஏற்க மறுத்தார்கள். அவர்கள் மூடிமிகைப்படுத்திக் கூறுவதாகக் கருதினார்கள். [ http://www.livingextra.com/2011/01/2.html#ixzz4IVX929A0]

செத்த பிணம் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பே இல்லை; இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர், உயிர் பிரியாத நிலையில், ஏதோவொரு கனவு நிலையில் கண்டறிந்ததை மேற்கண்டவாறு உளறியிருக்கக்கூடும்.  

மருத்துவர்கள் செத்துப்போனதாகச் சொல்லி, தகன மேடையில் கிடத்தப்பட்டவர்கள் கண் விழித்துப் பார்த்துச் சுற்றியிருப்பவர்களைத் திடுக்கிட வைத்திருக்கிறார்களே என்றால், அங்கே மருத்துவர் தவறிழைத்திருக்கிறார் என்பதே உண்மை.

அயல்நாட்டு ‘ரொமாண்ட் மூடி’களையும் தாடிகளையும் தூக்கிச் சாப்பிடுகிற ஆட்களெல்லாம் நம் ஊரில் இருக்கிறார்கள். நோயில் கிடந்து பிழைத்தெழுந்த ஒருவர் சொன்னார்:  “சொந்தபந்தங்களெல்லாம் என்னைச் சூழ்ந்து ஒப்பாரி வைத்து அழுவதைப் பார்த்துக்கொண்டே யமகிங்கரருடன் யமலோகம் போனேன். ‘இவனை ஏன் கொண்டுவந்தீர்கள்? இவன் ஆயுள் கெட்டி’ என்று சித்தரபுத்திரன் கடிந்துகொண்டார். எனக்குக் களி உருண்டையும் அகத்திக்கீரையும் சாப்பிடக் கொடுத்துத் ‘தொப்’ என்று அங்கிருந்து வீசிவிட்டார்கள்.”

இப்படியான கதைகளை இங்கே பட்டியலிடுவது என் நோக்கமன்று; மரணத்திற்குப் பின்னரான நம் நிலைமை குறித்து மதங்கள் என்ன சொல்கின்றன என்பதை விவரிக்கவே இப்பதிவு.

இந்துமதம்:
உடல் அழியும்போது அதிலிருந்து வெளியேறுகிற ஒன்றுக்கு ‘ஆன்மா’[ஆத்மா] என்று பெயர். இவ்வுலகில் மனித உருவெடுக்கிற அது, செய்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்பப் பல பிறவிகள் எடுக்கும். இறுதியில் பிரமத்துடன்[கடவுள்] இரண்டறக் கலக்கும்.

கிறித்தவ மதம்:
மனிதன் ஒரு முறை மட்டுமே இவ்வுலகில் பிறந்து வாழ்கின்றான்; பிறக்கும்போது ஆன்மாவுடன் பிறக்கிறான்.  இறந்தவுடன் ஆன்மா மேலே செல்கிறது. தீர்ப்புக் காலத்தில் அது கடவுள் முன் நிறுத்தப்படுகிறது; கடவுளின் தீர்ப்புப்படி மோட்சத்திற்கோ நரகத்திற்கோ அனுப்பப்படுகிறது. உலகில் தூய வாழ்க்கை வாழ்ந்தவனின் ஆன்மா மோட்சம் பெற்றுப் பின்னர் கடவுளின் அருகில் அமரும் வாய்ப்பைப் பெறுகிறது.

இஸ்லாம் மார்க்கம்:
செத்த பிறகு எல்லோரும்[ஆவியா ஆன்மாவா தெரியவில்லை] அல்லாவின் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். அவரவர் செய்த பாவபுண்ணியங்கள் பட்டியலிடப்பட்டு மோட்சத்திற்கோ நரகத்திற்கோ அனுப்பப்படுவார்கள். நரகம் சென்றவர்கள் தீயில் தள்ளப்பட்டு வதைக்கப்படுவார்கள்.

புத்த மதம்:
[கடவுளின் ‘இருப்பை’க் கண்டுகொள்ளாத புத்த மதம் ‘ஆன்மா’வை நம்புகிறது]. மனிதன் தனக்கு வாய்த்த ஆறாவது அறிவால் இவ்வுலகைப் புரிந்துகொள்கிறான். அதன் மூலம் தன் ஆன்மாவை மறுவாழ்வுக்கு[மறுபிறப்பு] இட்டுச்செல்கிறான்.

சமண மதம்:
மரணத்தின் பின்னர் ஆன்மா வெளியேறுகிறது. ஆற்றிய வினைகளுக்கேற்ப மறுபிறவியில் புதிய உருவத்தைப் பெறுகிறது.

உலகின் மிகப் பெரிய மேற்கண்ட மதங்கள் எல்லாம், அழிவுறும்   மனித உடம்பிலிருந்து ஆன்மா வெளியேறுவதாகச் சொல்லியிருக்கின்றன.

