எனது படம்
அறிவியல் தொடர்பான பதிவுகள் எனக்குள்ள ஆர்வம் காரணமாக எழுதப்படுபவை. அவற்றில் சில சிறு பிழைகள் இடம்பெறினும், பல தகவல்கள் நீங்கள் அறியத்தக்கனவாக அமையும் என்பது என் நம்பிக்கை. வருகைக்கு நன்றி.

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

ஓ அல்லா, ஓம் முருகா, கொஞ்சம் நாள் ‘தி.கு.’ மலையிலிருந்து வெளியேறுவீர் கடவுள்களே!

//திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றங்களில் விசாரணைகள் நடந்துவருகின்றன.

இந்நிலையில், மலையில் உள்ள பள்ளிவாசலில்[தர்கா] சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நாளை(டிச. 21) நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பின்பற்றி, இஸ்லாமியர்கள் சந்தனக்கூடு விழாவை நடத்திக் கொள்ளலாம் என்று அரசு சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சிக்கந்தர் தர்காவுக்குச் சென்று சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்குத் தர்காவைச் சேர்ந்த நிர்வாகிகள் 4 பேர் சென்றனர். அவர்களுக்காக மலைக்குச் செல்லும் பாதையில் இருந்த இரும்புத் தடுப்புகளைப் போலீஸார் அகற்றினர்.

இதற்குப் பழனியாண்டவர் கோயில் அடிவாரத்திலுள்ள கோட்டைத்தெருவைச் சேர்ந்த திருப்பரங்குன்றம் கிராமப் பெண்கள்[ஆண்கள்?], மக்களை மலை மீது செல்ல அனுமதிக்காதபோது, தர்கா நிர்வாகிகளை மட்டும் எப்படி அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்பினர். போலீஸார் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகச் குற்றம் சாட்டினர்//[ஊடகச் செய்தி]

இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால், கடவுள்களின் பெயரால் நம்ம ஊர் மக்களிடையேயான மோதல் தொடர்கிறது என்பதுதான்.

நம்முடைய ஊர்கள் என்றில்லை, உலகம் முழுதும், வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கடவுள்களால் மோதல்களும் கலவரங்களும் நிகழ, கோடிக்கணக்கில் மனிதர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது வரலாறு.

இனியேனும் இந்த அவலங்கள் நிகழாதிருக்க, பக்திமான்கள் தத்தம் வீடுகளுக்குள்ளேயே வழிபாடு நிகழ்த்தலாமே தவிர, பொதுவிடங்களில் வழிபடக்கூடாது. உலக நாடுகள் ஒருங்கிணைந்து சிந்தித்துச் செயல்பட்டால் இது சாத்தியம் ஆகும்.

இது எப்போதேனும் சாத்தியம் ஆகுமா அல்லவா என்பது முற்றிலும் கணிக்க இயலாத நிலையில்.....

‘மலைகள், இயற்கை அழகை ரசிப்பதற்கும், உடல் நலம் பேணுவதற்குமான சுற்றுலா மையங்களாகவே இருக்கட்டும்; எந்தவொரு மதத்தவரும் வழிபாட்டுக்காக அங்கே செல்வது கூடாது’ என்று நம் ஒன்றிய அரசு தயங்காமல் சட்டம் இயற்றுதல் வேண்டும்[மோடி பிரதமராக இருக்கும்வரை இதற்கு 100% வாய்ப்பு இல்லை].

எந்தவொரு கட்சியும் தேர்தலைக் கருத்தில் கொள்ளாமலும், பக்திமான்களின் எதிர்ப்பை ஊக்குவிக்காமலும் அரசுக்கு முழு ஆதரவு தருதல் வேண்டும்.

இம்மாதிரியான சட்டம் இயற்றப்பட்டு அமலாக்கப்பட்டால் மட்டுமே, குறைந்தபட்சம் இது மாதிரியான பிரச்சினைகள் ஆரம்பநிலையிலேயே கிள்ளியெறியப்பட்டு, சமுதாயத்தில் அமைதி நிலவும்; பிரச்சினைகளால், மக்கள் நிம்மதி இழப்பதும், பயனுள்ள வழிகளில் செலவழிக்கப்படுதற்குரிய நேரம் வீணடிக்கப்படுவதும் தவிர்க்கப்படும்.