புதன், 29 ஜூன், 2016

‘சவுகத் அலி’...இது ஜாதி, மத வெறியர்களுக்கான ஒரு ‘சவுக்கடி’க் கதை!

“உனக்குப் பித்தம் தலைக்கேறிடிச்சி; மண்டை மூளை கலங்கிடிச்சி.” -சொல்லி முடித்த பின்னரும் சிவராமனின் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன.

எப்போதும் அதிர்ந்து பேசாத அவர், இப்படிக் கோபப்பட்டுப் பேசியது, சமையலறையிலிருந்த அவர் மனைவி மகாலட்சுமியையும் மகள்கள் சுதா, லதா ஆகியோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கணவனையும் அவர் எதிரே குனிந்த தலையுடனிருந்த மகன் செந்திலையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு மகாலட்சுமி கேட்டார்:  “என்ன நடந்தது?”

“உன் மகன், நம்ம பேரனுக்கு..... தப்பு....அவன் மகனுக்கு  ’சவுகத் அலி’ன்னு நாமகரணம் சூட்டப் போறானாம்.” -நெருப்பு வார்த்தைகளை வெறுப்புடன் உமிழ்ந்தார் சிவராமன்.
மகனின் முகவாயைத் தொட்டு நிமிர்த்தி, ‘நிஜமாவா செந்தில்?” என்றார் மகாலட்சுமி.

உடனடியாகப் பதில் தரவில்லை செந்தில்.

“அம்மா கேட்கிறாங்கல்ல. சொல்லுண்ணா” என்றார்கள் தங்கைகள் இருவரும்.

“அப்பா சொன்னது நிஜம்தான்.” -கிஞ்சித்தும் பதற்றமின்றிச் சொன்னான் செந்தில்.

“சாயபுங்க வைக்கிற பேரு நமக்கு எதுக்குப்பா? நமக்குன்னு பேரா இல்ல. நம்ம சாமிகள்ல எதுனாச்சும் ஒன்னோட பேரு வைக்கலாமே. ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தே?”

“அம்மா, போன வருசம்  இந்த டவுன்ல நடந்த மதக்கலவரம் யாருக்கும் மறந்திருக்காது. நகரமே பத்தி எரிஞ்சுது. போக்குவரத்து அடியோட ஸ்தம்பிச்சிது. அந்த நேரம் பார்த்து, டாக்டர்கள் சொன்ன நாளுக்கு முன்னதாகவே உங்க மருமக ரஞ்சிதாவுக்குப் பிரசவ வலி வந்தது. அது அதிகரிச்சி, அவ உயிருக்கே ஆபத்தான நிலையும் உருவாச்சு.......இது உங்களுக்கும் தெரியும்.

.....ஓடிப்போய், டாக்ஸி, ஆட்டோன்னு கண்ணில் பட்ட வாகன ஓட்டிகளிடமெல்லாம் கெஞ்சினேன்; சில பேர் காலிலும் விழுந்தேன். யாருமே உதவ முன் வரல. ஏற்கனவே, மத வெறியர்களால் தாக்கப்பட்டு நெற்றியில் காயம்பட்டிருந்த இந்தச் சவுகத் அலிதான், நம்ம ரஞ்சிதாவை மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்த்தார். நாம் இந்துமதத்தைச் சேர்ந்தவங்கன்னு தெரிஞ்சிருந்தும் நமக்கு அவர் உதவினார். வற்புறுத்தியதில் தன் பெயரை மட்டும் சொல்லிவிட்டு, “வேலைக்குப் போன என் மகள் இன்னும் வீடு திரும்பல. அவளைப் பத்திரமா அழைச்சிட்டுப் போகணும்” என்று அவசரமாய்ப் புறப்பட்டுப் போனார். இதையும் நான் உங்களிடம் சொல்லியிருக்கேன். மறந்துட்டீங்க போல. இந்தச் சவுக்கத் அலி ஞாபகார்த்தமா அவர் பேரை உங்க பேரனுக்கு வைக்கணும்னு சொல்றேன். இது தப்பா?” என்றான் செந்தில்.

மகாலட்சுமியோ, செந்திலின் தங்கைகளோ மவுனம் வகித்த நிலையில், சிவராமனே வாய் திறந்தார்.  “இந்துவான நீங்க, உங்க வாரிசுக்கு முஸ்லீம் பேரு வெச்சிருக்கீங்களேன்னு காலமெல்லாம் யாராவது கேள்வி கேட்டுட்டே இருப்பாங்க.”

”கேட்கட்டும்னுதான் இந்தப் பேரை வைக்க நினைக்கிறேன். காலமெல்லாம் ஒரு மனிதாபிமானியை நன்றியோட நினைவுகூர இதைவிடச் சிறந்த வழி எதுவுமில்ல.”

‘நீ ஒரு இந்து. உன்னுடைய இடத்தில் ஒரு முஸ்லீம் இளைஞன் இருந்து, அவனுக்கு ஒரு இந்து  உதவியிருந்தால், அவன் தன் வாரிசுக்கு இந்துவின் பெயரை வைப்பானா? அவர்களின் கடவுள் நம்பிக்கை இதையெல்லாம் அனுமதிக்குமா?”

”அப்பா, கடவுள், மதம் சம்பந்தமான நம்பிக்கைகளைத் திணிச்சி நம் விவாதத்தின் போக்கைத் திசை திருப்ப வேண்டாம். நமக்கு உதவியவர், முஸ்லீமாக இல்லாமல் ஒரு கிறிஸ்தவராகவோ இந்துவாகவோ இருந்திருந்தால் அவர் பெயரை வைக்கணும்னுதான் நான் சொல்வேன். மனுசங்களுக்கான முதல் தேவை மனிதாபிமானம். அப்புறம்தான் ஜாதி, மதம், கடவுள் எல்லாம். இதை  நீங்க புரிஞ்சிக்கணும்.” -சொல்லி நிறுத்தினான் செந்தில்.

மாற்றுக் கருத்து ஏதும் வெளியாகவில்லை..

தொடர்ந்தான் செந்தில்: “மனிதருள்  சிறந்த ஒரு மனிதாபிமானிக்கு மரியாதை செலுத்துவதில் நாம முன்னோடியா இருப்போம். மத்தவங்களும் இதைப் பின்பற்றினா, ஜாதி மதக் கலவரங்கள் குறைஞ்சி வாழ்க்கையில் நிம்மதி பெருகும்னு நான் மனப்பூர்வமா நம்புறேன். எல்லோரும் நல்லா யோசனை பண்ணுங்க. உங்ககிட்டேயிருந்து சாதகமான பதில் இல்லேன்னா, நம்ம பிள்ளைக்கு அறிவரசுன்னோ அன்பழகன்னோ மதச் சார்பு இல்லாத ஒரு பெயரை  வைக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை” என்றான் செந்தில்.

கூடியிருந்தவர்கள், விடுபட இயலாத மவுனத்தில் புதைந்து கிடந்தார்கள்.

============================================================================

இப்பதிவை வாசிப்போர் கவனத்திற்கு.....

மதம் சார்ந்த பெயர்களைப் பொருத்தமுற மாற்றியமைத்தும் படிக்கலாம்.

15 ஆண்டுகளுக்கு முன்பு, ’குங்குமம்’ இதழில் வெளியான ஒரு சிறுகதையைத் தழுவி எழுதப்பட்டது இக்கதை. அதைப் படைத்தவருக்கு நம் நன்றி. உரிய ஆதாரங்களுடன் என் மின்னஞ்சல் முகவரிக்கு அவர் தகவல் தந்தால், நன்றியுடன் அவர் பெயரைக் குறிப்பிடக் காத்திருக்கிறேன்.

கதை வெளியான நாள், பக்கம் முதலானவற்றைக் குறித்து வைக்காதது என் குற்றம்.

இது ஒரு மீள்பதிவும்கூட.


செவ்வாய், 28 ஜூன், 2016

அறிஞர் அண்ணா சொன்னது ‘குட்டி’க்கதையா, ‘குட்டு’க் கதையா?!

#ஐரோப்பிய நாட்டில், ‘பிரெட்ரிக் தி கிரேட்’ என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் தீராததொரு மனக்கவலைக்கு ஆளாகியிருந்தான். அவன் மக்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருந்தும்,  மன்னன் பெரிதாக ஏதும் செய்துவிடவில்லை என்று அவர்கள் வருத்தப்பட்டார்கள். அதற்கான காரணம் புரியாததே அவன் வருத்தத்திற்கான காரணமாக இருந்தது.