நம்புவதா, வேண்டாமா?

என்னுடைய பழைய சில பதிவுகளின் முகவரிகளைக் கீழே தந்திருக்கிறேன். விருப்பம் / நேரம் இருந்தால்  அவற்றை ஒருமுறை வாசியுங்கள். கேள்விக்கான பதில் உங்களுக்குக் கிடைத்திடக்கூடும்![ஒன்றில் இடம்பெற்ற கருத்து மற்றொன்றிலும் இடம்பெற்றால் பொறுத்தருளுங்கள்]
===============================================================================

http://kadavulinkadavul.blogspot.com/2011/10/31.html

http://kadavulinkadavul.blogspot.com/2011/11/33.html

http://kadavulinkadavul.blogspot.com/2012/07/53.html

http://kadavulinkadavul.blogspot.com/2015/03/blog-post_49.html

http://kadavulinkadavul.blogspot.com/2013/03/blog-post_14.html
===============================================================================







திங்கள், 22 ஆகஸ்ட், 2016

உலகின் நம்பர் 1 தத்துவச் சிறுகதை!

தோலும் சதையுமாய் நடமாடிய காலத்திலும் சரி, பிரபஞ்சத்தின் ஓர் அணுப்புள்ளியான இப்பூமண்டலத்திலிருந்து விடுபட்டு, சூக்கும தேகத்துடன் வெளி மண்டலத்தில் பிரவேசித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் சரி, பரம்பொருளைப் பற்றிய சிந்தனையிலிருந்து நான் கிஞ்சித்தும் விடுபடவே இல்லை.

பரம்பொருள் எனப்படும் அந்த ஆண்டவன், கோடானுகோடி அண்டங்களை உள்வாங்கிக்கொண்டு, வரையறைகளுக்குக் கட்டுப்படாமல் விரிந்து...மிக மிக மிக விரிந்து பரந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்ச வெளியில் எங்கே இருக்கிறான்?

அறியும் பேரார்வத்துடன் நான் பயணித்துக்கொண்டிருந்தேன். 

பருப்பொருளாகிய தேகத்தை நான் ஏற்கனவே இழந்துவிட்டிருந்ததால், இங்கே ‘நான்’ என்று நான் குறிப்பிடுவது நுண்பொருளான ஆன்மாவைத்தான்.

பஞ்ச பூதங்களின் சேர்க்கையில் உருவான கோள்களையும், நட்சத்திரங்களையும் இன்ன பிறவற்றையும் கடந்து வெற்று வெளியில் நான் பயணித்துக்கொண்டிருந்தேன். என்னுடன் ஏராள ஆன்மாக்கள்.

பிரபஞ்ச வெளியின் ஒரு திக்கில் கன்னங்கரிய இருள். மிகப் பெரும் பரப்பை அது ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது. அந்த வெளியில்தான் நரகம் இருப்பதாக ஆன்மாக்கள் நடுங்கும் குரலில் முணுமுணுத்தன.

இன்னொரு திக்கில் ஒளி வெள்ளம். அதை ஏறிட்டுப் பார்ப்பதே அசாத்தியமாகத் தோன்றியது. அங்கேதான் சொர்க்கம் இருப்பதாக ஆன்மாக்கள் சொல்லிக்கொண்டன.

செய்த பாவபுண்ணியங்களுக்கேற்ப, அனிச்சைச் செயலாய் ஆன்மாக்கள் பிரிக்கப்பட்டு ஏதாவது ஒரு வெளியில் செலுத்தப்பட்டன. எனக்குப் பிரகாச வெளி.

அவ்வெளியில் நுழையாமல் நான் தயங்கி நின்றேன்.

“ஏன் நிற்கிறாய்? தொடர்ந்து செல்” அசரீரியாய் ஒரு குரல் ஒலித்தது. அந்த வினாடிவரை நான் கேட்டறியாத முற்றிலும் மாறுபட்ட ஒலி அது. அது என்ன மொழி என்ற கேள்வி தேவையற்றுப்போனது.

“நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்” என்றேன்.

“அவரைச் சந்திக்க விரும்பினால் நீ சொர்க்கத்தை இழக்க நேரிடும்.”

“சம்மதம். ஒரே ஒரு முறை கடவுளைச் சந்திக்க முடியும் என்றால் நான் நரகம் புகவும் தயார்’ என்றேன் திடமான குரலில்.

என் பின்னால் அணிவகுத்து நின்ற ஆன்மாக்கள் என்னைப் பைத்தியமாக எண்ணிப் பரிதாபப்பட்டன.

“கடவுளைச் சந்தித்த பிறகு நீ மீண்டும் பூமண்டலத்தில் பிறந்து அல்லல்பட நேரிடும்.” என்றது அசரீரி.

