செவ்வாய், 30 ஜூலை, 2024

சாமிகளும் ஆசாமிகளும் அப்பாவிப் பக்தர்களும்!!!

பக்தக்கோடிகளே,

குபேர சாமி, குலச்சாமி, ஆண் சாமி, பெண் சாமி, நான்கு தலைச்சாமி, அப்பாசாமி, அப்பனுக்குப் புத்தி புகட்டிய ஆறுமுகச்சாமி, ஐயப்பசாமி,  முனியப்பசாமி, கருப்பண்ணசாமி, அனுமன் சாமி என்றிப்படி ஏராள சாமிகள் இருப்பதாக நம்புகிறீர்கள்[நம்பாதீர்கள் என்றால் அடியேனை ‘நாசகார நாஸ்திகன்', ‘அயோக்கியன்’ என்றெல்லாம் சாடுவீர்கள்].

நீங்கள் நம்புகிற சாமிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்வது எப்படிச் சாத்தியம் இல்லையோ அது போலத்தான் நீங்கள் சாமிகளுக்கு எடுக்கிற விழாக்களையும் எண்ணி முடிப்பது சாத்தியமில்லை.

நீங்கள் எடுக்கிற விழாக்களில், தேர்... மன்னிக்கவும், திருத்தேர்[ஊடகக்காரர்கள் இப்படித்தான் எழுதுகிறார்கள்] இழுப்பது, அலங்கரிக்கப்பட்ட சாமி சிலைகள் நிறுவப்பட்ட சப்பரங்களை ஊர்வலமாகச் சுமந்து செல்வது போன்றவை முக்கிய விழா நிகழ்ச்சிகள் ஆகும்.

நீண்ட நாட்களாய் எனக்கொரு சந்தேகம்.

சப்பரங்களில் வைத்துச் சாமிகளைச் சுமக்கிற நீங்கள், சாமிகளுடன் சில ஆசாமிகளையும் சேர்த்துச் சுமக்கிறீர்களே, அது ஏன்? அவர்கள் கீழே நின்று தீபாராதனை காட்டினால் சாமிகள் கோபித்துக்கொள்ளுமா?

திங்கள், 29 ஜூலை, 2024

பிரதமர் மோடியின் மூன்று அவதாரங்கள்!!!

கீழ்க்காணும் வெகு சுவையானதொரு கட்டுரையைத் தற்செயலாக https://tamil.oneindia.comஇல் வாசிக்க நேர்ந்தது. மிகவும் பிடித்திருந்ததால் இங்கே பகிர்கிறேன்.

கட்டுரை ஆசிரியர் மோடியைப் புகழ்கிறாரா, எள்ளி நகையாடுகிறாரா என்பது பற்றிப் புரிந்துகொள்ள இயலவில்லை[அடியேன் யாதொன்றும் அறியேன் பராபரமே!]. உங்களுக்கு அது சாத்தியம் ஆகலாம்.

நாம் என்ன செய்தாலும் நம்மைப் பற்றி மக்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் அரசியல் தலைவர்கள் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள். பிரதமர் நரேந்திர மோடி இது விசயத்தில் அளவிறந்த பேரார்வம் கொண்டவர். மக்களைத் தனது செயல்களால் அதிகம் ஈர்க்கக்கூடியவரான இவர் தன்னைப் பற்றியே எப்போதும் நினைக்கவும் பேசவும் வைப்பார்.

1.டீ மாஸ்டர்: டீ விற்பனையாளர் பிரதமர் நரேந்திர மோடி சிறுவயதில் தன் தந்தையின் டீக்கடையில் பணியாற்றியபோது, குஜராத் மாநிலம் வத்நகர் ரயில் நிலையத்தில் தான் டீ விற்றதாக 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கூறினார். 

இதனைக் கேட்ட மக்கள், பிரதமர் மோடி டீ விற்றுப் பிரதமர் ஆனவரா என உள்ளம் நெகிழ்ந்தார்கள். பிரதமர் மோடி டீக்கடை வைத்துப் பெரிய தலைவராக உயர்ந்தவர் என்பதை விளம்பரப்படுத்தும் வகையில் அப்போது நமோ டீக்கடைகள் நாடு முழுவதும் பாஜகவினரால் திறக்கப்பட்டன. பல டீக்கடைகளுக்கு நமோ டீக்கடை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

டீக்கடைக்கார்கள் பலரும், ‘பாரப்பா நம்மள மாதிரி ஒருத்தர்தான் பிரதமர் ஆயிருக்காரு’ என உள்ளம் மகிழ்ந்தார்கள். இதனால், பிரதமர் மோடி கடந்த மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் பிரதமராகப் பொறுப்பேற்றார். 