ஒரு நாள் அமைச்சர்களையும் பிரபுக்களையும் விருந்துக்கு அழைத்தான். “நான் ஏழைகளுக்கு எவ்வளவோ செய்கிறேன். அவர்களோ  தங்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை என்கிறார்களே ஏன்?” என்று  அவர்களைப் பார்த்துக் கேட்டான்.

அனைவரும் மௌனத்தில் மூழ்கியிருக்க மூத்த அமைச்சர் ஒருவர், “நான் பதில் சொல்கிறேன்” என்றார்.

அவர், தனக்கென விருந்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு ஐஸ் கட்டியைத் தன் அருகிலிருந்த பிரபுவிடம் கொடுத்து, அதை அடுத்தவரிடம் கொடுக்கச் சொன்னார்.

அவர் தனக்கு அடுத்திருந்த பிரபுவிடம் கொடுத்தார். இப்படியாக, ஐம்பது அறுபது கைகள் மாறிப் பயணித்த ஐஸ் கட்டி கடைசியாக மன்னனைச் சென்றடைந்தது. 

ஆனால், அப்போது அது ஐஸ் கட்டியாக இல்லை; இரு சொட்டுத் தண்ணீராக இருந்தது.

“எங்கே ஐஸ் கட்டி?” என்றான் மன்னன்.

“அது ஐஸ் கட்டியாகத்தான் புறப்பட்டது. பல கைகளைக்[தரகர்கள்] கடந்து வந்ததால் உங்களுக்கு மிஞ்சியது இரண்டு சொட்டுதான்” என்றார் மூத்த அமைச்சர்.

தான் செய்த உதவிகள் மக்களைச் சென்றடையாததன் காரணம் மன்னனுக்குப் புரிந்தது[நூல்: ‘அறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதைகள் 100’; பதிப்பு: 1964; பாலாஜி பப்ளிகேஷன்ஸ், சென்னை]

அண்ணா சொன்ன குட்டிக் கதைகளைக் ‘குட்டுக் கதைகள்’ என்றும் சொல்லலாம்.

குட்டு யாருக்கு?

ஆட்சியாளர்களுக்குத்தான்! 
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000










திங்கள், 27 ஜூன், 2016

தலாய் லாமா!...இவர் வழியில் நாம் செல்லலாமா?

தலைப்பு இதுவாயினும், ‘தலாய் லாமா’ குறித்து ஏதும் எழுதுவது இப்பதிவின் நோக்கமன்று. இன்றைய ‘தி இந்து[27.06.2016]’, இவர் பற்றிய சிறு குறிப்புடன், இவர் உதிர்த்த 15 அரிய கருத்துகளைத் தொகுத்து[வணிக வீதி, மூன்றாம் பக்கம்] வழங்கியிருக்கிறது.
அவற்றில் சில, என்னை வியப்பில் ஆழ்த்தின; மகிழ்ச்சிப்படுத்தின; தலாய் லாமா மீதான பதிப்பைப் பன்மடங்கு உயர்த்தின. ஒரு மதத்தின்[புத்தம்] தலைவரான இவர் சொன்ன அவை.....

1. கோயில்க[ள்]ளுக்கு அவசியமில்லை. சிக்கலான தத்துவங்கள் தேவையில்லை. நமது சொந்த அறிவு மற்றும் இதயமே நம் கோயில். கருணையே தத்துவம். இதுவே என் எளிய மதம்.

2. மதம் மற்றும் தியானம் இல்லாமல் நம்மால் வாழ முடியும். ஆனால், மனிதநேயம் இல்லாமல் வாழ முடியாது.

3. நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது நம்பிக்கை சார்ந்தவராக இருந்தால் நல்லதே. அது இல்லாமலும் உங்களால் வாழ முடியும்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

சனி, 25 ஜூன், 2016

ஆவி, பேய், பிசாசு, பில்லி, சூனியம்...மதங்கள்!

ந்து, முஸ்லீம், கிறித்தவர் உள்ளிட்ட பல மதத்தவரும் பேய், பிசாசு, ஆவி போன்றவற்றை நம்புகிறார்கள். இந்துமதத்தைப் பொருத்தவரை வகை வகையான பேய் பிசாசுகள் இருப்பதும், பூசாரிகளைக்கொண்டு அவற்றை விரட்டியடிப்பதும் இன்றும் நடைமுறையில் உள்ள நிகழ்வுகளாகும்.

கிறித்தவர்களின் புனித நூலான பைபிளிலும், இஸ்லாமியரின் புனித நூலாகக் கருதப்படும் குர்-ஆனிலும் பேய் பிசாசுகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இன்றும்கூட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், கிறித்தவ மத போதகர்களால் நடத்தப்படும்  ‘சரீர சுகமளிக்கும்’ கூட்டங்களில் பேய் விரட்டும் நிகழ்ச்சிகளும் உண்டு.

இந்தப் பேய் விரட்டல் போட்டியில் வென்றவர் யார் என்று முடிவு செய்ய இயலாத வகையில் மூன்று பெரிய மதங்களைச் சார்ந்தவர்களும் பேய் விரட்டும் சாகசங்களைத் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

தற்கொலை செய்துகொண்டவர்கள், படுகொலைக்குள்ளானவர்கள், விபத்தில் இறந்தவர்கள் ஆகியோரே பேய்களாகவும் பிசாசுகளாகவும் அலைவதாக நம்பப்படுகிறது.
பேய் பிடித்துப் பெரும் துன்பங்களுக்கு ஆளாகுபவர்கள் பெரும்பாலும் கிராமத்துப் பெண்களே. ஆண்களில் வெகு சிலருக்கு மோகினிப் பேய் பிடிப்பதுண்டு. விபத்தால் இறக்கும் அல்லது உணவுக்காகக் கொல்லப்படும் ஆடுகள், கோழிகள், மாடுகள் போன்ற பிராணிகள் ஆவிகளாகவும் பேய்களாகவும் உலவுவதாக எவரும் நம்புவதில்லை. கடவுளுக்கு மனிதன் மட்டுமே செல்லம்!

சிலர் பேயையோ பிசாசையோ ஆவியையோ பார்த்ததாகவும் சலங்கையொலி கேட்டதாகவும் சொல்கிறார்கள். கடவுளைக் கண்டதாகக்கூட, கூசாமல் பொய் சொல்கிறார்கள். 

இவர்கள் இவ்வாறு சொல்வதற்குப் ‘புலன்களை ஏய்க்கும்’ உணர்ச்சிகளே காரணம் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். அவர்கள், தாம் நிகழ்த்திய ஆராய்ச்சியின் முடிவுகளை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்.

1. மாயப் புலன் உணர்ச்சி[Illusion]

2. மயக்கப் புலன் உணர்ச்சி[Hallucination]

3. மருட்சி[Delusion]

மாயப் புலன் உணர்ச்சி:
கண், காது, மூக்கு உள்ளிட்ட ஐந்து புலன் உணர்வுகளின் அடிப்படையில் மாய உணர்ச்சிகள் ஐந்து வகையாகப் பிரிக்கப்படுகின்றன. நல்ல வெய்யிலில் நீண்ட தார்ச்சாலையில் நடக்கும்போது மிகத் தொலைவில் நீர் இருப்பதுபோல் தெரியும். உண்மையில் இருக்காது. இதனைக் கானல் நீர் என்பர். இது கண் உணரும் மாயக் காட்சியாகும்.

நெல்லிக்காய் தின்ற பின் நீரைக் குடித்தால் இனிப்பதுபோல் உணருவோம். அதனால், நீர் இனிப்பானது என்று அர்த்தமல்ல. இது நாக்கின் ஒருவகையான மாய உணர்ச்சியாகும். நம் ஐம்புலன்களாலும் இம்மாய உணர்ச்சிகளை உணர முடியும்.

மயக்கப் புலன் உணர்ச்சி:
இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உளவியல் காரணங்களால் உண்டாகும் உணர்ச்சிகளே மயக்கப் புலன் உணர்ச்சியாகும்.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வால்டர்ஹெஸ், மிக்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜே.டெல்காடோ ஆகியோர், மின் துடிப்புகள்[Electric Impulses] மூலம் மூளையில் பல்வேறு கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தூண்டிவிட்டு சினம், அச்சம், பசி, வருத்தம், எக்களிப்பி, காதல், காமம், விருப்பு, வெறுப்பு போன்றவற்றைச் சாதாரண நடைமுறை வாழ்வில் உணருவது போல [செயற்கையாகத் தூண்டும் முயற்சியில்] உணரச் செய்வதில் வெற்றி பெற்றார்கள்.

