'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Thursday, December 31, 2015

‘பெரியார்’ இந்துமதத்தை மட்டுமே சாடினாரா?........ இ.ம. வெறியர் கவனத்திற்கு!

‘குடியரசு’[20.03.1938] இதழில், கடவுள் குறித்தும் மதங்கள் பற்றியும் பெரியார் எழுப்பிய கேள்விகளில்[உரையாடல் மூலம்] சிலவற்றின் தொகுப்பு இப்பதிவு.
பகுத்தறிவாளன்:
மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டன?
ஆத்திகன்:
கடவுளால் உண்டாக்கப்பட்டன.

கேள்வி:
மதங்கள் எத்தனை?
பதில்:
பல மதங்கள் உள்ளன.

கேள்வி:
இந்துமதம் யாரால் ஏற்படுத்தப்பட்டது?
பதில்:
கடவுளால்.

கேள்வி:
என்ன ஆதாரம்?
பதில்:
வேதங்கள் சொல்கின்றன..

கேள்வி;
வேதங்கள் தோன்றியது எப்படி?
பதில்;
கடவுளால் தோற்றுவிக்கப்பட்டன.

கேள்வி:
இதற்குச் சாட்சியோ ஆதாரங்களோ உண்டா?
பதில்:
இப்படியெல்லாம் கேள்விகள் கேட்பதே பாபம்.

கேள்வி;
இப்படிச் சொல்லிச் சொல்லியே மக்களை மூடர்கள் ஆக்கிவிட்டீர்கள். போகட்டும். கிறித்துவ மதம் என்பது என்ன?
பதில்:
ஏசுநாதரின் போதனைகளைச் சொல்வது.

கேள்வி:
ஆதாரம்?
பதில்:
பைபிள்.

கேள்வி;
ஏசுநாதர் என்பவர் யார்?
பதில்:
கடவுளின் குமாரர்.

கேள்வி;
அப்படி என்று யார் சொன்னது?
பதில்:
ஏசுவே சொல்லியிருக்கிறார்.

கேள்வி;
அது அவரது வாக்குமூலம். இதை நிரூபிக்க இந்த வாக்குமூலம் போதுமா?
பதில்:
ஏன் போதாது?

கேள்வி;
இப்போது ஒருவன் உம்மிடம் வந்து, ‘நான்தான் கடவுள்” என்று சொன்னால் நம்புவீரா? இருக்கட்டும். முகமதிய மதம் என்றால் என்ன?
பதில்:
முகமது நபி என்பவரால் சொல்லப்பட்ட கொள்கைகளைக் கொண்டது.

கேள்வி;
அதற்கு என்ன ஆதாரம்?
பதில்;
குரான்.

கேள்வி;
அது யாரால் சொல்லப்பட்டது?
பதில்:
கடவுளால் முகமதுநபி அவர்கள் மூலம் வெளியாக்கப்பட்டது.

கேள்வி;
அப்படி என்று சொன்னது யார்?
பதில்:
நபி அவர்கள் சொன்னார்கள்.

கேள்வி;
அப்படி என்று யார் சொன்னார்?
பதில்;
குரான் வாக்கியங்களில் இருக்கிறதுடன் வேறு பல சாட்சியங்களும் இருக்கின்றன.

கேள்வி:
வேறு பல சாட்சியங்கள் என்பவை எவை?
பதில்;
அந்தக் காலத்தில் நபி அவர்களுடன் இருந்த பல பெரியவர்களின் வாக்கு.

கேள்வி;
அவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?
பதில்:
எல்லாம் நம்பிக்கைதான்.

[உரையாடல் தொடர்கிறது..........]
****************************************************************************************************************************************************

ஆதார நூல்; ‘புத்தரும் தந்தை பெரியாரும்’, கண்மணி பப்ளிகேஷன்ஸ்< 4, இந்து காலனி, முதல் மெயின் தெரு, உள்ளகரம், சென்னை - 600 091; முதல் பதிப்பு: செப்டம்பர் 2000.

நூலாசிரியர்; தந்தை பெரியார்.
Monday, December 28, 2015

கட்டு..கட்டு..ஜல்லிக்கட்டு!...மரணத்துடன் மல்லுக்கட்டு!!

ல்லிக்கட்டுக்குத் தடை விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம். எனவே, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் இந்த வீரவிளையாட்டு[?] இடம்பெறவில்லை.

‘ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு; தமிழர்களின் குருதியில் கலந்துவிட்ட கலாச்சாரம்’ என்று காரணங்கள் பல சொல்லித் தடை விதித்தது தவறு என்று பலரும் சொல்கிறார்கள்.

கலைஞர் கருணாநிதியென்ன, விசயகாந்த் என்ன, இராமதாசு என்ன, வைகோ என்ன அனைத்துக் கட்சித் தலைவர்களும் தடையை நீக்க வேண்டும் என்று வரிந்துகட்டிக்கொண்டு அறிக்கை விடுகிறார்கள்: போராட்டங்களையும் அறிவித்திருக்கிறார்கள். ‘அம்மா’வும் கடிதம் எழுதியிருக்கிறார்.

நடுவணமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், “ஜல்லிக்கட்டு நடக்கும்" என்று நம்பிக்கை விதையை விதைத்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கக் காரணம், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கு. 

வாரியம் சொல்வதில் உண்மை இல்லையா?  நிகழ்ச்சியில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லையா? என்பன போன்ற கேள்விகள் நம் மனதில் எழுகின்றன அல்லவா?

அவை அர்த்தமற்ற[!] கேள்விகள்.

காளையின் திமிலை வளைத்துப் பிடித்து முழு பலத்துடன் இறுக்குவதும், கொம்புகளை அழுந்தப் பற்றி அதன் கழுத்தை முறிப்பதுபோல் பக்கவாட்டில் திருகுவதும், வாலை இழுப்பதும் துன்புறுத்தல்கள் அல்ல; அல்லவே அல்ல. இது வெறும் விளையாட்டு...வீர விளையாட்டு.

பதிலுக்குக் காளையும் விளையாடுகிறது. ஆனந்தப் பரவசத்துடன், துள்ளிக் குதித்து, எகிறிப் பாய்ந்து வீரர்களை மூர்க்கமாய் முட்டித் தள்ளுவதுபோல் பாசாங்கு செய்கிறது. சில நேரங்களில், எசகுபிசகாக அதன் கொம்புகள் குத்திச் சில வீரரகள் காயம்பட்டு உயிரிழக்கிறார்கள்.

ஒவ்வொரு ஜல்லிக்கட்டின்போது உயிரிழப்புகள் நேரத்தான் செய்கின்றன. குறைந்தது மூன்றுநான்கு பேர்.

