புதன், 21 செப்டம்பர், 2016

‘நான் லட்சத்தில் ஒருவன்!’ [அனுபவக் கதை!!]

து நடந்து ஆறு மாதம்போல இருக்கலாம்.

அந்தி மயங்கும் நேரத்தில், அந்தப் பேருந்து நிறுத்தத்தின் அருகே அழகிய பருவப் பெண்ணொருத்தி ரவுடிகளால் கடத்தப்பட்டாள். அப்போது அங்கு நிறையவே இளவட்டங்கள் இருந்தார்கள். கடை வாசல்களில் அதிவேக ‘பைக்’குகள் வரிசை கட்டியிருந்தன. அவள் கடத்தப்பட்ட இடத்துக்கு நேர் எதிரே ஒரு ‘வாடகைக் கார் நிறுத்துமிடம்’கூட இருந்தது. எல்லாம் இருந்தும்..........

‘விருட்’டென ஒரு வாகனத்தில் அல்லது, வாகனங்களில் சீறிப் பாய்ந்து ரவுடிகளை விரட்டிப் பிடித்து, கடத்தப்பட்ட பெண்ணை மீட்பதற்குக் கதாநாயகனோ நாயகர்களோ இல்லை என்பது கொடுமை. கொடுமையிலும் கொடுமை.

அவள் கடத்தப்பட்ட சில வினாடிகளில் ஒரு மாயாஜாலம் போல நூறுபேர் கூடிவிட்டார்கள். வேறெதற்கு? வேடிக்கை பார்க்கவும் கதை பேசவும்தான்!

“இந்நேரம் ரவுண்டானாவைக்கூடக் கடந்திருக்க மாட்டானுக. பத்து பேர் சேர்ந்து ரெண்டு டாக்ஸி பிடிச்சிச் சேஸ் பண்ணினா அவனுகளை அமுக்கிறலாம்.” -யாரோ ஒருவர் யோசனை சொன்னார். சொன்னவர் யாரென்று ஆளாளுக்குக் குரல் வந்த திக்கில் தேடினார்கள். ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

“கார் போற வேகத்தைப் பார்த்தா ரவுண்டானாவைக் கடந்து ரொம்ப தூரம் போயிருப்பாங்க. நாமக்கல், சங்ககிரி, ஓமலூர்னு நாலஞ்சி கிளையா ரோடு பிரியுது. எதுல போனானுகன்னு கண்டுபிடிக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?” -எதார்த்தமாகச் சொன்னார் ஓர் உள்ளூர் ஆசாமி.

“அப்படியே கண்டுபிடிச்சாலும் நாம வெறுங் கையோட போயி அவனுகளை மடக்குறது அவ்வளவு சுலபமில்லீங்க. அவங்க கையில்  ஆயுதம் இருக்கும். போட்டுத் தள்ளிட்டானுகன்னா நம்ம புள்ள குட்டிகளை யார் காப்பாத்துறதாம்?” -சொன்னவர் கடமை உணர்வுள்ள ஒரு குடும்பஸ்தர்.

”பிக்பாக்கெட், வழிப்பறி மாதிரி பொண்ணுகளைக் கடத்துறதும் சர்வ சாதாரணம் ஆயிடிச்சி.”

“கடத்திட்டுப் போயிக் கற்பழிக்கிறது மட்டுமில்ல, துண்டு துண்டா வெட்டிப் போட்டுடறானுக.”

“கிழவிகளைக்கூடத் தூக்கிட்டுப் போயிக் கற்பழிக்கிறாங்க.” சொல்லி முடித்த ஒரு வழுக்கைத் தலையர் சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் சிரிக்காததால் சீரியஸான முகபாவம் காட்டினார்.

இம்மாதிரியான வீண் பேச்சுகள் தொடர்ந்தபோது அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஒரு ஜோல்னா பையர். “ஆளாளுக்கு வெட்டிக் கதை பேசிட்டிருந்தா எப்படி? செல்ஃபோன் வச்சிருக்கிறவங்க போலீஸுக்கு ஒரு ஃபோன் போடுங்கப்பா” என்றார் உரத்த குரலில். அவரிடம் செல்ஃபோன் இல்லையாம்!

“ஃபோன் பண்றது பெரிய காரியம் இல்ல. ‘நீ யாரு? எங்கிருந்து பேசற? பொண்ணுக்கும் உனக்கும் என்ன உறவு? இப்படிக் கேள்வி மேல கேள்வி கேப்பான் போலீஸ்காரன். கேஸ்ல நம்மை முக்கிய சாட்சியா போட்டுடுவான். சொந்த வேலையை விட்டுட்டுக் கோர்ட்டுக்கு நடையா நடக்கணும். ரவுடிங்களும் நம்மைப் பழி வாங்காம விடமாட்டாங்க. நமக்கு எதுக்கய்யா இந்த வம்பு தும்பெல்லாம்” என்று பேசிவிட்டு இடத்தைக் காலி செய்துகொண்டிருந்தார் ஒரு புத்திசாலி.

அவருடைய எதார்த்தமான பேச்சு எல்லோரையும் பாதித்திருக்க வேண்டும்.

கும்பல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது.

நான் நெஞ்சுக்குள் குமுறினேன்.

‘சே, என்ன மனிதர்கள்!’

ஓர் இளம் பெண் பட்டப்பகலில் கடத்தப்படுகிறாள். நூறு ஆண்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!

ஆண்களா இவர்கள்?

ஆண்மை உள்ளவர்களே ஆண்கள். பெண்ணை அனுபவிப்பதற்கு மட்டுமல்ல, உரிய தருணங்களில் அவளின் ‘மானம்’ காப்பதுதான் உண்மையான ஆண்மை.

இந்த மண்ணில் ஆண்மையுள்ள ஆண்களின் எண்ணிக்கை அருகிவிட்டதா?

லட்சத்திற்கு பத்துபேர் தேறுவார்களா?

கோபிக்காதீர்கள்..........அந்தப் பத்தில் நீங்களும் ஒருவரா?

யோசிக்கிறீர்கள்?

ஏதோ கேட்க நினைக்கிறீர்கள் போலிருக்கிறதே.

“இந்த அசம்பாவிதம் எப்போது நடந்தது?” என்கிறீர்களா?

ஆறு மாசம் முந்தி.

“எங்கே?”

சேலத்தில்.

“உனக்கு எப்படித் தெரியும்? செய்தித்தாள்ல படிச்சியா?””

இல்லீங்க. நானே நேரில் பார்த்தேன்.

“அட!...வேடிக்கை பார்த்த நூறு பேரில் நீயும் ஒருத்தன்! இல்லையா?”

அது வந்து.......

“என்னய்யா வந்து போயி, பத்தோட பதினொன்னா நீயும் வேடிக்கைதான் பார்த்திருக்கே. அந்தப் பொண்ணைக் காப்பாத்த நினைக்கலே. அப்போ, நீயும் ஒரு பேடிதான். அதாவது, ஆண்மையில்லாதவன். சரிதானே?”

அது வந்து.....அது வந்து.....வந்து.....