2.ஏழைத் தாயின் தவப் புதல்வன்: ஏழையான பிரதமர் நரேந்திர மோடி எத்தனைதான் எதிர்க்கட்சிகள் ஏகவசனத்தில் திட்டித் தன்னைக் காயப்படுத்தினாலும், தன்னை ஏழைத் தாயின் மகன் என்று உருகினார். ஏழைத் தாயின் மகன் பிரதமர் ஆனதைச் சிலரால் ஏற்க முடியவில்லை என்று மோடி கூறியதை நாம் அறிவோம்; மக்கள் அறிவார்கள்.

3.காவலாளி மோடி: இப்போது மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில்[தேர்தலுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை இது], பிரதமர் நரேந்திர மோடி திடீரென, தன் பெயருக்கு முன்னால் ‘சௌகிதார் மோடி’ என்று சேர்த்துக்கொண்டார். அதாவது இன்று முதல் நான் மக்களின் பாதுகாவலன்/காவல்காரன்” என்று கூறிக்கொண்டார். 

இதனைப் பார்த்து, பாஜகவினர் மோடியைப் போல் சௌகிதார் என்ற பெயரை டுவிட்டரில் சேர்த்துக்கொண்டுள்ளனர்.

*பலே மோடி: இதன் தொடர்ச்சியாக இன்றைக்கு மோடி பல ஆயிரம் காவலாளிகளுடன் பேசி, அவர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

மக்களுக்காக என்ன சாதனைகள் செய்தார் என்பதைத் தாண்டி, மக்களைக் கவர என்ன செய்தார் என்பதை வெளிகாட்டுவதில்தான் மோடியின் வெற்றி அடங்கி இருக்கிறது. 

*பயணங்கள்... பயணங்கள்: பிரதமர் மோடி எப்போதும் சும்மா இருந்தது இல்லை. வெளிநாட்டுப் பயணங்களோ, உள்நாட்டுப் பயணங்களோ இல்லாமல் போனால் யாரோ ஒரு ஏழைத்தாயின் மகன் தனக்கு அனுப்பிய கடிதத்தை ரேடியோவில் /டி.வி.யில் வாசிப்பார். இதன் மூலம் மக்களிடம் தன்னைக் கொண்டுசேர்ப்பார். 

இதேபோல் ஏழைகளுக்குக் கேஸ் சிலிண்டர் வழங்கும்போதெல்லாம் அவர்களுடன் கலந்துரையாடுவார்; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஏழைகளைத் தேடிச்சென்று பேசுவார். 

ஒட்டுமொத்ததில், பிரதமர் மோடி ஏழை மக்களைக் கவருவதற்காக எதையாவது செய்துகொண்டுதான் இருப்பார். இதுதான் மோடியின் சாமர்த்தியம்.

* * * * *

 https://tamil.oneindia.com/news/delhi/tea-master-chowkidar-pm-modi-s-election-campaign-tricks/articlecontent-pf361678-344559.html

சனி, 27 ஜூலை, 2024

மசூதியை மறைக்க வெள்ளைத் திரை! சங்கிகளின் மன அழுக்கை மறைக்க?!?!

தெருவில் நடந்துசெல்கிறோம். நமக்குப் பிடிக்காதவர் எதிரே வருகிறார். எப்போதுமே அவரைப் பார்க்கப் பிடிப்பதில்லை என்பதால், முகத்தை வேறுபக்கம் திருப்பி அவரைக் கடந்து செல்கிறோம்.

நம் எதிரில் வரக்கூடாது என்றோ, தற்செயலாக வந்தால், “உன் முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டு போ” என்றோ அவரை எச்சரிக்க முடியுமா? அல்லது, ஒரு துணிகொண்டு நாமே அவர் முகத்தை மறைக்க இயலுமா?

அவர் நம்மைவிடவும் ஆள் பலம், பண பலம் என்று பல வகையிலும் தாழ்ந்தவராக இருந்தால் சாத்தியமே.

ஆனால்,

அவர் நம் கண்ணெதிரே வருவதைத் தடுத்தாலும், இதற்கு முன்பே சில முறைகளோ பல முறைகளோ அவரைப் பார்த்திருப்பதால், நம் மனத்திரையில் அவர் தோன்றுவதைத் தடுக்கவே முடியாது.

ஆக.....

அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் நம் வழியில் பயணிப்பதே[அது புனிதப் பயணமாயினும்] அறிவுடைமை ஆகும்.

ஒரு குறைந்தபட்ச அறிவு படைத்த மனிதனுக்கும்கூடக் கொஞ்சம் சிந்தித்தாலே புரிகிற உண்மை இதுவாகும்.

நம் நாட்டிலுள்ள இந்துமத வெறியன்களுக்கு[சங்கிகள்], இந்தக் குறைந்தபட்ச அறிவுகூட இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது கீழ்க்காணும் ஊடகச் செய்தி.

இவர்களின் அடாத செயலை விமர்சிக்கப் பொருத்தமான சொல் பயன்பாட்டில் இல்லை; அகராதியிலும் இல்லை.

உங்களின் புத்திசாலித்தனைத்தைப் பயன்படுத்தி ஒரு சொல்லை உருவாக்கி உதவுங்களேன்.

