திங்கள், 30 நவம்பர், 2020

தொடரும் 'ரஜினி தொற்று'!!!

1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்று சொல்லித் தமிழக அரசியலில் தனக்குள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்தினார் உச்ச நடிகர் ரஜினிகாந்த்.

ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின்னரும் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்தபோது, "தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டுப்போச்சு" என்று பேசி,  தூய்மையான ஆட்சியை விரும்பும் நேர்மையாளனாகத் தன்னைக் காட்டிக்கொண்டார்.

2017 டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.

"எனது அரசியல் பிரவேசம் உறுதி. இது காலத்தின் தேவை" என்று அந்த அறிவிப்பின்போது அவர் பேசி இருந்தார்[ஊடகங்கள் இவரின் இந்த அறிவிப்பை ஊதிப் பெருக்கின].

அதற்கான எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

இவர் கட்சி தொடங்கி, தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆகாவிட்டால், தமிழக மக்கள் நாதியற்றுப் போவார்கள் என்று நினைத்தோ என்னவோ, தமிழ்த் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும், அவ்வப்போது, 'ரஜினி கட்சி தொடங்குவாரா? தேர்தலில் போட்டியிடுவாரா?' என்பதாகச் செய்தி வெளியிட்டு, 'உச்ச நடிகர்' என்று பெயர் பெற்ற இவரை உச்ச அரசியல்வாதி ஆக்குவதில் தீவிரம் காட்டின.  

இந்நிலையில், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிப்பதாக அறிவித்தார் நடிகர்.

இதற்காகவே தவம் கிடந்தவர்கள் போல, ஊடகக்காரர்கள், கையில் புகைப்படக் கருவியும் குறிப்பேடுமாக இவரைத் தேடி ஓடினார்கள். 

ஏமாற்றமே மிஞ்சியது.  

"என் அரசியல் குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்தச் சந்திப்பு" என்று அறிவித்ததன் மூலம், அரசியக் கட்சி தொடங்குவாரா ரஜினி என்று மக்களை எதிர்பார்க்கத் தூண்டிவிட்டு,  தமிழக மக்களிடம் ஓர் அரசியல் எழுச்சி ஏற்படும்போதுதான் அரசியலுக்கு வருவேன்" என்று அறிவித்து 'அந்தர் பல்டி' அடித்தார் 'உச்சம்'.

இதன் பின்னர், கொரோனா பொதுமுடக்கம் தொடங்கியது. 

இவரின் ஊடக அடிமைகளால் சும்மா இருக்க முடியவில்லை. இவரின் ரசிகர்களைச்[சினிமா பார்ப்பதைத் தவிர, படிப்பறிவோ பகுத்தறிவோ பட்டறிவோ இல்லாத ஒரு சிறு கூட்டம்] சந்தித்துப் பேட்டி கண்டும், வேறு வேலை வெட்டி இல்லாத நாலு பேச்சாளர்களைத் தேடிப் பிடித்துக் கலந்துரையாடச் செய்தும், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தான கருத்துகளை வெளியிட்டு ஆத்ம திருப்தி கண்டார்கள்.

நடிகருக்குப் பைசா செலவில்லாமல் விளம்பரம் கிடைத்துக்கொண்டே இருந்தது.

கொரோனா காலத்தில் தமது உடல்நிலை, வெளியே வந்து மக்களைச் சந்திக்கும் வகையில் இல்லை என மருத்துவர்கள் கூறியதாக நடிகரே தெரிவிப்பது போல் சமூக ஊடகங்களில் கடந்த அக்டோபர் மாதம் செய்திகள் பரவின.

இது குறித்து விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றித் தகுந்த நேரத்தில் என் 'ரஜினி மக்கள் மன்ற' நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்" என்று அறிவித்திருந்தார். இதன் மூலம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கித் தான் ஒரு 'பிரபலம்' என்பதைப் பறைசாற்றிக்கொண்டார்.

இந்த நிலையில்தான் தன் மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஈடுபட்டார். 'இந்தக் கூட்டத்தின் இறுதியில் தனது அரசியல் பிரவேசம் குறித்த முடிவை ரஜினிகாந்த் அறிவிப்பாரா?' என்று கேள்வி எழுப்பிப் பெரும் பரபரப்பை உண்டுபண்ணினார்கள் ஊடகக்காரர்கள். 

ரஜினி, 37 மாவட்டச் செயலாளர்களிடமும் தனித்தனியே கருத்து கேட்டாராம். இந்த ஆலோசனையின் போது சில மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து ரஜினி அதிருப்தி தெரிவித்தாராம். 'என் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர். பலமுறை எச்சரித்தும் நிர்வாகிகள் சிலரின் தவறான செயல்பாடுகளில் மாற்றம் இல்லை. அதனாலேயே சிலரை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சொல்லியிருக்கிறாராம்[பல்வேறு ஊடகச் செய்திகளை ஆதாரமாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டது இந்தப் பதிவு].

கட்சியே ஆரம்பிக்கவில்லை. ரஜினி மன்றப் பொறுப்பாளராக இருக்கும் ஒருவர் அப்படி என்ன பெரிய தவற்றைச் செய்துவிட முடியும்? 

