சனி, 29 ஏப்ரல், 2023

“வாருங்கள் பக்தர்களே, பக்தியைக் கைகழுவிக் கொஞ்சம் புத்தியைத் தீட்டலாம்!!!”


1]கடவுள் இருப்பதாகப் பிறர் சொல்லி நம்புகிற நீங்கள், “அவர் தோன்றியது ஏன்? எப்படி? எப்போது?” என்றெல்லாம் நீங்களாகவே கேள்விகள் கேட்டு, உங்கள் சுய அறிவால் விடை தேட முயன்றது உண்டா?

2] நீங்கள் நம்புகிற கடவுளின் படைப்பில், ‘உயிர்களுக்கு நன்மைகள் அதிகமா, தீமைகள் அதிகமா?’ என்பது பற்றிச் சிந்தித்துப் பட்டியலிட்டதுண்டா?

3]‘நாம் பாவம் செய்தோம். கடவுளால் தண்டிக்கப் படுகிறோம்’ என்று உணருகிற அறிவு வாய்த்த பிறகு,  குற்றம் புரிந்தவர் அல்லது பாவம் செய்தவர் தண்டிக்கப் பட்டால் பரவாயில்லை. அறிவு வளர்ச்சி பெறாத நிலையில், ஏதும் அறியாத ஒரு குழந்தை அல்லது குழந்தை மனம் கொண்டவர்கள், அவர்கள் செய்த குற்றத்திற்காக[கடந்த பிறவிகளில்]க் கடவுளால் தண்டிக்கப்படுவது[உதாரணம்: துடிதுடித்து அலறிக் கதறி, அழுது, விவரிப்புக்கு அப்பாற்பட்ட வேதனைக்குள்ளாகிட, கயவர்களால் சிறுமி ஒருத்தி கற்பழித்துக் கொல்லப்படுதல்] என்ன நியாயம்?

இத்தகையச் சிறுமைச் செயல்கள் புரிவது ஏன் என்று உங்கள் கடவுளிடம் நீங்கள் கேட்டதுண்டா?

4]மனிதர்களிலேயே சிலரைக் கடவுளின் அவதாரம் என்கிறீர்கள். அவர்களின் சிறுநீர் இனிக்காது. அவர்கள் வெளியேற்றும் மலம் மணக்காது. அழுக்குத் தேய்த்துக் குளிக்காவிட்டால் அவர்களின் திருமேனி சந்தணம் போல் கமகமக்காது. அவர்கள் செத்தாலும் உடம்பு அழுகி நாறி, புழுக்கள் தின்றது போக மிச்சம் மீதி மண்ணோடு மண் ஆகிறது. எரித்தால் சாம்பல் ஆகிறது.

உண்மை இதுவாக இருக்க, அவர்கள் கடவுளின் அவதாரம் ஆனது எவ்வாறு?

5]கடவுள் உங்கள் முன்பு, உங்களுக்கு அறிவிக்காமல் தோன்றப் போவதாக வைத்துக் கொள்ளுங்கள். அவர், தான் விரும்பிய ஒரு மனிதனின் உருவிலோ விலங்கின் உருவிலோ உங்கள் முன்பு காட்சியளித்து, “நான்தான் கடவுள்” என்று சொன்னால் அவரை நம்புவீர்களா?  எந்த உருவில் வந்தால், எப்படியான குரலில் பேசினால் உங்களை நம்பவைக்க முடியும்?

6]கடவுளுக்குக் கோயில் கட்டுகிறீர்கள்; விழாக்கள் எடுக்கிறீர்கள். விதம் விதமாய்த் துதி பாடுகிறீர்கள். கடவுளும் மனிதனைப் போல புகழ்ச்சிக்கு மயங்குகிற சாதாரண ஆள்தானா?

“அவரைப் புகழ்வது எங்கள் மனதைச் சுத்தப்படுத்த” என்று நீங்கள் சமாளிக்கிறீர்களா?

நாம் கேட்கிறோம். பிற உயிர்களின் துன்பம் கண்டு கலங்கினால் மட்டுமே மனம் தூய்மை பெறும் என்பதே உண்மை. அவ்வாறிருக்கையில், கடவுளைப் புகழ்வதால் மனம் தூய்மை அடையும் என்கிறீர்களே, இது அடுக்குமா? நம் மனதைத் திருத்தும் முயற்சியில் நாம் முழு ஈடுபாடு காட்டாமல், கடவுளை வேண்டி, அவர் உத்தரவு போட்டால்தான் நாம் திருந்துவோமா?! யார் காதில் பூ சுற்றுகிறீர்கள்?

7]உங்கள் துதி கடவுளை மகிழ்விக்கிறது; உங்கள் வேண்டுகோள் அவரைச் சென்றுசேர்கிறது என்பதை நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்? உங்களை நம்ப வைத்தவரின் உள்நோக்கம் என்ன என்று ஆராய்ந்ததுண்டா?

8]கடவுளுக்கு நீங்கள் செலுத்தும் காணிக்கைகள், படையல்கள் எல்லாம் மனிதர்கள்[பலர் ஏமாற்றுக்காரர்கள்] வசம் சேர்கின்றன என்பது அப்பட்டமாகத் தெரிந்தும் தொடர்ந்து ஏமாறுகிறீர்களே, கடவுளின் பெயரால் ஏமாற்றப்படுவதைப் பெருமையாகக் கருதுகிறீர்களா?

9]கடவுள் இந்த மண்ணுலகில் உங்களைத் தோன்றச் செய்ததற்காக அவருக்கு நன்றி சொல்கிறீர்கள். அதே கடவுள்தான் உங்களுக்குக் கணக்கற்ற துன்பங்களையும் வாரி வழங்கியிருக்கிறார்[இதெல்லாம் தீய சக்தியின் வேலை என்று கதை விடாதீர்கள். தீய சக்தியைக் கடவுள் ஏன் அழிக்கவில்லை என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை] அதே கடவுள்தான் உங்களை மரணமடையச் செய்கிறார். அந்த மரணம் பற்றிய நினைப்புதான் உங்களைச் செத்துச் செத்துப் பிழைக்க வைக்கிறது என்பதை அறியாதவரா நீங்கள்?. அறிந்தும் அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே? இது அடிமுட்டாள்தனம் என்பதை எப்போது புரிந்துகொள்வீர்கள்?

10]உங்களிடம் கேள்விகள் கேட்டுச் சிந்திக்கத் தூண்டிய எம்மை மனதாரப் பாராட்டுவீர்களா? இல்லை.....

“அடேய் நாத்திகா, நீ நரகத்துக்குத்தான் போவாய்” என்று சாபம் கொடுப்பீர்களா? 