* * * * *

#புனித மாதமான சவான் (ஷ்ரவான்) மாதம் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் (Kanwariyas) பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஹரித்வார் செல்வார்கள்.

அவர்கள் கங்கையில் புனித நீர் எடுத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை கன்வார் யாத்திரை என அழைப்பார்கள். இந்த யாத்திரை ஆகஸ்ட் 2-ந்தேதி முடிவு


உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகரில் கன்வார் யாத்திரை செல்லும் வழியில் உள்ள மசூதி மற்றும் மஸார் வெள்ளைத்துணி கொண்டு மறைக்கப்பட்டது[மோடி அரசு உடந்தை?] பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது.


https://www.maalaimalar.com/news/national/kanawar-yatra-masjid-covered-by-white-cloth-condemned-by-congress-731243?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjDtzp8LMPrYtwMw4tWNAw&utm_content=rundown#



வெள்ளி, 26 ஜூலை, 2024

வாழ்க்கைத் தத்து[பித்து]வம்!!![காணொலி]

தோல்வி கண்டால் வெகுவாகத் துவண்டுபோகிறவன் நான். இந்தக் காணொலி உரை எனக்கானதே[ஹி...ஹி...ஹி!!!]. என்னைப் போன்றவர்களுக்கும் பயன்படக்கூடும் என்னும் நம்பிக்கையில் இதைப்[சற்று முன்னர் ‘யூடியூப்’இல் வெளியானது] பகிர்கிறேன்.

வியாழன், 25 ஜூலை, 2024

‘நீட்’ தேர்வின் புனிதத்தன்மையும் கற்புடைமையும்!!!

 

‘நீட்’ என்பது, மருத்துவக் கல்விக்கு மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான, இயந்திரத்தனானதொரு  வழிமுறை மட்டுமே. 

இதில் புனிதம், மனிதாபிமானம், வெங்காயம், பெருங்காயத்திற்கெல்லாம் இடமே இல்லை

[University of Madras Lexicon > puṉitam (புநிதம்,) > 1.purity, தூய்மை; 2.holiness, பரிசுத்தம்] 

//"புனிதம்" என்றால் என்ன? எப்படி ஒரு பொருளை புனிதமானதாக கருதுவது? அந்த பொருளுக்கு எங்கிருந்து அந்த புனிதத்தன்மை கிடைக்கிறது?//

தூய அன்பால் போற்றப்பட்டு ஆராதிக்கப்படும் பொருள் புனிதமாகின்றது (Sacred), மனிதர் புனிதராகின்றார்; சிற்பியால் செதுக்கப்பட்டக்கருங்கல் சிலையாகி கோயில் கருவரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் மக்களின் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு போற்றித் துதிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவதால் புனிதமாகின்றது//

‘நீட்’டில் வினாத்தாள் விற்பனை[தேர்வுக்கு முன்னர்], ஆள்மாறாட்டம், மேற்பார்வையாளர்கள் கையூட்டுக்குப் பெற்று மாணவர்களுக்கு உதவுதல் போன்ற ஊழல்கள் வேண்டுமானால் இடம்பெற வாய்ப்புண்டு.

அண்மையில் அனைத்திந்திய அளவில் நடைபெற்ற இத்தேர்வில் இடம்பெற்ற ஊழல் உலகறிந்தது.

இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தபோது புலனாய்வுத் துறையினர்[சிபிஐ] ஊழல் இடம்பெற்றதை[குறைந்த அளவில்!?!?!?] ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில்.....

நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் இறுதிப் பகுதி:

#...இது தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில், வினாத்தாள் கசிவால் 155 மாணவர்கள் பலனடைந்துள்ளதாக[ஊழல் புரிந்ததாக அல்ல???] அது அறிக்கை தாக்கல் செய்துள்ளது. எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் சிபிஐ கூறி இருக்கிறது.

நீட் வினாத்தாள் பரவலாகக் கசியவில்லை[ஹி... ஹி... ஹி!!!] என்ற சென்னை ஐஐடி-ன் அறிக்கையை அரசு தாக்கல் செய்துள்ளது.

தேசியத் தேர்வு முகமை வழங்கிய தரவுகளை நீதிமன்றம் சுயமாக[?] ஆய்வு செய்துள்ளது.

பதிவேட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையில், தற்போதைய நிலையில், தேர்வின் முடிவு மோசமாக உள்ளது மற்றும் தேர்வின் ‘புனிதத்தன்மை’[?]க்குத் திட்டமிட்ட ரீதியில் மீறல் நடந்துள்ளது[‘தேர்வை ரத்து செய்யும் அளவுக்குப் பெரிய பாதிப்பு இல்லை’ என்றாலே போதும்தானே?] என்பதைக் காட்டுவதற்கான அறிகுறிகள் இல்லை.