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$










வெள்ளி, 16 செப்டம்பர், 2016

'கர்னாடகா கலவரம்’ -கர்னாடகத்தில் வாழும் எழுத்தாளர் வாஸந்தியின் கருத்து

வாய்ப்புக் கிடக்கும்போதெல்லாம் அங்குள்ள தமிழருக்கு எதிராக அராஜகத்தில் ஈடுபடும் கன்னடத்தாரின் உள்நோக்கம் புரியாமல், இப்போதைய கலவரம் குறித்து ‘நடுநிலை வாதம்’ புரிவோர் கவனத்திற்கு இப்பதிவு.
’தி இந்து[16.09.2016]வில் வெளியான எழுத்தாளர் வாஸந்தியின் கட்டுரை:

நீர் என்பது உணர்வுபூர்வமான விஷயம். வெறுப்பைக் கக்கும் அபாயம் அதனுடன் பிணைந்திருப்பது; ‘தமிழனுக்கு ஒரு சொட்டு நீர் கிடையாது’ என்கிற வாட்டல் நாகராஜின் வாக்கியம் வெறியேற்றுவது.

ஆனால், கன்னட அமைப்புகளே திகைக்கும் வகையில் பிரச்சினை சென்ற வாரம் கைமாறி, தீயாய்ப் பரவி, மாநிலத்தை, அதன் கௌரவத்தைப் பொசுக்கிற்று. ஊரடங்குச் சட்டம் போடும் அளவுக்குத் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமான பெங்களூரு  ரணகளமாகிப் பற்றி எரிந்தது.

தொலைக்காட்சிப் பதிவுகளைப் பார்க்கும்போது, காட்சிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடக்கும் கலவரத்தைவிட மோசமானதாக வயிற்றைக் கலக்கியது. 40 வாகனங்களுக்கு மேல்[100க்கும் மேல் என்பது பின்னர் வந்த ஊடகச் செய்தி] தீக்கிரையாகிப்போனது நம்ப முடியாத அராஜகமாகத் தோன்றியது. அவர்களை அடக்க நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இரண்டுபேர் மரணமடைந்தார்கள். அவர்கள் அப்பாவிகள் என்று செய்தித்தாள் சொல்கிறது. 

அதை ஊதிப் பெருக்குவது அரசியல் மட்டுமல்ல, பெங்களூருவின் பொருளாதார வரைபடத்தை அலைக்கழிக்கும் சமூகவியல் காரணங்களும்தான்.

[பெங்களூருவில்] வன்முறை என்பது கடந்த 30 ஆண்டுகளாகத்தான். 

தமிழ்நாட்டுப் பேருந்துகளைச் சுட்டுப் பொசுக்கியவர்களுக்கும் காவிரிப் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான் இதில் இருக்கும் நகை முரண். தலைக்குத் தலை அம்பலமாக, சட்டத்தைக் கையில் எடுத்து ராட்சச வெறியுடன் அலைந்தவர்கள் எல்லாம் கன்னட இளைஞர்கள். 

அவர்கள் விவசாயம் பொய்த்துப்போன கிராமப் பகுதியிலிருந்து வேலை தேடித் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவுக்கு வந்தவர்கள். ஆட்டோ ஓட்டிகள், பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர்கள், வேலை கிடைக்காமல் அலைபவர்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பெங்களூரு இப்போது இல்லை.

எங்கள் குடும்பம் ஐந்து தலைமுறைகளாக கர்னாடகத்தில் வசிக்கிறது. என்னுடைய தாயும் அவருடன் பிறந்தவர்களும் கன்னடம்தான் படித்தார்கள். என்னுடைய பாட்டி பிசிபேளா ஹூளிஅன்னாவையும் ஒப்பட்டுவையும் செய்து, யுகாதியை, கன்னட வருடப் பிறப்பைக் கொண்டாடுவார். தமிழரும் கன்னடியரும் வெகு இணக்கமாக இருந்த காலம். தமிழர்கள் கன்னட சமூகத்துடன் ஒன்றியிருந்த காலம்.

முகம் மாறிய கன்னடம்

இப்போதிருக்கும் பெங்களூரு தகவல் தொழில்நுட்பத் தலைமுறைக்கும் கன்னடியருக்குமே ஒட்டுறவு இல்லை. தகவல் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி கன்னட முகத்தையே மாற்றிவிட்டது. பூங்காவிலும் மால்களிலும் திரையரங்குகளிலும் கன்னட மொழி காதில் படுவதில்லை. அவர்களுக்கு விளங்காத ஆங்கிலமும் இந்தியும்தான் ஒலிக்கின்றன.

வறண்ட கிராமங்களிலிருந்து வேலை தேடி பெங்களூரு வந்து வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்கள், எல்லா வேலை வாய்ப்புகளையும் வெளி மாநிலத்தவர் அபகரித்துவிட்டதாகக் கருத ஆரம்பித்தனர். தங்கள் வயதொத்த வாலிபர்கள், யுவதிகள் மாதத்துக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் வாங்குவதாகக் கேள்விப்படுகிறார்கள்.

பெங்களூருவின் நிலத்தையெல்லாம் வெளியூர் ஆட்கள் வாங்கி அடுக்குமாடி கட்டுகிறார்கள். தகவல் தொழில்நுட்ப இளைஞர்கள் வேலைக்குச் சேர்ந்த ஓர் ஆண்டுக்குள் ஃபிளாட் வாங்குகிறார்கள். கப்பல் போல வாகனம் வாங்குகிறார்கள்.

அவர்கள் வருகையால் அடுக்கு மாடிகள் பெருகிவிட்டன. நிலம் நீர் வரண்டுவிட்டது. குடிசைப் பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்கும்போது, பணம் உள்ளவர்களுக்கு டாங்கரில் நீர் செல்கிறது.

கோபத்தின் வடிகாலா அராஜகம்?

பெங்களூருவின் ஒரு பகுதி அக்கினிக் குண்டமாக மாறிவருவதைச் சமூகவியலாளர்கள் கவலையுடன் கவனித்துவருகிறார்கள். கன்னட நடிகர் ராஜ்குமார் இறந்த அன்றும் மறுநாளும் இப்படித்தான் ஒரு வெறியாட்டம் நடந்தது. துக்கம் கோபமாக, வெறியாக உருப்பெற்றது. பன்னாட்டு நிறுவனங்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. தமிழ்நாட்டு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

நான் அப்போதுதான் சென்னையிலிருந்து அங்கு குடிபெயர்ந்திருந்தேன். தமிழ்நாட்டுப் பதிவெண் உடைய என் காரை காரேஜில் மூடி வைக்க வேண்டியிருந்தது.

இந்த வெறியர்களுக்கு எந்த உணர்வுபூர்வமான விஷயமும், அவர்களது உள்ளார்ந்த கோபத்துக்கு வடிகாலாகிவிடுவதுதான் சோகம். இது வெறும் நீர்ப் பிரச்சினை இல்லை. ஒரு சமூகவியல் பிரச்சினை. அதன் தீவிரத்தை உணராமல் கன்னட அமைப்புகளும் அரசுகளும் அரசியல் செய்தால் கர்னாடகத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே ஆபத்து. ஜனநாயகப் பண்புகளுக்கு ஆபத்து.
===============================================================================
வருகை புரிவோர் மிக எளிதாகக் கட்டுரையை வாசிப்பதற்குப் பத்திகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளேன். சில கருத்துகளின் அதி முக்கியத்துவத்தை அறிவதற்காக அவற்றிற்கு வண்ணம் சேர்த்துள்ளேன்.

கட்டுரையின் ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான ‘வாஸந்தி’ அவர்கள் என்னை மன்னித்திட வேண்டுகிறேன்.