இவர் பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறார்களாம். கட்சி தொடங்கி, தேர்தலில் வென்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சிறிது காலமாவது ஆண்டால்தானே இவர் நேர்மையானவரா, களங்கமுற்றவரா என்பது தெரியும்!

இப்போதே எதற்கு இம்மாதிரிப் பேச்செல்லாம்?

இவர் மாதிரியான பிரபலங்கள் இன்னும் எப்படி வேண்டுமானாலும் தற்பெருமை பேசலாம். எதைப் பேசினாலும் நம்புவதற்கு இங்கே ஒரு கூட்டம் எப்போதும் காத்துக்கிடக்கிறது!!!
===============================================================

ஞாயிறு, 29 நவம்பர், 2020

அமேசான் சந்தாதார்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

அன்புடையீர்,

அமேசான் கிண்டிலில் வெளியிடப்பட்டுள்ள என் நூல்களின்[33] பட்டியலைப் பதிவு செய்துள்ளேன். நீங்கள் அமேசானின் சந்தாதாரராக இருப்பின், பட்டியலில் உள்ள நீங்கள் விரும்பும் ஒரு நூலையோ பலவற்றையோ இலவசமாக உங்களால் படிக்க இயலும்.

தேர்வு செய்ய வசதியாக அவற்றை வகைப்படுத்தியுள்ளேன்.

ஏதேனும் ஒரு வகையில் இவை உங்களுக்குப் பயன்படக்கூடும் என்பது என் நம்பிக்கை. நம்பிக்கை மெய்ப்படுமாயின் மிகவும் மகிழ்வேன்[வாசிக்கப்படும் பக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக் கணிசமான தொகையை வழங்குகிறார்கள் என்பது நீங்கள் அறியத்தக்கது. விற்பனையானால் மட்டுமே ஓரளவுக்கு வருமானம் பெறலாம்].

நன்றி.

அமேசானில் என் ['பசி'பரமசிவம்] நூல்கள்: 

கதைகள்(14 நூல்கள்):

*காமம் பொல்லாததுஉடலுறவு இச்சையைக் கருப்பொருளாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு.

*'சுருக்'...'நறுக்' வாழ்வியல் கதைகள்: அன்றாட வாழ்வைப் பல்வேறு கோணங்களில் சுவைபடச் சொல்லும் படைப்புகள்.

*சிலிர்ப்பூட்டும் 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள்!: திருச்சி வானொலியில் நான் ஆற்றிய பேருரையின் வரிவடிவம்.

*ஒரு பக்கக் கதைகளில் ஒரு புரட்சி!!!: முற்றிலும் மாறுபட்ட, புதிய பார்வையில் உருவான ஒரு பக்கக் கதைகள்.

*கொங்குநாட்டுப் பங்காளிகளின் கதைகள்: கொங்குநாட்டு மக்களின் அறியாமையையும் பலவீனங்களையும் எதார்த்தமாக விவரிக்கும் கதைகள்.

*100% உண்மைக் கதைகள்: உண்மைச் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு கற்பிக்கப்பட்ட மனதைக் கவரும் கதைகள்.

*சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!: நகைச்சுவை விருந்தளிக்கும் படைப்புகள்.

*கிளு கிளு’...‘குளு குளு’ கதைகள்: ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும் நகைச்சுவைக் கதைகள்.

*அடடா இந்தப் பெண்கள்!!!: பெண்களின் தன்மானம், துணிவு, இயலாமை போன்ற குணங்களை உள்ளடக்கமாகக் கொண்ட படைப்புகள்.

*சதையும் கதையும்: கட்டுப்பாடற்ற காம இச்சையால் வாழ்விழந்த  மாந்தர்களின் கதைகள்.

*செல்லம்மா தேவி: [நாவல்]  பகுத்தறிவும் பட்டறிவும் வாய்க்கப்பெற்ற ஒரு சாதனைப் பெண்ணின் கதை.

*அம்மம்மா...அம்மா!!!: குறுநாவல்ஒரு பாசமிகு தாயின் தியாகத்தைக் காட்சிப்படுத்தும் கதை.

*உள்ளுறை காமம் [குறுநாவல்]: காம உணர்வைக் கட்டுப்படுத்தும் வகையறியாது அல்லாடும் மாந்தர்கள் குறித்த கதை.

*பத்து ரூபாயில் கடவுள்:  கடவுளின் கருணை குறித்தும், வாழ்வியல் அவலங்கள் பற்றியும் ஆராயும் கதைகளின் தொகுப்பு.

கட்டுரைகள்(19 நூல்கள்):

கடவுள்(5):

*நாத்திகம் போற்றுவோம்!: கடவுள் மறுப்பு, மகான்களின் இழிதகைமை, முற்போக்குச் சிந்தனையாளர்களின் பெருந்தன்மை போன்றவற்றை விவரிக்கும் பதிவுகள்.

