ஞாயிறு, 31 ஜூலை, 2022

முப்பது வயதுக் காமுகியும் பதினைந்து வயதுப் பள்ளிச் சிறுவனும்!

ஸ்வப்னா[30 வயது]வுக்கு 4 குழந்தைகள். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் 'குடிவாடா குட்மேன்' பேட்டையில் வசிப்பவர் இவர். நோய்வாய்ப்பட்ட கணவன் வேறு எங்கோ[?] 4 குழந்தைகளுடன் வசிக்கிறார்.

தனிமையில் இன்பசுகம் காணும் வழிவகை அறியாமல் தவித்துவந்தார் ஸ்வப்னா. 

வீட்டிற்குத் தொ.கா. பார்ப்பதற்காகப் பக்கத்து வீட்டு 15 வயதுச் சிறுவன்[8ஆம் வகுப்பு மாணவன்] வந்துபோவது வழக்கம்.

மீசை முளைக்காத அந்தச் சிறுவனின் மூலம் தன் தாபத்தைத் தணித்துக்கொள்ளத் திட்டம் தீட்டினார்  ஸ்வப்னா[அனுபவசாலிகளுடன் தொடர்பு கொண்டால் அக்கம்பக்கத்தார்க்குத் தெரிந்துவிடும் என்று அவர் பயந்திருக்கக்கூடும்!]. 

யோசித்தார்; அவனை ஆபாசக் காணொலிகள் பார்க்க வைத்தார்.

சிறுவனின் மனதில் பாலுறவு ஆசை சுரந்தது. அவன் மூலம் அந்தரங்கச் சுகம் அனுபவித்தார். சுகத்தில் திளைப்பது தொடர்ந்தது.

கத்துக்குட்டிச் சிறுவன் மூலம் பெற்ற சிற்றின்பம் அவருக்குக் 'கட்டுபடி' ஆனதா என்பது தெரியவில்லை; கிடைத்தவரை போதும் என்று திருப்தி கண்டிருக்க வேண்டும். 

நாலு பேருக்குத் தெரியாமல் நான்கு சுவருக்குள் சல்லாபித்தது போதும் என்று இருந்திருக்கலாம். அவருடைய கெட்ட நேரமோ என்னவோ, சிறுவனுடன் ஐதராபாத்துக்குச் சென்று விடுதியில் அறை எடுத்துத் தங்கிக் காமக் களியாட்டத்தில் நாட்களைக் கடத்தினார்.

இருவரும் ஒருசேரக் காணாமல் போனதை வைத்து, ஸ்வப்னாவைச் சந்தேகித்த சிறுவனின் தந்தை காவல்துறையில் புகார் செய்தார். துப்பறிந்து ஸ்வப்னாவையும் சிறுவனையும் கண்டுப்பிடித்த போலீஸ்காரர்கள், சிறுவனுக்குப் புத்தி சொல்லிப் பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள்; ஸ்வப்னாவை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்[ஆதாரம்:  https://www.dinakaran.com/news_detail.asp?Nid=787311].

*** ஸ்வப்னாவின் இடத்தில் ஒரு சுப்பண்ணாவை இருத்தி, அவர், மனம் பக்குவப்படாத 15 வயதுச்  சிறுமியைத் தன்வசப்படுத்தி வன்புணர்வு செய்ததாகக் கற்பனை செய்யுங்கள்; சிந்தியுங்கள்.

சிறுமியின் எதிர்காலம்?

திருமணம் ஆவது குதிரைக் கொம்பு. மனநிலை சிதைவதற்கு நிறையவே வாய்ப்பு இருப்பதால், நிறையப் படித்துத் தேர்ந்து ஒரு வேலை தேடிக்கொள்வது சாத்தியமில்லை.

வசதி படைத்த எவனுக்கெல்லாமோ வைப்பாட்டியாகவோ, உடம்பை விலைபேசி வயிறு வளர்ப்பவளாகவோ காலம் தள்ள வேண்டியதுதான்; கௌரவமான வாழ்க்கை வாழ்ந்திட வழியே இல்லை. 

இவளை இந்த அவல நிலைக்கு ஆளாக்கியவனுக்குத் தண்டனை வழங்கும் அதிகாரம் நமக்கு வழங்கப்பட்டால்.....

'அவனை நடுத்தெருவில் வைத்துக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்'; 'தூக்கிலிட வேண்டும்' என்பன போன்றவை நம் தீர்ப்பாக இருக்கும்.

அதிகாரம் வழங்கப்படவில்லை என்றால், குறைந்தபட்சம், அவனின் விரைகளை அகற்றி ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்றொரு கோரிக்கையாவது வைப்போம்.

ஒரு சிறுமியை வன்புணர்வு செய்தவனுக்கு, விரை நீக்கம் செய்வது ஏற்கத்தக்கக்  குறைந்தபட்சத் தண்டனை என்றால்.....

சிறுவனின் மனதில் காம உணர்வைக் கிளர்ந்தெழச் செய்து வன்புணர்வு செய்து, பிஞ்சில் பழுக்க வைத்து, அவனின் எதிர்காலத்தை[ஓட்டல்களில் எச்சில் இலை எடுத்துப் பெஞ்சு துடைக்கலாம்]ச் சிதைத்த ஸ்வப்னா போன்ற பெண்களுக்கான குறைந்தபட்சத் தண்டனை என்ன?

எளிதில் விடை காண இயலாத கேள்வி இது!

===========================================================================

சனி, 30 ஜூலை, 2022

நச்சுப் பாம்பை நாகதேவன் ஆக்கி வழிபடும் முழுமூடர்கள்!!!

'உலக அளவில், ஓர் ஆண்டில் பாம்புக் கடியால் இறப்பவர்கள் 1,50,000; இந்தியா 50,000; தமிழ்நாடு 10,000. உயிர் பிழைத்தாலும் பலருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்க இயலவில்லை.'

ஆக, உலகிலேயே பாம்புக் கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்குப் பல ஆயிரம்பேர் பாம்புக் கடிக்கு ஆளாகி 5,00,00க்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள் என்பதற்கும், அந்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கினர் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பதற்கும் பல ஆதாரங்கள் உள்ளன. 

இது விசயத்தில் தமிழர்கள் முன்னிலை வகிப்பதற்கான காரணம் என்ன?

இங்கு முட்டாள்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பதே.

இந்த நச்சுப் பாம்புக்கு இங்கே தரப்படும் மரியாத கொஞ்சநஞ்சமல்ல.


பாம்பு என்று சொன்னால் 'பாவம்' தொற்றிக்கொள்ளுமாம். அதனால், 'நாகனார்' என்கிறார்கள்[மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள 'பாமணி'யில் சுயம்புலிங்கமாகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்].

இவருக்கு, 'நாகேஸ்வரர்' என்று இன்னொரு பெயர் உண்டு. சென்னை குன்றத்தூரில் குடிகொண்டு பக்தர்களிடம் குறை கேட்கிறார்.

'ஆதிசேஷர்' என்றால் உலகில் அறியாதார் எவருமிலர்.

கோடகநல்லூரில், 'காளத்தீசுவரர்' என்னும் திருநாமம் பெற்று, நாடிவரும் பக்தர்களின் துயர் களைகிறார்.

'நாகராஜர்' என்பது இவருக்கான 'செல்லப் பெயர்'.

இந்தப் பாம்புக்கு, 'பாம்புரேஸ்வரர்' என்றொரு பெயரும் உண்டு. 'திருப்பாம்புரம்' என்னும் ஊரில் தங்கியிருந்து தரிசனம் வழங்குகிறார்.

இப்படிப் பலான பெயர்களில் குறிப்பிட்டு வழிபட்டு நிறைவு பெறாத பக்திமான்கள், விண்ணில் உலாவும் கோள்களையும் பாம்புகள் ஆக்கிவிட்டார்கள்[ராகு கேது-சர்ப்பக் கிரகங்கள்].

