'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Thursday, October 29, 2015

“அணுகுண்டைவிட ஆபத்தானது மதவெறி”...விஞ்ஞானிகள் குழு[130 பேர்] எச்சரிக்கை!

‘மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள், மாட்டிறைச்சி உண்பவர்கள், தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள், அப்பாவிப் பொதுமக்கள் ஆகியோர் மத வெறியர்களால் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.’ 
மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று, சென்னை கணித அறிவியல் நிறுவனம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடிகள் உட்படப் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 130 விஞ்ஞானிகளால் கையெழுத்து இடப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது - இது இன்றைய பத்திரிகைச்[தி இந்து 29.10.2015] செய்தி.

‘பல்வேறு வகைப்பட்ட மக்களின் சமூக, கலாச்சார இழைகள் பின்னிப்பிணைந்து உருவாக்கியுள்ள ஒற்றுமை உணர்வுதான், நம் நாட்டின் நாகரிகச் சிறப்புக்குப் பெரும் வலிமை சேர்த்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பெருமைகளுக்கும் சிறப்புகளுக்கும் மத வெறியர்கள் மற்றும் அடிப்படைவாதிகளால் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. மத ரீதியாகப் பிளவுபட்ட ஒரு சமூகம் என்பது அணுகுண்டைவிடவும் ஆபத்தானது’ என்று கோரிக்கை வைப்பதற்கான காரணங்களையும் அவர்கள் விவரித்திருக்கிறார்கள்; தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். [சற்றே விரிவான செய்திக்கு இன்றைய நாளிதழ் வாசிக்கலாம்]

அறிவியல் அறிஞர்கள், கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது மட்டுமே தம் கடமை என்றிருந்துவி்டாமல், மதவெறி பிடித்த மூடர்களின் அடாவடித்தனங்களைக் கண்டித்திருப்பது போற்றத்தக்க செயலாகும்.
*****************************************************************************************************************************************************Sunday, October 25, 2015

விதியாம் விதி!.....‘மசுரு’ விதி!!

இடி மின்னலுடன் மழை பொழிகிறது.

தன் இருப்பிடத்திலிருந்து ஒருவன் வெளியே வருகிறான்.  சக்தி வாய்ந்த மின்னல் பளீரிட, அவன் பார்வை பறி போகிறது.

பேய் மழையின் போது, மிதி வண்டியில் செல்கிற ஒருவன், வேரோடு சாய்ந்த ஒரு மரத்தடியில் சிக்கி உயிரிழக்கிறான்.

மின்னல் அடிக்கும் போது ஆறறிவுள்ள ஒரு மனிதன் , தன் இருப்பிடத்திலிருந்து போதிய பாதுகாப்பின்றி ஏன் வெளியே வரவேண்டும்? மின்னலால் ஏற்படும் அபாயத்தை அவன் அறியாதவனா? அறிந்திருந்தும் தவறிழைத்துத் தன் பார்வையை அவன் பறி கொடுத்தான் என்றால், அதற்குக் காரணம் ’விதி’ என்கிறோம்.

பருவ காலங்களில் மழை பெய்வதும், இடிப்பதும், மின்னுவதும் இயற்கை. இடம் விட்டு இடம் பெயர்வது மனிதனுக்குள்ள செயல்பாடுகளில் ஒன்று. அது இயற்கையாக நிகழ்வது. இது மனித மூளையால் செயல்படுத்தப்படுவது.

மின்னலடித்ததும், ஒருவன் இருப்பிடத்திலிருந்து வெளியே வந்ததும் இரு வேறு நிகழ்ச்சிகள். இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தன. அவ்வளவுதான். மின்னலடித்தபோது ஒருவன் வெளியில் வந்ததோ அல்லது, அவன் வெளியே வந்த அதே கணங்களில் மின்னல் பளிச்சிட்டதோ முழுக்க முழுக்கத் தற்செயல் நிகழ்ச்சிகள். இங்கே விதி எப்படி நுழைந்தது?
யார் நுழைத்தது?

கடவுளா?

ஒருவன் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக அவன் பார்வையைப் பறிப்பதற்குக் கடவுள் மின்னலைத் தோற்றுவித்தாரா?

ஒரு தனி மனிதனைத் தண்டிப்பதற்காக ஒரு மின்னலா?  மின்னலடிக்கும் போது அவன் வெளியே வந்தது கடவுளின் செயலா?

சரியாக மரம் சாய்கிற நேரத்தில் மிதி வண்டிக்காரனை அங்கே கொண்டு சேர்த்ததும் அவர்தானா?
பிரபஞ்ச வெளியில் கோள்கள் ஒன்றோடொன்று மோதி வெடித்துச் சிதறுவது..... எண்ணற்ற கடல் கொந்தளிப்புகளால் அவற்றில் இடம் பெற்ற பொருள்களும் உயிர்களும் தம்முள் மோதிக் கொள்வது....காற்று, நெருப்பு போன்றவற்றின் அசுரத்தனமான செயல்பாடுகளால் பொருள்களும் உயிர்களும் அலைக்கழிக்கப்பட்டுத் தம்முள் இடிபடுவது என்றிப்படி ’வெளி’யில் இடம்பெறும் விபத்துகள் எண்ணில் அடங்காதவை.

இவை எல்லாமே கடவுளால் உருவாக்கப்பட்ட ‘விதி’ காரணமாக நடை பெறுகின்றனவா?

அளவிடற்கரிய அண்டவெளியில் இடம்பெற்ற அத்தனை பொருள்களும் உயிர்களும் விதிக்கப்பட்டபடிதான் தோன்றி இயங்கி மறைகின்றனவா?

ஒரு மரம் எப்போது எப்படி, எங்கே முளைக்க வேண்டும்? எவ்வளவு காலத்துக்கு, எவ்வாறெல்லாம் பராமரிக்கப்பட்டு வளர வேண்டும். எம்முறையில் அழிய வேண்டும் என அந்த மரம் சம்பந்தப்பட்ட விதிமுறைகள் அந்த மரத்திலேயே எழுதி வைக்கப்படுகின்றனவா?

