தேடல்!


Aug 18, 2017

‘மகா பெரியவா’[பரமாச்சாரியார்] உயிருடன் இருந்திருந்தால்.....!

‘குமுதம்’ வார இதழ் தன் இணைப்பு இதழான ‘லைஃப்’இல், காஞ்சி பரமாச்சார்யாவின் வாழ்வில் இடம்பெற்ற அதிசயங்களென,   இட்டுக்கட்டிய நிகழ்வுகளைத் தொடர்ந்து எழுதிவருகிறது. 
வங்கி அலுவலர் ஒருவர், உடம்பெங்கும் கொப்புளங்கள் உண்டாகிக் குணப்படுத்த இயலாத[?!] நிலையில், காஞ்சி பரமாச்சாரியாரைத் தரிசிக்க வருகிறார்.

தகவல் அறிந்த ‘மகா பெரியவா’ தேடி வந்தவரிடம் ஏதும் விசாரிக்காமலே தம்மைப்  பின் தொடரச் சொல்லிவிட்டு, ‘அனுஷ்ட்டானத்துக்கு’[?] அருகிலுள்ள ஆற்றுக்குச் செல்கிறார். அதில் வாய்க்கால் மாதிரி ஜலம் ஓடிண்டிருந்தது.

ஸ்நானம் பண்ண ஆரம்பித்த பெரியவா, வந்தவரையும் வற்புறுத்தித் தன்னை அடுத்து நீரில் இறங்கி ஸ்நானம் பண்ணச் சொல்கிறார்.

‘பெரியவா’ மீது பட்ட ஜலம் அவர் மீதும் பட்டு ஓடியது. விளைவு.....

வந்தவரின் உடம்பில் பரவியிருந்த கொப்புளங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயினவாம்![குமுதம் லைஃப் 23.08.2017]

இது போன்ற பல அற்புதங்களை[!?] ‘மகா பெரியவா’ தம் வாழ்வில் நிகழ்த்தியதாகப் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளது குமுதம்[இனியும் தொடரக்கூடும்].

குமுதம் குறிப்பிடும் சம்பவங்கள் உண்மையானவையா என்பதற்கு அறிவியல் அடிப்படையிலான ஆதாரங்கள் ஏதுமில்லை. இவை உண்மை எனின், தாம் வாழ்ந்த காலத்தில் தம்மைத் தேடிவந்தோர் மட்டுமின்றி வராத ஏனையோர் குறைகளையும் அவர் போக்கியிருத்தல் வேண்டும். செய்தாரில்லை.

பரமாச்சாரியாரைப் பொருத்தவரை, உண்மையான இறைப்பற்றும் புலனடக்கமும் உதவும் மனமும் கொண்ட நல்ல ஆன்மிக நெறியாளர் என்றே மக்கள் கருதினார்கள்; கருதுகிறார்கள்.

அவர் தம் வாழ்நாளில் அளப்பரிய நற்காரியங்கள் செய்திருக்கக்கூடும். குமுதம் உண்மையாகவே அவர்தம் புகழை நிலைநாட்டிட / மக்களிடையே பரப்பிட விரும்பியிருந்தால்.....

அவர் ஆற்றிய நற்பணிகள் குறித்துத் தொடர் கட்டுரைகள் எழுதியிருத்தல் வேண்டும். அதற்கு மாறாக, நடைமுறை சாத்தியமே இல்லாத கற்பனை நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியிருப்பது மகா பெரியவரின் புகழுக்கு மாசு கற்பிக்குமே தவிர அப்புகழை நிலைநாட்டிட உதவாது.

பரமாச்சாரியார் உயிரோடு இருந்திருந்தால் குமுதத்தின் இச்செயலைக் கண்டிக்கவே செய்திருப்பார்[?].

இந்த உண்மைகளை இனியேனும் குமுதம் உணருமா?
=====================================================================================================