அவருக்கும் கட்டுரையை வெளியிட்ட, ‘தி இந்து[ 16.09.2016]’வுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

வியாழன், 15 செப்டம்பர், 2016

கர்னாடகக் கலவரம் குறித்த, கவிஞர் முத்துநிலவனின் கருத்துடன் சில முரண்பாடுகள்

‘கர்னாடகாவில் நடக்கும் வன்முறைக்கு எதிர்வினை புரியாமல் தமிழ்நாடு அமைதி காப்பதா என்று நம்மவர் சிலர்[அவர்களில் நானும் ஒருவன்தான்] ஷோல்டரைத் தூக்குகிறார்கள்’என்று, ‘பெங்களூரு - இன்னா செய்தாரை ஒறுத்தல்...?’ என்னும் தலைப்பிலான பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர் முத்துநிலவன் அவர்கள்.
கர்னாடகாவில் காலங்காலமாக நம் இனத்தான் அடிஉதை படுவதைப் பொறுக்கமாட்டாமல் நம்மில் சிலர்[சிலர் மட்டுமே] ஷோல்டரைத் தூக்குவது கவிஞருக்கு  இளக்காரமாகப்படுகிறது.

"தமிழா எழு! கன்னட வெறியரை வீழ்த்த எழு” என்று சூளுரைப்பவர்களைத் ‘தமில்க்கவிஞர்கள்’ என்று கிண்டலடிக்கிறார்!

இருக்கட்டும். இவ்வகையில் அவர் மகிழ்ச்சி பெறுவதைத் தடுக்க நாம் யார்?

பதிலடி தருவதென்றால் என்னவெண்று புரியவில்லை என்கிறார். உண்மையிலேயே புரியவில்லையா?!

இங்கே நம்மவர் ஒரு சில வாகனங்களை மட்டுமே சிதைத்த மறு நாளே கன்னடத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கும் லாரிகளுக்கும் தீயிட்டுக் கொளுத்தியதோடு, ஓட்டுநர்களை அம்மணமாக்கியும் கைகூப்பிக் கெஞ்ச வைத்தும் துடிக்கச் செய்தானே அதுக்குப் பேர்தாங்க ‘பதிலடி’. 

அறிவிலித்தனத்துக்குப் பதிலடியாக நாமும் அறிவிலிகள் ஆகக் கூடாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் முத்துநிலவன் அவர்கள்.

தமிழன் இதற்கு முன்பு[இப்போது அறிவிலி ஆனதாகவே வைத்துக்கொள்ளுங்கள்] எப்போதாவது அறிவிலி ஆகியிருக்கிறானா என்பது பெங்களூரின் பழைய வரலாற்றைப் புரட்டினால் தெரியும். 

பெங்களூரில் என் மகன் 20 ஆண்டுகளுக்கு மேலாகக் குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறான். மிகப் பலமுறை அங்கு சென்று திரும்பிய அனுபவம் எனக்கு உள்ளது[உடனடியாக என் புகைப்படத்தை இந்த வலைப்பக்கத்திலிருந்து நீக்க வேண்டும். காரணம் பயம்தாங்க]. அப்போது பெற்ற அனுபவங்களுடன் கேட்டறிந்த/ படித்தறிந்த தகவல்களைக் கொண்டு இதை எழுதுகிறேன்.

1991இல் இன்றைய முதல்வரும் அப்போதைய முதல்வருமான செல்வி ஜெயலலிதா அவர்கள், இதே காவிரிநீர்ப் பிரச்சினைக்காக உண்ணா நோன்பு[அமைதியான முறையில்] மேற்கொண்ட போது, அங்கே மிகப் பெரும் கலவரம் மூண்டது. அதன் விளைவுகளை, கவிஞர் மேற்கோள் காட்டியிருக்கும் பிரபல எழுத்தாளர் வா. மணிகண்டன் அவர்களே வர்ணித்திருக்கிறார். படியுங்கள்[மணிகண்டன் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்].....

#தொண்ணூறுகளில் காவிரிப் போராட்டம் தலையெடுத்த போது கோபியில் வசித்தவர்களுக்கு அதன் ஆழ அகலங்கள் தெரிந்திருக்கும். தஞ்சை வாசிகளுக்கும் தெரிந்திருக்கக் கூடும். போலீஸ் தடியடிகளிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு பயந்து ரத்தம் தெறிக்க ஓடியவர்களையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தோட்டமும் காடும் சல்லிசாகக் கிடைக்கிறது என தாளவாடி மலையைத் தாண்டிச் சென்று கன்னட தேசத்தில் பயிர் செய்தவர்கள் அறுவடைச் சமயத்தில் அத்தனையையும் விட்டுவிட்டு ‘தப்பித்தால் போதும்’ என்று இரண்டு மூன்று துணிமணிகளை வாரியெடுத்துக் கொண்டு வந்த கதையெல்லாம் இன்னமும் பண்ணாரி காட்டு காற்றில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன# http://www.nisaptham.com/2016/09/blog-post_6.html

இந்தக் கலவரம் மூள்வதற்கு முன்போ பின்போ தமிழன் அறிவிலியா நடந்துகொள்ளவில்லை; புத்திசாலியாகத்தான் நடந்துகொண்டான்; அதன் விளைவாக, அடிஉதை பட்டதோடு ஏராள பொருள் இழப்புக்கும் ஆளானான் என்பதை நண்பர் அறியவில்லை போலும். நாதியற்று உதைத்து விரட்டப்பட்டவர்களில் என் உறவினர்கள்/ ஊர்க்காரர்கள் சிலரும் அடங்குவர் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சியின் போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் குடிநீத் தேவைக்கான திட்டம் வகுக்கப்பட்டுச் செயல்படுத்த முயன்றபோதுகூட, தமிழன் புத்திசாலியாகத்தான் நடந்துகொண்டான். கன்னடத்தான், வழக்கம்போல, அடி உதை என்று ஆரம்பித்த நிலையில்தான், தமிழக இளைஞர்கள் சிறு சிறு தாக்குதல்களைத் தொடங்கினார்கள்.

தமிழினத் தலைவரான கலைஞர்,  “அவர்களும் நாமும் சகோதரர்களே” என்பதாக அறிக்கைகள் விட்டு, முளைவிட்ட போராட்டத்தை ஆரம்ப நிலையிலே வேரோடு கிள்ளி எறிந்துவிட்டார்கள்; நடுவணரசு தலையிட்டால் தன் பதவி பறிபோகும் என்று பயந்துவிட்டதாக நான் சொல்லவில்லை.

அடுத்து,

நீங்கள் மேற்கோள் காட்டுகிற எழுத்தாளர் வா. மணிகண்டனின் பதிவுகளிலிருந்தே கன்னடர்களின் மனப்போக்கைப் படம் பிடிக்கிற சில கருத்துகளையும் இங்கே தருகிறேன்.

#...கன்னட பதிவு எண் கொண்ட ஈருருளியில் சென்றிருந்தேன்..... 
....வீட்டில் நிற்கும் கார் ஞாபகம் வந்தது. தமிழ்நாட்டு பதிவு எண் வண்டி அது. எலெக்ட்ரானிக் சிட்டியில் அந்தப் பையனை இறக்கிவிட்டு வந்து பதிவு எண் வெளியில் தெரியாதபடிக்கு மூடி வைத்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினேன். நாளைக்கு முதல் வேலையாக வீட்டில் கன்னட கொடி ஒன்றை நட்டு வைக்க வேண்டும்.

விவசாய பூமிகளை அழிப்பதும், டிராக்டர்களை அடித்து நொறுக்குவதும், தமிழ் விவசாயிகளின் கால்நடைகளை நாசம் செய்வதும் நிகழ்ந்தால் அவர்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் கரைந்து போய்விடும்# http://www.nisaptham.com/2016/09/blog-post_6.html

இப்படியெல்லாம் மணிகண்டன் அவர்களைச் சொல்ல வைத்தது எது? அவர் பெற்ற அனுபவங்களா, கேட்டறிந்த தகவல்களா?