*பொல்லாத மரணமும் புரியாத உயிரின் இருப்பும் (கடவுளின் மரணம்!!!] உயிர், மரணம் ஆகியவை குறித்த நுண்ணாய்வுப் பதிவுகள்.

*கானல்நீர்க் கடவுள்கள்!!!:கடவுளின் இருப்பு, ஆற்றல், குணம், தேவை ஆகியன பற்றி மிக நுட்பமாக  ஆராயும் கட்டுரைகள்.

*சாத்தானே என் கடவுள்!!!: சாத்தான் எனப்படும் தீய சக்தியைக் கடவுளுடன் தொடர்புபடுத்தி ஆராயும் கட்டுரைகள்.

*சாகாத சாமிகளும் சாகப் பிறந்த மனிதர்களும்: பக்தி, மதம், கடவுள் போன்றவை குறித்த சாடல் பதிவுகள்.

ஆன்மா, விதி(2):

*ஓடி ஒளியும் ஆன்மாவும் தேடி அலையும் மனிதகுலமும்: மரணம், ஆன்மா, உயிர்ச்சக்தி போன்றவை பற்றிய ஆழ்சிந்தனைப் பதிவுகள்.

*மசுரு விதிஊழ் எனப்படும் விதி பற்றிய 07 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.

பிரபஞ்சத் தத்துவம்(3):

*விந்து சுமப்பவன்: பிரபஞ்சப் புதிர், நிலையாமை, வெறுமை, சிந்தித்தல் என, பல்துறை சார்ந்த ஆய்வுத் தொகுப்பு.

*நான் கேள்வியின் நாயகன்! படைப்புத் தத்துவம், வலைத்தளங்கள் போன்றவை குறித்த ஆய்வுகள்.

*காமத்திலிருந்து தியானத்திற்கு!ஞானம், தியானம், காமம், பரம்பொருள் ஆகியவற்றைத் தொடர்புபடுத்தி வரையப்பட்ட கட்டுரைகள்.

மூடநம்பிக்கை(5):

*மூடர் யுகம்: பல்வேறு மூடநம்பிக்கைகளைப் பட்டியலிட்டுச் சாடும் பதிவுகள்.

*நான் மூடன்! நீங்கள்?மூடநம்பிக்கை குறித்த கதைகளும் கட்டுரைகளும்.

*நான் இன்னொரு ஹிரண்யன்!!!: கடவுள் நம்பிக்கையின் பெயரால் நிகழ்த்தப்படும் மூடச் செயல்களைச் சாடும் கட்டுரைகள்.

*பக்தி படு[ம்]த்தும் பாடு!  பக்தியால் விளையும் கெடுதிகள், அதன் மூலம் பிழைப்பு நடத்தும் போலிச் சாமியார்களின் மோசடிகள் என்பன குறித்த அலசல் கட்டுரைகள்.

*ஜோதிடச் சனி!: ஜோதிடர்களால் பரப்பப்படும் மூடத்தனங்களால்  மக்கள் படும் துன்பங்களைப் படம்பிடிக்கும் பதிவுகள்.

மற்றவை(4):

*மருட்டும் மகான்களும் அச்சுறுத்தும் அவதாரங்களும்!: மகான்கள், அவதாரங்கள் எனப்படுவோரும் மனிதர்களே என்பதைத் தெளிவுபடுத்தும் கட்டுரைகள்.

*வாருங்கள்...சாகும்வரை சிந்திக்கலாம்!!!:  நான் படைத்த 22 நூல்களுக்கான முன்னுரைகளின் தொகுப்பு.

*அற்ப ஆயுளில் ‘கற்பு’ !!! பெண்களும் கற்பொழுக்கமும் குறித்த விரிவான ஆய்வுகளின் தொகுப்பு.

*தமிழா தூங்குடா! தூங்கு!!:  தமிழனின் அறியாமையையும், இயலாமையையும், பலவீனங்களையும் காட்சிப்படுத்தும் அரிய கட்டுரைகள்.

===============================================================


சனி, 28 நவம்பர், 2020

பெரியார் இந்துமதத்தை மட்டுமே சாடினாரா?!


 பகுத்தறிவாளன்:

மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டன?

ஆத்திகன்:

கடவுளால் உண்டாக்கப்பட்டன.


கேள்வி:
மதங்கள் எத்தனை?
பதில்:
பல மதங்கள் உள்ளன.

கேள்வி:
இந்துமதம் யாரால் ஏற்படுத்தப்பட்டது?
பதில்:
கடவுளால்.

கேள்வி:
என்ன ஆதாரம்?
பதில்:
வேதங்கள் சொல்கின்றன..

கேள்வி;
வேதங்கள் தோன்றியது எப்படி?
பதில்;
கடவுளால் தோற்றுவிக்கப்பட்டன.

கேள்வி:
இதற்குச் சாட்சியோ ஆதாரங்களோ உண்டா?
பதில்:
இப்படியெல்லாம் கேள்விகள் கேட்பதே பாபம்.

கேள்வி;
இப்படிச் சொல்லிச் சொல்லியே மக்களை மூடர்கள் ஆக்கிவிட்டீர்கள். போகட்டும். கிறித்துவ மதம் என்பது என்ன?
பதில்:
ஏசுநாதரின் போதனைகளைச் சொல்வது.

