எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

தொடரும் ‘நீட்’ தற்கொலைகளும் கொலைகாரர்களும்!!!

கீழே இடம்பெற்றுள்ளது ‘இந்து தமிழ்’இல் வெளியான பேட்டிக் கட்டுரை. சிறு சிறு பிழைகளை மட்டும் திருத்திப் பகிர்கிறேன்.

சென்னை: சென்னையில் நீட் தேர்வு தோல்வி காரணமாகக் கடந்த சனிக்கிழமை மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்துகொண்டார். அன்றைய தினம் அவரது நண்பர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலும் அந்த மாணவர் ஜெதீஸ்வரனின் மரணத்தைச் சுட்டிக்காட்டி நீட் தேர்வை விமர்சித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பர், "நான் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்தான் பெற்றேன். என் தந்தைக்கு வசதி இருந்ததால் அவர் ரூ.25 லட்சம் பணம் கட்டி என்னை ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்த்துள்ளார். இதுதான் மிகப் பெரிய முரண். காசு இருப்பவன்தான் டாக்டராக முடியும் என்றால் அவன் டாக்டரானதும் போட்ட காசை எடுக்கப்பார்ப்பானா இல்லை மக்களுக்குச் சேவை செய்வானா? ‘நீட்’தான் மருத்துவர்களை உருவாக்கும் உண்மையான தேர்வு என்றால் இப்போது இருக்கும் மருத்துவர்கள் எல்லோரும் டுபாக்கூர் எனக் கூறுகிறீர்களா?

என் நண்பன் ஜெகதீஸ் என்னைவிட நன்றாகப் படிப்பவன். அவனுக்குப் பணமில்லை என்பதால் அவன் மருத்துவராக முடியவில்லை. எனக்கு அது வருத்தமாக இருக்கிறது. பொருளாதாரத்தின் அடிப்படையில்தான் எல்லாமே இருக்கிறது. 400 மார்க் எடுத்தவனால் மருத்துவராக முடியவில்லை. எதுக்குத்தான் இந்த நீட். இதை வைத்து இந்த மத்திய அரசு என்னதான் சாதிக்கப்போகிறது. நீட் தற்கொலை எங்கெங்கோ கேட்டோம். அதிர்ச்சியாகவில்லை. ஆனால் இப்போது எங்கள் நண்பர் ஜெகதீஸ் போனபின்னர் ரொம்பவே அதிர்ச்சியா இருக்கு.

என் நண்பன் மக்கள் பணி செய்யவே நீட் எழுதினான். 2 வருடங்கள் எழுதி சீட் கிடைக்கவில்லை. 3ஆவது முறை எழுதும்போது அப்பாவுக்காக டாக்டராக வேண்டும் என்றான். அவனுக்கு வெளிநாட்டுக் கல்லூரிகளில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் அவனுக்குத் தமிழகத்தில் பயின்று தமிழக மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே எண்ணம். ரெண்டு நாட்கள் முன்னர் என்னுடன் பேசிய ஜெகதீஸ், மச்சான் உனக்குக் கிடைத்த வாய்ப்பு இங்க நிறையப் பேருக்குக் கிடைக்காது. படித்துவிட்டு மக்களுக்குச் சேவை செய் என்றான். மக்கள் பணி மனநிலை கொண்ட மாணவர் இல்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை.

நான் நீட் ஜஸ்ட் குவாலிஃபைட். எங்க அப்பாவால காசு கொடுக்க முடிந்த ஒரே காரணத்தால்தான் நான் மருத்துவ மாணவராகியுள்ளேன். ஆனால், என்னைவிட நன்றாகப் படிக்கும் ஜெகதீஸ் மருத்துவம் படிக்க முடியவில்லை. நான் இந்தச் சீட்டுக்குத் தகுதியானவன் இல்லை. ஜெகதீஸ் போன்றவர்களால்தான் எனக்கு மக்கள் பணி எண்ணமே வந்தது. இங்க கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது போல் காசு போட்டதால் காசு பார்க்கிறானா? இல்லை காசு பார்ப்பதற்காகக் காசு போடுறானா என்பதே புரியமாட்டேங்குது.

ஒரு தனியார் கார்ப்பரேட் பள்ளியில் படித்த எங்களாலே முடியவில்லை என்றால் அரசுப் பள்ளி மாணவர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்றே தெரியவில்லை. இப்போது ஒரு மாணவர் நீட்டில் 720-க்கு 720 வாங்கியுள்ளார். அவர் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2வுக்கே ரூ.15 லட்சம் செலவழித்துள்ளார். மருத்துவப் படிப்புக்கு ரூ.1.5 கோடி போட்டுவிட்டு மருத்துவராக வருபவருக்கு மக்கள் பணியில் எப்படி நாட்டம் செல்லும். போட்ட காசை எடுக்கத்தானே யோசனை போகும். அப்படியென்றால் எதிர்கால சுகாதார சேவைக் கட்டமைப்பு எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்" என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

தந்தை, மகன் தற்கொலை: சென்னையில் நீட் தேர்வு தோல்வி காரணமாக கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார்.

[தற்கொலை புரிந்த மாணவனும் அவன் தந்தையும்].ஜெகதீஸ்வரன்(இடது), செல்வசேகர் (வலது). [தற்கொலை புரிந்த மகனும் தந்தையும்].

https://www.hindutamil.in/news/crime/1092949-chennai-friend-a-medico-of-student-who-died-by-suicide-slams-neet-exam-system.html
//“காசு இருப்பவன் மட்டும்தான் நீட் படிக்க முடியுமா?” - நண்பனை இழந்த சென்னை மருத்துவ மாணவர் ஆவேசம்//(இந்து தமிழ்' தந்துள்ள தலைப்பு).