இதற்காகவெல்லாம் நாம் வருத்தப்படத் தேவையில்லை. ஏனென்றால், இந்த உயிரிழப்புகள்தான் நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காக்கின்றன. இது தெரிந்துதான், நம் தலைவர்கள் எல்லாம் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கவேண்டும் என்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்குப் பேர்போன அலங்காநல்லூர்க்காரர்கள், ‘காலங்காலமா ஜல்லிக்கட்டு நடத்திட்டு வர்றோம். கடந்த ஆண்டு அது தடைபட்டது. எல்லா ஊருக்கும் பெய்த மழை எங்கள் ஊரில் பொய்த்துவிட்டது. காரணம் சாமி குத்தம்’ என்கிறார்களாம். இது பத்திரிகை[தின மலர், 27.12.15]ச் செய்தி.

கடந்த ஆண்டுக்கு முந்தை ஆண்டுகளில் எல்லாம் தவறாமல் மழை பெய்ததா என்று நாம் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பதும்கூட குத்தம்தான்...சாமி குத்தம்.

எந்தவொரு குத்தத்துக்கு ஆளானாலும் சாமி குத்தத்துக்கு நாம் ஆளாகக் கூடாது. மழைமாரி பொய்த்துப் போக, தமிழினமே பூண்டோடு அழிந்துவிடக்கூடும். ஆகவே......

போராடுவோம். தடைகளைத் தகர்ப்போம். . நம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவைக் கொண்டாடுவோம். உயிரிழப்புகள் ஒரு பொருட்டல்ல.

ஆம், உயிரிழப்புகள் நமக்கு ஒரு பொருட்டல்ல!

+============================================================================================Sunday, December 27, 2015

Thursday, December 24, 2015

‘விரதம்’.....{71/2 நொடி சிரிப்பு[?]க் கதை!}

நீதிமன்றம்.

கூண்டில் நின்றவரிடம் நீதிபதி கேட்டார்: “நீ ஏன் அவரைக் கொலை செய்தாய்?”

குற்றாவாளி: “பணத்துக்காக.”

“பணத்தை என்ன செய்தாய்?”

“குடித்தேன்; உல்லாசமாக இருந்தேன்.”

“கொலை செய்யப்பட்டவரிடம் வேறு என்ன இருந்தது.”

“ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் ரொட்டியும் இறைச்சியும்.”

“அவற்றை என்ன செய்தாய்?”

“ரொட்டியைத் தின்றேன். இறைச்சியைத் தூக்கி எறிந்துவிட்டேன்.”

“ஏன் அப்படிச் செய்தாய்?”

“அன்று வெள்ளிக்கிழமை. வழக்கமாக நான் ‘விரதம்’ இருக்கும் நாள்.”
=============================================================================================

இது என் சொந்தக் கதையல்ல; ‘சுட்ட’ கதை. எங்கிருந்து என்பது மறந்துவிட்டது!

Tuesday, December 22, 2015

காளைப் பருவத்தில் ‘பிரமச்சரியம்’ சாத்தியமா? -குடும்பக் கதை!

பழைய[தேதி சிதைந்துவிட்டது] தினத்தந்தி ‘ஞாயிறு மலர்’ பகுதியில் ‘வேகத் தடை’ என்னும்  தலைப்பில் வெளியான சிறுகதை.


எழுதியவர்:

ரந்தாமன், தான் பல ஆண்டுகளாகக் கட்டிக் காத்த பிரமச்சரியம் கொஞ்ச நாட்களாகவே ஆட்டம் கண்டுகொண்டிருப்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தான்.

“முதலில் தங்கையின் கழுத்தில் தாலி. அப்புறம்தான் இந்த அண்ணனின் கல்யாணம்” என்று சங்கல்பம் செய்துகொண்டதோடு, ’பெண்  சகவாசமே’ வேண்டாம் என்று ‘முழுப் பட்டினி’ கிடந்ததெல்லாம் இப்போது முட்டாள்தனமாகப் பட்டது.

தீர்த்தகிரி அடிக்கடி சொல்வான்:  “டேய் பரந்தாமா, உன்னையும் என்னையும் மாதிரி தலைச்சனாய்ப் பிறந்து, பெத்தவங்களையும் பறி கொடுத்த ஆண்பிள்ளைகளுக்குக் கல்யாணம் என்பது கானல்நீர். பொம்பளை சுகத்துக்கு ‘அந்த மாதிரி’ பொண்ணுகளைத்தான் தேடிப் போகணும்.”

நண்பனின் பேச்சு எத்தனை எதார்த்தமானது என்பது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரிந்தது பரந்தாமனுக்கு.

தீர்த்தகிரி சொல்லி, டைரியில் குறித்து வைத்த மோகனாவின் முகவரியைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான்.

ஒரு தடவை, அவள் வீட்டு வாசல்படி வரை போய்விட்டு, மனசாட்சி முரண்டு பிடிக்கவே வீடு திரும்பினான்.

'சேலத்துக்காரர்கள், தங்கை பொன்மணியைப் பெண் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்களின் பதில் பாதகமா இருந்தா விரதத்துக்கு அழுத்தமாய் ஒரு முற்றுப்புள்ளி’ என்று முடிவெடுத்திருந்தான்
பரந்தாமன்.

அவர்களின் பதில் பாதகமாகவே இருந்துவிட்டது.

“உடம்பை வித்துப் பிழைச்சாலும் மோகனா ரொம்ப டீஸண்ட்டானவள்..மாதம் தவறாம மெடிக்கல் செக்கப் செஞ்சுடுவா. வி.டி., எயிட்ஸுன்னு பயந்து சாகாம அவளைக் கையாளலாம்” என்று தீர்த்தகிரி அளித்த சான்றிதழ், பரந்தாமனிடமிருந்த கொஞ்சநஞ்ச தயக்கத்தையும் விரட்டியடித்தது.

கைபேசியை எடுத்தான்.

“ஹலோ...மோகனாவா...?”

“ஆமா...நீங்க....?”

“நான் பரந்தாமன்...தீர்த்தகிரி ஃபிரண்டு”

“சொல்லுங்க சார்.”

“அது வந்து...வந்து...”

வஞ்சனையில்லாமல் சிரித்தாள் மோகனா. “பாவம் சார் நீங்க. பயந்து பயந்தே வாலிப் பருவத்தை வீணடிக்கிறீங்க. தீர்த்தகிரி உங்களைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கார். யூ ஆர் வெல்கம்.” -தேன் தடவிய குரலில் பரந்தாமனைக் கிறங்கடித்தாள் மோகனா.

பரந்தாமன் தங்கையை அழைத்தான்.

‘ஒருத்தரைப் பார்க்கணும். வெளியே போய் வர்றேம்மா.”