அவர்,  தம்முடைய இன்னொரு  பதிவில்,

#டிரினிட்டி மெட்ரோ நிலையத்திற்கு முன்பாக லிவிங் ஸ்மைல் வித்யா அமர்ந்திருந்தார். போக்குவரத்து வசதி இல்லாமல் அமர்ந்திருக்கிறாரோ என நினைத்துப் பேசினேன் ‘அய்யோ தமிழில் பேசாதீங்க’ என்று சிரித்தபடியே சொன்னார். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அங்கு ஓரிடத்தில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறாரக்ளாம். அதிகமாகப் பேசிக் கொள்ளாமல் நகர்ந்துவிட்டேன்#  என்கிறார். http://www.nisaptham.com/2016/09/blog-post_84.html

இந்த அச்ச உணர்வு அங்குள்ள தமிழர்களுக்கு எப்போதும் உண்டுதானே? வேறு எந்தவொரு மாநிலத்திலும் வேறு எந்தவொரு இனத்தானும் இப்படியொரு இழிநிலைக்கு ஆளாகியிருக்கிறானா? இல்லையே!

தமிழில் பதிவெண் கொண்டிருந்த என் மகனின் கார் ஒரு பைக்கின்மீது உரசிச் சிறு சேதம் விளைவித்ததற்காகக் கார்க் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியது ஒரு கன்னட வெறிக் கும்பல். போலீசுக்கும் போகவில்லை. போனால் உதைப்பான் என்ற பயம். பயம் தவிர வேறில்லை. இந்தப் பயம் அங்குள்ள தமிழருக்கு எப்போது இருந்துகொண்டிருக்கிறது என்பதை நண்பர் மணிகண்டன் அறிவார் என்று நம்புகிறேன்.

இந்தப் பயம் தமிழனின் மனதில் நிரந்தரமாய் இடம்பெற்றுவிடக் காரணமானது தமிழனின் அறிவின்மையா, கர்னாடகத்தானின் தமிழன் மீதான பொறாமையா?

பம்பாயில் தமிழன் தாக்கப்பட்டபோதுகூட,  அறிவிலியாகத் தமிழன் நடந்துகொள்ளக்கூடாது என்று  அகிம்சாவாதிகள் தமிழனுக்கு அறிவுரை சொல்லியிருப்பார்கள். அதனால்தான் அவன் எதிர்த்துப் போராடவில்லை; அடி உதை பட்டே பழகிவிட்டான்.

தமிழில் பெயர்ப்பலகை வைக்கக் கூடாது; புதிய திரைப்படம் குறிப்பிட்ட நாட்கள் வரை வெளியிடக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளைத் தமிழன்மீது கன்னடத்தான் திணித்திருப்பது வேறு எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அட்டூழியம். கட்டுப்படுத்தும் துணிவு அவனுக்கு எப்படி வந்தது?

எதிர்வினை இல்லை என்பதால்தான்.

அந்த எதிர்வினையை அங்குள்ள தமிழனால் நிகழ்த்த முடியாது என்பது உண்மைதான். அங்குள்ள அத்தனை அரசியல்வாதிகளும், ஆட்சி புரிபவர்களும் இன வெறியர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதே காரணம். இங்கோ காந்திய நெறி பரப்புவோரின் அகிம்சா போதனை!

தமிழ் இளைஞனைக் கன்னடத் தடியர்கள் அடித்து மண்டியிட வைத்ததே இந்தக் கலவரங்களுக்கான மூல காரணம். எவரும் மறுக்க முடியாது. நடிகர்களைக் கிண்டல் செய்ததால்தான் அடித்தார்கள் என்று சமாதானப்படுத்துவது எவ்வகையில் நியாயம்?

நம்மில் சிலர், அடித்தவனை அங்கே போய் அடிக்க வேண்டுமே தவிர இங்குள்ளவர்களைத் தாக்கக் கூடாது என்கிறார்கள். இங்கிருந்து பல்லாயிரக்கணக்கில் திரண்டுபோய், போலீசாரின் கட்டுக்காவலையும் கடந்து, குற்றவாளிகளைத் தேடிப்பிடித்துத் தண்டிப்பது சாத்தியமே இல்லை என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள் அதனால், கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியுமா? அது தமிழனின் தன்மானத்தைப் பாதிக்காதா?

இவ்வாறெல்லாம் சிந்தித்ததன் விளைவுதானோ என்னவோ, நம் இளைஞர்கள் லேசான தாக்குதலைத் தொடங்கினார்கள். பெருந்தன்மையாளர்களின் அறிவுரை /அறவுரை அவர்களையும் முடக்கிவிட்டது.

அறிவுரைகளும் அறவுரைகளும் தேவைதான். யாருக்கு?

உதைபடுபவனுக்கல்ல; உதைப்பவனுக்குத்தான்.

கீழ்க்காணும் முகவரி கொண்ட பதிவையும் படியுங்கள். பதிவருக்கு என் நன்றி.
ttps://villavan.wordpress.com/2016/09/15/கர்நாடகாவிடம்-இருந்து-நா/
=================================================================================
கன்னடர் நிலையை ஆதரித்து ‘நான் மணி’ என்பவர், நீண்ட பதிவொன்றை எழுதியிருக்கிறார்; ‘தொடரும்...’ போட்டிருக்கிறார். [முகவரி தர விரும்பவில்லை]

இதற்கான துணிவை இவர்[எந்த இனத்தவரோ தெரியாது] பெற்றது எவ்வாறு என்பது ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்...’என்னும் குறளை மேற்கோள் காட்டும் நண்பர்களுக்குப் புரியாதா என்ன?!

ஜெய் கன்னடர்! ஜெய் கர்னாடகா!!
================================================================================
ஒரு முறை மட்டுமே பிழை திருத்தம் செய்தேன். பிழை காணின், வழக்கம்போல் பொறுத்தருள்க.













செவ்வாய், 13 செப்டம்பர், 2016

கர்னாடகா கலவரம்!...தும்பைத் திரித்துவிட்டு வாலைப் பிடித்த கதை!!

கடந்த மூன்று நாட்களாக எனக்கு உடல்நலம் இல்லை. இருந்தும், ஆற்றாமை காரணமாக இந்தப் பதிவை எழுதுகிறேன். வாசியுங்கள்.
கர்னாடகாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கும், அடிக்கடி அங்கு சென்று வருபவர்களுக்கும் தெரியும், நகர் முழுதும் தேடினாலும்[சந்துபொந்துகள் உட்பட] தமிழில் ஒரு பெயர்ப்பலகையைக்கூடக் காண முடியாது என்பது. கன்னடம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இருக்கும். இந்தியிலும் இருக்கக்கூடும். நான் அறியேன்.

இந்த நிலை, மிகப் பல ஆண்டுகளாக நீடிப்பது.

இதற்கு மாறாக, ஒசூர், சேலம், சென்னை என்று தமிழகத்தின் பல ஊர்களில் கன்னடப் பெயர்ப்பலகைகளை நம்மால் காண முடியும். மாறுபட்ட இந்த நிலை, நம் தமிழ் ஆர்வலர்களுக்கும் நம் தலைவர்களுக்கும் தெரியாததல்ல.

