தன்னுடைய எளிமையான பின்னணி குறித்தே எப்போதும் பேசிவரும் அளவிற்கு, கொள்கை சார்ந்த அரசியலை மோடி பேசுவதில்லை. எப்போதும் தன்னை மேட்டுக்குடியினருடன் ஒப்பிட்டுப் பேசுவதே அவர் வழக்கம்.
‘தான் சிறுவயதில் தேநீர் விற்றவன்’ என்ற மோடியின் புகழ்பெற்றச் சுய விளம்பரத்தை(அது இன்றுவரை எப்போதும் நிரூபிக்கப்பட்டதில்லை) நாம் இங்கே மறந்துவிடலாகாது.
மோடியின் இந்தச் சுயவிளம்பர வெளியிடல்களெல்லாம், அவருக்கு ஆதரவான மீடியாக்களில், எதிர்த்துக் கேள்விகள் கேட்கப்பட முடியாத ஒருவழி உரையாடல் மூலமே நிகழ்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும், அவரின் ஆதரவு ஊடகங்களும் இத்தகையப் பிரச்சாரத்தைச் சிரமேற்கொண்டு செய்துவருகின்றன.
தன்னை மிக எளிமையான பின்னணியிலிருந்து வந்தவன் என்று பிரச்சாரம் செய்துகொள்பவரின் தற்போதைய வாழ்க்கை நிலை என்ன?
தலைநகர் டெல்லியின் அழகான சோலையில் அமைந்த, 12 ஏக்கர் பரப்பளவில், 5 வீடுகள் கொண்ட பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறவில்லை இந்த ஏழைத் தாயின் மகன்[அந்த 5 வீடுகளின் உள் அலங்கார அமைப்புகள் குறித்தத் தகவல்கள், பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியில் சொல்லப்படக்கூடாது என்ற சட்டதிட்டங்கள் வேறு உண்டு].
அந்த வளாகத்தில் தனியான தங்குமிடங்கள், விருந்தினர் அறைகள், குடும்ப உறுப்பினர்களுக்கான தங்குமிடங்கள், பொழுதுபோக்கு நிலையங்கள் என்று ஏராளமான வசதிகள் உண்டு.
இந்தப் பிரமாண்ட வளாகம், 50க்கும் மேற்பட்ட தோட்டக்காரர்கள், ஓட்டுநர்கள், பராமரிப்பாளர்கள், சமையல்காரர்கள், மின்சாரப் பணியாளர்கள் ஆகியோரால் பராமரிக்கப்படுகிறது.
மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள், முடி திருத்துநர்கள், தையலகர் ஆகியோரும் உள்ளனர்.
அந்த வளாகத்தில், அனைத்துச் சிறப்பான வசதிகளையும் தன்னகத்தே பெற்ற ஓர் ஆம்புலன்ஸ் எப்போதும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
இந்த வளாகத்தின் பராமரிப்பிற்காகப் பல கோடி ரூபாய்கள் செலவழிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எளிய மோடியால், இந்தப் பகட்டான இல்லத்தைவிட்டு வெளியேற முடியவில்லை. ஒரு நாளைக்கு 20 மணிநேரத்திற்கு மேல் கடுமையாக உழைத்து, வெறுமனே 3 முதல் 4 மணிநேரங்கள் மட்டுமே அபூர்வமாய் உறங்குவதாகக் கொஞ்சமும் சலிப்பின்றி தொடர்ச்சியாகக் கூறிக்கொள்ளும் மோடிக்கு இத்தகையப் பகட்டான இல்லம் தேவையா?
ஓர் ஏழைத் தாயின் மகனாகப் பிறந்து, தேநீர் விற்பனை செய்து, தவ வாழ்க்கை வாழும் எளிய துறவியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் மோடிக்கு, எதற்காக இந்த ஆடம்பர மாளிகை வளாகம்?
ஒருவேளை மோடி எளிமையானவராகவும், ஏழையாகவும் வாழ்வதற்கு அதிகப் பணம் தேவைப்படுகிறதுபோலும்!