மீண்டும் “சம்மதம்” சொன்னேன்.

“அதோ தெரிகிறதே இருளற்று ஒளியற்று நிறமற்று ஒரு பரந்த வெளி, அதைக் கடந்தால் ஞான வெளி தென்படும். அதையும் கடந்தால் சூன்ய வெளி. அதன் மையப் புள்ளியில் நீ கடவுளைச் சந்திப்பாய். செல்லலாம்.” -அசரீரி.

ஞான வெளியில் என் பயணம் தொடர்ந்தது. தூரம் எவ்வளவு; கால அளவு என்ன என்பவற்றையெல்லாம் என்னால் கணிக்க இயலவில்லை. ஆனாலும் பயணித்தேன்...பயணித்தேன்...பயணித்தேன்.

ஒரு கட்டத்தில், ஞான வெளியைக் கடந்து சூன்ய வெளியில் நுழைந்துவிட்டதை என்னால் உணர முடிந்தது. அது சாத்தியமானது எப்படி என்பதையும் என்னால் அறியவோ உணரவோ இயலவில்லை.

சூன்யத்தின் மையப் புள்ளியை நான் நெருங்கியிருக்க வேண்டும். “மானிட ஆன்மாவே நில்” என்ற குரல் என்னை ஆணியடித்தாற் போல் நிற்க வைத்தது.

“நான் கடவுள் பேசுகிறேன்.  என் தோற்றம்; அதற்கான காரணம்; அது நிகழ்ந்த காலம் போன்றவையெல்லாம் பிறர் அறியக்கூடாத ரகசியங்கள். அவை பற்றி ஆராயத் தலைப்பட்டால் மனித மூளை ஸ்தம்பித்துவிடும். எனவே, நீ வந்த நோக்கத்தைச் சொல்” என்றார் கடவுள்.

நான் சிலிர்த்தேன்; சொன்னேன்: “பூமண்டலத்திலிருந்து  வருகிறேன்...”

சொல்லி முடிப்பதற்குள் கடவுள் குறுக்கிட்டார். “அறிமுக ஆலாபனைகள் தேவையில்லை. விசயத்துக்கு வா.”

“நீங்கள் ஒருவர்தானே கடவுள்?” -நான் கேட்டேன்.

‘பக்’கென்று சிரித்தார் கடவுள்; சொன்னார்: “ஆமாம்.”

“பரம்பொருளே, தங்கள் படைப்பில் எத்தனையோ அதிசயங்கள்; பிரமிக்க வைக்கும் விசித்திரங்கள் உள்ளன. தங்களின்  கருணைக்குப் பாத்திரமானவை கணக்கில் அடங்காத உயிரினங்கள். அவற்றில் மனித இனமும் ஒன்று. இந்த மானுட ஜாதிக்கு ஆறறிவைத் தந்தீர்கள். அது உங்களைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. பெரும்பான்மை மனிதர்களுக்கு உங்களின் ‘இருப்பு’ குறித்து ஏதும் புரியவில்லை. ஆனால், மகான்கள் என்று சொல்லப்படும் சிலர் மட்டும் தங்களை உணர்ந்ததாக மட்டுமல்ல, பார்த்ததாகவும் சொல்லியிருக்கிறார்களே. அது சரியா எம்பெருமானே?” 

“அதெல்லாம் பிரமை. என்னை உணர்வதோ பார்ப்பதோ மானிட இனத்தவர்க்குச் சாத்தியமே இல்லை.”

”உண்மை இதுவாக இருக்க, உங்கள் பெயரில் ஆளாளுக்கு ஒரு மதத்தை உருவாக்கிக்கொண்டு, என் மதமே மெய்; உன்னுடையது பொய் என்று பரப்புரை செய்து, பெரும் பெரும் கலவரங்களைத் தூண்டி, கணக்கு வழக்கில்லாமல் அப்பாவி மக்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். இனியேனும் இவ்வகை அவலங்கள் நிகழாதிருக்கத்  தாங்கள் அருள் புரிய வேண்டும்” -சொல்லி முடித்து, வெறுமையான சூன்ய வெளியில் தன்னந்தனியனாய்த் தலை வணங்கி நின்றேன் நான்.

கண நேர மவுனத்திற்குப் பின்னர் பேசலானார் கடவுள்: “மானிட ஆன்மாவே, நான் சொல்வதை உன்னிப்பாகக் கேள்.....

ஓர் ஏவுகணை. நானே உருவாக்கியது என்று வைத்துக்கொள். அதன் கனபரிமாணங்கள் உங்களின் கணித அளவைகளுக்குக் கட்டுப்படாதவை. அது எக்காலத்தும் பழுதடையாது; அழியாது. அதன் ஆயுள் என்னுடைய ஆயுள் போல.