இவர்களின் இந்த மூடத்தனங்களை, அழியாமல் கட்டிக் காத்ததில்... காப்பதில் சிவபெருமான் தன் தலையிலும் கழுத்திலும் இவற்றை மாலையாக்கிக் கையில் கங்கணம் ஆக்கிக்கொண்டது, விஷ்ணுபகவான் பஞ்சணை ஆக்கியது போன்ற கட்டுக்கதைகளுக்கு மட்டுமல்ல, ஆன்மிகத்துக்கென்று இடம் ஒதுக்கி, ஆபாசப் புராணக் கதைகளை வாரி வழங்கும் ஊடகங்களுக்கும் முக்கியப் பங்குண்டு.

எது எப்படியோ, அண்டவெளியில் கடவுள் எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று அறிவியலாளர்கள் நாளும் தேடிக்கொண்டிருக்கிற இந்த அறிவியல் யுகத்தில், நச்சுப் பாம்பை நாகதேவனாக்கி வழிபடும் முட்டாள்கள் உள்ளவரை, தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தப் புண்ணிய பாரதமும் அறிவியல் வளர்ச்சியில் பெரிதும் பின்தங்கியே இருக்கும் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை!

===========================================================================

வெள்ளி, 29 ஜூலை, 2022

பிராணாயாமமும் அந்திமக் காலப் பயணமும்!

ற்று முன்னர், 'பி.எஸ் ஆச்சார்யா'வின் 'பிராணாயாமம்' என்னும் புத்தகத்தை வாசித்தபோது, 11 உயிரினங்களின் சுவாச அளவு[நிமிடத்திற்கு], அவற்றின் ஆயுள் ஆகியவை பற்றிய பட்டியல் என் கண்ணில் பட்டது.

மனிதர்களைக் காட்டிலும் பாம்புகளும்[120], ஆமைகளும்[155] அதிக ஆண்டுகள் வாழ்வதை அறிய முடிந்தது. யானைகளின் ஆயுள் மனிதர்களைப் போலவே 100 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'பிராணாயம்' என்னும் மூச்சுப் பயிற்சியை முறையாகப் பயின்று, அதைத் தொடர்ந்து செய்தால், ஒரு நிமிடத்தில் நாம் இழுத்துவிடும் மூச்சின் எண்ணிக்கை குறைவதோடு வாழ்நாளும் அதிகரிக்கும் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பட்டியல்:

பிராணாயாமப் பயிற்சி பற்றி புத்தகங்களில் படிக்க முடிகிறதே தவிர, பயிற்சி அளிப்பவர்கள் ஊரூருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

உங்கள் ஊரில் இருந்தால், பயிற்சியாளரை அணுகிப் பயன் பெறுங்கள்.

பயிற்சி பெறும் வசதி வாய்க்காதவர்களுக்கும், பிரணாயாமத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கும் ஆன பரிந்துரை:

சப்பணமிட்டு அமர்ந்து, நன்றாக மூச்சை இழுத்து, ஐந்தாறு நொடிகள் தேக்கிவைத்துச் சீராக வெளியேற்றும் பயிற்சியை 15 நிமிடங்களுக்குக் குறையாமல் தினமும் மேற்கொண்டாலே போதும்.

இதன் விளைவாகக் காலப்போக்கில் நாம் இழுத்துவிடும் மூச்சின் எண்ணிக்கை குறையும். 

குறைகிறதோ இல்லையோ, ஆயுள் கூடுவது சாத்தியமோ இல்லையோ, உயிர்க்காற்று[ஆக்ஸிஜன்] உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான ரத்தக் குழாய்களில் பரவுவதன் மூலம் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்துக் கொடிய நோய்களின் தாக்குதல் பெருமளவில் குறையும் என்பதும், அந்திமக்காலப் பயணம் அமைதி நிறைந்ததாக அமையும் என்பதும் உறுதி.

இது உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கான மிக மிக மிக அவசியத் தேவை ஆகும்!
=========================================================================

வியாழன், 28 ஜூலை, 2022

எயிட்ஸ்[AIDS] நோய்க்கு 'HIV' காரணமல்ல!?!?!?

HIV கிருமியால்தான் 'எயிட்ஸ்' என்னும் உயிர்க்கொல்லி நோய் மனிதர்களைத் தாக்குகிறது என்பது பல ஆண்டுகளாகப் பலராலும் நம்பப்படுகிற ஒரு தகவல்.

மருத்துவர்களும், மருத்துவத் துறை சார்ந்தவர்களும் இதையே உறுதிப்படுத்துகிறார்கள். அவ்வப்போது ஊடகங்களில் HIV குறித்த விழிப்புணர்வு அறிவிப்புகள் வெளியாகின்றன. இந்நிலையில்.....

தற்செயலாக, 'உடலின் மொழி'[ஆசிரியர்: 'Healer அ.உமர்பாரூக்'; பாரதி புத்தகாலயம், சென்னை] என்னும் நூலை வாசிக்க நேர்ந்தபோது கீழ்க்காணும் தகவல்களை அறிவது சாத்தியமாயிற்று.

*"எயிட்ஸுக்கு HIV காரணமல்ல. இதைப் பற்றி ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளில் எக்கச்சக்கமான குளறுபடிகளும் பித்தலாட்டங்களும் உள்ளன" -HIV கிருமியை முதன்முதலில் கண்டுபிடித்த. பாரீஸ் பாஸ்டர் கல்லூரியின் கிருமியியல் துறைப் பேராசிரியர் 'டாக்டர் லுக்மோன்பிக்னியர்.  தகவல்: மியாமி ஹெரால்டு[23.12.1990].

*"HIV என்பவை மிகச் சாதாரணமான கிருமிகள். விஞ்ஞானிகள் கூறும் அசாதரணமான விளைவுகள் HIV கிருமிகளால் ஏற்படுவது சாத்தியமே இல்லை" -மரபணு உயிரியல் துறையைச் சார்ந்த பேராசிரியர் ஹார்வி பியாலி. தகவல்:  -'ஸ்பின்', ஜூன் 1992.

*"எயிட்ஸ் நோய்க்கு HIV காரணமல்ல; மற்ற ஏதேனும் காரணங்களால் எயிட்ஸ் வரக்கூடும்" -1980ஆம் ஆண்டு மருத்துவ ரசாயனத் துறை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவரும், மரபணுத்துறைப் பேராசிரியருமான 'டாக்டர் வால்டர் கில்பர்ட்' அவர்கள். தகவல்: 'ஆம்னி', ஜூன் 1993.

*"எயிட்ஸுக்குக் காரணம் HIV கிருமிதான் என்பதை நிரூபிக்க இயலவில்லை" -கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் மரபணுத் துறைப் பேராசிரியர் 'டாக்டர் ஹாரி ரூபின். தகவல்: சண்டே டைம்ஸ், லண்டன்[03.04.1994]} 

*"எயிட்ஸ் உயிர்க்கொல்லி நோய் என்று பரப்புரை செய்வதை ஒழிக்க வேண்டும்" -சுவிஸ் செஞ்சிலுவைச் சங்க ரத்த வங்கியின் இயக்குநரும், பெர்ன் பல்கலைக் கழகத்தின்  நோய் எதிர்ப்பாற்றல் துறையின் சிறப்புப் பேராசிரியருமான 'டாக்டர் ஆல்ப்ரெட் ஹாஸ்ஸிக்'. தகவல்: சண்டே டைம்ஸ், லண்டன்[03.04.1994].

* * * * *

உலகின் மிகப் பிரபலமான மருத்துவ அறிவியல் அறிஞர்களால் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப்பட்ட, HIV  குறித்த மேற்கண்ட கருத்துகள் மறுத்துரைக்கப்பட்டு, 'எயிட்ஸுக்கு HIVதான் காரணம்[எச் ஐ வி நோய்த்தொற்றின் மிகக் கடுமையான உந்துதலில் விளைவதே எயிட்சு நோயாகும் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81  என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

எது சரி, எது தவறு என்னும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு மனதைக் குழப்பிக்கொள்ளாமல், இம்மாதிரியான கொடூர நோய்களின் பிடியில் சிக்காமல் பாதுகாத்துக்கொள்வதே புத்திசாலித்தனம் ஆகும்.
===============================================================================

புதன், 27 ஜூலை, 2022

விஞ்ஞானிகள் சொல்வதெல்லாம் உண்மையா?!

29.07.2022 நாளிட்ட 'குங்குமம்' வார இதழில், 'பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைக் கண்டறிந்தது போலவே.....' என்னும் தலைப்பில் ஓர் அறிவியல் கட்டுரை வெளியாகியுள்ளது.

