எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

பித்தம் தலைக்கேறிய புடின்!!!

'ஐக்கிய நாடுகள் சபையின்(UN) அதிகாரி ஒருவர், 'இராணுவ மூலோபாயத்தின்' ஒரு பகுதியாக உக்ரேனியர்களைப் பாலியல் ரீதியாகத் தாக்கும்[பெண்களை]வகையில், ரஷ்யா தனது சிப்பாய்களுக்கு வயாகரா போன்ற போதைப் பொருட்களை வழங்குவதாகக் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உக்ரைனில் பெண்களைக் கற்பழிக்க ரஷ்ய வீரர்களுக்கு வயாகரா வழங்கப்படுகிறது'[ஆதாரம் கீழே].

நாடுகளுக்கிடையே போர் நிகழும்போது, போர் வீரர்கள், வாய்ப்பு அமையும்போது தம்மிச்சையாக, எதிரி நாட்டுப் பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்குவது அன்றிலிருந்து இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிற அவலம்தான்.

நாட்டை ஆளும் தலைவர்களுக்கும் இது தெரியும் என்றாலும், தத்தம் வீரர்களுக்குக் கட்டளை பிறப்பித்துத் தடுக்க இயலாதது இது என்பதையும் அவர்கள் அறிந்தே இருப்பர்.

வெற்றியா தோல்வியா, வாழ்வா சாவா வாய்க்க இருப்பது எது என்று கணிக்க இயலாத நிலையில் அவர்கள் இதை அலட்சியப்படுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், மேற்கண்ட உக்ரேனியப் போர் குறித்த நிகழ்வில் .....

ரஷ்யா தனது சிப்பாய்களுக்கு வயாகரா போன்ற போதைப் பொருட்களை வழங்குகிறது என்னும் செய்தியில், 'ரஷ்யா வழங்குகிறது' என்பது ரஷ்ய அரசாங்கத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

அரசாங்கம் வழங்குகிறது என்றால் அது ரஷ்யாவின் அதிபரான 'புடின்' அவர்களுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.


தாமாகத் தொடுத்த போரில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், மன நிலை பாதிக்கப்பட்டோ என்னவோ, தெய்வங்களின் நிலையில் வைத்துப் போற்றப்படுகிற[பெரும்பாலான நாடுகளில்] பெண்களை வன்புணர்வு செய்து சிதைத்துச் சீரழித்து அழிக்கும் அடாத செயலைச் செய்திடப் புடின் வழிவகுக்கிறார் என்றால், பித்தம் அவரின் தலை உச்சியைத் தொட்டுவிட்டது என்றே நம்பத் தோன்றுகிறது!

===================================================================


மனம் இருந்தால் மரண பயத்தை மரணிக்கச் செய்யலாம்!!!


வாழ்ந்து முடிப்பதற்குள் எதையெதையோ நினைத்து அஞ்சுகிறோம்.

அந்த எதையெதையெல்லாம் எதிர்த்துப் போராடினால் அவற்றால் விளையும் அச்சத்திலிருந்து நம்மால் விடுபட இயலும். 

எத்தனை போராடினாலும்  மரண பயத்திலிருந்து விடுபடுவது அத்தனை எளிதல்ல எனினும் அதற்கான வழிகளும் உள்ளன.

அந்த வழிகளில் பயணிப்பதற்கு நம் சிந்திக்கும் திறனை மேம்படுத்துதல் அவசியம்.

எப்படி?

*வாழப் பிறந்த எந்தவொரு உயிரும் மரணத்தைத் தழுவுவது தவிர்க்கவே இயலாத 'இயற்கை நெறி' என்பதை முதலில் உணர்தல் வேண்டும். 

*அஞ்சுவதால் நாம் வாழ்ந்து முடிக்கவுள்ள ஆயுட்காலத்தில் ஒரு மணித்துளி, ஏன் ஒரு மைக்ரோ நொடிகூட அதிகரிக்காது என்பதை அத்துபடியாகப் புரிந்துகொள்வது முக்கியம்.