அதை முடுக்கிவிட்டால் நேர்க்கோட்டில் செல்லும். எது குறுக்கிட்டாலும் அதைத் துளைத்துக்கொண்டு சென்றுகொண்டே இருக்கும்.

அது ஊடுருவும் வேகம், வாயு வேகமல்ல; ஒளியின் வேகமல்ல; மனிதர்களின் மனோ வேகமும் அல்ல; என்னுடைய மனோ வேகம்.

பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியிலிருந்து நான்...நானே முடுக்கிவிடுவதாக வைத்துக்கொள்.

அண்டவெளிகளிலுள்ள அனைத்தையும் அது ஊடுருவிப் பாய்கிறது...பாய்ந்துகொண்டே இருக்கிறது.

இப்படிப் பாய்ந்து செல்லும் ஏவுகணை என்றேனும் ஒரு நாள் இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையைத் தொடக்கூடுமா? பிரபஞ்சத்துக்கு எல்லை உண்டா? எல்லை என்று ஒன்று இருந்தால், அந்த எல்லைக்கப்புறம் இருப்பது என்ன? பிரபஞ்சம்தானே?

பிரபஞ்சம்...எல்லை...பிரபஞ்சம்...எல்லை...பிரபஞ்சம்...எல்லை...ஹே!...என்ன மாயம் இது என்று உனக்கு வியக்கத் தோன்றுகிறது அல்லவா?” -சொல்லி நிறுத்திய கடவுள், சற்றே இடைவெளிக்குப் பின்னர் தொடர்ந்தார்.

“ஏ மானுட ஆன்மாவே, நான் சொல்லியவற்றைத் தெற்றெனப் புரிந்துகொண்டாய்தானே? இனி நீ பூமண்டலம் செல்லுவாய். மீண்டும் மனிதனாகப் பிறப்பாய்.....

நீ என்னிடம் கேட்டறிந்தவற்றை உன் மனித குலத்திடம் சொல். மதவாதிகளிடம் அழுத்தம் திருத்தமாகச் சொல். பிரபஞ்ச வெளிக்கு எல்லையுண்டா என்று கேள்....எல்லோரிடமும் கேள். திகைத்துத் திருதிருவென்று விழித்து நிற்கும் அவர்களிடம், இந்தவொரு எளிய கேள்விக்கே விடை தெரியாத நீங்கள் கடவுள் பற்றிக் கதை கதையாய் அளக்கிறீர்கள். உன் கடவுள் என் கடவுள் என்று அடித்துக்கொண்டு சாகிறீர்கள். இது வடிகட்டின முட்டாள்தனம் அல்லவா என்று கேள்...கேள்...உன் ஆயுள் முழுக்கக் கேட்டுக்கொண்டே  இரு. மூடர்கள் திருந்துகிறார்களா பார்ப்போம்.”

சொல்லி முடித்து மோனத்தில் ஆழ்ந்தார் கடவுள்.

சூன்ய  வெளியிலிருந்து விடுபட்டுத் தெறித்து மண்ணுலகில் வந்து விழுந்தேன்.

“சூன்யம்...பிரபஞ்சம்...எல்லை...” என்று என் வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தது.

“டேய், என்னடா இது? பில்லி சூன்யம்னு தூக்கத்தில் பிதற்றிகிட்டிருக்கே. எழுந்திரு. விடிஞ்சி வெகு நேரம் ஆச்சு” என்று என்னைப் பெற்றவள் தட்டி எழுப்ப, பதறியடித்துக்கொண்டு எழுந்தேன்.
===============================================================================
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர், ஆனந்த விகடனின் ‘பொன் விழா’ ஆண்டுப் போட்டியில் பங்கேற்று நிராகரிக்கப்பட்ட  சிறுகதை இது. 

‘உலகின் நம்பர் 1 தத்துவச் சிறுகதை’ன்னு தலைப்புத் தந்தது.....?

ஹி..ஹி..ஹி... நானேதான். 

கொஞ்சம் படித்ததும் உங்களுக்குப் புரிந்திருக்கும்   இது நான் கிறுக்கிய ‘தத்துப்பித்து'க் கதை என்று!

வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க  நன்றி.


புதன், 17 ஆகஸ்ட், 2016

நீங்கள் நாக்கால் மூக்கைத் தொடுபவரா?..எச்சரிக்கை!

உங்கள் இல்லத்தில் அபிரிதப் படைப்பாற்றல் [நாக்கால் மூக்கைத் தொடுதல் இதில் அடக்கம்] உள்ள யாராவது இருந்தால், எதற்கும் ‘மரபணு சோதனை’ செய்துகொள்வது நல்லது. ஏன்?
உலகின் அற்புத இசை, வயலின் பேரறிஞன் பகாநினி[இத்தாலி] பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

இவர் வயலின் வாசிக்க வேண்டும்; நீங்கள் கேட்க வேண்டும். பாலும் தேனும் கலந்து ஓடும் பாகு மாதிரி உருகிவிடுவீர்கள்; உங்கள் கண்களிலிருந்து தாரை தாரையாக் கண்ணீர் வழிந்தபடியே இருக்கும். 

