ஆர்.எஸ்.எஸ்.பின்னணியில் இயங்கி வரும் மோடி அரசு, செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கும், இந்தி மொழிக்கும் செல்வாக்குத் தேட முயற்சிப்பதும், நகரங்கள், ஊர்கள் போன்றவற்றின் பெயர்களை மாற்றுவதும் தொடர்கிறது.
‘இந்திய’த் தண்டனைச் சட்டம் > ‘பாரதீய’ நியாய சன்ஹிதா.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் > ‘பாரதீய’ நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா.
‘இந்திய’ச் சாட்சியச் சட்டம் > ‘பாரதீய’ சாக்ஷ்யா.
சட்டத் திருத்த முன்வரைவில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இங்கே நம் கவனத்தை ஈர்ப்பது, ‘இந்திய’ என்பதை, ‘பாரதீய’ என்று மாற்றியிருப்பது.
எதிர்காலத்தில், இந்தியாவே ‘பாரதம்’[இந்துத்துவாக்களின் ஆதிக்க வெறியின் வெளிப்பாடு இது] ஆக மாற்றப்போகிறது ‘பாஜக’ அரசு என்பதற்கான ‘முன்னறிவிப்பு’ இது.
இவர்களின் இந்த அடாத அவசர நடவடிக்கை, நம் ‘வைகோ’வைப் பொங்கி எழ வைத்திருக்கிறது.
“ஒன்றியப் பாஜக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது. நாட்டின் பன்முகத்தன்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உலை வைக்கும் முயற்சி இது. இம்மாதிரியான முயற்சிகள் இனியும் தொடர்ந்தால், இந்தியா, ரஷ்யா போல உடைந்து சிதறும்” என்று எச்சரித்திருக்கிறார்.
“உடைந்து சிதறும்” என்று ஆணித்தரமாக அவர் எச்சரித்தது சரியா?
நம்மைப் போன்ற முகவரி இல்லாத, பின்பலமும் இல்லாத அனாமதேயங்கள் எச்சரித்தால் மோடி அரசு கண்டுகொள்ளாது.
"ரஷ்ய மொழித் திணிப்பு காரணமாக ரஷ்யா உடைந்து சிதறியது உண்மைதான். ஆனால், ‘உடைதல்’ என்பது தானாக நிகழவில்லை; மொழிப் பற்று உள்ளவர்களால் உடைக்கப்பட்டது என்பதே உண்மை.
அதற்காக, மொழிப் பற்றாளர்கள் கடுமையாகப் போராடினார்கள்; தியாகங்கள் புரிந்தார்கள்.
எனவே, நாம் வெறும் வாய்ச்சொல் வீரர்களாகவே இருந்துகொண்டிருந்தால் எதுவும் நடக்காது. செயல்வீரர்களாக மாறினால் மட்டுமே சாதிக்க முடியும்.
சமஸ்கிருதம்&இந்தி மொழிகளைத் திணிப்பதற்கும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதற்கும் நடுவணரசு பெற்றிருக்கும் அசுர பலமே மூலகாரணமாக இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
பலம் உள்ளவரை மொழி அழிப்பு, இன அழிப்பு எல்லாம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.
அசுர பலம் பெற்ற அவர்கள் பலவீனர்களாக ஆகும்வரை, அல்லது ஆக்கப்படும்வரை இது தொடரும்.
அந்நிலை உருவாவது எப்போது? எப்படி?
இந்தி அல்லாத பிற மொழிக்காரர்கள், தங்களுக்கிடையே உள்ள அத்தனை வேறுபாடுகளையும் களைந்து, ஒருங்கிணைந்து சிந்திக்க வேண்டியது அவசியம்.
அப்படிச் சிந்தித்துச் செயலில் இறங்கினால் மட்டுமே, சமஸ்கிருதம்&இந்தி மொழித் திணிப்பைத் தடுத்திட முடியும்”
என்றிவ்வாறெல்லாம் பேசினாலும் நம்மைப் போன்ற அனாதரவாளர்கள் மீது மோடிஜி அரசு நடவடிக்கை எடுக்காது.
ஆனால், ‘வைகோ’ போன்ற தலைவர்கள் பேசினாலோ, எச்சரித்தாலோ, அவர்களை அடக்கி ஒடுக்க அந்த அரசு தன் அசுர பலத்தைப் பயன்படுத்தும் என்பது உறுதி.
ஆகவே, ‘வைகோ’ அவர்களிடம் நாம் வேண்டிக்கொள்வது.....
இந்தித் திணிப்பாலும், மாநில உரிமைப் பறிப்பாலும் இந்தியா “உடையும்” என்று, இனியும் உறுதிபட அறிவிப்புச் செய்யாதீர்கள்; “உடையக்கூடும்” என்று மட்டுமே அறிவியுங்கள்.
* * * * *