எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

அரசர்களின் யானை மீதான நகர்வலமும் இக்கால அரசியல்வாதிகளின் ஆணவமலமும்!

பொருள்களைக் கொண்டுசெல்லவும் மக்கள் பயணிக்கவும் லாரி, கார் முதலான ஊர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

கார்களிலும் பேருந்துகளிலும், ஏனைய பயணிகள் வாகனங்களிலும் உள்ளே அமர்ந்து பயணிக்கலாமே தவிர, அவற்றின் மேற்கூரைகளின் மேல், தடுப்புகள் அமைத்து அமர்ந்துகொண்டோ, நின்றுகொண்டோ பயணிப்பது[சரக்கு வாகனங்கள் உட்பட] சட்ட ரீதியான குற்றச் செயலாகும்> ‘வாகனத்தின் மீது நின்று நகர்வலம் செல்வது என்பது கடுமையான போக்குவரத்து விதிமீறலாகும், இது சட்டப்படி தண்டனைக்குரியது’.https://www.google.com/search?.....

இந்தச் சட்ட விதி பொதுமக்களை மட்டுமல்ல, அரசியல்வாதிகளையும் கட்டுப்படுத்தும்.

அப்புறம் எப்படி இவர்களை வாகனங்களின் மேல் பரப்பில் தடுப்புகள் அமைத்து நின்றுகொண்டோ, பந்தாவாக அமர்ந்துகொண்டோ[அக்கால உச்ச அதிகாரம் படைத்த அரசர்கள் யானை மீதான அம்பாரியில் அமர்ந்து நகர்வலம் வந்தாற்போல] அடிமைகள் போல் அணிவகுத்து நிற்கும் அப்பாவிப் பொதுமக்களைப் பார்த்துக் கையசைக்கவும் உரை நிகழ்த்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள்?

இவர்கள் என்ன அறிவுலக மேதைகளா? ஆய்வுலக அறிஞர்களா? மக்களுக்காகவே உழைக்கும் பொதுநல உணர்வாளர்களா? 99.99% கோடிகளில் சுருட்டிச் சுகபோகமாக வாழத் திட்டமிடும் சுயநலவாதிகள்.

இவர்களுக்கு எதற்கு நகர்வலம் ஊர்வலம் காடுவலம் சுடுகாடுவலம் எல்லாம்?

தேர்தல் காலங்களில் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்கலாம்; ஊடகங்கள் வாயிலாகப் பரப்புரை செய்யலாம். உச்ச அதிகாரம் படைத்தவர்களாயினும், மேற்கண்டவாறு வீதிவலம் சென்று, மக்களின் அன்றாடப் பணிகளுக்குக் குந்தகம் விளைவிப்பது பெரும் குற்றம். இதற்கு அனுமதியளிப்பதும் குற்றமே[விதிகளைக் கடுமையாக்கப் புதிய சட்டங்கள் இயற்றலாம்].

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இப்படியான அனுமதியை இவர்களுக்கு வழங்கியவர்கள் வெறும் மூடரல்ல; முழு மூடர்கள்.

உரிய முறையில் அறிஞர் குழு அமைத்து, அரசியல்வாதிகளின் இந்த அடாவடித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது உடனடித் தேவை. 

அரசியல்வாதிகள் இதைச் செய்யமாட்டார்கள். மக்கள் வெகுண்டெழுந்தால் செய்யவைக்கலாம்.

அது நிகழ்வது எப்போது?