எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 27 ஏப்ரல், 2024

‘இந்தி’த் திணிப்பிலும் சாதனை நிகழ்த்துவாரா மோடிஜி?!?!

தமிழனாகப் பிறக்கவில்லையே என்று வருந்தி வருந்தி நொந்து நூலாகிப்போன மோடி அவர்களே,

எப்படியெல்லாமோ மட்டுமல்ல, இப்படியும்[கீழ்க்காணும் படம்] தமிழன் மீது திணிக்கப்படுகிறது இந்தி என்பது நீர் அறியாத ரகசியமா என்ன?

நாளெல்லாம் ராம நாமத்தை ஜெபிப்பதையும், முஸ்லிம்களைச் சபிப்பதையுமே உயிர் மூச்சாகக் கொண்டுள்ள மோடிஜி அவர்களே,

அதென்னய்யா ‘நிதி ஆப்கே நிகத்’[கீழே உள்ள அறிக்கை நகலை வாசிப்பீர்]?

உம்மிடம் உள்ள செயற்கை நுண்னறிவு மொழியாக்கக் கருவியால் இதைத் தமிழாக்கம் செய்ய இயலவில்லையா?

மூத்த மொழியாகிய தமிழின் பெருமையை உலகறியச் செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் உமக்கு, தமிழனுக்குப் புரியாத தலைப்பைக் கொடுத்து, விளம்பரம் செய்து நிகழ்ச்சி நடத்தப்படுவது தெரியாதா?

தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்தீர்/இருக்கிறீர் என்றால், இதற்குத்தான் துரோகம் என்று பெயர்; நயவஞ்சகம்[நயமாகப் பேசிக் கெடுப்பது] என்றும் சொல்லலாம்.

ஓட்டுக் கேட்க வரும்போதெல்லாம் வாய்கிழியத் தமிழைப் புகழாமல், இப்படியான துரோகத்தை நீர் செய்திருந்தால், இது இந்தி வெறியர்கள் வழக்கமாகச் செய்யும் அடாவடித்தனம்தான் என்றெண்ணி வருத்தப்படுவதோடு நிறுத்திக்கொண்டிருப்போம்; இந்தவொரு பதிவின் மூலம் ‘துரோகி’ என்று உம்மைச் சாடுவதற்கான அவசியம் நேர்ந்திருக்காது.

மீண்டும் நீர் ஆட்சியைத் தக்க வைப்பீரா அல்லவா என்பது ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகுதான் தெரியும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இன்னும் 35 நாட்கள் போல் கால அவகாசம் உள்ளது. அதுவரை இது போன்ற செயல்களின் மூலம் இந்தியைத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தி பேசாத அத்தனை மாநிலங்களிலும் திணி திணி என்று திணிக்கலாம்.

தேர்தல் முடிவு 100% உமக்குச் சாதகமாகவே அமையும். இந்தியாவில் பெரும்பான்மையினராக ‘இந்தி’யர்[மூடநம்பிக்கையாளரும்தான்] உள்ளவரை உம்மை எவரும் அசைக்க முடியாது. இனியும் நீரே பிரதமர். 

திணியும்! இந்தி வெறி தணியும்வரை[என்று தணியும்?] அதைத் திணியும்!! 



படம் உதவி[நன்றி]: https://thamizhanambi.blogspot.com/2024/04/blog-post.html

பதவி இழப்பதற்குள் ‘அந்த’ச் சாதனையை நிகழ்த்துவாரா மோடி?!

நம் நாட்டின் ஜனநாயகத் திருவிழா முடிவு பெறாத நிலையில்.....

தினம் தினம் ஊடகங்களில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளில் கணிசமானவை, தேர்தலில் வெற்றி பெற்று, மோடி அரியணையைத் தக்கவைப்பார் என்றே அறிவிக்கின்றன.

எனினும், கணிப்புகளில் பெரும்பாலானவை அவர் படுதோல்வி அடைவார் என்றும் பறைசாற்றுகின்றன.

மோடி தொடர்ந்து இந்த நாட்டின் பிரதமராக நீட்டிப்பாரோ அல்லவோ, அது பற்றிக் கிஞ்சித்தும் நமக்குக் கவலையில்லை.

நாம் வெகுவாகக் கவலைப்படுவது.....

உலகின் மிக மிக மிகப் பெரும்பாலான நாடுகளுக்கு, அரசின் சார்பாக அவர் பயணம் மேற்கொண்டுவிட்ட நிலையில், எஞ்சியிருக்கும் சில நாடுகளுக்கும் பயணம்[சுற்றுலா எனினும் ஏற்கத்தக்கதே] செய்து, உலகிலுள்ள அத்தனை நாடுகளுக்கும் சென்று திரும்பிய ஒரே பிரதமராக வரலாற்றுச் சாதனை நிகழ்த்துவார் என்பது நம் பெரு விருப்பமாக இருந்தது; இருக்கிறது.

அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தி முடிப்பதற்குள், தேர்தல் குறுக்கிட்டுவிட்டது என்பது வருந்தத்தக்க நிகழ்வாகும்; முடிவுகள் அறிவிப்பதிலும் காலதாமதம்[ஒன்றரை மாதம். முடிவு தெரியும்வரை நாம் உயிரோடு இருப்போமா என்று நாடெங்கிலும் பல கிழடுகள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது புலனாய்வுத்துறை அளித்துள்ள தகவல்] ஏற்படலாம்.

இந்நிலையிலும்.....

அந்தவொரு உலக சாதனையை மோடி நிகழ்த்திக்காட்டுதல் வேண்டும் என்பது நம் ஆசை... பேராசை.

அதற்கான வழி?

தேர்தல் முழுமையாக நடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்படுவதைக் காலவரையின்றி ஒத்திவைக்கலாம்[தேர்தல் நடத்த ஒன்றரை மாதம் எடுத்துக்கொண்டது போல. தேர்தல் ஆணையம் நினைத்தால், தோல்வி பயத்தில் ஜனநாயகத்தைச் சீர்குலைக்க எதிர்க் கட்சிகள் சூழ்ச்சி, முஸ்லிம்கள் சதி என்று தள்ளிவைப்புக்கான காரணங்களையும் அடுக்கலாம்]. அந்தக் கால இடைவெளியில், குட்டிக் குட்டி நாடுகள் உட்பட மோடி செல்லாத எஞ்சியுள்ள நாடுகளுக்கும் சென்றுவரலாம்; சாதனையை முழுமை பெறச் செய்யலாம்.

மிக மிகச் சாமானியனான நமது இந்த ஆலோசனையை ஊடகங்கள் பலவும் மோடியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லுதல் வேண்டும் என்பது நம் பணிவான வேண்டுகோள்.

வாழ்க மோடி! நிகழ்த்துக உலக சாதனை!!