தாலக்கட்டமைந்த பறையோசை, சீராகக் கை தட்டும் ஓசை, மந்திர உச்சாடணம், பண்ணோடு இசைந்த பாடல், நடனம், அங்க அசைவுகள், கண்களில் மாற்றி மாற்றி வெளிச்சத்தையும் இருட்டையும் உண்டாக்குதல் போன்றவற்றை, உற்று நோக்கல் போன்ற செயல்கள் மூலம் [மயக்கப் புலன் உணர்ச்சி அனுபவங்களை] உண்டாக்க முடியும் என்கிறார்கள்.

மேற்கண்டது இயற்பியல் காரணங்களால் உண்டாகும் மயக்கப் புலன் உணர்ச்சியாகும்.

இன்னும், வேதியியல் காரணங்களாலும் உயிரியல் காரணங்களாலும் உளவியல் காரணங்களாலும் மயக்கப் புலன் உணர்ச்சிகளை உண்டாக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் அறிஞர்கள்.

மருட்சி:
சிறு வயதிலிருந்து பிள்ளைகளின் மனதில் பொய்யான கருத்துக்ளை மனதில் திணித்து வருவதன் விளைவாக ஏற்படுவது மருட்சியாகும். பேய், பிசாசு, ஆவி போன்றவற்றைப் பார்த்ததாகச் சொல்வதும், ஜோதிடம், கைரேகை, மறுபிறப்பு, மந்திரம் போன்றவற்றை நம்புவதும் மருட்சி காரணமாகத் தோன்றும் புலன் உணர்ச்சிகளாகும். இவை குறித்தும் அறிவியல் உலகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது.
===============================================================================
நன்றி: ‘பேய்,பில்லி, சூனியம், ஆவி, சோதிட மோசடிகள்’, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை.




வெள்ளி, 24 ஜூன், 2016

“போற்றி...போற்றி! இராமபிரான் திருவடி போற்றி!!”

“இராமன் ஒரு கதைமாந்தனே; சீதையின் நடத்தையைச் சந்தேகித்து அவளைக் குற்றவாளிபோல் நடத்தியவனும், இதன் மூலம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டவனுமான அவன் கடவுளல்ல” என்று பல்கலைக் கழகப் பயிற்சிப் பட்டறையில் உரையாற்றினார் பேராசிரியரும் பகுத்தறிவாளருமான ‘மகேஷ் சந்திர குரு’. இது நிகழ்ந்தது கர்னாட மாநிலத்தில்.
நன்றி: ‘தி இந்து’[24.06.2016]
சர்வோதய சேனா, பஜ்ரங்தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் பேராசிரியருக்கு எதிராகக் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகார் குறித்துத் தீர விசாரித்திருந்தாலோ, கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்திருந்தாலோ  இராமனை விமர்சனம் செய்தது குற்றச்செயல் அல்ல என்பது காவல்துறை அதிகாரிகளுக்குப் புரிந்திருக்கும். பேராசிரியருக்குப் போதிய பாதுகாப்பும் அளித்திருப்பார்கள்.

மாறாக, பேராசிரியரின் உரை வன்முறையத்[?????] தூண்டுவதாக உள்ளது என்று அவர்மீது வழக்குத் தொடுத்தது காவல்துறை.

நீதியைப் பரிபாலனம் செய்யக் கடமைப்பட்டுள்ள நீதிமன்றமும் அவரைச் சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளது.  கர்னாட அரசு, பேராசிரியர் ஆற்றிய உரையில் தவறேதும் இல்லை என்பதை இந்துத்துவா அமைப்பினருக்கும் பொதுமக்களுக்கும் உணர்த்தும் முயற்சியை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

ஆக, காவல்துறையும், நீதிமன்றமும், கர்னாடக அரசும் பெரிதும் மதிக்கத்தக்க ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியருக்கு, குறிப்பாக ஒரு பகுத்தறிவாளருக்குப் பாதுகாப்பு நல்கத் தவறிவிட்டன. சிறையில் அடைக்கப்பட்டதன் மூலம் அவர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

நாடெங்கும் பகுத்தவாளர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நீடிப்பதால்தான். இந்துத்துவா வெறியர்களால் அவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் கொல்லப்படுவதுமான நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

இந்தவொரு சூழலில், பேராசிரியர் சிறையிலிருந்து வெளிவந்தால், அவரின் உயிருக்கு இந்துத்துவா மத வெறியர்களால் ஆபத்து ஏற்படக்கூடும்[எந்தவொரு கடவுளும் அவரைக் காப்பாற்றப் போவதில்லை].

எனவே, முன்னெச்சரிக்கையாக,  அவர் மீது புகார் அளித்த அந்த வெறியர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்; வழக்குத் தொடுத்து உரிய தண்டனையைப் பெற்றுத்தருதல் வேண்டும். 

கர்னாடக அரசு தன் கடமையைச் செய்யும் என்று நம்புவோம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குறிப்பு: பதிவின் கடைசி மூன்று பத்திகள் சற்று முன்னர்[பிற்பகல் 05.20] மாற்றி அமைக்கப்பட்டன.


வியாழன், 23 ஜூன், 2016

இதைப் படிச்சி அப்போ 200 பேர் சிரிச்சாங்க! இப்போ நீங்க...!!

“சே, என்ன மனிதர்கள் இவர்கள்! எழுத்தாளர் சீதேவிதாசனைத் தெரியுமான்னு கேட்டா, ஸ்ரீதேவி ரசிகர் மன்றத்தில் விசாரிக்கச் சொல்கிறார்களே! எழுத்தாளனை மதிக்காத இந்தச் சமுதாயம் உருப்படுமா?”

மனித குலத்தைச் சபித்தவாறு, ‘அய்யாசாமி நகரில்’ தெருத்தெருவாக அலைந்துகொண்டிருந்த அந்த மனிதருக்கு வயது எழுபதுக்குக் குறையாது.

பெரியவருக்கு ஒடிசலான உடம்பு. வேட்டி ஜிப்பாவில் மேலே தலை மட்டும் தெரிந்தது. அடி மண்டையில் கொஞ்சம் முடி அடிக்கோடிட்டிருந்தது. தோளில் தொங்கும் ஜோல்னா பையின் சுமையால் முதுகுத் தண்டு கொஞ்சம் வளைந்து காணப்பட்டது.

வீடு வீடாய்ப் படிகளை எண்ணினார். அழைப்பு மணியில்தான் எத்தனை வகை என்பதை அனுபவத்தில் கண்டு ஆச்சரியப்பட்டார். கதவு திறந்து, “என்ன?” என்று கேட்டவர்களிடமெல்லாம், “எழுத்தாளர் சீதேவிதாசனைத் தெரியுமா?” என்று கேட்டார்.

“சுவர் சுவரா விளம்பரம் எழுதுற ஒருத்தர் தெருக்கோடியில் இருக்கார். கேட்டுப் பாருங்க” என்றார் ஒரு வீட்டுக்காரர்.

“பருவ சுகம், பாமா நீ வாம்மா, இளமை ராகம்ங்கிற மாதிரி, ‘ஒரு மாதிரி’ புத்தகங்கள் எழுதிக் குவிச்சாரே, அவரா?” என்று பல்லிளித்தார் இன்னொருவர்.

“அம்மா...தாயி...சீதேவி...” என்று அவர் மிச்சமிருந்த வார்த்தைகளைக் கக்குவதற்குள்ளாகவே, “இன்னும் சமையல் ஆகல. போய்ட்டு அப்புறமா வாப்பா” என்றாள் ஒரு குடும்பத் தலைவி.

விரக்தியின் விளிம்பைத் தொட்டுவிட்ட பெரியவர், அய்யாசாமி நகர் வாசிகள் சிலரிடம், “சீதேவிதாசன் எவ்வளவு பெரிய எழுத்தாளர். அவரைத் தெரியலீன்னு சொல்றீங்க. ஆச்சரியமா இருக்கு” என்றார்.

“இந்த மாதிரி கேள்வி கேட்டுத் திரியற உம்மைப் பார்த்தாத்தான் ஆச்சரியமா இருக்கு. நீர் என்ன சீதேவிதாசனின் தம்பி மூதேவிதாசனா?” என்று அவர்கள் திருப்பிக் கேட்ட போது, பெரியவர் மனம் உடைந்து போனார்.

