எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

கடவுளின் விதி!!!!!

''நமக்கும் மேலான ஒரு சக்தி இருக்கிறது. அதுவே கடவுள்'' என்று சொல்லி, கடவுளின் 'இருப்பு' குறித்துக் கேள்வி எழுப்புவோரின் வாயை அடைத்திட முயல்வோருக்காக இப்பதிவு.

'உயிருள்ளனவோ உயிரற்றனவோ, கண்ணுக்குத் தெரிவனவோ தெரியாதனவோ அண்டவெளியிலுள்ள அனைத்துப் பொருள்களும் இயக்கத்தில் இருக்கின்றன; இயங்குவதற்கான சக்தியை அவை உள்ளடக்கியிருக்கின்றன' என்கிறது அறிவியல்.
ஒரு பொருள் 'உள்ளது' என்றாலே, அது தன்னுள் தனக்குரிய சக்தியை உள்ளடக்கியிருக்கிறது; இயங்கிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதாவது, பொருள், சக்தி, இயக்கம் ஆகிய மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவை என்பது அறியத்தக்கது.

மேலும் விரித்துச் சொன்னால்.....

பொருள் இல்லாமல் சக்தியும் இயக்கமும் இல்லை. சக்தி இல்லாமல் பொருளும் இயக்கமும் இல்லை. இயக்கம் இல்லாமல் பொருளும் சக்தியும் இல்லை[உயிருள்ள பொருள்களின் இயக்கத்தைக் காணக் குறைந்த கால அவகாசம் போதும்; உயிரற்ற பொருள்களின் இயக்கத்தை அறிய, பத்து, நூறு, ஆயிரம், லட்சம் கோடி என்று அதிக அளவு கால அவகாசம் தேவைப்படலாம். [நிகழ்காலத்தில் தென்படுகிற ஒரு கற்பாறையின் உருவம் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நிச்சயம் மாறுபட்டிருக்கும். அதாவது, பாறையின் உட்கூறுகள் இயங்கிக்கொண்டிருப்பதால் இது நிகழ்கிறது].

ஆன்மிகவாதிகள் குறிப்பிடுவதுபோல் அனைத்துப் பொருள்களும், மிக மேம்பட்ட சக்தி வடிவமான கடவுளால் படைக்கப்பட்டன என்றால்.....

அண்டவெளியிலுள்ள பொருள்கள் வேறு கடவுள் வேறு என்றாகிறது. பொருள்கள் அவரால் படைக்கப்படுவதற்கு முன்னால், அவர் மட்டுமே அண்டவெளியில் தனித்த பெரும் சக்தியாக இயங்கிக்கொண்டிருந்திருக்கிறார் என்று கருத நேரிடுகிறது.

அறிவியலாளர்களின் கருத்துப்படி, 'பொருள்[பிளக்கப்படுவதால் அணுக்களும் பொருள்களே] இல்லாத நிலையில், சக்தி வெளிப்படுதலோ, அது மட்டுமே இயங்குவதோ சாத்தியமில்லை. இது, இயற்கை விதி.' 

இந்த விதி கடவுளுக்கும் பொருந்தும்.

அண்டவெளிப் பொருள்கள் தோன்றுவதற்கு[எப்படித் தோன்றின என்பது நீண்ட நெடுங்கால ஆய்வுக்கு உட்பட்டது] முன்னால், கடவுள் மட்டுமே தனிப்பெரும் சக்தியாக இருந்துகொண்டிருந்தார்; அல்லது, இயங்கிக்கொண்டிருந்தார் என்பது ஆன்மிகவாதிகளின் ஆதாரமற்ற வெற்று அனுமானம் ஆகும்.
------------------------------------------------------------------------------------------------------------------
-அறிவியல் தொடர்பான தகவல் குறிப்புகள், 'அஸ்வகோஷ்' எழுதிய, 'சொர்க்கம் எங்கே இருக்கிறது?' என்னும் நூலிலிருந்து[மங்கை பதிப்பகம், வேளச்சேரி, சென்னை]  பெறப்பட்டன.