'பிரபஞ்சத்தின் ஆரம்பத் தோற்றத்தைக் கண்டறியும் முயற்சியில் 'நாசா' வெற்றி அடைந்திருக்கிறது. அது குறித்த புகைப்படம் ஒன்றையும் சமீபத்தில் அது வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நம் பேரண்டம் எப்படி இருந்திருக்கிறது என்பதை அது காட்டுகிறது[79000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட 'ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ்'[The James Webb Space Telescope] என்னும் அதி சக்தி வாய்ந்த தொலை நோக்கியை நாசா பயன்படுத்தியதாம்].

[The James Webb Space Telescope]

நாசா வெளியிட்டுள்ள புகைப்படம் உட்பட நமக்குப் புரியாத பல விசயங்களை விளக்கிச் சொல்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் உதவியை நாடியிருக்கிறது குங்குமம்.

அவர் தந்த விளக்கங்கள்[புகைப்படத்துடன் தொடர்பில்லாதவை தவிர்க்கப்பட்டுள்ளன]:

"..... பொதுவாகவே லென்ஸ்களின் வேலை என்ன? நாம் காணும் காட்சியைப் பெரிதாக்கிக் காட்டுவது அல்லது, துல்லியமாகக் காட்டுவது. தொலை நோக்கிகளின் வேலையும் அதுவே.

அதே மாதிரியான ஒரு லென்ஸ் கருவிதான் 'ஜேம்ஸ் வெப்' தொலை நோக்கியிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த லென்ஸ் 431 அடி குவிய நீளம் கொண்டது.

1300 கோடி ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல முடிந்த நம்மால் இதே மாதிரி எதிர்காலத்தை நோக்கியும் செல்ல முடியுமா என்னும் கேள்வி பலர் மத்தியில் எழுந்திருக்கிறது.

நிச்சயம் முடியாது. காரணம்.....

எப்படி நடந்து முடிந்த ஒரு நிகழ்வைப் புகைப்படங்களாகக் கேமராவில் கேப்ச்சர் செய்து வைக்கிறோமோ அதே டெக்னாலஜிதான் இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த விஷயங்கள்[நிகழ்வுகள்&காட்சிகள்?] அங்கே அப்படியே இருக்கின்றன....."

விஞ்ஞானி மயில்சாமி அவர்களின் விளக்கவுரையை வாசித்து வந்த என்னால், அடிக்கோடிட்ட மேற்கண்ட தொடரைக் கடந்து மேலே வாசிக்க இயலவில்லை. காரணம்.....

இந்த நிகழ்வு குறித்த சந்தேகம்.

பிரபஞ்சப் பொருள்களிலும் நிகழ்வுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன என்று சொன்னவர்கள் விஞ்ஞானிகளே.

அதாவது, பொருள்களில்[உயிர்கள் உட்பட] மாற்றங்கள் நிகழ்வது போலவே, பிரபஞ்ச நிகழ்வுகளிலும் காட்சிகளிலும் மாற்றங்கள் நிகழ்வது இயற்கை.

ஆக, மாற்றம் என்பது எங்கும் எதிலும் தவிர்க்க இயலாததாக இருக்கையில், 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த விஷயங்கள்[கட்டுரையில் இச்சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்வுகள் அல்லது காட்சிகள் என்றே கருதலாமா?], அண்மைக் காலத்தில் 'ஜேம்ஸ் வெப்' மூலமாகப் படம் பிடிக்கப்படும்போதும் அங்கே அப்படியே மாறாமல் இருந்தது எப்படிச் சாத்தியமாயிற்று?

===========================================================================

மிக முக்கியக் குறிப்பு:

பள்ளிப் பருவத்தில் கொஞ்சம் அறிவியல் படித்ததோடு சரி. ஆர்வம் காரணமாகக் கண்ட கண்ட அறிவியல் கட்டுரைகளை இணையத்தில் வாசிப்பது பழக்கமாகிப்போனது. 

அவ்வகையில், குங்குமத்தில் இக்கட்டுரையை வாசித்தபோது இக்கேள்வி எழுந்தது. இதைப் பதிவுலக நண்பர்களுடன் பகிரவே இந்தப் பதிவு[போதிய அறிவியல் அறிவு வாய்க்கப்பெற்றவர்கள் இது குறித்து விரிவானதொரு பதிவு எழுதினால் அது பெரும் பயன் நல்குவதாக அமையும்].

வருகைக்கு நன்றி.


செவ்வாய், 26 ஜூலை, 2022

ஓடும் ரயிலை நிறுத்திய கம்பளிப் பூச்சிகள்!!![பகிர்வு]

யில்கள் மோதி இந்தியாவில் எத்தனையோ யானைகள் பலியாகியுள்ளன; எத்தனையோ பேருந்துகள் மற்றும் சரக்கு லாரிகள் ஓடும் ரயிலில் மாட்டிச் சின்னாபின்னமாகியுள்ளன. இந்த விபத்தின்போது ரயிலில் இருப்பவர்களுக்குச் சத்தம் கேட்கலாம். மற்றபடி, ரயில் தடையில்லாமல் சென்றுகொண்டிருக்கும். இதற்குக் காரணம் ரயிலின் எடையும் மற்றும் அதன் வேகமுமாகும். ஆனால், இந்த ரயிலைப் புழுக்கள் ஒன்று சேர்ந்து நிறுத்தியுள்ள சம்பவம் நடந்ததுண்டு என்றால் நம்புவீர்களா?

நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது வரலாறு.

ரயிலை நிறுத்தியவை சிவப்புக் கம்பளிப் புழுக்கள்.(Red hairy caterpillar). இந்தப் புழுக்களின் உடலில் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் முடிகள் நிறைந்திருக்கும். ஒரு புழுவின் எடை கிராம்கூட இருக்காது; நீளம் சுமார் மூன்று அங்குலம் இருக்கும். 

இந்த இனத்தைச் சார்ந்த புழுக்கள் மிகவும் சுறுசுறுப்பானவை. வேகமாக ஓடும் சக்தியுடையவை. இந்தப் புழுக்கள் வேர்க்கடலைத் தோட்டத்திற்கு வரும். ஒன்று இரண்டு வந்தால் பரவாயில்லை; ஆயிரக்கணக்கில் வரும். வேர்க்கடலைச் செடியின் இலை, தழை என எல்லாவற்றையும் தின்று தீர்க்கும். அங்கு மருந்துக்குக்கூடச் செடியில் இலையைப் பார்க்க முடியாது. ஆடு, மாடு மேய்ந்தால்கூட ஆங்காங்கே பச்சை தெரியும். ஆனால், இந்த புழுக்களின் கோரப்பசிக்கு முழுத் தோட்டமும் பலியாகும். விவசாயிகளின் நிலை அதோகதிதான்.

கம்பளிப்புழு

பட மூலாதாரம்,ANDREW HIPPERSON / EYEEM / GETTY IMAGES

இந்தப் புழுக்கள் கூடு கட்டும் காலத்தில் ஆயிரக்கணக்கில் ஒரு இடத்தில் குவிந்து கிடக்கும். 

அப்படி ஒரு நாள் சோழவந்தான் அருகே தண்டவாளத்தில் பல ஆயிரக்கணக்கான சிவப்புக் கம்பளிப் புழுக்கள் குவிந்துகிடந்துள்ளன. மதுரையிலிருந்து சுமார் 600 பயணிகளுடன் வேகமாக வந்த பாண்டியன் விரைவு ரயில் இந்தப் புழுக்களின் மேல் ஏறியது. புழுக்கள் ரயிலின் சக்கரத்தில் நசுங்கிக் கூழ் போல் திரவ நிலையை அடைந்ததுள்ளன. இதனால் வழு வழு என அதிக வழுக்கும் தன்மை உடைய புழுவின் சகதி உருவாகியுள்ளது. 

இந்தச் சகதியில் ரயிலின் சக்கரங்கள் மாட்டிக்கொண்டன. இங்குச் சக்கரங்கள் சுழலுகின்றன. ஆனால், ரயிலால் நகர முடியவில்லை. சக்கரங்கள் நின்ற இடத்திலேயே சுற்றியவண்ணம் இருக்கின்றன. ரயிலால் இந்தப் புழுக்களின் கூட்டத்தைத் தாண்ட முடியவில்லை. 