“அவர் யாருண்ணா?”

“அவர் நீ தெரிஞ்சிக்க வேண்டிய ஆளல்ல.”

“நீங்க எப்பவுமே இப்படிப் பூடகமா பேசினதில்ல. இன்னிக்கி உங்க நடவடிக்கை எல்லாமே வித்தியாசமா இருக்கு. காலையில் டிபனுக்கு ரசம் கேட்டீங்க. எப்பவும் என்னோடு சேர்ந்துதான் சாப்பிடுவீங்க. இன்னிக்கி நீங்க பாட்டுக்குத் தனியாவே சாப்பிட்டீங்க......”

திடுக்கிட்டான் பரந்தாமன். “அது வந்து...ஏதோ ஞாபகத்துல...” -வார்த்தைகளை மென்று 
விழுங்கினான்.

“எல்லார்த்தையும்விட பெரிய அதிர்ச்சி என்ன தெரியுமா? இன்னிக்கி என் பிறந்த நாள். என் பிறந்த நாள் அன்னிக்கித் தவறாம கோயிலுக்கு அழைச்சிட்டுப் போவீங்க. அதையும் செய்யல.” -அழுகையைக் கட்டுப்படுத்தி வெறுமனே சிரித்தாள் பொன்மணி.

“நீங்க உங்க ஃபிரண்டோட போனில் பேசினதை அரைகுறையாக் கேட்டேன். உங்க குழப்பத்துக்கான காரணத்தை ஓரளவு புரிஞ்சிட்டேன். இப்போ நான் ஒரு முடிவெடுத்திருக்கேன்.......” தொடராமல் சற்றே இடைவெளி கொடுத்தாள் பொன்மணி.

பேசினாள்: ”ஒடிசலான தேகம்; ஒடுங்கிய கன்னம். இரண்டு உதடுகளையும் ஒட்டவிடாம தடுக்கிற தூக்கலான பல்லுங்க. அட்டக் கறுப்பு. இதுதான் நான். அழகு ரசனையுள்ள எவனும் கத்தை கத்தையாப் பணம் கொடுத்தாலும் என்னைக் கட்டிக்க மாட்டான். அப்படியே ஒருத்தன் சம்மதிச்சாலும், கொடுக்க நம்மகிட்டப் பணம் இல்ல. அதனால, இனி எனக்கு மாப்பிள்ளை தேடுறதை நிறுத்திடுங்க...” -சொல்லி நிறுத்தி, பரந்தாமன் மீது பார்வையைப் படர விட்டாள்.

அவன் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தான்.

தொடர்ந்தாள் பொன்மணி:  “வீட்டை ஒட்டியிருக்கிற நம் காலி மனையில் சின்னதா ஒரு செட் போட்டு ’டெய்லரிங் கடை’ வைத்துக் கொடுங்க. என்னால முடிஞ்சவரை உங்க குடும்பத்துக்கு ஒத்தாசையா இருந்து காலம் கழிச்சுடுவேன். உடனே ஒரு தரகரைப் பார்த்து உங்களுக்குப் பெண் தேடச் சொல்லுங்க.”

மவுனமாய்த் தலையசைத்தான் பரந்தாமன்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

Sunday, December 20, 2015

உருளுங்கடா...உருளுங்க!!! [‘உருளுதண்டம்’ குறித்த கவிதை]

உருளுங்கடா உருளுங்கடா உருளுங்க உருளுங்க
‘அவர்கள்’ வீசிய எச்சில் இலையென்ன
காறித் துப்பிய எச்சில்மீதும் உருளுங்கடா
எச்சிலினும் புனிதமடா அப்புனிதரின் சிறுநீர்
சிந்தை குளிர அச்சிறுநீரில் உருளுங்கடா
சந்தனமாய்க் கமகமக்கும் அன்னாரின் ‘பீ..ப்..பீ..ப்..பீ..ப்’
உருளுங்கடா உருளுங்கடா அதன்மீதும் உருளுங்கடா
சந்தேகமே வேண்டாம் நீங்கள் உருண்டுகொண்டே
‘சொர்க்கம்’ சேர்வது நிச்சயம் நிச்சயமே!  

படைப்பு: ‘பசி’பரமசிவம்

படங்கள்: இன்றைய[20.12.2015] ‘தி இந்து’ விலிருந்து.....
Friday, December 18, 2015

தமிழ் வலைப்பதிவர்களிடம் நான் தயக்கத்துடன் முன்வைக்கும் சில கேள்விகள்!


கேள்விகள், தொடர்புடையவர்களுக்குப் புரிந்தால் போதும். பதில்கள் அவசியமில்லை!
கேள்வி ஒன்று:
பதிவுகள் எழுதித் தமிழுக்குச் சேவை செய்துவரும் பதிவர்களில் கணிசமானவர்களின்[20% ?] ‘வலைப்பக்கத் தலைப்பு’ தமிழில் இல்லை! இவர்கள் தமிழில் எழுதும் பதிவுகளைத் தமிழ் அறிந்தவர்கள்தானே வாசிக்கிறார்கள். அப்புறம் எதற்கு ஆங்கிலத்தில் தலைப்பு?

இரண்டு:
கணிசமான பதிவர்களின் பெயர்களும்[45% ?!!!] ஆங்கிலத்தில்தான் உள்ளன. அறிவுஜீவிகளான பதிவர்களையும் ஆங்கில மோகம் ஆட்டிப்படைக்கிறதா? ‘இதனாலெல்லாம் தமிழ் அழிந்துவிடாது; அதன் பெருமை நலிந்துவிடாது’ என்று நினைத்துத் தமிழை அலட்சியப்படுத்துகிறார்களா? உண்மை நிலை என்ன?

மூன்று:
பதிவு எழுதி முடித்த பின்னர், ஓரிரு முறையேனும் அதைத் திரும்ப வாசித்துப் பிழை நீக்குதல் அவசியம்[பலமுறை முயன்றாலும் அனைத்துப் பிழைகளையும் நீக்குவது என்பது சாத்தியம் இல்லாமல் போகலாம்]. பதிவர்களில் சிலருக்கு அப்படியொரு பழக்கமே இருப்பதாகத் தெரியவில்லை. இதனாலெல்லாம் தமிழின் கட்டமைப்பு சீர்குலைந்துவிடாது என்று அவர்கள் எண்ணுகிறார்களா?

