எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 20 அக்டோபர், 2018

சபரிமலைப் பிரச்சினைக்கு 'ஆன்மிக அரசியல்வாதி' வழங்கிய தீர்வு!!!

''சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். ஆனால், கோயில் சடங்குகளிலும் ஐதீகங்களிலும் எவரும் தலையிடக் கூடாது'' -இது, சற்று முன்னர்[20.10.2018, நண்பகல் 12.00] ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ஆன்மிக அரசியல்வாதி கூறியது[ஆதாரம்: 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியின் அறிவிப்பு]

செய்தியறிந்து, தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்துகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது!!!

அவரளித்த  பேட்டி: https://youtu.be/KOmP_DchWI0

'10 முதல் 50 வரையிலான வயதுக்கு உட்பட்ட பெண்கள்[காம இச்சையைத் தூண்டுபவர்கள்] சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்பது ஐதீகம். குறிப்பிட்ட வயதிலான அந்தப் பெண்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ந்தத் தீர்ப்பு, காலங்காலமாய்க் கடைபிடிக்கப்பட்ட ஐதீகத்தை மீறுவதாகத்தான் உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கும் ஆன்மிக அரசியல்வாதி[நடிகர் ரஜினி], ஐதீகத்தில் தலையிடக் கூடாது என்கிறாரே, இது எப்படிச் சாத்தியம் என்று குழம்புகிறீர்களா?

குழம்பவேண்டாம்.
ஆழ்ந்து சிந்தியுங்கள். அதி தீவிரமாகச் சிந்தியுங்கள். ரஜினி என்ன சொன்னார் என்பது   உங்களுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரியும்.

புரியவில்லை என்றால்.....

உங்களின் அறிவுக் குறைபாட்டை எண்ணித் தலைதலையாய் அடித்துக்கொள்ளுங்கள்! நான் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்!!

ராவணன் சாபம்!!!!!

எப்போதோ செத்துப்போன ராவணனை மீண்டும் சாகடிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் 'தசரா' பண்டிகை இந்த ஆண்டும் 'பஞ்சாப்' மாநிலத்தின் அமிர்தசரஸ் பகுதியில் நடந்தது[20.10.2018 ஊடகச் செய்தி].

இணைப்பு: https://youtu.be/vtgPqMo9wUE

நிகழ்ச்சியில், கட்டுக்கட்டாகப் பட்டாசுகள் சுற்றப்பட்ட பிரமாண்ட ராவண பொம்மை நிறுத்தி வைக்கப்பட்டது[ராவண வதம்]; தீயிடப்பட்டது.

அண்டவெளி கிடுகிடுக்க, அதி பயங்கர ஓசையுடன் ராவணன் வெடித்துச் சிதறலானான்.

மெய் மறந்து, தம் மதியிழந்து, உயிருள்ள ராவணனே வெடித்துச் சிதறுவதாக எண்ணிக் குதூகளித்திருந்தவர்கள், ''ராவணன் ஒழிக!'' என்று விண்ணதிர முழங்கிகொண்டிருக்கையில்.....

நின்ற நிலையில் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த ராவணன் ஒரு புறமாகச் சரிந்து விழலானான். கூடிக் களித்திருந்த மக்கள் கூட்டம் பக்கவாட்டுகளில் சிதறி ஓடலாயிற்று. எங்கும் இருள் சூழ்ந்த அந்த அந்திப் பொழுதில்,  உயிர் பிழைத்திடும் ஆசையில், குறுக்கிட்ட ரயில் பாதைகளையும் கடந்து ஓடினார்கள் மக்கள். இரண்டு பாதைகளிலும் விரைந்து வந்த அதிவேக விரைவு ரயில்கள் அவர்கள் மீது மோதியதால் 70 பேர் பலியானார்கள். மிகப் பலர்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, ஒளிவுமறைவில்லாமல் ஓர் உண்மையை உங்கள் முன்வைக்கக் கடமைப்பட்டுள்ளேன். அது.....

ராவணனின் பூத உடம்பு ராமனால் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவனின் சூக்கும தேகம்... அதாவது, 'ஆவி' வானவெளியில் இன்றளவும் சஞ்சரித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறது.

ஆண்டுதோறும், பண்டிகை கொண்டாடுவதாகச் சொல்லித் தான் அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு கண்டு மனம் பொருமிக்கொண்டிருந்த அவன், 70க்கும் மேற்பட்ட ராம பக்தர்களின் உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறான். பலரைப் படுகாயம் அடையச் செய்திருக்கிறான்.
நம்புங்கள். இந்தக் கொடூர விபத்தை நிகழ்த்தியவன் ராவணன்...ராவணனே.

எப்போதோ கல்யாணம் கட்டிக்கொண்டதாக எவரோ எப்போதோ கட்டிவிட்ட கதையை நம்பி இப்போதும் சில சாமிகளுக்குக் கல்யாணம் கட்டி வைக்கிறார்கள்.

எவரோ கட்டிவிட்ட கதையை நம்பி இப்போதும், தாமே கந்தக் கடவுளாக மாறிச் சூரனைச் சம்காரம் செய்து ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.

இப்படி, எத்தனை எத்தனையோ பொய்க்கதைகளை நம்புகிறவர்கள் நான் சொல்லுகிற இந்த உண்மைக் கதையை மனப்பூர்வமாக நம்பலாம். நம்புவதால் நம்புகிறவர்களுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை.

இல்லை.....இல்லவே இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------
விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும் காயமுற்றவர்களுக்காகவும் மனப்பூர்வமாய் வருந்துகிறேன்.