சனி, 23 மே, 2020

ஜக்கி வாசுதேவின் மனைவி விஜி, ‘மகா சமாதி’ ஆன கதை!

ஜக்கி வாசுதேவ் குறித்துக் கணிசமான பதிவுகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் இதுவும் ஒன்று என்பதைத் தவிர அவரை வம்புக்கு இழுக்கும் நோக்கம் கிஞ்சித்தும் இல்லை.

என்னுடைய தளத்தின் முதன்மை நோக்கங்களுள் ‘மூடநம்பிக்கைகளைச் சாடுவது’ம் ஒன்று என்பதை நினைவுகூர்க.

கீழ்க்காணும் விசித்திர நிகழ்வுகளின் தொகுப்பு, சாட்சாத் ஜக்கி வாசுதேவ் அவர்களின் தளத்திலிருந்து நகல் செய்தது[ https://isha.sadhguru.org/in/ta/sadhguru/man/viji ]. தேவையற்றவை என்று நான் நினக்கும் வரிகளை ஆங்காங்கே நீக்கியிருக்கிறேன். 

சத்குரு அவர்களுக்கு என் நன்றி.
#எல்லோராலும் விஜி என்று வாஞ்சையாக அழைக்கப்பட்டவர் சத்குருவின் மனைவி விஜயகுமாரி. சாமுண்டி மலையில் ஞானோதயம் அடைந்த சத்குரு, அதற்கு இரண்டு வருடம் கழித்து, மைசூரில் முதன்முதலாக விஜி அவர்களைச் சந்தித்தார். மைசூரில் ஒரு மதிய உணவு அழைப்பிற்கு விருந்தினராகச் சென்றிருந்த இடத்தில், இவர்களின் முதல் சந்திப்பு நடந்தது. அதன்பின் இவர்கள் கடிதம் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டார்கள். மனம்விட்டு நிகழ்ந்த இந்த பரிமாறல்களுக்குப் பின், ஒரு மங்களகரமான மஹாசிவராத்திரி நாளன்று, 1984ல் இவர்களின் திருமணம் நடந்தது. சத்குருவின் யோகா வகுப்புகள் எப்போதும் போல் முழுவீச்சில் நடந்துகொண்டிருந்தது. தென்னிந்தியாவில் பல இடங்களில் அவர் இடைவிடாது வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். விஜியோ ஒரு வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவ்வப்போது சத்குருவுடன் பயணம் செய்து, சத்குருவின் வகுப்புகளில் அவர் தன்னார்வத் தொண்டும் செய்தார்.

1990ல் சத்குருவுக்கும் விஜிக்கும் ராதே என்றொரு மகள் பிறந்தாள்.  

.....நாட்கள் செல்லச் செல்ல, சத்குருவின் கவனம் முழுவதும் தியானலிங்கத்தை பூர்த்தி செய்வதிலேயே இருந்தது. இந்தச் செயலில் விஜியும் முழுமையாக ஈடுபட்டிருந்தார்.

இனி, சத்குருவின் வார்த்தைகளில்..... "1996 ம் வருடம் ஜூலை மாதம் அது. தியானலிங்கப் பிரதிஷ்டையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போதுதான் தியானலிங்கப் பணிகள் முடிவடைந்ததும், தன் உடலைத் துறக்கப்போவதாக விஜி முடிவெடுத்தாள். 

ஒரு பௌர்ணமியைக் குறிப்பிட்டு, அன்றைய தினத்தில் தன் உடலைத் துறக்கப்போவதாக அவள் அறிவித்தாள். அதற்குத் தேவையான வகையில் தன்னைத் தயார் செய்துகொள்ளவும் ஆரம்பித்தாள். இம்முடிவை மாற்றிக்கொள்ளுமாறு நான் அவளை வலியுறுத்தினேன். “இப்போது இதற்கான அவசியம் என்ன இருக்கிறது..? இன்னும் சிறிது நாள் பொறுத்திரு” என்று கூறினேன். ஆனால் அவளோ, ‘இதுதான் எனக்குச் சரியான நேரம். என் வாழ்வில் இப்போது நான் ஒரு நிறைவை உணர்கிறேன் – வெளிச் சூழலிலும் சரி, என் உள்நிலையிலும் சரி நான் மிக நிறைவாய் உணர்கிறேன். நாளையே ஏதோ நடந்து இந்தச் சமநிலை பாதிக்கப்பட்டால், அதைத் தாங்கும் வகையில் நான் இல்லை. நான் நிறைவாய் உணரும்போதே விடைபெற்றுச் செல்ல நினைக்கிறேன். அதனால் இதுதான் எனக்கு ஏற்ற நேரம். இந்நேரத்தைத் தவறவிட என்னால் இயலாது” என்றாள்.