இது நடந்து சுமார் 15 ஆண்டுகள் இருக்கும்.

நடுவழியில் ரயில் நின்றால் பழுது நீக்கப் பொறியாளர்களை அழைப்பது வழக்கம். ஆனால், இந்தத் தருணத்தில் பூச்சியியல் வல்லுநர்களை வரவழைத்து ஆலோசனை கேட்டுள்ளனர்! 

ரயிலின் போக்குவரத்தைச் சரி செய்ய முதலில் தண்டவாளத்திலிருந்த புழுக்களை அகற்றினர். பின்னர் சக்கரத்திலிருக்கும் இறந்த புழுக்களின் சகதியைக் காரதிரவம் கொண்டு கழுவிச் சுத்தப்படுத்தினர். பின்னர்தான் ரயில் அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கியது.

==============================================================================================https://www.bbc.com/tamil/science-62170035

திங்கள், 25 ஜூலை, 2022

வாழ்க 'குமுதம்' அதிபர் பா.வரதராசன்! வளர்க குமுதம்!!

//என் காளிக்கு எத்தனை நாவுகள்? சுமார் 780[இந்திய மொழிகள்].

இவற்றில் 22 மட்டுமே அதிகாரப்பூர்வமாக அரசியலமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 38 மொழிகள் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கின்றன.

இவை ஒவ்வொன்றுக்கும் குடியேற்ற[?] அல்லது குடியேற்றப்பட்ட[ஒரு மொழியை அழியவிட்டு அதனிடத்தில் இந்தியைக் குடியமர்த்தி வளர்ப்பது?] வரலாறு உண்டு.

இந்த மாற்றத்தில் சில மொழிகள் பலியாயின; சில கொன்றழிக்கப்பட்டன.

தேசிய மொழி என்று எதுவும் இல்லை//

மேற்கண்ட வகையிலான மனதை வருத்தும் கருத்துரை இடம்பெற்ற நூல் அருந்ததிராயின் கட்டுரைகள் அடங்கிய 'ஆஸாதி'[மொழியாக்கம்: ஜி.குப்புசாமி] ஆகும்.

குமுதம் 'அரசு கேள்வி-பதில்'[27.07.2022]இல்.....

'சமீபத்தில் மனதை உலுக்கிய புத்தகம்?' என்னும் கேள்விக்குத் தரப்பட்ட பதிலில் இடம்பெற்ற புத்தகம்தான் இந்த 'ஆஸாதி'![அருந்ததிராய் இன்னும் ஆணித்தரமாகவும் பலருக்கும் தெளிவாகப் புரியும் வகையிலும் தன் கருத்தைப் பதிவு செய்திருக்கலாம்].

கடந்த காலங்களில் 'பாஜக'வுக்கு ஆதரவாளராகச் செயல்பட்ட 'பா.வரதராசன்' அவர்களின் இதழில்[குமுதம்], 'பாஜக'வின் இந்தி[மட்டுமே] வளர்ப்புக் கொள்கைக்கு எதிராகச் செய்தி வெளியானது அண்மைக்கால அதிசய நிகழ்வுகளில் ஒன்று!


வாழ்க குமுதம் அதிபர் பா.வரதராசன்! வளர்க குமுதம் இதழின் விற்பனை!!

===========================================================================

ஞாயிறு, 24 ஜூலை, 2022

'கதை'ன்னா புரிகிற மாதிரி சொல்லுங்க ரஜினி!

 ன்புக்கும் மரியாதைக்கும் உரிய 'உச்ச' நடிகர் ரஜினி அவர்களே,


சென்னையில் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்ற 'யோகதா சத்' சங்கத்தினுடைய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நீங்கள் ஆற்றிய சொற்பொழிவுக்கிடையே கதையும் சொல்லியிருக்கிறீர்கள்[https://www.bbc.com/tamil/india-62277476].

'ஒரு நாள் காத்தாடி ஒன்று போய்க்கொண்டிருந்தது' என்பது உங்கள் கதையின் தொடக்கம்.

இந்தத் தொடக்கம் புரிந்துகொள்ள இயலாத வகையில் என்னை மலங்க மலங்க விழிக்க வைத்தது. 

காத்தாடி தானாகவே போக்கொண்டிருந்ததா? யாருமே பறக்க விடாமல்[சிறுவர்கள் பட்டம் விடுவது போல] அதுவாகவே போவது எப்படிச் சாத்தியமாயிற்று[உங்களின் பாபா படத்தையோ, ராகவேந்திரா படத்தையோ நான் பார்த்திருந்தால் இதற்கு விடை கிடைத்திருக்குமோ என்னவோ? உங்களின் படங்களைப் பார்க்காதவர்களுக்கும் புரியும்படியாக நீங்கள் பேசியிருக்க வேண்டும்].

இது ஒருபுறம் இருக்கட்டும், கதையின் மையப் பகுதிக்கு வருவோம்.

'யோகானந்தா' என்பவர் தன் சகோதரியிடம், "அந்தக் காத்தாடியை என் கைக்கு வரவழைக்கிறேன்" என்று சொல்லி, சொல்லிவாறே செய்துகாட்டினார் என்பதும், அவரின் சகோதரி, "இது ஒரு தற்செயல் நிகழ்வுதான்" என்று மடக்கவே, மீண்டும் ஒரு காத்தாடியை அவர் தன் கைக்கு வரவழைத்துக் காட்டிப் பேரதிசயம் நிகழ்தினார் என்பதும் கதை.

இந்தக் கதையைப் 'பாபா' படத்தில் வைத்ததாகவும் சொல்லியிருக்கிறீர்கள். வைப்பதற்கு முன்.....

"காற்றாடியைக் கைக்கு வரவழைத்தது போல் தெருவில் போகும் ஒரு கன்னிப் பெண்ணை வரவழைத்துத் தன் மடியில் உட்கார வைக்க முடியுமா யோகானந்தாவால்?" என்றொரு கேள்வி உங்களின் மூளையில் உதிக்காமல்போனது ஏன்?

இத்தக் கதையைக் குறைந்தது ஓர் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தால் மக்கள் நம்பியிருப்பார்கள்[உங்களின் ரசிகர்கள் உட்பட]. இந்த அறிவியல் யுகத்திலும் இதெல்லாம் நடக்கும் என்று எப்படி உங்களால் நம்ப முடிந்தது?!

"ஸ்ரீ ராகவேந்திரா மற்றும் பாபா படங்கள் வெளிவந்த பிறகுதான் (முறையே 1985 மற்றும் 2002 இல்) அவர்களைப் பற்றிப் பலருக்குத் தெரியவந்தது. பாபா படத்தைப் பார்த்து ஏராளமான மக்கள் யோகதாவில் உறுப்பினர்களானார்கள், சிலர் இமயமலைக்குச் சென்று அனிகேத் குகையைப் பார்வையிட்டனர்" என்று பெருமைப்பட்டிருக்கிறீர்கள்.


மக்களை மூடர்கள் ஆக்கியதற்கும் ஆக்குவதற்கும் இருப்பில் இருக்கும் கடவுள்களும் அவதாரங்களும் போதும். மேலும் இரண்டு கடவுள் அல்லது கடவுள் அவதாரங்களை அறிமுகப்படுத்தியது நீங்கள் செய்த குற்றம். இப்படியொரு குற்றத்தைச் செய்துவிட்டு அதற்காகப் பெருமைப்படுகிறீர்களே, இது நியாயமா?


உங்களின் ரசிகர்கள் இருவர் யோக சன்யாசிகளாக மாறிவிட்டதாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.


மனிதர்கள் ஐம்புலங்களோடும் ஆறறிவோடும் பிறப்பது வாழ்க்கையை அனுபவிக்கவும், பிறருக்கு உதவி செய்து இன்புறுவதற்கும்தான். இருவரைச் சன்னியாசிகளாக[இவர்களால் யாருக்கு என்ன பயன்?] ஆக்கியது உங்களுக்குத் தப்பான செயலாகத் தோன்றவில்லையா?!


