எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

எத்தனை எத்தனைக் கேள்விகள்! எப்படி நம்புவது கடவுளை!?

கடவுள் குறித்த '©தி சென்ஸ் ஹப்'இன் மிக விரிவான ஆய்வுரையில் கூறியது கூறல், தெளிவின்மை போன்ற குறைகள் உள்ளன. அவை தவிர்க்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட சிறந்த கருத்துகள் நம் மொழி மரபுக்கேற்பத் தொகுக்கப்பட்டுள்ளன.

*கடவுள், மனிதர்கள் உட்பட உயிர்களுக்காகப் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்றால், அது எல்லை அல்லது வரம்பு கண்டறியாத அளவுக்கு இத்தனைப் பெரிதாக இருப்பது அவசியமா?

*மனிதர்களைப் படைத்த கடவுள் எந்தவொரு புலனாலும் அறிய முடியாத அளவுக்கு ஏன் மறைந்திருக்க வேண்டும்?  

*மதங்கள் மிகப்பல. அவை அனைத்திற்கும் ஒருமித்த கடவுள் கொள்கை இல்லாமல்போனது ஏன்?

*உயிர்களும் மனிதர்களும் பாவ காரியங்களைச் செய்யும்போது கடவுள் மட்டும் அதைச் செய்வதில்லை என்பது நம்பத் தகுந்ததாக இல்லைதானே?

*கடவுள் இருப்பதற்கான உண்மையான அழுத்தமான ஆதாரங்களைக் கண்டறிந்து சொன்னவர் எவருமில்லையல்லவா?

*எல்லாம் வல்ல, அனைத்தையும் அறிந்த, அனைத்தையும் நேசிக்கும் கடவுள் இருக்கிறார் என்றால், இயற்கைப் பேரழிவுகள், வறுமை, நோய்கள், தாங்கொணாத கொடூர நிகழ்வுகள் போன்றவற்றால் உயிரினங்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாவது ஏன்? 

*பிரபஞ்சத்தைப் படைத்தவர் கடவுள் என்றால் கடவுளைப் படைத்தவர் யார்? அவர் சுயமாக உருவானார் என்றால், பிரபஞ்சம் ஏன் சுயமாக உருவாகியிருக்க முடியாது?

*மேலான அறிவுள்ளவர் கடவுள் என்றால், அவரால் உருபவாக்கப்பட்ட அண்டவெளி நிகழ்வுகளில் ஓர் ஒழுங்கு தேவை. நட்சத்திரங்கள் கோள்கள் என்று அங்கிருப்பவை ஒன்றையொன்று விழுங்குவது, சிதறடிப்பது, சிதறுவது என்று எல்லாவற்றிலும் அவ்வொழுங்கு இல்லாதிருப்பது ஏன்?

*கடவுளை நம்பினால், சொர்க்கம் நரகம் போன்றவற்றையும் நம்ப வேண்டியுள்ளது. அவை இருப்பதற்கான ஆதாரங்களும் கண்டறியப்படவில்லைதானே? 

*கடவுளால் நிகழ்கின்றன என்று நம்பப்பட்ட நிகழ்வுகளுக்கும் கடவுள் எனப்படுபவருக்கும் சம்பந்தமே இல்லை என்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதை ஏற்கலாம்தானே?

*கடவுள் நம்பிக்கை இல்லாமல் நிறைவாக வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்புறம் எதற்குக் கடவுள்?

ஆக.....

கடவுள் இல்லை என்று சொல்லுவதற்கான காரண காரியங்கள் நிறையவே உள்ளன. உள்ளார் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கண்டறியப்பட்டால் கடவுளை நம்புவதில் பிரச்சினை ஏதும் இல்ல.

https://kadavulinkadavul.blogspot.com/2024/10/blog-post_6.html