அத்தனை மரங்களுக்குமா? புல், பூண்டு, தூசு, தும்பு , அணு, அணுப்புள்ளி என்று எல்லா வற்றுக்குமா? 

ஏதேனும் ஒரு விலங்கின் தலையில் உருக்கொண்டு, தோன்றி, வளர்ந்து, உதிர்கின்ற ’மயிருக்கும்’கூட தலை எழுத்து உண்டா? 

இவ்வாறாக எழுப்பப்படும் எண்ணற்ற கேள்விகளுக்குச் சரியான விடை அறிந்து சொன்னவர் எவருமில்லை.

சொல்லப்படும் பதில்கள் எல்லாம் அனுமானங்களே. 

அனுமானங்களைப் பதில் ஆக்குவதும், அவற்றை ‘உண்மை’ என நம்ப வைப்பதும் மன்னிக்க முடியாத குற்றங்கள்.

எதுவும் புரியாத நிலையில், “புரியவில்லை” என்று ஒத்துக் கொள்வது பெருந்தன்மை.

விதி மீதான நம்பிக்கைதான் அடுக்கடுக்கான மூடநம்பிக்கைகளுக்கு மனிதன் அடிமையாகக் காரணமாக அமைந்தது என்பதை நாம் மறத்தலாகாது.

மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும், நோய், பகைமை, வறுமை, நிலையாமை போன்றவற்றால் விளையும் துன்பங்கள் அளவிடற்கரியவை.

அத்துன்பங்களைப் போக்கி, அமைதியாக.....இன்பமாக வாழ்வதற்கான வழி வகைகளைக் கண்டறிய இந்த அறிவு பயன்பட வேண்டும்; கடவுள், விதி, தலை எழுத்து என்று ஏதேதோ சொல்லி, அவை பற்றிக் கற்பனைக் கதைகள் படைத்து,  பொய்கள் பரப்பி இருக்கிற கொஞ்சம் வாழ்நாளை வீணடிப்பதற்கு அல்ல.
===========================================================================================================================================

விதி பற்றிய, கீழ்க்காணும் பதிவுகளையும் வாசிக்கலாமே!

http://kadavulinkadavul.blogspot.com/2015/06/blog-post_20.html

http://kadavulinkadavul.blogspot.com/2011/06/18.html
Saturday, October 24, 2015

தமிழ் போற்றும் ‘தி இந்து’[24.10.2015] தமிழ் நாளிதழ் வாழ்க!

‘தமிழ்வழிப் பொறியியல் பட்டதாரிகளுக்குக் குவியும் அரசு வேலை வாய்ப்புகள்’ என்று தலைப்பிட்டு, ஓர் இனிப்பான செய்தியை வெளியிட்டிருக்கிறது ‘தி இந்து’[24.10.2015] தமிழ் நாளிதழ். அதை வாசிக்கும் வாய்ப்பில்லாதவர்களூக்காக இந்தப் பதிவு.
தனியார் நிறுவனங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் குவிந்துவருகின்றன.

தமிழ்வழி பொறியியல் கல்வித் திட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டு தி.மு.க.ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழ்வழியில் சிவில், மெக்கானிக்கல் பொறியியல் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 60 இடங்கள் உருவாக்கப்பட்டன. ‘தமிழ்வழியில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தமிழில் நடத்தப்படும்; செமஸ்டர் தேர்வையும் அவர்கள் தமிழிலேயே எழுதலாம்’ என்று அறிவிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து, அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழ்வழிப் பொறியியல் படிப்புகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, தமிழ்வழியில் சிவில் இன்ஜினீயரிங் 660 இடங்கள், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் 720 இடங்கள் என மொத்தம் 1380 இடங்கள் உள்ளன.

தமிழ்வழிப் பொறியியல் பட்டதாரிகளின் முதல் ‘பேட்ச்’ 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆங்கிலவழியில் பொறியியல் படித்த மாணவர்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்வழிப் பொறியியல் பட்டதாரிகளுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது. சம்பளமும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சம்பளம் குறைவாக இருந்தபோதிலும் கிடைத்த வேலையில் சேரும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

தமிழ்வழிப் பொறியியல் பட்டதாரிகள், தனியார் நிறுவனங்கள் நடத்தும் வளாகத் தேர்வுகளில்[கேம்பஸ் இண்டர்வியூ] மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்வு செய்யப்படும் நிலை உருவானதால், தமிழ்வழிப் பொறியியல் படிப்பில் சேர மாணவ - மாணவிகள் மிகவும் தயங்கினர். அண்மையில் நடந்து முடிந்த பொறியியல் கலந்தாய்வில்கூட, தமிழ்வழிப் பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் ஆகியோர் மட்டுமே தமிழ்வழிப் படிப்பைத் தேர்வு செய்தனர்.

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு, தமிழக அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சிறப்பு ஒதுக்கீடு 5 ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறைக்கு வந்துவிட்ட போதிலும், தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்கள் இல்லாததால், பொறியியல் பிரிவை 20 சதவீத ஒதுக்கீடு எட்டவில்லை.

தமிழ்வழிப் பொறியியல் பட்டதாரிகளின்[சிவில், மெக்கானிக்கல்] முதல் ’ ‘பேட்ச்’ கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம்தான் வெளியே வந்தது. தனியார் நிறுவனங்களில், தமிழ்வழிப் பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

நெடுஞ்சாலைத் துறையில்.....

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் 213 உதவிப் பொறியாளர்களை[சிவில்] தேர்வு செய்யக் கடந்த செப்டெம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு நடத்தியது. மொத்தக் காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழிப் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.

தமிழ்வழிப் பட்டதாரிகள் ஏராளமானோர் இத்தேர்வை எழுதியுள்ளனர்.

விரிவுரையாளர் பதவிகள்....