‘வைகோ’ கவனத்திற்கு... “உடையும்” என்பது தவறு; “உடையக்கூடும்” என்பதே சரி!

ர்.எஸ்.எஸ்.பின்னணியில் இயங்கி வரும் மோடி அரசு, செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கும், இந்தி மொழிக்கும் செல்வாக்குத் தேட முயற்சிப்பதும், நகரங்கள், ஊர்கள் போன்றவற்றின் பெயர்களை மாற்றுவதும் தொடர்கிறது.


ஓர் உதாரணம்:

‘இந்திய’த் தண்டனைச் சட்டம் > ‘பாரதீய’ நியாய சன்ஹிதா.


குற்றவியல் நடைமுறைச் சட்டம் >  ‘பாரதீய’ நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா. 


‘இந்திய’ச் சாட்சியச் சட்டம் >  ‘பாரதீய’ சாக்ஷ்யா.


சட்டத் திருத்த முன்வரைவில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


இங்கே நம் கவனத்தை ஈர்ப்பது, ‘இந்திய’ என்பதை, ‘பாரதீய’ என்று மாற்றியிருப்பது.


எதிர்காலத்தில், இந்தியாவே ‘பாரதம்’[இந்துத்துவாக்களின் ஆதிக்க வெறியின் வெளிப்பாடு இது] ஆக மாற்றப்போகிறது ‘பாஜக’ அரசு என்பதற்கான ‘முன்னறிவிப்பு’ இது.


இவர்களின் இந்த அடாத அவசர நடவடிக்கை, நம் ‘வைகோ’வைப் பொங்கி எழ வைத்திருக்கிறது.


“ஒன்றியப் பாஜக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது. நாட்டின் பன்முகத்தன்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உலை வைக்கும் முயற்சி இது. இம்மாதிரியான முயற்சிகள் இனியும் தொடர்ந்தால், இந்தியா, ரஷ்யா போல உடைந்து சிதறும்” என்று எச்சரித்திருக்கிறார்.


“உடைந்து சிதறும்” என்று ஆணித்தரமாக அவர் எச்சரித்தது சரியா?


நம்மைப் போன்ற முகவரி இல்லாத, பின்பலமும் இல்லாத அனாமதேயங்கள் எச்சரித்தால் மோடி அரசு கண்டுகொள்ளாது.


"ரஷ்ய மொழித் திணிப்பு காரணமாக ரஷ்யா உடைந்து சிதறியது உண்மைதான். ஆனால், ‘உடைதல்’ என்பது தானாக நிகழவில்லை; மொழிப் பற்று உள்ளவர்களால் உடைக்கப்பட்டது என்பதே உண்மை.


அதற்காக, மொழிப் பற்றாளர்கள் கடுமையாகப் போராடினார்கள்; தியாகங்கள் புரிந்தார்கள்.


எனவே, நாம் வெறும் வாய்ச்சொல் வீரர்களாகவே இருந்துகொண்டிருந்தால் எதுவும் நடக்காது. செயல்வீரர்களாக மாறினால் மட்டுமே சாதிக்க முடியும்.


சமஸ்கிருதம்&இந்தி மொழிகளைத் திணிப்பதற்கும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதற்கும் நடுவணரசு பெற்றிருக்கும் அசுர பலமே மூலகாரணமாக இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.


பலம் உள்ளவரை மொழி அழிப்பு, இன அழிப்பு எல்லாம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.


அசுர பலம் பெற்ற அவர்கள் பலவீனர்களாக ஆகும்வரை, அல்லது ஆக்கப்படும்வரை இது தொடரும்.


அந்நிலை உருவாவது எப்போது? எப்படி?


இந்தி அல்லாத பிற மொழிக்காரர்கள், தங்களுக்கிடையே உள்ள அத்தனை வேறுபாடுகளையும் களைந்து, ஒருங்கிணைந்து சிந்திக்க வேண்டியது அவசியம்.


அப்படிச் சிந்தித்துச் செயலில் இறங்கினால் மட்டுமே, சமஸ்கிருதம்&இந்தி மொழித் திணிப்பைத் தடுத்திட முடியும்


என்றிவ்வாறெல்லாம் பேசினாலும் நம்மைப் போன்ற அனாதரவாளர்கள் மீது மோடிஜி அரசு நடவடிக்கை எடுக்காது.


ஆனால், ‘வைகோ’ போன்ற தலைவர்கள் பேசினாலோ, எச்சரித்தாலோ, அவர்களை அடக்கி ஒடுக்க அந்த அரசு தன் அசுர பலத்தைப் பயன்படுத்தும் என்பது உறுதி.


ஆகவே, ‘வைகோ’ அவர்களிடம் நாம் வேண்டிக்கொள்வது.....


இந்தித் திணிப்பாலும், மாநில உரிமைப் பறிப்பாலும் இந்தியா “உடையும்” என்று, இனியும் உறுதிபட அறிவிப்புச் செய்யாதீர்கள்; “உடையக்கூடும்” என்று மட்டுமே அறிவியுங்கள்.

* * * * *

https://tamil.oneindia.com/news/chennai/vaiko-warns-centre-govt-on-renaming-laws-with-hindi-names-529269.html?story=2