கேள்வி:
ஆதாரம்?
பதில்:
பைபிள்.

கேள்வி;
ஏசுநாதர் என்பவர் யார்?
பதில்:
கடவுளின் குமாரர்.

கேள்வி;
அப்படி என்று யார் சொன்னது?
பதில்:
ஏசுவே சொல்லியிருக்கிறார்.

கேள்வி;
அது அவரது வாக்குமூலம். இதை நிரூபிக்க இந்த வாக்குமூலம் போதுமா?
பதில்:
ஏன் போதாது?

கேள்வி;
இப்போது ஒருவன் உம்மிடம் வந்து, ‘நான்தான் கடவுள்” என்று சொன்னால் நம்புவீரா? இருக்கட்டும். முகமதிய மதம் என்றால் என்ன?
பதில்:
முகமது நபி என்பவரால் சொல்லப்பட்ட கொள்கைகளைக் கொண்டது.

கேள்வி;
அதற்கு என்ன ஆதாரம்?
பதில்;
குரான்.

கேள்வி;
அது யாரால் சொல்லப்பட்டது?
பதில்:
கடவுளால் முகமதுநபி அவர்கள் மூலம் வெளியாக்கப்பட்டது.

கேள்வி;
அப்படி என்று சொன்னது யார்?
பதில்:
நபி அவர்கள் சொன்னார்கள்.

கேள்வி;
அப்படி என்று யார் சொன்னார்?
பதில்;
குரான் வாக்கியங்களில் இருக்கிறதுடன் வேறு பல சாட்சியங்களும் இருக்கின்றன.

கேள்வி:
வேறு பல சாட்சியங்கள் என்பவை எவை?
பதில்;
அந்தக் காலத்தில் நபி அவர்களுடன் இருந்த பல பெரியவர்களின் வாக்கு.

கேள்வி;
அவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?
பதில்:
எல்லாம் நம்பிக்கைதான்.

[உரையாடல் தொடர்கிறது..........]
*****************************************************************************************

ஆதார நூல்; ‘புத்தரும் தந்தை பெரியாரும்’, கண்மணி பப்ளிகேஷன்ஸ்< 4, இந்து காலனி, முதல் மெயின் தெரு, உள்ளகரம், சென்னை - 600 091; முதல் பதிப்பு: செப்டம்பர் 2000.

நூலாசிரியர்; தந்தை பெரியார்.
=============================================================
மீள் பதிவு[2015].

வெள்ளி, 27 நவம்பர், 2020

புரியாமல் எழுதியே 'பிரபல எழுத்தாளன்' ஆன ஜெயமோகன்!!!

https://www.jeyamohan.in/2470/ என்னும் தளத்தில்['ஜெயமோகன்'] வெளியானது பின்வரும் கேள்வி-பதில்['தியானம்', November 26, 2020] பகுதி. பிழைகளைத் திருத்தவில்லை. பல பத்திகள் நீக்கப்பட்டுள்ளன. அடைப்பில் இடம்பெற்றுள்ள வினாக்களும் விளக்கங்களும் என் சிந்தனையில் முகிழ்த்தவை.

'மதிப்பிற்குரிய ஜெ,

நீங்கள் பயணத்தில் இருக்கும் போது உங்களை தொந்தரவு செய்வதற்க்கு மன்னிக்கவும்.

தியானம் செய்வது எப்படி என்று எளிய முறையில் ஒரு செயல்முறை விளக்கம் கூறினீர்களென்றால் அது என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நேரம் கிடைக்கும்போது இதையும் கவனத்தில் கொண்டு எழுதலாமே? ஒரு புத்தகமாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நல்ல புத்தகங்கள் இருப்பின் அவற்றை எனக்கு பரிந்துரை செய்யுங்கள்.

இப்படிக்கு

கிறிஸ்

ன்புள்ள கிறிஸ்டோபர்,

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சிறிதளவேனும் தியானம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். அது நம் மனத்தின் இயல்புகளில் ஒன்று. தியானம் என்று நாம் இன்று சொல்லி வருவது அந்த இயல்பானசெயல்பாட்டை இன்னும் விரிவாக, திட்டமிட்ட முறையில், முறையான பயிற்சியுடன் அமைத்துக் கொள்வதைத்தான்.

நம் மனம் நம்முள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிரது. மனம் என்றால் என்ன என்றால் அதற்கு நமக்குள் ஓடு எண்ணங்களின் அறுபடாத நீட்சி[மனம் என்பது எண்ணங்களின் நீட்சி என்றால், மனமும் எண்ணமும் ஒன்றா? எண்ணங்கள் உருவாவதே மனதில்[மூளை]தான். அப்புறம் எப்படி இரண்டும் ஒன்றாகும்? ஆரம்பமே சொதப்பல்!]    என்று பதில் சொல்லலாம். மூளையின் நியூரான்களுக்கு இடையே நிகழ்ந்துகொண்டிருக்கும் தொடர்பாடலின் விளைவு இது என்று நரம்பியலாளர்கள் பதில் சொல்லக்கூடும்[கூடும் என்ன கூடும், எண்ணங்களின் பிறப்பிடமே மூளைதான். மூளையைத்தான் வழக்கில் மனம் என்கிறோம். அது[மனம்] இன்றளவும் நிரூபிக்கப்படாதது].