குறிப்பு:
செய்திக்கு[நகல் பதிவு] பாஜக சங்கிகள் கொடுத்துள்ள தலைப்பு கவனிக்கத்தக்கது.


புதன், 24 ஜூலை, 2024

‘அஞ்சா நெஞ்சர்’ மோடி! ‘இந்தியா கூட்டணி’க்கு எச்சரிக்கை!!

மக்கள் வாக்களித்து ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்படும் நாடு எதுவாயினும், நாட்டை ஆளுபவர்கள், தமக்கு வாக்களிக்காதவர்களை இனங்கண்டு அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எந்தவொரு நிதியுதவியும் செய்யாமல் புறக்கணிக்கும்/பழிவாங்கும் அநியாயம் அங்கெல்லாம் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.

விதிவிலக்கு.....

இந்தியா.

‘இந்தியா கூட்டணி’ ஆளும் மாநிலங்களைப் புறக்கணித்து, தனிப் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கவிழாமலிருக்க முட்டுக் கொடுக்கும் பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு அளவிறந்த நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்[மோடியின்  ‘நிதிநிலை அறிக்கை>பட்ஜெட், 2024] இந்த நாட்டின் பிரதமர் மோடி; தேவைப்பட்டால் மேலும் மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பார்.

ஒரு பெரிய நாட்டை ஆளுகிற மோடி, செய்யக்கூடாத இந்தக் கீழ்த்தரமான செயலுக்காக ஒட்டுமொத்த உலகமும் தன்னைப் பழிக்கும் என்றோ, புறக்கணிக்கப்பட்ட மாநில மக்கள் பெரிதும் வருந்துவார்கள் என்றோ எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டார்.

இவரின் தகாத செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

அவர்களின் கண்டனம் இவரின் கால் தூசுக்குச் சமானம்.

களம் இறங்கி, மக்களோடு இணைந்து அவர்கள் போராடினாலும் அவர்களால் புடுங்க முடியாது, ஓர் ஆணிகூட, அடக்கி ஒடுக்க ஆயுதம் ஏந்திய படை வீரர்கள் இருப்பதால்.

இவர் நினைத்தால் எதுவும் செய்யலாம்.

ஒரு சர்வாதிகாரியாக ஆகும் ஆசை மோடிக்கு எப்போதுமே உண்டு. இப்போதே ஏறத்தாழ ஒரு சர்வாதிகாரியாக இருக்கும் இவர் இன்னும் சில ஆண்டுகளில் முழுச் சர்வாதிகாரியாக ஆகும் வாய்ப்பும் உள்ளது.

எனவே, இந்தியக் கூட்டணிக்காரர்களுக்கு நாம் செய்யும் எச்சரிக்கை.....

மோடி அஞ்சா நெஞ்சர்; அசாதரணமான மனிதர்! அவரை எதிர்த்துப் போடராடுவது சில சுண்டெலிகள் சேர்ந்து ஒரு பெரிய மலையை அடியோடு பெயர்த்துச் சாய்க்க முயல்வது போன்றது!!

செவ்வாய், 23 ஜூலை, 2024

பன்றி மனிதர்கள்![மனிதப் பன்றிகள்?]

 அறிவிப்பு:

பாவப்பட்ட பன்றியைப் பாவி மனிதர்களுடன் இணைத்து, ‘பன்றி மனிதர்கள்’ என்று உருவகப்படுத்தியதற்காக வருந்துகிறேன். இது, ‘வதவத’ என்று நம்மவர்கள் பிள்ளை பெறுவதற்கான ஓர் உதாரணம் மட்டுமே.

திங்கள், 22 ஜூலை, 2024

அறிஞர்கள் நிறைந்த இந்தியா! ஆளுபவர்களோ ‘தற்குறி’கள்!!

அரசு ஊழியர்கள் என்பவர்கள் அரசியல் சட்ட விதிகளின்படி, அரசின் சட்டதிட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டுப் பணியாற்றக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

எந்தவொரு தனிப்பட்ட அமைப்பும் அவர்கள் மீது அதிகாரம் செலுத்தவோ, அவர்களின் உழைப்பைப் பயன்படுத்தவோ கூடாது என்பது  காலங்காலமாகப் பின்பற்றப்படும் நடைமுறை.

இதை இன்றைய ஆட்சியாளர்கள்[தற்குறிகள்] அறியாமலிருப்பது இந்த நாடு அழிவை நோக்கி வெகு வேகமாகப் பயணிப்பதற்கான அறிகுறியாகும்.

இதை இங்கே குறிப்பிடுவதற்கான காரணம், அரசு ஊழியர்கள் RSS எனப்படும் ‘தடியர்கள்’ இயக்கத்தில் சேர்வதற்கு மோடி அரசு அனுமதி அளித்திருப்பதுதான். 

ஒரு தனியார் அமைப்பு[ஆர்.எஸ்.எஸ்] அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் அவல நிலை இங்கு உருவாகியுள்ளது.