எழுத்தாளரின் பெயர் சொன்னவுடனே, அய்யாசாமி நகரமே திரண்டு வந்து தமக்கு வழி காட்டும் என்று எதிர்பார்த்தார். நடக்கவில்லை.

“என்ன ஐயா, சீதேவிதாசனைத் தெரியுமான்னு கேட்டீங்களே, அவரைத் தெரியாதவங்க இருக்கீங்களான்னு கேட்டிருக்கணும்.”

“இயல்பான கதை; மனதைச் சுண்டியிழுக்கிற வர்ணனை; ஆளைக் கட்டிப் போடுற அட்டகாசமான நடை. சீதேவிதாசன் ஒரு பிறவி எழுத்தாளருங்க.”

“எங்க நகருக்கு அவர் குடி வந்தது நாங்க செஞ்ச புண்ணியம்.”

இப்படியெல்லாம், இன்னும் எப்படியெல்லாமோ நகர மக்கள், எழுத்தாளருக்குப் புகழ் மாலை சூட்டுவார்கள் என்று எதிர்பார்த்தார் அவர்.

அவர்களோ, எழுத்தாளருக்கு ஒரு எருக்கமாலைகூடப் போடவில்லை.

பெரியவர் துவண்டுவிடவில்லை. “அய்யாசாமி நகர், துப்புக்கெட்டான் தெரு, கழுத்தறுத்தான் சந்து, கதவு எண் 18. இதுதானே எழுச்சி எழுத்தாளர் சீதேவிதாசன் வீடு?” என்று வீடு வீடாகச் சந்தேகம் கேட்டார். கடைசிவரை அவர் சந்தேகம் தீர்க்கப்படவில்லை என்றாலும், ஒரு வீடுகூட அவர் மிச்சம் வைக்கவில்லை.

ஒரு வழியாக, மனதைத் தேற்றிக்கொண்டு, சீதேவிதாசனின் வீடு நோக்கி நடந்தார், பெரியவர்.

அவர் அங்கு செல்வது இது முதல் தடவையல்ல. கடந்த ஏழெட்டு மாதங்களில், எத்தனை தடவை அங்கு சென்றிருக்கிறார் என்பதை எண்ணிச் சொல்வது அவசியமில்லை.

“என்ன செய்ய, இந்த ஏழை எழுத்தாளனை எவனுமே கண்டுக்க மாட்டேங்குறான். வீடு தேடி வருகிற நண்பர்கள் வேறு, ‘என்னய்யா பெரிய எழுத்தாளன் நீ? நீ இங்கே குடி வந்து ஏழெட்டு மாசம் ஆச்சு. உன்னைப் பத்தி இந்த நகர்ல ஒருத்தருக்குமே தெரியல.’ என்று குத்திக் காட்டுகிறார்கள். அதனாலதான், இப்படியொரு ஓரங்க நாடகம் போட வேண்டியதாப் போச்சு” என்று தம் மனசாட்சியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே நடந்தார் எழுத்தாளர் சீதேவிதாசன்!

===============================================================================
முன்னணி வார இதழில் பிரசுரமான கதை இது. 2012இல் என் வலைப்பக்கத்திலும் வெளியானது

ஞாயிறு, 19 ஜூன், 2016

'தி இந்து’[19.06.2016]வில் நான் படித்து நொந்த ஒரு செய்தி!!!

கீழே ஒரு படம் இணைத்திருக்கிறேன். அதைக் கூர்ந்து நோக்குங்கள். 
உங்களுக்குத் தெரிவது என்னவாகவோ இருக்கட்டும். என்னைப் பொருத்தவரை அது வெறும் பாறை மட்டுமே. 

இப்போது படத்தின்[தி இந்து,19.06.2016] கீழே இடம்பெற்றுள்ள குறிப்புரையைப் படியுங்கள். 

‘பாறையில், பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இயற்கையாக அமைந்துள்ள[து] பெருமாள் திருவுருவம்’ என்கிறார் மகேஷ்குமார் என்னும் அன்பர்.

கண்கள் இல்லை; புருவங்களைக் காணோம். உருக்குலைந்த மண்டை; சீரற்ற மூக்கு. இதுதான் பெருமாளின் திருவுருவமா? பாவம் பெருமாள்.

காணுகிற பொருளிலெல்லாம் தனக்கு உவப்பானவரின் உருவத்தை ஏற்றிப் பார்ப்பது ஒருவித மன நோய். இந்நோய்க்கு அதீத கடவுள் பக்தியும் ஒரு காரணம்.

வானத்தில் மிதக்கும் கருமேகக் சிதறல்களிலும், காரை பெயர்ந்த சுவரில் தென்படும் கோணல்மாணல்களிலும் யானை குதிரை போன்றவற்றின் உருவங்களைப் பொருத்திப் பார்ப்போமே, அது போலத்தான் இதுவும். 

வடிவம் சிதைந்த பாறையைப் பெருமாளின் உருவம் என்று நம்பிய மகேஷ்,  அந்த நம்பிக்கையை ‘தி இந்து’ மூலமாக பிறர் மனங்களிலும் திணிக்க முயன்றிருக்கிறார்.  மூடநம்பிக்கைத் திணிப்பு.

அன்பர் மகேஷ்குமாருக்கு ஒரு வேண்டுகோள்.

மீண்டும் ஒருமுறை, ‘நான் ஆறறிவு படைத்த ஒரு மனிதன்’ என்னும் நினைப்புடன் பாறையை உற்றுப் பாருங்கள். பெருமாளுக்குப் பதிலாக உயரமான கற்பாறையைக் காண்பீர்கள். 

மகேஷ்குமாருக்கு மட்டுமல்ல, ஏனைய பக்தகோடிகளுக்கும் நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது.....

கல்லை நோக்கும்போது அது கல் என்பதை உணருங்கள். மண்ணை மண்ணாக உணருங்கள். கண்ணில் காணும் பொருளையெல்லாம் இம்மாதிரி கடவுளாக உருவம் செய்யும் பழக்கத்தை விட்டொழியுங்கள். இது உங்களின் அறிவு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும்  என்பதை நம்புங்கள்; உங்களின் அதீத கடவுள் பக்தி மிகவும் ஆபத்தானது என்பதையும் ஆழ்மனதில் பதித்திடுங்கள்.

நன்றி.
***********************************************************************************************************************




சனி, 18 ஜூன், 2016

மூன்று பெரிய மதங்களும் மூச்சுத் திணறும் கடவுளும்![தலைப்பு புதுசு. பதிவு பழசு]

னைத்து உலகங்களும் கடவுளால் படைக்கப்பட்டது என்கிறார்கள் மதவாதிகள்.

படைத்தது ஏன்? எப்போது? எவ்வாறு? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியை அடியோடு கைவிட்டுவிட்ட இவர்கள், ‘எத்தனை நாட்களில் படைத்தார்?’ என்ற கேள்வியை மட்டும் எழுப்பி அதற்கு விலாவாரியாகப் பதிலும் சொல்லுகிறார்கள்; மனிதர்களால் எழுதப்பட்ட மத நூல்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
இவர்கள் சொல்வதில் உண்மை இல்லை என்று மறுப்புத் தெரிவித்தால் வசைமாரி பொழிகிறார்கள்; மறுப்பவர்களின் தலைகளுக்கு ‘விலை’ வைக்கிறார்கள்.

கடவுள் 6 நாட்களில் உலகங்களைப் படைத்துவிட்டு 7 ஆவது நாளில் ‘ஓய்வு’ எடுத்துக்கொண்டாராம். ‘ஆதி ஆகமம்’ முதல் அத்தியாயத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதாம். கிறித்தவர்கள் சொல்கிறார்கள். [-www.cmn.co.za/html/faq/how_long_create.htm]

கடவுளைப் போலவே மனிதர்களாகிய நாமும், ஆறு நாட்கள் உழைத்துவிட்டு ஏழாவது நாள் ஓய்வெடுக்கலாமாம். கடவுளின் வழியில் மனிதன்!

ஆறு நாட்கள்! அது என்னய்யா கணக்கு?

சூரியனின் இயக்கத்தைக் கொண்டுதான் நாட்களும் நேரங்களும் கணிக்கப்படுகின்றன. சூரியனே இல்லாத நிலையில், ஆறு நாள் என்று கணக்கிட்டது எப்படி? கதை கட்டியவர் கொஞ்சமேனும் சிந்தித்திருக்க வேண்டாமா?