இதை வெகு அற்பமான பிரச்சினை என்று கருதாமல், இதை எதிர்த்துச் சிறு போராட்டமேனும் நாம் நடத்தியிருக்கலாமே. ஏன் செய்யவில்லை? கண்டனம் தெரிவிப்பது போன்ற சப்பைக் காரணங்களை முன்வைக்காமல், தமிழகத்தில் உள்ள அத்தன கன்னடப் பெயர்ப்பலகைகளையும் அழித்திருந்தால் அந்த மாநிலம் வழிக்கு வந்திருக்கக்கூடும்,

வராவிட்டாலும் ஒன்றும் இழப்பில்லை. அவன் அகற்றினான் ; நாமும் அகற்றிவிட்டோம் என்ற திருப்தியாவது இருந்திருக்கும். இதை உரிய நேரத்தில் செய்திருந்தால், தமிழன் மான ரோசமுள்ளவன் என்ற எண்ணம் அவர்களின் மனதில் ஆழப் பதிந்திருக்கும். தவறு செய்துவிட்டோம்.

நம் இப்போதைய முதல்வர், 1991[?]ல் இதே காவிரிநீர்ப் பிரச்சனைக்கு உண்ணாவிரதம் இருந்தபோது, தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரும் கலவரம் மூண்டது.

நம்மவர்கள், நகை நட்டுகளையெல்லாம் விவசாய நிலங்களில் புதைத்துவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று இரவோடு இரவாகத் தமிழகத்துக்கு ஓடி வந்தார்கள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அவர்களுக்கு ஆதரவாக இன்று போலவே வெறும் கண்டன அறிக்கைகளை விடுத்ததோடு தம் கடமையை முடித்துக்கொண்டார்கள் நம் தலைவர்கள்.

நம் இனத்தவரின் கோழைத்தனம் அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது. அப்புறம்.....

அப்புறம் என்ன இரு இனத்தாரிடையே எழும் சிறு சிறு பிரச்சினைகளுக்குக்கூட [திரைப்பட அரங்கை நொறுக்குவது; தேவாலயங்களில் தமிழில் வழிபடுவதைத் தடுப்பது; பத்திரிகை அலுவலகங்களில் வைக்கப்பட்ட தமிழ்த் தட்டிகளை அகற்றுவது என்று அத்தனைக்கும்   ஆயுதம் தூக்க ஆரம்பித்துவிட்டான் கர்னாடகத்தான்.

ஆரம்பத்தில் கண்டனம் தெரிவிப்பது; அப்புறம் அவனிடம் சரணாகதி அடைவது என்பதை நாமும் வழக்கப்படுத்திக்கொண்டோம்.

நம் தமிழ் இளைஞனை நாய் அடிப்பதுபோல் அவர்கள் அடித்த காட்சி இப்போதும் நினைத்தால் நெஞ்சு நடுங்குகிறது, அதற்குப் பதிலடியாக உணர்ச்சியுள்ள நம் இளைஞர்கள் அவர்களின் வாகனக் கண்ணாடிகளை நொறுக்கினார்கள்.  [அவர்களையும் நம் அம்மா கைது செய்துவிட்டார்கள்.]

அதற்குப் பதிலடியாக, அவர்கள் செய்தது என்ன? ஊடகங்கள் வாயிலாக நம்மவர் எல்லோரும் அறிந்திருப்பார்கள். விருதாச்சலத்தான் அவர்களின் அண்மைப் பதிவின் முகவரியை இங்கே இணைத்திருக்கிறேன்.
http://vriddhachalamonline.blogspot.in/2016/09/sos_12.htmlhttp://vriddhachalamonline.blogspot.in/2016/09/sos_12.html

அன்றைய போர்க்களமோ, இன்றைய இருதரப்பு மோதலோ, எப்படியும் சமரசம் செய்யப்பட்டுவிடும் என்பது உறுதியாதலால், எதிரிக்குப் பலத்த சேதம் விளைவிப்பதில் நாம் முந்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அடுத்த பிரச்சினையில் மோத நேரும்போது  எதிரி நம்மோடு மோதுவதற்கு அஞ்சுவான். இந்த மோதல் உத்தியெல்லாம் நம் தலைவர்கள் அறியாததல்ல. ஆனாலும்....

“கண்டனம்   தெரிவிக்கிறோம்”.
“வருந்துகிறோம்.”
“அந்த அரசு எம் மக்களுக்குப் பாதுகாப்புத் தரவேண்டும்.”
“நடுவணரசு தலையிட வேண்டும்.”

என்றிப்படியான அறிக்கைகளை விடுவதிலேயே திருப்தி கொள்கிறார்கள்.

எது எப்படியோ, கன்னடக்காரன் தமிழகத்தில் புகுந்து தமிழனைத் தாக்கும் நாள் வெகு தூரத்தில் இல்ல!!!
============================================================================== 
படங்கள்: விருத்தாசலத்தான்   அவர்களின் பதிவிலிருந்து எடுத்தவை. அவருக்கு நன்றி.

சனி, 10 செப்டம்பர், 2016

சேதி தெரியுமா...தமிழா, உனக்கு ‘இந்தச் சேதி’ தெரியுமா?

பெங்களூரில் தர்மேந்திரா என்னும் கன்னடக்காரன்[ரக்‌ஷன வேதிகே], “...தமிழர்களை வீடு புகுந்து தாக்குவோம்” என்று பேசியிருக்கிறான்.
#கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக[காவிரி நீர்ப் பிரச்சினை], பெங்களூருவில் உள்ள நாளிதழ் அலுவலகங்களில் தமிழில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகைகள் நீக்கப்பட்டன.

இதனிடையே கன்னட ‘ரக்‌ஷன வேதிகே’ அமைப்பைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர், கன்னடத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தைக் கண்டித்துக் கன்னடர்கள் நடத்தும் போராட்டத்துக்குக் கர்னாடகாவில் வசிக்கும் தமிழர்கள் முழு ஆதரவு தர வேண்டும். வீதிக்கு வந்து போராட வேண்டும். இல்லையென்றால், 1991இல் நடந்த காவிரிக் கலவரத்தில் தமிழர்களை வீடு புகுந்து தாக்கியதைப் போலத் தாக்குவோம்; தமிழர்களின் தொழில் நிறுவனங்களை அழிப்போம்” என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார்#    -இது இன்றைய பத்திரிகை[தி இந்து, பக்.11]ச் செய்தி.

தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் தமிழன் இருக்கிறானா?

இருந்தால்.....

அவனுக்குச் சூடுசொரணை இருக்கிறதா?

இருந்தால்.....

கர்னாடகத் தமிழனைக் காப்பாற்ற அவன் என்ன செய்யப்போகிறான்?!
===============================================================================

கூண்டோடு கைலாசம்!!!.....வரலாற்று நிகழ்வு!

அவசரச் செய்தி! கீழ்க்காணும் முகவரிக்குச் செல்க.

http://kadavulinkadavul.blogspot.com/2016/09/blog-post_45.html

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

“நான் யார்?”.....பெரியார்.

பெரியார் குறித்த சில தவறான புரிதல்களை அகற்ற இப்பதிவு உதவக்கூடும். தவறாமல் படியுங்கள்.