மனிதர் வயலின் வாசிக்கும்போது அவரின் அரவணைப்பில் சுகம் காணத் துடித்த அழகிகள் மிகப் பலர். ஆள் எப்படிப்பட்டவர்?

செக்ஸில் மன்னர்...அல்ல,அல்ல; மாமன்னர்! நம் கண்ணதாசனை நினைவுகூருங்கள்.

ஆனாலும் என்ன, இந்த மனிதருக்கு நேர்ந்த சில சோக நிகழ்வுகளை அறிய நேர்ந்தால் உங்கள் இதயம் சுக்கல் சுக்கலாக வெடித்துவிடும்.

இவர் ஓஹோ என்று வாழ்ந்த காலத்தில், இன்னதென்றே புலப்படாத சில வகை நோய்கள் இவரைத் தாக்கின.

கண்கள் வீங்குவது; பூசணி போல் விரைகள் உப்பிக்கொள்வது என்பன போல, எழுபது விதம் விதமான நோய்கள் இவரைத் தாக்கினவாம்.

இம்மாதிரியான நோய்கள் வரக் காரணம்.....

‘மார்ஃபன்ஸ்’ எனப்படும் மரபணுத் திரிபுதான்[குரோமோசோம் 15இல் FBN 1 என்ற பெயர் கொண்டது] காரணமாம்.  1910இல் குழந்தை நல மருத்துவரான ஜார்ஜ் மார்ஃபன்ஸ் கண்டுபிடித்ததால் இந்நோய்க்கு, மார்ஃபன்ஸ் நோய் என்று பெயர் அமைந்ததாம்.

இந்நோய் கண்டவர்களில் சிலர், உயரமாய் வளர்ந்து எலும்பும் தோலுமாய் இருப்பார்களாம். விரல்களைப் பின்னால் மடக்குவது; யானை மாதிரி காதுகளை ஆட்டுவது என்று அசாத்தியச் செயல்கள் எல்லாம் செய்வார்களாம். ரப்பர் மாதிரியான உடல் வாகும் கொண்டிருப்பார்களாம். சாகசங்கள் புரிவார்களாம். உலகமே தம்மைக் கண்டு வியக்க வேண்டும் என்பதான வெறி அவ்வப்போது இவர்களுக்கு வந்து போகுமாம். 

மர்லின்மன்றோவுக்கு இந்த மரபுத் திரிபு நோய் இருந்தது என்ற அதிர்ச்சியூட்டும் செய்திகளும்  அன்று உலா வந்தன.

மார்ஃபன்ஸ் மரபணுத் திரிபு நோயின் சமீபத்திய உதாரணம் யார் தெரியுமா?

நட்ட நடு ராத்திரியில் வானத்திலிருந்து குதித்து, அமெரிக்கா அவரை ‘டுமீல்’ செய்யாமல் இருந்திருந்தாலும், அடுத்த சில மாதங்களில் மரபணுத் திரிபு நோய் தீர்த்துக்கட்டியிருக்கும் என்கிறார்கள். அவர்.....

ஒசாமா பின்லேடன்!

தலைப்பை மீண்டும் ஒருமுறை படியுங்கள். எதற்கும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லதுதானே.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நன்றி: ஆயிஷா இரா.நடராசனின், ‘நான் ஏன் என் தந்தையைப் போல் இல்லை’; பாரதி புத்தகாலயம், சென்னை -600 018. முதல்  பதிப்பு, ஜூன், 2015.






புதன், 10 ஆகஸ்ட், 2016

போகிற போக்கில் [நான் செய்த] சின்னஞ்சிறு பொதுத் தொண்டு!

சேலத்தில், ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்த நண்பரைப் பார்க்க ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தேன்.

வள்ளுவர் சிலையைக் கடந்து மருத்துவமனை செல்லும் சாலையில் நுழைந்தபோது, ஒரு தேனீர்க் கடையின் முன்னால் திரண்டிருந்த கும்பல் என் கவனத்தை ஈர்த்தது.

“என்ன அது கும்பல்?” -சற்று எட்ட நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டேன்.

“டீ குடிக்க வந்த ரெண்டு பேருக்குள்ள ஏதோ பிரச்சினை. கூட்டம் சேரவும் ரெண்டு பேருக்கும் ஆதரவா அவங்க அவங்க ஜாதிக்காரங்க திரண்டுட்டாங்க. காரசார விவாதம் நடக்குது. எந்த நேரத்திலும்  கலவரம் வெடிக்கலாம்” என்றார் அவர்.
நடக்கப்போவதை அறியும் ஆவல் எனக்கும் இருந்தது. நண்பர் ஆபத்தான நிலையில் இருந்ததால் ஸ்கூட்டரை நகர்த்தினேன்.