அந்த செயல்பாட்டை நாம் கூர்ந்து கவனித்தால் பிளாட்டிங் பேப்பரில் மை மரவுவது போல மிக இயல்பாக அது தன் விளிம்புகளில் இருந்து[மனதுக்கு விளிம்பா? அடிச்சி விளையாடுறார் ஜெமோ?!] விரிந்து விரிந்து பரவிக்கொண்டே இருப்பதைக் காணலாம். அதற்கு இலட்சியம் இல்லை. அமைப்பு இல்லை. மையம் இல்லை[விளிம்பு என்று ஒன்று இருப்பதாகச் சொல்லிவிட்டு, இவையெல்லாம் இல்லை என்பது ஏன்?]. அதாவது நாமறிந்த எந்த ஒருங்கிணைவும் அதற்கு இல்லை. அது ஒரு தன்னிச்சையான பிரவாகம்.

ஆகவேதான் நம் தியான மரபில் மனதை மனச்செயல்[மனம் வேறு அதன் செயல் வேறு அல்லவா?] என்றுதான் சொல்கிறார்கள். அது ஒருசெயல்பாடு. ஓர் அமைப்போ பொருளோ அல்ல. ஒவ்வொரு கணமும் அது நமக்கு தன்னைக் காட்டியபடியேதான் இருக்கிறது. நாம் நம் மனதை உணர்ந்த அக்கணமே மனம் இரண்டாகப்பிரிந்து[மனம் பிரிகிறதா? ஹ...ஹ...ஹ!!!]] ஒரு பகுதி நாம் ஆக மாறி மறுபகுதி நம் மனமாக ஆகி நாம் மனதைப் பார்க்க ஆரம்பிக்கிறோம்[நம் மனதை நாம் பார்க்கிறோமா?[இது ஜெமோ போன்ற ஞானிகளுக்கு மட்டுமே புரிகிற விசயம்!]. இது மிக விந்தையான ஒரு செயல். ஏனென்றால் நாம் பார்க்கிறோம் என உணர்ந்ததுமே நாம் பார்ப்பதை நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம்.

இந்த மனச்செயல் நின்று, அது[எது?] இல்லமலாகிவிடுவதைப்போன்ற ஒரு தருணம் நமக்கெல்லாம் ஏற்படுவது உண்டு. ஒரு புத்தம்புதிய அனுபவத்தை நாம்  அறியும்போது நாம் சிலகணம் மனமிலாதவர்கள் ஆகிறோம். உடனே நாம் அப்படி இருந்ததை நாம் உணரும்போது அந்த நிலை கலைந்து மனம் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. ஓர் இயற்கைக் காட்சியைக் காணும்போது சிலகணங்கள் அப்படி ஆகிவிடுகிரது. நல்ல இசை பலகணங்கள் அப்படி நம்மை ஆக்கிவிடுகிறது.

இக்கணங்களையே நாம் மெய்மறத்தல் என்று சொல்கிறோம்[இது சரி. அப்புறம், இதுவரையினான, புரியாத வெட்டி வியாக்கியாணம் எல்லாம் எதற்கு?]. ஆழமான பொருள்கொண்ட சொல் இது– தமிழில் அடிப்படையான எல்லாச் சொற்களும் தத்துவகனம்[???] கொண்டவை. நம் மரபு மெய் என்று சொல்வது உண்மை,உடல் இரண்டையும்தான். உண்மை என்ற சொல் உண்டு என்றசொல்லில் இருந்து உருவானது. அதாவது இருத்தல் [இது எதுக்கு, சம்பந்தமே இல்லாமல்?].

உள்ளதே உண்மை. அதுவே உடல். இந்த நோக்கில் உடலே உண்மை. உள்ளம் என்னும் சொல் அதிலிருந்து வந்தது. உள்ளே இருப்பது உள்ளம். அங்கே நிகழ்வது உள்ளுதல் அல்லது நினைத்தல். அதாவது மனித இருப்பு என்பது உள்ளமும் உடலும் சேர்ந்த ஒரு நிலை. அந்த நிலையை முற்றாக மறந்த நிலையையே நாம் மெய்மறத்தல் என்கிறோம். உள்ளுதலும், உண்மையும் இல்லாமலாகும் கணம்[இரண்டும் இல்லாமல் ஆதல் எப்படிச் சாத்தியம்?] 

அந்த மெய்மறக்கும் தருணத்தில் என்ன நடக்கிறது? ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் நம் மனம் இல்லாமலாகிவிடுகிறது[அதான், ஏற்கனவே மெய்மறத்தல்னு சொல்லிட்டாரே?]. ஒரு திரைபோல அது விலகிவிடுகிறது. அதற்கப்பாலுள்ள இன்னொரு ஆழம் திறந்துகொள்கிறது. அந்தக் கணத்தின் அனுபவத்தை அறிவது அந்த ஆழம்தான்[நல்லாவே குழப்புறாரய்யா!]