நான்கு:
சற்றே முயன்றால் தமிழாக்கம் செய்துவிடக்கூடிய ஆங்கிலச் சொற்களைக்கூட, தமிழ் எழுத்துகளில் எழுதுகிறார்கள்[நானும் விதிவிலக்கல்லேன். வாசகரைக் கவரவும், எளிதாகப் பொருள் புரியவும் எப்போதாவது இத்தவற்றைச் செய்வதுண்டு. எ-டு: ‘சென்னை வெள்ளமும் செக்ஸ் தொழிலாளர்களின் நல்ல உள்ளமும்’]; காரணம், இயலாமையா, சோம்பல் குணமா?

ஐந்து:
தேடுபொறிகளிலும் சமூக வலைத்ததளங்களிலும் தமிழும் ஒரு பயன்பாட்டு மொழியாக அறிந்தேற்புச் செய்யப்பட்டுள்ளதோடு, அவை பெருமளவு தமிழிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.  தமிழைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்காவிடின், எதிர்காலத்தில் அது நீக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது என்பதைப் அனைத்துப் பதிவர்களும் அறிவார்கள். எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் தமிழுக்கு முன்னுரிமை தருகிறார்களா நம் பதிவர்கள்?


என் தளத்திலிருந்து..........

எல்லா Google சேவைகளுக்கும் ஒரே Google கணக்கு
============================================================================================================தங்களின் வருகைக்கு நன்றி.


Wednesday, December 16, 2015

மெல்லத் தமிழினிச் சாகும்; தமிழனும் சாவான்!

தமிழ்நாட்டில் தமிழர்களாலேயே தமிழ் புறக்கணிக்கப்படுவது ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறாகும்.

மொழியும் நாடும் இரு கண்கள் போன்றவை. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் சொல்லலாம். ஒன்றில்லாமல் ஒன்றில்லை.

நாடு போனால் மீட்டுக்கொள்ளலாம்; மொழி போனால் மீட்டுக்கொள்ள முடியாது. மொழி அழிந்தால், அந்த மொழி பேசும் இனமும் பிறருக்கு அடிமையாகி அழிந்துபோகும்.

123 ஆண்டுகள் போலந்து என்ற நாடே நிலப்படத்தில் இல்லாமல் போனது. போலந்து மக்களுக்குள் கனன்றுகொண்டிருந்த மொழிப்பற்றும், அதை ஊட்டி வளர்த்த இலக்கிய உணர்வும் இருந்ததால்தான், போலந்து மக்கள் தம் நாட்டை மீட்டெடுத்து, இன்று தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது.

நாடற்று வாழ்ந்த  யூதர்கள், தம் தாய்மொழியாம் ‘ஹீப்ரு’ மொழி வழியாகத்தான் தமக்கென ஒரு நாட்டை[இஸ்ரேல்] உருவாக்கினார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தாய்மொழியைப் புறக்கணிப்பதில் உள்ள இன்னொரு அடிப்படைக் கேட்டைத் தமிழர்கள் உணரவில்லை. தாய்மொழியைச் சிறப்பாகக் கற்றால்தான் எதையும் புரிந்துகொள்ளும் சக்தி வலுப்பெறும்; பிற மொழிகளைக் கற்பதும் எளிதாகும். இது அறிவியல் கண்ட உண்மை.

பிற மொழி கற்பதில் மலையாளிகளும் வங்காளிகளும் போலிஷ் மக்களும் முன்னணியில் நிற்பது தாய்மொழியைச் செம்மையாகக் கற்ற காரணத்தால்தான்.

மலையாளிகள் தம் மொழியைக் குழந்தைகள் பள்ளி செல்லும் முன்னரே வீட்டில் நன்கு கற்பிக்கிறார்கள். பிற நாடுகளிலும் இதைக் காணலாம்.

தமிழ்நாட்டில் மொழி பற்றிய கவனம் கொஞ்சமும் இல்லை. குழந்தைகள் மட்டுமல்ல, பெரும்பான்மைத் தமிழர்கள் பேசுவதே மழலைத் தமிழ்தான்!

தமிழக வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி, பொது மேடைகள் ஆகியவற்றில் பேசப்படும் தமிழைக் கேட்டு மொழிச்சுரணையுள்ள தமிழர்கள் சாகாமல் இருக்கக் காரணம், அவர்களுக்கு அசுணமாச் செவி இல்லாமல் இருப்பதுதான்.

போலந்து நாட்டில் பள்ளியிறுதித் தேர்வுக்குப் போலிஷ் மொழியில் வாய்மொழித் தேர்வு உண்டு. அதில் வெற்றிபெறாவிட்டால் அந்தத் தேர்வில் வெற்றி பெற முடியாது. அமெரிக்காவுக்கும் இன்னும் ஆங்கிலம் வழங்கும் நாடுகளுக்கும் படிக்கப் போகும் நம் நாட்டு இளைஞர்கள் எழுத்து ஆங்கிலத்தையும் பேச்சு ஆங்கிலத்தையும் நன்கு படித்திருக்கிறார்களா என்று பார்க்கிற தேர்வில் வென்றால்தான் அங்கெல்லாம் போய்ப் படிக்க அங்குள்ள பல்கலைக் கழகங்கள் இடம்கொடுக்கும்.

நம் ஊரில் கதை எப்படி?

“தாய்மொழியாம் தமிழ் கற்கிலாய்; வேறு வேறு மொழி கற்பாய். வா...வா...வா.”

தமிழ்மொழி, சங்க காலத்தில் சாதவாகன மன்னர்களின் காசுகளில்கூட இடம்பெற்றிருந்தது. ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் தமிழ் இருந்ததால்தான், தமிழில் பழைய காலத்திலேயே இலக்கிய வளம் செறிந்திருந்தது.

இதெல்லாம் படிப்படியாகப் பறிபோய், ஏதோ தமிழர்களின் நாவில் மட்டும் தமிழ் தடுமாறி, அதுவும் பறிபோகிற நிலையில் இருக்கிறது.

தமிழில் பேசுவோம் என்பதை ஆங்கிலத்தில் எழுதிவைத்துத் தமிழ் வாரம் கொண்டாடுகிற முயற்சியெல்லாம் இதைத்தானே சொல்கிறது. [பொங்கல் தினத்தன்று வாசல்களில், Happy Pongal  என்றுதான் நம் குலப் பெண்கள் vaalththu எழுதி வைக்கிறார்கள்]
எனவே, ஆட்சி, கல்வி, நீதி, மதம், வணிகம் என்று எல்லாவற்றிலும் தமிழ் ஆண்டால்தான் தமிழ் தப்பிக்கும். இல்லையென்றால்..........

மெல்லத் தமிழினிச் சாகும்; தமிழனும் சாவான்.
*****************************************************************************************************************************************************
முனைவர் கி.நாச்சிமுத்து அவர்களின் ‘உலகம் தேடும் தமிழ்’[வெளியீடு: பேரா.கி.நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், கோவை] என்னும் நூலிலிருந்து எடுத்தாண்டது.