நல்லெண்ணங்களோ, நாட்டின் வளர்ச்சியில் குறைந்தபட்ச அக்கறையோ இல்லாத தற்குறிகள் ஆட்சிப் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக அகற்றப்பட வேண்டிய நேரம் இது.

நாட்டு நலனில் அக்கறையுள்ள கட்சிகள் இக்கணமே ஒருங்கிணைந்து போராடினால் மட்டுமே இந்தியாவைக் காப்பாற்ற முடியும்!

                                          *   *   *   *   *

தொடர்புடைய இன்றையச் செய்தி:

#மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், “மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சாவர்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து, அரசு ஊழியர்களை RSSக்கு அனுப்பிவைக்கும் வேலையைத் துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்#

https://www.vikatan.com/government-and-politics/centre-lifts-decades-old-ban-on-government-staff-joining-rss?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCejf8KMN389wIwmqGNAw&utm_content=rundown&gaa_at=g&gaa_n=AWsEHT6LSjcBiFhjcdr6HQlYdM_PTIwVYE6LOvuBoF0Tu26r91cxhYpp9UzOgmuP-g0f6SSag_tQf41HQye22MeBn4FaSdWI0A%3D%3D&gaa_ts=669e66ab&gaa_sig=LS3oWHn9oZKn5nvw1U-XftBDKericvsneClJaMS7cKXeA5p54LCo1Brmwd7oO7otuShQAlMCIe7TPyqxT5sa9A%3D%3D


ஞாயிறு, 21 ஜூலை, 2024

'அங்கே’யும் சீல்!!![உள் மனதை உறுத்தும் உண்மைக் கதை]

கொஞ்சமும் கற்பனை கலவாத உண்மைக் கதை இது; நம்பத்தக்க நெருங்கிய உறவினர்  சில நாட்களுக்கு முன்பு சொன்னது.

கதையைத் தொய்வில்லாமல் கொண்டுசெல்வதற்கான உருவகம் & வர்ணனை போன்றவை தவிர்க்கப்பட்டு, மிக எதார்த்தமான பேச்சு நடை கையாளப்பட்டுள்ளது.

                                             *   *   *   *   *
புதுமணத் தம்பதிகளான கதிரவனுக்கும் கல்யாணிக்கும் அன்று ‘முதலிரவு’.

வழக்கமாக ஆண்கள் கையாளும் முன்விளையாடல்களை முடித்து, தனக்கானவளைப் பிறந்த மேனியளாக்கி ரசிக்க முற்பட்டபோது, அவளின் அடிவயிற்றில் வெளிறிய நிறத்தில் தென்பட்ட அழுத்தமான ஒரு கோடு கதிரவனைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

“இது எப்படி?” என்றான் கல்யாணியிடம்.

“ரொம்ப நாளா இருக்குது. எப்படி உண்டாச்சின்னு எனக்குத் தெரியாது.” -பேச்சில் தடுமாற்றம் தெரிந்தது.

முதலிரவை ஒத்திப்போட்டுவிட்டு, தரையில் பாய் விரித்துப் படுத்தான் கதிரவன்.

‘இது எப்படி? கன்னிப் பெண்களுக்கு இப்படி இருக்காதே.’ -இரவு முழுக்க இந்தக் கேள்வி அவனை உறங்கவிடாமல் தடுத்தது.

தனக்குத் தெரிந்த திருமணமான ஆண்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, சிலர் கை விரிக்க, நடுத்தர வயதைக் கடந்த ஒருவர் மட்டுமே சொன்னார்.....


“வயிறு வீங்கிப் பிறகு சுருங்கினா இது மாதிரிக் கோடு விழும். பிரசவத்தின்போது இது நடக்கும்.” 

இதைத் தன் புதுப் பெண்டாட்டியிடம் சொன்னான் கதிரவன்; “நீ கெட்டுப்போனவள்” என்றான் அழுத்தம் திருத்தமாக.

பல முறை மறுத்தாள் கல்யாணி.

கிளிப்பிள்ளையாய்ச் சொன்னதையே திரும்பத் திரும்ப ஆக்ரோசத்துடன் சொன்னான் கதிரவன்.

தன் மறுப்புரையால் இனிப் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்ட கல்யாணி.....

“ஆமாடா நான் கெட்டுப்போனவதான். எனக்கு விவாகரத்துக் கொடுத்துட்டு, அங்கே சீல்[பேச்சு வழக்கு > கட்டுக்கடங்காத கோபத்தின் வெளிப்பாடு] வைத்திருப்பவளைத் தேடிக் கண்டுபிடிச்சிக் கல்யாணம் செய்துக்கோ” என்று சொல்லி, தனக்கான உடைமைகளுடன் தன் தாய் வீட்டுக்குப் புறப்பட்டாள்.

