புதன், 3 ஜூன், 2026

இன்னிசை ராணி ‘லதா மங்கேஸ்கர்’ கற்பித்த உன்னத வாழ்க்கைப் பாடம்!

லதா மங்கேஸ்கர்[28.09.1929 – 06.02.2022]எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய இசைத் துறையில் ஆற்றிய பங்களிப்பானது பிரமிக்க வைப்பது. இந்தியாவின் இசைக்குயில், மிலேனியத்தின் குரல், இன்னிசை ராணி போன்ற கௌரவப் பட்டங்களைப் பெற்றவர்.

இவர் இறந்தபோது சொன்ன வாழ்க்கைப் பாடத்தைச் சற்று முன்னர் வாசிக்க நேர்ந்தது. நெஞ்சில் நீங்காத இடம்பெற்றுவிட்ட வாழ்வியல் நெறி குறித்த அந்த அற்புத வாசகங்களை[உள்ளடக்கம் பாதிக்கப்படாத வகையில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன]ப் பகிர்வதில் பெருமிதப்படுகிறேன்.

//இந்த உலகில் மரணத்தைவிட உயர்ந்தது எதுவுமில்லை. இது மட்டுமே உண்மையானது. உலகின் மிக விலையுயர்ந்த பிராண்டட் கார் எனது கேரேஜில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நான் சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டுள்ளேன். 

இந்த உலகில் உள்ள அனைத்து விதமான டிசைன்களாலும் வண்ணங்களாலும் அழகூட்டப்பட்ட ஆடைகள், விலையுயர்ந்த காலணிகள், அணிகலன்கள் எல்லாம் என் வீட்டில் உள்ளன. இப்போது, நான் மருத்துவமனை வழங்கிய குட்டைக் கவுன் மட்டுமே அணிந்திருக்கிறேன்.

என் வீடு பெரிய அரண்மனை போன்றது, நான் இப்போது ஒரு மருத்துவமனையில் ஒரு சிறிய படுக்கையில் படுத்திருக்கிறேன். 

நான் இந்த உலகில் உள்ள பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குப் பயணித்திருக்கிறேன். இப்போது என் பயணம் மருத்துவமனையின் ஒரு ஆய்வகத்திலிருந்து மற்றொரு ஆய்வகத்திற்குமாகச் சுருங்கிவிட்டது; இன்று மருத்துவமனை வராண்டாவிற்குள் மட்டும் பயணிக்க இரண்டு நபர்களின் உதவி தேவைப்படுகிறது. 

ஒரு காலத்தில் 7 சிகையலங்கார நிபுணர்கள் தினமும் என் தலைமுடியை அலங்கரிப்பார்கள். அப்போதிருந்த அந்த அழகிய தலைமுடி காணாமல்போனது.

நான் உலகெங்கிலும் உள்ள பல்வேறு 5 நட்சத்திர ஹோட்டல்களில் விதம் விதமானதும் வெகு ருசியானதுமான உணவுகளை உண்டு மகிழ்ந்திருக்கிறேன். இன்று என் உணவு ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரைகள்,  துளி உப்புக் கலந்த உணவு என்று சுருங்கிவிட்டது.

அன்றைய என் சொகுசு வாழ்க்கை இன்று பரிதாபத்திற்குரியதாக மாறிவிட்டதால் நான் எந்த வகையிலும் மனம் தளரவில்லை.

சில அன்பர்களின் பரிவான பார்வைகளும், அவர்களின் பிரார்த்தனைகளும் என்னை வாழ வைக்கின்றன. 

இதுதான் வாழ்க்கை. எவ்வளவு செல்வம் இருந்தாலும், இறுதியில் வெறுங்கையுடன் சென்றுசேர்வதே இயற்கை. எனவே, அன்பாக இருங்கள், உங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள்.

பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் மக்களை மதிப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்; எவரையும் புண்படுத்தாதீர்கள்;  நல்லவர்களை நேசியுங்கள்; நல்லவர்களாக இருங்கள்; இறுதிவரை நல்லவர்களாகவே வாழுங்கள். வாழ்த்துகள்//

                                            *   *   *   *   *

நன்றி:

Sankaran sankar 1978 Art Instructor