தன் உடலை நீங்கிச் சென்றாள். அப்போது அவள் முழுமையான ஆரோக்கியத்தோடு இருந்தாள். முப்பத்தி-மூன்றே வயது. உடலில் சிறு சிதைவுகூட ஏற்படுத்தாமல், அத்தனை இலகுவாக அதைப் பிரிந்துசெல்வது ஒன்றும் சுலபமான காரியமில்லை. 

மிக எளிதாக அணிந்திருக்கும் உடையைக் களைந்திடலாம்... ஆனால் நாம் கொண்டிருக்கும் இவ்வுடலை, ஆடையைக் களைவது போல் எளிதாக உதறிவிட்டுச் செல்வது..? அது ஒன்றும் அத்தனை சாதாரண விஷயமல்ல!
தன் தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆகிவிட்டது, இனி இவ்வுலகில் தான் பார்ப்பதற்கோ, உணர்வதற்கோ ஒன்றுமில்லை என்ற நிலைக்கு ஒருவர் எப்போது வருகிறாரோ, அப்போது அவர் முழு விருப்பத்தோடு இவ்வுடலை உதறிவிட்டுச் செல்கிறார். ஒருவேளை ஏதோ போராட்டமோ, அல்லது உடலிற்கு காயமோ, தீங்கோ விளைவித்தால், அது தற்கொலை. ஆனால் போராட்டங்கள் எதுவுமின்றி, ஏதோ அறையிலிருந்து வெளியே செல்வது போல, மிக சாதாரணமாக உடலைவிட்டு ஒருவர் வெளியேறினால், அது "மஹா சமாதி"[இது, ஜக்கி தன்னிச்சையாய்த் தரும் விளக்கம்]

இதுபோல் ஒருவர் முழுவிழிப்புணர்வுடன், உடலுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல், தானாக உடலை உதறிச் சென்றார் என்றால், அதன்பிறகு 'ஒரு உயிராக' அவர் இங்கு இருக்கமாட்டார். சாதாரணமாக ஒருவர் இறந்தால், “அவர் போய்விட்டார். இனி அவர் இல்லை” என்று சொல்வார்கள். ஆனால் அது நிஜமில்லை. நீங்கள் அறிந்திருந்த 'நபராக' அவர் இனி இருக்கமாட்டாரே தவிர்த்து, ஒரு உயிராக அவர் இன்னும் இருப்பார். ஆனால் மஹாசமாதி அடைந்தவர்கள் 'ஒரு உயிராக'க் கூட இங்கு இருக்கமாட்டார்கள். அவர்கள் அப்படியே கரைந்து போய்விடுவார்கள்[?!?!?!]. அவ்வளவுதான்... அவர்களைப் பொறுத்தவரை இந்த நாடகம் முடிவடைந்தது!

எல்லா ஆன்மீக சாதகர்களுக்கும் மஹா சமாதிதான் இறுதிக் குறிக்கோள். அந்தத் தெய்வீகத்தில் கரைந்து போகும்போதுதான், அவர்களின் ஆன்மீக சாதனை முடிவுறும்......

கீழ்வருவது விஜி மஹா சமாதியடைந்தஇருதினங்களுக்கு பிறகு 1997 தைபூசத்தன்று சத்குரு பேசியது.

.....ராதேவை[மகள்] ஊட்டியில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு வரும் வழியில் எப்போதும் போல "ஷம்போ" மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தாள். அப்போது கண்ணீர் மளமளவென வழிந்தது. என் கைகளைப் பிடித்து வாகனத்தை நிருறுத்தும்படி கேட்டுக்கொண்டாள். எனக்கு வேறு எந்த ஷம்போவையும் தெரியாது. சில நேரங்களில் நான் உங்களை அந்த வடிவில் கண்டுள்ளேன். நீங்கள் மட்டும்தான் என் மோக்‌ஷத்திற்கு உதவ வேண்டுமென்று கூறி அழுதாள்.  மறுபடியும் மதியம் 3:45 மணிக்கு குளித்துவிட்டு தனது பயிற்சிகளைத் தொடங்குவாள். அவள் சமாதியடைந்த அன்று, அந்த மூன்று வேளைகளிலும் நான் அவளுக்குப் பயிற்சிகளை தொடக்கி வைத்துவிட்டு வகுப்பெடுக்கச் சென்றேன். மாலை 6:15 மணிக்கு "ஷம்போ" என்ற உச்சாடனையில் கலந்துவிட்டாள்; அவனுடையவள் ஆகிவிட்டாள்.....