***வலைப்பதிவு தொடங்கிய ஆண்டில்[2011] எழுதிய பதிவு இது.

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

‘தவளை-எலி’ நட்பும், எடப்பாடியார்-பாஜக கூட்டணியும்!!


பெருமதிப்பிற்குரிய எடப்பாடிப் பழனிசாமி அவர்களே,

நான்கு ஆண்டுகள் நீங்கள் முதலமைச்சராகத் தமிழ் மாநிலத்தை நிர்வகித்தபோது, இந்திய நாட்டை ஆளும் ‘பாஜக’வின் எடுபிடியாகவே இருந்திருக்கிறீர்கள் என்பதைத் தமிழ்நாடு அறியும். உங்களின் மனசாட்சிக்கும் அது தெரியும்.

முதல்வர் பதவி பறிபோன பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்தவொரு அடிமைத்தனத்திலிருந்து ஓரளவுக்கேனும் விடுபடுவதில், அல்லது விடுபட முயற்சிப்பதுபோல் காட்டிக்கொள்வதில் கணிசமான அளவுக்கு வெற்றி கண்டிருக்கிறீர்கள்.

‘ஓரளவுக்கு’ என்னும் நிலையிலிருந்து ‘முழுமையாக’ என்னும் நிலையைத் தாங்கள் அடைதல் வேண்டும் என்பது தமிழினப் பற்றாளர்களின் விருப்பமாக இருந்தது.

ஆனால், ஓரிரு நாட்களுக்கு முன்னர் நடுவணமைச்சர் ‘அமித்சு’ தங்களை அழைத்து 50 நிமிடங்கள் போல மூளைச் சலவை செய்த பிறகு, “அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்” என்று நீங்கள் செய்த அறிவிப்பு அந்த விருப்பை வெறுப்பாக மாற்றிவிட்டது என்பது மிகப் பெரிய சோகம்.

நீங்கள் முதல்வராக இருந்த அந்த 4 ஆண்டுகளிலும், ‘பாஜக’வின் அடிவருடியாக இல்லாமல், முழுக்க முழுக்கத் தமிழரின் மேன்மைக்காகவே உங்களை நீங்கள் அர்ப்பணித்திருந்திருந்தால்...

ஒரு ஸ்டாலின் என்ன, ஓராயிரம் ஸ்டாலின்கள் ஒருங்கிணைந்து மிகப் பெரும் போர் நிகழ்த்தியிருந்தாலும்[கடந்த சட்டமன்றத் தேர்தலில்] நீங்கள் முதல்வர் ஆவதைத் தடுத்திருக்க முடியாது.

நடந்ததை நினைத்து வருந்திப் பயனில்லை. இனி நடக்கவிருப்பதைப் பற்றி யோசிப்போம்.

‘தவளை - எலி’ நட்பும், அதனால் எலிக்கு நேர்ந்த கதியும் பற்றிய கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இதன் முலம் நீங்கள் பெறத்தக்க படிப்பினை, பாஜக’வுடன் தேர்தல் கூட்டணி அமைப்பதைத் தவிர்த்தால் எலிக்கு நேர்ந்த அவலம் உங்களுக்கு[கட்சிக்கு] நேராமல் தடுக்கலாம் என்பதே.

மேலும், அடுத்துவரும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில், உங்களின் வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும்.

எனவே, வருமானவரித் துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் உங்களைத் தயார் செய்துகொண்டு, உங்களின் வாழ்நாளைத் தமிழினத்தின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணியுங்கள்.

அர்ப்பணித்தால்.....

நீங்கள் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவது உறுதி. அது நிகழாமல் போயினும்,  இந்த மாநிலத்தின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக்கும் ஒப்பற்ற தலைவராக ஆவீர்கள் என்பது 100% நிச்சயம்!

வியாழன், 27 ஏப்ரல், 2023

கவர்ச்சிக் கன்னி ‘சமந்தா’[நடிகை] காக்கும் கடவுள் ஆனார்!!!

டவுள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டால், நம்மில் பெரும்பாலோருக்கு உறக்கம் வராது; உண்ட உணவு செரிக்காது.

கடவுளின் பெயரால் கற்சிலைகளையோ, களிமண் பொம்மைகளையோ, பாம்பையோ, பன்றியையோ, குரங்கையோ கடவுளாக்கி வழிபடுவது பரம்பரைக் குணம் என்றாகிவிட்டது.

இந்தக் குணம்தான், தங்களைத் தாங்களே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் காமச் சாமியார்களையும் மதப் பூசாரிகளையும் சுகபோகமாய் வாழச் செய்கிறது.

கண்ணுக்குத் தெரியாததும், உணரவே சாத்தியம் இல்லாததுமான ஒரு சக்தியையோ, சமயச் சாயம் பூசித் திரியும் சாமியார்களையோ கடவுளாகப் போற்றிக் கொண்டாடுவதையும்விட, நாலு பேர் அறிய, கொஞ்சமேனும் நல்ல காரியம் செய்யும் நடிகைகளைக் கடவுளாக்கிக் கோயில் கட்டி வழிபடுவது கண்டிக்கத்தக்க செயலல்ல.

நடிகைகளுக்குக் கோயில் கட்டிக் கொண்டாடுவது புத்தம் புதியதொரு வழக்கமும் அல்ல.

குஷ்பு, நயன்தாரா, நமீதா, ஹன்சிகா மோத்வானி என்று ஏற்கனவே கடவுள் ஆக்கப்பட்ட நடிகைகள் கணிசமாக உள்ளனர்.

இந்த வரிசையில் கடவுளாகியிருப்பவர் நடிகை சமந்தா அவர்கள்[நவராத்திரிக் கும்மாளத்தில், ஜக்கி சமந்தாவின் இடுப்பைச் செல்லமாகக் கிள்ளியபோதே அவரும் ஜக்கியைப் போலவே கடவுள் ஆகிவிட்டார்].


‘ஆந்திரா’ மாநிலம் ஆலபாடு என்னும் கிராமத்தில் ‘தெனாலி சந்தீப்’ என்பவர்தான் சமந்தா கடவுளுக்குக் கோயில் கட்டி, புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறார்.

கோயிலுக்குள் பெண் தெய்வம் சமந்தாவின் அழகிய சிலையையும் நிறுவியுள்ளார். சமந்தா அம்மையார், அறக்கட்டளை மூலம் ஆற்றிவரும் சமூகப் பணிகள் இப்படியானதொரு நல்ல காரியத்தில் தன்னை ஈடுபடச் செய்ததாகக் கூறியிருக்கிறார் தெனாலி சந்தீப்.