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல்[சிவில், மெக்கானிக்கல் உட்பட] மற்றும் பொறியியல் அல்லாத பாடப் பிரிவுகளில் 604 விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு விரைவில் தேர்வு நடத்தப்படவுள்ளது. தமிழ்வழியில் சிவில், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு விரிவுரையாளர் பணியிலும் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 100 உதவிப் பொறியாளர்களை[சிவில் -  75, மெக்கானிக்கல் - 25] போட்டித் தேர்வு மூலமாகத் தேர்வு செய்ய இருக்கிறது. இதில், சிவில் பிரிவில் 12 இடங்களும், பொறியியல் பிரிவில் 4 இடங்களும் தமிழ்வழிப் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உதவிப் பொறியாளர் பணிக்கு அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில்[www.twadrecruitment.net] விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை. பேராசிரியர் மகிழ்ச்சி.....

தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு, பெருகிவரும் அரசு வேலை வாய்ப்புகள் குறித்து அண்ணா பல்கலைக் கழக சிவில் இன்ஜினீயரிங் துறைத் தலைவர், பேராசிரியர் கே.நாகமணி கூறும்போது, “தமிழ்வழியில் பொறியியல் படிக்கின்ற மாணவர்கள் செமஸ்டர் தேர்வைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ அல்லது இருமொழி கலந்தோ எழுதலாம். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் அளிக்கப்படும் 20 சதவீத ஒதுக்கீடு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் பொதுப் போட்டியின் கீழும் வேலைவாய்ப்புப் பெறலாம். தற்போது அரசுப்பணி வாய்ப்புகள் அதிகரித்து வருவதால், வருங்காலத்தில் அதிகப்படியான மாணவர்கள் தமிழ்வழிப் பொறியியல் படிப்பில் சேரும் சூழல் உருவாகும்” என்றார்.
*****************************************************************************************************************************************************

தமிழ்வழியில் கற்க விரும்பும் மாணவர்களின் என்ணிக்கை அதிகரித்தால் தமிழ்வழியில் கற்பதற்கான இடங்களை அரசு அதிகரிக்கும்.

தமிழ்வழியில் கற்போர் எண்ணிக்கை பெருகினால்,  அவர்களின் வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீடு இருபதிலிருந்து ஐம்பதாகி, மேலும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 “தமிழ் வாழும்; வளரும்” - இது நம் எல்லோருடைய நம்பிக்கையும் ஆகும்.


Wednesday, October 21, 2015

தப்புத்...தப்புத்...தப்புத்..தப்பாய் ஒரு கணக்கு!!! [2011இல் கிறுக்கியது]

ண் மூடி, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த இறைவனை நீண்ட நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் இறைவி.

அதை மனக்கண்ணால் உணர்ந்த இறைவன், "ஏதோ சொல்ல நினைக்கிறாய் போல. சொல்” என்றார்.


“சொல்ல நினைக்கல. கேட்க நினைக்கிறேன்” என்றார் இறைவி..


“கேள்”

“கடவுள் நீங்க ஒருத்தர்தானா?”


ஒரு முறை அதிர்ந்து அடங்கியது இறைவனின் பொன் நிற மேனி.


“நான் ஒரு போதும் அப்படிச் சொன்னதில்லை” என்றார் இறைவன்.


“நீங்க சொன்னதில்லை. மண்ணுலகில் வாழும் மனிதர்கள் சொல்கிறார்கள்.”


“எல்லாரும் சொல்வதில்லை. ‘நான் ஆன்மிகவாதி; கடவுளின் அவதாரம்’ என்று பீற்றிக்கொண்டு அலைபவர்கள் சொல்கிறார்கள்.”


“அதென்ன கணக்கு, ‘ஒன்று’? கட்டற்ற...கணிப்புக்கு உட்படாத... அதிபிரமாண்டமான பிரபஞ்சத்தில் ஒரே கடவுள்தான் உண்டு. அவர்தான் அனைத்தையும் தோற்றுவித்து இயக்குகிறார் என்பது என்ன கணக்கு? ஒருவருக்கே அத்தனை நற்குணங்களையும் நிகரற்ற பேராற்றலையும் உரித்தாக்கிக் கொண்டாடுவது ஏன்? நற்குணங்கள் கொண்ட பல நல்ல கடவுள்கள், ஆதிக்க மனப்பான்மை இன்றி, ஒத்த மனப் போக்குடன் ஒருங்கிணைந்து இந்தப் பிரபஞ்சத்தை ஆளுவது சாத்தியமான ஒன்றுதானே?.......இப்படிச் சிலர் கேட்கிறார்கள்! அவர்கள்.....”


குறுக்கிட்ட இறைவன், “அவர்கள் சிறந்த சிந்தனையாளர்கள்...பகுத்தறிவாளர்கள்” என்றார்.


“எது? எப்படி? எப்போது? என்பன போன்ற கேள்விகள் விடை காண முடியாத புதிர்கள். மேம்போக்காக நோக்கும் போது, பிரபஞ்ச இயக்கம் ஓர் ஒழுங்குக்கு உட்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில், கடவுளின் கட்டுப்பாட்டில் அது இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, கடவுள் என்ற ஒருவர் தேவையற்றவர் ஆகிறார்” என்று சொல்பவர்களும் நிலவுலகில் இருக்கிறார்கள்” என்றார் இறைவி.


“அவர்கள்தான் நாத்திகர்கள்.” மெலிதாகப் புன்னகைத்தார் இறைவன்.


“கடவுள் உண்டுங்கிறாங்க. இல்லைன்னும் சொல்றாங்க. நரகம் சொர்க்கம்கிறாங்க. செத்த பிறகு ஆவியா பேயா அலையணும்னு அடிச்சிப் பேசறாங்க. அதெல்லாம் ஒன்னுமில்ல. செத்தா மண்ணு. அவ்வளவுதான்னும் அலட்சியமா சொல்றவங்களும் இருக்காங்க. ஒன்னும் புரியல. மனுசனா ஏன் பிறந்தோம்னு தெரியல........இப்படிப் புலம்பறவங்களும் அங்கே இருக்காங்க.” என்று இறைவி சொல்ல.......................


