எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 6 செப்டம்பர், 2025

நேற்று நள்ளிரவில்[இந்திய நேரம்] ஒலித்த கடவுளின் குரல்: “நான் கடவுள் பேசுகிறேன்...”

“கடவுள் இருக்கிறார்” என்று சொல்வது நம்பிக்கையால் அல்லது அனுமானத்தால்தான்[‘தொலைவில் புகை தென்பட்டால் அதை வெளியிடுவது கண்ணுக்குப் புலப்படாத நெருப்பு’ என்பது போல்> மேகம்கூடப் புகை போலக் காட்சியளிக்கக்கூடும்].

ஐம்புலன்களாலோ ஆறாவது அறிவாலோ அவரை  உறுதிப்பட அறிந்தவர்களோ பிறருக்கு அறிவுறுத்தியவர்களோ, உணர்ந்தவர்களோ உணர்த்தியவர்களோ இல்லை[இயலாத நிலையில் கடவுள் உண்டு என்று பரப்புரை செய்தல் முறையல்ல].

ஆயினும், கடவுளைத் தாங்கள் அறிந்திருப்பதாகவும், உணர்ந்திருப்பதாகவும், பார்த்திருப்பதாகவும் சொல்லித் திரிபவர்களைத்தான் நம் மக்கள் அவதாரங்கள் என்றும், ஆன்மிக ஞானிகள் என்றும், மகான்கள் என்றும் நம்பி ஏமாறுகிறார்கள்.

கடவுள் என்பவர் உண்டோ அல்லவோ, அவரின் இருப்பை, அவரால் படைக்கப்பட்ட[சொல்கிறார்கள்] மனிதனின் அறிவைக்கொண்டு நிரூபிப்பது சாத்தியமே அல்ல.

நேற்று நட்டநடுச் சாமத்தில் அண்டவெளியில்[முழுவதும்] கடவுள் காட்சியளித்தார்; உலகெங்கும் ஒலிக்கும் வகையில் “கடவுள் பேசுகிறேன், நான் இருப்பது 100% உண்மை. என்னை மனம்போனபடி ஏசும் நாத்திக நாசகாரக் கும்பலின் எண்ணிக்கை அபிரிதமாகப் பெருகுவதால் நான் காட்சியளிப்பதும் உரையாற்றுவதும் அவசியமாயிற்று” என்றார் என்பதாக எவரேனும் வதந்தி பரப்பினால் நீங்கள் நம்புவீர்களா?

நீங்கள் எப்படியோ, கடவுள் மேல் சத்தியமாக நான் நம்பமாட்டேன். ஹி... ஹி... ஹி!!!