விவரிப்புக்கு அப்பாற்பட்ட பேராற்றல் வாய்ந்த கடவுளால், ஆறே ஆறு மைக்ரோ...மைக்ரோ...மைக்ரோ நொடிகளில் [இப்படி நாம் வரையறுப்பதும் தவறுதான்] தாம் நினைப்பதையெல்லாம் படைத்துவிட முடியுமே. அப்புறம் எதற்கு ஆறு நாள் ஏழு நாள் எல்லாம்?

ஆறு நாள் குழறுபடியைப் புரிந்துகொண்ட மதப் பற்றாளர்கள்,  “ஆறு என்பது அடுத்தடுத்த கட்டங்களே தவிர, ஆறு நாட்கள் அல்ல; ஆறு கட்டங்களில் லட்சோப லட்சம் ஆண்டுகள் உழைத்து[...millions of years when God created the world...] அவர் தம் செயலைச் செய்து முடித்தார்” என்று சொல்லிச் சமாளித்தார்கள்.

உலகங்களை[பிரபஞ்சத்தை]க் கடவுள் படைத்தார் என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். எதற்கு இந்த வழவழா கொழகொழா வியாக்யாணம் என்பது நமக்குப் புரியவே புரியாத புதிராக இருக்கிறது!

பாவம் கடவுள்! அப்படி ஒருவர் இருந்தால், இந்தக் கதைகளை எல்லாம் கேள்விப்பட்டு, திக்குத் தெரியாத வெட்ட வெளியில் பித்துப் பிடித்து அலைந்துகொண்டிருப்பார் என்பதில் எள் முனை அளவும் சந்தேகமில்லை.

இந்த ஆறு நாள் கணக்கு குரானிலும் இடம் பெற்றிருக்கிறது

அந்த ஆறு நாட்களில் ‘சொர்க்கம்,நரகம்’ ஆகியவற்றை மட்டுமே கடவுள் 
உருவாக்கினார் என்கிறது அது. ‘ஆறு’ எனபது வெறும் கணக்குத்தான். 
உலகங்களைப் படைக்க வரையறையற்ற ஆண்டுகள் அவருக்குத் 
தேவைப்பட்டன என்கிறார்கள் மதப் பிரச்சாரகர்கள்.. 
[The Quran in S. 7:54, 10:3, 11:7, and 25:59 clearly teaches 
that God created "the heavens and the earth" in six days.]

உயிர்களே படைக்கப்படாத நிலையில், சொர்க்கத்தையும் நரகத்தையும் கடவுள் படைத்ததன் பொருள் என்ன?

தான் படைக்கவிருக்கும் உயிர்களில் புண்ணியம் செய்பவை சொர்க்கத்திற்கும் பாவம் செய்பவை நரகத்திற்கும் செல்ல வேண்டும் என்பதற்காகத்தானே?

ஆக, பாவ புண்ணியச் செயல்களில் ஈடுபடும் வகையில் உயிர்களைப் படைப்பதென்று கடவுள் முடிவெடுத்த்திருக்கிறார்; படைத்திருக்கிறார்.

கடவுளின் இந்தச் செயல், கடும் கண்டனத்திற்கு உரியதல்லவா?

இந்து மதவாதிகளைப் பொருத்தவரை ஆறு, ஏழு என்று கடவுளுக்குக் ‘காலக்கெடு' விதிப்பதைத் தவிர்த்துவிட்டார்கள்.

முட்டை வடிவிலான உலக உருண்டையிருந்தே["Egg-shaped cosmos"]
அனைத்து உலகங்களும்[பிரபஞ்சம்] விரிவடைந்ததாகச் சொல்கிறார்கள். இது பற்றிப்  பிரமானந்த புராணம்[Brahmanda Purana] விரிவாகப் பேசுகிறதாம். [Wikipedia]

கோழி முட்டையிலிருந்து குஞ்சு வெளியாவதைப் பார்த்த அனுபவம் இவர்களை இப்படிக் கற்பனை செய்ய வைத்திருக்கிறது. ஆண் பெண் சேர்க்கையால் புதிய உயிர் தோன்றுவது போல, பூமிப் பெண்ணும் ஆகாய ஆணும் புணர்ச்சி செய்ததால் பிரபஞ்சம் தோன்றியது என்று நம்பினார்களே, அது போல.

அந்த நம்பிக்கையின் விளைவாகச் ‘சிவலிங்கம்’ உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அது கடவுளாக வழிபடப்படுகிறது.

கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கும்  அறிவு பெற்றிருந்த காலத்தில், உலகத் தோற்றம், கடவுள், படைப்பு பற்றியெல்லாம் மனிதன் மேற்கண்டவாறு மனம் போன போக்கில் அனுமானம் செய்ததில் தவறேதும் இல்லை. இந்த அறிவியல் யுகத்திலும் அவர்கள் சொல்லிவிட்டுப் போன கதைகளைத் திரும்பத் திரும்ப மேடை ஏறி முழங்குவதும் ஏடுகளில் எழுதுவதும் தேவையா என்பதைச் சம்பந்தப்பட்ட மதவாதிகள் ஆராய்வது மக்களுக்கு நன்மை பயக்கும் செயலாகும்.
===============================================================================

வெள்ளி, 17 ஜூன், 2016

அன்று சூரிய உதயம் 05.58க்குக் கடவுள் வந்தார்! பார்த்தீர்களா?

#என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி, “கடவுள் இருக்கிறாரா? இருக்கிறார் என்றால் அவரைப் பார்க்க முடியுமா?” என்பது.
இதற்கு, ‘பைனரி’யாகப் பதில் சொல்ல இயலாத நிலையில், இந்தக் கேள்விக்கு அறிவியல் என்ன சொல்கிறது என்பதை உங்களுடன் சிந்தித்துப் பார்க்க விரும்புகிறேன்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன் நான் ‘தேவன் வருகை’ என்னும் தலைப்பில் ஒரு விஞ்ஞானக் கதை எழுதினேன். அதில் கடவுள் ‘ஒவ்வொரு ஊரிலும் ஒரு பொது இடத்தில் சூரிய உதயத்தின்போது காட்சி தருகிறேன். அதற்குத் தருணம் வந்துவிட்டது’ என்று உலகெங்கும் அறிவித்துவிடுவார். 

இதை அரசாங்கம் ஏதோ புரளி என்று மறுக்கும். இருந்தும் ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவரும் தங்கள் தங்கள் கடவுள்தான் வரப்போகிறார் என்று எதிர்பார்த்து, குறிப்பிட்ட தினத்தன்று அதிகாலை மைதானங்களுக்குப் போய், பரபரப்புடன் ஒரு விதமான மாஸ் ஹிஸ்டீரியாவுடன் காத்திருப்பார்கள். அந்தக் கதையின் கடைசிப் பாரா இதுதான்.....

சூரிய உதயம் ஐந்து ஐம்பத்தெட்டுக்குக் கடவுளின் காட்சி.

மணி ஐந்து ஐம்பத்தேழு. ஆரவாரம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி எங்கும் மௌனம் நிலவியது. மிக மிக மௌனம்.

தூரத்தில் மெதுவாக, சோலையை அலைக்கும் காற்று கேட்டது. உறங்கி எழுந்த பட்சிகளின் உற்சாகக் குரல்கள் கேட்டன. எல்லோரும் எதிரே தனியாக உருவாக்கப்பட்டிருந்த அந்தக் காலியிடத்தை எதிர்நோக்கியிருந்தார்கள்.

ஐந்து ஐம்பத்தெட்டு.....

ஆறு மணிக்கு அவர்கள் வீடு திரும்பினார்கள்.

என முடித்திருந்தேன்.

பலர் என்னிடம், “என்ன விளையாடுகிறாயா?” என்று கோபப்பட்டு எழுதியிருந்தார்கள். அந்தக் கதையில் நான் சொல்ல விரும்பியது, ‘கடவுள் அப்படி வந்திருந்தால், அவரை என் போன்ற அற்ப ஜந்துவால் வர்ணிக்க முடியாது. முடிந்திருந்தால் அவர் கடவுளே அல்ல’ என்பதே#
======================================================================
நன்றி: சுஜாதாவின், ‘கடவுள்’; இரண்டாம் பதிப்பு, உயிர்மை பதிப்பகம், சென்னை.