வாகனத்தின் வேகத்தைக் கூட்டியபோது, எதிரே வந்தவர் என்னைத் தேக்கினார். 

“என்னங்க கும்பல்?”

“அதுவா.....” கொஞ்சம் யோசித்தேன். இவர், ‘முரண்பட்டு நிற்கும் இரு தரப்பில் ஒரு தரப்பைச் சார்ந்தவராக இருந்தால்.....’

“யாரோ ரெண்டு பேர் தண்ணியடிச்சிட்டுத் தகராறு பண்ணிக்கிறாங்க. வேலைவெட்டி இல்லாத கூட்டம் வேடிக்கை பார்க்குது. போய் உங்க வேலையைப் பாருங்க...போங்க சார்.” 

அடுத்தடுத்து, வழி மறித்து வினவிய  இருவருக்கும் இதே  பதிலைச் சொல்லிவிட்டு மருத்துவமனை நோக்கி விரைந்தேன்.

‘ஏதோ நம்மாலான நல்ல காரியம்’

மனம் முழுக்க ஒருவித திருப்தி பரவியது.
===============================================================================





சனி, 6 ஆகஸ்ட், 2016

புரியாத சாமியும் புத்தியுள்ள கந்தசாமியும்!

ந்தசாமி, கோயிலுக்குப் போறியாப்பா?” -அம்மா கேட்டார்.

“எனக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லேன்னு தெரியுமில்ல. அப்புறம் ஏன் இந்தக் கேள்வி?” -அம்மாவிடம் பொய்க் கோபம் காட்டினான் கந்தசாமி.

“அதில்லப்பா. நீயும் அப்பாவும் நடத்துற ஓட்டலில், வர்ற கொஞ்சம் லாபமும் வாங்கின கடனுக்கு வட்டி கட்டவே சரியாப் போயிடுது. அஞ்சாறு வருசமா அசல் அப்படியே இருக்கு. குடும்பச் செலவுக்குப் பணமில்ல. நம்பிக்கையிழந்த உன் அப்பா, தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டார். தொழில் இன்னும் லாபகரமா நடக்கணும்னா, பிடிவாதத்தைக் கைவிட்டு, சாமி கோயிலுக்குப் போயி, சாமி சந்நிதியில் நெடுஞ்சாண்கிடையா விழுந்து கும்பிட்டு வாப்பா.”
அம்மாவின் குரலில் என்றுமில்லாத கண்டிப்புத் தெரிந்தது.

மவுனமாகக் கிளம்பிப் போனான் கந்தசாமி.

அவன் வீடு திரும்பியதும், “விழுந்து கும்பிட்டயா? மனப்பூர்வமா வேண்டிகிட்டியா?” என்றார் அம்மா.

“நான் கோயிலுக்குப் போகல; கடன் கொடுத்தவங்களைத் தேடிப் போயி, அவங்க காலில் விழுந்து கும்பிட்டு நிலைமையைச் சொன்னேன். வட்டியைத் தள்ளுபடி பண்ணிட்டு, அசலைக் கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிச்சிக் கொடுன்னு சொல்லிட்டாங்க” என்றான் கந்தசாமி.

அம்மா, சாமி படத்தின் முன்னால் நின்று கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்தார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
17.04.2013 இல் இதே தளத்தில் வெளியான கதை இது.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

ஒரு பின்னணி வார இதழில் வெளியான ‘முன்னணி’ச் சிறுகதை!

“நீ இந்த ஊரைவிட்டே ஓடிப்போகணும். அப்பத்தான் மழை பெய்யும்னு மாரியாத்தாவே சொல்லிட்டா. உம்...உம்...புறப்படு. எல்லையைத்தாண்டித் திரும்பிப் பார்க்காம ஓடு. ஓடிப்போயிடு. 

“சாமி இல்ல பூதம் இல்லன்னு பிரச்சாரம் பண்றவன் நீ. நல்ல நேரம் கெட்ட நேரம்னு எதுவும் இல்ல; சகுனம் பார்க்குறது தப்பு; சாந்தி கழிக்கிறது தப்புன்னு என்னென்னவோ சொல்லிட்டுத் திரிஞ்சே. நாங்க கேட்டுட்டுச் சும்மா இருந்தது தப்பாப் போச்சி. இந்த ஊர் தெய்வக் குத்தத்துக்கு ஆளாயிடிச்சி. நீ வெளியேறினாத்தான் மழை பெய்யும். இப்பவே நடையைக் கட்டு.”