                                            *   *   *   *   *

*****சிசேரியன் அறுவையாலும் கோடு(தழும்பு) விழும். மிக அரிதான சிலநோய் காரணமாக வயிறு பெருத்துப்போய்ச் சுருங்கினாலும் லேசான கோடு தெரியும்[எழுத்தாளர் வைரமுத்து, இந்தக் ‘கருவை ‘வைத்து எழுதிய ஒரு சிறுகதை பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளியானது] என்று எப்போதோ எங்கோ வாசித்தது நினைவில் உள்ளது.

சனி, 20 ஜூலை, 2024

‘இந்தி’யன் & அடிவருடிகளுக்கு ஒரு மராட்டியர் தந்த மரண அடி!!!

புதிய இடுகை ஒன்று வெளியாகவிருந்த நிலையில் தற்செயலாக, கீழ்க்காணும் ‘யூடியூப்’ காணொலி கண்ணில்பட்டது.

இம்மாதிரிக் காணொலிகள் நிறைய வெளிவந்தால், இந்தி வெறியர்கள் திருந்துவார்களோ அல்லவோ, பதவிக்காக அவர்களின் அடி வருடும் சுயநலவாதிகள் கொஞ்சமேனும் திருந்துவார்கள் என்பது நம் நம்பிக்கை.

“இங்கு வரும்போதே தமிழ் கத்துகிட்டு வா. தப்பும் தவறுமாகவேனும் தமிழில் பேச முயற்சி பண்ணு” என்று அவர் சொல்லியிருந்தால் அது நமக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்திருக்கும்[தாத்தாவுக்குத் தமிழ் தெரியும் என்பது நம் நம்பிக்கை].

எச்சரிக்கை!
‘இந்தி வெறி’ தமிழின் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதை மறவாதீர்.

மறவாமல் காணொலியைப் பிறருடன் பகிருங்கள்.

வியாழன், 18 ஜூலை, 2024

நாத்திகர் ‘டொனால்டு டிரம்ப்’பும் காக்கும் நம் கடவுள் காளிதேவியும்!!!

#டொனால்டு டிரம்பைச் சுற்றியிருக்கும் தீய சக்தியை விரட்ட டெல்லியில் சிறப்புக் காளி பூஜை நடத்தப்பட்டது# -இது நேற்றையச் செய்தி.

மூர்த்தியானந்த் சரஸ்வதி என்னும் சாமியார், தன் சக இந்துச் சாமியார்களுடன், முன்னாள் அமெரிக்க அரசுத் தலைவர் ‘டிரம்ப்’இன் புகைப்படங்களை வைத்து, அவற்றிற்குச் சந்தனம், பழம் போன்ற பூஜைப் பொருள்களும் வைத்துப் பூஜை[+ஹோமம்] செய்திருக்கிறார்.

டிரம்பின் மீதான தாக்குதலின் பின்னணியில் ஏராள தீய சக்திகள் இருப்பதால், அவற்றை அழித்தொழிப்பதற்காக இதைச் செய்ததாகச் சாமியார் தெரிவித்துள்ளார்.

இந்தச் சாமியாருக்கு, நாம் சொல்லும் புத்திமதி [பிரபல ஊடகங்கள் இதைப் பரபரப்புச் செய்தியாக வெளியிடும் என்பது நம் நம்பிக்கை..... ஹி...ஹி... ஹி!!!] என்னவென்றால்.....

"டிரம்ப் பெற்றோர் கிறித்தவராக இருந்தாலும், எப்போதுமே டிரம்ப் தன்னை ஒரு கிறித்தவராகக் காட்டிகொண்டதில்லை. தன் மீது மட்டுமே அளவிறந்த நம்பிக்கை கொண்ட அவர் ஒரு நாத்திகர்[கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவர்] என்றே பலரும் கருதுகிறார்கள்[ஏராளமான ஆதாரங்கள் உள்ளன].

கடவுள் நம்பிக்கையற்ற அவரின் பாதுகாப்புக்கு நீர் நம்புகிற காளி மூளிகளையெல்லாம் கும்பிட்டு யாகம் செய்தது மிகவும் கிறுக்குத்தனமான செயல்.

டொனால்டு டிரம்ப் அமெரிக்கர். பெரும்பாலான அமெரிக்கர்[கிறித்தவர்]களுக்கென்று ஒரு கடவுள் இருக்கிறார். அவர் ‘கர்த்தர்’ ஆவார்.

அமெரிக்கரான டிரம்பைப் பாதுகாக்க அமெரிக்கக் கடவுளான கர்த்தர் இருக்கும்போது, உங்களின் இந்திய இந்துக் கடவுளான காளியை முன்வைத்துப் பூஜை செய்வது சரியா[அவர்கள் உம் மீது கோபம் கொண்டு வழக்குத் தொடுக்கவும்கூடும்] என்று நீர் யோசிக்கவில்லை.

பூஜை, யாகம், ஹோமம் எல்லாம் செய்து பிழைப்பு நடத்துவது சரியாக இருக்கலாம்; ஒரு நாத்திகரின் பாதுகாப்புக்காக இவற்றைச் செய்து உலக அளவில் பிரபலம் ஆக நினைப்பது சரியல்ல.

