எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 29 டிசம்பர், 2025

வாயால் வடை சுட்டுச் சுட்டுச் சுட்டுத் தமிழ் வளர்க்கிறாரா தந்திரசாலி மோடி?!

 

அகிலம் புகழ் மோடி அவர்களே,

“உலகிலேயே பழமையான மொழி தமிழ்” என்று இதுவரை எத்தனை முறை சொல்லியிருப்பீர்?

எத்தனை முறையாகவோ இருக்கட்டும், உம்முடைய இந்தப் போலித்தனமான புகழ் உரையால் தமிழ் பெற்ற பயன் என்ன? 

உள்மனதைத் தொட்டுச் சொல்லும், செத்த மொழி சமஸ்கிருதத்திற்கும், உமக்குப் பதவிப் பிச்சை அளிக்கும் இந்திக்கும் செலவழிக்கும் தொகையில் நூற்றில் ஒரு பங்கேனும் தமிழுக்கு ஒதுக்குகிறீரா?[இரண்டுக்கும் செலவிடும் தொகை கணக்குக் காட்டுவதைவிடவும் மிக அதிகம்].

மனசாட்சி என்று ஒன்று இருந்தால் ஒளிவுமறைவில்லாமல் சொல்லும், காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில் சின்னஞ்சிறு குழந்தைகள் சரளமாகத் தமிழில் பாடுவதாக[நீர் பாடவைக்கிறீரோ என்னவோ]ச் சொல்கிறீர். ஒரு பத்துப் பிள்ளைகள் பாடுவதால்/பாட வைப்பதால் தமிழ் வளர்ந்துவிடுமா?

உம்முடைய இந்த நிகழ்ச்சிக்கு ‘மன்கீபாத்’ என்று நாமகரணம் சூட்டியிருக்கிறீர். மற்ற மொழிகளைவிடவும் கொஞ்சம் அதிகம் பேசப்படுகிற இந்தியில் பெயர் சூட்டுகிற நீர், பிறிதொரு மொழியில் பெயர் சூட்டியிருந்தால், உம்முடைய பேச்சு மக்களைச் சென்றடையாதா?

தேர்தல் வரும் நேரங்களில் தமிழைப் புகழ்வதாக எண்ணி எதையேனும் உளறிக்கொட்டினால் தமிழர்களின் வாக்குகளை அள்ளிவிடலாம் என்று கனவு காண்கிறீர்.

அந்தக் கனவு ஒருபோதும் நிறைவேறாது. உம்முடைய கட்சிக்கு[பாஜக]த் தமிழ் மக்கள் போடுகிற கொஞ்சம் வாக்குகளையும் உம்முடைய போலித்தனமான புகழ்ச்சி வெகுவாகக் குறைக்கும் என்பதை அறிவீராக!