தெனாலி சந்தீப்பிடம் நாம் வைக்கும் ஒரு கோரிக்கை:

கோயிலுக்குச் ‘சமந்தா தேவி கோயில்’ என்று பெயர் வையுங்கள். சமந்தா ஒரு நடிகை என்பதை மறந்து அவர் ஒரு பெண் தெய்வம் என்னும் நினைப்புக்கு வழிவகுக்கும் செயல் அது.

இயலுமாயின், இந்தப் புண்ணியப் பூமியில் நிறுவப்பட்டுள்ள ‘சத்துக்குரு’வின் ஆதியோகி சிலையையும், சர்தார் வல்லபாய்ப் பட்டேல் அவர்களின் சிலையையும்விட உயரமானதொரு சிலையைச் சமந்தா தேவிக்கும் வைத்திட முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கு மேலும் மேலும் புண்ணியம் சேரும்.

‘தெனாலி சந்தீப்’ அவர்களுக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 

***நாளை[28.04.2023] கோயில் திறக்கப்படவுள்ளது என்பது இன்றைய[27.04.2023]ச் செய்தி.

https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/after-nayanthara-samantha-gets-a-temple/articleshow/99805198.cms?story=5

இவன் ‘பாதிரி’யா, மனித உயிர் பறிக்கும் கொலைகாரப் பாவியா!?!?

‘கென்யா’ நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது ‘மாலிண்டி’ என்னும் நகரம்.

இங்கு 'குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்' என்னும் பெயரில் தேவாலயம்[800 ஏக்கர் பரப்புளவுள்ள பண்ணையில்] உள்ளது. இதன் தலைமைப் பாதிரியாராக இருப்பவர் ‘பால் மெக்கன்சி’. 


மற்றப் பாதிரியார்களின் போதனை எவ்வாறிருப்பினும், இவர் தன்னைப் பின்பற்றும் மக்களிடம், “உண்ணாவிரதம் இருந்தால் ஏசுவைப் பார்க்கலாம்” என்று தொடர்ந்து போதனை செய்துள்ளார். மிகப் பல முட்டாள்கள் பட்டினி கிடந்து செத்தொழிந்திருக்கிறார்கள்.

 

அண்மைத் தகவல்களின்படி, 90 பிணங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன[பெண்கள், சிறுவர்கள் உட்பட்]. சுமார் 213 பேர் காணாமல்போயிருக்கிறார்கள்.  உடல் மெலிந்து, காவலரின் பிடியில் சிக்காமலிருக்க  அருகிலுள்ள காடுகளில் பலர் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்.



பாதிரி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்த நிகழ்ச்சி, மூடநம்பிக்கை வளர்ப்பில், இந்துச் சாமியார்களைக் கிறித்துவச் சாமியார்கள் மிஞ்சிவிட்டனர் என்பதைக் காட்டுகிறது.


“பாதிரியே, நீ முதலில் உண்ணாவிரதம் இருந்து ஏசுவைக் காண்பதற்கான பயணத்தை மேற்கொள். நாங்களும் பட்டினி கிடந்து ஏசுநாதரைக் காண உன் பின்னால் அணிவகுக்கிறோம்” என்று சொல்லும் அறிவு அங்குள்ளவர்களுக்கு இல்லை.


பலநூறு பேரின் உயிரைப் பறித்த இந்த மாபாதகனுக்கு ‘கென்யா’ தேசம் என்ன தண்டனை வழங்கப்போகிறது?


தண்டனை வழங்குமா, அல்லது, கட்டிய பெண்டாட்டியைக் கொன்று புதைத்துவிட்டு, மகாசமாதி அடைந்துவிட்டதாகப் புளுகித் திரிகிறவனையெல்லாம் இங்கே மகான் ஆக்கிக் கொண்டாடுவது போல், கொலைகாரப் பாதிரியையும் அந்த நாட்டு அரசு விடுதலை செய்து கொண்டாடுமா?!


கென்யாவில் கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலிகளேனும் உள்ளார்களா இல்லையா என்பது வரும் நாட்களில் தெரியக்கூடும்! 


https://www.dailythanthi.com/News/World/kenya-cult-deaths-hits-90-as-authorities-expand-operation-951772?infinitescroll=1


புதன், 26 ஏப்ரல், 2023

ஆடவருக்குச் சேவை செய்ய ஆண்டவன் அனுப்பிய ஆபாசப் பட நடிகை!!!

"பாலியல் இன்பத்தை அனுபவிக்கவே நன் பிறந்தேன்” என்று விரிந்து பரந்த இந்த உலகில் ஓர் அழகிய இளம் பெண் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

“இல்லை” என்பதே உங்களின் பதிலாக இருக்கும்.

“எந்தவொரு ஆண்மகனும்கூட இப்படிச் சொன்னதாகத் தெரியவில்லை. ஆணோ பெண்ணோ ‘இன்பம் துய்க்கப் பிறந்தேன்’ என்று சொன்னால் அதில் தவறேதும் இல்லை. இப்படி ஒரு பெண், குறிப்பாகக் குடும்பப் பெண் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை” என்பது உங்கள் பதிலின் விரிவாக்கமாக இருக்கலாம்.

உங்களின் பதில் மிகச் சரியானதே. இதைச் சொன்னவள் குடும்பப் பெண் அல்ல; பிரபலமான ஆபாசப் பட நடிகை[அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ‘கர்ட்னி தில்லியா’]  என்பது ஊடகச் செய்தி.

“இதை ஒரு சேவையாகவே நான் கருதுகிறேன். இதற்காகவே கடவுள் இந்த உலகுக்கு என்னை அனுப்பியுள்ளார்” என்றும் அவள் மனம் திறந்திருக்கிறாள்[“எல்லாம் கடவுளின் செயலே என்னும்போது, என்னை இப்படியான ஆபாச நடிகை ஆக்கியதும் அவருடைய கைங்கரியமே” என்பது அவளின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கலாம்].

இந்த அவளின் பேச்சு, தன்னலம் கருதாது மக்களுக்குச் சேவை செய்பவர்களை மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாகும்.

ஆபாசப் படத் தயாரிப்பாளர்களால் சற்றே புறக்கணிக்கப்பட்ட நிலையில்[4 குழந்தைகளுத் தாயான இவளால் எப்படி இந்தச் சதை வணிகத்தில் கோலோச்ச முடிந்தது என்று நம்மால் வியக்காமல் இருக்க இயலவில்லை] மன நிலை பாதிக்கப்பட்டு இப்படிப் பேசியிருக்கவும் வாய்ப்புள்ளது.