ஓயாது நம்முள் ஓடும் மேல்மனதை– நாம் எப்போதும் அறியும் மனத்தை- ஜாக்ரத் என்றது நம் மரபு [விழிப்புமனம்] அதற்கப்பால் உள்ள மயக்கநிலைகொண்ட ஆழத்தை ஸ்வப்னம் [கனவுமனம்] என்றது. ஸ்வப்னம் என்பது ஒரு சுரங்கவழிப்பாதை. ஓர் ஊடகம் அது. அதன் வழியாக நாம் போவது மேலும் ஆழ்மான ஒரு பூரண மனத்தை. தன்னுள் தான் நிறைவுகொண்டு இயங்கும் ஆழம் அது. அதை சுஷ¤ப்தி [முழுநிலைமனம்] என்றது மரபு[எப்படியெல்லாம் சொற்சிலம்பம் ஆடுகிறார்?]

ஜாக்ரத்,ஸ்வப்னம்,சுஷ¤ப்தி என்ற மூன்றையும் துமி, நுரை, அலை என்று வைத்துக்கொண்டால் கடல்தான் துரியம் எனப்பட்டது.  அதாவது கடல்தான் இருக்கிறது. அதைத்தான் நாம் பலவாக பார்க்கிறோம். துரியம் என் மனமோ உங்கள் மனமோ அல்ல. அது முழுமனம். மானுடத்துக்கு பொதுவான மனம். காலங்கள்தோறும் நீடிக்கும் மனம். பிரபஞ்ச மனம். அந்த மனத்தின் தோற்றங்களே மற்ற மூன்றும்.

ஆகவே, நாம் நம் ‘மெய்மறந்த’ நிலையில் அடையும் அனுபவமென்பது நம் ஜாக்ரத் விலகி நிற்கும் ஸ்வப்ன நிலையே. அது மேலும் தீவிரமாக இருந்தால் ஸ்வப்னமும் விலகி சுஷ¤ப்தி நிலையை கொண்டிருக்கிறது. அது அதி உக்கிரமானதாக இருந்தால் அது துரிய நிலையை அடைந்துவிடுகிறது

நாராயணகுரு துரியநிலையை ‘அறிபவன், அறிவு, அறிபொருள்’ ஆகிய மூன்றும் ஒன்றாகி நிற்கும் நிலை என்று தன் அறிவு என்னும் நூலில் சொல்கிறார். பேதமில்லாத அந்த நிலையையே அத்வைதம் இரண்டின்மை என்று சொல்கிறது. சிறிய அளவிலேனும் இந்த இரண்டற்ற நிலையை சில கணங்கள் அனுபவிக்காத மனிதர்களே பூமியில் இருக்க மாட்டார்கள்[மெய்மறத்தலுக்கு இத்தனை விளக்கமா?]......

தொல்தமிழில் தியானம் ஊழ்கம் எனப்பட்டது. ஆழ்தல் என்னும் சொல்லுக்கு ஊழ்தல்என்னும் ஒலிமாறுபாடும் உண்டு . ஊழ்கம் அதிலிருந்து வந்தது. ஊழ்கம் செய்பவர்கள் ரிஷிகள் என்று சம்ஸ்கிருதத்திலும் படிவர் என்று தமிழிலும் சொல்லப்பட்டார்கள்.

பதஞ்சலி யோக சூத்திரமே இந்திய ஞானமரபின் முதன்மையான யோக நூலாகும். அதற்கு ஒரு உரை எழுத ஆரம்பித்தேன். இந்த இணையதளத்தில் இரு அத்தியாயங்கள் வெளியாகின. முடிக்கவேண்டும்[இது வேறயா?].

தியானம் என்றால் எதுவெல்லாம் அல்ல என்று இப்போது தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது.[தியானத்துக்கே சரியான விளக்கம் தரல. எது தியானம் அல்ல என்று ஆராயுறாராம்!} ஒன்று, வேண்டுதல் அதாவது பிரார்த்தனை என்பது தியானம் அல்ல. சமீபகாலமாக கிறித்தவ மத நிகழ்ச்சிகளில் அப்படிச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். லௌகீகமாகவோ அல்லது வேறுவகையிலோ நமக்குத்தேவையானவற்றை ஒரு சக்தியிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்வதற்குத்தான் வேண்டுதல் என்று பெயர். அது ஒருபோதும் தியானம் அல்ல.  -ஜெ'

இதுவரை பொறுமையுடன் வாசித்தமைக்கு நன்றி. உங்களின் பயனுள்ள நேரத்தை வீணடிக்க விரும்பாததால், எஞ்சியுள்ள பத்திகளை[15] தவிர்த்திருக்கிறேன்.

எதைப் பற்றியும் சலிப்பில்லாமல் எழுதித் தள்ளுகிற திறமை ஜெயமோகனுக்கு உள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆனால், இவரின் படைப்புகளில் மிக மிக மிகப் பெரும்பாலானவை இந்தக் கட்டுரையைப் போலவே வாசிப்பவரின் மனதைக் குழப்பிப் பித்தம் தலைக்கேறச் செய்பவை என்பது என் திடமான நம்பிக்கை.