“அவர்கள் எல்லாம் சராசரி மனிதர்கள்” என்றார் இறைவன்.


“இப்படி இன்னும் என்னவெல்லாமோ கேள்விகள் கேட்கிறாங்க பூலோகவாசிகள். இதுக்கெல்லாம் எனக்கு விடை தெரியலையேங்கிற உறுத்தல் இருந்துட்டே இருக்கு. எல்லார்த்துக்கும் நீங்கதான் விடை சொல்லணும்” என்று தன் கேள்விகளுக்கு முத்தாய்ப்பு வைத்தார் இறைவி.


முகத்தில் சிறு விரக்திப் புன்னகை மலர்ந்து மறைய, இறைவன் சொன்னார்:


“யுகம்...யுகம்...யுகம்...யுகம்...யுகமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை எந்தவொரு கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும் என்பதும் எனக்குத் தெரியாது. யோசித்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை.”


மோனத்தில் புதைந்து போனார் இறைவன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

                                                                

Thursday, October 15, 2015

அறிஞர் அண்ணாவின் ‘மாஜி கடவுள்கள்’ - படித்திருக்கிறீர்களா?

கடவுள்களிலும் மாஜியா?! ஆம்! இங்கல்ல; அயல்நாடுகளில். இந்தப் புண்ணிய பூமியில் மட்டும் புதுப்புதுக் கடவுள்கள் புற்றீசல்களாய்ப் பெருகிக்கொண்டிருந்தாலும் பழசுகளுக்கு ‘மவுசு’ குறையவில்லை! அறிஞர் அண்ணாவின் ‘மாஜி கடவுள்கள்’ நூலிலிருந்து ஒரு சிறு பகுதி.....

இப்பதிவில் என் ‘கைங்கரியம்’ ஏதுமில்லை; வாசிப்பு வசதிக்காகப் பத்திகளில் மிகப் பெரியனவற்றைச் சிறுசுகள் ஆக்கியிருக்கிறேன்; கொஞ்சம் வரிகளுக்கு வண்ணம் சேர்த்திருக்கிறேன்.

#காட்டுமிராண்டிகள் கூட்டத்திலேகூட, இயற்கையாகத் தோன்றிப் பிறகு நடைமுறையாகிவிடும் கட்டுத்திட்டங்கள் சில உண்டல்லவா? அந்த வகையான கட்டுத்திட்டங்கள்கூட, கடவுளர் உலகில் இல்லை எனக் கருதும் விதமாகவே எல்லாக் கடவுள் கதைகளும் உள்ளன.

அக்கதைகளின் மூலம், கெட்டவர் தண்டிக்கப்படுவர்; நல்லவர் ரட்சிக்கப்படுவர் என்றார்கள்: பாவிகளுக்கு நரகம்; புண்ணியவான்களுக்கு மோட்சம் என்றும் சொன்னார்கள்.

கிரேக்கரின் புராணங்களிலும் ரோம் நாட்டவரின் புராணங்களிலும், எலூஷியன் பூந்தோட்டம் என்று மோட்சமும், டார்ட்டாரஸ் என்று நரகமும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பாவிகள், இந்தத் டார்ட்டாரசில் எப்படியெல்லாம் சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்பதையும் புராணங்கள் விளக்கியுள்ளன.

சூதாடி, குடியன், காமக்கூத்தாடியவன் ஆகியவர்களை டாட்டாரசில் வாட்டி வதைக்கிறார்கள் என்று கூறிவிட்டு, இதே கெட்ட காரியங்களைச் செய்த கடவுள்களையும் தொழும்படிக் கூறினார்கள். இரண்டும் எப்படிப் பொருந்தும் என்று துளியும் சிந்திக்கவில்ல; சிந்திக்கத் துணிந்தவரைச் சித்ரவதை செய்தார்கள்.

‘நான்முகனுடைய முகத்திலும், தோள், தொடை, காலிலும் மனிதர்கள் பிறந்தனர்’ என்ற ஜாதி விளக்கக் கதையை நம்பிய நாடு நம் நாடு. இந்தக் கதை நையாண்டி செய்யப்படும் நிலைக்கு நாம் வளர எவ்வளவு காலம் பிடித்தது! இன்றும் நையாண்டி செய்வதை, ‘நாத்திகம்’ என்று கூறிக் கண்டிப்பவர்கள் இங்கு ஏராளமாக இருக்கிறார்கள்.

கிரேக்க, ரோம் நாடுகளிலும்கூட, இம்மாதிரிக் கதைகள் படைக்கப்பட்டு மக்களும் நம்பினர்.

முழுமுதல் கடவுள் ‘ஜூவஸ்’ தேவனுக்கு ஒரு நாள் தாங்க முடியாத மண்டைக் குடைச்சல் உண்டானதாம். ஆரம்பமே எப்படியிருக்கிறது பாருங்கள். அவரோ அண்ட பிண்ட சராசரங்களைப் படைத்த ஐயன் - சகல சக்தியும் படைத்த தேவ தேவன். ஆனால், புராணீகன் கூறுகிறான், அவருக்கு மண்டைக்குடைச்சல் நோய் என்று. மண்டைக் குடைச்சல் மகேசனுக்கும் வருகிறது. ஆகவே, நம்மையும் கடவுளையும்விட மண்டைக் குடைச்சல் நோய்தான் மகா சக்தி வாய்ந்தது என்றாகிறது.

மண்டைக் குடைச்சலால் அவதிப்பட்ட மகேசனுக்கு மருந்திட, தேவர் பலரும் முனைந்தனர். வலியைப் போக்க யாராலும் முடியவில்லை. கடவுளர் உலகமே கலங்கியது.

