Oct 13, 2015

பலன் தருமா புதுகைத் தமிழ்ப்பதிவர் திருவிழா?! - ஒரு நடுநிலை ஆய்வு.

‘பலன்’ என்னும் சொல், நற்பலன், தீப்பலன் எனும் இரண்டையும் உள்ளடக்கியது. முதலில், நல்ல பலன்களைப் பட்டியலிடுகிறேன். பின்னர் தீய பலன்களுக்கான பட்டியல்.....!


புதுகைப் பதிவர் திருவிழாவால் விளைந்த நல்ல பலன்கள்:

ஒன்று:
இந்த விழாவில் 300க்கும் மேற்பட்ட பதிவர்கள் பேரார்வத்துடனும் ஒத்த உணர்வுடனும் கலந்துகொண்டு,  ‘தமிழ் வாழும்; வளரும்’ என்ற நம்பிக்கையைத் தமிழ் ஆர்வலர்களின் மனங்களில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்கள்.

திருவாளர்கள் கவிஞர் நா.முத்துநிலவன்,  வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன், கவிஞர் மு.கீதாகவிஞர் தங்கம்மூர்த்திஜெயலட்சுமிபொன்.கருப்பையா, கு.ம.திருப்பதி, குருநாத சுந்தரம், வைகறைசெல்வாமது கஸ்தூரி ரெஙகன்ஸ்ரீமலையப்பன்கார்த்திஅ.பாண்டியன், மாலதி, ரேவதி, சோலச்சி, உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட விழாக்குழுவினரின் கடுமையான உழைப்பு, பெரும் எண்ணிக்கையிலான பிற பதிவர்களையும் தமிழுக்காக உழைக்கத் தூண்டும் வகையில் அமைந்தது.

இரண்டு:
போட்டி அறிவிக்கப்பட்ட சில நாட்களில், தரமான 260 படைப்புகள் இடம்பெற்றது. [அடுத்து வரும் போட்டிகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்]

மூன்று:
இணையத்தில் இன்றைய தமிழின் நிலை பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியுமான சிறந்த ஆய்வுக் கட்டுரைகளின் வரவு.

நான்கு;
தமிழ்நாடு அரசைப்[தமிழ் இணையக் கல்விக் கழகம்] பங்குகொள்ள வைத்ததன் மூலம், இணையத் தமிழ் வளர்ச்சியில் அது ஆற்ற வேண்டிய அரிய பெரும் பணிகளை நினைவூட்டியது.

ஐந்து:
மிகச் சிறப்பாக விழாவை நடத்தியதன் மூலம், நாளிதழ்களில் இது செய்தியாக வெளிவர, இணையத் தமிழ் குறித்துப் பொதுமக்கள் ஓரளவுக்கேனும் அறிய நேர்ந்தது.

ஆறு:
முகம் அறியா நிலை மாறி, தமிழ்ப் பதிவர்கள் நேரில் சந்தித்துத் தத்தம் உணர்வுளைப் பரிமாறிக் கொண்டதன் மூலம், தமிழின் மீதான அவர்களின் பற்று அழுத்தம் பெற்றிருப்பது.

ஏழு:
விழாவில் சிறப்புரை ஆற்றிய அறிஞர்கள், சுயபுராணம் வாசிக்காமல், தமிழின் வளர்ச்சி குறித்து மட்டுமே சிறப்பான ஆலோசனைகளை வழங்கியது; தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றுவதாக அறிவித்தது.

எட்டு:
தமிழ் வளர்ச்சி குறித்த இந்த விழாவில் இனிய தமிழ் பயன்படுத்தப்பட்டது.

ஒன்பது:
இணையத் தமிழ் வளர்க்கும் முயற்சியைத் தமி்ழ்ப் பதிவர்கள் தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்னும் நம்பிக்கையைத் தமிழ் மனங்களில் முகிழ்க்கச் செய்தது.

பத்து:
தமிழ் வளர்ச்சி குறித்த ஆலோசனைகளைப் பெற்றுத் தமிழ் வளர்ச்சிக்கான புதிய திட்டமிடுதலை நீச்சல்காரன் அவர்கள் மேற்கொண்டிருப்பது.

கொசுறு பலன்: “நான் விழாவில் கலந்துகொள்ளத் தவறிவிட்டேனே” என்று என் போன்ற பல பதிவர்களை ஏங்கச் செய்ததோடு, “அடுத்து நடைபெறும் விழாவில் அவசியம் கலந்துகொள்வேன்” என்று சபதம் செய்ய வைத்தது.


தீய பலன்கள்:
எதுவும் தென்படவில்லை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சந்தடிசாக்கில், இந்த வாரக் குங்குமத்தில்[19.10.2015] வெளியான என் கதையை இங்கு பதிவு செய்கிறேன்[புகழாசைதான்!]. என் கதை என்றால் முகம் சுழிக்காதவரா நீங்கள்? படியுங்கள்.


தலைப்பு:                                               கணக்கு

லை, கடைவீதி போய்ப் பரிசுப் பொருள் வாங்கிட்டுப் போகணும். பெங்களூர் போய்ச் சேர குறைஞ்சது மூனு மணி நேரம் ஆகும். புறப்படு சீக்கிரம்” என்றார் சிவாச்சலம்.

“ரெண்டு பேர் எதுக்கு? நீங்க மட்டும் போய் வாங்களேன்” என்றாள் கலையரசி.

“ஏன் நீயும் வந்தா என்னவாம்?”

“நம்ம வீட்டுக் கல்யாணங்களுக்கெல்லாம் சாமியப்பன் மட்டும்தான் வந்துட்டுப் போனார்.”

“அதனாலென்ன, அவங்க வீட்டுக் கல்யாணத்துக்கு நாம ரெண்டு பேருமே போகலாம். தப்பில்ல.”

“கிஃப்ட் வாங்கணும்னு சொன்னீங்க. அவர் நம்ம கோபிகா கல்யாணத்துக்கும் சரி, ரெண்டு பசங்க கல்யாணத்துக்கும் சரி வெறும் கையோடுதான் வந்தார். மொய்கூட வைக்கல.” -தன் விருப்பமின்மைக்கான காரணத்தை முன்வைத்தாள் கலையரசி.

“அதெல்லாம் சரி.....இப்ப அவருடைய ஒரே பையனுக்குக் கல்யாணம். முதல் தடவையா அவர் வீட்டு விசேஷத்துக்குப் போறோம். கல்யாணத்துக்குன்னு போற வகையில் நமக்கு ஒரே போக்குவரத்துச் செலவுதான். அவர் மூனு தடவை வந்து போயிருக்கார். அதிகச் செலவு. அது மட்டுமில்லாம, இது மாதிரி விசேஷங்களுக்குப் போறதால சொந்தபந்தங்களுக்கிடையே உறவு பலப்படும். இதிலெல்லாம் வரவு செலவுக் கணக்குப் பார்க்கக் கூடாதும்மா” என்றர் சிவாச்சலம்.

 “கிஃப்ட் வாங்கிட்டே போகலாங்க!” என்றாள் கலையரசி.
*****************************************************************************************************************************************************

நன்றி: குங்குமம் வார இதழ்.