எது எப்படியோ, ஒரு நீலப்பட நடிகை இப்படிச் சொல்லியிருப்பது மனித நாகரிகத்தின் சீரழிவுக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

இதை ஒரு செய்தியாக்கி, வாசிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வருமானம் பண்ண முயலும் ஊடகக்காரர்களின் செயல் கண்டிக்கத்தக்கதாகும். 

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

எல்லாம் வல்ல ‘அவன்’ இருக்க ‘இது’ எதுக்கு?!


“ஆன்மா உண்டு உண்டு” என்று அடித்துச் சொல்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

கடவுளை ஏற்காத புத்த மதம் ஆன்மாவின் இருப்பை மறுக்கவில்லை. சைன மதம் நுண்ணுயிர்[பாக்டீரியா] முதலான அனைத்து உயிர்களுக்கும்[மனிதன் உட்பட] ஆன்மா உண்டு என்று நம்புகிறது.

இந்துமதம் பற்றிச் சொல்லவே வேண்டாம். இந்துமதச் சாமியார்கள் பலரும் பிழைப்பு நடத்துவதே ஆன்மாவை வைத்துத்தான்.

ஆன்மா தீயில் கருகாதது; நீரில் கரையாதது; கண்களுக்குப் புலனாகாதது; என்றென்றும் அழியாமலிருப்பது என்கிறார்களே தவிர, மதவாதிகள் எவரும் அதன் உண்மையான வடிவம் பற்றியோ, தோற்றம் நிகழ்ந்த காலம் பற்றியோ, இயக்கம் குறித்தோ தெளிவான விளக்கம் தந்ததில்லை.

‘மண்ணுலகம் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. உயிர்களின் தோற்றம் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது' என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஆதிமனிதனும் அந்தக் காலக்கட்டத்திலேயே தோன்றிவிட்டதாகச் சொல்கிறார்கள்[மனிதர்களுக்குச் சிந்திக்கும் அறிவு வாய்த்தது எப்போது என்பது பற்றிய ஆய்வு இங்கு அவசியமற்றது]. https://ta.wikipedia.org/

ஆன்மாவைக் கடவுள் எனப்படுபவர் தோற்றுவித்தார் என்றால், உயிர்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில் அவர் ஆன்மாக்களையும் தோற்றுவித்திருத்தல் வேண்டும்[ஆன்மா தானாகத் தோன்றியது என்றால், அனைத்தையும் படைத்தவன் அவனே என்னும் கோட்பாடு அடிபட்டுப்போகிறது].

உயிர்கள் தோன்றுவதும் இருப்பதும் அழிவதுமான நிகழ்வுடன்[வெகு அற்பம்] ஒப்பிடும்போது அதற்கு முன்பே[கோடி கோடிக் கணக்கான ஆண்டுகள்; அவற்றை அளவிடுவது சாத்தியமில்லை] அண்டவெளியில் நட்சத்திரங்களும் கோள்களும் தோன்றுவதும் அழிவதுமாக இருந்ததும் இருப்பதும் வெகு பிரமாண்டம்; பிரமிக்க வைப்பவை.

ஆக, கடவுளின் படைப்பில்[அல்லது தற்செயலான இயற்கை நிகழ்வில்] தோன்றுதலும் இருத்தலும் அழிதலும் என்பது பொதுவானதொரு தொடர் நிகழ்வு.

இந்நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்கென்று எந்தவொரு ஏற்பாட்டையும் கடவுள் செய்ததாகத் தெரியவில்லை. மகான்களும் ஞானிகளும் அவதாரங்களும்கூட ஏதும் சொன்னதில்லை.

இது தேவை எனின், உயிர்களின் செயல்பாடுகளை[பாவம், புண்ணியம் என்பவையெல்லாம் ஆன்மிகவாதிகளின் கற்பனை] ஏதேனும் ஒரு வகையில் பதிவு செய்வது கடவுளுக்கான கடமை என்னும்போது, அவர் தனக்கு நிகராக அழிவே இல்லாத ஆன்மாக்களைப் படைப்பதற்கான அவசியம் ஏதுமில்லை.

தோன்றுவதும் இருப்பதும் அழிவதும் மட்டுமே நிரந்தரமாய் நிகழக்கூடியவை என்பது மீண்டும் நினைவுகூரத்தக்கது.

மனிதர்களுக்குப் பரிணாம வளர்ச்சியின் விளைவாக ஆறறிவு வாய்த்திருக்கிறது. அதைக்கொண்டு, தங்களின் செயல்பாடுகளில் நன்மை எது தீமை எது என்று பகுத்தறிந்து, சக மனிதர்களுக்கும் உயிர்களுக்கும் இயன்றவரை உதவிகள் செய்து வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும்!

குறிப்பு:

ஆன்மா குறித்த மேற்கண்ட கருத்துகளை நீங்கள் ஏற்பீர்களா, புறக்கணிப்பீர்களா என்பது பற்றி ஏதும் அறியேன். ஆயினும், புதியதொரு கோணத்தில் அதை நான் ஆராய்ந்திருப்பதைப் பாராட்டுவீர்கள் என்பது என் நம்பிக்கை. ஹி...ஹி...ஹி!!! 

திங்கள், 24 ஏப்ரல், 2023

அதென்ன ‘செப்சிஸ்’[நடிகர் ‘சரத்பாபு’வைப் பாதித்துள்ள நோய்]?

டலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்தி உருவாவதுண்டு. இந்த அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்தி, பல உறுப்புகளின் திசுக்களைத் தாக்கி அவற்றின் செயல்பாடுகளை முடக்கிவிடும். இதுவே ‘செப்சிஸ்’ நோய் எனப்படும்[Sepsis is the body's extreme response[எதிர்வினை> எதிர்ப்புச்சக்தி] to an infection. It is a life-threatening medical emergency. Sepsis happens when an infection you already have triggers a chain reaction throughout your body].

பொதுவாக, தோல், நுரையீரல், சிறுநீர்ப் பாதை ஆகியவற்றில் ஏற்படும் தொற்றுகள் இந்த நோய்க்குக் காரணமாக இருக்கலாம். சரியான நேரத்தில் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தானதாக மாறும். 

நோயின் மிக முக்கிய அறிகுறிகள்:

*அதிகக் காய்ச்சலும் விரைவான சுவாசமும். 

*காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை 101 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் உயரும், அல்லது, 96.8 டிகிரி பாரன்ஹீட்டைவிடக் குறைந்து உடல் குளிர்ச்சியடையும்.


*வேகமாக மூச்சுவாங்கும். 1 நிமிடத்திற்கு 20 தடவைக்கு மேல் சுவாசிக்க நேரும்.


*இதயத் துடிப்பு 90ஐத் தாண்டும்; தாறுமாறாகவும் துடிக்கும். இரத்த அழுத்தம் குறையும்.