வேதனையில் துடித்த தேவதேவன் ஜூவஸ்,  தன் மகன் ஹீபாஸ்டஸ் என்பானை அழைத்து, “கோடரி கொண்டு என் மண்டையைப் பிள” என்று உத்தரவிட்டார். தனயனும் தந்தை சொல் தட்டாமல் அதைச் செய்து முடித்தான்.
மண்டை பிளந்ததும், உள்ளேயிருந்து வடிவழகுடன் வெளிவந்தாள் ‘அதீனே’ என்ற கடவுள் - குழந்தை வடிவில் அல்ல; பருவ மங்கையாக, சகல அலங்காரத்துடன்! அவள் வெளிவந்ததும் மண்டைக் குடைச்சல் போயே போய்விட்டதாம்!

ஜூவஸூக்கு மண்டைக் குட்டைச்சல் வந்தது போல, இங்கே நம் ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்குத் தலைவலி வந்ததாம். பத்து அரைத்துப் போட்டதும் குணமாகிவிட்டதாம். 

கிரேக்க, ரோம் நாடுகளில், ஜூவஸூக்கு  மண்டைக் குடைச்சல் நோய் வந்த கதை வழக்கொழிந்துவிட்டது. அந்தக் கடவுளையும் மக்கள் வணங்குவதில்லை. அவர் ‘மாஜி’ கடவுள் ஆகிவிட்டார்!

இங்கே, ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்குத் தலைவலி வருவதும், அவருக்குப் பத்து அரைத்துப் பூசிப் பூஜை செய்வதும் இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன!#
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அறிஞர் அண்ணாவின், ‘மாஜி கடவுள்கள்’, பூம்புகார் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு; ஜூலை 1998.
Tuesday, October 13, 2015

பலன் தருமா புதுகைத் தமிழ்ப்பதிவர் திருவிழா?! - ஒரு நடுநிலை ஆய்வு.

‘பலன்’ என்னும் சொல், நற்பலன், தீப்பலன் எனும் இரண்டையும் உள்ளடக்கியது. முதலில், நல்ல பலன்களைப் பட்டியலிடுகிறேன். பின்னர் தீய பலன்களுக்கான பட்டியல்.....!


புதுகைப் பதிவர் திருவிழாவால் விளைந்த நல்ல பலன்கள்:

ஒன்று:
இந்த விழாவில் 300க்கும் மேற்பட்ட பதிவர்கள் பேரார்வத்துடனும் ஒத்த உணர்வுடனும் கலந்துகொண்டு,  ‘தமிழ் வாழும்; வளரும்’ என்ற நம்பிக்கையைத் தமிழ் ஆர்வலர்களின் மனங்களில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்கள்.

திருவாளர்கள் கவிஞர் நா.முத்துநிலவன்,  வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன், கவிஞர் மு.கீதாகவிஞர் தங்கம்மூர்த்திஜெயலட்சுமிபொன்.கருப்பையா, கு.ம.திருப்பதி, குருநாத சுந்தரம், வைகறைசெல்வாமது கஸ்தூரி ரெஙகன்ஸ்ரீமலையப்பன்கார்த்திஅ.பாண்டியன், மாலதி, ரேவதி, சோலச்சி, உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட விழாக்குழுவினரின் கடுமையான உழைப்பு, பெரும் எண்ணிக்கையிலான பிற பதிவர்களையும் தமிழுக்காக உழைக்கத் தூண்டும் வகையில் அமைந்தது.

இரண்டு:
போட்டி அறிவிக்கப்பட்ட சில நாட்களில், தரமான 260 படைப்புகள் இடம்பெற்றது. [அடுத்து வரும் போட்டிகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்]

மூன்று:
இணையத்தில் இன்றைய தமிழின் நிலை பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியுமான சிறந்த ஆய்வுக் கட்டுரைகளின் வரவு.

நான்கு;
தமிழ்நாடு அரசைப்[தமிழ் இணையக் கல்விக் கழகம்] பங்குகொள்ள வைத்ததன் மூலம், இணையத் தமிழ் வளர்ச்சியில் அது ஆற்ற வேண்டிய அரிய பெரும் பணிகளை நினைவூட்டியது.

ஐந்து:
மிகச் சிறப்பாக விழாவை நடத்தியதன் மூலம், நாளிதழ்களில் இது செய்தியாக வெளிவர, இணையத் தமிழ் குறித்துப் பொதுமக்கள் ஓரளவுக்கேனும் அறிய நேர்ந்தது.

ஆறு:
முகம் அறியா நிலை மாறி, தமிழ்ப் பதிவர்கள் நேரில் சந்தித்துத் தத்தம் உணர்வுளைப் பரிமாறிக் கொண்டதன் மூலம், தமிழின் மீதான அவர்களின் பற்று அழுத்தம் பெற்றிருப்பது.

ஏழு:
விழாவில் சிறப்புரை ஆற்றிய அறிஞர்கள், சுயபுராணம் வாசிக்காமல், தமிழின் வளர்ச்சி குறித்து மட்டுமே சிறப்பான ஆலோசனைகளை வழங்கியது; தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றுவதாக அறிவித்தது.

எட்டு:
தமிழ் வளர்ச்சி குறித்த இந்த விழாவில் இனிய தமிழ் பயன்படுத்தப்பட்டது.

ஒன்பது:
இணையத் தமிழ் வளர்க்கும் முயற்சியைத் தமி்ழ்ப் பதிவர்கள் தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்னும் நம்பிக்கையைத் தமிழ் மனங்களில் முகிழ்க்கச் செய்தது.

பத்து:
தமிழ் வளர்ச்சி குறித்த ஆலோசனைகளைப் பெற்றுத் தமிழ் வளர்ச்சிக்கான புதிய திட்டமிடுதலை நீச்சல்காரன் அவர்கள் மேற்கொண்டிருப்பது.

கொசுறு பலன்: “நான் விழாவில் கலந்துகொள்ளத் தவறிவிட்டேனே” என்று என் போன்ற பல பதிவர்களை ஏங்கச் செய்ததோடு, “அடுத்து நடைபெறும் விழாவில் அவசியம் கலந்துகொள்வேன்” என்று சபதம் செய்ய வைத்தது.