டெல்லி நகரைச் சுற்றி வருவதற்குக் குண்டு துளைக்காத 5 பிஎம்டபிள்யூ செடான் & ரேன்ஜ் ரோவர் ரக கார்களையும், வெளிநாடுகளில் சுற்றிவர, போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் போன்றவைகளையும் பயன்படுத்துகிறார்.
பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களில், அவருடன் செல்லும் அதிகாரிகள், வர்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோரையும் அழைத்துச் செல்லப் பெரிய விமானம் தேவைதான் என வைத்துக்கொண்டாலும், பத்திரிகையாளர்களைக் கண்டாலே ஆகாத பிரதமர், அவர்கள் இல்லாமல் குறைந்தளவு அதிகாரிகளுடன் அவ்வளவு பெரிய விமானத்தில் பயணிப்பது ஏற்கத்தக்கதா?
இதுவரை, பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திற்காக ரூ.443.4 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், இன்னும் 5 நாடுகளுக்குச் சென்றுவந்த செலவு விபரங்களைக் கணக்கிட வேண்டியுள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்ட விபரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், பிரதமரின் உள்நாட்டுப் பயண விபரங்களைத் தாங்கள் பதிவுசெய்வதில்லை என்று பிரதமர் அலுவலகம் அறிவித்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.
தேநீர் விற்ற பின்னணியிலிருந்து வந்து எளிமையான வாழ்க்கை மேற்கொள்ளும் பிரதமர், தனது வெளிநாட்டுப் பயணங்களுக்கு, ஒரு சாதாரண பிசினஸ் ஜெட் பயன்படுத்தினால் போதாதா? இதன்மூலம் வரிகட்டும் ஏழை மக்களின் பணத்தை மிச்சப்படுத்தலாமே?
கடந்த 5 ஆண்டுகளில் இவரின் வெளிநாட்டுப் பயணச் செலவினங்கள் மட்டும் ரூ.2,021 கோடிகள். அதாவது, ஒரு ஆண்டிற்குச் சராசரியாக ரூ.400 கோடிக்கும் மேல்.
கடந்தகாலப் பிரதமர்களும் தங்களின் வெளிநாட்டுப் பயணத்திற்காக இந்தளவு பெரிய தொகையைச் செலவழித்துள்ளார்கள் என மோடியின் பக்தர்கள் கூறுவார்கள். ஆனால், அவர்கள் மோடியைப் போல் எளிய துறவு வாழ்க்கை வாழ்வதாகச் சொன்ன மனிதர்களல்ல.
மோடியின் ஆடம்பரம் இந்தளவில் மட்டும் நிற்கவில்லை! தன்னைப் பற்றியும் தனது அரசின் திட்டங்கள் குறித்தும் செய்யப்பட்ட விளம்பரங்களுக்கு மட்டுமே 2018 வரையிலான நான்காண்டுகளில் செலவு செய்யப்பட்டத் தொகை ரூ.4,400 கோடிகள் என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட விபரங்கள் கூறுகின்றன.
ஆனால், திட்டங்களுக்காக மோடி செய்த விளம்பரச் செலவோடு, அந்தத் திட்டங்களின் நன்மை & தீமைகளை ஆராய்ந்தால் நிலைமை மிகவும் மோசமாகும் என்றே தகவல்கள் கூறுகின்றன
இந்தத் தேர்தல் ஆண்டில் மட்டும் மோடியின் பாரதீய ஜனதா கட்சி, வங்கிகள் விற்பனை செய்த தேர்தல் பத்திரங்களில் 94%ஐ வாங்கிக் குவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கட்சியின் முகநூல் & இதர சமூக வலைதள அம்சங்களில், மில்லியன் கணக்கான டாலர்கள் புழங்குவதையும் கவனிக்க வேண்டும்.