நன்றி: பேராசிரியர் கி.நாச்சிமுத்து.Monday, December 14, 2015

காலாவதி ஆகிறதா ‘கற்புநெறி’!? இராமன் ஏகபத்தினி விரதனா?![படியுங்கள்; பகிருங்கள்]

‘கல்’ என்னும் அடிச்சொல்லே ‘கற்பு’ என்றானது.

பெற்றோர் கற்பித்த வாழ்க்கை நெறிமுறைகளை மனதில் பதித்து அவ்வாறே வாழ்ந்து காட்டுதல் என்பது இதற்கான பொருள்.

ஆண், பெண் என இருபாலர்க்கும் இது பொருந்தும். 

ஆயினும், சங்கங்கள் நிறுவித் தமிழ் வளர்த்த காலத்திலிருந்தே பெண்களுக்கு மட்டுமே உரிய ஒழுக்கமாக இதை ஆக்கினார்கள் ஆண் மக்கள்! 
கட்டுப்பாடு ஏதுமின்றிப் பல பெண்களோடு இன்பம் துய்த்தார்கள். அதற்கென, பரத்தையர் இனங்களையும் உருவாக்கினார்கள்.

பிற ஆடவரைக் கூடுவதாக நினைத்தாலே கற்பு பறிபோகும் [‘நினைத்தலும் செய்தலோடு ஒக்கும்’] என்று அச்சுறுத்தினார்கள்; ஏடுகளில் எழுதியும் வைத்தார்கள்.

கந்தர்வனின் நிழல் உருவத்தைப் பார்த்து ஆசைப்பட்டதற்காகக் கணவன் ஜமதக்கினி முனிவனின் ஆணைப்படி பெற்ற மகனாலேயே கொல்லப்பட்ட அபலையின் கதை இதற்கு ஓர் உதாரணம்.

கி.பி 7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், புற்றீசலாய்ப் பல்கிப் பெருகிய புராணங்களும் இதிகாசங்களும் கட்டிவிட்ட கற்பரசிகளின் கதைகள் எண்ணி மாளாதவை.

திருவள்ளுவர் மட்டுமே ஆடவருக்கும் கற்பு தேவை என்பதை வலியுறுத்தினார்.

அன்று, கற்புடன் வாழ்ந்த சாமானியர்கள் இருந்தார்களோ என்னவோ, காப்பிய நாயகர்களில், கற்பு நெறி பிறழாமல் வாழ்ந்தவர் எவருமில்லை.

கம்பன், ராமனை ஏகபத்தினி விரதனாகப் படைத்துப் பெருமைப் படுத்தியது தமிழ்ப் பண்பாட்டை மனதில் கொண்டுதான்.

வால்மீகியைப் பொருத்தவரை. ராமன் பல பெண்களை மணந்தவன்.
//ஆடவரில் இன்றளவும் ‘இராமன்’ மட்டுமே’ உதாரண புருஷனாகக் காட்டப்பட்டான். ஆனால், வால்மீகி இராமாயணம் படித்தவர்கள் அதைத் தவறு என்கிறார்கள்.

‘வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம், சரகம் 8 சுலோகம் 12 இல் இராமன் பல பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகிறது’ - Theebam [ttamil.com]//

என்னதான், ‘கற்புக்கரசி’, ‘கற்பின் கனல்’, ‘கற்புடைத் தெய்வம்’ என்றெல்லாம்  ஆடவர் கூட்டம் வாய் கிழிய வாழ்த்திய போதும், மாதரில் பலரும் படி தாண்டிய பத்தினிகளாய் நெறி பிறழ்ந்து வாழ்ந்ததாலோ என்னவோ..........

‘மணமாவதற்கு முன்போ பின்போ, உடலளவில் கணவனைத் தவிர, பிற ஆடவருடன் உடலுறவு கொள்ளாதிருத்தல் கற்பு’ என்று பிற்காலத்தில் கற்புக்குப் புதிய இலக்கணம் வகுக்கப்பட்டது!

இந்தக் கட்டுப்பாட்டை மகாத்மா காந்தி தளர்த்தினார்.

‘1947 இல் நிகழ்ந்த இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் ஏற்பட்ட கலவரத்தின்போது கற்பழிக்கப்பட்ட பெண்கள் [பெரும் எண்ணிக்கையில்] மனத்தளவில் குற்றம் புரிந்தவர்கள் அல்ல. அவர்கள் கற்பிழந்தவர்கள் ஆக மாட்டார்கள். இளைஞர்கள் அவர்களுக்கு வாழ்வு தர முன்வரவேண்டும்’ என்று அறிக்கை விட்டார் காந்தி. எத்தனை பெண்களுக்கு வாழ்வு கிடைத்தது என்பது பற்றியெல்லாம் அன்று யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கணக்கெடுப்பு ஏதும் நிகழ்த்தப்பட்டதாகவும் அறியப்படவில்லை.

மிக்க புகழுடன் வாழ்ந்து மறைந்த டாக்டர் மு. வரதராசனார், கற்புக்கான இலக்கணத்தை மேலும் எளிமையாக்கினார்.

‘திருமணத்திற்கு முன்பு, ஓர் ஆணோ பெண்ணோ ஒழுக்கம் தவறியிருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு ஒருவர் மற்றவருக்குத் துரோகம் செய்யாமல் வாழ்ந்தால் அதுவே கற்பு’ என்றார் [‘கரித்துண்டு’ நாவல்].

‘சமுதாயம் வெகு விரைவான மாற்றங்களைக் கண்டு வருகிறது.....கடந்த காலங்களில், பொருளீட்டுவதற்காக ஆண்கள் மட்டுமே வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. பெண்கள் வீட்டோடு முடங்கியிருந்தார்கள். ஆடவர் நிலை சேற்றில் நடப்பது போல இருந்ததால் எளிதில் ஒழுக்கம் தவறினார்கள். பெண்கள் நிலை மணலில் நடப்பது போல என்பதால், அவர்கள் ஒழுக்கம் தவறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தன. ஆனால், இன்றைய சமுதாய அமைப்பில், அவர்களும் பொருளீட்டுவதற்காகவும் பிற காரணங்களுக்காகவும் வெளியிடங்களுக்குச் சென்று ஆண்களுடன் பழகுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை நிலையும் சேற்றில் நடப்பது போல் ஆகிவிட்டது’ என்று பழைய விதியைத் தளர்த்தியதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கற்பு நெறிக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாய் தளர்த்தப்பட்டதிலிருந்து ஒன்று தெளிவாய்ப் புரிகிறது. 

கற்பிக்கப்பட்ட கற்பொழுக்கத்துடன் வாழும் பெண்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்பதே அது.