ஒட்டு மொத்த ஊரும் பிறப்பித்த உத்தரவை மீற முடியாத நிலையில், அந்த அந்தி நேரத்தில், புதுப்பாளையத்துலிருந்து வெளியேறி, ஊரின் மேற்கு எல்லையில் உள்ள பெரிய ஏரிக்கரை மீது நடந்துகொண்டிருந்தான் மணிமொழியன்.

“சே, இந்தக் கணினி யுகத்திலும் இப்படியொரு காட்டுமிராண்டிக் கூட்டமா? இந்த முட்டாள்களை மூடநம்பிக்கைச் சேற்றிலிருந்து ஈடேத்த நான் பட்ட பாடெல்லாம் வீணாயிடிச்சே. நல்ல வேளை.....சாமியாடி சொன்னா, கனவில் வந்து சாமி சொல்லிச்சி, பூதம் சொல்லிச்சின்னு என்னையே அம்மனுக்குப் பலி போடாம விட்டாங்களே!” என்று சொல்லி வாய்விட்டு நகைத்தான் மணிமொழியன்.

அவன் நகைப்புக்கு எதிர் நகைப்புப் போல வானம் ‘கடகட’ என முழங்கியது.
அவன் அண்ணாந்து பார்த்தான்.

இது என்ன விந்தை! வானமெங்கும் கறுத்து, கைக்கெட்டும் தூரத்தில் சூல் சுமந்து மிதக்கிறதே மேகக் கூட்டம்!

மழை பெய்யப் போகிறதா?

முட்டாள் மனிதர்களின் முடக்கு வாதத்தை இயற்கையே நியாயப்படுத்தப் போகிறதா?

மணிமொழியன் ஆச்சரியப்பட்டான். கூர்த்த பார்வையால் இருண்ட வானத்தைத் துழாவினான்.

எங்கிருந்தோ மிதந்து வந்த ‘மழை வாசம்’ ஒரு பேய் மழைக்கு முன்னோட்டம் தந்தது.

“பட்...பட்” ஓசையுடன் சடசடவென இறங்கிய மழைத் துளிகள், மணிமொழியனின் மண்டையைப் பதம் பார்த்தன.

அது செம்மண் பூமி. ‘குப்’ பென எழுந்த மண் வாசனை காற்றில் மிதந்து வந்து கமகமத்தது.

நனைந்து கொண்டே சிறு பிள்ளைகள் போல ஆடிப்பாட அவனுக்கு ஆசைதான். அப்போதிருந்த மன நிலையில் அது சாத்தியப்படவில்லை. வேகமாக ஓடி, ஏரியை ஒட்டியிருந்த எல்லையம்மன் கோயிலில் அடைக்கலம் புகுந்தான்.

மழை வலுத்தது. வருணனுடன் வாயுபகவானும் களத்தில் இறங்கினான்.

”சளேர்...சளேர்” என்று தரையில் அறைந்து ஆக்ரோசத்துடன் மழை கொட்டியது. கோயில் கூரை மீதும் அதனை ஒட்டியிருந்த தகரக் கொட்டகை மீதும் தாளமிட்டு அட்டகாசம் புரிந்தது.

பேயாட்டம் ஆடும் மரமட்டைகளை உசுப்பிவிட்டு விசிலடித்தது சூறாவளி. மேகக் கூட்டம் இடித்து முழக்கி டமாரம் கொட்டியது.

இத்தனை ஆரவாரங்களுக்கிடையே அது என்ன ஒரு வித்தியாசமான ஓசை?

மணிமொழியன் உற்றுக் கேட்டான். புதுப்பாளையம் இருந்த திசையில் கவனத்தைப் பதித்தான்.

மழையைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் புதுப்பாளையம் வாசிகள், தாம்பாளம், தகரடப்பா என்று எதையெல்லாமோ தட்டிக் கொண்டு, ஆடிப்பாடிக் கும்மாளம் போடுகிறார்கள் என்பது புரிந்தது.

மணிமொழியன் சிந்தனை வசப்பட்டான். சில சந்தேகங்கள் அவன் முன்னே விஸ்வரூபம் எடுத்தன.

‘நான் ஊரைவிட்டு வெளியேறிய கொஞ்ச நேரத்தில் வானம் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறதே, இது எப்படி?

தற்செயலா அல்லது என் மீது சுமத்தப்பட்ட பழியை நியாயப்படுத்த அம்மன் நிகழ்த்தும் அதிசயமா? இது அவளின் செயல்தான் என்றால், மனித மிருகங்களின் இந்த மூட நம்பிக்கைக்கு, காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு  அவள் அங்கீகாரம் தருவதாகத்தானே அர்த்தம்?

நீண்ட நேரம் சிந்தனையில் மூழ்கிக் கிடந்த மணிமொழியன், அன்று எதிர்கொண்ட பிரச்சினையாலும் மனக் குழப்பத்தாலும் உண்டான அயர்ச்சி காரணமாகத்  தரையில் நீட்டிப் படுத்தான். அவன் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து நடந்து முடிந்த முக்கிய நிகழ்ச்சிகளை அசை போடலாயிற்று அவன் மனம்.