இவர் எப்படிப் பிரபல எழுத்தாளர் ஆனார் என்பது இன்றளவும் விடுவிக்கப்படாத புதிர் எனலாம்.

===============================================================


வியாழன், 26 நவம்பர், 2020

'ஆண்மை நீக்கம்'...அசத்தும் பாகிஸ்தான்!!!

பாகிஸ்தானில் கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கற்பழிப்புக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குற்றவாளிகளைப் பொது இடத்தில் வைத்துத் தூக்கிலிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது. 

இந்நிலையில், கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கும் தண்டனை வழங்குவதற்கும்[ஏற்கனவே இந்தோனேசியா அரசு இது குறித்த சட்டத்தை இயற்றியுள்ளது], கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கும் பிரதமர் இம்ரான்கான் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. 

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான அவசரச் சட்ட வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்தபோது, இந்தக் கடுமையான தண்டனை குறித்து முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

காவல்துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகளின் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இந்த வரைவுச் சட்டத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

குற்றவாளிகளைப் பொது இடத்தில் வைத்துத் தூக்கிலிடவேண்டும் என்று சில மந்திரிகள் பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

ஆண்மை நீக்கத் தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஆளுங்கட்சி செனட்டர் பைசல் ஜாவேத் கான், விரைவில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என்று கூறியுள்ளார்[https://www.maalaimalar.com/news/world/2020/11/25115909/2104078/Tamil-News-Pakistan-PM-Approves-Chemical-Castration.vpf?utm_source=vuukle&utm_medium=talk_of_town].

இம்ரான்கான் கொள்கையளவில் இதை ஒப்புக்கொண்டுள்ளதாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ள நிலையில்[நவம்பர் 25, 2020 11:59 IST], இதே நாளில்[25/11/2020] பிற்பகல் 4:19 மணி அளவில் இம்ரான்கான் ஒப்புதல் வழங்கியுள்ளதாக, சத்தியம் தொ.கா. செய்தி வெளியிட்டுள்ளது[தினமலர், தினகரன் போன்ற ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன]. செய்தி கீழே.

#இந்தியாவைப் போன்று, பாகிஸ்தான் நாட்டிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்கும் விதமாக அந்நாட்டில் அதிரடி நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

அதாவது, பாலியல் குற்றவாளிகளுக்கு, ரசாயனங்களைப் பயன்படுத்தி, ஆண்மை இழக்கும் தண்டனையைக் கொடுப்பதற்கான சட்டத்திற்கு அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல் வழங்கியுள்ளார்# https://www.sathiyam.tv/pm-imran-khan-approves-chemical-castration-of-rapists/

குற்றவாளிகளுக்குக் கடுங்காவல் தண்டனை, ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை என்று பல தண்டனைகளை வழங்கியும் பெண்கள் மீதான வன்புணர்வுக் குற்றங்கள் குறையாத நிலையில், 'ஆண்மை நீக்கம்' என்பது இம்மாதிரிக் குற்றங்கள் குறைவதற்கு வழிவகுக்கக்கூடும்.

பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி நாடாக இருந்தபோதிலும், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஆண்மை நீக்கம்' தொடர்பான சட்டத்தை அது இயற்றியிருப்பது பெரிதும் பாராட்டுதலுக்குரிய நற்செயலாகும்.

ஏனைய நாடுகள் யோசித்து முடிவெடுப்பதற்கு முன்னதாக, பாகிஸ்தானைப் பின்பற்றி 'ஆண்மை நீக்கத் தண்டனை' குறித்து உரிய முறையில் இந்திய அரசு சட்டம் இயற்றுதல் வேண்டும் என்பது நம் போன்றோர் விருப்பம் ஆகும்.

===============================================================

ஆண்மை நீக்கம்:  ரசாயன முறை அல்லது பிற வழிகள் மூலம் ஆணின் விரைகளைச் செயலிழக்கச் செய்தலாகும்.


புதன், 25 நவம்பர், 2020

ரோபோ[Robot] புணர்ச்சி!!!

தற்போதைய கணக்கெடுப்பின்படி, உலகத் தரம் வாய்ந்த பல தொழில் நிறுவனங்கள் மனித ஊழியர்களுக்கு மாற்றாகத் தொழிற்நுட்பத் திறன் கொண்ட தானியங்கி இயந்திரங்களை(Robots)ப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன என்பது அண்மைச் செய்தி; உண்மைச் செய்தியும்கூட.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் ஆபத்தான மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கென்று தனித்தன்மை வாய்ந்த எந்திரங்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளன.

எஃகு, கார் போன்ற பல்வேறு உற்பத்தி ஆலைகளை எந்திரங்களை வைத்தே முழுவதுமாகக் கையாளுகின்றனர். இதனால் பணி இழக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ரோபோ விஞ்ஞானம், பத்திரிக்கைத் துறையையும் தற்போது ஆக்கிரமித்து வருகிறது என்பது அதிர வைக்கும் உண்மை.

