அந்த எதையெதையெல்லாம் எதிர்த்துப் போராடினால் அவற்றால் விளையும் அச்சத்திலிருந்து நம்மால் விடுபட இயலும்.
எத்தனை போராடினாலும் மரண பயத்திலிருந்து விடுபடுவது அத்தனை எளிதல்ல எனினும் அதற்கான வழிகளும் உள்ளன.
அந்த வழிகளில் பயணிப்பதற்கு நம் சிந்திக்கும் திறனை மேம்படுத்துதல் அவசியம்.
எப்படி?
*வாழப் பிறந்த எந்தவொரு உயிரும் மரணத்தைத் தழுவுவது தவிர்க்கவே இயலாத 'இயற்கை நெறி' என்பதை முதலில் உணர்தல் வேண்டும்.
*அஞ்சுவதால் நாம் வாழ்ந்து முடிக்கவுள்ள ஆயுட்காலத்தில் ஒரு மணித்துளி, ஏன் ஒரு மைக்ரோ நொடிகூட அதிகரிக்காது என்பதை அத்துபடியாகப் புரிந்துகொள்வது முக்கியம்.
*மரணத்தை நினைத்து அவ்வப்போது அஞ்சுவதால் மனம் பலவீனப்படும்; மன நலம் கெடும்; உடல் நலமும் பாதிக்கப்படும்; நோய்கள் தாக்கும்; ஆயுள் குறையும் என்பன போன்ற தீய விளைவுகளை ஒருபோதும் மறத்தல் கூடாது.
*"செத்த பிறகு என்ன ஆவோம்? ஆவியாக அலைவோமா? பேயாகத் திரிவோமா? மறு பிறவியில் என்னவாகப் பிறப்போம்?" என்பன போன்ற எண்ணங்கள்தான் மரண பயத்தை அதிகரிப்பவை.
*மேற்கண்ட சந்தேகச் சிந்தனைகளை நம் மனங்களில் திணித்தவர்கள் ஆன்மிகவாதிகள். அவர்கள் சொல்லும் அனுமானக் கதைகளைச் செவிமடுப்பது கூடவே கூடாது.
*செத்தொழிந்த பிறகு எதுவும் நடந்து தொலைக்கட்டும். அது குறித்து இப்போதே கவலைப்படுவது அடிமுட்டாள்தனம் அல்லவா?" என்று நமக்கு நாமே கேள்வி கேட்கப் பழகுதல் மிகுதியும் நன்மை பயக்கும்.
*அன்றாடப் பணிகளில் ஈடுபட்ட நேரம் நீங்கலாக, எஞ்சிய பொழுதுகளில் மனதை வெறுமையாக வைத்திருந்தால், அந்த வெற்றிடத்தில் மரண பயம் புகுந்துவிட நிறையவே வாய்ப்புள்ளது. அந்த வெற்றிடத்தை, பொதுப்பணியில் ஈடுபடுதல், எழுதுதல், வரைதல் போன்றவற்றில் எவற்றையேனும் இட்டு நிரப்பிடப் பழகுதல் நன்று.
*அணுக்களால் உருவானவை நம் உடம்பும், சிந்திக்கும் திறனும். மரணத்திற்குப் பிறகு மீண்டும் அணுக்களில் கலந்துவிடுவோம். அதனால், மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் பிறந்தும் இன்பதுன்பங்களை அனுபவிக்கும் நிலை இல்லவே இல்லை என்பதை முழு மனதுடன் நம்புவதால், மரண பயத்தைத் தவிர்க்கலாம்.
*நம் முன்னோர்களில் சாதனைகள் நிகழ்த்திய சான்றோர்கள் பலரும் தழுவிய அதே மரணத்தைத்தானே நாமும் தழுவ இருக்கிறோம். மரணத்திற்குப் பிறகு விதிவிலக்காக நமக்கென்று ஏதும் நிகழ்ந்துவிடாது என்னும் நம்பிக்கையை நாளும் வளர்த்துக்கொள்வது நல்லது.
*கோடி கோடி கோடிக் கணக்கில் பிறந்து வாழ்ந்த/வாழும் உயிர்கள் இறந்துகொண்டுதான் உள்ளன. அந்தக் கோடி கோடி கோடி கோடானு கோடிகளில் நாமும் அடக்கம் என்று எண்ணிக்கொள்வது மரண பயத்தைத் தவிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பது உறுதி.
*என்னதான் ஆறுதலும் தேறுதலும் சொன்னாலும், சில நேரங்களில் சாவு குறித்த பயம் மட்டுமே மனதில் தங்கிவிட, மேற்கண்ட மரண பயத்தைத் தவிர்ப்பதற்கான வழிவகைகள் காணாமல் போக வாய்ப்புள்ளது. இந்நிலையைத் தவிர்க்க, நம் மன நலம் உடல் நலம் ஆகியவை குறித்தும், ஏனையோர் நல்வாழுவு குறித்தும் இடைவிடாது சிந்திக்கப் பழகுவதும், அன்றாடம் முறையான உடற்பயிற்சி செய்வதும் பெருமளவில் நன்மை பயக்கும் என்று நம்பலாம்.
===========================================================================