கள்ளக் காதலனுடன் ஓடிப்போவது; திருட்டு உறவுக்கு இடையூறாக இருந்த துணைவனை/துணைவியைத் தீர்த்துக்கட்டுவது; விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்வது [விவாகரத்துக்கான முதன்மைக் காரணங்களுள் ‘துரோகம்’ செய்வதும் ஒன்று]; பிரிந்து வாழ்வது; மணம் புரியாமலே கணவன் மனைவி போல் சல்லாபம் புரிவது; ஒப்புக்குக் கணவன் மனைவியாக வாழ்ந்துகொண்டே கண்ட கண்ட கழுதைகளுடன்  சரசமாடுவது என்று இம்மாதிரியான நிகழ்வுகள் நாளும் அதிகரித்து வருவது மேற்கண்ட முடிவுக்கு வலிமை சேர்க்கிறது.


கற்பொழுக்கம் நலிவடைந்துவரும் நிலையில், இந்நெறியில் பற்றுக்கொண்டு வாழ்வோர் எத்தனை பேர்? அவர்களின் சதவீதம் என்ன? பதில்கள் அறியும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு.

ஆனால், அதற்கான ‘கணக்கெடுப்பு’ சாத்தியமற்றது.

“நீங்கள் கற்புடையவரா?” என்று ஓர் ஆணிடம் கேட்கலாம். பெண்ணிடம் கேட்க முடியுமா? ஆண்களிலும் எத்தனை பேர் உண்மை பேசுவார்கள்? பெண்களின் செயல்பாடு என்னவாக இருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

சதவீதம் என்னவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். இன்றளவில் நிறை பிறழாமல் வாழ்வோர் எண்ணிக்கை இனியும் குறைந்துவிடாமல் தடுத்து நிறுத்துவது சாத்தியப்படுமா?

படலாம்.

தகிக்கும் காம இச்சையிலிருந்து விடுபடுவது ஆணைப் பொருத்தவரை  எளிது. அதுவே பெண்களுக்கு மிக அரிது.

பெண்கள் மணவிலக்கு கோருவதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று ‘அது’ விசயத்தில் திருப்தியின்மை என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள். [பாதிக்கப்பட்ட பெண்களும் குடும்பத்தாரும், சுய கௌரவத்துக்குப் பங்கம் விளையும் என்பதால் வேறு காரணங்களை முன் வைக்கிறார்கள்]. ஆனால், இதை நாசூக்காகவேனும் ஒரு பெண் தன் கணவனிடம் வெளிப்படுத்தும் நிலை இன்றுவரை இல்லை.

உடலுறவைப் பொருத்தவரை பெண்ணைக் காட்டிலும் ஆணுக்குள்ள பொறுப்பு [கடமை] அதிகம்.

ஆனால், தன் உடம்புச்சூடு தணிந்ததும் நடையைக் கட்டுகிற ஆண்களே பெரும்பாலோர் என்பது பொதுவான ஒரு கணிப்பு.

இந்த விசயத்தில்,  திருப்தியை அல்லது திருப்தியின்மையை நம் பெண்கள் வாய்விட்டுச் சொல்ல மாட்டார்கள். ஆனால், அவர்களின் ஒவ்வோர் அசைவும் அதை வெளிப்படுத்திவிடும். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை ஊன்றிக் கவனித்தால் இது தெரியவரும் [அனுபவசாலிகள் இது பற்றித் தனிப் பதிவே போடலாம்!]

தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசுவது, இது தொடர்பான பல சிக்கல்களை அவிழ்க்க உதவும். ஆனால், அதற்குரிய மனப் பக்குவம் இருவருக்குமே தேவை. இல்லையென்றால், குடும்பத்தில் வீணான குழப்பங்கள் உண்டாகும்.

தன்னைத் திருப்திபடுத்துவதில் தன்னவன் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறான் என்பது புரிந்தாலே, குறைகளை அலட்சியப்படுத்தி, அவனைப் பெரிதும் நேசிப்பாள் பெண்.

மேற்சொன்னவற்றை மனதில் இருத்தி, மணம் புரியக் காத்திருக்கும் ஒவ்வொரு கட்டிளங் காளையும் “சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்று அலட்சியமாக இராமல், உடலுறவு என்பது ஒரு கலை என்பதைப் புரிந்துகொண்டு அதை முழுமனதுடன் கற்றுத் தெளிவதில் முனைப்புக் காட்ட வேண்டும். [செயல்படுத்துவது மணமான பின்னரே].

இதை, உரிய முறையில் உணரச் செய்வதில்  பெற்றோர்க்கும் பங்குண்டு. நெருங்கிய உறவினர்களும் நல்ல நண்பர்களும்கூட உதவலாம்.

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும், பல்கலைக் கழக மையங்களிலும் இதற்கான ஆலோசனை மையங்கள் தொடங்கலாம். அறிஞர் குழு அமைத்து அவர்களின் ஆலோசனைப்படி சான்றிதழ் பட்டப்படிப்புகள் உருவாக்குவதுகூட நன்மை பயப்பதாக அமையலாம்.

உடலுறவுக் கல்வி பெறாமல் எந்தவொரு ஆண்மகனும் மணம் புரிதல் கூடாது என்பதற்கு அரசு சட்டம் இயற்ற வேண்டிய தேவை பற்றிச் சமூக இயல் வல்லுனர்கள் சிந்திக்கலாம்.

இம்மாதிரி நடவடிக்கைகள், தாம்பத்திய சுகம் பெறுவதில், ஆண்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படும் அதிருப்தியைப் பெருமளவு குறைக்கும்; கற்புநெறி பிறழ்வோர் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்.

அனைத்திற்கும் மேலாக, ‘போதும்’ என்ற மனப் பக்குவத்தை இருபாலரும் பெறுவது மிகவும் அவசியம்.

அந்தப் பக்குவம் இல்லையென்றால், “இன்னும் வேண்டும்..இன்னும் வேண்டும்” என்று மனம் அலைபாய்வதைத் தடுக்க முடியாது. கட்டுப்பாடுகள் உடைந்து சிதற, ஆண் பெண் வேறுபாடின்றி அனைவரும் வெறி பிடித்து அலையும் நிலை உருவாகும். அடுத்த சில தலைமுறைகளில் கற்பு இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போகும்!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பழசு...பழசு...பதிவு ரொம்பப் பழசுங்க!

Sunday, December 13, 2015

‘எச்சில் சோறு’.....ஒரு குடிசைவீட்டுக் குடும்பத் தலைவியின் கதை!!!

