எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 6 டிசம்பர், 2014

நன்றி கொன்ற ‘பசி’

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இந்த வலைப்பதிவில் தொடர்ந்து எழுதவுள்ளேன். இது பழையதொரு இடுகை. முன்னோட்டம் பார்ப்பதற்காக வெளியிடப்படுகிறது

இந்தக் கதையில் எடுப்பான ‘தொடக்கம்’ இல்லை; காதலோ காமமோ இல்லை; ‘விறுவிறு’ நடை இல்லை; ‘புதிர்’ [suspense] இல்லை.....! “பின்னே என்னதான் இருக்கு?” என்கிறீர்களா? 

ஏதோ இருக்கு! பொறுமைசாலிகள் படிக்கலாம்!


                                                              பசி
    ['பசி'யின் படைப்பாக, மார்ச் 1997 'ஓம் சக்தி' மாத இதழில் வெளியானது]

ன்று கண்ணப்பரின் மாளிகையில் ஏழைகளுக்கு அன்னதானம்.

ஆண்டுக்கு ஐந்தாறு தடவையேனும் விசேச நாட்களில் அன்னதானம் செய்வதை வழக்கமாகக் கொண்ட அவரை, அமைச்சர் ஒருவர், “கலியுக வள்ளல்” என்று பாராட்டி நிகழ்வைத் தொடங்கி வைத்துவிட்டுப் போனார்.

உள்ளூர்ப் பிரமுகர்கள் பலரும் நேரிலும் பேசியிலும் புகழ்ந்து தள்ளினார்கள்.

யார் என்ன புகழ்ந்தும் கண்ணப்பருக்கு மன நிறைவு இல்லை. அவையெல்லாம் மனப்பூர்வமான பாராட்டுகள் அல்ல என்பது அவருக்குத் தெரியும். யாருக்கு அன்னதானம் செய்கிறாரோ அந்த ஏழைகளால் வாயார, மனதாரப் புகழப்படுவதையே அவர் மனம் நாடியது.

தன் உதவியாளர் சுந்தரத்துடன் உணவுக்காகக் காத்திருந்த பிச்சைக்காரர் வரிசையை ஒட்டி நடந்தார்.

அத்தனை பிச்சைக்காரர்களும் எதிரே குவித்து வைக்கப்பட்டிருந்த வகை வகையான உணவுப் பண்டங்களை ஜொள் ஒழுகப் பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர, கண்ணப்பரை யாருமே கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் தம் புகைப்படம் பொறித்த வண்ண வண்ணச் சுவரொட்டிகளைத் தெருத்தெருவாய் ஒட்டச் செய்திருந்தார் அவர்.

“சுந்தரம்.” உதவியாளரை அழைத்தார் கண்ணப்பர்.

“ஐயா.”

“இந்தப் பிச்சைக்காரங்களுக்குக் கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இல்லை. கவனிச்சீங்களா? அவனவன் திங்கிறதுக்கு அலையுறானே தவிர  என்னை யாருமே கண்டுக்கல.”

யோசித்தார் சுந்தரம். “என்னோட வாங்க” என்று சொல்லி நடந்தார். அவரைப் பின்தொடர்ந்தார் கண்ணப்பர்.

மளிகையின் சுற்றுச் சுவருக்குள் பரந்து விரிந்து கிடந்த புல்வெளியில், சிதறல் சிதறலாக அமர்ந்து பிச்சைக்காரர்கள் பசியாறிக்கொண்டிருந்தார்கள்.

இருவரும், அவர்களைக் கடந்து காம்பவுண்டின் கேட்டை அடைந்தார்கள்; நின்றார்கள்.

வெளியேறிக்கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரன், “ஐயா, வாய்க்கு ருசியா விருந்து படைச்சீங்க. வயிறு நிறையச் சாப்பிட்டேன். நீங்க தீர்க்காயுசா இருக்கணும்” என்று இரு கரம் கூப்பி வாழ்த்திவிட்டுப் போனான்.

அடுத்து வந்த ஒருவன், “புண்ணியவானே, ரொம்பப் பெரிய மனசு உங்களுக்கு. உங்க குடும்பம் தழைக்கணும்” என்றான்.

இப்படியாக, உண்டு முடித்த அத்தனை பேருமே வரிசையில் நின்று கண்ணப்பரை வாழ்த்திவிட்டுப் போனார்கள்.