மோடியின் பகட்டான உடைகள் கடும் விமர்சனத்தைச் சம்பாதித்தவை என்பது நாமெல்லாம் அறியாத ஒன்றல்ல. வெளிநாட்டு ஊடகங்கள்கூட, இந்த முட்டாள்தனமான பகட்டு குறித்துக் குறிப்பிட்டுள்ளன. இவரின் உடைகள் தொடர்பான நிறத் தேர்வுகள் ‘கடவுளால் செய்யப்பட்டவை’ என்று வேறு அறிவித்துக்கொள்கிறார்.
மோடி அணியும் குர்தாக்கள், மோடியின் ஜாக்கெட்டுகள், ஆடம்பரமாக வேலைப்பாடு செய்யப்பட்ட காஷ்மீர் வெள்ளாட்டுக் கம்பளிச் சால்வை, புகழ்வாய்ந்த சூட்டுகள், விலையுயர்ந்த கண்ணாடிகள், மொவாடோ கைக்கடிகாரங்கள், மான்ட் பிளாங்க் பேனாக்கள் போன்றவை அந்த எளிமையான துறவிக்கான அடையாளங்களா?
மோடி உல்லாசத்தில் பெரும் நாட்டம் கொண்டவராகவே காணப்படுகிறார். இவரின் பெயர் பல இடங்களில் பொறிக்கப்பட்டு, ரூ.10 லட்சம் செலவில் தயாரானதாகக் கூறப்படும் சூட்டை யாராவது மறந்திருக்க முடியுமா? அல்லது தனது மார்பகலத்தின் அளவைப் பிரகடனப்படுத்திக் கொண்டதைத்தான் மறக்க முடியுமா? இதையெல்லாம் ஓர் எளிய துறவியிடம் நம்மால் எதிர்பார்க்க முடியுமா?
மோடியின் தலைமுடியும் தாடியும் தூய வெண்மையில், எப்போதுமே மிகச் சரியான அளவில் காட்சித் தருகின்றன என்றால், வாரம்தோறும் முறையாகப் பராமரித்தால் மட்டுமே அவை சாத்தியம். மோடியின் தனிப்பட்டச் சிகை அலங்கார நிபுணர் ஜாவித் ஹபீப் இதை உறுதிப்படுத்துகிறார்.
மேலும், முகத்தின் பொலிவைப் பராமரிப்பதற்காக அவர் வாரம்தோறும் எடுத்துக்கொள்ளும் விலையுயர்ந்த ஃபேஷியல் சிகிச்சை குறித்தும், தனது மேனியின் பொலிவைப் பராமரிக்கும் பொருட்டு அவர் உட்கொள்ளும் மிகவும் விலை உயர்ந்த காளான்கள் குறித்தும் பல தகவல்கள் வெளிவருகின்றன. இவை தொடர்பாக ஊடக விவாதங்களும் நடந்தேறியுள்ளன.
மோடியின் ஆடம்பரப் பகட்டுகளெல்லாம் ஒருபுறமிருக்க, அவரின் உண்மையான கல்வித் தகுதி என்ன என்பதை நாம் யோசித்தோமானால், அனைத்துமே மர்மமாக இருக்கும். அவரால் சரியான முறையில் அடைய முடியாத கல்வித் தகுதியைப் போலியாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
இவர் பெற்றதாகக் கூறப்படும் அரசியல் அறிவியல் பட்டம் குறித்த பிரச்சினை இன்னும் முடிந்தபாடில்லை. அதன் மீதான தீர்ப்பு, அவர் தேர்தலில் நிற்பதையே காலிசெய்யும். ஆனால், “ஹாவர்ட் பல்கலையைவிட, கடின உழைப்பு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது” என்று கர்ஜிப்பது அவர் வழக்கம்!
***ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கட்டுரை இது. மோடியின் உச்சக்கட்ட ஆடம்பர மோகம் இந்நாள்வரை குறையவில்லை என்பது அறியத்தக்கது.
நன்றி: https://patrikai.com/ascetic-modis-opulence-life-style/