ஜெய ஷம்போ(?!) மகாதேவா#
========================================================================
ஜக்கியே சொல்லுவதாக அமைந்த இந்தச் செய்தித் தொகுப்பைப் படித்து முடித்து நீண்ட நேரம் பிரமிப்பில் கட்டுண்டு கிடந்தேன். சொற்களை வெகு சாதுரியமாகப் பயன்படுத்துவதில் இவர் மகா மகா கில்லாடி என்பது புரிந்தது.

விஜயகுமாரி பற்றிய இவரின் விவரிப்புகளிலிருந்து [மகா சமாதி அடைவதற்கு முன்பு] அவர் ஒரு சராசரிப் பெண் என்பதாகவே நமக்கு அறிமுகம் ஆகிறார். அந்தச் சராசரிப் பெண், “நான் நிறைவாய் இருக்கும்போதே ‘விடைபெற்றுச் செல்ல நினக்கிறேன்’ என்கிறார்.

நிறைவாக வாழும்போது செல்ல நினைப்பது ஏன்? எங்கு செல்ல விரும்புகிறார்? செல்லும் இடத்தில் எவ்வளவு காலத்துக்குத் தங்கியிருக்கப் போகிறார்? அங்கே அவரின் செயல்பாடு என்ன? என்பன பற்றியெல்லாம் எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை. ஜக்கியும் வாய் திறக்கவில்லை.

நாமெல்லாம் செத்துப்போனால், குழி தோண்டி, அதில் கிடத்தி மண்ணைத் தள்ளி மூடிவிடுவார்கள். இதற்குச் சமாதி கட்டுதல் என்று பெயர்.

ஞானிகள் என்றும் அவதாரங்கள் என்று சொல்லப்படுபவர்கள் செத்துப்போனால் அவர்களையும் குழி தோண்டிப் புதைத்து மூடுவதுதான் வழக்கத்தில் உள்ளது.
அவர்கள் ‘மகா சமாதி’ ஆனார்கள் என்று சொல்வதை நம் ஊடகக்காரர்கள் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்மில் போலிச் சாமியார்கள் சிலர் வீம்புக்காக, “என்னைக் குழியில் இறக்கி மூடிவிடுங்கள். நான்கு நாட்கள் கழித்து எழுந்து வருவேன்” என்று உள்ளே இறங்கி, அப்படியே நரகக் குழிக்குச் போனதும் உண்டு.

விஜியம்மாவைக் குழிக்குள் இறக்கி மூடியதாக எல்லாம் ஜக்கி சொல்லவில்லை. பௌர்ணமியன்று அவர்கள் தியானம் செய்துகொண்டிருந்தபோது அம்மையார் மஹா சமாதி அடைந்துவிட்டார் என்கிறார்.

சாகாமலே மஹா சமாதி அடைந்தாரா? இது என்ன புதுக் கதை?!

மூச்சை அடக்கி உயிரைப் போக்கிக் கொள்ளலாம்.

நம்மில் எந்தவொரு நபரும் தன்னிச்சையாய் மூச்சை அடக்கி உயிர்விடுதல் என்பது சாத்தியமே இல்லை. வேறு யாராவது மூச்சைப் பிடித்து அதைச் செய்தால்தான் உண்டு.

என்ன தைரியத்தில் ஜக்கி இப்படி வாக்குமூலம் தந்திருக்கிறார்? தான் உலகம் போற்றும் சத்குரு[?!] என்ற நினைப்பினாலா?

இந்த மண்ணில், பெரும்பான்மை மக்களிடையே பெரிய ஞானி என்று பெயரெடுத்துவிட்டால், இதற்கான தைரியம் வந்துவிடுமா?!

மிகப்பெரிய அரசியல் தலைவர்களின் பேராதரவு இவருக்கு இருக்கிறது. அப்புறம் என்ன, எதையும் பேசலாம்; எதையும் செய்யலாம்!

ஜெய ஷம்போ[?!) மகாதேவா!
=======================================================================