கண்ணப்பரின் முகத்தில் திருப்தி படர்ந்திருப்பதைக் கண்ட சுந்தரம் சொன்னார்: “பசியோட இருப்பவன் முன்னால வகை வகையா தின்பண்டங்களைக் குவிச்சி வெச்சா அவன் கவனமெல்லாம் பண்டங்கள் மேலேதான் இருக்கும். பசி தணிஞ்சப்புறம்தான் நன்றி, விசுவாசம், பாராட்டு, பக்தி எல்லாம்.”

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@










நெஞ்சைத் தொட்ட ஓர் ஆன்மிகக் கதை!

ஆன்மிகத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கும் இந்தக் கதை ரொம்பவே பிடிக்கும். காரணம், அதன் ‘முடிவு’!

கதை:                                  மனதில் சுமந்தவர்

ஓர் ஆற்றங்கரையில் ஒரு குருவும் சீடனும் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தனர்.

பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கும் மலைச் சிகரங்கள் சூழ்ந்த, நெடிதுயர்ந்த மரங்களும். மணம் பரப்பும் செடிகளும், கொடிகளும் நிறைந்த ரம்மியமான சூழலில் தவம் இய்ற்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

மக்களும் இவர்களைத் தேடி வருவர்; உபதேசம் பெறுவர்.

இது தவிர, ஊர் ஊராகச் சென்று பக்திச் சொற்பொழிவுகளும் செய்து வந்தார்கள்.

ஒரு சமயம், ஒரு கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள அண்டையிலிருந்த ஓர் ஊருக்கு இருவரும் கிளம்பினார்கள்.

ஆறு குறுக்கிட்டது. அதைக் கடக்க இருந்த நேரத்தில் ஓர் அழகான பெண் அங்கு வந்தாள்; சொன்னாள்:



“சுவாமிகளே, நான் கோயில் திருவிழாவுக்குச் செல்ல வேண்டும். என்னால் ஆற்றைக் கடக்க முடியாது. தண்ணீரைக் கண்டால் ரொம்பவே பயம். உங்களில் ஒருவர் என்னைத் தூக்கிச் சென்று அக்கரையில் சேர்த்தால் மிகவும் நன்றி உள்ளவளாக இருப்பேன்” என்றாள்.

சீடன் திடுக்கிட்டான்.

சற்றே யோசித்த குரு, அந்தப் பெண்ணைத் தன் இரு கைகளாலும் தூக்கிச் சென்று அக்கரையில் சேர்த்தார்.

சீடன் மனதைக் குழப்பம் ஆக்கிரமித்தது.

 ‘நம் குரு ஒரு இளம் பெண்ணைத் தொட்டுவிட்டாரே. இது தவறில்லையா?’ என்று அவன் மனம் கேட்டுக்கொண்டே இருந்தது.

அவனுக்குக் கோவில் விழா, சுவாமி தரிசனம், அன்னதானம் என எதிலும் மனம் லயிக்கவில்லை.

இருவரும் ஆசிரமம் திரும்பினார்கள்.

இரவு வந்தது. உறங்கச் சென்றார்கள்.

மனக் குழப்பம் சீடனை உறங்கவிடாமல் தடுத்தது.

அவன் புரண்டு புரண்டு படுத்துத் துன்பப்படுவதைக் கவனித்தார் குரு; கேட்டார்:

“என்னப்பா, என்ன பிரச்சினை? உன் நடவடிக்கை சரியில்லையே. என்ன ஆயிற்று உனக்கு? சொல்” என்றார்.

சீடன் சொன்னான்: “ஆம் குருவே. இளம் பெண்களை நாம் தொடக்கூடாதல்லவா? நீங்கள் மதியம் ஒரு பெண்ணை.....” முடிக்காமல் நிறுத்தினான்.

குரு நகைத்தார்; சொன்னார்: “நான் அவள் உடலைத் தொட்டுத் தூக்கினேன்; இறக்கி விட்டவுடன் அடியோடு அவளை மறந்துவிட்டேன். நீ இன்னும் அவளை மனதில் சுமந்துகொண்டிருக்கிறாயே?”

சீடன் மனதில் தெளிவு பிறந்தது.

=============================================================================================

இது, என்.சிவராமன் தொகுத்த, ‘ஆன்மிகக் குட்டிக் கதைகள்’ என்னும் தொகுப்பிலிருந்து 'சுட்டு’த் திருத்தியது!

=============================================================================================