                                 
மீனாட்சி, தேவகியைத் தேடிப் போனபோது, சாப்பிட்டுக்கொண்டிருந்த சாதத்தை மீதம் வைத்துவிட்டுத் தள்ளாடியபடி எழுந்து போனான் தேவகியின் கணவன்.
அலுமினியத் தட்டை இழுத்து வைத்து, எச்சில் சோற்றை உண்ண ஆரம்பித்த தேவகி, மீனாட்சியைப் பார்த்துவிட்டு, “வாக்கா சாப்பிடலாம்” என்றாள்.

பதில் பேசாமல் தேவகியின் முகத்தையே உற்றுப் பார்த்தாள் மீனாட்சி.

“என்னக்கா அப்படிப் பார்க்குறே?” 

“இவ்வளவு நாளா உன்னை நான் சரியாவே புரிஞ்சிக்கல.”

“புரியும்படியா சொல்லு.”

“உன் புருஷன்கூட நீ அடிக்கடி சண்டை போடுவே. அதனால, அது மேல உனக்குப் பாசம் இல்லேன்னு நினைச்சேன். ஆனா, பாசம் மட்டுமில்ல ரொம்ப ஆசையும் வெச்சிருக்கேன்னு இப்பத்தான் புரியுது.” -குரலில் குறும்பு துள்ளக் கண் சிமிட்டினாள் மீனாட்சி.

“எதை வெச்சிச் சொல்லுறே?” -விழிகளில் வியப்பு மிளிரக் கேட்டாள் தேவகி.

“இப்பல்லாம் புருஷன் மிச்சம் வெச்ச எச்சில் சோத்தை எவளும் சாப்பிடுறதில்ல. ஆனா, நீ சாப்பிடுறியே, அதை வெச்சுத்தான்.”

“நல்ல கூத்துக்கா. ஆட்டுக் கறி சமைச்சேன். குடிச்சிட்டு வந்து, போடு போடுன்னான். அள்ளி அள்ளிப் போட்டேன். போதையில் பாதி தின்னுட்டு மிச்சம் வெச்சுட்டு எந்திரிச்சிப் போய்ட்டான். கறி விக்கிற விலைக்கு எச்சின்னு பார்த்தா முடியுமா? விதியேன்னு திங்கிறேன். ஆசையாவது தோசையாவது.”

வறட்சியானதொரு சிரிப்பை உதிர்த்தாள் தேவகி.
                                         *                    *                    *

Wednesday, December 9, 2015

சென்னை வெள்ளமும் ‘செக்ஸ்’ தொழிலாளர்களின் நல்ல உள்ளமும்!

‘இவர்கள்’ வயிற்றுப்பாட்டிற்காகத் தன்மானத்தை இழந்தவர்களாக இருக்கலாம். ஆனால், மனிதாபிமானத்தை இழக்காதவர்கள்; நம்மால் பெரிதும் மதிக்கத்தக்கவர்கள்.


08.12.2015 நாளிதழில்[நன்றி: தினத்தந்தி] வெளியான ஒரு செய்தி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

#மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ‘செக்ஸ்’ தொழிலாளர்கள், சென்னை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கினார்கள். ‘சினேகாலயா’ என்ற ‘தொண்டு நிறுவனம் அகமது நகரில் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் அனில் கவடேயிடம் அவர்கள் வழங்கினார்கள்.
இது பற்றி, ‘சினேகாலயா’ நிறுவனர் கிரிஷ் குல்கர்னி கூறுகையில், ‘சென்னை வெள்ளப் பாதிப்பைக் கேள்விப்பட்டு, கடந்த நான்கு நாட்களாக இந்தப் பெண்கள் மன உளைச்சலில் இருந்தார்கள். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 ஆயிரம் ‘செக்ஸ்” தொழிலாளர்களில் 2 ஆயிரம் பேர் இந்த நிதியில் தங்கள் பங்கைச் செலுத்தியுள்ளனர். மேலும், கடந்த நான்கு நாட்களாகத் தினமும் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுள்ளனர்’ என்றார்#

இவர்கள் நல்லவர்கள். உடம்பை விலைபேசி வாழும் அவலநிலைக்கு இவர்களை ஆளாக்கிய இந்தச் சமுதாயம் பொல்லாதது.
*****************************************************************************************************************************************************

இணைப்பு:

‘குங்குமம்’[14.12.2015] இதழில் வெளியான ஒரு பக்கக் கதை.
நன்றி: ‘குங்குமம்’Friday, December 4, 2015

‘இந்து தர்மம்’ காப்போர் கவனத்திற்கு!

‘காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்’ என்று அழைக்கப்பட்டவரால் சொல்லப்பட்ட இந்துமதம் பற்றிய கருத்துகளைத் ‘தெய்வத்தின் குரல்’[5000 பக்கங்கள்] என்னும் தலைப்பில் வெளியிட்டது வானதி பதிப்பகம். அதன் சாரத்தை, 256 பக்கங்களாகச் சுருக்கினார் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான ‘சோ’ இராமசாமி. ‘இந்து தர்மம்’ என்னும் தலைப்பில் அது நூலாக வெளியானது. 

மேற்கண்ட இரு நூல்களுமே தமிழில் எழுதப்பட்டவை. 

இவர்கள் சமஸ்கிருதத்தைத் ‘தேவ பாஷை’ என்று போற்றுபவர்கள். தமிழ் ‘நீச பாஷை! 

இந்து தர்மத்தைக் காப்பதற்கு இவர்களுக்கு இந்த நீச பாஷை தேவைப்படுகிறது. ஆனால், இதை மதித்துப் போற்றும் குணம் இவர்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இவர்களின் கைகளில் சிக்கித் தமிழ் படும்பாடு சொல்லி மாளாது. படிக்கப்படிக்க மனம் பதைபதைக்கிறது. 
எடுத்துக்காட்டாக, ‘இந்து தர்மம்’ நூலிலிருந்து ஒரு சிறு பகுதி.

#குருவைத் தேடிக்கொண்டு புறப்பட்ட ஆச்சார்யாள் வடக்காக வெகுதூரம் போய் நர்மதைக் கரையை அடைந்தார். அங்கே கோவிந்த பகவத் பாதர் நிஷ்டையில் இருந்தார். சாஸ்த்ர ப்ரகாரம் ஆசார்யாளுக்கு அவர் சந்நியாஸ ஆசரமம் கொடுத்து உபதேசம் பண்ணினார். கோவிந்த பகவத்பாதான் ஆசார்யாளிடம் வ்யாஸா ஆஜ்ஞைப் படியே தாம் வந்து உபதேசம் பண்ணியதாகச் சொன்னார். வ்யாஸருடைய ப்ரஹ்மஸூத்ரத்தின் ஸரியான தாத்பர்யத்தை விளக்கி ஆசார்யாள் பாஷ்யம் பண்ணி சுத்த வைதிகத்தையும் கத்தாத்வைதத்தையும் ப்ரகாசப்படுத்த  வேண்டும் என்ற ஆஜ்ஞையையும் தெரிவித்தார். ஆசார்யாள் வ்யாஸருடைய சூத்திரத்தின் தாத்பர்யமெல்லாம் ப்ரகாசிக்கும்படியாக பாஷ்யம் பண்ணி குருவின் சரணத்தில் வைத்து அவருக்கு நிரம்பக் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு சில காலம் கூட இருந்தார். எந்நாளும் ஸனாதன தர்மத்தில் நிற்பதற்கான பாஷ்யங்களை........