திங்கள், 13 ஜூன், 2016

நாத்திகர்கள் நல்லவர்களா?

‘நாத்திகன் என்றாலே கடவுளை நிந்திப்பவன்; பாவச் செயல் புரிய அஞ்சாதவன்; சமுதாயக் கட்டுப்பாடுகளை அலட்சியம் செய்பவன்’ என்பதான நம்பிக்கைகளை மக்கள் மனங்களில் ஆழமாகப் பதித்து வைத்திருக்கிறார்கள் ஆன்மிகவாதிகள். இது ஒரு திட்டமிடப்பட்ட குற்றச் செயல் என்பதை இப்பதிவு உணரவைக்கும்.

ங்கர்சால் ஒரு நாஸ்திகன் என்று சிலர் சொல்கிறார்கள். இருக்கலாம். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், அவன் ஓர் அறிஞன்; சுயமாகச் சிந்திக்கிற சக்தியுடையவன்; அப்படித் தான் சிந்தித்தவற்றைத் தைரியமாக வெளியிலே சொல்லும் ஆற்றலுடையவன் என்பதில் யாருக்கும் எவ்வித அபிப்ராயபேதமும் இருக்க முடியாது.

இங்கர்சால், 21 வயதிற்குள் வக்கீல் பரீட்சையில் தேறி ஒரு நியாயவாதியாகத் தன்னைப் பதிவு செய்துகொண்டான். இவனுடைய நாவன்மை இவனை வக்கீல் தொழிலில் முன்னணிக்குக் கொண்டுவந்தது. அமெரிக்காவிலேயே இவன் ஒரு சிறந்த நியாயவாதி[நேர்மையாகத் தொழில் புரிபவன்] என்று எல்லோரும் பாராட்டினார்கள்.

1868-ம் வருஷம் இவன், இல்லினாய் மாகாணத்துக் கவர்னர் பதவிக்கு அபேட்சகனாய் நின்றான். ஆனால், நாஸ்திகன் என்ற காரணத்தால் தோல்வியடைந்தான்.

இங்கர்சாலின் பிரசங்கங்களைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு செல்வது அமெரிக்காவில் சர்வசாதாரணச் சம்பவம். இவன் பேச்சை மக்கள் பணம் கொடுத்துக் கேட்டார்கள். வருசந்தோறும் இவனுக்குப் பிரசங்கம் மூலமாக மட்டும் வந்துகொண்டிருந்த வருமானம், அமெரிக்க ஜனாதிபதியின் வருட வருமானத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமானது.

அமெரிக்காவில், மிகச் சிறந்த பிரசங்கிகளான இருபத்தைந்து பேர் ஒரே சமயத்தில் எவ்வ்ளவு சம்பாதிப்பார்களோ அவ்வளவு வருமானம் இவனுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது.

இங்கர்சால் பணத்தால் பெருமை கொள்ளவில்லை. சம்பாதித்த பணத்தையெல்லாம் மக்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்துவிட்டான். காரணம், மக்கள் துன்பப்படுவதை வேடிக்கை  பார்த்துக்கொண்டிருக்க இவனால் முடியவில்லை...

மேற்கண்டது, ‘மானிட ஜாதியின் சுதந்திரம்’ என்னும் நூலில்{இரண்டாம் பதிப்பு: 1999[முதல் பதிப்பு: 1942]; கலைஞன் பதிப்பகம், சென்னை} அறிஞர் வெ.சாமிநாத சர்மா எழுதிய முன்னுரையில் இடம்பெற்ற வாசகங்கள். 

நூல், இங்கர்சாலின் சொற்பொழிவுத் தொகுப்பான ‘The Liberty of Woman and child' என்பதன் மொழியாக்கம் ஆகும். ஆக்கம் வெ.சாமிநாத சர்மா.

காய்தல், உவத்தல் இன்றி எழுதுவதே ஒரு வரலாற்றாசிரியரின் எழுத்தறமாக அமைய வேண்டும்' என அறைகூவல் விடுத்தவர் இவர். “நான் எழுதுவதற்காக வாழ்கிறேன். வாழ்வதற்காக எழுதவில்லை'' என அறிவித்து, தமது இறுதி மூச்சு உள்ளவரை எழுதிக் குவித்தார்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள வெங்களத்தூர் என்னும் சிற்றூரில், 1895-ஆம் ஆண்டு, செப்டம்பர் 17-ஆம் தேதி, முத்துசுவாமி ஐயர்-பார்வதி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
இவர் செங்கல்பட்டு நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்புவரை கல்வி பயின்றார். "உண்மையில் பள்ளிக் கூடத்தை விட்ட பிறகுதான் என் படிப்பு ஆரம்பமாயிற்று'' என்று தமது கல்வி வளர்ச்சியைப் பற்றிச் சொல்லிக் கொண்டவர். 
"தாய் மொழியில் பயிற்சி இல்லாதவன், தாய் நாட்டுக்குச் சேவை செய்ய முடியாது. மொழியின்றி நாடு இல்லை. நாட்டின் விடுதலைக்காக உழைத்த தலைவர்கள், முதலில் மொழிச் சுதந்திரத்திற்காகவே பாடுபட்டார்கள்'' என்று தம்  தாய்மொழிப் பற்று குறித்துப் பதிவு செய்துள்ளார்.
கடித இலக்கியம், குறுநாவல், சிறுகதைகள், வாழ்வியல், இதழியல், மொழிபெயர்ப்பு எனப் பல்துறை வழியே தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் சாமிநாத சர்மா, 1978-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இந்த அறிஞர் பற்றிக் கவியரசு கண்ணதாசன்:

உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி, தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இவரைப்போல் எவரும் முயன்றதில்லை.

எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் இருக்கிறது. அதுதான் வெ. சாமிநாத சர்மா.

கதைப் புத்தகங்கள்கூட இரண்டாயிரத்துக்கு மேல் விற்காத காலத்தில் அறிவியல் நூல்கள் எழுதி அவஸ்தைப்பட்டவர் அவர்.

நான் பெற்ற பொது அறிவில் இருபது சதவீதம் திரு.சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே.

பஞ்சாங்கம் எழுதியிருந்தால் நல்ல ராயல்டி வந்திருக்கும். அவரோ விஞ்ஞானம் எழுதினார்.

சீனாவில் சியாங்கே ஷேக் ஆட்சி வந்தபோது, ‘புதிய சீனா’ எழுதினார்; ‘பிரபஞ்ச தத்துவம்’ எழுதினார். பொது மேடையில் தோன்றி, ஒரு மாலைகூட வாங்கிக்கொள்ளாமல் காலமாகிவிட்டார்.
======================================================================



சனி, 11 ஜூன், 2016

‘அது’க்குக் ‘கடன்’ சொன்ன அவன்!!!...[அப்பாவிப் பெண்களுக்கான விழிப்புணர்வுக் கதை]

ணி முடிந்து வீடு திரும்பியதும், கைலிக்கு மாறி, கைகால் அலம்பி தொ.க.முன் அமர்ந்தான் மனோகரன்.

“பைனான்ஸ்காரங்க ஃபோன் பண்ணினாங்க. தவணைத் தேதி முடிஞ்சி ரெண்டு வாரம் ஆச்சாம். இன்னிக்கிக் கண்டிப்பா பணம் கட்டணும்னு சொன்னாங்க” என்றாள் அவன் மனைவி பூர்ணிமா.

“இன்னிக்கே கட்டலேன்னா தலையை வாங்கிடுவானோ? வட்டிக்கு வட்டி போடுவான். வேறென்ன? நாலு நாள் போகட்டும். உன் வேலையைப் பாரு”என்று கடுப்படித்தான் மனோகரன்.

சமையலறைக்குள் நுழைந்து, தேனீர்க் கோப்பைகளுடன் திரும்பிய பூர்ணிமா, “தமண்ணா மளிகையிலிருந்து பையன் வந்திருந்தான். ‘ரெண்டாயிரம் ரூபா பாக்கி இருக்கு. இன்றே பணத்துடன் வரவும்’னு செட்டியார் சீட்டு அனுப்பியிருந்தார்” என்றாள்.

“இன்னும் யாரெல்லாம் கடன்காரங்க வந்தாங்க?” தேனீரை உறிஞ்சிக்கொண்டே கேட்டான் மனோகரன்.

“டைலர் ரவி வந்தான்......”