#எனக்கு மொழி அபிமானம் இலக்கிய அபிமானம் எல்லாம் கிடையாது. வெறும் மனிதாபிமானம்தான் உண்டு. அதுவே எனக்கு அதிமுக்கியம் ஆகும் -பெரியார் ஈ.வெ.ரா. 113ஆவது பிறந்த நாள் பன்மொழிச் சிறப்பு மலர்: சிந்தனையாளரின் வெளியீடு, 1991, பக்.55

[ஒருவருடைய பெயரின் முன்னால் மரியாதை அடைமொழியாக, ‘ஸ்ரீமான்’ என்று குறிப்பிட்டுவந்த பெரியார், 1927க்குப் பின்னர், ‘திரு, திருமதி, செல்வி, தோழர் என்பன போன்ற தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தினார்; ‘அக்கிராசனர் அவர்களே’, ‘சகோதரர்களே...சகோதரிகளே’ என்று விளித்துப் பேசியவர், ‘தலைவர் அவர்களே...தோழர்களே’ என்று பேசத் தொடங்கினார்]

#எனக்குச் சிறு வயது முதற்கொண்டே சாதியோ மதமோ கிடையாது. அதே போல, கடவுளைப் பற்றியும் மனதில் நம்பிக்கையோ பயமோ கொண்டிருந்ததில்லை.

எனது வாழ்நாளில் என்றைக்காவது சாதி மதத்தையோ கடவுளையோ உண்மையாக நம்பியிருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன்.....எப்போதிருந்து இவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன். கண்டுபிடிக்கவே முடியவில்லை#

#நாத்திகன் தன் பகுத்தறிவுக்குச் சரி என்றும், உண்மை என்றும் பட்டதை மட்டும்தான் நம்புகிறான்; அதன் அடிப்படையில், மிக ஒழுங்காக நடக்க விழைகிறான்#

#எமது பத்திரிகையின்[குடியரசு] நோக்கத்தை அறிய விரும்புவோர்க்கு.....
நமது நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், சமய வளர்ச்சிக்காகவும் இதன் வாயிலாக இடையறாது உழைத்துவருவோம்...[தம் 40ஆவது வயதுவரை{1925களில்} சமய வளர்ச்சியில் அக்கறை கொண்டிருந்திருக்கிறார்]#

#என்னை ராமசாமி நாயக்கர் என்று  சாதிப் பெயரைச் சேர்த்து அழைக்கக் கூடாது. மரியாதைக்காகவோ, மரபாகவோ, ஏன், மறதியாகவோகூட அழைக்கக் கூடாது. தோழர் ராமசாமி என்றுதான் அழைக்க வேண்டும் -குடியரசு, 13.11.1932#

#மோட்சம் எப்படிப் பேராசையின் பிரதி பிம்பமோ, அதுபோலவே நரக உணர்ச்சியும் அடிமைத்தனத்துடையவும் பயந்தாங்கொள்ளித்தனத்துடையவுமான பிரதி பிம்பம் ஆகும்#

#நான் நாத்திகன் அல்லேன். மாறாக, தாராள எண்ணம் உள்ளவன்#

#[கடவுளைக் கைவிட முடியாதவர்கள்] காசு பணம் செலவு செய்யாமல் வணங்கக்கூடிய கடவுளை மூடநம்பிக்கைக்கு இடமில்லாத வகையில் வணங்கலாம்.#

#பக்தியை ஒருவன் இழந்தால் அது தனி மனித இழப்பு. ஒழுக்கத்தை ஒருவன் இழந்தால் அது சமுதாயத்திற்கே இழப்பு#

# எதையும் நன்றாக ஆராய்ச்சி செய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளி, கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது மனிதனின் கடமையாகும். அதுவே பகுத்தறிவாகும்#

#புத்த தர்மம் என்பது புத்தி தர்மம். அதுதான் மனித தர்மம் ஆகும்#

#ஒருகாலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனித அறிவு வளரவில்லை என்று பொருள்#
===============================================================================
டாக்டர் ஜெரி அவர்களின், ‘மனிதம்...’ என்னும் நூலிலிருந்து தொகுத்தது. நீதி வெளியீடு, சென்னை; முதல் பதிப்பு: 1994.





புதன், 7 செப்டம்பர், 2016

ஓர் ‘அரைகுறை’ப் பகுத்தறிவாளனின் மனசாட்சி!

நம்புகிறவர்களுக்கு இது ஓர் அனுபவப் பகிர்வு. நம்பாதவர்களுக்கு..... வெறும் கற்பனைக் கதை! இதை நீங்கள் ஏற்கனவே படித்திருக்கவும்கூடும்!
து நடந்து மிகப்பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது, சென்னைக் கல்லூரி ஒன்றின் மாணவன் நான்.

விடுமுறையைச் சொந்தக் கிராமத்தில் கழித்துவிட்டு, அன்று சென்னை திரும்ப இருந்தேன்.

“பரமு.....” அப்பா அழைத்தார்.

“சொல்லுங்கப்பா.”

“மெட்றாஸ் போனதும் கடுதாசு போடு. மறக்காம திருப்பதி போயி ஏழுமலையானைத் தரிசனம் பண்ணிட்டு இதை உண்டியலில் போட்டுடு” என்று என்னிடம் இரண்டாயிரம் ரூபாயையும் நீட்டினார்.

அப்பா என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். மூன்று பொட்டைக் கழுதைகளுக்கு [அப்பா அடிக்கடி கையாண்ட வசவு வார்த்தைகள் இவை] அப்புறம், அறிந்த அறியாத அத்தனை கடவுள்களுக்கும் வேண்டுதல் வைத்துப் பெற்ற ‘தவப் புதல்வன்’ நான் என்பது காரணம்.

அவர் மனம் நோகும்படியாக நடந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லைதான். இருப்பினும், பள்ளிப் பருவத்திலேயே ஒரு தமிழாசிரியரால் பக்குவப்படுத்தப்பட்ட என் பகுத்தறிவு மூளை இப்படிக் கேட்டது..........

“எதுக்கு உண்டியலில் போடச் சொல்றீங்க? சாமியா செலவு பண்ணுது?”

அப்பாவின் முகம் சுண்டிச் சிவந்துபோனது; சொன்னார்: “லாபம் கிடைச்சா போடுறேன்னு சாமிகிட்ட வேண்டிகிட்டேன். சாமி கருணை காட்டிச்சி. சொன்ன வாக்குத் தவறாம நடந்துக்க நினைக்கிறேன். உனக்கு இஷ்டம் இல்லேன்னா சொல்லிடு. நானே போய்ப் போட்டுட்டு வர்றேன்” என்று கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொள்ளக் கை நீட்டினார்.

நான் தொடர்ந்து வாதம் புரிவதற்கான ஆயத்த நிலையில் இருந்தாலும் பணத்தைத் திருப்பித் தராமல், சென்னை செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன்.

பரம்பரை விவசாயக் குடும்பம் எங்களுடையது. அப்பா விவசாயத்தை ஆள் வைத்துக் கவனித்துக்கொண்டே பக்கத்து டவுனில் தானிய மண்டி வைத்து வியாபாரமும் செய்து வந்தார்.

அவருக்குத் தெய்வ பக்தி அதிகம். பக்திக்கு முன்னால் ஐந்தாறு ‘மிக’ போடுவது பொருத்தமாக இருக்கும்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை ‘லாப நட்ட’க் கணக்குப் பார்ப்பார். கிடைக்கும் லாபத்தில் 5% ஐ ஏழுமலையான் கோயில் உண்டியலில் போட்டுவிடுவார். நான் சென்னையில் இருந்ததால், முதல் தடவையாக அந்தக் கடமையை என்னிடம் ஒப்படைத்திருந்தார்.

நான் சென்னை போய்ச் சேர்ந்ததும் தந்தை சொல்படி கடிதம் எழுதினேன்; திருப்பதியும் போனேன்; கோயில் குளமெல்லாம் ‘சுற்றிப்பார்த்துவிட்டு’, லட்டு[லட்டும் எள்ளுருண்டையும் எனக்கு ரொம்பப் பிடித்தமானவை] வாங்கி ருசித்துச் சாப்பிட்டேன். உண்டியலில் பணம் மட்டும் போடவில்லை! என் பகுத்தறிவு போட விடவில்லை.

