எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 7 ஜூன், 2023

'கோரமண்டல் விபத்து’... “ஏசுவே”ன்னு சொன்னதும் அந்த அதிசயம் நிகழ்ந்தது! ஹி... ஹி... ஹி!!!

கோரமான கோரமண்டல் ரயில் விபத்தும் அதனால் மக்கள் அடைந்த பெரும் துயரங்களும் ஆண்டுகள் பல கடந்தாலும் நம் நெஞ்சைவிட்டு அகலாதவை. மிகு துன்பம் சூழ்ந்த இந்தச் சூழலில்.....

சற்று முன்னர் ‘யூடியூப்’இல் வெளியாகியிருந்த ஒரு காணொலி, மனதைக் கவ்விக் கிடந்த கவலையைப் போக்கிச் சற்று நேரம் மெய் சிலிர்த்து ஆனந்தப் பரவசத்தில் ஆழ்ந்திடச் செய்தது.


விபத்தில் உயிர் பிழைத்த ஓர் அம்மாவும் மகனும் அளித்த இந்தக் காணொலிப் பேட்டியில், ஏசுநாதரை, “ஏசுவே” என்று கூவி அழைத்தவுடன் சாய்ந்த நிலையிலிருந்த அந்தவொரு ரயில் பெட்டி, கவிழ்ந்துவிடாமல் அப்படியே நின்றுவிட்டதாம்.

இது நம்மை விவரிக்க இயலாத இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சாய்ந்து நின்ற பெட்டியைக் கவிழாமல் நிறுத்திய ஏசுவின் கருணையால்,  விபத்தில் சிக்கிச் சாகவிருந்த பல பயணிகள் உயிர் பிழைத்திருப்பார்கள் என்பது உறுதி. அது குறித்து விசாரித்தறிந்து, பிழைத்தவர்களுக்கான பட்டியலை இவர்கள் வெளியிட்டிருந்தால் ஏசுவின் புகழ் மக்களிடையே வெகுவாகப் பரவியிருக்கும். 

தாயும், வளர்ந்த சேயும் அதைச் செய்திடத் தவறிவிட்டார்கள்.

இவர்கள் ரயில் ஏறிப் பயணத்தைத் தொடங்கும்போதே, ஏசுவை நினைந்து பிரார்த்தனை செய்திருந்தால் கோரமண்டல் ரயில் விபத்தே நிகழ்ந்திருக்காது. 

எது எப்படியோ, இவர்கள் இருவரும், இனி ஒருபோதும் ரயில் விபத்துகளே[மற்ற விபத்துகளும்தான்] நிகழாதிருக்க வழிகாட்டியிருக்கிறார்கள்.

இனி எங்கும் எப்போதும் விபத்துகளே ஏற்படாமலிருப்பதற்கான அந்த ஆகச் சிறந்த வழி.....

மக்கள் அனைவரும் தமக்கான பயணத்தைத் தொடங்கும்போதே ஏசுவின் நாமத்தைப் பயபக்தியுடன் உச்சரிப்பதே.

அனைவரும் ஏசுவை நினைமின்! கர்த்தரைப் போற்றுமின்!!

அகவை 119! கலக்கும் ‘கதை சொல்லி’க் கிழவன்!!


ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்று ‘துனிசியா’[Tunisia, is the northernmost country in Africa].

'ஹுசைன் அல்மிசோய்’ என்னும் 119 வயதான் ‘குடுகுடு படுகிழம்’ இந்த நாட்டவர்தான்.

இந்த வயதிலும் இவர் பேரதிசயம் ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

மேளத்தின் தாள இசைக்கேற்பப் பாட்டிசைத்துக் கதைகள் சொல்கிறாராம். அண்டை அயலாரும் சொந்தபந்தங்களும் கதை கேட்க அவரைத் தேடி வருகிறார்களாம்[நம்ம ஊர்க் கிழவர்களுக்கு 60 வயதிலேயே பேச்சு குழறுகிறது; நடை தள்ளாடுகிறது.  பாடுவது இருக்கட்டும், நல்ல பாடல்களைக் கேட்கக்கூடக் காதுகள் ஒத்துழைப்பதில்லை].

கிழவருக்கு ரத்த அழுத்தம் உள்ளது. மருந்துக் கடைகளில் வாங்கும் எளிய மருந்துகளின் மூலமே அதைச் சமாளித்துவிடுகிறாராம்.

கால் மூட்டு வலியும் உண்டென்றாலும் இவரின் கதை சொல்லலுக்கு அது தடையாக இருப்பதில்லை.

இந்தக் ‘கதை சொல்லி’க் கிழவர் சற்றே தாமதமாகத்தான் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 9 பிள்ளைகளும் 40 பேரப் பிள்ளைகளும் உள்ளனர்[வாலிப வயதிலேயே திருமணம் செய்திருந்தால், வாரிசுகளைப் பெற்றெடுப்பதிலும் இவர் சாதனை நிகழ்த்தியிருப்பார்].

இவர் மனைவிக்கு வயது 88. தம்பியின் வயது 83.

மருத்துவர் குழு உரிய முறையில் இவரின் உடலை ஆராய்ந்து, இவர் ஏறத்தாழ முழு உடல்நலத்துடன் இருப்பதை உறுதி செய்திருக்கிறது.

முதியவர் துனிசியா நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகியும்கூட.

“119 வயதிலும் நல்லதொரு கதை சொல்லி என்று பாராட்டுப் பெறும் அளவுக்கு, இவர் உடல் நலிவின்றி வாழ்வது எப்படி?” என்னும் கேள்விக்கு இவர் சொன்ன பதில்.....

“வயதாவதை நினைவுகூராதீர்”[don't keep count the age] என்பதுதான்.

வயதாவதை நினைக்காமல் வாழ்வது அத்தனை எளிதா என்ன? 

அதற்கான வழிமுறைகளையும் கிழவர் சொல்லியிருக்கலாம்.

***துனிசியா நாட்டில் உங்களுக்கு நண்பர் இருந்தால் கிழவரிடம் விசாரிக்கச் சொல்லலாமே? விசாரித்தறிந்த தகவலை ஒரு பதிவாக வெளியிடலாமே.

செய்வீர்களா? ஹி...ஹி...ஹி!!!

                                  *   *   *   *   *

காணொலி:

https://www.msn.com/en-in/video/watch/tunisia-s-119-years-young-man/vi-AA1ccFfR?ocid=msedgdhp&pc=U531&cvid=b6d1f737bb9242e78b7132c0491ea963&ei=33