எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

வியாழன், 18 டிசம்பர், 2025

'தவெக' ‘விஜய்’க்கே நம் வாக்கு[ஓட்டு]!!!

நடிகர் விஜய்... மன்னித்திடுக, தலைவர் விஜய் தன் ஈரோடு பரப்புரையில், ‘திமுக’வைத் ‘தீய சக்தி’ என்று மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தன்னுடைய ‘தவெக’ கட்சியை ‘நல்ல[தூய] சக்தி’  என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார்[ஊடகச் செய்தி].

நல்ல கட்சி என்றால், மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி என்பது அறியத்தக்கது.

இந்தக் கட்சியால் இந்நாள்வரை மக்களுக்கு நன்மை ஏதும் விளைந்ததில்லை என்பதால், இது[தவெக] நல்ல கட்சியே என்பது உறுதி செய்யப்படவில்லை.

அது 2026ஆம் ஆண்டுத் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றி ஆளத் தொடங்கிய பிறகே அது தெரியவரும்.

ஆனாலும், தேர்தலுக்கு மூன்று மாதங்கள் போல இருக்கும் நிலையில் அவரால் சில நன்மைகளையேனும் செய்து, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்றிட இயலும்.

அந்தச் சில நன்மைகளில் குறிப்பிடத்தக்கவை.....

‘நீட்’ தேர்வைத் திணித்தது, மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியைத் திணித்தது/திணிப்பது, புதிய மசோதா மூலம் அண்ணல் காந்தியடிகளின் பெயரை இருட்டடிப்புச் செய்வது என்று ஒன்றிய அரசு செய்யும் அடாவடித்தனங்களைத் தடுத்து நிறுத்துவது போன்றவை ஆகும்.

தலைவர் ‘விஜய்’யைக் காணக் கோடிக்கணக்கில் மக்கள் திரள்கிறார்கள். இந்த மாபெரும் சக்தியை ஒன்று திரட்டி, தானே தலைமை வகித்து, மாபெரும் போராட்டத்தை நடத்தி, ஒன்றிய அரசைப் பணியச் செய்து மேற்கண்டவை தொடர்பான ஆணைகளை[+மசோதா] அவர் திரும்பப் பெறச் செய்யலாம்.

இதன் மூலம் ‘தவெக’ கட்சியை மிக மிக நல்ல கட்சி[சக்தி] என்று நிரூபித்துவிடலாம். 2026இல் தமிழ்நாட்டில் ஆட்சியையும் கைப்பற்றிவிடலாம்.

நல்லது செய்து தமிழர்களுக்கு நல்லாட்சி வழங்கவிருக்கும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் ‘விஜய்’ அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறோம்!

வாழ்க விஜய்! வெல்க ‘தவெக’ கட்சி!!

மோடியின் வயது எழுபத்தைந்தா[17 செப்டம்பர், 1950] பதினைந்தா?!

//பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின், தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா என்ற உயரிய விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. எத்தியோப்பிய பிரதமர் இந்த விருதை மோடிக்கு அளித்தார். இந்த விருது பெறும் முதல் உலகத் தலைவர் மோடியே ஆவார்//[மாலைமலர்].
ஓட்டப் பந்தயத்திலோ பேச்சுப் போட்டியிலோ பதக்கம்[பரிசு] பெறும் ஒரு பதினைந்து வயதுப் பாலகனாக மாறியிருக்கிறார் நம் பிரதமர் மோடி. பரிசாகப் பெற்ற விருதைத் தூக்கிக் காட்டி, அதை ஆசை ஆசையாய்ப் படமெடுத்துக் காட்டியிருப்பதே அந்த மாற்றத்திற்கான அடையாளம்.

நம் மதிப்பிற்குரிய பிரதமரைப் போலவே, அவர் பெற்றதை இந்தியக் குடிமக்களாகிய நாம் அனைவரும் பெற்றப் பேறாகக் கருதிப் பெருமிதப்படுவோம்[விருது எதற்காக வழங்கப்பட்டது என்பது ஒரு பொருட்டல்ல].

தினம் தினம் ஒரு மில்லியன் ‘பார்வை’களைப் பெறும் முதல் தர[ஹி... ஹி... ஹி!!!] வலைப்பதிவாளனாகிய நான் நம்மவரின் இந்தப் படத்தைப் பகிர்ந்துகொண்டதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நீங்களும் பகிருங்கள்.

                               *   *   *   *   *

https://www.maalaimalar.com/news/world/prime-minister-modi-receives-ethiopias-highest-award-801690