குறுக்கிட்டான் மனோகரன். “அவனும் இன்னிக்கே பாக்கிப்பணம் தரணும்னு சொன்னானோ?”

“ரொம்ப அவசரமா பணம் தேவைப்படுதாம்.”

“தைக்கத் துணி கொடுத்தா, ஒரு வாரத்தில் தர்றேன்னு சொல்லிட்டு ஒரு மாசம் கழிச்சிக் கொடுப்பான். கூலியை மட்டும் கறாராக் கேட்டு வாங்கிடுவான். மறுபடியும் வந்தான்னா நாலு நாள் போகட்டும்னு சொல்லிடு.”

“அப்புறம்....வந்து....”

“சொல்லு.”

“நெளிநெளியா தலைமுடியோட கவர்ச்சியா டிரஸ் பண்ணிட்டு ஒரு லேடி வந்தா. முப்பது வயசு மதிக்கலாம். பேரு குமுதாவாம். மேட்டுத்தெருவுல குடியிருக்காளாம். 'உன் புருஷன் ஆயிரம் ரூபா எனக்குப் பாக்கி வெச்சிருக்கான். ஒரு மாசம் ஆச்சு. நேர்ப்படும் போதெல்லாம் இதா தர்றேன்...அதா தர்றேன்னு சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடிச்சிட்டே இருக்கான். இன்னிக்கு ராத்திரிக்குள்ள பணம் வரலேன்னா நாளைக்கு வந்து அவன் மானம் மரியாதை எல்லார்த்தையும் கப்பலேத்திடுவேன்; தெருப்பூரா சிரிப்பா சிரிக்க வெச்சுடுவேன். அவன் கிட்டே சொல்லி வை’னு சொல்லிட்டுப் போனா. ஆளப் பார்த்தா ‘எதுக்கும்’ துணிஞ்சவள்னு தெரியுது.”

மனோகரனின் முகம் முழுக்கக் ‘குப்’பென்று  பீதி பரவியது.

சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான்.

“அவகிட்ட எதுக்குக் கடன் வாங்கினீங்க?” -வெள்ளந்தியாய்க் கேட்டாள் பூர்ணிமா.

“அவகிட்ட கடன் வாங்கல; கடன் சொன்னேன்” என்று தனக்கு மட்டும் கேட்கும்படியாய் முணுமுணுத்துக்கொண்டு வெளியேறினான் மனோகரன், குமுதாவிடம் மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்க!

#############################################################################################


வெள்ளி, 10 ஜூன், 2016

கன்னடத்தில் எழுதிப் பிரபலமான ஒரு ‘சுயமரியாதை’த் தமிழனின் மரணம்!

வேமண்ணாவின் இயற்பெயர் வி.சி.வேலாயுதம். தமிழரான இவர் 1940களில் பிழைப்புக்காகப் பெங்களூருவில் குடியேறினார். அங்குள்ள ராஜா நூல் ஆலையில் பணியாற்றியபோது பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். 
1960களில், கோலார் தங்கவயல் உள்ளிட்ட இடங்களுக்குப் பெரியார் வருகை புரிந்தபோது அவரைச் சந்தித்து வேமண்ணா உரையாடினார். பெரியாரின் கொள்கைகளால் கவரப்பட்ட அவர், அவரின் அறிவுரைப்படி பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முறைப்படி கன்னடம் பயின்றார். 

பின்னர், மிதமிஞ்சிய ஆர்வம் காரணமாக எழுத்தாளரானார்; கடின உழைப்பால் பிரபலம் அடைந்தார்.

கடந்த 50 ஆண்டுகளில் பெரியாரின் 30க்கும் மேற்பட்ட நூல்களைக் கன்னடத்தில் மொழியாக்கம் செய்தார்; அவரின் வாழ்க்கை வரலாற்று நூலையும் கன்னடத்தில் எழுதினார். இந்த நூலை ‘ஹம்பி’ பல்கலைக்கழகம் பாடமாக வைத்துள்ளது.

இவரின் பணிகளைப் பாராட்டி ஏராளமான அமைப்புகள், ‘கன்னட ரத்னா’, ‘பெரியார் முழக்கம்’ உள்ளிட்ட விருதுகளை வழங்கியுள்ளன.

89 வயதான வேமண்ணாவுக்கு இரண்டு நாட்கள் முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது; மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் அவரின் உயிர் பிரிந்தது.

பெங்களூரு சுப்பிரமணிய நகரில் சுயமரியாதை முறைப்படி எவ்விதச் சடங்குமின்றி அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் தமிழ் அமைப்பினர் மட்டுமல்லாமல், ஏராளமான கன்னட அமைப்பினரும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
***********************************************************************************************************************
நன்றி: ‘தி இந்து’, 10.06.2016.

செவ்வாய், 7 ஜூன், 2016

அய்யோ பாவம் ‘பசி’பரமசிவம்!!! ..........தமிழ்மணம் மன்னித்திடுக.

‘நான் கேள்வியின் நாயகன்’ http://kadavulinkadavul.blogspot.com/2016/06/blog-post_6.html என்னும் தலைப்பில் நேற்று[06.06.2016] புதிய பதிவொன்று எழுதித் தமிழ்மணத்தில் இணைத்தேன்.

நேற்று முழுக்க அது முகப்புப் பக்கத்தில் வெளியாகவில்லை. அத்துடன், தமிழ்மணப் பட்டியலின் இயக்கமும்[பட்டியல் நகரவில்லை. என் கணினியில் மட்டும் இது நேர்ந்திருக்கலாம்?] தடைபட்டிருந்தது. இரவு 11 மணிவரை அதே நிலைதான்.

இன்று[07.06.2016] காலை எழுந்ததும், நகரத் தொடங்கியிருந்த பட்டியலில் தேடியபோது, 7 ஆவது பக்கத்தில் என் பதிவு இடம்பெற்றிருந்ததைக் காண முடிந்தது. 

கிளிக் செய்தபோது, பதிவுக்குப் பதிலாக.....
Sorry!

The Page you were looking for could not be found. The page may have been removed from our Blog. Please go further with below options.

Back    Home Contact என்ற இந்த அறிவிப்பே தென்பட்டது.

பதிவு, கடவுளின் இயக்கம் குறித்தது. பதிவுடன்.......

நண்பர் மகேஷ் அவர்கள் maheshswis@gmail.com எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலையும்[‘காக்கா பிடிக்கத் தெரியாத கர்னாடக முதலமைச்சரும் உதவியாளர்களும்’ என்னும் பதிவு பற்றியது] அதற்கு நான் அனுப்பிய பதில் மின்னஞ்சலையும் இணைத்திருந்தேன்.

இந்நிலையில், நான் கேள்வியின் நாயகன்’ என்னும் என் பதிவு, என் தளத்திலிருந்து [கடவுளின் கடவுள்]  முற்றிலுமாய் அகற்றப்பட்டுள்ளது. நேற்று, என் கணினியில் தமிழ்மணம் பதிவுப் பட்டியல் நகராமல் நிலைகொண்டிருந்ததும் அறியத்தக்கது].

பதிவுலக நண்பர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு. இப்பதிவும் நீக்கப்படக்கூடும் என்பதால் மின்னஞ்சல்கள் இத்துடன் இணைக்கப்படவில்லை.

மேற்கண்ட என் பதிவை இணைத்ததால் தமிழ்மணத்தில் நேர்ந்த பாதிப்பிற்கு[?] மிகவும் வருந்துகிறேன்.

தங்களின் வருகைக்கு நன்றி.
===============================================================================







ஞாயிறு, 5 ஜூன், 2016

‘காக்கா’ பிடிக்கத் தெரியாத கர்னாடக முதலமைச்சரும் உதவியாளர்களும்!

‘சித்தராமையா’ன்னு ஒரு பெரிய மனிதர்[V.V.I.P]; கர்னாடக மாநிலத்தின் முதலமைச்சர்; நேற்று முன்தினத்திற்கு  முன்தினம்[02.06.2016] கோப்புகளைப் பார்த்து முடித்து வெளியே புறப்படத் தயாரகிறார். அவரும் உதவியாளர்களும் காரை நெருங்கியபோது, காரின் பக்கவாட்டுக் கண்ணாடியில் வந்தமர்ந்தது ஒரு காக்கை[காகம்] .
ஊழியர்கள் அதை விரட்ட முயற்சி செய்தபோதும் இருந்த இடத்தைவிட்டு நகராமல் பத்து நிமிடங்கள் கழித்துத்தான் பறந்து போனதாம் அந்தக் காக்கை.