*மரணத்தை நினைத்து அவ்வப்போது அஞ்சுவதால் மனம் பலவீனப்படும்; மன நலம் கெடும்; உடல் நலமும் பாதிக்கப்படும்; நோய்கள் தாக்கும்; ஆயுள் குறையும் என்பன போன்ற தீய விளைவுகளை ஒருபோதும் மறத்தல் கூடாது.

*"செத்த பிறகு என்ன ஆவோம்? ஆவியாக அலைவோமா? பேயாகத் திரிவோமா? மறு பிறவியில் என்னவாகப் பிறப்போம்?" என்பன போன்ற எண்ணங்கள்தான் மரண பயத்தை அதிகரிப்பவை. 

*மேற்கண்ட சந்தேகச் சிந்தனைகளை நம் மனங்களில் திணித்தவர்கள் ஆன்மிகவாதிகள். அவர்கள் சொல்லும் அனுமானக் கதைகளைச் செவிமடுப்பது கூடவே கூடாது.

*செத்தொழிந்த பிறகு எதுவும் நடந்து தொலைக்கட்டும். அது குறித்து இப்போதே கவலைப்படுவது அடிமுட்டாள்தனம் அல்லவா?" என்று நமக்கு நாமே கேள்வி கேட்கப் பழகுதல் மிகுதியும் நன்மை பயக்கும்.

*அன்றாடப் பணிகளில் ஈடுபட்ட நேரம் நீங்கலாக, எஞ்சிய பொழுதுகளில் மனதை வெறுமையாக வைத்திருந்தால், அந்த வெற்றிடத்தில் மரண பயம் புகுந்துவிட நிறையவே வாய்ப்புள்ளது. அந்த வெற்றிடத்தை, பொதுப்பணியில் ஈடுபடுதல், எழுதுதல், வரைதல் போன்றவற்றில்  எவற்றையேனும் இட்டு நிரப்பிடப் பழகுதல் நன்று.

*அணுக்களால் உருவானவை நம் உடம்பும், சிந்திக்கும் திறனும். மரணத்திற்குப் பிறகு மீண்டும் அணுக்களில் கலந்துவிடுவோம். அதனால், மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் பிறந்தும் இன்பதுன்பங்களை அனுபவிக்கும் நிலை இல்லவே இல்லை என்பதை முழு மனதுடன் நம்புவதால்,  மரண பயத்தைத் தவிர்க்கலாம்.

*நம் முன்னோர்களில் சாதனைகள் நிகழ்த்திய சான்றோர்கள் பலரும் தழுவிய அதே மரணத்தைத்தானே நாமும் தழுவ இருக்கிறோம். மரணத்திற்குப் பிறகு விதிவிலக்காக  நமக்கென்று ஏதும் நிகழ்ந்துவிடாது என்னும் நம்பிக்கையை நாளும் வளர்த்துக்கொள்வது நல்லது.

*கோடி கோடி கோடிக் கணக்கில் பிறந்து வாழ்ந்த/வாழும் உயிர்கள் இறந்துகொண்டுதான் உள்ளன. அந்தக்  கோடி கோடி கோடி கோடானு கோடிகளில் நாமும் அடக்கம் என்று எண்ணிக்கொள்வது மரண பயத்தைத் தவிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பது உறுதி.

*என்னதான் ஆறுதலும் தேறுதலும் சொன்னாலும், சில நேரங்களில் சாவு குறித்த பயம் மட்டுமே மனதில் தங்கிவிட, மேற்கண்ட மரண பயத்தைத் தவிர்ப்பதற்கான வழிவகைகள் காணாமல் போக வாய்ப்புள்ளது. இந்நிலையைத் தவிர்க்க, நம் மன நலம் உடல் நலம் ஆகியவை குறித்தும், ஏனையோர் நல்வாழுவு குறித்தும் இடைவிடாது சிந்திக்கப் பழகுவதும், அன்றாடம் முறையான உடற்பயிற்சி செய்வதும் பெருமளவில் நன்மை பயக்கும் என்று நம்பலாம்.
===========================================================================