*மனநிலை இயல்பானதாக இல்லாமலிருக்கும்.


*ஒட்டுமொத்த உடம்பும் பலவீனமடையும்.


*உடம்பு குளிர்வது போன்ற உணர்வு உண்டாகும்.


*மூட்டுகளிலும் விரல்களிலும் ரத்தம் உறைதல் நிகழும்.


*பல உறுப்புகளின் இயல்பான இயக்கம் தடைப்படும். குறிப்பாக, இதயம், நுரையீரல், எலும்புகள், செரிமான மண்டலம், சிறுநீரகங்கள், தோல், மூளை ஆகியவை.


இவற்றில் இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட பாதிப்புகள் இருந்தால் அது ‘செப்சிஸ் நோயின் தொடக்க நிலை எனலாம். ஏதேனும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு குணமாகிவரும் நிலையில் இந்த நோய்த் தொற்று ஏற்படுவதும் உண்டு.


இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாகிறவர்கள்:


*65 வயதைக் கடந்த முதியவர்கள்.


*நீரிழிவு, சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள்.


*கடுமையான ரத்தக் காயங்களிலிருந்து மீண்டவர்கள்.


*கர்ப்பிணிகள்.


*மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகள்.


*சிறுநீர் வடிகுழாய், சுவாசக்குழாய் போன்றவற்றைப் பயன்படுத்துபவர்கள்.


சிகிச்சை:


செப்சிஸிற்கான காரணம் மற்றும் தீவிரத்தின் அடிப்படை நிலையைப் பொருத்து மருத்துவர் வெவ்வேறு சிகிச்சை வழிகாட்டுதல்களை & நடைமுறைகளைப் பின்பற்றுவார்கள்.


செப்சிஸிற்கான சிகிச்சையானது அதன் அடிப்படைக் காரணத்தைக் கவனத்தில் கொண்டு செய்யப்படுவது. 


*உயிர்க்காற்று[ஆக்சிஜன்] செலுத்துதல், நரம்பு வழியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை வழங்குதல் மேற்கொள்ளப்படும்.


*Vasopressor மருந்துகளைப் பயன்படுத்தல்.


*கார்டிகோஸ்டீராய்டுகளைக் குறைந்த அளவுகளில் மருத்துவர்கள் பரிந்துரைக்கக்கூடும். அவர்கள் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் மற்றும் தற்காலிக நிவாரணத்திற்காகச் சில வலி நிவாரணிகளை வழங்குவார்கள்.


*தேவைப்பட்டால் டயாலிசிஸ் செய்யப்படும்.


*குடலிறக்கம் இருந்தால் அதற்குச் சிகிச்சை அளிக்கப்படும்.


தடுப்பு நடவடிக்கைகள்:


*நாள் தவறாமல் குளித்தல். அவ்வப்போது சோப்பு நீரால் கைகளைக் கழுவுதல்.


*நிமோனியா, காய்ச்சல், சின்னம்மை, மற்றும் பிற நோய்களைத் தடுக்கத் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுதல்.


*உடம்பில் ஏற்படும் காயங்களுக்கு உடனடியாகச் சிகிச்சை செய்தல்.


*ஏதேனும் சிறிய காயம் ஏற்பட்டாலும் காயத்தைச் சுத்தம் செய்வதற்கும், சரிசெய்வதற்கும் முறையான கிருமி நாசினிகளைப் பயன்படுத்துதல்.


*மருத்துவரிடம் ஆலோசிக்காமல் எந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் எடுத்துக்கொள்ளுதல் கூடாது. ஏனெனில், இது ஆண்டிபயாடிக் எதிர்ப்புக்கு வழிவகுக்கும். இதனால் கடுமையான தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பது கடினம்.

எச்சரிக்கை:

நோய் குணமாகும்வரை 24 மணி நேரம் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பது மிக அவசியம்.


மீண்டும் தொற்றுகள்[மேலே குறிப்பிடப்பட்டவை] ஏற்பட்டால், அது செப்சிஸாக மாறும் வாய்ப்பு உள்ளது.

இந்த நோய் பெரியவர்களைவிடவும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.


குறிப்பு: இணையங்களில் வெளியாகும் மருத்துவக் கட்டுரைகளில் பலவும் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்படுவை என்பதால், அவற்றில் மொழிப் பிழையும், குழப்பமான நடையும் இடம்பெறுதலைக் காணலாம்.
இயன்றவரை அவற்றைச் சரிசெய்து வெளியிடுகிறேன். எனவே, பிழைகள் தென்பட்டால் திருத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

“வேண்டாம் பாலுறவு”த் தினம்[International “No Sex” Day]!!!

ஆகஸ்ட் 21 அன்று, சர்வதேசப் பாலுறவுத் தினத்தை[International Sex Day]மக்கள் கொண்டாடுகிறார்கள்[https://www.urbandictionary.com/define.phpterm=International%20Sex%20Day] பாலுறவு கொள்ளும் முறைகளை நன்மை பயக்கும் விதத்தில் கையாளவும், அது எத்தனை உன்னதமானது என்பதை மக்கள் உணர்ந்து போற்றவும் இத்தினம்  உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

சர்வதேசப் பாலியல் தொழிலாளர்கள் தினம்[International Whores' Day or International Sex Workers' Day] ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 2 அன்று அனுசரிக்கப்படுகிறது பாலியல் தொழிலாளர்களை மதிப்பதும், அவர்களுக்கான உரிமைகளை அங்கீகரிப்பதும், இந்த நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கங்களாகும்[Wikipedia].

பாலுறவுத் தினம் கொண்டாடுவதோடு, பாலுறவில் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும்[World Sexual Health Day(WSHD)] ஒரு நாளை[செப்டம்பர் 4] ஒதுக்கியிருக்கிறார்கள்.

இவை தவிர, செப்டம்பர் 2இல் அனுசரிக்கப்படுகிறது ஆசனவாய்ப் பாலுறவு[International Anal Sex Day]த் தினம்[இதை ‘அடச்சீய்... அசிங்க தினம்’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்]. 

பாலுறவின் முக்கியத்துவத்தை மக்களின் மனங்களில் பதியச் செய்திட இப்படிப் பல தினங்களை அறிவித்த உலகச் சுகாதார அமைப்பு[WHO], பாலுறவால் விளையும் பல தீமைகளைக் கவனத்தில் கொண்டு, “வேண்டாம் பாலுறவு” தினம்[International “No Sex” Day] என்ற ஒன்றையும் உலகத்தவருக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம்.