கடந்தகால நிகழ்வுகளையும் எதிர்கால வாழ்வையும் பற்றிக் கவலைப்பட்டுப் பொழுதை வீணடிக்காமல், குழந்தைகளைப் போல நிகழ்கால வாழ்வைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்றும், மருத்துவமனைக்குப் போகாமலே வாழ்ந்து முடித்து மரணத்தைத் தழுவ வேண்டும் என்றும் தாங்கள் சொன்ன அற்புதமான கருத்துகள் என்னைப் பெரிதும் மகிழ்ந்திட வைத்தன. ஆனால்.....


ஓர் ஆன்மிகவாதியாக நீங்கள் சொன்ன நம்ப முடியாத கதையும், ராகவேந்திரரையும் பாபாவையும் தொடர்புபடுத்திச் சொன்ன கருத்துகளும் அந்த மகிழ்ச்சியை இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிட்டன.


ரஜியான தங்களின் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையும் தன்னடக்கமும், ஒரு நடிகராக வெளிப்படுத்திய அசாத்தியத் திறமையும் எனக்கு வெகுவாகப் பிடித்திருக்கின்றன; உங்களின் ஆன்மிகமும் அது குறித்த உரைகளும் முற்றிலும் விதிவிலக்கானவை.

===========================================================================


சனி, 23 ஜூலை, 2022

நான் இந்தியன்!... 'இந்தி'யனல்ல!!

கீழ்க் காண்பது என் 'கை பேசி'க்குச் சற்று முன்னர் வந்த செய்தி.

//AD-ARWGOV

One nation. One emotion. One identity. This 15th Aug, bring home the National Flag & celebrate Azadi Ka Amrit Mahotsav with Har Ghar Tiranga//


'ஒரு நாடு. ஒத்த உணர்ச்சி[தமிழனாக இந்தியன்]'... சரி.

'One identity'?

அதென்ன  'ஒரு அடையாளம்'?...  'இந்து'வாக இருத்தலும் 'இந்தி' பேசுதலுமா?

பிறப்பாலும், இனத்தாலும், மொழியாலும், நாகரிகத்தாலும் வேறு வேறு அடையாளங்களைக் கொண்டவர்களின் தொகுப்புதானே இந்தியா[நாங்கள் இந்தியர்கள் அல்ல என்று யாரும் சொல்லவில்லையே?] அப்புறம் எதற்கு 'ஒரு அடையாளம்' என்னும் சொற்சேர்க்கை?

அப்புறம்.....

'Azadi Ka Amrit Mahotsav with Har Ghar Tiranga' என்று புரியாத மொழியில்[இந்தியா, சமசுக்கிருதமா?] சொல்லி அதைக் கொண்டாடச்[celebrate] சொல்கிறார்கள்.

கொண்டாடுவதற்கு முன்னால் நாம் எழுப்பும் கேள்வி.....

அந்தந்த மாநிலத்தவருக்கு அவரவர் தாய்மொழியில் செய்தி அனுப்பலாமே. இந்தியைத் தவிர[ஆங்கிலம் தீண்டத் தகாத அந்நிய மொழி?] வேறு இந்திய மொழி தெரிந்தவர்களே நடுவணரசு அலுவலகங்களில் இல்லையா?!

கூகுளாரிடம் கொடுத்தால் நொடிப் பொழுதில்[ஓரளவேனும் புரியும் வகையில்] மொழியாக்கம் செய்வாரே?

'கர் புர்[Har Ghar]  இந்தி வளர்ந்தால் மட்டுமே இந்தியா வளரும் என்று நினைக்கிறார்களா?

ஆட்சி நடத்தப் பெரும்பான்மை பலம் இருப்பதால் தாய்மொழிப் பற்றாளரை மதிக்காத விபரீதப் போக்கு இதற்கெல்லாம் காரணமா?

இப்போதைக்குக் காரணம் எதுவாகவோ இருக்கட்டும், இனியேனும் யோசித்துச் செயல்படுவது 'இந்தி'க்காரர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியருக்கும் நன்மை பயப்பதாக அமையும்!

===========================================================================

வெள்ளி, 22 ஜூலை, 2022

ஒன்றரை வயதில் 'பூப்பு' எய்திய இங்கிலாந்துக் குழந்தை!!!

'லிசா' என்னும் இங்கிலாந்துப் பெண்ணுக்கு இப்போது 23 வயது.

ஒன்றரை வயதுக் குழந்தையாக இருந்தபோதே இவளின் பிறப்புறுப்பில் ரத்தம் வெளியேறத் தொடங்கியது. அது மேலும் சில நாட்கள் தொடர்ந்தது.

வருத்தம் அடைந்த இவளின் பெற்றோர் மருத்துவரை அணுகினார்கள். "இதற்கு முன்கூட்டிப் பருவமடைதல்' என்னும் அரிதான நிகழ்வு காரணமாக இருக்கலாம்" என்று ஆறுதல் மொழி கூறி அனுப்பினார் அவர்.


8 வயதிலிருந்தே, இவள் வயது வந்தவரைப் போல ப்ரா அணிய வேண்டியிருந்தது. இங்கிலாந்தின் நியூகேஸில் பகுதியைச் சேர்ந்தவரும், இப்போதைய, வாடிக்கையாளர் சேவை மைய ஊழியருமான 'லிசா லூயிஸ்', இந்த நிலை காரணமாகத் தனது வகுப்புத் தோழர்கள் தன்னை மோசமாக இழித்துப் பேசுவதாகக் கூறியுள்ளார்.

பேட்டி ஒன்றில், "மற்றவர்களைவிடவும் நான் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்தேன். எனது மார்பகத்தின் அளவு மிகவும் அதிகரித்தது, 7 வயதிலிருந்தே அது வளர ஆரம்பித்திருந்தது. அதனால், பிரா அணிய நேர்ந்தது. தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது, ​​நான் எனது பள்ளித் தோழிகளுடன் நீச்சல் செல்வேன். உடை மாற்றும் அறையில், மற்றவர்கள் என்னைப் பற்றித் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். மார்பக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டாயா என்று என்னிடமே கேட்டுக் கேலி செய்வார்கள்" என்று மிகவும் வருத்தப்பட்டாராம்.


இதை 'முன்கூட்டிப் பருவமடைதல்' என்று மருத்துவர் கூறினாரே, இந்த முன்கூட்டிப் பருவமடைதல் உலக அளவில் எத்தனைக் குழந்தைகளுக்கு நிகழ்ந்துள்ளது என்பதை அறிய இயலவில்லை.


பெற்றவர்கள் வேதனைக்கு உள்ளாகும் வகையில், பருவ வயதைத் தாண்டியும் பூப்பு எய்தாத பெண்களுக்கிடையே இந்தச் சிறுமியின் வாழ்வில் ஏன் இந்த அவலம்?!


எல்லாம் 'அவன்' செயல்! அவனின்றி அணுவும் அசையாது!! ஹி... ஹி... ஹி!!!

==============================================================

***பதிவு செய்திருந்த ஆங்கிலச் செய்தியின் ஆதார முகவரி, கவனக்குறைவால் காணாமல்போனது. சிறிது நேர முயற்சியில் மீட்டெடுக்க இயலவில்லை. வருந்துகிறேன்.




வியாழன், 21 ஜூலை, 2022

கள்ளக் காதலை ஒழிப்பதற்கான ஆகச் சிறந்த வழிகள்!!!

பெற்றெடுத்த பிள்ளைகளையும் கல்யாணம் கட்டியவனையும் துறந்து கண்டவனோடு ஓடிப்போவது, கண்டித்தால் கொலை செய்வது, தற்கொலை புரிவது என்றிவ்வாறான அசம்பாவிதங்கள் அன்றாடச் செய்தி ஆனதால், மனம் நொந்து ஊன் உறக்கமின்றி இரவு பகலாகச் சிந்தித்ததில் 'கள்ளக் காதல்"ஐ ஒழிப்பதற்கான கொஞ்சம் வழிமுறைகளை என்னால் கண்டறிய முடிந்தது.

சிறந்ததொரு சமுதாயக் கடமை என்று கருதி அவற்றைத் தொகுத்தளிக்கிறேன்.