ஏதோவொரு காரணத்தைச் சொல்லி, அவ்வப்போது இதுகளைச் செய்வதை உம்மால் தவிர்க்கவே இயலாது என்றால்.....

பக்திமான்கள் வேடம் தரித்த பல தீயச் சக்திகள் இந்த நாட்டில் உலாவிக்கொண்டிருக்கின்றன. இந்தத் தீயச் சக்திகளை விரட்டியடிக்க, அல்லது அழித்தொழிக்க நீர் காளி, மாகாளி, பத்ரக்காளி, உருத்திரக்காளி என்று ஒட்டுமொத்தக் காளிகளுக்கும் பூஜை செய்யலாம்.

செய்தால்.....

பலன் கிடைக்கிறதோ இல்லையோ, உம்முடைய இந்தச் செயலை நாம் மனதார வரவேற்போம்."

புதன், 17 ஜூலை, 2024

மூளைக்கு ‘முதுமை’[வயது] இல்லை!!!

மக்கு வயதானாலும் நம் மூளையின் திறன் அவ்வளவாகக் குறைவதில்லை. முதுமையை நோக்கிய பயணத்திலும் மூளையின் பெரும்பாலான செயல்பாடுகள் பாதிக்கப்படாமலேயே இருப்பதாக நரம்பியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

ஃபிராங்க்லன் நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியல் முன்னேற்ற ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள் மூளை குறித்து ஆராய்ந்து கண்டறிந்த முடிவுகளின் சாராம்சம் பின்வருமாறு:

*மனித மூளையால், சூழலுக்கேற்பத் தன்னைத்தானே மாற்றியமைத்துக்கொள்ள முடியும். புதுப்புது நரம்பு இணைப்புகளையும் புதிய நரம்பணுக்களையும் உருவாக்கிக்கொள்வது சாத்தியம்.

*புத்தி பெருமளவில் மங்கிப்போவதற்குப் பொதுவாக வியாதிதான் காரணமே தவிர வயது முதிர்வு காரணமல்ல.

*உடல் உறுப்புகளைப் போதுமான அளவில் இயங்கிச் செய்தால் நினைவாற்றல் குறையாதிருக்கும் வகையில் மூளை சோர்வின்றி இயங்கிக்கொண்டிருக்கும்.

*வியாதிகள் நம்மை அண்டவிடாமல் உடல் நலம் பேணுதல் மிகவும் முக்கியம்.

*டிஎன்ஏ-வின் அடிப்படை அமைப்பைக் கண்டுபிடித்த குழுவைச் சேர்ந்த ஜேம்ஸ் வாட்ஸன் என்ற மூலக்கூறு உயிரியல் நிபுணர் கீழ்க்காணுமாறு கூறுகிறார்:

“பிரபஞ்சத்தில் இதுவரை நாம் கண்டுபிடித்திருப்பவற்றிலேயே மூளைதான் மிகச் சிக்கலான அமைப்பை உடையது.”

ஜெரல்ட் எடல்மன் என்ற நரம்பியல் விஞ்ஞானி மூளை பற்றித் தரும் விளக்கம் நம்மைப் பிரமிப்பின் எல்லையைத் தொடவைக்கிறது.

“தீக்குச்சியின் தலை அளவே உள்ள ஒரு பாகத்தில் கோடிக்கணக்கான நரம்பு இணைப்புகள் உள்ளன. அவற்றின் மத்தியில் ஏற்படும் இணைப்புகளின் எண்ணிக்கையைக் கணக்கிடப் பயன்பாட்டிலுள்ள ‘எண்கள்’ போதுமானவை அல்ல. விளக்க முயன்றாலும், 10-க்கு பக்கத்தில் பலகோடி பூஜ்யங்களைச் சேர்க்க வேண்டியிருக்கலாம்.”

                                    *   *   *   *   *

நன்றி:

https://wol.jw.org/ta/wol/d/r122/lp-tl/102007442


செவ்வாய், 16 ஜூலை, 2024

'நிலா’வில் ஒரு குகை! குகையில் நம் பிரதமர் தியானம்!! எப்போது?

‘அண்மைக் காலங்களில் ‘நிலா’ குறித்து நாசா விஞ்ஞானிகள் தீவிர ஆய்வை மேற்கொண்டார்கள்.

அதன் பயனாக அவர்கள், நிலாவில் ஒரு குகை இருப்பதையும், அந்தக் குகைக்குச் செல்வதற்கான வழி[குழி] நிலாவின் மேற்பரப்பில் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளார்கள் என்பது செய்தி[https://tamil.oneindia.com].
நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரின் ரேடார் அளவீடுகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அதைப் பூமியில் உள்ள எரிமலைக் குழாய்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததன் மூலம் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள்[இந்த ஆய்வு குறித்த முடிவுகள் நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது].