ஒரே ஒரு நாள் பாலுறவுச் சிந்தனைகளுக்கு இடம் தராமல் இருந்தால், அந்த ஒரு நாளில் மட்டுமாவது பாலுறவுக்காக நிகழ்த்தப்படும் கொடூரங்களும் வன்முறைகளும் குறையக்கூடும் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

வாய்ப்புள்ளவர்கள் இதை உ.சு.அமைப்பின் கவனத்திற்குக் கொண்டுசென்றால் அது பெரும் வரவேற்புக்கு உரியதாக அமையும்!

சனி, 22 ஏப்ரல், 2023

அவன் ‘அது’ விசயத்தில் சராசரிக்கும் கீழே!!!['சுரீர்’ சிறுகதை]

“நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயசு. நான் ரெண்டு பிள்ளைகளுக்குத் தகப்பன். நீ ஏண்டா இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கே?” என்று தங்கராசுவிடம் நான் கேட்டபோது அவன் சொன்ன பதில் என்னைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அவனின் பதிலை நீங்களும் தெரிந்துகொள்வதற்கு முன் எங்களைப் பற்றிய சிறு குறிப்பு:

இருவரும் பிறந்து வளர்ந்து, உருண்டு புரண்டு விளையாடிப் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தது சேலம் அருகே உள்ள ஒரு குக்கிராமத்தில்[பெயர் வேண்டாமே].

அப்புறம் இருவரும் பயணித்தது வேறு வேறு பாதைகளில்.

நான் படிப்பில் கொஞ்சம் மந்தம் என்பதால், தனியார் கல்லூரிக்கு நன்கொடை அழுது, பட்டப்படிப்பு, மேற்படிப்பெல்லாம் முடித்துப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து, கல்யாணம் கட்டி இரு பிள்ளைகளின் தந்தை ஆனது இன்றுவரையிலான என் கதை.

தங்கராசு படிப்பில் படு சுட்டி. ஒரே ‘தம்’மில் பி.டெக்., எம்.டெக்., எல்லாம் முடித்து இன்று பெங்களூருவில் பெட்டி பெட்டியாய்ச் சம்பளம் வாங்குகிறான்.

ஆண்டுக்கு ஓரிரு முறை சந்திக்கும்போதெல்லாம், “கல்யாணம் எப்போதுடா?” என்று கேட்டால், பெண் பார்த்துக்கொண்டிருப்பதாகப் பொய் சொல்லுவான்.

நேற்றைய சந்திப்பின்போது, “உண்மையைச் சொல்லு. கல்யாணம் பண்ணிக்கப்போறியா, இல்லையா?” என்று கேட்டபோதுதான் “இல்லை” என்று சொன்னதோடு காரணத்தையும் சொன்னான்.

“ஒரு பொண்ணுக்குப் புருசனாக இருப்பதற்கான முழுத் தகுதி எனக்கு இல்ல. அது விசயத்தில் மனசைக் கட்டுப்படுத்தி, நிதானமா செயல்படுறது எனக்குச் சாத்தியமாகல.”

குறுக்கிட்டேன். “எப்படித் தெரிஞ்சுகிட்டே?”

“பலான இடங்களுக்குப் போய்த் தெரிஞ்சிகிட்டேன். தப்பா நினக்காதே அந்தப் பழக்கத்தை எப்போதோ கைவிட்டுட்டேன்.” -முகத்தில் அசடு வழியச் சொன்னான் தங்கராசு.

“இந்த ‘இயலாமை’க் குறையைச் சரிக்கட்ட மருந்து மாத்திரைகள் இருப்பதாகச் சொல்லுறாங்களே?” -நான்.

“தெரியும். இந்தக் காலத்துப் பொண்ணுக அந்தரங்க உறவு பத்தி நிறையவே தெரிஞ்சி வைச்சிருக்காங்க. அது விசயத்தில் கட்டுபடி ஆகாம கட்டின புருசனைக் கைவிட்டு ஒருத்தனோடு ஓடிப்போறது, தைரியமாத் தீர்த்துக்கட்டுறதெல்லாம் செய்யுறாங்க. அவங்கள்ல ஒருத்தியைக் கல்யாணம் கட்டிகிட்டு, அவளைத் திருப்திப்படுத்துறதுக்காக, மருந்து மாத்திரைகளைத் தேடி  நாயாய்ப் பேயாய் அலையுறது எனக்குப் பிடிக்கல. அதனாலதான், கல்யாணமே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.”

நண்பனின் இந்தப் பேச்சு என்னைக் கோபப்படத் தூண்டியது. கட்டுப்படுத்திக்கொண்டு, “தனியாகவே வாழ்ந்திட முடியுமா? பாலுறவுக்குப் பலானதுகளைத் தேடிப் போறது உடம்புக்குக் கெடுதல். ஒரு பெண் துணை அவசியமில்லையா?” என்றேன்.

“தேவைதான். அந்தத் தேவையை நிறைவேத்துறதுக்காகத்தான் சேர்ந்து வாழுறதில் விருப்பமுள்ள ஒருத்தியோடு சேர்ந்து வாழுறதுன்னு முடிவு பண்ணினேன். இம்மாதிரியான வாழ்க்கையில், இருவரில் ஒருத்தருக்கு விருப்பம் இல்லேன்னாலும் பிரிஞ்சுடலாம். யாரோ ஒருத்தனோடு ஓடிப்போறது, தீர்த்துக்கட்டுறதுக்கெல்லாம் இங்க இடமில்ல. குழந்தை பெத்துக்கக் கூடாதுங்கிற நிபந்தனையோடு, என்கூட வேலை பார்க்குற, ஏற்கனவே விவாகரத்துச் செய்துகிட்ட ஒருத்தியைச் சேர்த்துகிட்டுக் குடித்தனம் நடத்தினேன். ரெண்டு வருசம்தான், பிரிஞ்சுட்டோம். ஒரு வருசம்போலத் தனியா இருந்தேன். இப்போ இன்னொருத்தியைச் சேர்த்துகிட்டிருக்கேன்.....” -உணர்ச்சியற்ற தொனியில் பேசிக்கொண்டிருந்தான் தங்கராசு. 

குறுக்கீடு செய்யாமல் அவன் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“இவளோட உறவு எவ்வளவு நாள் நீடிக்கும்னு தெரியாது. அப்புறமும், புருசனால் கைவிடப்பட்டவளோ விவாகரத்துச் செய்தவளோ கிடைச்சா சேர்த்துக்கலாம்தான். ஆனா, வயசாயிட்டா இதைத் தொடர முடியாது. தனியாவே காலத்தைக் கழிச்சிட வேண்டியதுதான்.”