தீய பலன்கள்:
எதுவும் தென்படவில்லை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சந்தடிசாக்கில், இந்த வாரக் குங்குமத்தில்[19.10.2015] வெளியான என் கதையை இங்கு பதிவு செய்கிறேன்[புகழாசைதான்!]. என் கதை என்றால் முகம் சுழிக்காதவரா நீங்கள்? படியுங்கள்.


தலைப்பு:                                               கணக்கு

லை, கடைவீதி போய்ப் பரிசுப் பொருள் வாங்கிட்டுப் போகணும். பெங்களூர் போய்ச் சேர குறைஞ்சது மூனு மணி நேரம் ஆகும். புறப்படு சீக்கிரம்” என்றார் சிவாச்சலம்.

“ரெண்டு பேர் எதுக்கு? நீங்க மட்டும் போய் வாங்களேன்” என்றாள் கலையரசி.

“ஏன் நீயும் வந்தா என்னவாம்?”

“நம்ம வீட்டுக் கல்யாணங்களுக்கெல்லாம் சாமியப்பன் மட்டும்தான் வந்துட்டுப் போனார்.”

“அதனாலென்ன, அவங்க வீட்டுக் கல்யாணத்துக்கு நாம ரெண்டு பேருமே போகலாம். தப்பில்ல.”

“கிஃப்ட் வாங்கணும்னு சொன்னீங்க. அவர் நம்ம கோபிகா கல்யாணத்துக்கும் சரி, ரெண்டு பசங்க கல்யாணத்துக்கும் சரி வெறும் கையோடுதான் வந்தார். மொய்கூட வைக்கல.” -தன் விருப்பமின்மைக்கான காரணத்தை முன்வைத்தாள் கலையரசி.

“அதெல்லாம் சரி.....இப்ப அவருடைய ஒரே பையனுக்குக் கல்யாணம். முதல் தடவையா அவர் வீட்டு விசேஷத்துக்குப் போறோம். கல்யாணத்துக்குன்னு போற வகையில் நமக்கு ஒரே போக்குவரத்துச் செலவுதான். அவர் மூனு தடவை வந்து போயிருக்கார். அதிகச் செலவு. அது மட்டுமில்லாம, இது மாதிரி விசேஷங்களுக்குப் போறதால சொந்தபந்தங்களுக்கிடையே உறவு பலப்படும். இதிலெல்லாம் வரவு செலவுக் கணக்குப் பார்க்கக் கூடாதும்மா” என்றர் சிவாச்சலம்.

 “கிஃப்ட் வாங்கிட்டே போகலாங்க!” என்றாள் கலையரசி.
*****************************************************************************************************************************************************

நன்றி: குங்குமம் வார இதழ்.


                                          
Friday, October 9, 2015

நவக்கிரகக் கடவுள்களின் அவதாரக் கதைகள்! [ஜோதிடப் பிரியர்களுக்கு!!]

“ஜோதிடம் ஓர் அறிவியல் கலையே” என்று  வாதிடும் இன்றைய ஜோதிடர்கள் பலரும், நவக்கிரகங்களைக் கடவுள்களாக உருவகித்தே ஜாதகம் கணித்துப் பலன் சொல்லுகிறார்கள். 

நவக்கிரகங்கள் கடவுள்களா?

இந்தக் கடவுள்களின் அவதாரம் பற்றிய வேதபுராணக் கதைகளை இங்கே தொகுத்திருக்கிறேன். படித்து முடித்து, இவர்களெல்லாம் கடவுள்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

சூரியன்
இந்தக் கடவுள், காசியப முனிவருக்கும் ‘அதிதி’ என்கிற பெண்ணுக்கும் மகனாகப் பிறந்ததால், ‘ஆதித்தன்’[சூரியனின் வேறு பெயர்] என்ற பெயரைப் பெற்றான் [பாரதம்]. அதிதி 12 சூரியன்களைப் பெற்றதாகவும்  ஒரு சூரியனே மாதந்தோறும் வேறு வேறு கோலம் பூணுவதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

[சூரியன் தோன்றுவதற்கு முன்பே காசியபர் போன்ற மானுடர்கள் தோன்றியது எப்படி என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது எனக்கு. உங்களுக்கு?]

மார்க்கணடேய புராணம் சொல்லும் இன்னொரு கதை.....

இருள் மயமான இந்த அண்டத்தைப் பிரமன் பிளந்தான்[எதற்கு?]. அப்போது ‘ஓம்’ என்ற ஒலி உண்டாயிற்று. அந்த ஒலியிலிருந்துதான் சூரியன் தோன்றினான். 

[கற்பனையானவை எனினும் மேற்கண்ட கதைகள் சுவாரசியமானவை என்பதில் சந்தேகமில்லை].


சந்திரன்
வில்லிபுத்தூரார் சொல்கிறார்: “எங்கள் இறைவனாகிய திருமாலின் இருதயத்திலே பிறந்தவன் இவன்; நாள்தோறும் வானில் உள்ள நட்த்திர மங்கையரைக் கூடிக் குலபுபவன்.....”

இவனின் பிறப்பை விவரிக்கும் இதனினும் சுவையானதோர் அதிசயக் கதை.........

‘அத்திரி’ என்னும் பெயர் கொண்ட முனிவர் தவம் செய்துகொண்டிருந்தபோது, அவரிடமிருந்து வெளிப்பட்ட ‘விந்தணு’அவரின் உள்ளுறுப்புகள் வழியாக மேல் நோக்கிச் சென்று அவரின் கண் வழியாக வெளிப்படலாயிற்று.

அதனைக் கண்ணுற்ற இந்திரன், ஒரு பெரிய யோகியின் விந்தணு வீணாவதைத் தவிர்க்க, அதைத் தன் கரங்களில் ஏந்திப் பக்குவமாய் ஒரு பாத்திரத்தில் சேமித்துத் தன் [இந்திர]விமானத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தான். அவ்விந்தணுவே காலப்போக்கில் சந்திரனாய் உருக்கொண்டது.