வழிமுறைகள்:

*கள்ளக் காதலர்கள் ஈருடல் ஓருயிராய் உடலுறவுச் சுகத்தில் திளைத்துக் கிடக்கும் அந்தரங்கக் காட்சிகளைக் 'காணொலி' ஆக்கி, சமூக வலைத்தளங்களிலும் 'யூடியூப்'தளத்திலும் வெளியிடுவோருக்குப் பெரும் தொகை பரிசாக வழங்கப்படும் என்றும், அவர்கள் குறித்த தகவல்கள் வெளிடப்பட மாட்டா என்றும் அரசு அறிவிக்கலாம். இந்தக் காணொலிகளைக் காணும் ஆண்களும் பெண்களும் கனவிலும் கள்ள உறவு கொள்ளத் துணிய மாட்டார்கள் என்பது 100% நிச்சயம்.

*'கள்ளக் காதலில் ஈடுபடுவோர் அடுத்தடுத்து வரும் பிறவிகளில் தெரு நாய்களாகப் பிறந்து, அந்தரங்கச் சுகம் அனுபவிக்கும்போதெல்லாம் சிறுவர்களிடம் கல்லடிபடுவார்கள்' என்று 'சத்துக்குரு' ஜக்கி[தன் முற்பிறவி பற்றிச் சொன்னவர்] போன்ற மகான்களைக் கொண்டு அறிவித்தால், அவர்களின் கோடானுகோடித் தொண்டர்கள் தங்களின் கற்பொழுக்கம் காப்பதில் அதிகக் கவனம் செலுத்துவார்கள் என்பது உறுதி.

*பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் 'பிக்பாக்கெட்' திருடர்களுக்கான பெயர்களைப் புகைப்படங்களுடன் விளம்பரம் செய்து வைத்து எச்சரிப்பது போல, அகப்பட்டுக்கொண்ட காதலர்களையும் இப்படி விளம்பரப்படுத்தினால் பொதுமக்கள் அவற்றைப் பார்த்துக் குதூகளிப்பதுடன், விழிப்புணர்வும் பெறுவார்கள்.

*நம் கடவுளர்கள் பலரின் கள்ள உறவுகளையும் அவற்றால் நேர்ந்த விபரீதங்களையும் அப்பட்டமாகப் படம் பிடிக்கும் புராண இதிகாசக் கதைகளை நூல்களாக்கி மக்களுக்கு இலவசமாக வழங்கினால் அவற்றிலிருந்து இவர்கள் நிறையவே பாடம் கற்பார்கள்; கள்ள உறவுக் கொடுமைகள் வெகுவாகக் குறையும்.

*கள்ளக் காதல் குற்றங்களில்[கடத்தல், வன்புணர்வு, அடிதடி, வெட்டு, குத்து, கொலை போன்றவை] ஈடுபட்டுத் தண்டனை பெற்றவர்களின் துயர அனுபவங்களைச் 'சிறப்பு நேர்காணல்கள்' மூலம் பதிவு செய்து, அவற்றை  ஊடகங்கள் மூலம் பெருமளவிலான மக்களுக்குக் கொண்டு சேர்க்கலாம்.

மேற்கண்ட தந்திர உத்திகளைக் கையாண்டும் எதிர்பார்த்த/பார்க்கும் பலன்கள் கிட்டவில்லையெனின்.....

*மிகப் பல ஆண்டுகள் கள்ள உறவில் ஈடுபட்டுச் சாதனை நிகழ்த்தியவர்களை அடையாளம் கண்டு, விழாக்கள் எடுத்து அவர்களைச் சிறப்பித்தால், நல்ல உறவுக்கான மதிப்பைக் கள்ள உறவும் பெறுவதற்கான சூழல் உருவாகும்.

*கள்ள உறவில் ஈடுபடுவது குற்றச் செயலல்ல என்று நீதிமன்ற ஒப்புதலுடன் அரசாங்கமே அறிவிக்கலாம். அவ்வாறு செய்வதோடு, 'கள்ள உறவென்ன, நல்ல உறவென்ன இரண்டுமே அசிங்கமான உறவுகள்தான்' என்பது போன்ற தத்துவப் போதனைகளைப் பரப்புரை செய்தால், கள்ள உறவைப் பெரிய குற்றமாகக் கருதாத நிலை உருவாகும்; குற்றச் செயல்கள் குறையும்.

*ஆசை இருந்தும் 'அந்த' உறவில் ஈடுபடத் தயங்கும் 'தில்' இல்லாத ஆண்களுக்காக, 'சிக்கிக்கொள்ளாமல் 'கள்ளக் காதல் செய்வது எப்படி?' என்று நூல் வெளியிட்டு 'மலிவு' விலையில் விற்பனை செய்தால், க.கா.குற்றங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து, இதைக் குற்றமாகக் கருதுவோர் எண்ணிக்கை குறைய, இதனால் விளையும் விபரீதங்கள் மட்டுப்படும்.

                                             *   *   *   *   *

மேற்கண்ட ஆலோசனைகள் அடியேனின் 'சிறுமதி'யில் உதித்தவை. குற்றங்குறைகள் இருப்பின் பொறுத்தருள்க! ஹி... ஹி... ஹி!!!

=====================================================================================

புதன், 20 ஜூலை, 2022

கழுதையும் கடவுளும் ஜக்கி வாசுதேவும்!!!

கேட்போருக்கும் புரியாமல், வாசிப்போருக்கும் புரியாமல், எதைப் பற்றிப் பேசுகிறார் என்பது அவருக்கும் புரியாமல் பேசிப் பேசிப் பேசியே மக்கள் மனங்களில் தானொரு மாபெரும் 'ஞானி' என்னும் மாய பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பவர், ஜகதீஸ் என்கிற ஜக்கி வாசுதேவ் என்பதைப் பலமுறை என் பதிவுகள் மூலம் வலியுறுத்தியிருக்கிறேன். 

அதை மேலும் உறுதிப்படுத்தவே இந்தப் பதிவு.

பேச்சோ எழுத்தோ எதுவானாலும், ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து அதை ஒட்டியே கருத்தைப் பதிவு செய்தல் வேண்டும் என்பது எழுத்துலக மரபு.

சத்குரு என்றுதனக்குத்தானே சூட்டிக்கொண்ட  பட்டத்தைப் பல்வேறு விமர்சனங்களுக்கிடையேயும் கைவிடாத 'விடாக்கண்டன்' ஜக்கி வாசுதேவ், 'பிரார்த்தனை' பற்றியதொரு கேள்விக்கு அளித்த பதில்[அடைப்பில் மஞ்சள் வண்ணத்தில் உள்ள விமர்சனங்கள் அடியேனுடையவை]:

#
எதற்காகப் பிரார்த்தனை செய்கிறீர்கள்? கடவுளை அறிந்துகொள்வதற்காகவா? அதல்ல உங்கள் நோக்கம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் முட்டாள் இயந்திரமாக கடவுளை நினைத்திருக்கிறீர்கள்[கடவுளை ஒரு இயந்திரம், அதுவும் முட்டாள் இயந்திரம் என்று எவரும் சொன்னதில்லை. இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்து மக்களை இவர் முட்டாள்கள் ஆக்கும் குயுக்தியைக் கருத்தில் கொள்ளுங்கள்].

உங்கள் பிரார்த்தனைகள் வெறும் சடங்குகளாக இருக்கும்வரை, ஒரு கோடிமுறை செய்தாலும், அதனால் பலனில்லை. பிரார்த்தனை என்பது வெறும் சடங்காக நின்றுவிடாமல், உணர்வில் மலர வேண்டும்[என்று சொல்கிற இவர் ஆதியோகி என்னும் பெயரில் பெரிய சிலை எழுப்பி அதற்கும், அங்குள்ள லிங்கத்திற்கு தீபாராதனை காட்டிச் சடங்குகள் செய்வது யாரையெல்லாம் முட்டாள்களாக்க?!]. 