“வாரிசுகளே இல்லாம போனா, வயசான காலத்தில் யார் கவனிப்பாங்க?”

“இப்போ எல்லாம் ஊரூருக்கு முதியோர் இல்லங்கள் வந்திடிச்சி. பணத்தை விட்டெறிஞ்சா ரொம்ப நல்லா கவனிச்சிக்குற விடுதிகளெல்லாம் இருக்கு.”

“தீராத நோய் காரணமாகவோ, தள்ளாத வயசு காரணமாகவோ நடமாட முடியாத நிலைக்கு ஆளாகும்போது.....”

குறுக்கிட்டான் தங்கராசு, “வாரிசுகள் இருந்தா மட்டும் கட்டிலோடு ஒன்னுக்கு ரெண்டுக்குப் போயிட்டிருந்தா பணிவிடை செய்யுறாங்களா என்ன? பதினைஞ்சாயிரம் இருபதாயிரம் சம்பளத்தில் ஆள் ஏற்பாடு பண்ணிடுறாங்க. பண வசதி இல்லாதவங்க ஏதோ ஒரு வழியைக் கையாண்டு மூச்சை நிறுத்திடுறாங்க.”

“அதைச் செய்யவாவது வாரிகள் இருக்கணும் இல்லையா?’

“தேவையில்லை. இனி நடமாடவே முடியாதுங்குற நிலைக்கு ஆளாகும்போது, வாங்கி வைத்திருக்கிற தூக்க மாத்திரையில் ஒரு கைப்பிடி அளவு விழுங்கிட்டு, ‘நான் செத்திட்டிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் மூச்சு நின்னுடும். வந்து எடுத்துட்டுப் போயி அனாதைப் பிணம்னு அடக்கம் பண்ணிடுங்க’ என்று நகராட்சிக்கு ஒரு போன் செய்தி அனுப்பிட்டா எல்லாம் சுமுகமாக முடிஞ்சிடும்” என்று சிரித்தான் தங்கராசு; சிரித்துக்கொண்டே இருந்தான் என்னிடமிருந்து விடை பெறும்வரை. அது விரக்தி கலந்த சிரிப்பு.

என்னால் சிரிக்க இயலவில்லை. அவன் தேர்வு செய்திருந்த வாழ்க்கை முறை பற்றிச் சிந்திக்கும் நிலையிலும் நான் இல்லை.

“தங்கராசுகளின் எண்ணிக்கை இனி வெகுவாக அதிகரிக்குமோ?” என்று மட்டும் எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அப்புறமும் எப்போதாவது இப்படிக் கேட்டுக்கொள்வது தொடர்ந்தது. 



வெள்ளி, 21 ஏப்ரல், 2023

அகில உலக ரம்ஜான் பண்டிகையும் ஆட்டுக்கறி விருந்தும்!!!

ஸ்லாம் மதம்[‘மார்க்கம்’ என்கிறார்கள்] பல நல்ல அம்சங்களை உள்ளடக்கியது என்றால் அது மிகையில்லை.

*கடவுள் அல்லா[ஹ்] ஒருவரே என்னும் கோட்பாடு.

*தாங்கள் செய்யும் எந்தவொரு நற்செயலுக்கும் இறைவனே காரணம்[”எல்லாப் புகழும் இறைவனுக்கே”] என்று சொல்லித் தன்னடக்கத்துடன் வாழ்வது.

*எந்தவொரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன்னரும், “அல்லா விரும்பினால்” என்று அவன் மீதான தங்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துதல்.

*ஒரு நாளில் 5 முறை[?]  கடவுளைத் தொழுவது கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது!

*வழிபாட்டிடத்தில்[மசூதி] சாதி வித்தியாசம், சமூக ஏற்றத்தாழ்வு என்று எந்தவொரு பாகுபாட்டிற்கும் இடம் தராமல் கூட்டமாகத் தொழுகை மேற்கொள்ளல்.

*பண்டிகை நாட்களில் ஏழைபாழைகளுக்கு உதவும் உயர் குணம்.

*விழாக்காலங்களில் பல நாட்கள் விரதம் இருந்து, கஞ்சி குடித்து வாழ்ந்து மனதைத் தூய்மைப்படுத்தும் மிக நல்ல பழக்கம்.

இப்படிப் பாராட்டுதலுக்குரிய வகையில் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்ட  இஸ்லாமியர்கள், பண்டிகைக் காலங்களுக்குரிய கடமைகளைச் செய்துமுடித்த பிறகு, ‘கறி விருந்து’ உண்டு மகிழ்ந்து பண்டிகையைக் கொண்டாடி முடிப்பது நம் நெஞ்சை உறுத்துகிறது[ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 4 மணி நேரத்தில் ரூ2 கோடிக்கு ஆடுகள் விற்பனை[இன்னொரு சந்தையில் ரூ6 கோடிக்கும் மேல்] என்பது ஊடகச் செய்தி https://tamil.timesxp.com/samayam/tamilnadu/vilupuram/rs-4-crore-goats-were-sold-on-the-occasion-of-ramzan/videoshow/99661700.cms].

பண்டிகையின் தொடர்ச்சியாக, இந்தக் கறி விருந்தை நடத்துவது தேவைதானா?[இடைவெளி கொடுத்துப் பிறிதொரு நாளில் நடத்தலாம்?].

இதைக் கருணக் கடவுளான அல்லா[ஹ்] அனுமதித்திருப்பதாக வேறு சொல்கிறார்கள். சில ஆதாரங்கள் கீழே:

//கத்தியை நன்றாகத் தீட்டி, இறைவன் பெயரைச் சொல்லி அதன்[விலங்கு] கழுத்தில் அறுக்க வேண்டும்// https://m.facebook.com/JaffnaMuslim/photos/a.302926556462800/1422599547828823/

//மனிதன் தனது உணவுக்காகச் சில உயிரினங்களைக் கொல்லலாம் என்று இஸ்லாம் கூறுவது உண்மைதான்// https://eagathuvam.com.[தரப்பட்டுள்ள முகவரிகளில், உயிரினங்களைக் கொன்று உண்பது தவறல்ல என்பதற்கு மிக விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளமை அறியத்தக்கது.

கொல்லும்போது உயிர்களுக்கு வலி தெரியாமலிருக்க இஸ்லாம் கூறும் முறையை[பிஸ்மில்லாஹ் சொல்லுதல்]ப் பின்பற்றுதல் வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இங்கே நாம் குறிப்பிட விரும்புவது.....

“நன்கு தீட்டிய கத்தியால், சில வினாடி நேரம் கழுத்தை அறுத்தாலே விலங்கு வலியை உணராமல் இறந்துவிடும்’ என்பது மனிதர்களாகிய உங்களின் கண்டுபிடிப்பு.