பணத்தை என் வங்கிக் கணக்கில் பத்திரப்படுத்தினேன்!

அதற்கப்புறமும் இந்த என் கைங்கரியம் தொடர்ந்தது; தொகையும் பெருகிக்கொண்டே போனது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். வியாபாரத்தில் அப்பாவுக்கு நஷ்டம் ஏற்பட்டால் இந்தச் சேமிப்பு உதவும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்தத் தப்பான காரியத்தில் ஈடுபட்டேன்.

கடவுள் நம்பிக்கை இல்லயென்றாலும், மனதில் அவர் இருந்த இடத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு அதில் பெற்ற தகப்பனை அமரவைத்து வழிபட்டவன் நான். அவருக்கு எதிராக ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்தியதில்லை.

எதிர்பாராத வகையில், நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகப் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி மனம் ஒடிந்து போனார் என் தந்தை.

பூர்வீக நிலத்தை விற்றேனும் கடனை அடைக்க வேண்டிய நெருக்கடியான நிலையில், பணம் சேமித்த வகையைச் சொல்லி என்னிடம் இருந்த சேமிப்புப் பணத்தைக் கொடுத்துக் கடனை அடைக்கச் சொன்னேன்.

நான் செய்தது தப்பா சரியா என்பது பற்றி வாயே திறக்காமல், “சந்தோஷம்ப்பா” என்று பணத்தைப் பெற்றுக்கொண்டவர் சற்றே தாமதித்து, “நான் அப்பப்பக் குடுத்த பணத்தை நீ ஒழுங்கா உண்டியலில் சேர்த்திருந்தா எழுமலையான் நஷ்டம் வராம காப்பாத்தியிருப்பான்” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னார்.

அப்புறம் ஒருநாள், அவரே திருப்பதி சென்று நான் கொடுத்த ஒட்டுமொத்தத் தொகையையும் கோயில் உண்டியலில் போட்டுவிட்டுத் திரும்பினார். 

அதற்கப்புறமும், ஒரு மகனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர் செய்யத் தவறியதில்லை என்றாலும், ஆர அமற மனம் திறந்து என்னுடன் பேசியதே இல்லை.

அவருடைய அறுபதாவது வயதில் இது நடந்தது. அறுபத்தைந்தில் காலமானார்.

அவர் சொன்னது போல, உண்டியலில் பணம் போட்டிருந்தால் ஏழுமலையான்  காப்பாற்றியிருப்பார் என்பதில் இன்றளவும் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், பாசமிகு தந்தையின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக நான் நடந்துகொள்ள இல்லையே என்னும் வருத்தம் என்னுள் உறைந்து கிடக்கிறது.
*******************************************************************************











திங்கள், 5 செப்டம்பர், 2016

வயிற்றில் டாலர் கட்டினால் நோய் குணமாகுமா?!

டத்தில் இருக்கும் பெண்மணியின் பெயர்: ‘மோனிகா பெஸ்ரா’.

கொல்கத்தாவிலிருந்து 400 கி.மீ.தொலைவிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் வயிற்றில் முற்றிய புற்றுநோய். எத்தனையோ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். அப்புறம் ஒரு நாள்[ஒரே நாளில்...சில மணி நேரங்களில்] குணமானதாம். எப்படி?

அவரே சொல்கிறார்[தி இந்து, 05.09.2016].....

“ஒரு நாள் அன்னை தெரசாவின் ‘மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி’யில் இருந்து வந்த சகோதரிகள் என் வயிற்றில் ஒரு டாலர் கட்டிவிட்டனர். சில மணி நேரங்களில் வயிற்று வலி போய்விட்டது. தூங்க முடியாமல் இருந்த நான் நன்றாகத் தூங்கினேன்.

அதிகாலை ஒரு மணிக்குக் கண் விழித்தேன். புற்றுநோய் மறைந்துவிட்ட உணர்வு தோன்றியது. வயிற்றிலிருந்த வீக்கமும் காணவில்லை. அருகிலிருந்த பெண்களிடம் சொன்னேன். வீக்கம் இல்லாததை அவர்களும் உறுதிப்படுத்தினார்கள்.”

மூளை பாதிக்கப்பட்டுக் கோமாவில் இருந்த பிரேசில் நாட்டவர் ஒருவரும் அன்னை தெரசாவை வேண்டிப் பிரார்த்தனை செய்ததால் தான் குணமடைந்ததாகத் தெரிவித்தாராம்.

“இந்த இரண்டு அற்புதங்களையும் பல்வேறு வகைகளிலும் ஆய்வு செய்து உறுதி செய்த பின்னர் அன்னை தெரசாவுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்படும்” என்று கடந்த மார்ச் மாதம் போப் பிரான்சிஸ் அறிவித்ததாகவும், அதன்படி இப்போது பட்டம் வழங்கப்பட்டதாகவும் பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன.

மேற்சொன்ன அற்புதங்கள் நிகழ்ந்தது உண்மையாயின், டாலர்கள் கட்டியே தீராத எத்தனையோ நோய்களைத் தீர்க்க முடியுமே. செய்வார்களா?

“இவற்றில் அற்புதங்கள் ஏதுமில்லை; மருத்துவ அறிவியலே காரணம்” என்கிறார்களாம் மருத்துவ அறிஞர்கள். அவர்களேனும், தாமாக முன்வந்து புற்றுநோய் குணமானதற்கான  காரணங்களை மக்களுக்கு விளக்கிச் சொல்வார்களா?

இது நம் விருப்பம். ஆனால், இவற்றில் எந்த ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பது நாம் அறிந்ததே.

அனாதைகளாகக் கைவிடப்பட்டுத் தெருவில் திரியும் குழந்தைகள், நெருங்குவதற்கோ தொடுவதற்கோகூட நாம் அஞ்சுகிற தொழுநோயாளிகள், எயிட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள், காச நோயாளிகள் என்று சமூகத்தால் கைவிடப்பட்ட அத்தனை ஏழை எளியவர்களுக்காகவும்  தம் வாழ்வை அர்ப்பணித்தவர் அன்னை தெரசா; இதன்மூலம் புகழின் உச்சியைத் தொட்டவரும்கூட.

இந்த மண்ணில் மனித இனம் அழியாதவரை அவர் நினைவும் அழியாது; புகழும் குறையாது. என்றென்றும் அவர் போற்றப்படவேண்டியவர்; பின்பற்றப்பட வேண்டியவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

மேற்கண்டவை போன்ற நிகழ்வுகளை எடுத்துக்காட்டி, அவை அவரால் நிகழ்த்தப்பட்ட அற்புதங்கள் என்று சம்பந்தப்பட்டவர்களும் ஊடகங்களும் பறைசாற்றிக்கொண்டிருப்பது உள்மனதை உறுத்துகிற செயல் என்பது என்[சாமானியன்] கருத்து. 

இக்கருத்தை வெளிப்படுத்தவே இப்பதிவு. அன்னை தெரசாவின் புகழுக்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கம் எனக்குக் கிஞ்சித்தும் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நன்றி.
***********************************************************************************************************************
முக்கிய குறிப்பு:
பதிவை இணைத்தபோது, ‘புதிய இடுகை இல்லை’ என்று குறிப்பிட்ட தமிழ்மணம் பின்னர் இணைப்பு வழங்கியுள்ளது. ஒன்றும் புரியவில்லை!!!!!











ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

திருந்துவார்களா தொ.கா.தொடர் தயாரிப்பாளர்கள்?


#.....தொலைக்காட்சிகளில் வரும் தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் மீதான புகார்கள் மொத்தம் 10 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

சமூக நலன், மதச்சார்பின்மை, குழந்தைகளுக்கு எதிரானவை, தேசவிரோதம், நிறவேற்றுமை, ஆபாசம், முத்தக்காட்சிகள், நிர்வாணம், கலவரம், கிரைம் என இவை அனைத்தின் மீதும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்குப் புகார்கள் வருகின்றன.

இப்புகார்களில் பெரும்பாலும் ஆபாசம் மற்றும் கலவரம் தொடர்பான புகார்கள் இதுவரை அதிகம் இருந்தன. ஆனால், தற்போது திகில், மந்திரதந்திரங்கள், பேய், பில்லி, சூனியம், பாம்புக் கதைகள் என மூடநம்பிக்கையை வளர்க்கும் தொடர்கள் மீது  புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

இந்த வகையில் ஆகஸ்டு 31 வரை அரசுக்கு வந்த 1850 புகார்களில் 1250 புகார்கள் மூடநம்பிக்கை தொடர்பாக உள்ளன.....#

என்று குறிப்பிடுவதோடு, மேலும் பல செய்திகளைத் தந்துள்ளது ‘தி இந்து’.

நடவடிக்கை எடுக்க, பிசிசிசி-க்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

நடவடிக்கை சாத்தியமா? எப்போது? போன்ற கேள்விகளுக்கு இப்போது விடை அறிய இயலாது எனினும், மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றமும் எழுச்சியும் நம் போன்றவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்பது உண்மை.

நன்றி: ‘தி இந்து’[04.09.2016]
===============================================================================




வெள்ளி, 2 செப்டம்பர், 2016

'காதல் படுத்தும் பாடு!’.....எழுத்தாளர் சுஜாதா

காதலின் பெயரால் பெண் சுகம் தேடும் காமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பசப்பு மொழிகளுக்கு எளிதில் வசப்படும் குமரிகளுக்கும் பஞ்சமில்லை. ஒட்டுமொத்த சமூகமும் துரிதகதியில் விழிப்புணர்வு பெறவேண்டிய காலக்கட்டம் இது.

வெறும் உடல் கவர்ச்சிக்குப் பலியாகவிருந்த ஒரு புத்திசாலி இளைஞனைப் பற்றித் தனக்கே உரிய சாகச நடையில் சொல்லியிருக்கிறார் இறவாப் புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா. அதைத்தான் இங்கு பதிவாக்கியிருக்கிறேன்.

விதியின் சின்ன விளையாட்டுகளில் இதுவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். நான் போன வாரம் பம்பாய் கம்ப்யூட்டர் மாநாட்டுக்குச் சென்றிருந்தபோது.....
க்ராஸ் மைதானத்தில், எக்ஸிபிஷனில் ஹாலுக்கு ஹால் நடந்து அலுத்துப்போய், ஓர் ஓரமாக நின்றுகொண்டிருந்தபோது, ஒரு ஆள் என் அருகில் வந்து,  “நீங்கதானே.....” என்று தயங்க, “ஆமாம் நான்தான்” என்றேன்.

“நீங்க ஸ்ரீரங்கம்னு கேள்விப்பட்டேன். போட்டோவில் பார்த்திருக்கேன்...”

“சந்தோஷம். நீங்களும் கம்ப்யூட்டரா...?”

“ஆமாம். நானும் உங்களைப் போலவே ஸ்ரீரங்கம்.”

“ஸ்ரீரங்கத்தில் எங்கே?”

“அம்மா மண்டபத்தில் இருந்தேன். ஸ்ரீரங்கத்தில் மறக்க முடியாதது ராயகோபுரம். அந்தக் கோபுரத்துக்கு முன்னால் ஒரு தடவை என்னைக் கம்பத்தில் கட்டி உதை உதைன்னு உதைச்சிட்டாங்க!”

“அப்படியா?” எந்த வருஷம்?”

“1949.”

“வாட் எ சர்பிரைஸ்! அந்தச் சம்பவத்தை நான் பார்த்திருக்கேன். பந்தல் கால்ல கட்டி வெச்சு ...அந்தத் திருடன் நீங்கதானா! இப்ப என்ன பண்றீங்க?”

“கலிபோர்னியாவில் கம்ப்யூட்டர் சய்ண்டிஸ்டா இருக்கேன்.  நீங்ககூட என்னை அடிச்சீங்களா?”

“சே சே...இல்ல. நல்லவேளை, போலீஸ்காரர் உங்களை அழைச்சுட்டுப் போய்ட்டார். அச்சரிய ஆச்சரியம்! ஸ்ரீரங்கத்தில் திருட ஆரம்பிச்சி இப்போ கலிபோர்னியாவில் கம்ப்யூட்டர் சயிண்டிஸ்டா? ஆச்சரியம்!”

“நான் திருடவும் இல்ல, ஒன்னுமில்லங்க.”

“அப்படியா? பின்னே எதுக்கு உங்களைத் துரத்தி வந்து அடிச்சாங்க?”

“அதைச் சொன்னால் கதை பண்ணிடுவீங்க. அன்னிக்கி நான் லட்சுமணராவ் பொண்ணை... மாலினி மாலின்னு வாட்ட சாட்டமா இருப்பா தெரியுமா?

“தெரியாது” என்றேன் அவசரமாக.

”அவளை ரெண்டு மூனு தடவை பார்த்துப் பேசியிருக்கேன். அன்னிக்கும் அவளைப் பார்க்கத்தான் மொட்டை மாடிக்குப் போனேன். ராத்திரி நேரம். அவளோட அப்பா அங்க பாய் விரிச்சிப் படுத்திருந்தது தெரியாம போச்சு. “மாலினி”ன்னு நான் ஆசையோடு கூப்பிட, அவள் அப்பா கண்விழிச்சிப் பார்க்க, மாலினியும் சமயோசிதமா, “திருடன்... திருடன்”னு சத்தம் போட நான் தப்பி ஓடி மாட்டிகிட்டேன். மாலினியைப் பார்க்கத்தான் வந்தேன்னு நான் சொல்லியிருந்தா அவள் அப்பா அவளை நிமிர்த்தியிருப்பாரே...”

“ஆக, அவளைக் காட்டிக் கொடுக்காம இருக்கத்தான் தர்ம அடி வாங்கிட்டீங்களா?” என்றேன் நான்.

“ஆமா” என்று அசட்டுச் சிரிப்பை உதிர்த்த அவர், “அதுக்கப்புறம் அந்தத் தெருப்பக்கமே நான் தலை வெச்சுக்கூடப் படுக்கல. படிப்பு படிப்புன்னு வெளியூர்லயே காலங் கழிச்சேன். வேலை வேலைன்னு எங்கெங்கோ சுத்திட்டு இப்போ கலிபோர்னியாவில் இருக்கேன்.” 

அவர் என் கண்களுக்கு ரொம்பவே வித்தியாசமான ஆளாகத் தெரிந்தார்.
===============================================================================
சுஜாதாவின், ‘ஓரிரு எண்ணங்கள்’ என்னும் நூலிலுள்ள ‘கோபுர வாசல்’ கட்டுரையின் இறுதிப் பகுதி இங்கு பதிவாகியிருக்கிறது. மூன்றாம் பதிப்பு; விசா பப்ளிகேசன்ஸ், தி.நகர், சென்னை.

பதிவின் தலைப்பு அடியேன் கொடுத்தது.