செவ்வாய்
‘அங்காரகன். எனப்படும் செவ்வாய்க்கு, ‘மங்களன்’, ’ ‘குஜன்’ முதலான வேறு பெயர்களும் உண்டு.

சிவபெருமான் உமையம்மையைப் பிரிந்திருந்த காலத்தில், ஒரு நாள், அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து வேர்வை வெளிப்பட்டுப் பூமியில் விழுந்தது. அந்த வியர்வையே பின்னர் சந்திரனாக உருவெடுத்தது. இவனை நிலமகள் வளர்த்து ஆளாக்கினாள். என்றிவ்வாறாகப் புராணங்கள் கதைக்கின்றன.

[மனித உயிர்கள் தோன்றுவதற்கு விந்தணு தேவைப்படுகிறது. ஆனால், தேவர்களின் பிறப்புக்கு வெறும் வியர்வையே போதும் போலிருக்கிறது!]

பாரத்துவாச முனிவரின் விந்தணுவிலிருந்து சந்திரன் தோன்றினான் என்பதும் மற்றுமொரு புராணக்கதைதான்!


புதன்
‘தாரை’ என்பவள் குருபகவானின் மனைவி. இவள் சிலகாலம் சந்திரனின் அழகில் கிறங்கி மயங்கி, அவனுடன் தாம்பத்திய சுகத்தை அனுபவித்தாள்; கருவுற்றாள்.

கருவுற்ற நிலையில் மீண்டும் குருபகவானோடு இணைந்து இல்லற இன்பம் துய்க்கலானாள். இந்நிலையில் புதனைப் பெற்றெடுத்தாள்.

‘குழந்தை யாருக்குப் பிறந்தது?’ என்ற ஐயம் பலருக்கும் எழவே, “இக்குழந்தைக்குச் சந்திரனே தந்தையாவான்” என்று அறிவித்தாளாம் தாரை.

[தேவருலகில் எந்த அளவுக்குப் பெண்ணுரிமை போற்றப்பட்டிருந்தது பார்த்தீர்களா?]

இந்த உண்மையைப் பலரும் அறியும் வகையில் பிரமதேவனேஅறிவிப்புச் செய்ததாகவும் புராணங்கள் சொல்லுகின்றன.


பிருகஸ்பதி [எ] வியாழ பகவான்
தேவர்களுக்கெல்லாம் ஆசானாக விளங்கிய ‘குரு’வைத்தான் இவ்வாறு அழைப்பார்கள். இச்சொல்லுக்கு ‘அறிவில் சிறந்தவன்’ என்பது பொருள்.

பிரமதேவனின் பிரியத்திற்குரிய புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவரின் மகன் இவன். தாய் பெயர் சிரத்தா தேவி.

பிருகஸ்பதி பொன் வண்ண மேனி கொண்டவராம். நான்கு திருக்கரங்களை உடையவராம்.


சுக்கிரன்
இவர் பிருகு முனிவரின் திருமகனாக உதித்தவர்; அசுரர்களின் குரு.

முழுமுதல் கடவுளான சிவபெருமானின் திருவயிற்றில் தங்கியிருந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்த அதிசயப் பிறவி இவர்! இயல்பான தன் உடலிலிருந்து வெளி்யேறி, அந்தணன், அரசன், வேடன், மலைப்பாம்பு என்று பல உருவங்கள் பெற்று அலைந்து திரிந்து ஞானம் பெற்று, காலனின் ஆணையால் அசுரர்களுக்குக் குருவானான் என்பது கதை.


சனி
இவன் சூரியனின் மகனாவான்.

சூரியன், சஞ்ஞிகை என்பாளை மணந்து மூன்று பிள்ளைகளைப் பெற்றான்.
சூரியனிடமிருந்து வெளிப்பட்ட சூட்டைத் தாங்கும் சக்தியில்லாத சஞ்ஞிகை, தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி அங்கே விட்டுவிட்டுத் தன் தந்தையிடம் சென்றாள்.

அந்த நிழல் பெண்ணுடன்  சூரியன் புணர்ந்ததால் பிறந்தவனே ‘சனி’ ஆவான்.


ராகு & கேது
‘விப்பிரசித்தி’ என்னும் அசுரனுக்கும் ‘சிம்ஹிகை’ என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு.

அசுரரும் தேவரும் பாற்கடலைக் கடைந்ததால் கிடைக்கப் பெற்ற அமுதத்தை அசுரர்கள் பருகுவதைத் தடுக்க நினைத்தார் திருமால். மோகினியாக வடிவெடுத்து, இனிமையாகப் பேசி, எல்லோரையும் வரி்சையில் அமரச் சொன்னார். வரிசையில் முந்துவதற்கு அசுரர்கள் முண்டியடித்த நிலையில் தேவர்களுக்கு மட்டும் அமுதம் வழங்கினார். இதைக் கண்ணுற்ற ராகு, தேவ உருக்கொண்டு அமுதம் பெற்றுப் பருகினான். உண்மை வெளிப்பட்டபோது, திருமாலின் சக்ராயுதத்தால் அவன் தலை துண்டிக்கப்பட்டது.

தலையுடன் இரண்டு கைகளும் சேர்ந்து விழுந்தன.மற்றொரு பகுதி ஒரு தேசத்தில் விழுந்தது. அமுதம் பருகிய காரணத்தால் ராகு சாகாமல் இரு வேறு உருவங்களில் ராகுவாகவும் கேதுவாகவும் வளர்ந்தான்.

இவன் சூரிய சந்திரர்கள் மீது பகை கொண்டு அவர்களைப்பீடிக்கத் தொடங்கினான். கிரகணம் என்பது இதுதான்.

உண்மையில், ராகு கேது என்னும் பெயர்களில் கிரகங்கள் இல்லை. இவற்றைச் ‘சாயாக் கிரகங்கள்’ என்று சொல்லி ஜோதிட வல்லுநர்கள் சமாளிக்கிறார்கள்.
*****************************************************************************************************************************************************


Monday, October 5, 2015

அதி புத்திசாலிப் பெண்களும் ஆண்கள் படும் பாடும்!...நகைச்சுவைப் பதிவு!!