"இந்நிலையில், ரோபோக்களால் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?" என்பது ஆர்வமூட்டும் ஒரு கேள்வியாக உள்ளது.

"முடியும்" என்பது விஞ்ஞானிகளின் பதிலாக உள்ளது.

உடலுறவுக்குப் பயன்படும் 'Sex Androids' எனப்படும் Moving Dolls[ரோபோக்கள்] இன்னும் பத்தே ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டுவிடுமாம்!

இதைச் சொல்பவர் ரோபோ குறித்த ஆய்வில் ஈடுபட்டுவரும் டாக்டர் Lan Pearson என்பவர்.

பெண்ணுடல் போன்று தயாரிக்கப்பட்ட ரோபோ, கையைப் பற்றும் போதும் உதட்டைத் தீண்டும் போதும் அதற்கேற்ப ஆசைமொழிகளை வெளிபடுத்தும் வகையில் உருவாக்கப்படுகிறது; சூழலுக்கேற்பப் பாடல் ஒன்றையும் ஒலியிடும்.

அதனை உணர்ச்சிப்படுத்திய பின்னரே கட்டிலுக்கு அழைக்க இயலும். கையாள்பவனைப் பிடிக்கவில்லை என்றால், மறுக்கவும் ரோபோவில் நிரல்மொழி பதிவு செய்யப்படுகிறது.

உணர்ச்சியைத் தூண்டும் பகுதிகளில் சென்சார்கள் பொதிய வைத்துத் தீண்டலுக்கு ஏற்பப் பாவனைகளை வெளிபடுத்தும வகையில் உருவாக்கப்படுகின்றன. உடலினுள் வெப்பத்தை உண்டாக்க வெப்பக் கருவிகள் உள்ளன.

விபச்சார விடுதிகள், கிளப்புகள் போன்ற இடங்களையும் இவை ஆக்கிரமிக்கும் என்கிறார்கள் ரோபோ ஆர்வலர்கள்.

வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளிலும், நாடகங்களிலும் இப்போதே பயன்படுத்தப்படுகின்றனவாம்.

பயன்படுத்துபவரின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு இவை புணர்ச்சி சுகத்தை வாரி வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்களாம் அறிவியல் அறிஞர்கள். உலகின் பிரபலமான ரோபோ தயாரிக்கும் நிறுவனங்கள் இவ்வகை ரோபோக்களைத் தயாரிக்கும் பணியில்[?!] ஈடுபட்டிருக்கின்றனவாம். 'உங்களின் மனைவி அல்லது பெண் நண்பருக்கு மிகச் சரியான மாற்று எங்களின் செக்ஸ் ரோபோக்கள்தான்' என்று அவை விளம்பரமும் செய்கின்றனவாம்[அடப் பாவிகளா!!!].

ஆண்களின் தேவையை இவை நிறைவு செய்யும், சரி. பெண்களுக்கு?

அவர்களுக்கான ஆண்மை மிகு ரோபோக்களும் தயாரிப்பில் உள்ளன என்கிறார்கள். இதற்கு 'Rockey' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் வளர வளர மனித உணர்வுகள் மங்கிக்கொண்டிருக்கின்றன. அன்பான மனைவி, குழந்தைகள் என்னும் குடும்ப உறவு இந்த செக்ஸ் ரோபோக்களால் சிதையும். ஒருவரோடு ஒருவர் மனம் கலந்து பேசிச் சிரித்து மகிழும் அன்பு தவழும் வாழ்க்கை காணாமல் போய்விடும் என்று சமூக ஆர்வலர்கள் பெரிதும் கவலைப்படுகிறார்களாம்.

ஏற்கனவே, ஆண் பெண் உறவுகளுக்கு இடையேயான புரிதல் மேன்மை அடையாமல் உள்ள நிலையில், இம்மாதிரியான செக்ஸ் ரோபோக்களால், மனிதன் செயற்கை இன்பத்திற்கு அடிமையாகி விடக்கூடும் என்று பல்வேறு துறையைச் சார்ந்த வல்லுனர்கள் கருதுகிறார்கள் என்பதும் உண்மை. 

"இந்தத் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போனால், மனித இனத்தில் ஆணுக்குப் பெண் தேவையில்லை; பெண்ணுக்கு ஆண் அவசியமில்லை. இருவருக்குமிடையே உடலுறவும் இல்லாமல் போகும். வாரிசுகளும் உருவாக வாய்ப்பு இல்லை.  அப்புறம்.....

அப்புறம் என்ன, மனித இனமே பூண்டோடு அழிந்துவிடும்.

அழிந்து தொலைத்தால் நல்லதுதான். மனிதர்களின் தொல்லை இல்லாமல் மற்ற உயிரினங்கள் நிம்மதியாக வாழ வழி பிறக்கும்" -இது அடியேனின் விருப்பம்! ஹி...ஹி...ஹி!

=============================================================== 

உதவி: https://tamil.asianetnews.com/life-style/we-will-be-having-sex-with-robots-in-next-10-years

https://maayon.in/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/