ஜோதிடர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். சித்தராமையாவுக்கு நேரம் சரியில்லை என்று சொல்கிறார்கள்;  சனீஸ்வரன் கோயிலுக்கோ, ஆஞ்சநேயர் கோயிலுக்கோ  போய் வழிபடவேண்டும் என்று அறிவுரை பகர்கிறார்கள்.

நம்புங்கள், இது நேற்றைய தினமலர் நாளிதழில்[04.06.2016] நான் படித்தது.

காக்கை ஒரு புத்திசாலிப் பறவை; கள்ளத்தனமுள்ள பறவையும்கூட.  அது மனிதருடன் பழகியது போலவும் இருக்கும்; பழகாதது போலவும் இருக்கும். நமக்குள் என்ன நினைப்பு உருவாகிறது என்பதை எளிதில்  கண்டுபிடித்துவிடும்.

நகர்ப்புறத்துக் காக்கை பற்றிச் சொல்லவே வேண்டாம். மனிதர்கள் தனக்குத் தீங்கு செய்யமாட்டார்கள் என்பது அதற்குத் தெரியும். முதலமைச்சரின் காரில் அமர்ந்த காகத்திற்கும் இது தெரியும். முதல்வரின் ஆட்கள் விரட்டியபோது சற்றே தாமதித்து அது பறந்துபோனதற்கு இந்த அனுபவ அறிவே காரணம்.

முதல்வருக்குக் கெட்ட நேரம் என்பதை உணர்த்தத்தான் அது அஞ்சாமல் அங்கு வந்து அமர்ந்து ‘இருந்து’ பறந்தது என்பவர்கள், அது பறக்கும் முன்னரே[அந்தப் பத்து நிமிடத்திற்குள்] அதைப் பிடிக்க முயற்சி செய்திருக்கலாம்; பிடித்து, பறவையின ஆய்வாளர்களுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கலாம்.  முதல்வராவது அதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கலாம். இவற்றில் எந்தவொன்றும் நடைபெறவில்லை.

முதலமைச்சருக்கோ மற்றவர்களுக்கோ ‘காக்கா பிடிக்கும்’ பழக்கம் இல்லைபோலும்!

பலதரப்பட்ட மக்கள் அடங்கிய ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சர், காக்கையின் செயலுக்கான காரணத்தை அறிவு பூர்வமாக ஆராய்வதை விடுத்து ஜோதிடர்களின் உதவியை நாடியது வருந்தத்தக்கது.

காக்கை சனீஸ்வரனின் வாகனம்.  தமக்குரிய வாகனத்தில் கித்தாக அது அமர்ந்திருந்தது தீய சகுனம் என்று கருதிய முதலமைச்சர்,  தனிப்பட்ட முறையில் ஜோதிடரின் ஆலோசனையைக் கோரியிருக்கலாம். அதை விடுத்து, நடந்த நிகழ்வைப் பொதுவில் பகிர்ந்தது[‘இந்தச் சம்பவத்தைச் சில டி.வி.கேமாராமேன்கள் படம் பிடித்து ஒளிபரப்பினார்கள். இதை வைத்துச் சில டி.வி.சேனல்கள் விவாத நிகழ்ச்சிகளை நாள் முழுக்க நடத்தின’ என்பது செய்தி. விவாதம் குறித்த தகவல்களை அறிய இயலவில்லை] மிகவும் கண்டிக்கத்தக்கது.
===============================================================================







வெள்ளி, 3 ஜூன், 2016

தமிழினத்தின் தன்மானமும் தந்தை பெரியார் பட்ட அவமானங்களும்!

மூடநம்பிக்கை ஒழிப்புப் பணி மிக மிக ஆபத்தானது என அறிந்திருந்தும், அதன் பொருட்டுத் தம் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டார் பெரியார்; பூனைக்கும் பல்லிக்கும் ராகுகாலத்துக்கும் எமகண்டத்துக்கும் அஞ்சி நடுங்கிய அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அறுபது ஆண்டுகள் ‘சுயமரியாதை அதிர்ச்சி வைத்தியம்’ செய்தார். அதன் விளைவாக, அவர் பட்ட அவமானங்களும் துன்பங்களும் கொஞ்சநஞ்சமல்ல. அவற்றின் சிறு தொகுப்பே இப்பதிவு.
மயக்கு மொழியைப் பயன்படுத்தாமல், கடுமையானதும் கசப்பானதும் கொச்சையானதும் பச்சையானதுமான மொழியில் மேடைதோறும் அவர் முழங்கியபோதெல்லாம், தவளை, நீர்ப்பாம்பு, கழுதை, பன்றி போன்றவை அவரின் கூட்டங்களில் விரட்டிவிடப்படுவதுண்டு.

நாய் போல் ளையிட்டும் விசிலடித்தும் எதிரிகள் கலகம் செய்வார்கள்.

பெரியாரின் பேச்சு மக்களின் காதுகளில் விழாமலிருக்கத் தாரை தப்பட்டை அடித்து இடையூறு விளைவிப்பார்கள்.

சின்னாளப்பட்டி என்னும் ஊரில் பகுத்தறிவுப் பரப்புரை செய்தபோது பெரியாரின் மண்டையில் கல்லடி பட்டு ரத்தம் கசிந்தது. அதற்கப்புறம், கற்கள் எறியப்படும்போதெல்லாம் தலையில் முண்டாசு கட்டி முழங்குவார் பெரியார்.

அப்பாவித் தொண்டர்களைக் களத்தில் இறக்கி விட்டு ஆழம் பார்க்கும் அற்பத்தனம் அவருக்கு இல்லை. மற்றவர்க்கு முன்மாதிரியாகத் தானே போராட்டக் களத்தில் இறங்கிவிடுவார். அடி உதைகளைத் தாங்குவதற்கும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வார்.

தம் சொத்து முழுவதையும் பெரியார் சுயமரியாதை இயக்கத்துக்கு எழுதி வைத்துவிட்டு, மோட்டார் வேனையே வீடாக ஆக்கிக்கொண்டு, சிறையில் தவிர வேறேங்கும் ஓய்வெடுக்காமல், கிடைத்ததைச் சாப்பிட்டு நாட்டுக்காக உழைத்தார்.

உடுத்தும் ஆடை பற்றிக் கவலை சிறிதுமின்றி, தலைவர் என்னும் தருக்கு இல்லாமல் அனைத்து மக்களிடமும் வெள்ளை மனதுடன் பழகினார்.

சிறுநீரகக் கோளாறு உட்பட, எத்தனையோ உடல் தொல்லைகளுக்கு உள்ளானபோதும், மருத்துவர்களின் கட்டளைகளை அலட்சியப்படுத்தி, கூட்டங்களில் பங்கேற்றார்.

மக்களைத் திருத்திட வேண்டும் என்னும் முனைப்புடன், 94 வயதிலும் கட்டிய கைலியுடன் ஓட்டை வேனில் ஊர் ஊராக அலைந்தார்.

பிறரின் கைத்தாங்கலுடன், “அம்மா” என்று முனகிக்கொண்டே மேடை ஏறுவார். ஏறியவுடன், அத்தனை உடல் துன்பங்களையும் மறந்து, உணர்ச்சிவசப்பட்டு முழங்குவார்; மக்களின் அறிவு வளர்ச்சிக்காகப் புதிய புதிய கருத்துகளை வாரி இறைப்பார்.

ஆரியர் படைப்புகளான கடவுள்களுக்கு எந்தவொரு சக்தியும் இல்லை என்று நிரூபிக்க, பிள்ளையார் உருவப் பொம்மைகளை உடைத்தார்; உடைக்கச் செய்தார்; ராமன் படத்தை எரித்தார்; எரிக்கச் செய்தார். இம்மாதிரிப் போராட்டங்களை நடத்தியதால் பலமுறை சிறை சென்றார்.

பெரியாரின் பயன் கருதா மக்கள் பணியை அறிஞர் பலரும் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்; போற்றியிருக்கிறார்கள். அவரை மறவாது போற்றி, அவர் வழி நடப்பது நம் அனைவரின் கடமையாகும்.
***********************************************************************************************************************
துணை நூல்: “டார்ப்பிடோ” ஏ.பி.சனார்த்தனம் அவர்களின், ‘பெரியாரே என் தலைவர்’, மனோ பதிப்பகம், சென்னை; முதல் பதிப்பு: அக்டோபர் 1997.