பள்ளி ஆசிரியனான மணிமொழியன், புதுப்பாளையத்திற்கு மாறுதலாகி வந்த சில மாதங்களிலேயே, படிப்பறிவில் மட்டுமல்லாமல் பகுத்தறிவிலும் புதுப்பாளையம் பழையபாளையமாகவே இருப்பதைக் கண்டு வருந்தினான்.

படிப்பகம், வாசகர்வட்டம், நற்பணி மன்றம் என்றெல்லாம் படிப்படியாகச் சில அமைப்புகளை ஏற்படுத்தி, உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தை எழுப்பி உட்கார வைத்தான். கருத்தரங்குகள்,கவியரங்குகள், பட்டிமன்றங்கள், மேடை நாடகங்கள் என்று நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினான்.

இளைஞர்கள் சிலரிடம் ஓரளவு மாற்றம் தெரிந்தது. அவர்கள் வரதட்சனையை மறுத்தார்கள்; சாதி வேறுபாட்டை அலட்சியம் செய்தார்கள். விதவையருக்கு வாழ்வு தர முன்வந்தார்கள்.

ஆயினும் என்ன? எஞ்சியிருந்தவர்கள் மாறவே இல்லை. பழைமையில் ஊறிப்போனவர்கள் அவனை வெறுத்தார்கள். அவனை ஊரைவிட்டு வெளியேற்றும் நாள் வருமா என்று காத்துக் கிடந்தார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது போல அந்த ஆண்டு மழை பொய்த்தது.

மழைக்கஞ்சி காய்ச்சினார்கள். மழை பெய்யவில்லை.

சாமியாடியைக் கும்பிட்டு, அம்மனை வரவழைத்து முறையிட்டார்கள். சாமியாடி சொன்னதை அம்மனின் அருள்வாக்காகக் கொண்டு மணிமொழியனை வெளியேற்றினார்கள்.

சிறிதும் மட்டுப்படாமல், கட்டுப்பாடின்றிப் பெய்து கொண்டிருந்தது மழை.

நேரம் பின்னிரவைக் கடந்து கொண்டிருந்தது.

ஒரு பெரிய ராட்சத மதகை உடைத்துவிட்டால், ‘குபீர்’ என்று வெள்ளம் வெளியேறும் போது வெளிப்படுவது போன்ற ஓசை கேட்டுத் திடுக்கிட்டான் மணிமொழியன்.

எழுந்து வெளியே பாய்ந்தான்.

புது வெள்ளம் ததும்பி வழியும் அந்தப் பிரமாண்ட ஏரியின் அகன்ற கரை மீது கவனமாக நடந்தான்.

நடுக்கரையில் உடைப்பெடுத்துக் கொண்டிருந்தது! ஏரியில் சிறைபட்டுக் குமுறிக் கொண்டிருந்த புது வெள்ளம், புதுப் பாதை போட்டு மூர்க்கத்தனமாய் வெளியேறத் தொடங்கியிருந்தது.

உடைப்பு பெரிதாகி, இந்த ஊழி வெள்ளம் காட்டாறாக உருக்கொண்டு பாயும் போது எதிர்ப்படும் ஊர்கள் சிதைந்து சிதறி உருத்தெறியாமல் போகும் என்பது அவனுக்குத் திட்டவட்டமாகப் புரிந்தது.

முதல் பலியாய் முன்னால் நிற்பது புதுப்பாளையம்.

’ஊரா அது? காட்டுமிராண்டிகளின் சரணாலயம். தன்னை அவமானப்படுத்தி வெளியேற்றிய அத்தனை முட்டாள்களும் மூச்சுத் திணறிச் சாகட்டும்’ -இப்படியொரு வக்கிர சிந்தனைக்கு ஆளாகவில்லை அவன்.

ஏரிக்கரையிலிருந்து புதுப்பாளையம் நோக்கிப் புயலாகப் பாய்ந்தான்.

“ஏரி உடைப்பெடுத்திடிச்சே.........வெள்ளம் வருது..........வெள்ளம் வருதே.........ஏரி உடைப்பெடுத்திடிச்சே..........”

உரத்த குரலில் கூவியபடி ஓடினான் அவன்.

ஊரை நெருங்க நெருங்க அவன் குரல் உச்ச கதியில் ஒலிக்கலாயிற்று.

***********************************************************************************************************************
படைப்பு?
நான்...நானேதான்!

04.08.2016இல் இத்தளத்தில் வெளியான இப்பதிவு தமிழ்மணத்தில் இடம்பெறுவதற்காகக் கொஞ்சமே கொஞ்சம் புதுப்பிக்கப்பட்டது!