“இன்னும் என்ன பண்றே?” - கிசுகிசுத்தான் அவன். “எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குது” - அவள். ‘போட்டது போட்டபடி’க்கு என்ன பொருள்?

ஒரு வாரம்போல வாணிப நிமித்தம் ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்புகிறான் கணவன். குளித்து முடித்து, உணவருந்திப் படுக்கையறை புகுந்த அவனுக்கு ‘அந்த’ நினைப்பு!

“இன்னும் என்ன பண்றே?” -  மனைவியை அணுகிக் கிசுகிசுத்தான்.

அவனை ஓரக்கண்ணால் பார்த்து, “ஏல்லாம் போட்டது போட்டபடியே கிடக்குது” என்று புன்முறுவல் பூத்தாள் அவள். இந்தப் புன்முறுவலுக்கு என்ன அர்த்தம்?

‘குழந்தை தூங்காம விளையாடிட்டிருக்கு. நாத்தனார் நாவல் படிச்சிட்டுக் கொட்டக் கொட்ட முழிச்சிட்டிருக்கா. கிழவனும் கிழவியும் தொணதொணத்துட்டிருக்காங்க. எல்லாரும் தூங்கட்டும். அவசரப்படாதீங்க’ன்னு அர்த்தம்! இது எத்தனை ஆண்களுக்குப் புரியும்?

சில நேரங்களில், இந்தப் பெண்களின் பேச்சுக்கு எதிர்மறையாகப் பொருள்கொள்ள வேண்டும்.

தீபாவளிக்கு இரண்டு வாரம் இருக்கிறது. கணவன் அலுவலகம் புறப்படும்போது மனைவி குரல் கொடுக்கிறாள்: “இந்தத் தீபாவளிக்கு எனக்குப் பட்டுப்புடவை வேண்டாம்.”

“இன்னிக்கிச் சம்பள நாளாச்சே. மறக்காம பட்டுப் புடவை வாங்கிட்டு வந்துடுங்க” என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம். இதைப் புரிந்துகொண்டால் கணவன் பிழைத்தான். புரியாதவன் பாடு திண்டாட்டம்தான்.

இருவரும் ஒரு திருமணத்திற்குச் செல்கிறார்கள். ஆடம்பரமாக உடுத்து, அழகழகான பெண்கள் எல்லாம் வருவார்கள் இல்லையா? எவளோ ஒருத்தியைச் சுட்டிக்காட்டி, “இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா இல்லியா?’ என்று உங்களவள் கேட்டால், “உன்னை விடவா?” என்று கூசாமல் பொய் சொல்லத் தெரிய வேண்டும். “ஆமா” என்று உளறிக்கொட்டினால் ‘அது’ விசயத்தில் நீங்கள் பல நாள் பட்டினி கிடக்க வேண்டியிருக்கும்!

உங்கள் மனைவியின் தோழி,  செல்பேசியில் உங்களையும் அழைத்துக்கொண்டு தன்  திருமணநாள் கொண்டாட்டத்திற்கு வரச் சொல்லுகிறாள். “என் நாத்தனார் ரெண்டு பேரும் ஊரிலிருந்து வந்திருக்காங்க. அவங்களையும் அழைச்சிட்டு வரவா?” என்கிறாள் உங்கள் மனைவி. தோழியிடமிருந்து உடனடி பதில் இல்லை. கொஞ்சம் அமைதிக்குப் பிறகு அழைத்துவரச் சொல்லுகிறாள் அவள்.

அந்த அமைதிக்கு என்ன பொருள்?

“வேண்டாம்” என்பதே, அது உங்கள் மனைவிக்கும் பிற பெண்களுக்கு மட்டுமே புரியும். உங்களைப் போன்ற ஆண்களுக்குப் புரியாது.

கணவனும் மனைவியுமான இரண்டு ஜோடிகள் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்புகிறார்கள். முதலில் ஒரு ஜோடியின் வீடு வந்துவிடுகிறது. அந்தப் பெண், “வாங்களேன், காபி சாப்பிட்டுப் போறது” என்கிறாள்.

“சரி” என்று தலையாட்ட இருந்த உங்களைத் தடுத்து, “பரவாயில்ல அக்கா. வீட்டில் அவசர வேலை இருக்கு” என்று உங்களை இழுத்துக்கொண்டு வீடு வந்து சேர்கிறாள் உங்கள் துணைவி.

‘வாங்களேன்’, ‘போறது’ போன்றவை வெறும் உபச்சார வார்த்தைகள் என்பது உங்கள் குடும்பத் தலைவிக்கும் புரியும்; உங்களுக்குப் புரியவே புரியாது.

வீட்டில், எதிர்பாராமல் வந்த விருந்தாளியைச் சாப்பிட அழைக்கிறாள் உங்கள் மனைவி. “நீங்களும் சாப்பிடுங்க” என்று சொல்லாமல், “சாப்பிட்டுடுங்களேன்” என்று சொன்னால், அதற்குப் போதுமான அளவு உணவு இருப்பில் இல்லை என்று அர்த்தம். 

குரலின் ஏற்ற இறக்கம்,  வார்த்தைகளுக்கு இடையே விடும் இடைவெளி, புருவங்களின் அசைவு, இழுத்து விடும் பெருமூச்சு என்றிவைகளுக்கேற்ப பெண்களின் பேச்சுக்கான அர்த்தமும் மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.

பெண்களின் பேச்சை முழுமையாகப் புரிந்துகொள்வது பெண்களுக்கு மட்டுமே சாத்தியம். ஆண்களுக்கு?

ஊஹூம்!
*****************************************************************************************************************************************************

மார்ச் 1997 ‘ஓம் சக்தி’ இதழில் முருகுசுந்தரம் அவர்கள் எழுதியது [கொஞ்சமே கொஞ்சம் மாற்றங்களுடன்].