கடவுளை வழிபடு, கேட்டதைக் கொடுப்பார் என்று உங்களுக்கு மறுபடி மறுபடி சொல்லப்பட்டிருப்பதால், அவரிடம் கோரிக்கைகளை வைப்பதையே பிரார்த்தனை என்று நினைத்துவிட்டீர்கள். அச்சத்தினாலோ, ஆசையினாலோ வழிபடுவது, பிரார்த்தனை அல்ல[அச்சத்தினாலும் ஆசையினாலும் செய்வதுதான் பிரார்த்தனை. இதெலென்ன தவறு?]. அது வெறும் சடங்குதான். கடவுளுக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட கழுதையைக் காட்டி அதை வழிபட்டால்தான் உங்கள் துன்பங்கள் தீரும் என்றால், அதையும் சந்தோஷமாகச் செய்வீர்கள், அப்படித்தானே?[எதையெல்லாமோ தின்று ஜீரணித்து மலம் கழித்து வாழும் ஜக்கி 'சத்குரு'-கடவுள்களின் குரு- ஆகலாமென்றால் கழுதை கடவுள் ஆவதில் தவறேதும் இல்லை].

துக்கத்தில் இருப்பவர்களால் கடவுளைத் தரிசிக்க முடியாது. ஆனந்தமாக வாழ்வது எப்படி என்று உணர்ந்து கொள்ளுங்கள். அதன்பின் கடவுளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்![ஆனந்தமாக வாழ்பவனுக்குப் பிரார்த்தனையே தேவையில்லை. 'தலைப்பு, பிரார்த்தனை; கடவுளைப் புரிந்துகொள்வது பற்றியல்ல' -இவை உலகமகா ஞானிக்குப் புரியாமல் போனது ஏன்?!].

மேலும் பாவம், புண்ணியம், மூளை, மனம் பற்றியெல்லாம் உளறிக்கொட்டியிருக்கிறார் இந்தச் 'சத்து'க்குரு. விருப்பம் உள்ளவர்கள் முகவரியைச் சொடுக்கலாம்[https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/ethu-paavam-ethu-punniyam]. 
========================================================================================

செவ்வாய், 19 ஜூலை, 2022

மரண பயத்தை வெல்வதற்கான மிக எளிய வழிகள்!!!

ரணம் குறித்த அச்சத்திலிருந்து விடுபடுவது அத்தனை எளிதல்ல.

அவரவர் போற்றி வழிபடும் கடவுளைச் சரணடைந்தால் அது சாத்தியமாகும் என்பதாக மகான்கள் எனப்படுபவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது பலராலும் அறியப்பட்ட ஒன்று.

ஆனால், அப்படிக் கிஞ்சித்தும் அச்சத்திற்கு இடம்தராமல் மரணத்தை எதிர்கொண்ட மகான்களுக்கும், அவர்கள் சொல்லும் வழியைப் பின்பற்றி அதை வென்று வாழ்ந்தவர்களுக்குமான பட்டியல் எதுவும் வெளியானதாகத் தெரியவில்லை; அறிவியல் ரீதியான போதிய ஆதாரங்களும் இல்லை.

அவர்களின் நிலை எதுவாகவோ இருந்துவிட்டுப்போகட்டும், சராசரி மனிதர்களால் மரண பயத்துக்கு இடம் தராமல் வாழ்தலும், ஒரு காலக்கட்டத்தில் அஞ்சாமல் அதைத் தழுவுதலும் சாத்தியமா என்பதே நம் கேள்வி.

ஆற்றில் நீந்தி விளையாடும் சிறார்களுடன் தன் பிள்ளையும் நீச்சலடிப்பதைக் கரையிலிருந்து வேடிக்கை பார்க்கும் ஒரு தாய், அது சுழலில் சிக்கி உயிர் பிழைக்கப் போராட நேர்ந்தால், கண்ணிமைப் பொழுதில் ஆற்றில் பாய்ந்து அதை மீட்க முயலுகிறாள்.

பிள்ளை அவளால் மீட்கப்படலாம். மாறாக, அதனுடன் சேர்ந்து அவளும் உயிரிழக்கலாம்.

தான் மூச்சுத் திணறி உயிரிழந்துகொண்டிருக்கும் அந்தக் கணங்களில் தன் பிள்ளையைப் பற்றிய கவலைதான் அவள் நெஞ்சில் நிறைந்திருக்குமே தவிர, தான் உயிரிழப்பது பற்றிய பயத்துக்கு அவள் ஆளாவதில்லை[பெற்ற குழந்தைகளைத் தவிக்கவிட்டுக் கள்ளக் காதலனுடன் ஓடிப்போகும் 'காமப் பிசாசுகள்' விதிவிலக்கு].

இது ஓர் உதாரணம்.

இந்தத் தாயைப் போலவே, தான் உயிருக்குராய் நேசிக்கிற உறவுகள் ஏதேனும் ஒரு காரணத்தால் உயிர் பிழைக்கப் போராடும்போது, தனக்குரிய உடலுறுப்புகள் மட்டுமல்லாது, உயிரையே தரத் தயங்காதவர்களும் இருக்கிறார்கள்.

எவ்வகையான தொடர்போ ஒட்டுறவோ இல்லாத ஒரு குழந்தை சாலையின் குறுக்கே சென்று விபத்துக்கு உள்ளாக நேரும்போது, இமைப் பொழுதும் தன் சாவைப் பற்றி நினையாமல் அதைக் காப்பாற்றுகிற கருணை உள்ளம் கொண்டவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இப்படி உற்றார் உறவினர் என்றில்லாமல், தம் இனத்துக்காகவும்,  நாட்டுக்காகவும் மரண பயத்தை அலட்சியப்படுத்தித் தம் உயிரைத் தியாகம் செய்தவர்கள் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

ஆக, ஒவ்வொரு மனிதனும் குறைந்தபட்சம் உற்றார் உறவினர் மீதும், அண்டை அயலார் மீதும் மிக்க அன்பு செலுத்தி வாழ்வதும், மேலே குறிப்பிடப்பட்டவர்களைப் போன்ற, தியாக மனம் படைத்தவர்களை அவ்வப்போது நினைவுகூர்வதும் மரண பயத்தை வெல்வதற்கான ஆகச் சிறந்த வழிகள் எனலாம்[மரணம் இயற்கையானது என்பதை ஏற்கும் பக்குவம் இருந்தால், மரணத்தைத் தழுவும்போது பாசத்திற்கு உரியவர்களின் பிரிவை நினைந்து வருந்துவதும் குறையும்]. 

மரண பயத்தை முற்றிலுமாய் வெல்வது சாத்தியப்படாமல் போயினும், இறுதி நாள்வரை பெருமளவில் அதை மறந்து வாழ்வது எளிது என்று நம்பலாம்!

=====================================================================================

திங்கள், 18 ஜூலை, 2022

திருட்டுச் சுகம்!!!


திர்த்த வீட்டுக்காரன் கிளம்பிப் போவதைப் பார்த்ததும் 'பேசி'யை எடுத்துக் கனகாவின் ஃபோன் எண்ணைப் பதிவுசெய்து காத்திருந்தான் பன்னீர்.

"அலோ....." -கனகா.

"நான் பன்னீர்.....'

கதவைத் திறந்துகொண்டு வெளிப்பட்ட கனகா, இடது காதில் போனை வைத்துக்கொண்டே வலது கையால் "என்ன?" என்பது போல், சைகை செய்தாள்.

"வரட்டுமா?" என்பதாக, நெஞ்சைத் தொட்டுச் சைகையாலேயே கேட்டான் பன்னீர்.

சில நிமிடங்கள் தாமதமாக,  "வேண்டாம்" என்று உறுதிபடச் சொன்னாள் கனகா.

"உன் வீட்டுக்கார் கடைக்குப் போனதைப் பார்த்தேன்....." -முடிக்காமல் நிறுத்தினான்.

"திரும்ப வந்தார்னா வசமா மாட்டிக்குவோம்" -கனகாவின் குரலில் எக்கச்சக்கப் பயம்.

"இப்போதுதானே போனார்? மதியம் சாப்பாட்டுக்குத்தானே வருவார்." 

"அதுக்குள்ள வந்து இருந்து காரியத்தை முடிச்சிட்டுப் போயிடலாம்னு நினைக்கிறியா?" என்று வருத்தம் விரவிய தொனியில் நக்கலடித்த கனகா, "அவரைப் பத்தி உனக்குத் தெரியாது. ரொம்பப் பொல்லாத ஆளு. மதியச் சாப்பாட்டுக்குன்னு இல்ல, கடைக்குப்போன கையோடு எப்போ வேணுன்னாலும் வருவாரு. 'கடைக்காரன் போடுற டீ நல்லாவே இல்லை. உன் கையால போடுற டீயின் ருசியே தனி'ன்னு ஐஸ் வைப்பாரு..... இதெல்லாம் எதுக்குத் தெரியுமா, தனியா இருக்குற நான் தனியாத்தான் இருக்கிறேனா, எவனோடவாவது படுத்திருக்கிறேனான்னு கண்டுபிடிக்கத்தான்" என்றாள்; வறட்சியானதொரு சிரிப்பை உதிர்த்தாள்.