நிலாவில் பொதுவாகவே மிக மோசமான தட்பவெப்ப நிலை இருக்கும். வரும் காலத்தில் அங்கே நீண்ட காலம் தங்கி மனிதர்கள் ஆய்வு செய்யும்போது, அங்குள்ள மோசமான வானிலையிலிருந்து விண்வெளி வீரர்கள் தப்பிக்க இந்தக் குகை பெரியளவில் உதவும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.


நிலாவில் நிரந்தரமாகத் தங்கி ஆய்வு செய்வதற்காக, ஆய்வகம் ஒன்றை அமைப்பது குறித்தும் நாசா ஆலோசித்து வருகிறதாம்.


இது விசயத்தில். சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் ஆய்வாளர்களும் அங்கு ஆய்வு மையத்தை உருவாக்க ஆர்வம் காட்டிவருகிறார்கள்.


நாசா விஞ்ஞானிகளோடு ஒப்பிட்டால், நம் விஞ்ஞானிகள் எவ்விதத்திலும் அறிவாற்றலில் குறைந்தவர்கள் அல்ல என்பதால், குகையைக் கண்டுபிடிப்பதற்கு, இவர்களை ஊக்குவிப்பதோடு ஆக்கபூர்வமான அத்தனை வசதிகளையும் இவர்களுக்குச் செய்துதருதல் வேண்டும் இந்திய அரசு.


செய்தால்…..


பிற நாட்டவரை முந்திக்கொண்டு நம் விண்வெளி வீரர்கள் நிலாக் குகையைச் சென்றடைவதோடு, அங்கு நம் தேசியக் கொடியை நட்டு, குகை இந்தியாவுக்கே சொந்தம் என்று உலகோர்க்கு அறிவிப்பார்கள்.


அடுத்த கட்டமாக, நம் விண்வெளி வீரர்களுடன் மதிப்பிற்குரிய நம் பிரதமர் மோடி அவர்கள் அங்கு செல்லுதல் வேண்டும்.


சென்று, நிலாவில் உள்ள அந்த மலைக் குகையில் நேரம் போவது தெரியாமல் கண் மூடித் தியானத்தில் ஈடுபடுதல் வேண்டும் என்பது நம் விருப்பம். இந்த மண்ணின் மைந்தர்கள் விருப்பமும் அதுவே.


தியானத்தின் பயன்.....


இந்தியா மிகக் குறுகிய கால அவகாசத்தில் உலகின் வளர்ச்சி பெற்ற நாடுகளில் முதலிடத்தைப் பெறும்.


இது விசயத்தில், மோடி அவர்களை இந்த நம் புண்ணியப் பூமிக்கு அனுப்பிவைத்த எல்லாம் வல்ல அந்த முழு முதல் கடவுள் அருள்புரிவார் என்பது உறுதி!


             *   *   *   *   *

https://tamil.oneindia.com/news/washington/cave-found-on-moon-could-shelter-humans-in-future-622037.html


திங்கள், 15 ஜூலை, 2024

தீட்டுப்பட்ட வீடுகள்!!!

அழைப்பு மணி ‘கிர்ர்ர்ர்ர்’ரியது.

கதவைத் திறந்தார் மாரிமுத்து.


“வெளியே வீடு வாடகைக்கு விடப்படும்கிற பலகை பார்த்தேன்” என்றார் அழைப்பு மணி அடித்த பெரியசாமி.


அவரிடம், “உங்க சாதி என்ன?” என்றார் மாரிமுத்து.


அதிர்ச்சிக்குள்ளானார் பெரியசாமி. “எதுக்குச் சாதி கேட்குறீங்க?”


“தப்பா நினைக்காதீங்க. மேல் சாதிக்காரங்க தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்களுக்கு வீடு வாடகைக்கு விடுறதில்ல. நாங்க தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்க. உழைச்சிச் சம்பாதிச்ச வருமானத்தில் கட்டிய இரண்டு வீட்டில் ஒன்றைச் சாதி வித்தியாசம் பார்க்காம வாடகைக்கு விடுறோம். இங்கே குடிவர நீங்க விரும்புவீங்களான்னு…..”


மாரிமுத்து சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, “நாங்க சாதி பார்க்குறதில்ல. வாடகை எவ்வளவுன்னு சொல்லுங்க” என்றார் பெரியசாமி.


சொன்னார் வீட்டுக்காரர்.


ஒரு மாத வாடகையை முன்பணமாகக் கொடுத்துவிட்டு வீடு திரும்பித் தன் மனைவியிடம் விவரம் சொன்னார் பெரியசாமி.


“தீட்டுப்பட்ட வீட்டுக்கா நாம் குடிபோவது?” என்று அங்கலாய்த்தார் அவர் மனைவி.


அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் பெரியசாமி:


“ஐயர்களை வைத்துச் சிக்கனமா ஒரு யாகம் பண்ணிட்டா தீட்டு நீங்கிடும்.”