உண்மை இதுவாக இருக்க, இச்செயலுக்குக் குரானையும் அல்லாவையும் ஏன் துணைக்கு அழைக்கிறீர்கள்?” என்பதுதான்.

ஆடோ மாடோ வேறு எந்தவொரு விலங்கோ, தவிர்க்க இயலாத காரணங்கள் இருப்பதாகச் சொல்லி, கொன்று கூறுபோட்டு, தலைக்கறி, குடல்கறி, வறுகறி, ஈரல், ரத்தப் பொறியல், பிரியாணி என்று விதம் விதமாய்ச் சமைத்து வயிறாரவும் ருசியாகவும் உண்டு மகிழலாம். தடுப்பாரில்லை.

நாம் திரும்பத் திரும்ப எழுப்ப விரும்புவது மேற்கண்ட அதே கேள்வியைத்தான்.

“உங்களின் கொலைத் தொழிலுக்குக் குரானையும் அல்லாவையும் ஏன் துணைக்கு அழைக்கிறீர்கள்?”

வலி தெரியாத வகையில் ஓர் உயிரைக் கொல்வது குற்றமல்ல என்பதை அல்லா ஏற்பதாகச் சொல்வது சரி என்றால், நமக்கு விரோதியாக உள்ள ஒருவனை வலி தெரியாத வகையில் கொல்வதும்[சில வினாடிகளில் கழுத்தை அறுத்து] தவறில்லை என்றாகிறது.

இப்படியான சமாதானைத்தை முன்வைத்து, ஒருவனை இன்னொருவன் கொல்வது குற்றமில்லை என்பதை அல்லா என்னும் நீதிபதி ஏற்கக்கூடுமாயினும், நடைமுறை வாழ்வில், நம் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் ஏற்கமாட்டார்கள். ஹி... ஹி... ஹி!!!

இது விசயத்தில் இந்துமதத்தவர்கள் புத்திசாலிகள். கருணாமூர்த்திகள் எனப்படும் பெத்தப் பெரிய கடவுள்களை வம்புக்கு இழுக்காமல், கருப்பனார், முனியப்பன், மாகாளியம்மா, மாரியம்மா என்று கறிவிருந்து உண்டு களிப்பதற்கென்றே கொஞ்சம் கடவுள்களைக் கைவசம் வைத்திருக்கிறார்கள்.

கிறித்தவர்களைப் பொருத்தவரை, ‘கொல்விருந்து’க் கோட்பாட்டை வெகு சுருக்கமாக முடித்துக்கொண்டார்கள்![புதிய ஏற்பாட்டின்படி, கிறிஸ்தவர்களுக்குக் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே அசைவ உணவுக் கட்டுப்பாடு, ‘சிலைகளுக்குப் பலியிடப்பட்ட உணவு, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சி ஆகியவற்றைத் தவிர்ப்பது மட்டுமே[en.wikipedia.org].

* * * * *

https://eagathuvam.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE/

வியாழன், 20 ஏப்ரல், 2023

“ஒத்தைக்கு ஒத்தை வர்றீங்களாடா?”... சீனர்களிடம் சவால்!

‘உலக மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பெற்றுள்ளது’ என்பது ஊடகங்களில் வெளியாகியுள்ள பரபரப்புச் செய்தி[ஐ.நா.மக்கள் தொகை நிதியமே இதை அறிவித்துள்ளதன் மூலம் இச்செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது].

இனப்பெருக்கம் செய்வதில் இந்தியா சீனாவை முந்திவிட்டது சரி, இதைச் சொல்லி நாம் பெருமைப்படலாமா?

பெற்றுத் தள்ளுவதில் சாதனை நிகழ்த்துவதால் நாம் பெறும் பயன்கள் என்ன?

1962இல் நடந்த போரில் நம்மிடமிருந்து சீனர்கள் கைப்பற்றிய ஆயிரக்கணக்கான ச.கி. மீட்டர் அளவிலான நிலப்பரப்பு இன்னமும் அவர்கள் வசமே உள்ளதே, அதை மீட்க இந்த இனப்பெருக்கம் உதவுமா?

அடேய் சீனர்களா, மக்கள் தொகையில் உங்களை நாங்கள் மிஞ்சிவிட்டோம். நீங்கள் ஆக்கிரமித்திருக்கும் நிலப்பரப்பை மீட்க நமக்குள் இன்னொரு போர் நிகழ்ந்தால் நாங்களே வெற்றி பெறுவோம்......

போர் வேண்டாமென்றால், நீங்கள் 142.57 கோடி. நாங்கள் 142.86 கோடி. ‘ஒத்தைக்கு ஒத்தை’ மோதிப்பார்க்கலாம். தயாரா? என்று சவால்விடலாமா?

இதெல்லாம் நடைமுறை சாத்தியம் இல்லை என்னும்போது, இது விசயத்தில் சீனாவை மிஞ்சிவிட்டோம் என்று பீற்றிக்கொள்ள சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறது?

மேலும், மக்கள் தொகைப் பங்களிப்பு[நாட்டுக்கு மக்கள் ஆற்றும் பணி] என்பது அதன் எண்ணிக்கையைச் சார்ந்தது அல்ல... எங்களிடம் தரமான பணியாளர்கள்[போர் வீரர்கள் உட்பட]90 கோடிப் பேர் இருக்கிறார்கள்” என்று சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.

‘ஒரு நாட்டுக்குத் தேவை மக்கள் தொகைப் பெருக்கம் அல்ல; அவர்களில் பல்துறை வல்லுநர்கள் பலர் இடம்பெற்றிருப்பதே’ என்னும் பொருள்பட, சீன வெளியுறவு அமைச்சகம் சொல்லியிருப்பது சீனாவுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, சிறிய ‘இஸ்ரேல்’ நாட்டுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.

அதன் பெருமையை விவரிக்கும் ஒரு சிறு பட்டியல் கீழே[இணையத் தகவல்]: 

  #இஸ்ரேலில் 90% பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள்.

இன்றைய நவீன உலகின் 90% காப்புரிமை இஸ்ரேலிடம்.

அமெரிக்காவில் 30% பணக்காரர்கள் அவர்களே.

நியூயார்க் 50% அவர்களிடம்.

FB மார்க்[What is FB used for?] முதல் பல பணக்காரர்கள்

யூதர்கள்தான்.

புகழ்பெற்ற பல ஹாலிவுட் நடிகர்கள் யூதர்கள்.

உலகை ஆட்டிப்படைக்கிற இந்த இஸ்ரேலியர்கள்

உலக மக்கள் தொகையில் 0.2% மட்டுமே#