பன்னீர் பேசினான். "நான் அம்மாவோடு இந்த வீட்டுக்குக் குடி வந்து ஒரு வருசம்போல ஆகுது. என்னை நீ ஆசை ததும்பப் பார்க்கும்போதெல்லாம் உன்னோட புருசன் உன்னை அது விசயத்தில் சந்தோசமா வெச்சிக்கலேன்னு புரிஞ்சுகிட்டேன். அப்புறம், சமயம் கிடைக்கும்போதெல்லாம் புன்னகையைப் பரிமாறிகிட்டோம்.  ஒரு கட்டத்தில் பறக்கும் முத்தம் பகிர்ந்துகிட்டோம். போன் மூலமா பேச ஆரம்பிச்சோம். நாசூக்கா அந்தரங்க உறவுகள் பத்திப் பேசிச் சந்தோசப்பட்டோம்....."

பேச்சை நிறுத்தினான் பன்னீர். கனகா பதில் பேசவில்லை என்றாலும் காதிலிருந்து போனை விலக்கிக்கொள்ளாதது தெரிந்தது.

"நான் போட்டோகிராபர். தொழிலில் சரியா செட் ஆகாததால் இன்னும் கல்யாணம் கட்டிக்கல. துணைக்குக் கண் பார்வை மங்கின அம்மா மட்டும். என்னைக் கட்டுப்படுத்த யாரும் இல்ல. தப்போ சரியோ, வாய்ப்புக் கிடைச்சா உன்னோட சந்தோசமா 'இருக்க' ரொம்பவே ஆசைப்பட்டேன். உன் புருசன் கடைக்குப் போறதைப் பார்த்துட்டு, வரட்டுமான்னு கேட்கும்போதெல்லாம் வேண்டாம்னு திட்டவட்டமா சொல்லிடுவே. நேத்துவரைக்கு இதுதான் நடந்தது. இப்பவும் வரவேண்டாம்னு சொல்லிட்டே. உன்னைப் புரிஞ்சிக்க முடியல" என்று வெகுவாக ஆதங்கப்பட்டான் பன்னீர்.

"எனக்கும் அந்த ஆசை இருக்கு. ஆனா....."

சிறிதே இடைவேளி விட்டுத் தொடர்ந்தாள் கனகா: "உன்னை என் வீட்டுக்குள்ள வந்து 'இருக்க' அனுமதிச்சி, அவர்கிட்டே மாட்டிகிட்டோம்னா, குத்துவெட்டு, கொலைன்னு எதுவும் நடக்கலாம். குறைஞ்சபட்சத் தண்டனை தர நினைச்சார்னா, கடைக்குப் போகும்போதெல்லாம் கதவு ஜன்னல் எல்லாம் அடைச்சுட்டு என்னை வெளியே தலைகாட்ட முடியாம பண்ணிடுவார். அப்புறம், இப்போ நாம் வரம்பு மீறாம அனுபவிக்கிற அற்பச் சந்தோசங்கள் எல்லாமே எட்டாக்கனி ஆயிடும். அதனாலதான், வரம்பு மீற வேண்டாம்னு சொல்லுறேன்." 

வருத்தம் தோய்ந்த முகத்துடன் "பை" சொல்லி வீட்டுக்குள் சென்று மறைந்தாள் கனகா.

=====================================================================================

மிக முக்கிய அறிவிப்பு:

'எக்குத்தப்பா' எதையாவது நான் எழுதினால், பேசியில் தொடர்பு கொண்டு, அதிரடியாகக் கேள்விகள் கேட்டுத் திணற வைக்கிற உள்ளூர் நண்பர் கேட்டார்: "பரமு, இப்படியெல்லாமா நாட்டுல நடக்குது? கற்பனைக்கு ஒரு வரம்பே இல்லையா?" 

என் பதில்: "அலைகடல் அளவுக்கு மனதில் ஆசை இருந்தாலும், அவமானத்துக்குப் பயந்து, 'இது போதும்'னு மனசைக் கட்டுப்படுத்தி வாழுற மக்கள்தான் இங்கே 99%க்கும் மேலே. இதைச் சொல்லத்தான் இந்தக் கதை. இந்தப் பரிதாப நிலை தொடரணுமா, மாற்றப்படணுமா, அது சாத்தியமா என்றெல்லாம் தீர்மானிக்க வேண்டியவங்க சமூகச் சிந்தனையும் தொண்டுள்ளமும் கொண்ட அறிஞர்கள்தான்."

நண்பர் சொல்லிக்கொள்ளாமல் தொடர்பைத் துண்டித்தார்!

=====================================================================================

ஞாயிறு, 17 ஜூலை, 2022

'ஜின்பிங்' இன்று சொன்னார்! 'மோடி' என்று சொல்வார்?!


"நாட்டில்[சீனா] உள்ள மதங்கள், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் பின்பற்றப்படும் சோசலிச சமூக அமைப்புக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளுதல் வேண்டும்" என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ஜி ஜின்பிங், "சீனாவில் இஸ்லாமியர் நோக்குநிலையில் சீனராக இருத்தல் வேண்டும்" என்றும் கூறியுள்ளார்[Breaking news coming in from China as President Xi Jinping directed the officials to beef up efforts to support the principle that Islam in China must be Chinese in orientation and that every religion in the country should adapt to the socialist society pursued by the ruling party. Watch the video to know more in detail!#uighyurmuslims #china] #worldnews   - Jul 17, 2022 | (timesnownews.com)

தன் நாட்டு மக்கள் அனைவரும் இனப்பற்று உள்ளவராக, அதாவது, சீன இனத்தவராக இருத்தல் வேண்டும் என்பதே அவரின் நோக்கம். ஒருவர் புத்த மதத்தவரா, இஸ்லாமியரா பிறிதொரு மதத்தவரா என்பது இரண்டாம்பட்சம்[மதச் சார்பு இல்லாதவருக்கும் இனப்பற்று அவசியத் தேவை].

சீனாவைப் போல் பிற நாட்டு ஆட்சியாளர்களும் இப்படியொரு அறிவிப்பை வெளியிடுவது சாத்தியமா?

மற்ற நாடுகள் எப்படியோ, இந்தியப் பிரதமர் 'நரேந்திர மோடி' அவர்கள் விரும்பினால்  இங்குள்ள இஸ்லாமியரையும் கிறித்தவரையும் பஞ்சாபியரையும், பிற மதத்தவரையும் விளித்து, "நீங்கள் முதலில் இந்தியராக இருங்கள். நமக்கு நம் இனம்தான்[இந்திய இனம். இதில் தமிழினமும் தெலுங்கர் இனமும் இன்ன பிற இனங்களும் உள்ளன] முக்கியம்; மதங்களெல்லாம் அப்புறம்" என்று சொல்வார் என்று நம்பலாம்.

அவர் அப்படிச் சொன்னால் அது பெரிதும் வரவேற்கத்தக்கது. அதே வேளையில்.....

இந்துமதச் சார்புள்ளவர்கள் மட்டுமல்லாமல், அதிலுள்ள வெறியர்களையும் விளித்து, "நாம் அனைவரும் 'இந்திய இனத்தவர்' என்பதுதான் முக்கியம். இந்து மதத்தவர் என்பது இரண்டாம்பட்சம். இனி மத வெறியுடன் பிற மதத்தவர் மீது தாக்குதல் நடத்துவதைக் கைவிடுங்கள்" என்று வலியுறுத்திச் சொல்வாரா?

அவர் சொல்லி, அனைத்து மதம் சார்ந்தவர்களும், அனைத்து மத வெறியர்களும் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொண்டால்.....

சீனாவைப் போல், அல்லது சீனாவைவிடவும் அறிவியல், தொழில்நுட்பம் என்று பல துறைகளிலும் இந்தியா வெகு வேகமாக முன்னேறும்.
===============================================================================================