ஆசார்யாள்......தாமே ஸொந்தமாக எழுதிய ஞான நூல்களான ‘ப்ரகர்ண’ங்களில் ஸித்தாந்த வாதமாக .....

ஆசார்யாள் வாஸம் செய்துகொண்டு இருந்தபோதே.... அவருக்குப் பதினாறு வயஸ்கூடப் பூர்த்தியாகாத ஸமயம். லோகத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் ஆசார்யாளுடைய ஸூத்ரபாஷ்யத்தின் பெருமையைத் தெரியப் பண்ணவேண்டும் என்று ஸூத்ரகர்த்தாவான வ்யாஸர் நினைத்தார்.........#

‘இந்து தர்மம்’ 2010ஆம் ஆண்டில் பதினான்காம் பதிப்பைக் கண்டிருக்கிறது. இயன்றவரை நல்ல தமிழில் இதைப் பதிப்பிக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் இந்நாள்வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்லாமல்போனது ஏன்?

‘தமிழ் இருந்தாலென்ன, அழிந்தாலென்ன; இந்து தர்மம் காப்பதே நம் கடமை’ என்று எண்ணுகிறார்களோ?!
=============================================================================================


Wednesday, November 25, 2015

"நன்றி” சொல்லி விடை பெறுபவர் ‘பசி’பரமசிவம்!

2011இல் தொடங்கி இந்நாள் வரை வலைப்பதிவில் எழுதி நான் சாதித்தது ஏதுமில்லை. 

எதையெல்லாமோ எழுதினேன். பிறருக்குப் பயன் விளைந்ததோ இல்லையோ, என் பொழுது கழிந்தது.

இன்றுடன் எழுதுவதை நிறுத்துகிறேன். காரணம்..........

சலிப்பு! சலிப்பு மட்டுமே. 

வேறு காரணங்களை நான் ஆராயவில்லை.

என் வலைப்பக்கத்திற்கு வருகை புரிந்து, பதிவுகளை வாசித்து மகிழ்ந்த, மனம் வருந்தினாலும் பெருந்தன்மையுடன் என்னை மன்னித்த அனைத்து நண்பர்களுக்கும்  மனம் நெகிழ்ந்த நன்றிகள்.

நன்றி! நன்றி!! நன்றி!!!Tuesday, November 24, 2015

"யாரையும் காதலிச்சிருக்கியா?” என்றான் அவன். அவள் நாட்குறிப்பை நீட்டினாள்! [ஒ.ப.க.]

ழக்கமான வரவேற்பு, அறிமுகங்களுக்குப் பின்னர்பெண் பார்க்கும்சடங்கு ஆரம்பமாகியிருந்தது. பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு, ‘குழம்பிகுடித்து, மணப்பெண் பத்மாவதியைக் காணும் ஆவலுடன் மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்தார்கள்.

பத்மாவதி ஒரு முதிர்கன்னி; வயது முப்பத்தி மூன்று; ஒரு வெல்ல மண்டிக் கணக்குப்பிள்ளையின் மூன்றாவது மகள்; அழகு விசயத்தில்  சராசரிக்கும் கீழே. அது இருந்திருந்தால் காதல் கத்தரிக்காய் பண்ணி எவனையாவது தொத்திகொண்டிருப்பாள். ஒரு பெண் என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு கல்யாணச் சந்தையில் விலை போக முடியுமா? பாவம் பத்மாவதி!
முகத்தில்ரெடிமேட்புன்னகை தவழ, சற்றே குனிந்த தலையுடன் அனைவரையும் கும்பிட்டுவிட்டு அறையொன்றில் அடைக்கலம் புகுந்தாள் அவள்.

மாப்ள, பொண்ணு பிடிச்சிருக்கா?” கேசவனின் காதைக் கடித்தார் அசோகன்; மணமகனின் தாய்மாமன்.

அதுகிட்டத் தனியாப் பேசிட்டுச் சொல்றேன் மாமாஎன்றான் கேசவன்.

அவன் விருப்பத்தை அறிந்த பெண் வீட்டார், பத்மாவதி இருந்த அறைக்குள் அவனை அனுமதித்தார்கள்.

செயற்கைப் புன்னகையுடன் அவனை வரவேற்ற அவள், அவனை ஓர் இருக்கையில் அமரச் சொல்லி, இன்னொன்றில் தானும் அமர்ந்தாள்.

உன்கூட மனம் திறந்து பேச விரும்பறேன். முதல்ல நான் கொஞ்சம் கேள்விகள் கேட்குறேன். அப்புறம் நீயும் கேளு. வந்து.....நீ யாரையும் காதலிச்......”

கொஞ்சம் பொறுங்க.....” குறுக்கிட்டாள் பத்மாவதி; சொன்னாள்: “ஏழெட்டு வருசமா அப்பா மாப்பிள்ளை பார்த்துட்டு வர்றார்.  எனக்கு வயசு முப்பத்தி மூனு. இதுவரைக்கும் ஐம்பது பேரு என்னைப் பெண் பார்த்துட்டாங்க. கேள்வி மேல் கேள்விகள் கேட்டாங்க. நானும் பதில் சொல்லியிருக்கேன். கசப்பான அந்த என் அனுபவங்களை ஒன்னுவிடாம எழுதி வெச்சிருக்கேன். உங்க வீட்டுக்குப் போயி சாவகாசமா படிச்சிப் பாருங்க. மேலே எதுவும் கேட்கத் தோணினா  ஃபோன் பண்ணுங்க. பதில் சொல்றேன். என்னைக் கட்டிக்கறீங்களோ இல்லியோ, மறக்காம இதைத் திருப்பிக் கொடுத்துடுங்க. இது விசயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.” -வறண்ட புன்னகையுடன் ஒரு சிறியடைரியைக் கேசவனிடம் நீட்டினாள்; அவனுக்கு விடை கொடுக்கும் விதத்தில் எழுந்து நின்று கை கூப்பினாள் பத்மாவதி.
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000