புதன், 16 டிசம்பர், 2015

மெல்லத் தமிழினிச் சாகும்; தமிழனும் சாவான்!

தமிழ்நாட்டில் தமிழர்களாலேயே தமிழ் புறக்கணிக்கப்படுவது ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறாகும்.

மொழியும் நாடும் இரு கண்கள் போன்றவை. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் சொல்லலாம். ஒன்றில்லாமல் ஒன்றில்லை.

நாடு போனால் மீட்டுக்கொள்ளலாம்; மொழி போனால் மீட்டுக்கொள்ள முடியாது. மொழி அழிந்தால், அந்த மொழி பேசும் இனமும் பிறருக்கு அடிமையாகி அழிந்துபோகும்.

123 ஆண்டுகள் போலந்து என்ற நாடே நிலப்படத்தில் இல்லாமல் போனது. போலந்து மக்களுக்குள் கனன்றுகொண்டிருந்த மொழிப்பற்றும், அதை ஊட்டி வளர்த்த இலக்கிய உணர்வும் இருந்ததால்தான், போலந்து மக்கள் தம் நாட்டை மீட்டெடுத்து, இன்று தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது.

நாடற்று வாழ்ந்த  யூதர்கள், தம் தாய்மொழியாம் ‘ஹீப்ரு’ மொழி வழியாகத்தான் தமக்கென ஒரு நாட்டை[இஸ்ரேல்] உருவாக்கினார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தாய்மொழியைப் புறக்கணிப்பதில் உள்ள இன்னொரு அடிப்படைக் கேட்டைத் தமிழர்கள் உணரவில்லை. தாய்மொழியைச் சிறப்பாகக் கற்றால்தான் எதையும் புரிந்துகொள்ளும் சக்தி வலுப்பெறும்; பிற மொழிகளைக் கற்பதும் எளிதாகும். இது அறிவியல் கண்ட உண்மை.

பிற மொழி கற்பதில் மலையாளிகளும் வங்காளிகளும் போலிஷ் மக்களும் முன்னணியில் நிற்பது தாய்மொழியைச் செம்மையாகக் கற்ற காரணத்தால்தான்.

மலையாளிகள் தம் மொழியைக் குழந்தைகள் பள்ளி செல்லும் முன்னரே வீட்டில் நன்கு கற்பிக்கிறார்கள். பிற நாடுகளிலும் இதைக் காணலாம்.

தமிழ்நாட்டில் மொழி பற்றிய கவனம் கொஞ்சமும் இல்லை. குழந்தைகள் மட்டுமல்ல, பெரும்பான்மைத் தமிழர்கள் பேசுவதே மழலைத் தமிழ்தான்!

தமிழக வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி, பொது மேடைகள் ஆகியவற்றில் பேசப்படும் தமிழைக் கேட்டு மொழிச்சுரணையுள்ள தமிழர்கள் சாகாமல் இருக்கக் காரணம், அவர்களுக்கு அசுணமாச் செவி இல்லாமல் இருப்பதுதான்.

போலந்து நாட்டில் பள்ளியிறுதித் தேர்வுக்குப் போலிஷ் மொழியில் வாய்மொழித் தேர்வு உண்டு. அதில் வெற்றிபெறாவிட்டால் அந்தத் தேர்வில் வெற்றி பெற முடியாது. அமெரிக்காவுக்கும் இன்னும் ஆங்கிலம் வழங்கும் நாடுகளுக்கும் படிக்கப் போகும் நம் நாட்டு இளைஞர்கள் எழுத்து ஆங்கிலத்தையும் பேச்சு ஆங்கிலத்தையும் நன்கு படித்திருக்கிறார்களா என்று பார்க்கிற தேர்வில் வென்றால்தான் அங்கெல்லாம் போய்ப் படிக்க அங்குள்ள பல்கலைக் கழகங்கள் இடம்கொடுக்கும்.

நம் ஊரில் கதை எப்படி?

“தாய்மொழியாம் தமிழ் கற்கிலாய்; வேறு வேறு மொழி கற்பாய். வா...வா...வா.”

தமிழ்மொழி, சங்க காலத்தில் சாதவாகன மன்னர்களின் காசுகளில்கூட இடம்பெற்றிருந்தது. ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் தமிழ் இருந்ததால்தான், தமிழில் பழைய காலத்திலேயே இலக்கிய வளம் செறிந்திருந்தது.

இதெல்லாம் படிப்படியாகப் பறிபோய், ஏதோ தமிழர்களின் நாவில் மட்டும் தமிழ் தடுமாறி, அதுவும் பறிபோகிற நிலையில் இருக்கிறது.

தமிழில் பேசுவோம் என்பதை ஆங்கிலத்தில் எழுதிவைத்துத் தமிழ் வாரம் கொண்டாடுகிற முயற்சியெல்லாம் இதைத்தானே சொல்கிறது. [பொங்கல் தினத்தன்று வாசல்களில், Happy Pongal  என்றுதான் நம் குலப் பெண்கள் vaalththu எழுதி வைக்கிறார்கள்]
எனவே, ஆட்சி, கல்வி, நீதி, மதம், வணிகம் என்று எல்லாவற்றிலும் தமிழ் ஆண்டால்தான் தமிழ் தப்பிக்கும். இல்லையென்றால்..........

மெல்லத் தமிழினிச் சாகும்; தமிழனும் சாவான்.
*****************************************************************************************************************************************************
முனைவர் கி.நாச்சிமுத்து அவர்களின் ‘உலகம் தேடும் தமிழ்’[வெளியீடு: பேரா.கி.நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், கோவை] என்னும் நூலிலிருந்து எடுத்தாண்டது.

நன்றி: பேராசிரியர் கி.நாச்சிமுத்து.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக